5 செப்டம்பர், 2011

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

தலைமை ஆசிரியரின் நீண்ட கல்வித்துறை அனுபவமும், துணை ஆசிரியரின் இளமைத் துடிப்பான செயல்வேகமும்இணைந்து, தமிழகத்தின் குக்கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியிருக்கிறது!

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து சிறுமுகை செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் பயணித்தால் வரும் குக்கிராமம் இராமம்பாளையம். 900 பேர் வசிக்கும் இக்கிராமம் ஜடையம்பாளையம் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. கோவையிலிருந்து 38 கிலோ மீட்டர் தூரம்.

இங்கிருக்கும் ஆரம்பப் பள்ளி 1930ல் அரசு நலப்பள்ளியாக தொடங்கப்பட்டது. வைரவிழா கண்ட இப்பள்ளிக்கு சில ஆண்டுகளாக முன்பாக ஒரு பெரிய சோதனை. கிராம மக்கள் பலரும் இப்பள்ளியை புறக்கணித்து, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆரம்பித்தார்கள்.

தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.சரஸ்வதி. உதவி ஆசிரியர் டி.பிராங்க்ளின். பொருளாதார ரீதியாக ஏழைகளாக இருந்தாலும் வீம்பாக அரசுப்பள்ளியை புறக்கணித்து, தனியார் பள்ளியை நாடி மக்கள் செல்வதை இவர்கள் கவலையோடு பார்த்தார்கள்.

பெரிய மாற்றம் ஒன்று ஏற்படாவிட்டால், வைரவிழா கண்ட பள்ளியின் நிலை கவலைக்கிடமாகி விடும். அரசுச் சொத்துகளை அன்னியமாக பார்க்கும் மனோபாவம் அவ்வூர் மக்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்குமே இருக்கிறது. இப்பள்ளி தங்களுடைய சொத்து, இதை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையை மக்களுக்குள் விதைக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஆசிரியர் பணி என்பது வெறுமனே போதித்தல் மட்டும்தானா என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்தது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும், தங்கள் பணி தாண்டி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கிறார்கள். அரசின் கீழ் பணிபுரியும் நாம், இந்தப் பள்ளியை மேன்மையான நிலைக்கு கொண்டு வந்தால் என்ன?

56 வயதாகும் தலைமையாசிரியர் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறப்போகிறார். துணை ஆசிரியரோ 35 வயது இளைஞர். தலைமுறை இடைவெளி இவர்களை விலக்கிடவில்லை. மாறாக தலைமை ஆசிரியரின் நீண்டகால கல்வி அனுபவமும், உதவி ஆசிரியரின் சாதிக்க வேண்டும் என்கிற லட்சிய வெறியும் இன்று இராமம்பாளையம் பள்ளியை சர்வதேசத் தரம் கொண்ட பள்ளியாக உயர்த்தியிருக்கிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை இயங்கும் இராமப்பாளையம் ஊராட்சி ஒன்றிட்யத் தொடக்கப் பள்ளியில் தற்போது 34 குழந்தைகள் படிக்கிறார்கள்.

“நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் தரமான கல்வியை, கட்டமைப்பை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. நாங்கள் பணிபுரியும் இந்தப் பள்ளியையையே முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்கிவிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் ஆலோசித்தோம். அதுதான் ஆரம்பப் புள்ளி” என்கிறார் தலைமையாசிரியர் சரஸ்வதி.

எங்கே ஆரம்பித்தார்கள்?

தங்களுடைய ‘சீக்ரட் ஆஃப் சக்ஸஸை’ வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின்.

“முதலில் இந்தப் பள்ளியில் ஒரு மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க முடிவெடுத்தோம். எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிவரும் பள்ளி என்றாலும், இங்கே ஆண்டுவிழா நடந்ததே இல்லை.

2009ல் முதன்முதலாக ஊர் பொதுமக்களை கூட்டி ஆண்டுவிழா நடத்தினோம். தங்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டவர்களுக்கு நம் குழந்தைகள் இத்தனை திறமையானவர்களா என்று ஆச்சரியம். வெளியூர்களிலிருந்து தன்முனைப்பு பேச்சாளர்களை அழைத்துவந்து அந்நிகழ்ச்சியில் பேசவும் வைத்தோம்.

முதன்முறையாக பள்ளி சார்பாக இப்படி ஒரு விழா நடந்ததை கண்ட மக்கள், ‘என்னப்பா விஷயம்?’ என்று அக்கறையாக கேட்க ஆரம்பித்தார்கள். எங்கள் கனவை சொன்னோம். ‘நல்ல விஷயம்தானே? செஞ்சுடலாம்’ என்றார்கள்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கிராமக் கல்விக்குழு உண்டு. அவர்களும் எங்களோடு கைக்கோர்க்க, அனுமதிக்கு போய் நிற்கும்போதெல்லாம் தொடக்கக் கல்வி அலுவலர் ஊக்குவிக்க, இன்று எல்லோரும் அதிசயப்படும் பள்ளியை ஊர்கூடி அமைத்திருக்கிறோம்”

நாலு பாராவில் பிராங்க்ளின் சொல்லிவிட்டாலும் ஆசிரியர்களின் இரண்டாண்டு கடினமான திட்டமிடுதலும், உழைப்பும், கல்விக்குழு மற்றும் கிராமமக்களின் பங்களிப்பும் இவ்வெற்றிக்குப் பின்னால் இருக்கிறது.

பளிச்சென்று சர்வதேசத் தரத்துக்கு ஒப்பாக இருக்கும் வகுப்பறை, கணினிப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப் படுத்துதல் என்று போதிப்புத் தரத்தில் அயல்நாட்டுப் பள்ளிகளோடு போட்டிப்போடும் கல்வித் தரத்தையும், கட்டமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள், கழுத்தணி (tie), காலணி (shoe), பெல்ட், அடையாள அட்டை, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் இணைப்புக் கையேடு (Dairy) அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது.

இங்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு எங்கேயும் இவர்களுக்கு முன்மாதிரி (reference) இல்லை. ஒரு வகுப்பறை எப்படியிருந்தால் நன்றாகயிருக்கும் என்று ஆசிரியர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக சுத்தமான கழிப்பறைகள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டும் பணி இன்னும் பாக்கியிருக்கிறது. மேலும் கொஞ்சம் நிதி சேர்ந்தால், இன்னும் சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

பல லட்சம் செலவாகியிருக்குமே, இவற்றுக்கெல்லாம் ஆன செலவை எப்படி சமாளித்தார்கள்?

முதல் பங்களிப்பை ஆசிரியர்கள் இருவருமே செலுத்த, கல்விக்குழுவின் ஒத்துழைப்போடு ஊர் மக்கள் செலவினை பங்கிட்டுக் கொண்டார்கள். இந்த முன்மாதிரிப் பள்ளியை உருவாக்க இதுவரை ஆன செலவு தோராயமாக இரண்டரை லட்சம் மட்டும் தானாம்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி பணிகள் முடிந்து திறப்புவிழா எளிமையாக நடந்தது. இது ஒரு சாதனை என்கிற நினைப்பு அங்கே யாருக்குமே இல்லை. வெளியே தெரிந்தால், அனைவரும் கண்காட்சி போல பள்ளியைக் காண வந்துவிடுவார்களோ, அதனால் குழந்தைகளின் கவனம் சிதறுமோ என்று கவலைப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.

சரி, இந்த மாற்றங்களால் என்ன பலன்?

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் திரும்பவும் இந்தப் பள்ளிக்கு வருகிறார்கள். “எல்லாமே முற்றிலும் இலவசமா, தனியார் பள்ளியை விட தரமான கல்வி இங்கே கிடைக்கிறப்போ, நாங்க எதுக்கு தனியாருக்கு போகணும்? நாலாவது வரைக்கும் மெட்ரிக்குலேஷனில் படிச்ச என் பொண்ணு யாழினையை, ஐந்தாவதுக்கு இங்கேதான் சேர்த்திருக்கேன்” என்கிறார் சரஸ்வதி வடிவேலு. வேறென்ன வேண்டும்?

தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாக, இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தெரியவந்திருக்கிறது. அவர் ‘திடீர் விசிட்’ அடித்து பள்ளியை சுற்றிப் பார்த்து பாராட்டியிருக்கிறார். “கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போறாருன்னா, நிஜமாவே நாங்க நல்ல விஷயம்தான் பண்ணியிருக்கோமுன்னு புரியுது” என்கிறார்கள் கிராம மக்கள்.

“ஆசிரியர்கள் மாறக்கூடியவர்கள். ஆனால் கிராமமும், பள்ளியும் நிரந்தரமாக இங்கேயே இருக்கக் கூடியவை. பள்ளி, கிராமத்தின் சொத்து என்கிற உணர்வு ஒவ்வொரு கிராமத்தவருக்கும் வேண்டும். முன்பெல்லாம் பள்ளியில் என்ன நடந்தாலும், அதைப்பற்றி மக்களுக்கு பெரிய அக்கறை இருந்ததில்லை. இப்போது சுவரில் யாராவது கிறுக்கினாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்களை மக்களே தட்டிக் கேட்கிறார்கள். எங்கள் மக்களுக்கு கிடைத்த இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவவேண்டும். அடுத்து வரும் ஆசிரியர்களிடமும் இதே அர்ப்பணிப்பை நாங்கள் உரிமையாக தட்டிக் கேட்போம்” என்கிறார் கல்விக்குழு உறுப்பினரான ஆர்.மகேஷ்.
தமிழகத்தின் எல்லாக் கிராம ஆரம்பப் பள்ளிகளையும் இதேபோல செய்ய முடியாதா?

“தாராளமாக செய்யலாம். அந்தந்த கிராம மக்கள், கல்விக்குழு, ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து செய்தால் செய்யலாம். இராமம்பாளையம் பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு இப்போதே பணியை ஆரம்பித்தால் கூட, அடுத்த ஆண்டு தமிழகம் முழுக்க 40 சதவிகிதப் பள்ளிகளை இந்த தரத்தை எட்டச் செய்யலாம்” என்கிறார் காரமடை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.ராஜேந்திரன்.

இதே தரத்தை தொடர்ச்சியாக பரமாரிக்க, கணிசமான நிதி தேவைப்படும். பள்ளியின் தரம் உயர, உயர மாணவர் சேர்க்கை அதிகமாகும். கூடுதல் செலவுகள் ஏற்படும். அதற்கு என்ன ‘ஐடியா’ வைத்திருக்கிறார்கள்?

“ரொம்ப சுலபம். இந்த ஊரில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பவர்கள், அரசு வேலைகளில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று குறைந்தது நூறு பேரை பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். இவர்களை வைத்து ‘இராமம்பாளையம் முன்னாள் மாணவர்கள் அமைப்பு’ ஒன்றினை உருவாக்க உத்தேசித்திருக்கிறோம். இவர்களிடம் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயை நன்கொடையாகப் பெறுவது சுலபம். இதன் மூலம் வருடத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். இப்போதிருக்கும் தரத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ள இந்த தொகையே மிக அதிகம்” என்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின். நல்ல ஐடியாதான்.

ஊர் கூடி தேர் இழுத்தால் என்ன பயன், இதுபோல ஒரு பள்ளியை உருவாக்க முடிந்தால், காலாகாலத்துக்கும் ஊர் பெயரை உலகம் பேசுமே?


பள்ளியில் என்னென்ன வசதிகள்?

• மாணவர்கள் குழுவாக அமர்ந்து பாடம் கற்க வட்ட மேசைகள்
• புத்தகங்கள் வைக்க இடவசதியோடு கூடிய நாற்காலிகள்
• தமிழ் – ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
• டி.வி.டிகள் அடங்கிய டிஜிட்டல் நூலகம்
• கம்ப்யூட்டர்
• தொலைக்காட்சி – டிவிடி ப்ளேயருடன்
• அறிவியல் ஆய்வு மற்றும் கணிதம் தொடர்பான உபகரணங்கள்
• செயல்வழி கற்றல் அட்டைகளை வாசிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்
• ஒலி-ஒளி அமைப்புகள்
• மாணவர்கள் எழுதிப்பலக கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை
• படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு காட்சிப்பலகை
• சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி
• காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கண்ணாடி சன்னல்கள்
• குழந்தைகளை கவரும் வகையில் சுவர் ஓவியங்கள்
• உயர்தர தள கட்டமைப்பு
• ஒலிபெருக்கியோடு கூடிய உட்கூரை
• வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்
• அவசரக்கால வழி, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டி

(நன்றி : புதிய தலைமுறை)

3 செப்டம்பர், 2011

முதல்வரால் முடியாதா?

29-08-2011 அன்று சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் சமர்ப்பித்த அறிக்கையில் ”பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதல்வர் என்கிற முறையில் எனக்கு இல்லை” என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் கூற்று தவறானது. ”மாநில ஆளுனருக்கும், தமிழக அமைச்சரவைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இன் படி கருணை மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் நிச்சயமாக இருக்கிறது” என்று வாதிடுகிறார் மூத்த வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன்.

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கூற்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவுக்கூறுக்கு புறம்பானது.

1991ல் மத்திய உள்துறை அமைச்சரகம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிப்பேராயம் 11-11-1980 அன்றே மாரூராம் வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72 மற்றும் பிரிவுக்கூறு 161-இல் குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுனருக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வேறு எந்த சட்டத்தாலும் கட்டுப்படுத்த முடியாது என்று மிகத்தெளிவாக கூறியிருக்கிறது.

குடியரசுத் தலைவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியுள்ள அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72 உட்பிரிவு 3-இல் ஒரு முக்கிய குறிப்பு உள்ளது. மரண தண்டனைக்கு எதிராக வரும் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலித்தாலும்கூட, குடியரசுத் தலைவருக்கு உள்ள அதே அதிகாரம் மாநில ஆளுனர்களுக்கும் உண்டு என்பதை இந்த உறுப்பு தெளிவு படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகரத்தின் கடிதம், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 257(1)இன் கீழ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இத்தகைய கடிதத்தை இந்த உறுப்பின்கீழ் மாநில அரசுகளுக்கு அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த கடிதத்தை ஆணையாக ஏற்றுக் கொண்டு எந்த ஒரு மாநில ஆளுனரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இல் தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி கருணை மனுக்களின் மேல் முடிவெடுக்க மாட்டேன் என்று சொல்லவும் முடியாது.

மத்திய உள்துறை அமைச்சரகத்தின் கடிதம், மாநில ஆளுனரின் அதிகாரத்தில் தலையிடுவதால் அந்தக் கடிதம் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 14க்கு எதிரானது. அந்த கடிதத்தின்படி எந்த மாநில ஆளுனராவது தண்டனை கைதிகளால் தன்னிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பினாலோ, அல்லது தனக்கு அதிகாரம் இல்லை என்று புறம் தள்ளினாலோ அச்செயல் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161க்கு எதிரானதாகும்.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161-இல் உள்ள அதிகாரம் சாதாரண நிர்வாக அதிகாரம் அல்ல. மாநில ஆளுனருக்கு அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட இறையாண்மை சார்ந்த அதிகாரம் ஆகும். இந்த அதிகாரத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டத்தாலோ அல்லது மற்ற சட்டங்களாலோ கட்டுப்படுத்த முடியாது. இந்த அதிகாரத்தை சாதாரண நிர்வாக அதிகாரம் என்று எடுத்துக் கொண்டால்கூட, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது. ஏனெனில், இந்த மூன்று கைதிகளின் கருணை மனுக்களை மாநில ஆளுனர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால் அதனால் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு எந்த ஊறும் விளையப்போவதில்லை. குடியரசுத் தலைவரிடம் இன்றும் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தால் மாநில ஆளுனர் புதிதாக அவரிடம் வரும் கருணை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.

எனவே மாநில ஆளுனருக்கும், தமிழக அமைச்சரவைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இன் படி கருணை மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் நிச்சயமாக இருக்கிறது”.

(நன்றி : புதிய தலைமுறை)

2 செப்டம்பர், 2011

என்னைப் போல் ஒருவன்!


 “சரியா அஞ்சாவது படிக்கிறப்போதான் இந்த பிரச்சினை ஆரம்பிச்சுதுன்னு நெனைக்கிறேன். இல்லை.. இல்லை.. அதுக்கு முன்னாடியே.. சரியா எப்போ? ஆங்.. நான் பொறந்த அன்னைக்கே ஆரம்பிச்சிடிச்சி போல. நான் நட்ட நடுப்பகல், உச்சிவெயில் 12 மணிக்கு பொறந்தேன். சரியா ஒரு நிமிஷம் கழிச்சி, அவன் 12.01க்கு பொறந்தானாம். அன்னைக்கு எனக்குப் புடிச்ச சனியனுங்க இவன். ஏழரை நாட்டு சனியாவது ஏழரை வருஷம். இவன் முப்பத்தஞ்சி வருஷமா என்னைப் படுத்தற பாடு இருக்கே. உஸ்ஸப்பா...

போன பத்தியிலே எங்கன ஆரம்பிச்சேன்? ஆங்.. அஞ்சாங்கிளாஸ்! அப்போ தமிழய்யா தினமும் ஒரு ஆளுக்கு, ஏதாவது ஒரு திருக்குறளை மனப்பாடமா சொல்றவங்களுக்கு ஒரு பென்சில் பரிசா கொடுப்பார். தினம் ஒரு பென்சில் திட்டம். ஒரு நாள் நான் நன்றி மறப்பது நன்றல்லபர்ஃபெக்டா, ஏற்ற இறக்கத்தோடு ‘நச்’’சுன்னு சொன்னேன். முதுகில் தட்டிக் கொடுத்து அய்யா பென்சில் கொடுத்தார். ரொம்ப பெருமிதமா இருந்துச்சி. வீட்டுக்குப் போய் சொன்னப்போ என் ஆத்தா நிஜமாவே, சான்றோன் எனக்கேட்ட தாய்ஆகிட்டாங்க. அவனோட அம்மா கிட்டே போய் பெருமையா சொல்லியிருப்பாங்க போல.

மறுநாளே கற்க கசடற’, அதற்கடுத்த நாள் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்னு ரெண்டையும் அட்டகாசமா ஒப்பிச்சு, ஒண்ணுக்கு ரெண்டு பென்சில் வாங்கிட்டான். எப்பூடி?

ஆறாங்கிளாஸ் போனப்பவும், நான் சேர்ந்த அதே ஸ்கூல்ல, அதே கிளாஸுக்கு அவனும் அடம் புடிச்சு வந்து சேர்ந்தான். காலாண்டு பரிட்சையில், நான் தான் வகுப்பிலேயே முதலாவதா வந்தேன். அவன் பயங்கரமா கடுப்பாயிட்டான். என்ன பண்ணான்? எப்படி படிச்சான்னே தெரியலை. அரையாண்டுப் பரிட்சையில் அவன் என்னைவிட ரெண்டு மார்க் அதிகம் வாங்கி முதலாவதா வந்துட்டான். இத்தனைக்கும் அவன் கணக்குலே பயங்கர மக்கு. அந்தப் பரிட்சையிலே பார்த்தீங்கன்னா நூத்துக்கு நூறு மார்க்கு வாங்கி அசத்திட்டான். பத்தாங் கிளாஸ் வர்ற வரைக்கும் இதேமாதிரி முதலாவது, ரெண்டாவதுன்னு நாங்க ரெண்டு பேருமே மாறி வந்துக்கிட்டிருந்தோம்.

சரியா இந்த நேரத்துலேதான் எனக்கு வேறமாதிரி சகவாசமெல்லாம் கொஞ்சம் சேர ஆரம்பிச்சிச்சி. ஒரு நாள் ஜேக்கப்போட மாந்தோப்புலே முதல் முறையா பனாமா ஃபில்டர் பத்த வெச்சேன். நல்ல காரம். இருமலோட பொறையேறி கண்ணுலே தண்ணியே வந்துடிச்சி. விஷயம் அவனுக்கு எப்படி தெரிஞ்சிதுன்னு தெரியலை. ஒருவேளை ஜேக்கப் பயலே கூட சொல்லி இருக்கலாம். கடைவீதியிலேயே நாலு பேருக்கு நல்லா தெரியறமாதிரி, கோல்ட் ஃபில்டர் பத்த வெச்சு ஊதினான். யார் மூலமாவோ அவன் வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சி செம அடி வாங்குனான். பயபுள்ள மாட்டுனதுதான் மாட்டுனான். விசாரணையோட டார்ச்சர் தாங்கமுடியாம, கடைசியிலே நான் தம்மு அடிச்சதையும் சொல்லித் தொலைச்சிட்டான். அப்பா காதுக்கு மேட்டர் வந்து, நம்ம வீட்டுலேயும் பர்ஸ்ட் டிகிரி ட்ரீட்மெண்ட் நல்லா கோலாகலமா நடந்தது.

இப்படியேதாங்க வாழ்க்கை அவனுக்கும் எனக்குமான ஏட்டியும், போட்டியுமா போயிக்கிட்டு இருந்தது.

பண்ணெண்டாங் கிளாசுலே நான் வாங்குன மார்க்குக்கு பி.ஏ எகனாமிக்ஸ்தான் கிடைச்சுது. ஏன்னா இந்த ரெண்டு வருஷத்துலே நான் படிக்கிற பையன் என்கிற ‘நல்லகேட்டகிரியில் இருந்து, அராத்து கேட்டகிரிக்கு வந்து தொலைச்சிட்டேன். அவன் அப்படியில்லை. முழுப்பரிட்சை மட்டும் நல்லா எழுதிட்டான் போலிருக்கு. நல்ல மார்க் வாங்குனான். அவனுக்கு கம்ப்யூட்டர் என்ஜினியரிங் சீட்டு கிடைச்சும் கூட, வெணுமின்னே எங்கூட வந்து எகனாமிக்ஸ் படிச்சான்.

எப்படியோ தட்டுத் தடுமாறி படிச்சி, அரியர்ஸ் வைக்காம முடிச்சி, சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தேன். அவங்கப்பா பிஸினஸை பார்த்துக்கிட்டு இருந்தவன், நான் ஊர் சுத்துறதைப் பார்த்துட்டு, அவனும் வெட்டியா ஊர்சுத்த ஆரம்பிச்சான். இப்படி ஒரு கேரக்டரை உலகத்துலே நீங்க எங்கனயாவது கேள்விப்பட்டு இருக்கீயளா?

நான் தெருக்கோடி புஷ்பாவை லவ்வுனதை கேள்விப்பட்டு, புஷ்பாவுக்கு எதிர்த்த வீட்டிலிருந்த மல்லிகாவை அவன் லவ்வுனான். எனக்கு லவ் பெய்லியர். அவன் வேணும்னே அவனும் அவனோட லவ்வை பெய்லியர் ஆக்கிக்கிட்டான். அவனை நெனைச்சிப் பார்த்தா இன்னைக்கும் எனக்கு ஆச்சரியமாதான் இருக்கு. இத்தனைக்கு நான் கயட்டி உடற மூடுலே லவ்வு பண்ணவன். அவனோட லவ்வு செம டீப்பு லவ்வுங்க.

லவ் பெய்லியர்லே நாசமாயிடக்கூடாதுன்னு, கடைசியா சோசியல் சர்வீஸ்லே இறங்கிட்டேன். நாலைஞ்சி பசங்களை சேர்த்துக்கிட்டு இளையதளபதி விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சேன். இரத்த தானம் பண்ணுனேன். அவன் தீனாஅஜித் ரசிகர்மன்றம் ஆரம்பிச்சான். ஊரெல்லாம் மரம் நட்டான். கண் தானம் செஞ்சான்.

சோஷியல் சர்வீஸுக்கு அப்புறமென்ன.. பாலிடிக்ஸ்தானே? திமுக இளைஞரணீலே சேர்ந்து, சின்சியரா ஒர்க் பண்ணி, பகுதிச் செயலாளர் ஆயிட்டேன். அவன் டபக்குன்னு அதிமுகவுலே சேர்ந்து, இளைஞர் பாசறையிலே என்னைவிட பெரிய போஸ்ட்டு ஒண்ணு வாங்கிட்டான்.

பாலிடிக்ஸிலே இருந்தோமில்லையா? அதனாலே நைட்டுலே லைட்டா டிரிங்க்ஸ் அடிக்குற பழக்கம் எனக்கு ஏற்பட்டுச்சி. ஏதோ ஒரு டாஸ்மாக்கு வாசல்லே அவன் என்னை யதேச்சையாப் பாத்துப்புட்டான். அடுத்த நாளு பார்த்தா மூக்கு முட்ட குடிச்சிப்புட்டு, வாந்தியெடுத்து நடுரோட்டுலே விழுந்து கெடக்குறான். என்னத்தைச் சொல்ல? என்னாங்கடா இதுன்னு ஆகிப்போச்சி எனக்கு.

சிகரெட்டு, குடி, பாலிடிக்ஸுன்னு கெட்டப் பழக்கமாவே திரிஞ்சிக்கிட்டு இருந்ததாலே வீட்டுலே எனக்கு கல்யாணம், காட்சின்னு பண்ணி வெச்சுப்புடலாம்னு முடிவு செஞ்சாங்க. வேலை வெட்டி இல்லாதவனுக்கு எவன் பொண்ணைக் கொடுப்பான்? உடனே ஒரு கடையை வாடகைக்கு புடிச்சி குலதெய்வம் பேருலே ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சி தொழிலதிபர் ஆயிட்டேன். என் கடைக்கு எதுத்த இருந்த கடையை கரெக்ட்டா அவன் குறிபார்த்துப் புடிச்சான்.

பொலிடிக்கல் சப்போர்ட்டும் இருந்ததாலே ரெண்டு மூணு மாசத்துலேயே பிசினஸ் செமையா சூடு பிடிச்சிடிச்சி. கையிலே தாராளமா நாலு காசு பொரள ஆரம்பிச்சுது. உறவு வட்டத்துலே எனக்கு பொண்ணு தர எவன் எவனோ போட்டி போட ஆரம்பிச்சான். கடைசீலே தூரத்து சொந்தக்காரப் பொண்ணு ஒண்ணை ஃபிக்ஸ் பண்ணாங்க. நூறு சவரன் வரதட்சிணை.

நான் நாலு அடி பாய்ஞ்சா, அவன்தான் எட்டடி பாய்வானே? என்னென்னவோ டகால்ட்டி வேலை பார்த்து, நூத்தியோரு சவரன் போடுற மாமனாரை கண்டுப் புடிச்சிட்டான். ரெண்டு பேருக்கும் ஒரே நாள்லதான் கல்யாணமும் ஆச்சி. பர்ஸ்ட் நைட்டும் ஒரே நாள்லதான்னு உங்களுக்கு தனியா சொல்ல வேண்டியதில்லை.

எல்லாம் நல்லாதாங்க போயிட்டிக்கிருந்தது, அந்தப் பொம்பளையை பார்க்குற வரைக்கும். சும்மா வாளிப்பா கும்முன்னு சினிமா நடிகை மாதிரி இருப்பா. என்னைவிட மூணு, நாலு வயசு அதிகமும் கூட. பிசினஸ் காண்டாக்ட். என்னவோ சொக்குப்பொடி போட்டு என்னை நல்லா மயக்கிட்டா. நைட்டுலே வீட்டுக்கு போறதை விட்டுப்புட்டு அந்த பொம்பளை வீடே கதின்னு கிடக்க ஆரம்பிச்சேன். எனக்கு சின்னவீடு இருக்குறது ஊருலே அரசல், பொரசலா பேசப்பட்டு அவன் காதுக்கும் போயிருக்கு. கொடுமையப் பாருங்க சார். அவனும் வேண்டா வெறுப்பா ஒரு சின்ன வீட்டை வெச்சுக்கிட்டான்.

குடியும், கூத்தியுமா இருக்குற ஒரு புருஷனை எந்த பொண்டாட்டிதான் சகிச்சுப்பா. எம் பொண்டாட்டி ரொம்ப கடுப்பாயிட்டா. ஒரு நாள் செருப்பை கழட்டி என்னை அடிச்சிட்டு, முகத்துலே கொத்தா காறி உமிழ்ந்துட்டு, குழந்தையைக் கூட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டா.

ஆனா அவன் பொண்டாட்டி கல்லானாலும் கணவன், ஃபுல் ஆனாலும் புருஷன்டைப் நளாயினி மாதிரி. புருஷனே தெய்வம்னு கெடந்தா. அவன் பொண்டாட்டியே அவனை வுட்டுட்டு போயிட்டா. உனக்கு அந்த அளவுக்கு சூடு சொரணை கிடையாதாடீன்னு சொல்லி அவளை போட்டு அடிச்சி, உதைச்சி அவளோட அம்மா வீட்டுக்கு இவனே துரத்தி அடிச்சிட்டான்.

இந்த நேரத்துலேதானுங்க நமக்கு எகனாமிக் பிராப்ளம். வேலையை ஒழுங்கா பார்த்தாதானே? என்னோட தொழில் ஒட்டுமொத்தமா படுத்துடிச்சி. சுத்துப்பட்டு எல்லா ஊருலேயும் நமக்கு ஏகப்பட்ட கடன். ஊரைவிட்டு ஓட வேண்டிய நிலை. ஆனா ஆச்சரியகரமா அவன் பிசினஸ் ஓரளவுக்கு சுமாராவே இருந்தது, அவனோட க்ளையண்ட்ஸ் அந்தமாதிரி. சும்மா சொல்லக்கூடாது. அவன் என்னைவிட புத்திசாலிதான்.

எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நாளு நைட்டு திருட்டுத்தனமா ரயிலேறி இங்கே ஓடிவந்துட்டேன். கடன் காரனுங்க எல்லாம் என்னை ஊருலே வலைவீசி தேடிக்கிட்டிருக்கிறதா கேள்விப்பட்டேன். அவனுக்கு நான் இங்கே இருக்குறது எப்படி தெரிஞ்சதுன்னு தெரியலைங்க. அவனோட தொழிலு, லொட்டு, லொசுக்கையெல்லாம் எவனுக்கோ சும்மாவே கொடுத்துட்டு அவனும் இங்கே ஓடியாந்துட்டான்.

என்னா சாமீ. இவ்ளோ நேரம் வக்கணையா எங்க கதைய கேட்டுப்புட்டு மரம் மாதிரி அப்படியே நிக்கிறே. அவன் யாருன்னு கேட்கறீயா? அதோ எனக்கு எதுத்த வாடைலே நாலாவதா தட்டை குலுக்கிட்டு அய்யா சாமீன்னு பரிதாபமா கொரலு விடுறான் பாருங்க. அவனேதான். எனக்கு ஒரு ரூவா, அவனுக்கு ஒரு ரூவா போட்டுட்டு இடத்தை சீக்கிரமா காலி பண்ணு சாமீ. காத்து வரட்டும். கஸ்டமருங்க வர்ற பீக் ஹவர் இல்லே இது? வக்கணையா கதை கேட்க இங்கன உட்கார்ந்து, நடக்குற இந்த பொழைப்பையும் கெடுத்துடுவே போலிருக்கே?”

(நன்றி : சூரிய கதிர் - செப்.1-15, 2011)

31 ஆகஸ்ட், 2011

மங்காத்தா

நோட்புக்கை தூக்கிக் கொண்டு காலேஜூக்கு போகவில்லை. சுற்றி நூறு ஃபைட்டர்களை நிற்கவைத்து ஒத்தக்கையால் தட்டாமாலை சுற்றவில்லை. ஓபனிங் சாங் இல்லை. அச்சு பிச்சு பஞ்ச் டயலாக் இல்லை. கெட்டப் என்கிற பெயரில் கோமாளித்தனம் செய்யவில்லை. எவ்வளவு நாள் ஆகிறது ஸ்மார்ட்டான அஜித்தைப் பார்த்து.  “அடுத்த மே வந்தா 40 வயசுங்க” என்று ஒரிஜினலாக வெளிப்பட்டிருக்கிறார் அஜீத். மங்காத்தா – அல்டிமேட் ஸ்டாரின் அடுத்த கேம் ஸ்டார்ட்ஸ்...

ஒரு படத்தில் அதிகபட்சம் நான்கைந்து ட்விஸ்ட் இருக்கும். மாஸ்ராஜா ரவிதேஜாவின் படமென்றால் இருபது இருபத்தைந்து ட்விட்ஸ்ட். மங்காத்தா முழுக்க முழுக்க ட்விஸ்ட்டுதான். படம் முடிந்ததும் தலையெல்லாம் கிறுகிறுத்து விடுகிறது. இரண்டரை மணி நேர படத்துக்கு எழுபத்தைந்து சீன்கள். இந்தப் படத்தில் ஒரு இருநூறு சீன் இருக்குமோ?

முழுக்க முழுக்க அஜித் ராஜ்யம். பத்து வருடம் கழித்து கலக்கல் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ். குறிப்பாக இண்டர்வெல் பிளாக்கின் ஐந்து நிமிட தொடர் பெர்ஃபாமன்ஸில் துவம்சம். ‘தல’க்கு ஒரு ஆஸ்கர் பார்சல் ப்ளீஸ். அட்லீஸ்ட் பிலிம்ஃபேர்.

“நீங்கதான் சார் ஹீரோ” என்று சொல்லி, அர்ஜூனை நடிக்க வைத்திருப்பார்கள் போல. கால் மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து டொப், டொப்பென்று சுட்டுக்கொண்டே இருக்கிறார். அர்ஜூனுக்கும் வயசாயிடிச்சிங்க. கண்ணுக்கு கீழே கருவளையம் விழுந்து, தோல் சுருங்கி...

த்ரிஷா சும்மா தொட்டுக்க ஊறுகாய். ஹீரோயின் என்றாலும், இவரை விட வெயிட்டான கேரக்டரை லட்சுமிராய் தட்டிச் செல்கிறார். சென்ஸார் போர்டின் அட்டூழியத்தால், இவரது அழகான தொப்புள் பல காட்சிகளில் மறைக்கப்பட்டது தமிழ் ரசிகர்களுக்கு நேர்ந்த சோதனை. முன்பு க்ளிவேஜை கட் அடித்தார்கள். இப்போது தொப்புளையும் மறைக்கிறார்கள். அடுத்து இடுப்பே தெரியக்கூடாது என்று கண்டிஷன் போட்டுத் தொலைப்பார்களோ? மத்திய அரசின் இந்த அநியாயத்தை எதிர்த்து சாஸ்திரி பவன் முன்பாக மறியல் செய்தாக வேண்டும்.

கிரிக்கெட் சூதாட்டத்தை களமாக எடுத்துக் கொண்ட புத்திசாலித்தனத்துக்கு வெங்கட்பிரபுவுக்கு சபாஷ். ஆனாலும் ஐநூறு கோடி ரூபாயை தட்ஸ் லைக் தட் சூட்கேஸில் கொண்டுபோவது மாதிரி அங்கிட்டும், இங்கிட்டுமாக அலைய விடுவது கொஞ்சம் ஓவர். அணிலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரி, வெங்கட்பிரபுவுக்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரனால் சனி உச்சத்துக்குப் போகலாம். தேவையில்லாமல் இவருக்கு பில்டப் சீன்களை யோசித்து, யோசித்தே மற்ற விஷயங்களை கோட்டை விட்டுவிடுவார் போல.

படமாக்கம், இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, நடிகர்களின் நடிப்பு என்று ஆல் ரவுண்டும் சிக்ஸர். படத்தின் முதல் பாதி நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் ‘நறுக்’கென்று வந்திருக்கும். தேவையில்லாத சில பாடல்களும் எரிச்சல் மூட்டுகிறது. ஆனாலும் தீனாவுக்குப் பிறகு நடனமாட முயற்சித்திருக்கும் அஜீத்துக்கு சபாஷ்.

மாமாங்கத்துக்கு ஒருமுறைதான் அஜீத் படம் ஹிட் ஆகும். நல்லவேளையாக இந்த மாமாங்கம், அவரது ஐம்பதாவது படத்தின் போது யதேச்சையாக அமைந்துவிட்டது. அஜீத் ரசிகர்களுக்கு இந்த ரம்ஜான்தான் தீபாவளி.

மங்காத்தா – பர்ஸ்ட் ஹாஃப் வெளியே. செகண்ட் ஆஃப் உள்ளே.

அணில்!


எங்கள் வீட்டு தோட்டத்துக்கு எப்போது இவ்வளவு அணில்கள் வந்தது என்று சரியாக கணிக்க இயலவில்லை. முன்பெல்லாம் ஓரிரு அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதை கண்டிருந்தேன். இப்போது பார்த்தால் இருபது முப்பது அணில்கள் தென்னைமரங்கள் மீது ஏறியும், இறங்கியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. தென்னைமரத்தின் மீது மட்டுமல்ல, அவ்வப்போது தரையிறங்கி தரைமார்க்கமாகவே போர்டிகோவுக்கு முன்னால் இருக்கும் கொய்யாமரத்துக்கும் வந்துவிடுவதுண்டு. ஏதேனும் ஒன்றிரண்டு கொய்யாப் பிஞ்சுகள் இருந்தாலும் கூட விட்டுவைப்பதில்லை. துவர்ப்பாக இருக்கும் கொய்யாப்பிஞ்சுகள் அணில்களுக்கு எப்படித்தான் பிடிக்கிறதோ?

கொய்யாமரத்தின் எல்லாப் பிஞ்சுகளையும் கபளீகரம் செய்த அணில்கூட்டத்தின் பார்வை அடுத்தக்கட்டமாக செம்பருத்திச் செடியின் மீது விழுந்தது. எங்கள் வீட்டில் இருப்பது அடுக்கு செம்பருத்தி. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மட்டும் செம்பருத்தி மலர்களை பறிப்பது அம்மா. மீதி நாட்களில் நான்காவது வீட்டு மாமி பறித்துச் செல்வார். சிவப்பான அடுக்குச் செம்பருத்தி மலர் அணில்களின் கண்களுக்கு ஏதோ கனியாக தெரிந்திருக்கக் கூடும். ஏதோ ஒரு அணில் ஒரு செம்பருத்தி மலரை கடித்து சுவைத்துப் பார்த்திருக்கும் என்று நினைக்கிறேன். கசப்போ, இனிப்போ, சுவையோ இல்லாமல் ஒரு மாதிரி வழவழாவென்று சோப்பினை சாப்பிட்டது போல இருக்கும். நான் சோப்பையும் சரி, செம்பருத்தி மலரையும் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்.

அணில்களுக்கு செம்பருத்தி மலர்களின் சுவை பிடிக்காவிட்டாலும் அவற்றின் இதழ்களை கடித்து துப்புவது நல்ல பொழுதுபோக்காக அமைந்துவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் தினமும் இருபது, முப்பது மலர்கள் அந்த செடியில் பூக்கும். அப்படியே அள்ளிக்கொண்டு போவார் நாலாவது வீட்டு மாமி. பாவம் இப்போது அவருக்கு ஒருநாளைக்கு ஐந்து மலர் கிடைப்பதே அரிது.

காலையில் ஏழு, ஏழரை மணியளவில் கீச்.. கீச் என்ற சத்தம் காதைப் பிளக்கும். ஒரு அணில் கத்த ஆரம்பித்தால் அக்கம்பக்கம் இருக்கும் ஒட்டுமொத்த அணில்களும் கத்துவது வாடிக்கை. கூர்ந்துப் பார்த்தால் தான் அணில் கத்துவது தெரியும். அணிலின் சின்ன வாய் நொடிக்கு நான்கைந்து முறையாவது திறந்து மூடும். அந்த சின்ன வாயில் இருந்து இவ்வளவு சத்தம் வருவது படைப்பின் ஒரு ஆச்சரியம். ராமர் போட்ட நாமம் ஒவ்வொரு அணிலின் முதுகிலும் ஒரே மாதிரியாக இருப்பது இன்னொரு ஆச்சரியம்.

எல்லா அணிலும் ஒரே மாதிரியாக தான் நம் கண்களுக்கு தெரிகிறது. குறைந்தபட்சம் நாய்களையாவது இது வேற நாய், அது வேற நாய் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். ஒரு அணில் இன்னொரு அணிலை எப்படித்தான் அடையாளம் கண்டுகொள்ளுமோ தெரியவில்லை. அணிலுக்கு முதுகில் இருப்பதைப் போன்ற இதே நாமம் அருணை என்று சொல்லப்படும் ஊர்வன ஒன்றுக்கும், தண்ணீர் பாம்புக்கும் கூட இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவையும் கூட ராமருக்கு பாலம் கட்ட உதவியதா என்று தெரியவில்லை.

குருவிக்காரர்கள் எப்போதாவது எங்கள் தெருபக்கம் வரும்போது அணில்கள் ஆங்காங்கே கீச்.. கீச்.. என்று கத்தி தங்கள் இனத்தவரை எச்சரிக்கின்றன. அந்த நேரத்தில் ஒரு அணில் கூட நம் கண்ணில் படாது. எங்கேதான் சென்று ஒளிந்துகொள்ளுமோ தெரியாது. அணிலுக்கு கூட தங்கள் எதிரி யாரென்று தெரிந்திருப்பது வியப்புதான். குருவிக்காரர்களிடம் ஒரு முறை விசாரித்தேன், ‘அணிலை வேட்டையாடி என்ன செய்வீர்கள்' என்று.. ‘பிரியாணி பண்ணி சாப்பிடுவோம் சாமி. முயல் கறி மாதிரியே டேஸ்ட்டா இருக்கும்' என்றார்கள்.

முன்பெல்லாம் இரவில் டூவீலரில் வீட்டுக்கு வரும்போது பயமாக இருக்கும். ஏதாவது அணில் பாதையில் ஓடி சிக்கிக்கொள்ளுமோ என்று. கொஞ்சநாட்கள் அவதானித்ததில் தான் தெரிந்தது, அணில்கள் இரவில் எங்கோ போய்விடுகிறது. பகலில் தான் உலாத்துகிறது.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. எனக்கு ஞாயிறு விடிவது பத்து, பத்தரை மணிக்கு தான். அப்போது ஒரு எட்டரை மணி இருக்கலாம். என் படுக்கையறையில் பாதி தூக்கமுமாக, பாதிமயக்கமுமாக புரண்டுகொண்டிருந்தேன். சன்னலை யாரோ தட்டுவது ‘தட், தட்'டென சத்தம் கேட்டது. சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தபோது சன்னல் கண்ணாடியில் ஒரு வினோத விலங்கு போல எதுவோ தெரிந்தது. தூக்கம் களைந்து கூர்ந்துப் பார்த்தேன். அது ஒரு பெரிய அணில். குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்ததால் வேறு எதுவோ ஒரு விலங்கு போல தெரிந்திருக்கிறது, கிட்டத்தட்ட வவ்வால் மாதிரி.

அதன்பின்னர் அடிக்கடி அந்த அணிலை சன்னல் பக்கமாக பார்க்க முடிந்தது. சன்னலை திறந்து வைத்திருந்தால் சில நேரம் உள்ளே கூட வந்துவிடும். ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது எதையாவது வைத்திருந்தால் கொட்டிவிடும். அணில் மிக சுலபமாக மனிதர்களிடம் பழகுமாம். உணவு கொடுத்து பழக்கப்படுத்தி விட்டால் அடிக்கடி உணவுக்காக நம்மை நாடி வருமாம். செல்லப் பிராணிகள் என்றாலே எனக்கு அலர்ஜி என்பதால் அந்த அணிலிடம் நட்பு வைத்துக்கொள்ள நான் விரும்பாததால், அணிலை என் படுக்கையறையில் காணும் போதெல்லாம் துரத்தி அடிப்பேன். எந்த நாயை கண்டாலும் இன்னமும் கல்லெடுத்து அடிக்கும் வழக்கம் எனக்குண்டு.

இப்படியே சில காலம் போனது. ஒரு நாள் நள்ளிரவு இருக்கும், கீச்.. கீச்.. சத்தம் கேட்டது. மின்விசிறியில் இருந்து அதுபோல சத்தம் எப்போதாவதும் வருவது வழக்கம் என்பதால் கண்டுகொள்ளாமல் தூங்கினேன். மறுநாள் காலை மின்விசிறியை அணைத்தபின்னரும் கூட அந்த சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. நான் வாசித்த புத்தகங்களை கட்டாக கட்டி மேலே பரண் போன்ற ஒரு அமைப்பில் போட்டு வைத்திருப்பேன். அங்கிருந்து தான் சத்தம் வந்தது.

மேலே ஏறிப் பார்த்தபோது சணல், தேங்காய் நார் போன்றவையால் அமைக்கப்பட்ட கூடை போன்ற ஒரு கூடு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதை கையில் எடுத்ததுமே அதில் இருந்து பெரிய அணில் ஒன்று என் மீது ஏறி, குதித்து ஜன்னல் வழியாக ஓடியது. அவ்வளவு பெரிய கூட்டினை எனக்கு தெரியாமலேயே என் அறையில் அந்த அணில் எப்போதுதான் கட்டியதோ தெரியவில்லை. அந்த கூட்டில் ஒரு அணில் குட்டியும் இருந்தது. முடிகள் குறைவாக பார்ப்பதற்கு சிறிய மூஞ்சூறு போன்ற தோற்றம் அந்த அணிலுக்கு இருந்தது. குட்டி அணில் என்பதால் அதற்கு தகுந்தமாதிரி கொஞ்சம் சத்தம் குறைவாக கீச்.. கீச்.. என்றது.

என் படுக்கையறையில் ஒரு அணில் குட்டி போட்டு வசிப்பது ஏனோ எனக்கு அருவருப்பை தந்தது. எந்த தயவுதாட்சணியமும் காட்டாமல் அந்த கூட்டை எடுத்துச் சென்று தெருமுனையில் வீசினேன். அப்போது தான் அந்த அதிசயம். எங்கோ ஓடிச்சென்றிருந்த தாய் அணில் பெரும் சத்தம் கொடுத்துகொண்டே ஓடிவந்து, நான் தெருமுனையில் வீசிய கூட்டினை ஆராய்ந்து, கூட்டுக்குள் இருந்த குட்டி அணிலை வாயால் கவ்விக்கொண்டு நொடியில் ஓடி மறைந்தது. அதன் பின்னர் மறுபடியும் தாய் அணில் புதியதாக எங்காவது ஒரு கூடு கட்டியதா? அந்த குட்டி அணில் வளர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் நான் சன்னலை திறந்துவைப்பதில்லை. நள்ளிரவில் எப்போதாவது நல்ல தூக்கத்தில் இருக்கும்போது ‘கீச்.. கீச்' சத்தம் கேட்கும். கண்விழித்ததுமே நிசப்தமான அமைதி நிலவும். ஒருவேளை என் கனவில் அந்த குட்டி அணில் கத்துகிறதா இல்லை புதியதாக ஏதாவது கூடு கட்டப்பட்டு இருக்கிறதா தெரியவில்லை. பரண் மீது ஏறிப் பார்க்க வேண்டும்.