22 ஆகஸ்ட், 2011

கோமா

படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தேன். கண்களை திறந்ததும் தாங்க முடியாத கூச்சம், வலி. கிட்டத்தட்ட பத்தாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது நாட்களாக மூடியே கிடந்த இமைகளை திறப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. இமைகளுக்கு கூடவா துரு பிடிக்கும்? நன்கு கசக்கிவிட்டு மெதுவாக இமை திறந்தேன். வெண்மையான பரப்பு மட்டுமே என் கண்ணுக்கு தெரிந்தது. சிறு சத்தமும் இல்லாத சுடுகாட்டு அமைதி. ஒருவேளை பார்வை போய்விட்டதோ, காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதோ? எழுந்து அமர முயற்சித்தேன். முதுகிலும், இடுப்பிலும் மரணவலி.

வெள்ளை சுடிதார் அணிந்த பெண் ஒருத்தி ஓடிவந்தாள். நான் எழ முயற்சிப்பதை கண்டு அவள் விழிகளில் ஆச்சரியம். யாரையோ அழைக்க ஓடினாள். அவளது செருப்புச் சத்தம் டக், டக்கென காதுகளில் கேட்டது. காது கேட்கிறது. பார்வையும் தெரிகிறது என்பது உறுதியானது.

நான் எங்கிருக்கிறேன்?

பக்கவாட்டுச் சுவரைப் பார்த்தேன். தினக்காலண்டர் ஒன்று மாட்டியிருந்தது. ஒருவழியாக நிலவரத்தை புரிந்துகொண்டேன். இது ஒரு மருத்துவமனை. லேசாக அடித்த டெட்டால் நெடி இதைப் புரியவைத்தது. காலண்டரில் இருந்த தேதி ஆகஸ்ட் 20, 2041.

அப்படியெனில், மிகச்சரியாக முப்பது ஆண்டுகளாய் நினைவில்லாமல் வீழ்ந்து கிடக்கிறேன். அப்போது எனது வயது இருபத்தி இரண்டு என்றால், இப்போது எனக்கு வயது ஐம்பத்தி இரண்டு.

வெள்ளை கோட்டு மாட்டிய, கருப்பு பிரேம் கண்ணாடியோடு, கழுத்தில் ஸ்டெதஸ்கோப்போடு ஒரு நடுத்தர வயது மனிதர், அந்த வெள்ளைச் சுரிதார் பெண்ணோடு படபடப்போடு ஓடிவந்தார்.

என் தோளைப் பிடித்து ஏதோ இந்தியில் கேட்டார். புரியவில்லை. என்னை ஏதோ வடமாநிலத்தில் பிடித்து வைத்திருக்கிறார்களா?

“யூ நோ தமிழ்?” நல்லவேளையாக எனக்கு ஆங்கிலம் மறந்துவிடவில்லை.

“நோ பிராப்ளம். ஐ நோ இங்க்லீஷ் லிட்டில். திஸ் ஈஸ் இண்டியா. இஃப் யூ ஃபீல் யூ ஆர் எ இண்டியன், பர்ஸ்ட் யூ மஸ்ட் லேர்ன் ஹிண்டி”

நூறு வருஷமாகவே இந்திக்காரர்களோடு இதே ரோதனை. மொழிவெறியர்கள். ‘சுர்’ரென்று எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன். எனக்கு என்ன ஆனது என்பதை நினைவுபடுத்த தொடங்கினேன்.

அன்று காலை பைக்கில் அண்ணாசாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தேன். ஹிண்டு ஆபிஸுக்கு எதிர்புறமாக, புதிய தலைமைச் செயலக வாசலில் இருந்து பேருந்து நிறுத்தத்தில் அவள் எனக்காக காத்திருந்தாள். பி.ஆர்.ஆர். & சன்ஸை கடக்கும்போதே அவளைப் பார்த்து கையாட்டினேன். அவளும் பதிலுக்கு கையாட்டினாள். ஒரு ‘யூ’ டர்ன் அடித்து அவளை பிக்கப் செய்யவேண்டும். பெரியார் சிலைக்கு அருகில் இருந்த சிக்னல் சிகப்பு விளக்கில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பச்சை விளக்குக்காக காத்திருக்க பொறுமையில்லை. முன்னால் இருந்த கார் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற, கிடைத்த சந்தில் பைக்கை செலுத்தி வேகமாக திருப்பினேன். சிவானந்தா சாலையில் இருந்து ஹார்ன் அடித்துக்கொண்டே வேகமாக வந்த அந்த காரில் அனேகமாக ‘பிரேக்’ வேலை செய்யாமல் போயிருக்க வேண்டும். இடதுபுறமாக அதே வேகத்தில் மொத்தமாக அவன் திருப்ப, கார் இரண்டு முறை புரண்டு வந்து என் பைக்கின் மீது மோத, நொடிகளில் நிகழ்ந்துவிட்ட இந்த விபத்தில் தூக்கியெறியப்பட்ட நான், சாலை நடுவிலிருந்த விளக்குக் கம்பத்தில் தலைமோதி கீழே விழுந்தேன். எழ முயற்சித்தபோது, பொலபொலவென்று தலையிலிருந்து கொட்டிய ரத்தம் பார்வையை மறைத்தது. தூரத்தில் அவள் பதறியவாறே ஓடிவருவதுதான் நான் கண்ட கடைசி காட்சி.

இதோ கண் விழிக்கும்போது முப்பது வருடங்கள் ஓடிவிட்டிருக்கிறது.

டாக்டர் பாதி ஆங்கிலத்திலும், மீதி இந்தியிலும் என்னைப் பற்றியும், பொதுவாகவும் சில விவரங்களை சொன்னார்.

மண்டையில் நான்கு முறை அறுவைச்சிகிச்சை நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் என்னை கருணைக்கொலை செய்யச்சொல்லி என் பெற்றோர் இந்திய அரசுக்கு மனு போட்டிருக்கிறார்கள். அந்த மனுவை ஏற்கக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் உச்சநீதி மன்றம் வரை சென்று, இன்றளவும் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் அப்பாவும், அம்மாவும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்து விட்டார்கள்.

இந்தியா மிகவும் மாறிவிட்டது. உலகின் நெ.1 நாடாகிவிட்டது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனியாக ஒரு அடையாள அட்டை உண்டு. அந்த அட்டை இல்லாதவர்கள் – அதாவது இங்கே வாழத் தகுதியற்றவர்கள் என்று அரசால் நம்பப்படுபவர்கள் - ஏழ்மையான நாடான அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார்கள். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்நாடு மனிதர்கள் வாழத்தகுதியற்ற பிரதேசம். இவ்வகையில் இங்கே வெகுவாக மக்கள் தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்தியாவின் மக்கள் தொகை இருபது கோடி மட்டுமே. கொலைகாரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் கூட நம் நாட்டில் மரணத்தண்டனை கிடையாது. ஊழல்வாதிகளுக்கு மட்டுமே மரணத்தண்டனை என்பதால் இங்கு ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

“எனக்கு அடையாள அட்டை இருக்கிறதா?”

“இல்லை. சுயநினைவோடு இருப்பவர்களுக்கு மட்டுமே அட்டை வழங்கப்படும். பிரச்சினையில்லை. நீங்கள் ஒரு வாரத்துக்குள் எப்படியாவது அட்டை வாங்கிவிடலாம். எங்களது தலைமை மருத்துவ அதிகாரி உங்களைப் பற்றிய விவரங்களை குறிப்பிட்டு, ஒரு சான்றிதழை கையளிப்பார். அதை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருக்கும் குடியுரிமை அலுவலகத்தில் தந்து, அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். உங்களைப் பற்றிய விவரங்களை அவர்களுக்கு எங்கள் நிர்வாகம் அங்கே உடனடியாக அனுப்பிவிடும்”

“நுங்கம்பாக்கம்.. சாஸ்திரிபவன்? நான் எங்கே இருக்கிறேன்?”

“சென்னையில்தான் இருக்கிறீர்கள். இது தமிழக அரசின் தலைமை மருத்துவமனை”

அரசு மருத்துவமனையில் இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகள் அடங்கிய அறையாக நான் இருந்த அறை இருந்தது. மருத்துவம் முற்றிலும் இலவசமாம். வெள்ளை சுரிதார் நர்ஸ் இந்தியில் சொன்னாள்.

கண்ணாடி ஒன்றினை கொண்டுவந்து காட்டினாள். நரை விழுந்து, முகம் கறுத்து, கன்னங்கள் உள்வாங்கி.. இது நான் தானா?

உண்ண உணவு கொடுத்தார்கள். உடுத்திக் கொள்ள உடையும் கொடுத்தார்கள். செலவுக்கு கொஞ்சம் பணமும். சான்றிதழ் கொடுத்து கை குலுக்கி, மருத்துவமனையே திரண்டு வந்து எனக்கு பிரியாவிடை கொடுத்தது. பலகாலமாக என்னை கவனித்த வார்டு பாய்கள் மார்போடு அணைத்து விடை தந்தார்கள். இவர்கள் எல்லாம் யாரென்றே எனக்குத் தெரியாது. ஆனால், என் மீதுதான் எத்தனை அன்பு? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

வெளியே வந்தேன். எதிரில் பி.ஆர்.ஆர். & சன்ஸ் அதே பழமையான கம்பீரத்தோடு காட்சியளித்தது. குழம்பிப்போய் நானிருந்த மருத்துவமனையை பார்த்தேன். அடடே! அப்போது புதிய தலைமைச் செயலகமாக இருந்த கட்டிடம் அல்லவா இது?

சாலையில் பெரிய நடமாட்டம் இல்லை. இங்கிருந்த மக்கள் எல்லாம் எங்குதான் போனார்கள். அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். அட, கார்கள் எல்லாம் இறக்கை வைத்து பறக்கின்றன. பறக்கும் வாகனங்கள் வந்துவிட்டதா.. அறிவியலின் அதிசயம்தான் என்னே?

பேருந்து நிறுத்தம் மாதிரி இருந்த இடத்துக்கு வந்தேன். இங்கேதான் அவள் எனக்காக காத்திருந்தாள். அவள் இப்போது எங்கே இருப்பாள், எப்படி இருப்பாள், எனக்காக இன்னும் காத்திருப்பாளா? – முப்பது வருடங்கள் ஓடிவிட்டது. எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக யோசிக்கிறேன். அவளுக்கு திருமணம் ஆகியிருக்கும். குழந்தை பெற்றிருப்பாள். குழந்தைக்கே குழந்தை பிறந்து பாட்டியாகியிருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது.

மஞ்சள் வண்ணத்தில் லுங்கியைத் தூக்கி கட்டியிருந்த பச்சைத்தமிழர் ஒருவரை கண்டேன். நம் பண்பாட்டு அடையாளமான லுங்கி மட்டும் மாறவேயில்லை.

“ஏம்பா. நுங்கம்பாக்கத்துக்கு எப்படி போறது, ஏதாவது பஸ்ஸு கிஸ்ஸூ இருக்கா?”

“க்யா?” என்றான்.

அடங்கொக்கமக்கா. ஒட்டுமொத்தமாக எல்லாப் பயலும் இந்திக்காரன் ஆகிவிட்டானா? அப்போதுதான் புரிந்தது. மருத்துவமனையில் கூட யாருமே என்னிடம் தமிழில் பேசியதாக நினைவில்லை. தமிழ் மெல்ல சாகும் என்றார்கள். இவ்வளவு சீக்கிரமாகவா?

“அய்யா! தங்களுக்கு நிஜமாகவே தமிழ் தெரியாதா?”

“கொஞ்சா கொஞ்சா பேசுறான்” அடகுக்கடை சேடு மாதிரியே பேசினான். ஆனால் இவனைப் பார்த்ததுமே தெரிகிறது. இவன் நிச்சயம் கொண்டித்தோப்பு தமிழன்.

அவனோடு பேசி, சாஸ்திரி பவனுக்கு எப்படி செல்வது என்பதை புரிந்துகொண்டேன். இருபது வருடங்களுக்கு முன்பாகவே பேருந்து என்கிற வாகனம் காலாவதியாகி விட்டிருக்கிறது. எங்கு செல்ல வேண்டுமானாலும் பறக்கும் வாகனம் சல்லிசான வாடகைக்கு கிடைக்கும். ஏ.டி.எம். சென்டர் மாதிரி அருகிலிருந்த ஒரு கண்ணாடிக்கூண்டை காட்டினான். அங்கு சென்று கணினியின் தொடுதிரையில், நமக்கு வாகனம் வேண்டுமென்பதை பச்சைநிற (இந்த நிறத்தை விடமாட்டான்களே?) பட்டனை தொட்டால்.. ஐந்து பத்து நிமிடத்தில் அங்கேயே வாகனம் வந்துவிடும்.

அதே மாதிரி செய்து, வாகனத்தை வரவைத்து, விண்ணில் பறந்தேன். நான் அதுவரை ஃப்ளைட்டில் கூட போனதில்லை. சன்னல் கண்ணாடியில் சென்னையைப் பார்த்து மிரண்டேன். அந்தக் காலத்தில் சன் டிவியில் தமிழில் போடும் ஹாலிவுட் டப்பிங் படங்களில் கூட இம்மாதிரியான காட்சிகளைப் பார்த்ததில்லை. இப்போதும் சன் டிவி இருக்கிறதா.. அமெரிக்கா ஏழை நாடாகி விட்டது என்றார்களே.. ஹாலிவுட் என்ன ஆகியிருக்கும்? – ஒரு நிமிடம் கூட இதையெல்லாம் யோசித்திருக்க மாட்டேன்.

“சாஸ்திரி பவன்” என்று குரல் கொடுத்தான் வாகன ஓட்டி. அதற்குள் வந்துவிட்டதா?

சட்டைப் பையில் இருந்து ஒரு கரன்ஸி நோட்டை எடுத்து நீட்டினேன். அதுபோல என்னிடம் நிறைய நோட்டுகள் இருந்தன. உண்மையில் இந்த நோட்டுக்கு என்ன மதிப்பு என்று எனக்குத் தெரியாது. இளம் மஞ்சள் வண்ணத்தில் அந்த கரன்ஸி நோட்டை வாங்கியவன், சிகப்பு கலர் நோட்டுகள் மூன்றினை திருப்பித் தந்தான்.

“டேக் இட்” பெருந்தன்மையாக சொன்னேன்.

“டோண்ட் என்கரேஜ் டிப்ஸ். திஸ் ஈஸ் தி பர்ஸ்ட் ஸ்டெப் ஆஃப் கரெப்ஷன்” தெளிவாக நெற்றியில் அடித்தமாதிரி சொன்னான். அட, இந்தியா நிஜமாகவே திருந்திவிட்டதா?

சாஸ்திரி பவனுக்குள் நுழைந்தேன். ஆங்கிலத்தில் விசாரித்தேன். நான் பார்க்கவேண்டிய குடியுரிமை அதிகாரியிடம் ஒரு கருநீலச்சீருடை அணிந்த பணியாளர் அழைத்துச் சென்றார்.

அந்த அதிகாரிக்கு நாற்பத்தி ஐந்து வயது இருக்கலாம். என்னைவிட ஏழெட்டு வயது சிறியவர்தான். முன்வழுக்கையை மறைக்கும் வகையில் தலை சீவியிருந்தார். மெல்லிய பிளாட்டின பிரேம் கண்ணாடி அணிந்திருந்தார்.

மருத்துவமனையில் எனக்குக் கொடுத்த சான்றிதழ்களை காண்பித்தேன். அவற்றைப் பார்த்துவிட்டு கம்ப்யூட்டர் போல இருந்த ஏதோ ஒரு மெஷினில், எதையோ சரிபார்த்தார். அவரது முகபாவம் மாறியது.

“மன்னிக்கவும். உங்களுக்கு தேசிய அடையாள அட்டையை தரமுடியாது”

“ஏன்? நான் முப்பது வருடங்களுக்கு முன்பாக நினைவிழக்கும் போது இந்திய குடிமகனாகதானே இருந்தேன்?””

“ஆமாம். ஆனால் அதற்குப் பிறகு இந்தியா எவ்வளவோ மாறிவிட்டது. இந்தியாவின் இன்றைய சட்டதிட்டங்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இங்கே வசிக்க நீங்கள் தகுதியற்றவர் ஆகிறீர்கள்”

“இது அநியாயம்”

“இல்லை. இதுதான் சட்டம். உங்கள் பெற்றோர் எழுதிவைத்திருக்கும் உயிலின் படி நீங்கள் பலநூறு கோடிகளுக்கு அதிபதி. அவையெல்லாம் விரைவில் அரசுடைமையாகும்”

“ஆபிஸர். நான் இங்கே வாழ வேறு வழியே இல்லையா? வேண்டுமானால் என்னுடைய சொத்துக்களில் பாதியை உங்கள் பெயருக்கு....”

“இங்கே லஞ்சம் வாங்குவது மரணத்தண்டனைக்கு உரிய குற்றம் என்று 2020ல் சட்டம் இயற்றப் பட்டிருக்கிறது. லஞ்சம் கொடுப்பவர்களுக்கு சாட்டையடி மாதிரியான தண்டனைகள் உண்டு. நீங்கள் இவ்வாறு பேசியதை நான் புகாராக எழுதிக் கொடுக்க விரும்பவில்லை. ஏனெனில் உங்களுக்கு சட்ட திட்டம் குறித்த அறிவில்லை. எனவேதான் உங்களுடைய விண்ணப்பித்தை மறுதலிக்கிறேன்” – நீலச்சீருடை பணியாளருக்கு கண்சாடை காட்டினார்.

அவசரமாக என்னை எழுப்பி அழைத்துப்போன நீலச்சீருடையிடம் பார்வையாலே கெஞ்சினேன். ஏதும் பேசாமல் கிட்டத்தட்ட என்னை அந்த ஆள் இழுத்துப்போனார்.

நுழைவாயிலுக்கு அருகே இழுத்து வந்தவர், “ஒரே ஒரு வழியிருக்கு” என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு கிசுகிசுப்பாக சொன்னார்.

“என்ன வழி?” எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை எனக்கு.

“லஞ்சம்”

“அதைத்தான் வாங்க மாட்டேன் என்கிறாரே?”

“லஞ்சத்தை வாங்க லஞ்சம் தந்தால் ஆயிற்று!”

“லஞ்சத்தை வாங்க லஞ்சமா?”

“ஆமாம். இப்போதெல்லாம் இதுதான் இங்கே நடைமுறை. லஞ்சம் வாங்குவது மரணத்தண்டனைக்கு உரிய குற்றம் என்பதால் யாரும் சுலபமாக வாங்கிவிடுவதில்லை. எனவே அவர்களை லஞ்சம் வாங்க வைக்க, படியக்கூடிய ஒரு தொகையை லஞ்சமாக தந்தாகவேண்டும். எப்படி கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது என்பதையெல்லாம் நான் விலாவரியாக சொல்கிறேன். ஆனால் இதை சொல்லுவதற்காக எனக்கு லஞ்சமும், அந்த லஞ்சத்தை வாங்கிக் கொள்ள கூடுதல் லஞ்சமும் தந்தாக வேண்டும்” கண்ணடித்தபடியே, லேசான புன்னகையோடு சொன்னார்.

இரண்டு மூன்று தினங்களில் எல்லாம் ஆயிற்று. குடியுரிமை அதிகாரி, நீலச்சீருடை மற்றும் வேறு சில அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் லஞ்சமும், அந்த லஞ்சத்தை வாங்க லஞ்சமுமாக பல கோடிகளை அழுதேன். குடியுரிமை அதிகாரிக்கு கொடுத்த லஞ்சம் சில கோடிதான். ஆனால் அவர் அந்த லஞ்சத்தை வாங்க கொடுத்த லஞ்சம் என்னுடைய பரம்பரை ஆழ்வார்ப்பேட்டை வீடு. இன்றைய மதிப்பில் அதன் விலை 108 கோடியாம்.

“நீங்கள் இன்று முதல் மீண்டும் இந்தியன் ஆகிறீர்கள்” – தேசிய அடையாள அட்டையை கொடுத்தபடியே கைகுலுக்கினார் குடியுரிமை.

அவரது தலைக்கு மேலே ஒரு தாத்தாவின் போட்டோ மாட்டியிருந்தது.

“இது உங்கள் தாத்தாவா? 2011க்கு முன்பாக அரசு அலுவலகங்களில் காந்தி தாத்தா போட்டோவை தான் மாட்டியிருப்பார்கள்”

“இல்லை. இவர் நம் எல்லோருக்குமே தாத்தா. அவரது பெயர் இரண்டாம் மகாத்மா அன்னா ஹசாரே. இரண்டாம் இந்திய சுதந்திரப்போரை நடத்திய அகிம்சாமூர்த்தி. தேசத்தின் ஊழலை ஒழித்த உத்தமர்”

41 கருத்துகள்:

  1. சுந்தர் ருவாண்டா5:32 PM, ஆகஸ்ட் 22, 2011

    மீ த ஃபர்ஸ்ட்.....

    அரசியல் கலந்த சயன்ஸ் பிக்‌ஷன்... அட்டகாசம்...

    \\“லஞ்சத்தை வாங்க லஞ்சம் தந்தால் ஆயிற்று!”\\

    பயங்கரம்.

    எல்லாரும் ஹிந்தி பேசும் கற்பனை ஹா ஹா....

    பதிலளிநீக்கு
  2. நல்ல கற்பனை.தெளிவான நடை. சுஜாதாவின் கதை படித்த திருப்தி போல இருக்கிறது. நன்றி. super story

    பதிலளிநீக்கு
  3. Yoov,
    Yennaa ammava kalaikiriyaa ;) Adhuthathu namma thalapthithaan so dont worry p happy ;)

    Kalakkal Pathivu Yuva!!

    பதிலளிநீக்கு
  4. நல்ல கற்பனை...

    // ஏழ்மையான நாடான அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார்கள். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்நாடு மனிதர்கள் வாழத்தகுதியற்ற பிரதேசம்.//

    மல்லாக்க படுத்து கனவுகண்டா இப்படிதான் ஏடாகூடமாக ஏதாவது வரும்..

    இருக்கிற எந்தவொரு வளத்தையுமே பயன்படுத்தாமலேயே.. மற்ற நாடுகளிடம் இருந்து சொற்ப டாலர்களுக்கு அதை வாங்கி பயன்படுத்திவரும் அமெரிக்கா வாழத்தகுதியற்ற பிரதேசமா?...

    இன்னும் அரை நூற்றாண்டு கழிச்சி பாருங்கடி.. எல்லா பயபுள்ளையும் எல்லாத்துக்கும்(உணவு உட்பட) அவன்கிட்ட தான் பிச்சை எடுக்கணும்..

    அப்ப அவன் சொல்றதுதான் ரேட்டு..

    பதிலளிநீக்கு
  5. லக்கி, உங்கள் பதிவுகளில் இதையும் சிறந்ததா சேர்த்துக்கலாம்.

    ஒரே பந்துல எத்தனை சிக்ஸர்தாண்டா அடிப்பே(ஐ லவ் யூடா)

    பதிலளிநீக்கு
  6. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...//


    இரண்டாம் மகாத்மா அன்னா ஹசாரே. இரண்டாம் இந்திய சுதந்திரப்போரை நடத்திய அகிம்சாமூர்த்தி. தேசத்தின் ஊழலை ஒழித்த உத்தமர்”//--


    கோமா"கோமா"கோமா"

    பதிலளிநீக்கு
  7. Eppadi ippadiellam yosikkiringa superEppadi ippadiellam yosikkiringa super

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா9:10 PM, ஆகஸ்ட் 22, 2011

    will never happen in tamilnadu.
    But the point you want to make is well done. I have experienced similar situations but will make it a point to speak in Tamil wherever possible.
    rgds/Surya

    பதிலளிநீக்கு
  9. //லஞ்சம் வாங்குவது மரணத்தண்டனைக்கு உரிய குற்றம் என்பதால் யாரும் சுலபமாக வாங்கிவிடுவதில்லை. எனவே அவர்களை லஞ்சம் வாங்க வைக்க, படியக்கூடிய ஒரு தொகையை லஞ்சமாக தந்தாகவேண்டும்.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    //. இவர் நம் எல்லோருக்குமே தாத்தா. அவரது பெயர் இரண்டாம் மகாத்மா அன்னா ஹசாரே. இரண்டாம் இந்திய சுதந்திரப்போரை நடத்திய அகிம்சாமூர்த்தி. தேசத்தின் ஊழலை ஒழித்த உத்தமர்”//

    நச்.. சூப்பர்:)

    பதிலளிநீக்கு
  10. பாஸ், இப்போ நடக்கிற இரண்டாம் சுதந்திர போரில் பங்கு பெற்றால் , பின்னால தியாகி பென்ஷன், தியாகி கோட்டா எல்லாம் கிடைக்குமா ?

    பதிலளிநீக்கு
  11. நல்ல கற்பனை வளம். தொடர்ந்து இது போல் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. சூப்பர் கற்பனை.
    Thanks,
    Kannan
    http://www.ezdrivingtest.com

    பதிலளிநீக்கு
  13. கடைசி மூன்று வரிகளை ரசித்தேன். அன்னா ஹசாரேவை இப்படியும் ஓட்ட முடியுமா!

    பதிலளிநீக்கு
  14. நல்ல கற்பனை.போகிறபோக்கைப்
    பார்தா நீங்க எழுதியதெல்லாம்
    நடந்துடுமோன்னு தோணுது.என்னதான்
    ஹிந்தி பேசினாலும் ஆளை பார்த்தே
    ஒண்டிதோப்புன்னு கண்டுபிடிப்பது
    அசத்தல்.

    பதிலளிநீக்கு
  15. ஆகஸ்ட் 20, 2041

    பஹுத் அச்சா! லக்கீ!

    ஹசாரேஜீக்கு ஜே!!!

    ”இளா: லக்கி, உங்கள் பதிவுகளில் இதையும் சிறந்ததா சேர்த்துக்கலாம்”.

    ஆமாம், மிக அருமை.

    பதிலளிநீக்கு
  16. லக்கி சார்,

    லீப் வருடங்களையும் கணக்கிட்டால் 10957.5 நாட்கள் வரும்! இதை விடத் துல்லியமாக
    வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்!

    லுங்கி கட்டிய கொண்டித் தோப்பு அக்மார்க் தமிழன் ஹிந்தி (மட்டும்) பேசுவது அருமை!
    நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் பிரகாசமாகவே உள்ளன!

    உங்கள் பாக்கெட்டில் இருந்த கரன்சி எல்லாம் 2011 ஆ அல்லது 2041 ஆ ?

    நன்றி!

    பதிலளிநீக்கு
  17. பஹூத் அச்சா கட்டுரைஹே !
    நல்ல கற்பனை!

    பதிலளிநீக்கு
  18. //அவரது தலைக்கு மேலே ஒரு தாத்தாவின் போட்டோ மாட்டியிருந்தது.

    “இது உங்கள் தாத்தாவா? 2011க்கு முன்பாக அரசு அலுவலகங்களில் காந்தி தாத்தா போட்டோவை தான் மாட்டியிருப்பார்கள்”

    “இல்லை. இவர் நம் எல்லோருக்குமே தாத்தா. அவரது பெயர் இரண்டாம் மகாத்மா அன்னா ஹசாரே. இரண்டாம் இந்திய சுதந்திரப்போரை நடத்திய அகிம்சாமூர்த்தி. தேசத்தின் ஊழலை ஒழித்த உத்தமர்”//

    என்ன அண்ணே முக்கியமான அடுத்த வரிகள் missing?

    அதற்கு பக்கத்தில் கபட சிரிப்போடு கருப்பு கண்ணாடி அணிந்த மற்றொரு தாத்தாவின் போட்டோ மாட்டியிருந்தது.

    “இது ?”

    “ இவர் அன்னா ஹசாரேக்கும் தாத்தா . இவரது பெயர் கலைஞர் கருணாநிதி. . தேசத்தில் ஊழலை உருவாக்கிய உத்தமர்.வெறும் 180 ரூபாயில் சென்னை வந்து பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்த ஒரு உன்னத தலைவர்”

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா8:18 PM, ஆகஸ்ட் 23, 2011

    //அங்கு சென்று கணினியின் தொடுதிரையில், நமக்கு வாகனம் வேண்டுமென்பதை பச்சைநிற (இந்த நிறத்தை விடமாட்டான்களே?) பட்டனை தொட்டால்//

    அப்பவும் அம்மா தானா :)

    तामिल मालूम काये

    அருண்

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள யுவக்ருஷ்ணா,
    நீண்ட நாட்களாக தங்களின் எழுத்துக்களில் ஆக்க நோக்கம் குறைவாக இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. இந்தக் கதையைப் படித்தபின்னர் நீங்கள் கதைகள் மூலமாக ஆக்க நோக்கத்தோடு தற்கால நிகழ்வுகளை சுவாரசியமாக பதிவு செய்யும் ஆற்றல் பெற்றிருக்கிறிர்கள் என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. வாழ்த்துக்கள். மேன்மேலும் தங்கள் பணி தொடரட்டும்.
    கு வை பாலசுப்பிரமணியன்

    பதிலளிநீக்கு
  21. அருமையான பதிவு... வாசிக்க வாசிக்க சுவாரசியம். பஹுத் அச்சா ஹை...
    இன்னொரு விஷயம்,

    2041 ல இந்தியாவோட அதிபர் யாரு?

    பதிலளிநீக்கு
  22. இன்று பிறந்த நாள் கொண்டாடும் லக்கி என்கிற , யுவக்ரிஷ்ணா என்கிற, கிருஷ்ணகுமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! ஊடக துறையில் மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  23. தல சுஜாதா அவர்ட் வாங்கினத ப்ரூப்ப் பனிடிங்க ரொம்ப நல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
  24. Main hindi hai, indha kadhai hai, nalla irukku hai.

    Adongo nandri hai!! :)

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா4:50 PM, ஆகஸ்ட் 24, 2011

    Very nice.. Gud flow and gud imagination..

    -SV

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா5:21 PM, ஆகஸ்ட் 24, 2011

    I enjoyed ur post. Cant stop laughing...

    பதிலளிநீக்கு
  27. சுவாரஸ்யமான அருமையான பதிவு.. இருந்தும் தமிழ் இனி மெல்ல சாகும் என நான் கருதவில்லை.. இன்னும் நம்பிக்கை இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  28. 2041 லையும் மரண தண்டனை ஒழியலையா?
    :(

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா12:51 PM, ஆகஸ்ட் 22, 2014

    Super Boss But tamil cinema va vitutinga vijay ajith lam enna aananga

    பதிலளிநீக்கு