20 ஆகஸ்ட், 2011

குமரன் குடில்


ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன் நடந்தது அது. நிறைந்த அமாவசை அன்று அக்குழந்தை பிறந்தது.

"பையன் பொறந்துருக்கானே எப்படியிருக்கான்? அம்மா மாதிரி கருப்பா? அப்பா மாதிரி சிவப்பா?"

"எம் பையனாச்சே! உதயசூரியன் மாதிரி இருக்கான்" சொன்னவர் என் அப்பா. அக்குழந்தை நான்.

ஆகஸ்ட்டு 24, என் பிறந்தநாள்.

* * * * * * * * * * * * * * *
எனக்கு பெயர் வைக்கும் விவகாரத்தில் வெட்டு, குத்து நடக்காதது ஒன்று தான் பாக்கி. வைதீகமான சிவமத குடும்பத்தைச் சேர்ந்தவர் அப்பா. தீவிர முருக பக்தரான அப்பா எனக்கு 'குமரன்' என்று பெயர் வைக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார்.

நான் பிறந்த காலக்கட்டத்தில் என் பெரியப்பா ஒருவர் சம்பந்தமில்லாமல் கிருஷ்ணர் கோயில் கட்டிக் கொண்டிருந்தார். அவரோ 'கிருஷ்ணன்' பெயரை எனக்கு சூட்டியாக வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றிருக்கிறார்.

இடையில் என் அம்மாவழி பாட்டனார் ஜாதகம் பார்த்து "மோ"வில் ஆரம்பிக்கும் பெயர் தான் வைக்க வேண்டுமென்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் (அவரது பெயரே வேங்கைப்புலி). தாத்தா திட்டமிட்டிருந்த பெயர் மோகன சுந்தரம்.

கடைசியாக மூன்று பேரும் collaborate செய்து 'மோகன கிருஷ்ண குமார்' என்று வழக்கில் இல்லாத பெயராக வைத்துத் தொலைத்தார்கள். அவ்வளவு நீளமான பெயராக இருந்தாலும் அப்பா என்னை 'குமரா' என்றே அழைப்பார். அப்பாவைத் தவிர 'குமரா' என்று வேறு யாரும் என்னை அழைத்ததில்லை.

* * * * * * * * * * * * * * *

சென்னைவாசிகள் தங்கள் அப்பாவை நைனா என்று அழைப்பது வழக்கம். என் மழலை வயதில் நைனா என்ற சொல் என் நாக்குக்கு User-friendly ஆக இல்லாததால் 'இன்னா' ஆகியது. வளர்ந்தபின்னும் 'இன்னா' நைனாவாக மாறவேயில்லை. என்னைத் தொடர்ந்து என் தங்கையும் 'இன்னா' என்றே அழைக்க அது எங்கள் குடும்பத்துக்கு மட்டுமே புரியும் புதிய வார்த்தை ஆனது.

* * * * * * * * * * * * * * *

சிறுவயதிலிருந்தே அப்பாவை "வாங்க, போங்க" என்று விளித்ததாக எனக்கு நினைவில்லை. "வா" "போ" தான். வெளியில் செல்லும்போது அவரது தோள் மீது கைபோட்டு நடந்துச் செல்லும் சுதந்திரத்தை எங்களுக்கு கொடுத்திருந்தார். அவரது பாக்கெட்டில் இருக்கும் பணத்தை அவரது அனுமதி இல்லாமலேயே எடுத்து செலவு செய்யும் அதிகாரமும் எங்களுக்கு வழங்கியிருந்தார்.

* * * * * * * * * * * * * * *

அப்பாவுக்கு கால் பிடித்து விட்டால் ஒரு ரூபாய் தருவார். அவர் தரையில் படுக்க அவரது கால் மீது ஏறி நின்று நானும் தங்கையும் மிதிப்போம். சில நேரத்தில் அவரது தொப்பை மீது ஏறிக் குதித்து விளையாடுவதும் உண்டு. அப்போது அப்பாவுக்கு வலித்திருக்கும் என்று இப்போது தெரிகிறது.

* * * * * * * * * * * * * * *

எனக்கு நினைவு தெரிந்தபோது அப்பா கழகத்தில் ஸ்டார் பேச்சாளராக இருந்தார். வட்டம், கிளை, ஒன்றியம் என்று வெகுவேகமாக அரசியல் பதவிகளால் வளர்ந்து வந்துகொண்டிருந்தார். எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த உயரமான புளியமரத்தில் கழகக்கொடி பறக்கும். மறியல், ஊர்வலங்களில் கருப்பு - சிவப்பு டீசர்ட் அணிந்து முன்னணியில் நிற்பார். அந்நேரங்களில் எல்லாம் அவர் என் அப்பா என்று சொல்லிக்கொள்ள பெருமையாக இருக்கும். ஒரு வழக்கு விவகாரத்தால் அவர் கட்சி மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவரது அரசியல் வாழ்வு அஸ்தமித்தது. அப்பா ஏன் தான் கட்சி மாறினாரோ என்று நொந்துகொண்டேன். இன்று நினைத்துப் பார்த்தால் அவர் அந்த முடிவை எடுத்திருக்கா விட்டால் எங்கள் குடும்பம் இருந்திருக்காது என்று தோன்றுகிறது.

* * * * * * * * * * * * * * *

கைநிறைய சம்பாதித்தாலும் அவர் ஆடம்பரமாக இருந்ததில்லை. கடைசி வரை சைக்கிள் தான் வைத்திருந்தார். நகை எதுவும் அணிந்தது கிடையாது. ஒரு வெள்ளி மோதிரம் மட்டும் அணிந்திருப்பார். அந்த வெள்ளி மோதிரம் எப்படி அவர் கைக்கு வந்தது? யார் கொடுத்தது? என்பது அப்பாவோடே புதைந்துப் போன ரகசியம்.

* * * * * * * * * * * * * * *

அடிக்கடி அப்பாவுடன் சண்டை போடுவேன். முக்கியமாக கடவுள் குறித்த விவாதம். அந்த விவாதங்களுக்கு எப்போதும் முடிவே வந்தது கிடையாது. விவாதம் நீண்டுகொண்டே போனால் "முருகனருள் இல்லாமே நீ பிறந்திருப்பியா? உன் கூட பைத்தியக்காரன் தாண்டா பேசுவான்!" என்று சொல்லி முற்றுப்புள்ளி வைப்பார்.

* * * * * * * * * * * * * * *

அப்பாவின் வாழ்க்கை ரொம்பவும் போர் அடித்திருக்கும் என்று நினைக்கிறேன். முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரே மாதிரியே வாழ்ந்திருக்கிறார். மடிப்பாக்கத்திலிருந்து மவுண்ட் ரயில்வே ஸ்டேஷனுக்கு சைக்கிள் மிதிப்பார். 8.30 மவுண்ட் ரிட்டர்ன் ட்ரெய்னில் கடற்கரை செல்வார். அலுவலகப்பணி முடிந்ததும் 7 மணிக்கு அவரது நண்பரான பர்மா பஜார் பாயிடம் அரசியல் பேசுவார். மீண்டும் ட்ரெயின், சைக்கிள், வீடு. இப்படியே 30 வருடம் எப்படித்தான் செக்குமாடு மாதிரி வாழ்ந்தாரோ என்று ஆச்சரியமாக இருக்கிறது.

* * * * * * * * * * * * * * *

2001, ஜூன் 30 உலகெங்கும் வாழ்ந்த லட்சக்கணக்கான தமிழ் குடும்பங்கள் ஒப்பாரி வைத்த நாள். முந்தைய தினம் தான் தங்கைக்கு நிச்சயம் செய்திருந்தோம். அலுவல் முடிந்து களைப்புடன் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை அப்பா எழுப்பினார். "கலைஞரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்டா". பதறி அடித்து எழுந்தேன். சன் டிவி பார்த்து என் குடும்பமே கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. ஆளுங்கட்சி அராஜகத்தால் கலைஞர் கைது தொடர்பான செய்திகளை காட்ட சன் டிவிக்கு தடை விதிக்கப்பட்டது. மதியம் 2 மணியளவில் "பராசக்தி". படம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா "நெஞ்சு வலிக்குது" என்றார். அவருக்கு இதயநோய் ஆரம்பித்தது அப்போது தான். "தலைவருக்கு முன்னாலேயே நான் போயிடணும்" என்றார்.

* * * * * * * * * * * * * * *

அப்பாவுக்கு சர்க்கரை நோய் இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் டயட் விஷயத்தில் அவர் அவ்வளவு அக்கறையாக இருந்தது கிடையாது. பிடிவாதம் அவருக்கு அதிகம். ஸ்வீட் சாப்பிட்டு விட்டு இரண்டு மாத்திரை எக்ஸ்ட்ரா போடுவார். என்ன ஆவதுன்னு பாத்துக்கலாம் என்பார்.

* * * * * * * * * * * * * * *

அப்பாவுக்கு சமூகத்தில் எவ்வளவு மதிப்பிருந்தது என்பதை அவரது இறுதிநாளில் தான் என்னால் கணிக்க முடிந்தது. மலைபோல குவிந்த அனைத்துக் கட்சியினர் மாலை.. அரசு விழா இருந்தாலும் நேரம் ஒதுக்கி அப்பாவுக்கு அஞ்சலி செலுத்திய தொகுதி எம்.எல்.ஏ, கடைசி வரை ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சியினர்.. அப்பாவின் நண்பர்கள்.. நான் இதுவரை முகம் பார்த்தறியாதவர்கள் கூறிய ஆறுதல் போன்ற விஷயங்கள் இதயத்தை நெகிழச் செய்தது.

* * * * * * * * * * * * * * *

நவம்பர் 7, கமலஹாசன் பிறந்தநாள். அதே நாளில் தான் அவரது தந்தையும் கண்ணை மூடினார். கமல்ஹாசன் நகைச்சுவையாக சொல்வார் "என் அப்பாவுக்கு என் மேலே ரொம்ப பாசம். அதனால தான் நான் வாழ்க்கையில் பிறந்தநாளே கொண்டாடக் கூடாதுன்னு அன்னைக்கே சரியா கண்ணை மூடிட்டார்". என் அப்பா அவ்வளவு கல்நெஞ்சக்காரர் இல்லை. மகனின் பிறந்தநாளுக்கு மூன்று நாள் முன்பாகவே கண்ணை மூடியிருக்கிறார்.

* * * * * * * * * * * * * * *

ம்ம்ம்ம்.... இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.

நான் அம்மா பிள்ளை என்பார்கள். அப்பாவை விட அம்மாவை தான் அதிகம் எனக்கு பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவருக்கு கொள்ளி வைக்கும் போது அவர் மீதும் அம்மா அளவுக்கு பிரியம் எனக்குள் இருந்தது என்பது தெரிந்தது.

அவர் எனக்கு கண்டிப்பான அப்பாவாக இருந்ததில்லை. ஆனால் நான் கண்டிப்பான மகனாகவே இருந்திருக்கிறேன். இன்னமும் அவர் மீது அதிகமாக பிரியம் காட்டியிருக்கலாம் என்று இப்போது உணர்கிறேன்.

அவர் ஆசைப்பட்ட படியே வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். அது முடிவதற்குள்ளேயே அவசரப்பட்டு விட்டார். அவர் விருப்பப்பட்டபடி வீட்டுக்கு "குமரன் குடில்" என்று பெயர் வைக்க வேண்டும்.

(சென்ற 2007 ஆகஸ்ட்டில் எழுதிய பதிவு - இன்று என் அப்பாவின் நான்காவது நினைவுநாள்)

28 கருத்துகள்:

  1. ellorukkum appa kidappathillai.kidaiththaalum anbaana uravu amaivathillai.(appanthaandaa enakku ethiri-Gounda Mani)than makan nalla nilaikku vanthu perakkuzhanthaikalai konjum anubavam ellorukkum kidappathillai.intha pathivu kannil neerai varavazhaiththuvittathu.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா1:55 PM, ஆகஸ்ட் 20, 2011

    APPAVOO, AMMAVOO AVARGAL IRANDA PIRAGUTHAN ARUMAI THERIGIRADHU. INDHA PADIVU NEGILAVAITHU VITTADHU

    பதிலளிநீக்கு
  3. சுந்தர் ருவாண்டா2:05 PM, ஆகஸ்ட் 20, 2011

    யோவ்.... எதுக்குய்யா இப்படி பதிவெல்லாம் போட்டு மனசை அசைச்சு கண் கலங்க வைக்கிறீர்....

    \\ தொப்பை மீது ஏறிக் குதித்து விளையாடுவதும் உண்டு. அப்போது அப்பாவுக்கு வலித்திருக்கும் என்று இப்போது தெரிகிறது \\

    முகத்திலறைகிற மாதிரி, ஏதேதோ புரிகிறது....

    பதிலளிநீக்கு
  4. என்ன செய்வது தோழரே,

    இருக்கும் போது அருமை தெரிவது இல்லை, தெரியும் போது இருப்பது இல்லை. அதன் பிறகும் இருக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் நேசிப்பதை நாம் வெளிக்காட்டுவதும் இல்லை. கோபத்தை காட்டுவது போல அன்பை காட்ட நாம் கற்றுக் கொள்ளவே இல்லை.

    எந்த தவறுகளில் இருந்தும் பாடம் படிக்காமல் கழிகிறது வாழ்கை.

    பதிலளிநீக்கு
  5. படிக்கும் போதே மனசு கனக்குது பாஸ்,

    பதிலளிநீக்கு
  6. Appa is always very special.Now am also feeling to show my love in forecoming days.Thanks!!!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா9:00 PM, ஆகஸ்ட் 20, 2011

    குமரன் குடிலில் குதூகலம் நிலைத்திருக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா11:46 PM, ஆகஸ்ட் 20, 2011

    தாய், த‌ந்தையை இழ‌ப்ப‌து கொடுமையான‌து. அத்துய‌ரில் இருந்து மீள்வ‌து த‌ற்காலிகாம‌ன‌து என்ப‌தே இப்ப‌திவின் வெளிப்பாடு. இறை ந‌ம்பிக்கை உங்க‌ளுக்கு இல்லாவிடிலும், நான் இறைவ‌னை ந‌ம்புப‌வ‌ன் என்ப‌தால், எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னும், உங்க‌ள் த‌ந்தையாரும் உங்க‌ள் வாழ்வு சிற‌க்க‌ அருள் த‌ர‌ வேண்டுகிறேன். - கிருஷ்ண‌மூர்த்தி

    பதிலளிநீக்கு
  9. Very true. We realize the extent of love that we have for our dear ones, only after they pass away. I have always felt that talking kindly with our parents when they are alive would be much better than our doing yearly ceremonies for them.

    பதிலளிநீக்கு
  10. சீக்கிரமே வீடு கட்டி முடித்து அப்பாவின் ஆசையை பூர்த்திசெய்ய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அப்பா தான் நமக்கு முதல் ஹீரோ .எனக்கு மட்டும் இல்லை.

    பதிலளிநீக்கு
  12. அப்பாவின் நினைவுகளுடன், அன்பைக் காட்டிவிட்டீர்கள்!

    ஒரு நல்ல மனிதரின் குணாதசியங்களுடன் நீங்கள் வலம் வருவதுதான் அவருக்கு நீங்கள் காட்டிக்கொண்டிருக்கும் அன்பு!

    தோள் கொடுக்கிறேன் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  13. ஆத்திகம் , நாத்திகம் என்ற விளையாட்டை தாண்டி , குமரன் குடில் என அப்பாவுக்கு பிடித்த பெயர் வைத்தீர்களே . அதுதான் கிரேட் . எல்லாம் வல்ல இயற்கை அல்லது எல்லாம் வல்ல இறைவன் ஆசி அந்த இல்லத்துக்கு என்றும் இருக்கும்

    பதிலளிநீக்கு
  14. 2007ல் படிச்சாலும்..ஒவ்வொரு வருசமும் படிக்கிறேன். காரணம் என்னான்னு தெரியல. இன்னா’ பதிவு என்னோட தொகுப்புல இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. Usually I glance through your posts. But this post was special. I read it in full till the end including comments. Your father would have felt proud of you if he were alive today! Advance Birthday wishes to you. Pulikku piranthathu poonai aguma? Tomorrow my son would praise your son's post. Magan-thanthaikku Atrum Uthavi evan-thanthai ennotran kollenum sol magan than thanthaikku saiye vendiye kaimaru, evan thanthai evanai pere enna thavan saithano endru pirar sollum sollakum ashok chennai rajashokraj@yahoo.com

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா6:07 AM, ஆகஸ்ட் 22, 2011

    என் அப்பாவை நினைவுபடுத்திய ஆட்டோக்ராப் இந்த பதிவு. ஆகஸ்ட் 31 அவரது மறைவு நாள். என் குடும்பத்தில் நான் தான் கடைசியில் அவரைப் பார்த்தவன், என்னைப் பள்ளியில் இறக்கிவிட்டுப்போனவர் பின் வீடுதிரும்பவில்லை. வலிக்கும் நினைவுகள் .....

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா11:50 AM, ஆகஸ்ட் 22, 2011

    இழப்பின் வலி மனதை விட்டு ரொம்ப நாள் அகலுவதில்லை. உங்கள் பதிவு மனதை கனக்க செய்கிறது.

    surya

    பதிலளிநீக்கு
  18. அப்பாவின் ஆசையை சீக்கிரம் நிறைவேற்ற வாழ்த்துக்கள் அன்பரே,,,

    பதிலளிநீக்கு
  19. நல்ல பதிவு.
    Thanks,
    Kannan
    http://www.ezdrivingtest.com

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா4:25 PM, ஆகஸ்ட் 22, 2011

    2007 la eluthinathu //ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன் நடந்தது அது. நிறைந்த அமாவசை அன்று அக்குழந்தை பிறந்தது.//

    so, ippa 34 vayasu....

    பதிலளிநீக்கு
  21. i read this first last year or previous year and I felt the same when I read this now also..

    father-son relation is very special and I am glad I still have that relationship with my dad...

    i feel sad I am not able spend lot of time with my dad as I live abroad.. sometime we pay too much price for some little money and luxury!

    this post definitely helped me relive some good moment with my dad... thanks lucky!

    பதிலளிநீக்கு
  22. அருமையாகவும் நெஞ்சை வருடுவதாகவும் இருந்தது

    பதிலளிநீக்கு
  23. vungalin veru veru pathivugal moolam aththanaivithamaana nermaraiyaana vunarchikalaiyum eluppukireergal nanbarey, ippathivum atharku vithivilakkalla,enenum ippathi athaiyum thaandi ennal kalangavaithuvittathu,mulumaiyaana vaazhlvirkku vaazhlthukiren

    பதிலளிநீக்கு
  24. Only today, I read this post. Very touching...

    it was unfortunate that your father had to support another party.

    பதிலளிநீக்கு
  25. அருமையான பகிர்தலில் கூட நாசூக்காக உங்கள் திருவிளையாடலை நடத்தியிருக்கிறீர்களே..
    \\2001, ஜூன் 30 உலகெங்கும் வாழ்ந்த லட்சக்கணக்கான தமிழ் குடும்பங்கள் ஒப்பாரி வைத்த நாள். \\
    அவர் பண்ணுனது ஒரு காமெடின்னா நீங்க பண்றது அதவிட பெரிய காமெடி..
    Anyway belated birthday wishes...

    பதிலளிநீக்கு