31 ஆகஸ்ட், 2011

அணில்!


எங்கள் வீட்டு தோட்டத்துக்கு எப்போது இவ்வளவு அணில்கள் வந்தது என்று சரியாக கணிக்க இயலவில்லை. முன்பெல்லாம் ஓரிரு அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதை கண்டிருந்தேன். இப்போது பார்த்தால் இருபது முப்பது அணில்கள் தென்னைமரங்கள் மீது ஏறியும், இறங்கியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. தென்னைமரத்தின் மீது மட்டுமல்ல, அவ்வப்போது தரையிறங்கி தரைமார்க்கமாகவே போர்டிகோவுக்கு முன்னால் இருக்கும் கொய்யாமரத்துக்கும் வந்துவிடுவதுண்டு. ஏதேனும் ஒன்றிரண்டு கொய்யாப் பிஞ்சுகள் இருந்தாலும் கூட விட்டுவைப்பதில்லை. துவர்ப்பாக இருக்கும் கொய்யாப்பிஞ்சுகள் அணில்களுக்கு எப்படித்தான் பிடிக்கிறதோ?

கொய்யாமரத்தின் எல்லாப் பிஞ்சுகளையும் கபளீகரம் செய்த அணில்கூட்டத்தின் பார்வை அடுத்தக்கட்டமாக செம்பருத்திச் செடியின் மீது விழுந்தது. எங்கள் வீட்டில் இருப்பது அடுக்கு செம்பருத்தி. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மட்டும் செம்பருத்தி மலர்களை பறிப்பது அம்மா. மீதி நாட்களில் நான்காவது வீட்டு மாமி பறித்துச் செல்வார். சிவப்பான அடுக்குச் செம்பருத்தி மலர் அணில்களின் கண்களுக்கு ஏதோ கனியாக தெரிந்திருக்கக் கூடும். ஏதோ ஒரு அணில் ஒரு செம்பருத்தி மலரை கடித்து சுவைத்துப் பார்த்திருக்கும் என்று நினைக்கிறேன். கசப்போ, இனிப்போ, சுவையோ இல்லாமல் ஒரு மாதிரி வழவழாவென்று சோப்பினை சாப்பிட்டது போல இருக்கும். நான் சோப்பையும் சரி, செம்பருத்தி மலரையும் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்.

அணில்களுக்கு செம்பருத்தி மலர்களின் சுவை பிடிக்காவிட்டாலும் அவற்றின் இதழ்களை கடித்து துப்புவது நல்ல பொழுதுபோக்காக அமைந்துவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் தினமும் இருபது, முப்பது மலர்கள் அந்த செடியில் பூக்கும். அப்படியே அள்ளிக்கொண்டு போவார் நாலாவது வீட்டு மாமி. பாவம் இப்போது அவருக்கு ஒருநாளைக்கு ஐந்து மலர் கிடைப்பதே அரிது.

காலையில் ஏழு, ஏழரை மணியளவில் கீச்.. கீச் என்ற சத்தம் காதைப் பிளக்கும். ஒரு அணில் கத்த ஆரம்பித்தால் அக்கம்பக்கம் இருக்கும் ஒட்டுமொத்த அணில்களும் கத்துவது வாடிக்கை. கூர்ந்துப் பார்த்தால் தான் அணில் கத்துவது தெரியும். அணிலின் சின்ன வாய் நொடிக்கு நான்கைந்து முறையாவது திறந்து மூடும். அந்த சின்ன வாயில் இருந்து இவ்வளவு சத்தம் வருவது படைப்பின் ஒரு ஆச்சரியம். ராமர் போட்ட நாமம் ஒவ்வொரு அணிலின் முதுகிலும் ஒரே மாதிரியாக இருப்பது இன்னொரு ஆச்சரியம்.

எல்லா அணிலும் ஒரே மாதிரியாக தான் நம் கண்களுக்கு தெரிகிறது. குறைந்தபட்சம் நாய்களையாவது இது வேற நாய், அது வேற நாய் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். ஒரு அணில் இன்னொரு அணிலை எப்படித்தான் அடையாளம் கண்டுகொள்ளுமோ தெரியவில்லை. அணிலுக்கு முதுகில் இருப்பதைப் போன்ற இதே நாமம் அருணை என்று சொல்லப்படும் ஊர்வன ஒன்றுக்கும், தண்ணீர் பாம்புக்கும் கூட இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவையும் கூட ராமருக்கு பாலம் கட்ட உதவியதா என்று தெரியவில்லை.

குருவிக்காரர்கள் எப்போதாவது எங்கள் தெருபக்கம் வரும்போது அணில்கள் ஆங்காங்கே கீச்.. கீச்.. என்று கத்தி தங்கள் இனத்தவரை எச்சரிக்கின்றன. அந்த நேரத்தில் ஒரு அணில் கூட நம் கண்ணில் படாது. எங்கேதான் சென்று ஒளிந்துகொள்ளுமோ தெரியாது. அணிலுக்கு கூட தங்கள் எதிரி யாரென்று தெரிந்திருப்பது வியப்புதான். குருவிக்காரர்களிடம் ஒரு முறை விசாரித்தேன், ‘அணிலை வேட்டையாடி என்ன செய்வீர்கள்' என்று.. ‘பிரியாணி பண்ணி சாப்பிடுவோம் சாமி. முயல் கறி மாதிரியே டேஸ்ட்டா இருக்கும்' என்றார்கள்.

முன்பெல்லாம் இரவில் டூவீலரில் வீட்டுக்கு வரும்போது பயமாக இருக்கும். ஏதாவது அணில் பாதையில் ஓடி சிக்கிக்கொள்ளுமோ என்று. கொஞ்சநாட்கள் அவதானித்ததில் தான் தெரிந்தது, அணில்கள் இரவில் எங்கோ போய்விடுகிறது. பகலில் தான் உலாத்துகிறது.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. எனக்கு ஞாயிறு விடிவது பத்து, பத்தரை மணிக்கு தான். அப்போது ஒரு எட்டரை மணி இருக்கலாம். என் படுக்கையறையில் பாதி தூக்கமுமாக, பாதிமயக்கமுமாக புரண்டுகொண்டிருந்தேன். சன்னலை யாரோ தட்டுவது ‘தட், தட்'டென சத்தம் கேட்டது. சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தபோது சன்னல் கண்ணாடியில் ஒரு வினோத விலங்கு போல எதுவோ தெரிந்தது. தூக்கம் களைந்து கூர்ந்துப் பார்த்தேன். அது ஒரு பெரிய அணில். குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்ததால் வேறு எதுவோ ஒரு விலங்கு போல தெரிந்திருக்கிறது, கிட்டத்தட்ட வவ்வால் மாதிரி.

அதன்பின்னர் அடிக்கடி அந்த அணிலை சன்னல் பக்கமாக பார்க்க முடிந்தது. சன்னலை திறந்து வைத்திருந்தால் சில நேரம் உள்ளே கூட வந்துவிடும். ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது எதையாவது வைத்திருந்தால் கொட்டிவிடும். அணில் மிக சுலபமாக மனிதர்களிடம் பழகுமாம். உணவு கொடுத்து பழக்கப்படுத்தி விட்டால் அடிக்கடி உணவுக்காக நம்மை நாடி வருமாம். செல்லப் பிராணிகள் என்றாலே எனக்கு அலர்ஜி என்பதால் அந்த அணிலிடம் நட்பு வைத்துக்கொள்ள நான் விரும்பாததால், அணிலை என் படுக்கையறையில் காணும் போதெல்லாம் துரத்தி அடிப்பேன். எந்த நாயை கண்டாலும் இன்னமும் கல்லெடுத்து அடிக்கும் வழக்கம் எனக்குண்டு.

இப்படியே சில காலம் போனது. ஒரு நாள் நள்ளிரவு இருக்கும், கீச்.. கீச்.. சத்தம் கேட்டது. மின்விசிறியில் இருந்து அதுபோல சத்தம் எப்போதாவதும் வருவது வழக்கம் என்பதால் கண்டுகொள்ளாமல் தூங்கினேன். மறுநாள் காலை மின்விசிறியை அணைத்தபின்னரும் கூட அந்த சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. நான் வாசித்த புத்தகங்களை கட்டாக கட்டி மேலே பரண் போன்ற ஒரு அமைப்பில் போட்டு வைத்திருப்பேன். அங்கிருந்து தான் சத்தம் வந்தது.

மேலே ஏறிப் பார்த்தபோது சணல், தேங்காய் நார் போன்றவையால் அமைக்கப்பட்ட கூடை போன்ற ஒரு கூடு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதை கையில் எடுத்ததுமே அதில் இருந்து பெரிய அணில் ஒன்று என் மீது ஏறி, குதித்து ஜன்னல் வழியாக ஓடியது. அவ்வளவு பெரிய கூட்டினை எனக்கு தெரியாமலேயே என் அறையில் அந்த அணில் எப்போதுதான் கட்டியதோ தெரியவில்லை. அந்த கூட்டில் ஒரு அணில் குட்டியும் இருந்தது. முடிகள் குறைவாக பார்ப்பதற்கு சிறிய மூஞ்சூறு போன்ற தோற்றம் அந்த அணிலுக்கு இருந்தது. குட்டி அணில் என்பதால் அதற்கு தகுந்தமாதிரி கொஞ்சம் சத்தம் குறைவாக கீச்.. கீச்.. என்றது.

என் படுக்கையறையில் ஒரு அணில் குட்டி போட்டு வசிப்பது ஏனோ எனக்கு அருவருப்பை தந்தது. எந்த தயவுதாட்சணியமும் காட்டாமல் அந்த கூட்டை எடுத்துச் சென்று தெருமுனையில் வீசினேன். அப்போது தான் அந்த அதிசயம். எங்கோ ஓடிச்சென்றிருந்த தாய் அணில் பெரும் சத்தம் கொடுத்துகொண்டே ஓடிவந்து, நான் தெருமுனையில் வீசிய கூட்டினை ஆராய்ந்து, கூட்டுக்குள் இருந்த குட்டி அணிலை வாயால் கவ்விக்கொண்டு நொடியில் ஓடி மறைந்தது. அதன் பின்னர் மறுபடியும் தாய் அணில் புதியதாக எங்காவது ஒரு கூடு கட்டியதா? அந்த குட்டி அணில் வளர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் நான் சன்னலை திறந்துவைப்பதில்லை. நள்ளிரவில் எப்போதாவது நல்ல தூக்கத்தில் இருக்கும்போது ‘கீச்.. கீச்' சத்தம் கேட்கும். கண்விழித்ததுமே நிசப்தமான அமைதி நிலவும். ஒருவேளை என் கனவில் அந்த குட்டி அணில் கத்துகிறதா இல்லை புதியதாக ஏதாவது கூடு கட்டப்பட்டு இருக்கிறதா தெரியவில்லை. பரண் மீது ஏறிப் பார்க்க வேண்டும்.

18 கருத்துகள்:

  1. Connecticut மாநிலத்தில் அணில்கள் கொஞ்சம் பெருசா குட்டி பூனை போல இருக்கு. நம்ப ஊரு அணில் மாதிரி இல்லை
    தரணி

    பதிலளிநீக்கு
  2. இது கவிதாவை பற்றிய புனைவா லக்கி!!!

    பதிலளிநீக்கு
  3. Ma the first .. படிச்சிட்டு வரேன் ..

    பதிலளிநீக்கு
  4. "என் படுக்கையறையில் ஒரு அணில் குட்டி போட்டு வசிப்பது ஏனோ எனக்கு அருவருப்பை தந்தது. எந்த தயவுதாட்சணியமும் காட்டாமல் அந்த கூட்டை எடுத்துச் சென்று தெருமுனையில் வீசினேன்"

    இது கொஞ்சம் வருத்த பட வைக்கிறது ..

    பதிலளிநீக்கு
  5. இயற்கை நிகழ்வை ரசித்து எழுதிய உங்கள் பதிவு அருமை. எனக்கும் சிடுக்குருவிகளை ரசிகக் பிடிக்கும். பதிவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. யுவா,

    இனிமே அணில் கூடு கட்டினா தூக்கி போடாதீங்க. அதுவா கொஞ்ச நாள் இருந்துட்டு அப்புறம் போயிடும்.

    பதிலளிநீக்கு
  7. "அணில்!"
    nijama nadanthathai ezuthu lucky.
    ethuku kathai ellam.
    ethai nan anandha vigadan la padikka mattaena

    பதிலளிநீக்கு
  8. I just LOVE this post... :))))))))))))))

    உங்க வீட்டுக்கு வந்து அணிலை எல்லாம் பார்க்கலாமா????

    பதிலளிநீக்கு
  9. சத்தம் தொந்தரவாக இருந்தால், லேசா ஒரு தட்டோ சத்தமோ எழுப்பினால் ஓடி விடும்.. :)

    //‘அணிலை வேட்டையாடி என்ன செய்வீர்கள்' என்று.. ‘பிரியாணி பண்ணி சாப்பிடுவோம் சாமி. முயல் கறி மாதிரியே டேஸ்ட்டா இருக்கும்' //

    அவ்வ்வ்வ்வ்... இதுக்குத்தான் எல்லா ப்ளாகர்'சும் என் அணில் மேல கண்ணா இருக்க்காங்களோ???? :(((

    //ந்த அணிலிடம் நட்பு வைத்துக்கொள்ள நான் விரும்பாததால், அணிலை என் படுக்கையறையில் காணும் போதெல்லாம் துரத்தி அடிப்பேன்//

    :(((((((

    //என் படுக்கையறையில் ஒரு அணில் குட்டி போட்டு வசிப்பது ஏனோ எனக்கு அருவருப்பை தந்தது. எந்த தயவுதாட்சணியமும் காட்டாமல் அந்த கூட்டை எடுத்துச் சென்று தெருமுனையில் வீசினேன்.//

    :(((((((( ரொம்ப பாவம் :((( இது இன்னும் கொஞ்ச நாள்ல தானே போயி இருக்கும்... :(((

    //இப்போதெல்லாம் நான் சன்னலை திறந்துவைப்பதில்லை. நள்ளிரவில் எப்போதாவது நல்ல தூக்கத்தில் இருக்கும்போது ‘கீச்.. கீச்' சத்தம் கேட்கும். கண்விழித்ததுமே நிசப்தமான அமைதி நிலவும். ஒருவேளை என் கனவில் அந்த குட்டி அணில் கத்துகிறதா//

    குட்டி பாப்பா அணிலை தூக்கி போட்டீங்க இல்ல... இனிமே இப்படி கனவுல வரும் நேரா வரும், எப்பவும் உங்களை இம்சை பண்ணும் :)))))

    என்ஜாய்...!!!! :))

    பதிலளிநீக்கு
  10. நான் தான் பர்ஸ்டு
    நான் சோப்பையும் சரி, செம்பருத்தி மலரையும் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்.


    நான் செம்பருத்தி பூவை சாப்பிட்டு இருக்கின்றேன்...ஆனால் பூ ....சோப்பூ சாப்பிட்டதில்லை

    பதிலளிநீக்கு
  11. எல்லாம் மனப்-பிராந்தி தூங்கும்போது ஒரு பெக்கடித்து விட்டு படுக்கவும்.

    பதிலளிநீக்கு
  12. என் வீட்டுக்கருகிலும் அணில் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் அதிகமாக இல்லை. என் மகளுக்கு அணில் என்றால் ரொம்ப குஷியாகிவிடுவாள். அணீ அணீ என்று அவளின் மழலைக்குரலில் சொல்லி குதுகலிப்பாள். உங்கள் மகள் தமிழ்மொழி வளரட்டும் அப்போது உங்களின் நிலையும் மாறிவிடும்.

    பதிலளிநீக்கு
  13. //எந்த நாயை கண்டாலும் இன்னமும் கல்லெடுத்து அடிக்கும் வழக்கம் எனக்குண்டு.

    உங்க வழக்கத்தை மாத்திக்க முயற்சி பண்ணுங்க யுவா அண்ணே.

    //எந்த தயவுதாட்சணியமும் காட்டாமல் அந்த கூட்டை எடுத்துச் சென்று தெருமுனையில் வீசினேன்.
    இதுக்கு ஒன்னும் சொல்ல முடியல. உங்களுக்கு அறுவெறுப்பா இருக்கலாம். நான் வீட்டில பாம்பைப் பார்த்தால் நானும் வீசி எறியத் தான் செய்வேன். எனக்கு reptiles கண்டா அலெர்ஜி. அது போல உங்களுக்கு அணில்கள கண்டா அலெர்ஜியா இருக்கலாம். ஆனா சும்மா போகிற நாய்கள கல்லால் அடிக்கும் பழக்கத்தை மாத்திக்கோங்க ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  14. படித்த அறிவியல் பாடங்கள் மறந்து வாழ்க்கை பாடங்களை உங்கள் அணில் உணர்த்தியதில் கொஞ்சம் இளைப்பாற வேண்டும் போலிருக்கிறது?


    காரூண்யம், கருனை என்பதை மீறி உங்களின் எதார்த்தம் உணர்த்துவது தான் பாடம்?


    தேவியர் இல்லம். திருப்பூர்.

    பதிலளிநீக்கு
  15. " எந்த நாயை கண்டாலும் இன்னமும் கல்லெடுத்து அடிக்கும் வழக்கம் எனக்குண்டு"...இது இது தான் என்னமோ சொல்ர மாறி இருக்கு!!!

    பதிலளிநீக்கு
  16. என்ன பாஸ் இரண்டு நாளில் இவ்வளவு மாற்றம்.
    அணிலை பிடித்த குருவிகாரனை அடித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. Missing such posts :) Even I don't like any living creatures inside home.. Had similar exp with cats.. pigeons

    பதிலளிநீக்கு