8 ஆகஸ்ட், 2011

தெய்வத் திருமகள் – போலியாகவே இருக்கட்டும்

தெய்வமகன் என்று முதலில் பெயரிடப்பட்டு, சிவாஜி குடும்பத்தினரின் ஆட்சேபணைக்கு பிறகு தெய்வத்திருமகன் என்று மாற்றப்பட்டு, தேவர் இனத்தவரின் மிரட்டலுக்குப் பயந்து, தெய்வத்திருமகள் ஆகியிருக்கும் I am Sam படத்தை தேவி தியேட்டரில் பார்த்தபோது, அது ஒரு உன்னதமான படமென்றெல்லாம் நினைக்கவில்லை. சில காட்சிகள் கலங்க வைத்தது உண்மை. இரண்டு பெண் குழந்தைகளின் இளம் தந்தை என்பதால் இருக்கலாம். படம் பார்த்தவுடனேயே வீட்டுக்கு ஓடிச்சென்று என் மகள்களை இரவு நீண்டநேரம் கொஞ்சிக்கொண்டே இருந்தேன். இது என் வழக்கமான இயல்பல்ல என்பதால் வீட்டில் இருந்தவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியம்.

அவ்வளவுதான், மறுநாளில் இருந்து தெய்வத்திருமகள் எந்த எஃபெக்டையும் எனக்கு ஏற்படுத்தியதாக தெரியவில்லை. இன்னொரு முறை அப்படத்தை பார்க்கும் எண்ணமும் இல்லை. ஒரு சுமாரான திரைப்படமென்று என் ரசனையளவில் மதிப்பிட்டிருந்தேன்.

ஆனால் படம் பார்த்த நம்மைப்போன்ற மற்ற சாதாரணர் சிலர் அப்படம் குறித்த மிக உயர்வான அபிப்பிராயங்களை கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. விக்ரமின் நடிப்பில் இதுதான் உச்சம் என்று என்னுடைய நண்பன் ஒருவன் கருத்து தெரிவித்தான் (சேதுவுக்குப் பிறகு உச்சத்தைத் தொடுவது என்பது இனி விக்ரமுக்கு சாத்தியமில்லாத விஷயம்). படம் பார்த்த பெண்கள் சிலர் மூக்கைச் சிந்திக்கொண்டே வீட்டுக்குப் போய், தங்கள் அப்பாவோடு மட்டும் வந்து இரண்டாம் முறை படம் பார்த்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.

திருட்டு டிவியில் படம் பார்த்த எங்கள் தெரு குடும்பம் ஒன்று, இரவு முழுக்க தூங்காமல் அழுது புலம்பியதாக ஒரு செவிவழிச் செய்தியும் கிடைத்திருக்கிறது. இம்மாதிரி தமிழகம் முழுக்க கர்ச்சீப்பை ஈரமாக்கும் ஏராளமான கண்ணீர்க் கதைகளை தொலைபேசி பேச்சுகளிலும், இணையத் தளங்களிலும் கேட்க, வாசிக்க கிடைக்கிறது. ஒருவேளை நிஜமாகவே இது மிக உன்னதமான படம்தானோ, நாம்தான் சரியாக கவனிக்கவில்லையோ என்கிற குற்றவுணர்ச்சியும் எனக்கு இயல்பாகவே எழத் தொடங்கி விட்டது.

இதேவேளையில் இப்படம் குறித்த உக்கிரமான எதிர்ப்புகளும் தமிழ் அறிவுஜீவிகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் / நம்பிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து எழத் தொடங்கியிருக்கிறது. இயக்குனர் விஜய் அப்பட்டமான திருடர் என்பது அவர்களது முதல் வாதம். I am Sam திரைப்படத்தை ஈயடிச்சான் காப்பியாக அடித்தது மட்டுமின்றி, அதை தன்னுடைய சொந்த சரக்கு போல அவர் பாவனை செய்வதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இது யாராலும் சகித்துக்கொள்ள இயலாத விஷயம்தான். இல்லையென்று சொல்லவில்லை.

ஆனாலும் அறிவுஜீவிகளின் அட்டூழியம் கொஞ்சம் அளவுக்கதிமாகவே இந்த விஷயத்தில் வெளிப்படுவதாக தோன்றுகிறது. இதற்கு முன்பாக அப்பட்டமாக தழுவிய படங்களை இவர்கள் தமிழில் பார்த்ததே இல்லை என்பது போலவும், முதன்முதலாக இப்படிப்பட்ட மோசமான போக்கினை இயக்குனர் விஜய் முன்னெடுத்திருப்பதைப் போலவும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு அப்படத்தின் கதை விவாதத்தில் பங்கெடுத்த அஜயன் பாலாவுக்கு நேர்ந்த அனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம். படத்தின் இயக்குனரோடு தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதியிருந்தார் அஜயன். அவ்வளவுதான். இணைய அறிவுஜீவிகள் பொங்கியெழுந்து விட்டார்கள் (இவர்களை ஒப்பிடுகையில் சிறுபத்திரிகை மற்றும் அரசியல் சமூக அறிவுஜீவிகளை கோயில் கட்டி கும்பிடலாம்). ஒருவன் நல்ல படைப்பாளியாக இருக்க வேண்டுமா, அல்லது நல்ல மனிதனாக இருக்க வேண்டுமா என்றெல்லாம் தர்க்கரீதியான கேள்விகளை எழுப்பி, அவரவர் தர்க்கத்தில் அவரவரே பதில் சொல்லி... ஏண்டா இப்படி எழுதினோம் - “ஒரு மனுஷன் நல்லவன்னு சொல்றது ஒரு குத்தமாய்யா?” - என்று அஜயன்பாலா நொந்துப் போகிற அளவுக்கு புகுந்து விளையாடி விட்டார்கள்.

இன்னொரு பக்கம் கீற்று இணையத்தளத்தில் வெளிவந்த விமர்சனம், உயிர்மையில் ஷாஜி எழுதிய விமர்சனம் என்று கொஞ்சம் அதீதமான, நாடகத்தனமான விமர்சனங்களை அறிவுஜீவி மொழிநடையில் வாசிக்க கிடைத்தது. இப்போது எனக்கு தெய்வத்திருமகள் படத்தின் மீதும், அதன் இயக்குனர் மீதும் பெரிய அனுதாபமே (ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் மாதிரி) ஏற்பட்டுவிட்டது.

பிக்பாக்கெட் திருடன் ஒருவன் மாட்டிக்கொண்டால் ஊரே சேர்ந்து அடித்து, நொறுக்கி திருவிழாவாக கொண்டாடுவது மாதிரியான மனோபாவத்தினை, வெகுஜனங்களிடமிருந்து விலகி நின்று அறிவுபூர்வமாக, தர்க்கப்பூர்வமாக சிந்திக்கிறவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இருப்பதினை உணரமுடிகிறது.

இதே நேரத்தில் இன்னொரு படத்தையும் இந்த சம்பவங்களோடு ஒப்பிட வேண்டியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு மாதவன் நாயகனாக நடித்து (சீமான் போலிஸ் அதிகாரியாக ரசிகர்களை வெறியேற்றி) வெளிவந்த ‘எவனோ ஒருவனை’ நினைத்துப் பார்க்கிறேன். கம்யூனிஸப் படமான காஞ்சிபுரத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, ‘எவனோ ஒருவனுக்கு’ கொடுத்திருக்கலாம் என்று தமிழ்நாட்டின் ஒரே அக்மார்க் ஐ.எஸ்.ஓ. 9001 அறிவுஜீவியான ஞாநி கூட குமுதத்தில் எழுதியிருந்தார்.

இந்தப் படத்தின் ஒரிஜினல் நிஷிகாந்த் காமத் இயக்கிய மராத்திய மொழிப்படமான பிம்பிலிக்கி பிலாகியோ என்ன எழவோ.. (டோம்பிவிலி ஃபாஸ்ட் என்று தோழர் திருத்துகிறார்). இத்திரைப்படம் மராத்திய மொழி திரைப்படங்களுக்கு ஒரு சர்வதேச அந்தஸ்தினை உயர்த்தியதாக அப்போது அறிவுஜீவிகள் மார்தட்டிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, ஏகப்பட்ட விருதுகளையும் பிம்பிலிக்கி பிலாகி குவித்தது. அவ்வருடத்தின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது பிராந்திய மொழிப் படங்களுக்கான விருதையும் பெற்றது.

இரண்டு, மூன்று மாதத்துக்கு முன்பு கலைஞர் டிவியில் ஒரு ஆங்கில டப்பிங் படத்தினை கண்டேன். மைக்கேல் டக்ளஸ் நடித்த அத்திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் ஏற்கனவே கண்டது போலவே இருந்தது. மேலும் காட்சிகளை கண்டதுமே புரிந்துவிட்டது. அட, இது நம்மூரு பிம்பிலிக்கி பிலாகி. ஹாலிவுட்காரன் கூட அப்பட்டமாக சுடுகிறானே என்று நொந்துப்போய் விட்டேன். பிற்பாடு இணையத்தில் தேடியபோது Falling Down என்கிற பெயரில் 1993லேயே அப்படம் வெளிவந்துவிட்டதை தெரிந்துகொள்ள முடிந்தது.

இதை இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது. நம் அறிவுஜீவிகள் சிலாகிக்கும் படங்களுக்கான மூலம் அவர்களுக்கு தெரியாததால், பாராட்டித் தள்ளிவிடுகிறார்கள். ஒருவேளை தப்பித்தவறி தெரிந்துவிட்டால் ’நகல் அல்ல, போலி’, ‘பொய்மையின் உச்சம்’ என்று இலக்கியத்தரமாக எட்டி உதைத்து, குப்புறப் போட்டு ஏறி மிதிக்கிறார்கள்.

குறிப்பாக வெகுதிரள் ஜனரஞ்சக படங்களின் இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் குறித்தே இவர்களது உன்னதமான ஒரிஜினல்-போலி விளையாட்டு அதிகமாக நடைபெற்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. அறிவுஜீவி இயக்குனர்கள் யாராவது சுட்டு படமெடுத்தால், நம்மாளுதானே என்று அட்ஜஸ் செய்துக் கொள்கிறார்கள்.

‘தெய்வத் திருமகள்’ அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பியாக இருக்கலாம். படத்தின் இயக்குனருக்கு படைப்புத்திறனே இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் தமிழர்களிடையே மங்கிப்போய் வரும் நெகிழ்ச்சி என்கிற உணர்வினை இப்படம் மூலமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர்விஜய் என்பது மட்டும் நிச்சயம்.

ஜனநாயக அமைப்பில் வாழும் நாம், பெரும் அபத்தங்கள் கொண்ட படங்களாக இருந்தபோதிலும் வெற்றி கண்ட படங்களின் வெற்றியை மறுக்கவே இயலாது. அவற்றை உருவாக்கிய ஜெராக்ஸ் மெஷின்களின் பெயர்கள் திரைப்பட வரலாற்றில் இடம்பெறுவதையும் தடுக்கவே இயலாது. இதற்கு நல்ல உதாரணம் கமல்ஹாசன்.

32 கருத்துகள்:

  1. அப்படின்னா கமல்ஹாசன் கிரியேட்டர் இல்லியா?

    பதிலளிநீக்கு
  2. //இதற்கு நல்ல உதாரணம் கமல்ஹாசன்.//

    உ.ம்: சகல கலா வல்லவன்!

    ஒரிஜினல் படம் = பழைய தமிழ் படம்தான்!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4:49 PM, ஆகஸ்ட் 08, 2011

    http://jackofall.blogspot.com/2005/03/inspired-kamal-hassan.html

    பதிலளிநீக்கு
  4. மணிரத்னம் அடிக்காத உட்டாலக்கடியையா இயக்குநர் விஜய் செய்துவிட்டார்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா6:32 PM, ஆகஸ்ட் 08, 2011

    பிரபு நடித்த மனசுக்குள் மத்தாப்பு என்ற படம் 'One Flew Over the Cuckoo's Nest'(released 1975) என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது...ஆனா அப்ப எல்லாம் இன்டர்நெட் torrent இல்லை, அதுனால இந்த அறிவுஜீவிகளுக்கு தெரியல...

    நகல, போலி ஆக இருந்தால் என்ன, மக்களுக்கு நெகிழ்ச்சி என்ற ஒன்று இருப்பது தெரிவது, இது போன்ற படங்களால் மட்டுமே

    --மணிகண்டன் மு.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா6:38 PM, ஆகஸ்ட் 08, 2011

    இணைய அறிவுஜீவிகளுக்கு நெத்தியடி. உங்கள் பதிவை படித்தவுடன் இன்றைக்கு இரவிற்குள் அவர்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

    இன்னொரு தடவை காப்பி அடிப்பதை பற்றி பேச நினைத்தால் அவர்களுக்கு உங்கள் பெயர் தான் ஞாபகம் வரும்.

    கலக்கல் தலைவா!!!

    பதிலளிநீக்கு
  7. ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை!

    பதிலளிநீக்கு
  8. எந்திரன் கூட ஒரு பழைய படத்தின் அப்பட்டமான காபி தான்.

    பதிலளிநீக்கு
  9. \\ I am Sam திரைப்படத்தை ஈயடிச்சான் காப்பியாக அடித்தது மட்டுமின்றி, அதை தன்னுடைய சொந்த சரக்கு போல அவர் பாவனை செய்வதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இது யாராலும் சகித்துக்கொள்ள இயலாத விஷயம்தான். இல்லையென்று சொல்லவில்லை. \\

    அப்புறம் என்னாத்துக்கு இந்த பதிவு? சகித்துக்கொள்ள இயலாத விஷயம்தான் -னு சொல்லிட்டு நீங்க கம்னு போறீங்க... அவுங்க பிரிச்சி மேயுறாங்க...

    பதிலளிநீக்கு
  10. மாட்டிக்கொண்ட திருடன் அடிவாங்கும் போது நம்மைப் போன்ற ஆட்களுக்கு இரக்கம் வருவது சகஜம்தான்.

    ஆனா நம்ப கிரியேட்டர்களின் லட்சணமெல்லாம் இவ்வளவுதான் என்று நினைக்கும் போது கடுப்பாவுது.

    சொந்தமா படம் எடுக்கும் பேரரசு, சாம் ஆண்டர்சன் போன்றவர்கள் எவ்வளவோ தேவலாம். அவர்கள் மீது எனக்கு பெரிய மரியாதை வருகிறது.

    பதிலளிநீக்கு
  11. // நம் அறிவுஜீவிகள் சிலாகிக்கும் படங்களுக்கான மூலம் அவர்களுக்கு தெரியாததால், பாராட்டித் தள்ளிவிடுகிறார்கள். ஒருவேளை தப்பித்தவறி தெரிந்துவிட்டால் ’நகல் அல்ல, போலி’, ‘பொய்மையின் உச்சம்’ என்று இலக்கியத்தரமாக எட்டி உதைத்து, குப்புறப் போட்டு ஏறி மிதிக்கிறார்கள்.// இதை நான் வழிமொழிகிறேன்..

    நம்மூர் அறிவுஜீவிகளுக்கு நல்ல பதில் யுவா.. நன்றிகள்

    நேற்று தான் நான் படத்தை பார்த்தேன். நான் இன்னும் I am sam பார்க்கவில்லை, சீக்கிரம் பார்த்துவிடுவேன்..

    விஜய் சிறந்த ஒரு கதையை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

    நிச்சயமாக தமிழர்களாகிய நாம ரொம்பவும் முன்னேறி இருக்கோம் ஆங்கில படங்களெல்லாம் பார்க்கிறோம். ஆனால் எத்தனை பேர் இந்தப்படம் வருவதற்கு முன்பு I am sam ஐ பார்த்திருப்பார்கள்?

    சொந்தமாக கதை எழுதி - இயக்கப்பட்ட படம் என்கிற ஒரே காரணத்திற்காக ஒரு மொக்கை படத்தை பார்க்க முடியுமா?

    நம்மூர் மொக்கை கதைகளுக்கு, நல்ல வெளியூர் கதைகளை சுட்டு படமெடுப்பது பரவாயில்லை என்றே எனக்கு தோனுகிறது..

    லேப்டாப் வைத்துக்கொண்டு இன்டர்நெட்ல இங்க்லீஷ் பாடங்களை டவுன்லோடு பண்ணி பாக்கறவங்க மட்டுமே தமிழ் சினிமாவின் ரசிகர்கள் இல்லை. இன்னும் தமிழினத்தின் பெரும்பான்மையானைவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.

    அமெரிக்கர்களின் பெருந்தன்மையையோ அல்லது வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் தன்மையையோ (எனக்கு வாய்த்த அனுபவத்தை வைத்து கூறுகிறேன்) ஒரு இந்தியரான விஜய் கிட்ட எதிர்பார்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்..

    வெளிநாட்டு நட்பின் விளைவாக வருங்கால இளைய தலைமுறை வெளிப்படையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்...

    பதிலளிநீக்கு
  12. கிருஷ்.அருமையான கட்டூரை.கடைசியில கலக்கல்.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா9:24 AM, ஆகஸ்ட் 09, 2011

    படம் தொடங்கியதும் எவ்வளவோ பெயர்கள் திரையில் ஓடுகின்றன.. படம் காப்பி என்று இருந்தால் இது இன்னாருடைய படம் என்று ஒரு வரி எழுதி நன்றி என்று போட்டுவிட்டால் யாரும் எதுவும் எழுதப்போவதில்லை..

    ஆனால் பதிவர்கள் காப்பி அது இது என்று ஒரு படைப்பாளியை சகட்டுமேனிக்கு விமர்சனம் வைப்பதற்குமுன்பாக இதற்கான அவர் பக்க காரணம் என்ன என்பதையும் அறிந்த பிறகு விமர்சனம் செய்யலாம் என்பது என் கருத்து...

    இப்படிப்பட்ட படங்கள் ரீமேக் செய்யப்பட்டு நமக்கு ஒரு நிறைவான படம் காணும் வாய்ப்பை வழங்கும் இயக்குனர்களை நாம் பாராட்டவும் செய்யவேண்டும்..

    தெய்வத்திருமகள் - "சுட்டாலும் பொன்"

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா9:37 AM, ஆகஸ்ட் 09, 2011

    அறிவு ஜீவி இயக்குனர் அவர் படம் என்பது நந்தலாலா, மிஷ்கின் இவர்கள் இல்லையே ? இவர்களை சொன்னால் கொன்னுபுடுவேன். இயக்குனர் விஜய் தான் திருடர். மிஷ்கின் சூப்பர் ஆளு.

    பதிலளிநீக்கு
  15. ஆங்கில படங்களை தழுவி எடுப்பதில் எந்த தவறும் இல்லை. I am Sam திரைப்படத்தை அதிக பட்சமாக 2% தமிழர் பார்த்திருப்பார் .. மீதமுள்ள 98 % மக்களும் ஒரு நல்ல படத்தை தவற விடக்கூடாது என்பதற்காக இயக்குனர் சுடுவதில் தவறில்லை .. அதுவும் ஒரிஜினல் படத்தில் உள்ள குறைகளை களைந்து கொடுத்தால் வரவேற்கலாம் ..
    குறைந்த பட்சம் Inspired by I am Sam என்றாவது போட்டிருக்கலாம் ...போடுவதில் தவறில்லை ..

    //லோசன் கருத்து அருமை //-http://loshan-loshan.blogspot.com/2011/07/blog-post_15.html
    ஆனால் இந்தத் திரைப்படம் ஆங்கிலப் படம் I am Samஇன் தழுவல் மட்டுமே.. ஆங்கிலப் படத்தின் முக்கியமான கதையோட்டத்தை மட்டுமே எடுத்துக்கையாண்ட விஜய் சிக்கலான, எங்களுக்குப் பொருந்தாத பகுதிகளைத் தமிழ் சினிமாவின் போக்கில் மாற்றிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா8:30 PM, ஆகஸ்ட் 09, 2011

    Yuva,
    Good one. My line of thinking is same like. and hats off.
    My dear Marthandan = coming to America
    Anbe Vaa= come september
    Mgre copy.. even if you go back to 40/50 we had mny tamil songs and cinemas were atta copy.
    Surya

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா11:05 AM, ஆகஸ்ட் 10, 2011

    இதை நான் வழிமொழிகிறேன் லக்கி .

    பதிலளிநீக்கு
  18. அருமை. லக்கி அவர்களே ஷாஜி அவர்கள் உயிர்மையில் எழுதிய விமர்சனத்தை நானும் படித்தேன். இப்படத்தை மிகவும் மட்டமான படம் என்பது போல அவர் விமர்சிதிதிருக்க வேண்டாம் என்று நினைக்கிறன் . நாலு குத்து பாட்டு , இரண்டு சண்டை , ரெண்டு டூயட் என்று வழக்கமான மசாலா படத்தை புதிதாக எடுப்பதை விட இது போன்ற ஒரு நல்ல படத்தை காபி அடிப்பது ஆயிரம் மடங்கு மேல் என்றே நினைக்கிறன் ..

    மேலும் சாதாரண தமிழ் ரசிகனுக்கு இது போன்ற நல்ல காப்பிகள் தேவை என்றே நினைக்கிறன் .

    மேலும் இது போன்ற ஒரு நல்ல படைப்பை ( காப்பியாக இருந்தாலும் ) கொடுக்க துணிந்த இயக்குனரை பாராட்டலாம் ...

    நாலு ஐந்து படங்களில் இருந்து சிற்சில சீன்களை எடுத்து அப்படியே கலவையாக்கி காபி அடித்து படம் எடுத்தால் கூட நம் மேதாவிகள் விட்டு வார்கள் போல.
    ஒரே படத்தை ஒழுங்காக காப்பி செய்தால் இவவளவு குத்தம் கண்டு பிடித்து விடுகிறார்கள்.....

    பதிலளிநீக்கு
  19. கவியரசர் கண்ணதாசனின் பெரும்பாலான ரசிக்ககூடிய திரைப்பாடல்கள் நம்முடைய சங்க இலக்கிய பாடல்களில் உள்ள நம்மால் புரிந்து கொள்ள முடியாத கடினமான வரிகளை எடுத்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கையாண்ட பாடல்களே.

    பதிலளிநீக்கு
  20. இதனால் தெரியப்படுத்தப்படுவது என்னவென்றால் . .லக்கி எழுதிய புத்தகங்களின் கட்டுரைகளையோ அல்லது லக்கியோட பதிவுகளையோ நாளை யார் வேண்டுமானாலும் ஒண்ணு ரெண்டு வார்த்தைகளை மாத்திப்போட்டு தங்கள் பதிவுன்னு வெளியிடலாம். லக்கியே அதற்கு ஆதரவும் தெரிவிப்பார் :-) . காரணம், அவர் ஒரு காமன் மேன் :-) . . . ரெடி ஸ்டார்ட் :P . .

    காப்பிரைட் பத்தியோ அல்லது plagiarism பத்தியோ எந்த அறிவும் இல்லாத இந்தப் பதிவு, உங்களின் பெருந்தன்மையையும் அன்புள்ளத்தையும் காட்டுகிறது :-) . .

    பி.கு - புதிய சினிமா வாய்ப்புக்கு வாழ்த்துக்கள் லக்கி :-)

    பதிலளிநீக்கு
  21. //எழுதிய புத்தகங்களின் கட்டுரைகளையோ அல்லது லக்கியோட பதிவுகளையோ நாளை யார் வேண்டுமானாலும் ஒண்ணு ரெண்டு வார்த்தைகளை மாத்திப்போட்டு தங்கள் பதிவுன்னு வெளியிடலாம். லக்கியே அதற்கு ஆதரவும் தெரிவிப்பார் :-) //

    லக்கி என்ன உலகப்படம் மாதிரி உலகநாவல, உலகப்பதிவா எழுதிருக்காரு...
    லக்கி உடனே ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கவும்....

    பதிலளிநீக்கு
  22. தாக்கம் வேறு,தழுவல் வேறு,காபி வேறு .இம்மூன்றையும் நாம் ஒன்று போல பயன் படுத்துகிறோம்.
    மேலும் title cards இல் "நன்றி :இந்த ஆங்கிலப்படம்" என்று போடுவதெல்லாம் ஆபத்து!copyrights சட்டப்படி வழக்கிட்டு கோடிக்கணக்கில் கறந்து விடுவார்கள்! சுராக்களிடமிருந்தும்,போக்கிரிகளிடமிருந்தும் தப்பிக்க கொஞ்ச காலத்திற்கு இந்த காபிகளை பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  23. அசல் முக்கியத்துவம் பற்றி எப்படி வெற்றி அடைய அவருக்கு உதவிய ரஜினி பேச்சு. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
    http://bit.ly/n9GwsR

    பதிலளிநீக்கு
  24. Yuva ..dont support this type of remakers..I totally agree with Adhi`s comments..Perarasu and even T.Rajendar are all 100 times better than these fellows..

    பதிலளிநீக்கு
  25. இந்த மேதாவிதனமான பதிவை படித்ததும் .. யாரு அறிவு ஜீவினு புரியல..!!யாருக்கோ சப்பை கட்டு கட்டுவது போலதான் உள்ளது! நீங்கள் குறிப்பிடும் அவர்களின் வாதம் ஒரு திரைபடத்தின் வெற்றியையோ தோல்வியையோ நிர்ணயிக்காது என்பதுதான் நிதர்சனம். இருப்பினும் சிலர் தொடர்ந்து எழுதுவதற்கு காரணம் விழிப்புணர்வு என்றும் சொல்லலாம்.ஏன் சம்பந்தபட விஜயே இதை படிக்க வாய்ப்புண்டு..இவ்வளவு பேரு காய்ச்சி எடுக்கிறாங்களே.. என்று தன் திறமையை ஒரு ஒரிஜினல் படத்தில் காட்ட துணியலாம். அவரை போல சினிமா வாய்ப்பு உள்ளவர்கள் திருந்தினால் நீங்கள் தான் டம்மி பீஸு ஆவிர்கள்.

    பதிலளிநீக்கு
  26. This story was already come as hindi film. Ajay Devagan acted in it. It did not receive much appreciation at that time. Actually the Tamil film may probably an inspiration of the hindi film. Even then copying is also an art. Every artist should make a try at copying.
    K V B

    பதிலளிநீக்கு
  27. நல்ல படங்களை மறு உருவாக்கம் செய்வதில் தவறு எதுவும் கிடையாது. வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களையே மறுபடியும், மறுபடியும் ஹாலிவுட்டில் மறு உருவாக்கம் செய்கிறார்கள். "Dances with wolves" என்ற வெற்றிப் படத்தின் அடிப்படையில் உருவானதுதான் "Avatar." இயக்குநரிடம் கேட்ட போது "ஆமாம் அப்படித்தான்" என்று சொல்லி விட்டார். தெனாலி, அவ்வை சண்முகி எல்லாம் நன்றாக தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட படங்கள். ஆனால் இவற்றின் மூலப்படங்கள் பரவலாக மக்களைக் கவரக் கூடிய தன்மை பெற்றவை. "ஐ ஆம் சாம்" போன்ற ஒரு படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்ய பெரும் துணிச்சல் வேண்டும். கதாநாயகன், கதாநாயகி இல்லாமல், குத்துப் பாட்டு இல்லாமல், ஒரு குழந்தைக்கும் அவளது தகப்பனுக்கும் இருக்கும் உறவைப் பற்றி, உணர்ச்சிப் பூர்வமாக கதையைக் கொண்டு சென்றால் படம் ஓடுமா என்ற சந்தேகத்தையும் மீறி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படைப்பு பொழுதுபோக்காக நன்றாகவே இருந்தது. எனவே, உங்களது கருத்துக்களுடன் முழுக்க, முழுக்க உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா3:39 AM, ஆகஸ்ட் 25, 2011

    எவனோ ஒருவன் மராத்தி மொழி படம் என்பதும் அதை சரியான ரைட்ஸ் வாங்கியே மாதவன் தயாரித்தார் என்பதும் பலருக்கும் தெரிந்தது.

    அப்படி வாங்கின படம் ஃபாலிங் டவுன்னோட தாக்கம் உள்ளதுன்னு பக்கம் பக்கமாக வந்த நியூசை கூட நீங்கள் செல்க்டிவ் அம்னீசியாவால மறந்திருக்கலாம்.

    ஆனால், எவனோ ஒருவன் என்று விக்கியில் தேடினால் அது ஃபோலிங் டவுன்னோட தாக்கம் உள்ள மராத்தி படத்தோட தமிழ் வேர்ஷன் என்று தான் முதல் பராவே சொல்லுது. இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க கண்டு பிடிச்சிருக்கத் தேவை இல்லை.

    மத்தவன் தப்பு செய்யறான் எங்கிறதுக்கான நானும் செய்வேன் என்கிற பேத்தல் - நியாயங்களை எப்போது தமிழன் விட்டொழிக்கிறானோ அப்போது தான் அவனுக்கு விமோசனம் கிடைக்கும்.

    உங்கள் இராணுவம் சம்மந்தமான ஆட்டிக்களை படித்த பிறகும் ஏன் நான் இதைப் படிச்சேன் என்று தெரியவில்லை. திருட்டை நியாயப் படுத்துவதற்கு கண்டனங்கள்.

    பதிலளிநீக்கு