முதலாளித்துவ அமெரிக்கா ஆகட்டும். பொதுவுடைமை சீனா ஆகட்டும். ஒடுக்குறை ஓங்கி நிற்கும் ஈழம், ஆப்கானிஸ்தான் என்று உலகின் எந்த மூலையிலுமே அடக்குமுறைக்கு ‘புரட்சி’ மட்டுமே தீர்வாக முன்வைக்கப் படுகிறது.
1963ல் வெளியான பிரெஞ்சு நாவல் ஒன்று மனிதக் குரங்களுக்கு, மனிதனை விட அறிவு பெருகிவிட்டால் என்னவாகும் என்று கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், நிறைய விபரீதமாகவும் யோசித்தது. ‘ஆஹா. வடை மாட்டிச்சே’ என்று தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்களும், காமிக்ஸ் பதிப்பகங்களும் அந்நாவலை சக்கையாகப் பிழிந்து சக்கைப்போடு போட்டன. ஹாலிவுட்காரர்கள் மட்டும் சும்மாவா விரல் சூப்பிக் கொண்டிருப்பார்கள்? 1968ல் தொடங்கி 73 வரை ஐந்து பாக படங்களாக எடுத்து வசூலை வாரி குவித்து விட்டார்கள்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஹாலிவுட்டிலும் நம்ம ஊர் போலவே கதை பஞ்சம். பழைய வெற்றிகண்ட படம் ஒன்றை தூசுதட்டி அசத்திவிடலாமென ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ படத்தை பரிசீலித்தார்கள். பழைய சீரியஸில் வந்த முதல் படத்தை, அப்படியே கிராபிக்ஸ் மாதிரியான தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரீமேக்கினார்கள். 2001ல் வெளியான இப்படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இருந்தாலும், விமர்சகர்கள் சுளுக்கெடுத்து விட்டார்கள். 1968ல் வெளியான கிளாசிக்கை 2001ல் இயக்குனர் டிம்பர்டன் கற்பழித்துவிட்டதாக கதறினார்கள்.
பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ சீரியஸின் ஒரு படம் ரீமேக் ஆகி வெளியாகியிருக்கிறது. இதை ரீமேக் என்று சொல்லாமல் ‘ரீபூட்’ என்கிறார்கள். அதாவது ஜெயம் ராஜா மாதிரி கோவணத்துண்டு முதற்கொண்டு மொத்தமாக உருவாமல், ஒரிஜினல் படத்தின் சில கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு, புதுசாக கதை, திரைக்கதை, லொட்டு, லொசுக்குகளை உருவாக்கி படமெடுப்பது (இப்படி பார்க்கப் போனால் கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரை அறிவுஜீவிகளின் கிட்டத்தட்ட எல்லா படங்களும் ரீபூட் தான்).
பழைய சீரியஸில் நான்காவதாக வெளிவந்த ’கான்குவஸ்ட் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ஐ ரீபூட் செய்ய முடிவெடுத்தார்கள். ஆங்கிலத்தில் ‘ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்றும், தமிழில் ‘மனிதக் குரங்குகளின் புரட்சி’ என்று வெளியாகியிருக்கும் படம் பிறந்த கதை இதுதான்.
முந்தைய படம் மொக்கை ஆகிவிட்டதால், இந்த படத்துக்கு பெருத்த எதிர்ப்பார்ப்பு எதுவுமில்லை. எதிர்ப்பார்ப்பு எதுவுமின்றி போய் அமர்ந்தால், ஆச்சரியகரமான முறையில் அசத்தலாக வந்திருக்கிறது படம். நேற்று வெளியாகியிருக்கும் இப்படத்துக்கு உலகம் முழுக்க இருந்து விமர்சகர்கள் முக்கோடி முன்னூறு தேவர்கள் மாதிரி பாராட்டு மழையை பொழிந்துக் கொண்டே இருக்கிறார்கள். நனைந்து நனைந்து ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் குழுவினருக்கு ஜல்ப்பே பிடித்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கதை ரொம்ப சிம்பிள். ஒரு விஞ்ஞானி மனிதமூளையின் திறனை மேம்படுத்த ஏதோ ரீடோவைரஸ் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் (அவரது தந்தைக்கு இது தொடர்பான நோய் இருக்கிறது). முதற்கட்டமாக மனிதக்குரங்குகளின் மீது பிரயோகிக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இச்சோதனை வெற்றியடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட மனிதக்குரங்கு வெறிபிடித்தது போல நடந்துகொள்ள திட்டம் தோல்வியடைந்ததாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த குரங்கு சுட்டு கொல்லப்படுகிறது. போஸ்ட்மார்ட்டத்தின் போதுதான் தெரிகிறது. அது கர்ப்பமாக இருந்த குரங்கு. குட்டி உயிரோடு இருக்க, அதையெடுத்து ரகசியமாக வளர்க்கிறார் விஞ்ஞானி. சீஸர் என்று பெயரிடப்பட்ட அக்குரங்கு புத்திசாலித்தனத்தில் மனிதனை மிஞ்சுகிறது. ஏதோ ஒரு பிரச்சினையில் சிம்பன்ஸிகளை அடைத்து வைத்திருக்கும் ஒரு மிருகக்காட்சி சாலைக்கு அரசாங்க உத்தரவின் காரணமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு நடக்கும் அடக்குமுறைகள். அதை கண்டு பொங்கும் சீஸர். தனக்கு வழங்கப்பட்ட மருந்தை மற்ற குரங்குகளுக்கும் கொடுத்து அவற்றையும் மனிதருக்கு இணையாக புத்திசாலிகளாக்குகிறது சீஸர். புத்தி வந்துவிட்டால் அடுத்து என்ன? புரட்சிதான் க்ளைமேக்ஸ்.
பல காட்சிகள் நம்மூர் எந்திரனை பார்ப்பது போலவே இருக்கிறது. குரங்குக்கு பதில் இங்கே ரோபோவை போட்டிருந்தால் கிட்டத்தட்ட எந்திரன்தான். நல்லவேளையாக எந்திரனை மாதிரி மனிதக் குரங்குக்கு ஃபிகர் மேல் காதல் வந்துவிடுவதாக மலினப்படுத்தவில்லை. அவதார் காணும்போது கிடைத்த பல காட்சியனுபவங்களை இப்படத்தை பார்க்கும்போதும் அடையமுடிகிறது.
சீஸராக நடித்திருக்கும் கம்ப்யூட்டர் பிம்பத்தை பார்த்து நம்மூர் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும், லிட்டில் சூப்பர் ஸ்டார்களும் நடிப்பு கற்றுக் கொள்ளலாம். ஒரு விர்ச்சுவல் இமேஜ் லெவலுக்கு கூட நடிக்கத் துப்பில்லாத நடிகர்களை பெற்றிருக்கும் அபாக்கியவான்கள் நாம். சீஸர் முறைக்கிறான், கெஞ்சுகிறான், சீறுகிறான், அஞ்சுகிறான், அழுகிறான். எல்லாமே மிக இயல்பாக உருவாக்கப்பட்டிருப்பதை காணும்போது, எதிர்காலத்தில் கம்ப்யூட்டர்களே புரட்சி செய்து உலகத்தை ஆளும் என்கிற கூற்றினை நம்பத்தான் வேண்டியிருக்கிறது. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நிஜத்தை நெருங்கவெல்லாம் இல்லை. நிஜத்தை அச்சு அசலாக உருவாக்கத் தொடங்கிவிட்டது.
மசாலா படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கலந்து கட்டி ஸ்ட்ராங்காக அடித்திருக்கிறார் இயக்குனர். நம்மூர் சின்னத் தளபதி, பேரரசு படத்தில் என்னவெல்லாம் செய்வாரோ, அத்தனையையும் ஹீரோவான மனிதக்குரங்கு பேசாமலேயே செய்கிறது. நீளமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஷாட்களின் விறுவிறுப்பும், துல்லியமும் அபாரம். எந்த இடத்திலுமே தொழில்நுட்பம், உள்ளடக்கத்தை மீறி துருத்திக் கொண்டு தெரியவில்லை என்பது இப்படத்தின் பலம். ‘தொழில்நுட்பம் வேஸ்ட்’ என்று இங்கே கதறிக்கொண்டிருக்கும் ஆறின கஞ்சி இயக்குனர்களுக்கு இப்படம் நிச்சயமாக பாடம்.
ஆசிய ஆடியன்ஸ்களை குறிவைத்து கச்சிதமாக இலக்கை எட்டியிருக்கிறார் இயக்குனர். இந்திய ஹீரோயின் ஃப்ரீடாபிண்டோ (மனிதக் குரங்குக்கு ஜோடியல்ல, விஞ்ஞானியின் மனைவி). சீன, இந்திய, தாய்லாந்திய சினிமா வெறியர்கள் ரசிக்கக்கூடிய செண்டிமெண்ட் கம் ஆக்ஷன் என்று கமர்சியல் ஃபார்முலா. என்ன ‘பிட்டு’ தான் சுத்தமாக இல்லை என்பது பெரிய குறை. ஓரிரண்டு பிரெஞ்சு கிஸ் காட்சிகள் இருந்தாலும், யானைப்பசிக்கு சோளப்பொறிதான்.
அவதாருக்குப் பிறகு இங்கே பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கப் போகிறான் இந்த சீஸர்!
திரைவிமர்னம் அருமை
பதிலளிநீக்குஆம் படம் டாப் கிளாஸ்!
பதிலளிநீக்கு//சீஸராக நடித்திருக்கும் கம்ப்யூட்டர் பிம்பத்தை பார்த்து//
உண்மையில் அதுவும் ஒரு மனிதனே!Andy Serkis என்பவரது நடிப்பை தான் விர்ச்சுவல் இமேஜ் ஆக மாற்றி உள்ளனர் ஏற்கனவே கிங்காங் படத்தில் கிங்காங்காக நடித்தவரும் இவர் தான்.http://www.youtube.com/watch?v=XM9Pvfq1KhE
அப்புறம் நம்ம ஊர் நடிகர்களுக்காக இவர் விர்ச்சுவல் இமேஜில் நடிப்பாரா என இயக்குனர்கள் ட்ரை பண்ணி பார்கலாம் :-)
Andy Serkis என்ற நடிகர்தான் சீசர் என்ற மனித குரங்காக நடித்தவர். http://www.apeswillrise.com/ -இல் உள்ள டிரைலர்களில் விளக்கமாக காட்டி உள்ளார்கள். அவதாரை பற்றி பேசியது மிக சரி. அதே கம்பனி தான் இந்த படத்திற்கான CG பண்ணியது!
பதிலளிநீக்குஉங்கள் கட்சுரையில் 'சீரியஸ்' என்பதிற்கு பதிலாக 'சீரிஸ்' என்று வர வேண்டுமோ?
பதிலளிநீக்குஆங்கிலத் திரைப்படங்களில் விர்ச்சுவல் இமேஜ் ஆக காட்டப்படும் எல்லா கதாபாத்திரங்களுமே மனிதரால் நடிக்கப் படுபவையே.. கார்டூன் படங்களில் கூட பாத்திரங்களுக்கு குரல் கொடுப்பவரின் குரல் மட்டுமல்ல அவர்களின் முக உடல் பாவங்களும்கூட பதிவு செய்யப்பட்டு திரையில் இடப் படுகிறது. ஆகையால் இங்கே போட்டி நம் நடிகர்களுக்கும் கம்ப்யூட்டருக்கும் அல்ல. நம்ம ஊர் நடிகர்களுக்கும் ஹாலிவுட் நடிகர்களுக்குமே.
பதிலளிநீக்குஐயா, ரீபூட் நா இதுக்கு முந்தைய வந்த கதை எல்லாம் விட்டுட்டு இப்போ இருந்து தான் கதை தொடங்குதுங்கிற மாதிரி அதாவது அந்த முதல் 5 பார்ட்டும் கணக்குல இல்ல.இந்த கதை படி அதெல்லாம் நடக்கல. இப்பதான் குரங்குக்கு மூளை வந்திருக்கு. உ.தா. இப்ப ஸ்பைடர் மேன் ரீபூட் பண்றாங்க. சாம் ரெய்மி எடுத்தது கவுண்ட்ல இல்ல. முதல்ல இருந்து இந்த டைரக்டர் தன் பாணியில கதை சொல்ல தொடங்குவாரு.
பதிலளிநீக்கு//நம்மூர் சின்னத் தளபதி, பேரரசு படத்தில் என்னவெல்லாம் செய்வாரோ, அத்தனையையும் ஹீரோவான மனிதக்குரங்கு பேசாமலேயே செய்கிறது.//
பதிலளிநீக்குநச். கலக்கல்.
>சீஸராக நடித்திருக்கும் கம்ப்யூட்டர் பிம்பத்தை பார்த்து நம்மூர் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும், லிட்டில் சூப்பர் ஸ்டார்களும் நடிப்பு கற்றுக் கொள்ளலாம். ஒரு விர்ச்சுவல் இமேஜ் லெவலுக்கு கூட நடிக்கத் துப்பில்லாத நடிகர்களை பெற்றிருக்கும்
பதிலளிநீக்கு-----------
நம்ம தலைவிதி :-(
அப்ப... சீஸர் ஒரு ரவுண்டு வரப்போகுது என்பது உறுதியாகிவிட்டது... பார்த்திடவேண்டியதுதான்....
பதிலளிநீக்குநட்பு தின வாழ்த்துக்கள் நண்பரே
ரஜினி எப்போதும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க தேவைப்பட்டது. இங்கு மனித குரங்குகள் பிளானட் எழுச்சி பற்றிய தனது கருத்துகளை பற்றி மேலும் அறிய சொடுக்கவும்
பதிலளிநீக்குhttp://bit.ly/n9GwsR