22 ஜனவரி, 2010

சங்கராச்சாரியார்!


எதிர்பார்த்தபடியே புதுவையில் நடந்து வரும் சங்கரராமன் கொலைவழக்கில் அடுத்தடுத்து சாட்சிகள் பல்டியடித்து வருகிறார்கள். உச்சக்கட்டமாக முக்கிய சாட்சியான ரவிசுப்பிரமணியம் ‘கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று நேற்று பல்டியடித்து விட்டார்.

இச்சூழலில் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் முன்பு எழுதிய ஒரு சிறுநூல் நினைவுக்கு வருகிறது. அந்நூலில் ‘வரலாறு நெடுகிலுமே சாதாரண மக்கள் இயல்பாக உணரக்கூடிய உண்மையின் தரிசன்ங்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டுள்ளன என்ற வெளிச்சக்கீற்று விழுதுகளாய் எனக்குள் இறங்கியது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு இறங்கிய வெளிச்சம் மீண்டும் இருளுக்குள் அமிழத் தொடங்கியிருக்கிறது. அன்றே சொன்னார் அண்ணா, ‘சட்டம் ஒரு இருட்டறை’.

2004, நவம்பர் 11 கைதுக்குப் பிறகான சில சம்பவங்களை மீள்பார்வை செய்துப் பார்க்கவே இப்பதிவு. சங்கராச்சாரியார் கைதின்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளை தனது துல்லிய ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார் சாவித்திரி கண்ணன். இவர் துக்ளக்கில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் என்பது இங்கே தேவையில்லாத, ஆனால் அவசியம் குறிப்பிட வேண்டிய ஒரு தகவல்.

ராதாகிருஷ்ணன் மற்றும் மாதவன் என்பவர்கள் மீது ஏற்கனவே கொலைதாக்குதல் முயற்சிகள் நடத்தியவர், பாலியல்ரீதியான பலவீனங்களை கொண்டவர், கூலிக்கு கொலை செய்யும் அடியாள் கூட்டத் தலைவர்களோடு நெருங்கிய நட்பு பாராட்டியவர் என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகின. பல்லாண்டுகளாக திரையிட்டு மறைக்கப்பட்ட புனிதம் வெட்டவெளிச்சத்துக்கு வந்து சிதைந்துப் போனது.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களும், கொலையான சங்கரராமன் மீதான அனுதாபமும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, கைதுக்குள்ளானவரின் அந்தஸ்து பற்றியும், கைது செய்யப்பட்ட முறை பற்றியுமே அதிகமாக பேசப்பட்டது.

இத்தனைக்கும் பாரம்பரியமிக்க கோயிலில், இந்து நம்பிக்கையில் ஆழ்ந்தப் பற்று கொண்ட வைதீக பிராமணர் பட்டப்பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் கள்ள மவுனம் காத்தன. இந்துமத எதிர்ப்பு இயக்கமான திமுகதான் அந்த ஏழை பிராமணரின் படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தியது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளியன்று மதத்தலைவரை கைது செய்யலாமா என்று கேணைத்தனமாக கேள்வி எழுப்பினார்கள். கிறிஸ்துமஸ் வரும் வரை போலிஸ்காரர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் போலும். அயோத்தியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த மத அரசியல் கட்சியான பிஜேபி ஒரே நாளில் ‘இஸ்லாமியர்களுக்கு மெக்கா, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், எங்களுக்கு காஞ்சி’ என்று கொதித்து எழுந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா கிறிஸ்தவ மதத்தவர் என்பதாலேயே இந்துமதத் தலைவரை அவமானப்படுத்துகிறார்கள் என்று புரளி பரப்பியது.

ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களின் உண்மை முகத்தை அறிய ஜெயேந்திரர் கைது துணைபுரிந்தது. “பத்திரிகைகள் பொறுப்பற்று எழுதுகின்றன. மடிப்பத்திரிகைகளுக்கும், மஞ்சள் பத்திரிகைகளுக்கும் இப்போது வித்தியாசம் தெரியவில்லை” என்று கொதித்து எழுந்தார். மடிப்பத்திரிகைகள் என்றால் பிராமணப் பத்திரிகைகளாம். அப்பட்டமான ஜாதியப் பார்வை இவ்வளவு நாட்களாக அறிவுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாக பாவனை காட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்தது என்பதை மக்கள் இலகுவாக விளங்கிக் கொண்டார்கள்.

அந்தப் புத்தகத்தில் வலுவான ஒரு கருத்தை தனது சுயகருத்தாகவும் சாவித்திரி கண்ணன் சொல்லியிருந்தார். “சங்கராச்சாரியார்களிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”

இன்று விசாரணை போகும் போக்கைப் பார்த்தால், ‘இந்து மதத்தின் கதி அதோகதிதான்’ என்று தோன்றுகிறது. கையும் களவுமாக பிடிபட்டிருந்தாலும், யார் ஆட்சியில் இருந்தாலும் ‘அவர்களின்’ லாபி மிகச்சிறப்பாகவே செயல்படும் என்பது மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக நிரூபணமாகியிருக்கிறது. வழக்கிலிருந்து விரைவில் விடுவிக்கப்படப் போகும் ஜெயேந்திரருக்கு நமது வாழ்த்துகள்!

நூல் : சங்கராச்சாரியார்களும், இந்துமதமும் - சிதைக்கப்பட்ட உண்மைகள்
ஆசிரியர் : சாவித்திரி கண்ணன்
பக்கங்கள் : 40
விலை : ரூ.10/-
வெளியீடு : மாணிக்க சுந்தரம் வெளியீட்டகம்,
522, 2வது மேற்கு தெரு, காமராஜர் நகர்,
திருவான்மியூர், சென்னை-600 041.

21 ஜனவரி, 2010

சாமியார் டி.வி.டி!


இன்னும் எத்தனை நாளைக்குதான் இந்த சினிமாக்காரர்கள் திருட்டு வி.சி.டி, திருட்டு வி.சி.டி. என்று புலம்பிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. வி.சி.டி. என்ற தொழில்நுட்பம் கிட்டத்தட்ட வழக்கொழிந்துப் போய்விட்டது. இனிமேல் 'திருட்டு டி.வி.டி' என்று சரியாக உச்சரிக்குமாறு சினிமாக்காரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

ஜக்குபாய் விவகாரத்தைத் தொடர்ந்து நடந்த கண்டனக்கூட்டத்தில் ‘நம்ம ஆளுங்கதான் இதை செய்யுறாங்க. அவங்களை கண்டுபிடிக்கணும்!' என்று ரஜினி கூறியதற்கு, பெருத்த கண்டனங்கள் சினிமாத் துறையில் எழுந்திருப்பதாக தெரிகிறது. யாராவது, எப்போதாவது தப்பித்தவறி உண்மையை பேசிவிட்டால் இதுபோல கண்டனங்கள் எழுவது சகஜம்தான். சொன்னது ரஜினி என்பதால் வெளிப்படையாக யாரும் சண்டை போடாமல், உள்ளுக்குள் நொணநொணவென்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விக்ரம் படம் வெளியானதுமே, அப்படத்தின் திருட்டு வீடியோ கேசட் வெளிவந்துவிட்டது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் வரை முட்டி மோதி சோர்ந்துவிட்டார் கமல். அதன்பிறகு இந்த திருட்டுச் சமாச்சாரங்கள் எல்லாம் அதிசமீபத்திய தொழில்நுட்பங்களாக இருக்கிறது. நல்லதோ, கெட்டதோ என்ன செய்தாலும் இதைத் தவிர்க்க முடியாது. இதையும் தாண்டி எப்படி நாம் முன்னேறுவது என்பதைதான் சிந்திக்க வேண்டும் என்று இருபது வருடங்களாக கரடியாக கத்திக் கொண்டிருக்கிறார். யாராவது கேட்டால்தானே?

ஜக்குபாய் படத்தின் பிரிண்ட் இணையத்தில் வந்தபோதே பார்த்தேன். FX COPY என்ற வாட்டர் மார்க்கோடு இருந்தது. பின்னணி இசை சேர்க்கப் படுவதற்கு முன்பாக போஸ்ட்-புரொடக்‌ஷன் நிலையில் யாரோ ஆட்டையை போட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்படத்தின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவரின் வேலையாக தான் இது இருக்க முடியும். ரஜினி இதைத்தான் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், ரஜினியின் லேட்டஸ்ட் படம் ஒன்று ஊத்திக் கொண்டது அல்லவா? அப்படத்தின் திருட்டு டி.வி.டியும் ரிலீஸ் ஆன நாளிலேயே பல நகரங்களில் தாராளமாக கிடைத்தது. வெளியூர் தியேட்டர்களுக்கு பயணமான பிரிண்ட் ஒன்றினை, நடுவழியில் ஆட்டையை போட்டு அடித்திருக்கிறார்கள். இது ரஜினிக்கும் தெரியும் என்பதால்தான் ‘முதலில் நம்ம ஆளுங்கள பிடிங்க' என்று சொல்லியிருக்கிறார்.

திருட்டு டி.வி.டி. தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு பாண்டிச்சேரி புள்ளி, ஜக்குபாய் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்துகொண்டதாக ஒரு வார இதழில் வாசித்தேன். தயாரிப்பு நிலையிலேயே இதை கிள்ளி எறிய முயற்சிக்காமல், பதினைந்துக்கும் இருபதுக்கும் விற்றுக் கொண்டிருக்கும் ஏழை வியாபாரிகளின் மென்னியை பிடிப்பது எந்தவகையில் சரியான செயல் என்று தெரியவில்லை. திருட்டு டி.வி.டி.க்கு எதிராக பஞ்ச் வசனங்களை தங்கள் படங்களில் வைக்கும் இயக்குனர்களும், காமெடி காட்சிகளிலும் திருட்டு டி.வி.டி.க்கு எதிராக மெசேஜ் சொல்ல நினைக்கும் நடிகர்களும் முதலில் தங்கள் துறையில் இருக்கும் கருப்பு ஆடுகள் யாரென கண்டறிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

* - * - * - * - *

தமிழ்நாட்டின் இப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட் திருட்டு டி.வி.டி. எது தெரியுமா? வேட்டைக்காரன் என்று நினைத்தால் நீங்க ரொம்ப நல்லவ்வ்வர்ர்ரூ.

‘தேவநாதன் ஹிட்ஸ்' என்ற பெயரில் இருபத்தைந்து ரூபாய்க்கு பஜார்களில் கூவி கூவி விற்கப்படும் டி.வி.டி. தான், இந்திய திருட்டு டி.வி.டி. வரலாற்றிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. வேட்டைக்காரன் டி.வி.டி. விற்பவர்களை மடக்கிப் பிடிக்கும் போலிஸ்காரர்களின் கண்களில் மட்டும் இந்த டி.வி.டி. இன்னமும் மாட்டவில்லை என்பதில் எனக்கு எந்தவித ஆச்சரியமுமில்லை. ஏனெனில் நம் போலிஸார் ஸ்காட்லாந்துயார்டுக்கு திறமை அடிப்படையில் சவால் விடுபவர்கள்.

இந்த டி.வி.டி. சந்தைக்கு வந்த வரலாறு உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கலாம். கோயில் கருவறை உள்ளிட்ட பல இடங்களில் பக்தைகளுக்கு குருக்கள் ஆசிகள் வழங்கிய காட்சிகளை, அவரே அவரது செல்போனில் (நல்ல ஆங்கிளில்) படமாக்கியிருக்கிறார். ஒருமுறை செல்போன் ஏதோ மக்கர் செய்ய, அருகிலிருக்கும் சர்வீஸிங் சென்டர் எதிலோ பழுது பார்க்கத் தந்திருக்கிறார். பழுது பார்த்த மெக்கானிக், போனில் பதிவாகியிருந்த ‘சரக்குகளை' மொத்தமாக உருவி கைமாவாக்கியிருக்கிறார்.

யாரோ ஒரு திருட்டு டி.வி.டி. மொத்த வியாபாரிக்கு கொழுத்த விலைக்கு சரக்கு கைமாற்றப்பட்டு, அவர் மூலமாக சந்தைக்கு வந்தது. சந்தையில் வாங்கிய பக்தர் ஒருவர், கோயில் கருவறையிலேயே கும்மாங்குத்தா என்று பதறிப்போனார். வார இதழ் ஒன்றுக்கு அந்த டி.வி.டி.யின் காப்பியை அனுப்பிவைக்க, அதன்பிறகே எல்லாம் வெட்டவெளிச்சம் ஆனது என்பது வரலாறு.

சமீபத்தில் தோழர் ஒருவர் தீவிரக் கலையார்வம் காரணமாக இந்த டி.வி.டி.யை பர்மா பஜார் பகுதியில் வாங்கியிருக்கிறார். வீட்டில் அனைவரும் தூங்கியப் பிறகு அதிகாலை ஒரு மணிக்கு பூனைநடை போட்டு எழுந்து, டி.வி.யை ம்யூட் செய்துவிட்டு போட்டுப் பார்த்திருக்கிறார். துரதிருஷ்டவசமாக அது தேவநாதன் ஹிட்ஸ் ஆக இல்லாமல், பக்திப்பட பாடல்களின் எம்.பி.3 வகை டி.வி.டி.யாக இருந்திருக்கிறது. சவுண்டு வைத்துப் பார்த்ததில் ‘பெங்களூர் ரமணியம்மாள் ஹிட்ஸாம்!'. பெருத்த சோகம் அடைந்த அவர் அன்றிரவு, குன்றத்திலே குமரனோடு கொண்டாட்டமாக இருந்திருக்கிறார்.

மறுநாள் டி.வி.டி. விற்ற கடைக்குப் போய் புகார் செய்திருக்கிறார். கடைபையனோ ரொம்ப சாதாரணமாக சொல்லியிருக்கிறான். “சார் வேற ஒரு கஸ்டமருக்கு எடுத்துட்டு வந்த டி.வி.டி. சார் அது. மாத்தி கொடுத்துட்டேன் போலிருக்கு”. நண்பருக்கு சரியான டி.வி.டி. கிடைத்துவிட்டது. ஒருவாரமாக தேவநாதன் புகழை காண்பவர்களிடமெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார். தேவநாதனின் காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என்பது இப்போது அவருடைய ஆசை.

அவர் காலையாவது அல்லது வேறு எதையாவது தொட்டு கும்பிட்டுக் கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை. என்னுடைய கவலையெல்லாம் பெங்களூர் ரமணியம்மாள் ஹிட்ஸுக்கு பதிலாக தேவநாதன் ஹிட்ஸை தவறுதலாக எடுத்துச் சென்ற ஆன்மீக அன்பரைப் பற்றிதான். ஒன்று, அந்த கலைப்படைப்பை அவர் தெரியாத்தனமாக பக்தி பாடல் என்று நினைத்து குடும்பத்தினர் மத்தியில் போட்டுப் பார்த்து அவமானப்பட்டிருக்கலாம். அல்லது தேவநாதனால் ஈர்க்கப்பட்டு, இரண்டாம் தேவநாதனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கலாம்.

20 ஜனவரி, 2010

க்ரீன் டெக்னாலஜி : ஒரு சுருக்கம்!


‘க்ரீன் டெக்னாலஜி’ என்னும் சொல் கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பிறகு பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல்லாகியிருக்கிறது. தமிழில் பச்சை தொழில்நுட்பம் என்று பச்சையாக மொழிப்பெயர்க்காமல் ‘சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்’ என்று நம் வசதிக்கு அழகாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆண்டிலிருந்து பொருளாதார கேந்திரமான வால்ஸ்ட்ரீட் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை மையமாக்கி செயல்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிய துறைகளையே பெரிதுமாக பொருளாதாரத்துக்கு உலகம் நம்பிக் கொண்டிருந்தது. உலகமே இவற்றில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

புவிவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக இவற்றுக்கு மாற்று தொழில்நுட்பத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இன்று மனிதகுலத்துக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் வளங்களை எந்தவிதத்திலும் சேதாரப்படுத்தாமல், அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் நகர்வது சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும்.

எனவேதான் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அரசுகளாலும், பல நிறுவனங்களாலும் இத்துறை வளர்ச்சிக்காக செலவழிக்கப்படப் போகும் தொகை நாம் கனவில் கூட காணமுடியாததாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளுக்கு கைகொடுக்கும் எனவும் தெரிகிறது.

எதிர்காலத்தில் வளர்ச்சி அடையப்போகும் துறை எப்படி இருக்கும் என்று துல்லியமாக விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான். காப்பி குடித்துவிட்டு நாம் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்பிலிருந்து, விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் எரிபொருள் வரை எல்லாவற்றையுமே மாற்றப்போகிறோம் என்று புரிந்துக் கொள்ளுங்கள். மின்சாரத்துக்கு மாற்று வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயற்கைக்கு இணக்கமில்லாத எல்லா விஷயங்களையும் தூக்கி கடாசிவிட்டு, புதிய விஷயங்களை உருவாக்கப் போகிறோம். புதியதோர் உலகம் படைக்கப் போகிறோம். நீங்கள் எழுதும் பேனாவிலிருந்து, வீடு, ரோடு என்று ஒன்றுவிடாமல் எல்லாமே மாறப்போகிறது.

இப்போது இருக்கும் விஷயங்களே, நம் பயன்பாடுகளுக்கு இலகுவாகதானே இருக்கிறது, நாம் ஏன் மாற்றவேண்டும்? என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு எழலாம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? உலகு உயிர்ப்போடு இருந்தால்தான் மனிதக்குலமும் வாழும். இதுவரையிலான நமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், தயாரிப்புகளும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை. இவற்றை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் சில நூறு அல்லது சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் புல், பூண்டு கூட மிச்சமிருக்காது. இயற்கையின் கோபத்தை யார்தான் தாங்கிவிட முடியும்?

எல்லாவற்றையும் மாற்றுவதற்கான பணி இவ்வருடம் தொடங்குகிறது. இது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்பணி பல நூற்றாண்டுகளாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் தான், கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில் நாம் பாழ்படுத்திய உலகை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

ஒயிட் காலர், ப்ளூ காலர் வேலையை எல்லாம் மறந்துடுங்க. இனிமேல் எல்லாருக்குமே க்ரீன்காலர் வேலைதான்!

19 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் (2010)


பொங்கலுக்கு முன்பாக திருவண்ணாமலை செல்ல வேண்டியிருந்தது. கோயம்பேட்டில் இருந்து அரசுப்பேருந்து. பூமோ, தூமோ ஏதோ ஒரு பிரத்யேக டிவி சேனல். குணா ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஐம்பது முறைக்கு மேல் பார்த்துவிட்டதால் அசுவாரஸ்யமாக ஹெட்போனை காதில் மாட்டினேன். ‘கரிகாலன் காலைப்போல...’ வேட்டைக்காரன் அலறினான்.

ஐந்துமுறைக்கும் மேலாக ‘மந்தரிச்ச உதடை’ திரும்ப திரும்ப கேட்டு, அலுத்துப் போனதால் ஹெட்போனை கழட்டினேன். செஞ்சியின் நெரிசலான போக்குவரத்தில் பேருந்து ஊர்ந்துக் கொண்டிருந்தது. எனக்கு பின்சீட்டில் ஒரு கிராமத்து இளைஞர், தன் புதுமனைவியிடம் வியப்பான குரலில், சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். “பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடியே கமல் என்னாம்மா படமெடுத்திருக்கார் பாரேன்!”

2029லும் யாராவது என்னைப் போல திருவண்ணாமலைக்கு பேருந்தில் போகலாம். அப்போதும் யாராவது கிராமத்து இளைஞர், “பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடியே செல்வராகவன் என்னாம்மா படமெடுத்திருக்கார் பாரேன்!” என்று வியப்படையலாம்.

காலத்தை தாண்டி நினைவுகூறத்தக்க திரைப் படைப்புகள் தமிழில் குறைவு. ஆயிரத்தில் ஒருவனையும் தயங்காமல் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். கமல்ஹாசனின் படங்கள் வெளியாகும் நேரத்தில் வசூல்ரீதியான வெற்றியை பெரும்பாலும் அடைவதில்லை. ஆயினும் பத்து, இருபது ஆண்டுகள் கழித்து அடுத்துவரும் தலைமுறையினர் சிலாகிக்கிறார்கள். செல்வராகவனும் சிலாகிக்கப்படுவார்.

* - * - * - * - * - *

புதுமைப்பித்தன் ஒரு மொக்கை எழுத்தாளர் என்று அடிக்கடி சாரு எழுதுவதுண்டு. ‘அப்படியென்ன மொக்கையாக எழுதியிருக்கிறார்?’ என்று அவரை வாசிக்க சாருவே தூண்டுகோலாக இருந்தார். வாசித்தபிறகே “புதுமைப்பித்தன் ஒரு லெஜண்ட், அவரை யாருடனும் ஒப்பிட இயலாது!” என்பது புரிந்தது.

சாரு யாரையாவது எதிர்மறையாக விமர்சித்தாலும் கூட, அவரது வாசகர்களுக்கு நல்லதையே செய்கிறார். நல்ல அறிமுகத்தை தருகிறார். சாரு ஆபத்தற்றவர். இன்னொரு எழுத்தாளர் நல்லமுறையிலேயே யாரையாவது அறிமுகப்படுத்தினாலும் கூட, அவர் ஆபத்தானவர் என்று உள்ளுணர்வு அடித்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் உள்ளுணர்வே வெல்கிறது.

புதுமைப்பித்தனை வாசித்த யாருமே கபாடபுரத்தை மறக்க முடியாது. ஒரு மேஜிக் கலைஞனின் நுணுக்கத்தோடு, அவர் கவனமாக இழைத்து, இழைத்து நெய்த படைப்பு. ‘மேஜிக்கல் ரியலிஸம்’ என்பதையெல்லாம் புதுமைப்பித்தன் அறிந்திருப்பாரா என்று தெரியாது. ஆனால் அப்படைப்பு அச்சு அசல் ‘மேஜிக்கல் ரியலிஸ’ கூறுகளைக் கொண்டது.

கபாடபுரம் வாசித்ததில் இருந்தே, புதுமைப்பித்தனின் வர்ணிப்பு என்னை தொந்தரவு செய்துக்கொண்டே இருந்தது. அவரது எழுத்தை காட்சியாக, மிகச்சரியாக கற்பனை செய்ய இயலாதது குறித்த என்னுடைய திறமைக்குறைவை நினைத்து அடிக்கடி நொந்துகொள்வேன். இதனாலேயே அப்படைப்பை அடிக்கடி மீள்வாசிப்பும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. கபாடபுரம் மாதிரியான தொல்லையை தந்த இன்னொரு படைப்பு ஜெயமோகனின் டார்த்தீனியம். மேஜிக்கல் ரியலிஸத்தின் தன்மையே வாசகனை இவ்வாறு தொந்தரவுக்கும், தொல்லைக்கும் ஆளாக்குவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நீண்டகால தொந்தரவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ‘ஆயிரத்தில் ஒருவன்’. கபாடபுரத்துக்கு ஒப்பான ஒரு கனவு நகரத்தை கண்முன்னே காட்சியாக விரித்ததில் ஆயிரத்தில் ஒருவன் குழு அபாரவெற்றி கண்டிருக்கிறது.

* - * - * - * - * - *

இப்படம் வெளியான இரு தினங்களுக்குளாகவே பெற்றிருக்கும் விமர்சனங்கள் பலவும் நகைக்க வைக்கிறது. இதுவரை என்னவோ எல்லாப் படத்துக்கும் தமிழ் ரசிகன் ‘லாஜிக்’ பார்த்து ரசித்தது போலவும், இப்படம் லாஜிக்குகளை மீறியிருப்பது போன்ற தோற்றமும் கட்டமைக்கப்படுவது வேடிக்கையானதும் வினோதமானதுமான ஒரு விஷயம். மேஜிக்குக்கு லாஜிக் கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் ஒரு மேஜிக் கலைஞன்.

படத்தின் இரண்டாம் பாதி, ஈழத்தில் நடந்த கடைசிக்கட்ட சோகங்களை உருவி வணிகமாக்கியிருக்கிறது என்ற விமர்சனமும் அர்த்தமற்றது. படத்தின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட காலக்கட்டத்துக்கு முன்பே படமாக்கப்பட்டு விட்டது என்பதை செல்வராகவனே பேட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

* - * - * - * - * - *

தொழில்நுட்பரீதியாக ஏகப்பட்ட விஷயங்களை முதன்முறையாக தமிழில் செல்வராகவன் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டுமானால் கிளாடியேட்டர் பாணியில் நடைபெறும் அந்த மைதான சண்டைக்காட்சி.

சுற்றிலும் ஆயிரமாயிரம் பார்வையாளர்கள். ஒரு தடியன் சங்கிலியில் இரும்புக் குண்டை கட்டி சுழற்றி, பலரின் தலைகளை சிதறவைக்கிறான் என்பதை சுலபமாக எழுத்தில் வடித்துவிடலாம். தத்ரூபமாக காட்சியாக்கிருப்பதில், ஒரே ஓவரில் எட்டு சிக்ஸர் (ரெண்டு பால் நோ பால்) அடிக்கிறார் செல்வா.

* - * - * - * - * - *

எல்லோரும் சொல்வதைப் போல ரீமா கலக்கியிருக்கிறார். அனாயசமாக இரு கைகளிலும் துப்பாக்கி ஏந்தி சுடுவதில் தொடங்கி, நீருக்குள் டைவ் அடிப்பது, ஓடுவது, ஒரு நொடி நகைத்து மறுநொடி கடுத்து என்று அதகளம். ரீமாவின் உழைப்புக்கு நிஜமாகவே அவர் அணிந்திருக்கும் லெதர் டவுசர் கிழிந்திருக்க வேண்டும். ஆண்ட்ரியா அழகு. ஊட்டிரேஸில் ஓடும் உயர்ஜாதிக் குதிரை.

கார்த்தி ஆரம்பக்காட்சியில் இருந்தே அட்டகாசம். ‘பேலன்ஸ் அமவுண்டை கொடுத்துடுங்க!’ என்று அழுதுக்கொண்டே கேட்கும் காட்சியெல்லாம் கலக்கல். இரவில் இரண்டு ஃபிகரும் கட்டிக்கொண்டு தூங்க, அவர் முழிக்கும் முழி ‘ஏ’ க்ளாஸ். பார்த்திபனின் பாத்திரம் இதுவரை தமிழில் இல்லாதது.

* - * - * - * - * - *

ஆயிரத்தில் ஒருவன் - ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை வெகுவாக குறைத்திருக்கிறான். விரைவில் எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறான். இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை, கூட சேர்ந்து தானும் சுமக்க முன்வந்திருக்கும் செல்வராகவனுக்கு ரெட் சல்யூட்!

18 ஜனவரி, 2010

ஆலத்தூர் காந்தி!


96ஆம் ஆண்டு காலவாக்கில் நடந்த விஷயங்கள் அவை.

திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா? வழிநெடுக நிறைய செங்கல்சூளைகளை கண்டிருக்கலாம். அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து ஏராளமானோர் இந்த சூளைகளில் வேலை பார்ப்பார்கள். அவற்றில் பாதி பேர் குழந்தைத் தொழிலாளர்கள். அருகிலிருந்த சேவாலயா போன்ற அமைப்புகள் இக்குழந்தைத் தொழிலாளர்களை மீண்டும் கல்வி கற்கச் செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

பிரச்சினை இப்படியிருக்க, செங்கல் சூளைகளால் அடுத்து ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அது சுற்றுச்சூழல்.

சூளைகளை எரியவைக்க அதுவரை விறகுகளை பயன்படுத்தி வந்த முதலாளிகள், தயாரிப்புச் செலவை குறைக்க க்ரூட் ஆயில் எனப்படும் சுத்திகரிக்கப்படாத எண்ணெயை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதனால் அப்பகுதியின் நிலத்தடி நீர் கெட துவங்கியது. கரும்புகை சூழ்ந்து காற்றில் கலப்படம் ஏற்பட்டது. கிராமத்தவர்கள் பலரும் உடல்நலம் குன்றத் தொடங்கினார்கள்.

தங்கள் கிராமங்கள் மாசுபடுவதை அப்பகுதி இளைஞர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இளைஞர் மன்றம், சிறுவர் மன்றம் என்று அமைப்புகளை உருவாக்கி ஒருங்கிணைந்து போராட முடிவெடுத்தார்கள். சேவாலயா, எக்ஸ்னோரா போன்ற தன்னார்வு அமைப்புகள் இளைஞர்களின் போராட்டங்களுக்கு ஆதரவுதர, செங்கல் சூளைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிரான போராட்டம் களைகட்டத் தொடங்கியது.

தொடர்ச்சியான போராட்டங்களின் தீவிரம், செங்கல் சூளை முதலாளிகளை பின்வாங்க வைத்தது. சூளை நட்த்துவதற்கே ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியவர்கள், கச்சா எண்ணெய் மூலம் எரிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இளைஞர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியது.

அடுத்ததாக, ஏரியில் மண் அள்ளும் பிரச்சினை. மூன்று அடி ஆழம் வரையே மண் அள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தும், ஏழு அடிக்கும் மேலாக தோண்டி மண்வளம் சுரண்டப்பட்டது. இதனால் விவசாயத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இம்முறை இளைஞர்கள் தங்கள் போராட்ட அணுகுமுறையை மாற்றிக் கொண்டார்கள். ஊரை காலி செய்யும் போராட்டம் நடத்தினார்கள்.

இவ்வாறாக ஒவ்வொரு பிரச்சினைக்கும் விதவிதமான போராட்டங்கள். சில வெற்றியடைந்தால், பல நசுக்கப்பட்டது. வெற்றிகளின்போது மகிழ்ச்சி அடைந்தவர்கள், தோல்வி அடையும்போது விரக்தி அடைவதும் இயல்புதானே?

“எவ்வளவு காலத்துக்குதான் போராடிக் கொண்டே இருப்பது? எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய கிராமம் தன்னிறைவு அடைவது எப்போது?” என்றொரு சிந்தனை இளைஞர்களிடையே எழுந்தது. இந்த இளைஞர்களில் ஒருவரான சாரதி, அப்போது தொண்டு நிறுவனமான சேவாலயாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த மனமாற்றத்துக்கு அவர் படித்த எம்.ஏ., (காந்திய சிந்தனைகள்) கல்வியும் ஒரு காரணம். போராட்டங்கள் போதும் என்று முடிவெடுத்தார்கள் ஆலத்தூர் இளைஞர்கள். போராட்டங்களை நிறுத்தியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை செயல்பாடுகள் மூலமாக சரிசெய்ய முன்வந்தார்கள்.

2004ஆம் ஆண்டு ‘உதவும் நண்பர்கள்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தோற்றுவித்தார்கள். பதிவு பெற்ற அமைப்பான உதவும் நண்பர்கள் கிராமப்பகுதி கல்வி, பொருளாதார முன்னேற்றம், சுகாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, விளையாட்டு, விவசாயம் உள்ளிட்ட கிராம மேம்பாட்டு திட்டங்களை, கிராம மக்களின் பங்களிப்போடு இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள்.

சாரதிக்கு இப்போது வயது 40. நிர்வாக அறங்காவலராக இவ்வமைப்பின் முழுநேர ஊழியராக பணியாற்றுகிறார். கோதண்டன், மனோகரன், மதுரை, பிரகாசம், சிவக்குமார், செல்வகுமார், செந்தில்குமார், ராகவேந்திரன் என்று எட்டு இளைஞர்கள் அறங்காவலர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எட்டு பேருமே 96 போராட்டங்களின் போது சிறுவர் மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்கள்.

‘கனவு இந்தியா’ என்ற அமைப்பினைச் சார்ந்த நடராஜன் என்ற நண்பர் மூலமாக சாரதி நமக்கு அறிமுகமானார். சுளீர் வெயில் அடித்த ஒரு நாளில் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் சாரதியை சந்தித்தோம். வெள்ளை கதர் ஜிப்பா, கதர் வேட்டியென்று அச்சு அசலாக ஒரு காந்தியவாதியின் தோற்றம். மீசைவைத்த சிறுவயது காந்தியைப் போலவே இருக்கிறார்.

கிராம முன்னேற்றத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர், சேவை தடைபட்டுவிடக் கூடாது என்று திருமணம் செய்துக் கொள்வதை தவிர்த்து விட்டார். விவசாயத் தொழில் புரிந்துவரும் சாரதி, உதவும் நண்பர்களின் முழுநேரப் பணியாளர். இவருக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி. சகோதரனின் சேவையார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணமாக பதினைந்து செண்ட் இடத்தோடு கூடிய தங்களது பரம்பரை இல்லத்தை ‘உதவும் நண்பர்கள்’ அமைப்புக்கு எழுதி வைத்து விட்டார்கள்.

சாரதியும், அவரது அமைப்பும் இந்த ஐந்து ஆண்டுகளில் அப்படி என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்? ஆலத்தூருக்குப் போய் பார்ப்போமா?

* யாருக்காவது அவசரத்துக்கு இரத்தம் தேவைப்பட்டால் உடனே ஆலத்தூருக்கு போன் போடலாம். ஊரே இரத்த தானத்துக்கு இரத்தப் பிரிவு வாரியாக தங்களை தானம் செய்து வருகிறது. இதுவரை ஐந்துபேர் கண்தானமும் செய்திருக்கிறார்கள்.

* ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்று உருவாக்கி நடத்தி வருகிறார்கள். பெற்றோர் இல்லாத ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை இலவசம். சுமார் இருபது குழந்தைகள் இப்போது இல்லத்தில் பரமாரிக்கப் படுகிறார்கள்.

* காமராஜர் பெயரில் மாலைநேரக் கல்விமையம் ஒன்று செயல்படுகிறது. ஆலத்தூர், மேட்டுத்தும்பூர், எடப்பாளையம், பள்ளத்தும்பூர் என்று நான்கு இடங்களில் மாணவர்களுக்கு மாலையில் கல்வி போதிக்கப்படுகிறது. இந்த நான்கு ஊர்களிலும் ஒட்டுமொத்தமாக 320 குழந்தைகள் பயனடைகிறார்கள். இவர்களுக்கு கல்வி மட்டுமன்றி பேச்சு ஆங்கிலம், கம்ப்யூட்டர், தியானம், யோகா என்று பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. தன்னார்வ அமைப்புகள் மூலமாக இக்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், சீருடைகளும் இலவசமாகவே பெற்றுத் தரப்படுகிறது.

* விவேகானந்தர் பெயரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் 30 பேர் கம்ப்யூட்டர் கற்கலாம். அலுவலகப் பயன்பாட்டுக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை சொல்லித் தருகிறார்கள். இதுவரை நானூறுக்கும் மேற்பட்டவர்கள் இங்கே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பாரதியார் பெயரில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டும் உண்டு.

* காலையிலும், மாலையிலும் சமைப்பதுதான் வேலைக்கு செல்லாத கிராமத்து மகளிரின் வேலை. மீதி நேரம்? ஏதாவது வேலை பார்த்து சம்பாதிக்கலாம் இல்லையா? அதற்குதான் அன்னை தெரசா தையற்பயிற்சி மையம் நடக்கிறது. இங்கே பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பையும் இவர்களே ஏற்படுத்தித் தருகிறார்கள். எம்பிராய்டரிங் பயிற்சியும் உண்டு.

* இந்தியா சுடர், தி செவன் ஹெல்ப்பர்ஸ் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு, உதவும் நண்பர்களுக்கு நல்ல நெருக்கம் உண்டு. இதுபோன்ற நிறுவனங்களின் உதவியைப் பெற்று உயர்கல்வி படிப்பதற்கான கல்லூரிக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.

* உடல் ஊனமுற்றோருக்கு அறுவைசிகிச்சை, செயற்கை உறுப்புகள் பொறுத்துதல் போன்ற பணிகளை தொண்டு நிறுவனங்களை அணுகி செய்துத் தருகிறார்கள். அரசின் உதவி யாருக்காவது தேவைப்படின், அதையும் செய்து கொடுக்கிறார்கள்.

* கால்நடை, விவசாயம், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறுதொழில் பயிற்சி மற்றும் இளைஞர்களுக்கு ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி என்று ஏராளமான பயிற்சிப் பட்டறைகள் அடிக்கடி நடத்தப்படுகிறது.

* இப்போது ஐந்தரை லட்சம் ரூபாய் செலவில் தங்களுக்கென ஒரு மருத்துவமனை கட்டி வருகிறார்கள். இங்கே தாங்களே மருத்துவர்களை பணிக்கு அமர்த்தி குறைந்த செலவில் தங்கள் மருத்துவ தேவைகளை ஈடுசெய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இன்னமும் தேவையான பணம் கிடைக்காததால் இப்பணி பாதியில் நிற்கிறது. ஐந்தரை கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை தங்கள் பகுதியில் நிறுவி, மாவட்டத்துக்கே இலவச சிகிச்சை அளிக்க வேண்டுமென்பது இக்கிராம மக்களின் இலட்சியம்.

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கண்ட சேவைகள் அனைத்துமே இலவசம்.

“நமக்கு நாமே என்பது மாதிரி எங்களுக்கு தேவையான விஷயங்களை நாங்களே செய்துக்கொள்கிறோம். இதற்கான திட்டங்களை தீட்டவும், நிதி ஆதாரங்களை உருவாக்கவும் கிராம வளர்ச்சி மன்றம் ஒன்றை தோற்றுவித்திருக்கிறோம். எங்கள் கிராமம் தன்னிறைவு அடைய மக்களின் பங்கேற்போடு, தன்னார்வலர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறோம். சுயராஜ்ய கிராமம் என்பதே எங்கள் இலட்சியம்” என்கிறார் சாரதி.
மகாத்மா காந்தியின் கனவு தன்னிறைவு பெற்ற கிராமங்கள். ஆலத்தூர் போன்ற கிராமங்களும், சாரதி போன்ற இளைஞர்களும் காந்தியின் கனவை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை பலப்படுகிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

லோக்கல் அரசியல்வாதிகளின் ஆதரவு இவர்களுக்கு நிறைய இருக்கிறது. ஊராட்சிமன்றத் தலைவரான ஏழுமலை ஒருமுறை தன்னுடைய வக்கீல் நண்பரை பார்க்கச் சென்றிருக்கிறார். அங்கே ஒரு தம்பதிகள் பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கள் சொத்தினை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு எழுதித்தர வந்திருந்தார்கள்.

அவர்களிடம் தங்கள் கிராம அமைப்பான உதவும் நண்பர்களை பற்றி பேசியிருக்கிறார் ஏழுமலை. இவர்களது செயல்பாடுகளால் கவரப்பட்ட அத்தம்பதிகள் தங்கள் சொத்தினை உதவும் நண்பர்கள் பெயரில் எழுதிவைத்து விட்டார்கள்.

கொடுமை என்னவென்றால், உயில் எழுதி வைத்த மறுநாளே பிரகாஷ் – கோமளவள்ளி தம்பதிகள் ஏதோ பிரச்சினையில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். தற்கொலைக்கு முன்பாக ஒரு நல்ல காரியம் செய்யவே தங்கள் சொத்தினை எங்களுக்கு எழுதி வைத்து விட்டு போய்விட்டார்கள் என்று சோகமாக சொல்லுகிறார்கள் ஆலத்தூர் கிராமவாசிகள்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

உதவும் நண்பர்களை தொடர்புகொள்ள :
1/30, பஜனைக் கோவில் தெரு,”
ஆலத்தூர் கிராமம், பாலவேடு அஞ்சல்,
சென்னை – 55.
போன் : 9444511057

(நன்றி : புதிய தலைமுறை)