24 அக்டோபர், 2013

புவியீர்ப்பு

இந்தியா, செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கல்யான்’ அனுப்பும் காலத்தில் வந்திருப்பதால் ‘கிராவிட்டி’ நமக்கும் முக்கியமான ஒரு படமாகிறது. விண்வெளியில் மனிதர்கள் குறித்த நிறைய படங்கள் வந்திருந்தாலும் யதார்த்தத்துக்கு மிகவும் நெருக்கமாக ‘கிராவிட்டி’ இருப்பதாக விண்வெளிக்கு சென்று வந்த அனுபவஸ்தர்கள் சிலிர்க்கிறார்கள்.

ஒரு விண்நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் பழுதினை சரிபார்க்க ஒரு குழு செல்கிறது. எதிர்பாராவிதமாக ஏற்படும் விபத்தால், குழுவினரில் பலர் உயிரிழக்கிறார்கள். கடைசியாக மிஞ்சிய பெண்ணால் மீண்டும் பூமிக்கு வரமுடிகிறதா என்பதை பரபரப்பான த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார்கள்.

காற்றோ, ஒலியோ இல்லாத சூனியவெளியில் நெக்குருகச் செய்யும் கதை என்பதுதான் படத்தின் ஐடியா. இருள், சூரியன், விண்கலங்கள், மிகக்குறைவான மனிதர்கள். பத்துக்கும் குறைவானவர்கள். படம் தொடங்கியதுமே எல்லோரும் காலி. மீதியிருக்கும் இருவரில் ஒருவரும் இடைவேளைக்கு முன்பே டிக்கெட் வாங்கிவிடுகிறார். இதை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமாக ஒன்றரை மணி நேரத்துக்கு படமெடுக்கும் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் இயக்குனர்.
ஹாலிவுட்டின் அஜீத் என்பதால் ஜார்ஜ் க்ளூனியின் பெயரை போஸ்டர்களில் பார்த்ததிலிருந்தே கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய தயாராக இருந்தனர் ரசிகர்கள். ஆனால் படம் முழுக்க சாண்ட்ரா புல்லாக்கின் ஷோ. ஹாலிவுட் இண்டிபெண்டண்ட் படங்களின் அரசி. அடுத்த வருடம் வந்தால் அம்மணிக்கு வயது ஐம்பதாம். ஸ்பீடில் கீனுரீவ்ஸோடு பஸ் ஓட்டிய அந்த கத்தி மூக்குப்பெண், கிராவிட்டியில் விண்கலத்தை ஓட்டுகிறார். புவியீர்ப்பைவிட இவரது விழியீர்ப்புதான் நம்மை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் பேரழகியாகவே இருக்கமுடியுமா என்பது இயற்கையின் இயல்பையே கேள்விக்குள்ளாக்கும் சமாச்சாரம். முன்பு ஒல்லிப்பிச்சானாக இருந்தவர் இப்போது செம்ம கட்டையாக ஃபார்ம் ஆகியிருக்கிறார். விண்வெளி உடைகளை கலைந்துவிட்டு, விண்கலத்துக்குள் சின்ன ஜட்டி, டைட்டான மேலாடையோடு அவர் நீந்துகிற காட்சிக்கு விடலைகள் காட்டுமிராண்டித்தனமாக விசில் அடிக்கிறார்கள். தமிழ் சமூகத்தின் இளைஞர்கள், ஐம்பது வயது ஆண்ட்டியைப் பார்த்து கிளர்ச்சியுறுகிய அபாக்கியமான அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சமகால தமிழ்ச்சூழலில் நிலவும் பாலியல் பாலைவன வறட்சியே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிற கோட்பாட்டு முடிவுக்கு கடைசியாக நாம் வரவேண்டியிருக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சி பிரசவத்துக்கு ஒப்பானது. சாண்ட்ரா தப்பித்து வரும் ‘கேப்ஸ்யூல்’ தாயின் கர்ப்பக்கிரகத்தை நினைவூட்டுகிறது. ஒரு ஏரியில் விழும் அந்த கேப்ஸ்யூலுக்குள் தண்ணீர்புகுந்து அவர் மூச்சுக்காக சிரமப்படுவது பனிக்குடம் உடைதலுக்கான ஒப்பீடு. ஏரிக்குள் நீந்தி தலையை வெளியே காட்டுவது முதன்முதலாக குழந்தை தலையை உலகத்துக்கு காட்டும் காட்சிக்கு இணையானது. தரைக்கு வந்ததுமே சாண்ட்ராவால் நடக்க முடியவில்லை. புவியீர்ப்பில்லாத விண்வெளியில் நீந்தி பழகியவர், முதல் அடியை எடுத்துவைக்கவே சிரமப்படுகிறார். குழந்தை முதன்முதலாக நடைபழகும் காட்சியோடு இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இப்படியெல்லாம் கூட ஒப்பிடுதல்கள் அவசியமில்லை. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டும் கூட படத்தைப் பார்த்தால் க்ளியரான ஸ்பேஸ் எண்டெர்டெயினர். மொழிப்பிரச்சினைக்கு வாய்ப்பேயில்லை. முழுக்க ஆங்கில சப்டைட்டிலோடுதான் படம் உருவாகியிருக்கிறது. இல்லாவிட்டால் ராக்கெட் சயின்ஸ் படித்த விஞ்ஞானிகள் மட்டுமே புரிந்துகொண்டிருக்க முடியும். 3டி உதவியோடு ஒன்றரைமணி நேர அசலான விண்வெளி அனுபவத்தை படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளரும் அனுபவிக்கிறார்கள். தயாரித்து, இயக்கி, எடிட்டிய அல்போன்ஸோவின் பாக்கெட்டில் இப்போதே ஒரு சில ஆஸ்கர்கள் விழுந்துவிட்டதாக எண்ணிக்கொள்ளலாம்.

12 அக்டோபர், 2013

தரிசனமும், மன எழுச்சியும்!

டிவி வந்த புதுசில் அதை யாரோ ஐரோப்பிய புண்ணியவான் ‘இடியட் பாக்ஸ்’ என்று விமர்சித்தாராம். நல்லவேளை அவர் இண்டர்நெட்டை பார்க்காமலேயே இறைவனடி போய் சேர்ந்துவிட்டார். அபத்தங்களும், முட்டாள்தனங்களும், அற்பவாதிகளும் நிறைந்த இடமாக இணையத்தை சமூக வலைத்தளங்கள் மாற்றி அமைத்திருக்கிறன. கட்டற்ற சுதந்திரம், வெளிப்படையான ஜனநாயகம் போன்ற உன்னதமான உருவாக்கங்களுக்கு வேறொரு முகமும் உண்டு. அதைதான் இப்போது எல்லோரும் ‘தரிசித்து’க் கொண்டிருக்கிறோம். லைக்குக்காக, ரீட்விட்டுக்காக, கமெண்டுக்காக கொலையும் செய்வார்களோ இவர்கள் என்று அஞ்சும் வண்ணம் இணையக் கலாச்சாரம் பரிணாமம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

வம்புக்கு இழுப்பது, வசைபாடுவது என்பதையெல்லாம் தாண்டி மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டியாக இமேஜ் பில்டப் செய்து, ஒரு திருட்டு வாழ்க்கையை ஒருவன் வாழ்வதற்கு சமூகவலைத்தளங்கள் வாய்ப்பளிக்கின்றன. போகிற போக்கில் டிராஃபிக் சிக்னலில் குழந்தை பிச்சையெடுப்பதை பார்த்த ஒரு காட்சியில் ‘படிமம்’ உருவாக்குகிறார்கள். மழை பொழியும் இரவில் ‘மனவெழுச்சி’ கொள்கிறார்கள். யாரோ ஒரு மூன்றாம்தர எழுத்தாளர் எழுதிய ஏதோ ஒரு பிட்டுக்கதையை வாசித்துவிட்டு ‘தரிசனம்’ அடைகிறார்கள். ஆண்மை எழுச்சிக்கு வழிகாட்டும் போஸ்டரை லேம்ப் போஸ்டில் ஒட்டுவது மாதிரி ஆகிவிட்டது ஃபேஸ்புக்கும், ட்விட்டரும், கூகிள்ப்ளஸ்ஸும்.

‘தரிசனம்’, ‘மனவெழுச்சி’ மாதிரி வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உண்டு. போகிற போக்கில் சப்பை மேட்டருக்கெல்லாம் இதை பயன்படுத்துகிறோமே என்று எந்த குற்றவுணர்ச்சியுமில்லை. ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு மனவெழுச்சியும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாழ்க்கைத் தரிசனமும் கிடைத்துவிடுகிறது. லட்சக்கணக்கானவர்களுக்கு சகட்டுமேனிக்கு இதெல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கிற இந்த போக்குக்காக ஜெமோக்களையும், எஸ்ராக்களையும்தான் சுட்டுத் தள்ள வேண்டும். எழுச்சியோ அல்லது தரிசனமோ கிடைக்க நமக்கு போதிமரம் கூட தேவையில்லாமல் போய்விட்டது. அப்படியாப்பட்ட கவுதம புத்தருக்கே வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் இந்த தரிசனமும், எழுச்சியும் கிடைத்தது. நம் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு சம்பவத்தின் போது எழுச்சியோ, தரிசனமோ கிடைத்தால் பரவாயில்லை. தினம் தினமா அமாவசை சோறு கிடைத்துக் கொண்டே இருக்கும்?

சாதாரணப் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படாத இம்மாதிரி வார்த்தைகளை வைத்து, இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரையை மாதிரி சப்பைக் கட்டுரையில் ஆங்காங்கே மானே, தேனே போட்டு தூவிவிட்டால் அதற்கொரு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடுவதாக எழுதிக் கொண்டிருக்கும் மொக்கைக்கு ஒரு காட்சிப்பிழை மூளையில் படிமமாகிவிடுகிறது. வாசிக்கும் மொக்கைகளும் அச்சொற்களின் உண்மையானப் பொருளுக்கான மதிப்பை உணராமல் அனிச்சையாக லைக் போட்டுவிட்டு, ‘அபாரமான எழுத்தாற்றல்’ என்று கமெண்டுபோட்டு உசுப்பேற்றி விடுகிறார்கள். எழுதுபவனும் மொக்கை, வாசிப்பவனும் மொக்கை எனும்போது கொஞ்சமாவது சூடு சொரணையோ, மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான அறிவோ, நாகரிகமோ பின்னுக்கு தள்ளப்பட்டு மலடான ஒரு அறிவுக்குருடு சமூகத்தை நம்மையறியாமலேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

பள்ளியில் படிக்கும்போது பாடம் புரியவில்லை என்றால் சந்தேகம் கேட்போம். இணையத்தில் எவனாவது எதையாவது சந்தேகமாக கேட்டு பார்த்திருக்கிறீர்களா? அவனவனுக்கு தெரிந்ததை பீற்றிக் கொள்ளவும், எவனாவது இளிச்சவாயன் மாட்டினால் முழம், முழமாக உபதேசிக்கவும்தான் தயாராக இருக்கிறோம். புரியாமல் பேசுபவனை சமூகத்தில் உளறுவாயன் என்போம். மெய்நிகர் உலகமான இணையத்திலோ அவ்வாறு உளறிவைப்பவனை அறிவுஜீவி என்கிறோம். அவன் பேசுவது நமக்கு புரிகிறதா புரியவில்லையா என்பதெல்லாம் அடுத்தப் பிரச்சினை. ஏதோ ஒன்றினை புரியவில்லை என்று ஒப்புக்கொள்வதே நமக்கு பெரிய கவுரவ இழப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அறிவுப் பகிரல் எப்படி சாத்தியமாகும்?

பாவனைகளால் நிறைந்திருக்கிறது இணைய உலகம். நான் இதையெல்லாம் படிக்கிறேன். நான் இதையெல்லாம் பார்க்கிறேன் என்று உட்டாலக்கடியாக நம் இமேஜை ஏற்றிக் கொள்வதிலேயே நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவையும் செலவிடுகிறோம். ஸ்டான்லி க்யூப்ரிக்கின் ஒரு படத்தைக்கூட பார்க்காதவன் என்ன முட்டாளா. ஒரான் பாமுக்கை படிக்காதவன் எல்லாம் தற்குறியா. இம்மாதிரி டப்பென்று ‘நேம் டிராப்பிங்’ செய்துவிட்டால் போதும். பெரிய இண்டெலெக்சுவல் போலிருக்கே என்று இணையம் மூக்கின் மேல் விரல்வைக்கும். நியாயமாகப் பார்த்தால் இந்த போக்குக்காக சுஜாதாவையும், சாருநிவேதிதாவையும் தூக்கில் போடவேண்டும்.

பாவனைகளாலேயே வாழ்பவன் முதலில் மற்றவர்களை ஈர்க்க கஷ்டப்பட்டு இம்மாதிரி பாவனை செய்யத் தொடங்குகிறான். மற்றவர்களாகவே சேர்ந்து அவனை பெரிய வாசிப்பாளி, அறிவாளி என்று இமேஜை உருவாக்கிக் கொள்கிறார்கள். பொய்யான அந்த தோற்றத்தை சுமந்தவன், ஒரு கட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று நிஜமாகவே நம்ப ஆரம்பித்துவிடுகிறான். உண்மையாகவே விஷயம் தெரிந்த ஒருவனிடம் அவன் உரையாடும்போது, வெறும் ஐந்து நிமிடத்திலேயே அவன் கஷ்டப்பட்டு கட்டி உருவாக்கிய கோட்டை பொடிப்பொடியாய் உதிர்கிறது. அப்போது உளவியல்பூர்வமாக தற்கொலை செய்துக் கொள்கிறான். வாழ்க்கை குறித்த நிஜமான ‘தரிசனம்’ ஒருவேளை அப்போது அவனுக்கு கிடைக்கலாம். தான் ஒரு முட்டாள் என்பதை ஒரு முட்டாள் உணரும் தருணம்தான் அவனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச ‘மனவெழுச்சி’யாக இருக்கக்கூடும்.

புத்திசாலியாக நடிப்பது ரொம்ப ஈஸி. ஆனால் நாம் நிஜமான நாமாகவே இருப்பதில் இருக்கும் சவுகர்யத்துக்கு இணையாக உலகில் வேறெதுவும் இல்லை.

maintaing innocence throughout the journey is the toughest task of the life

8 அக்டோபர், 2013

அத்தை வீட்டுக்கு என்ன வழி?

பட்டாசான மாஸ் ஹீரோவின் படத்துக்கு இப்படியா டைட்டில் வைப்பார்கள்.. தெலுங்கில் வைக்கிறார்களே? இந்த வருடத் தொடக்கத்தில் மகேஷ்பாபுவுக்கு ‘சீத்தம்மா வீட்டு வாசலில் சிறுமல்லி செடி’. இப்போது பவன் கல்யாணின் முறை. ‘அத்தை வீட்டுக்கு என்ன வழி?’

விசு, டி.பி.கஜேந்திரன், வி.சேகர் மாதிரி இயக்குனர்களின் இயக்கத்தில் ரஜினி, கமல் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும்? சிலருக்கு குமட்டலாம். ஹீரோவின் மாஸ், சப்ஜெக்டின் க்ளாஸ் என்று டோலிவுட் இந்த ட்ரெண்டில் அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் அடித்துக் கொண்டிருக்கிறது.

கப்பார் சிங்கில் தொடங்கியது பவன் கல்யாணுக்கு வசூல் மழை. அடுத்து ‘கேமிராமேன் கங்காதோ ராம்பாபு’. ஏழெட்டு ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வுகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த பவர்ஸ்டாருக்கு ‘ஹாட்ரிக் ஹிட்’ கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். பொறுப்பை ஒட்டுமொத்தமாக இயக்குனர் த்ரிவிக்ரத்திடம் ஒப்படைத்துவிட்டார்.
த்ரிவிக்ரம் லேசுப்பட்ட ஆளில்லை. சிறந்த வசனகர்த்தாவுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை ஐந்து முறை வாங்கியவர். அணு இயற்பியலில் தங்கமெடல் வாங்கியவர் என்றாலும் சினிமாத்துறையில்தான் ஈடுபட விருப்பம் கொண்டிருந்தார். ஆந்திராவின் காமெடிப் புயலான சுனிலின் கல்லூரித் தோழர் (அவருக்கும் இவருக்கும் கல்யாணம் கூட ஒரே நாளில்தான் நடந்தது). சுனில் மூலமாக டோலிவுட்டில் தொடர்புகள் ஏற்பட உதவி இயக்குனராக ஆனார். இவரது எழுத்துத் திறமையை கண்டுகொண்ட இயக்குனர் விஜயபாஸ்கர் வசனம் எழுதும் பொறுப்பை கொடுத்தார். இவர் வசனம் எழுதிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற, இயக்குனர் வாய்ப்பு கதவைத் தட்டியது. முதல் படமான ‘நுவ்வே நுவ்வே’ மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹிட். படம் பார்த்த மகேஷ்பாபுவுக்கு இவரோடு பணியாற்ற ஆசை. மகேஷ்பாபு – த்ரிவிக்ரம் காம்பினேஷனில் வந்த ‘அத்தடு’ டோலிவுட்டின் எவர்க்ரீன் மூவி. தமிழ், மலையாளம், இந்தியில் எல்லாம் டப் ஆகி ‘டப்பு’ பார்த்தது போக, போலிஷ் மொழியிலும் போலந்தில் வெளியானது. இப்படத்தின் காட்சி ஒன்று பிற்பாடு அப்படியே சுடப்பட்டு, ஹாலிவுட் படமான ‘தி இண்டர்நேஷனலில்’ வந்தது. பொதுவாக ஹாலிவுட் படங்களைதான் நம்மாட்கள் சுடுவார்கள். மாறாக த்ரிவிக்ரம் உருவாக்கிய காட்சியை ஹாலிவுட்காரர்கள் சுட்டிருக்கிறார்கள் என்றால் இவரது திறமையை உணர்ந்துக் கொள்ளலாம். டோலிவுட்டை ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாற்றவேண்டும் என்கிற கனவோடு உழைக்கும் மகேஷ்பாபுவுக்கு த்ரிவிக்ரத்தை பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை. மகேஷ்பாபு நடித்த ’தம்ஸ் அப்’ டெலிவிஷன் கமர்சியலை இயக்கியதும் கூட இவர்தான். ராம்சரண் தேஜா மற்றும் தோனி தோன்றும் பெப்ஸி விளம்பரம், விராத்கோலி மற்றும் தமன்னாவின் செல்கான் விளம்பரம் எல்லாம் இவரது கைவண்ணம்தான்.

அடுத்து பவன் கல்யாணுக்கு ‘ஜல்சா’. ஹிட்டே இல்லாமல் ஈயடித்துக் கொண்டிருந்த பவனுக்கு பம்பர்ஹிட்டாக அமைந்த படம். போக்கிரிக்கு பிறகு அதை மிஞ்சும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டுமென்று மகேஷ்பாபுவுக்கு ஆசை வந்ததும், த்ரிவிக்ரத்தைதான் அணுகினார். ‘கலேஜா’, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட படம் ஓபனிங்கில் பின்னி பெடல் எடுத்தாலும், மட்டமான படமென்று விமர்சிக்கப்பட்டு சீக்கிரமே பெட்டிக்குள் முடங்கியது. “கொஞ்சம் அசட்டையா இருந்தாலும் ஊத்திக்கும் போலிருக்கே?” என்று சட்டென்று ஃபார்முக்கு வந்து ‘ஜுலாயி’ என்கிற சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தார். ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’ இயக்குனராக த்ரிவிக்ரமுக்கு ஆறாவது படம்.

கப்பார் சிங்கின் ஃபீலிங்கை அப்படியே ரசிகர்களுக்கு தக்க வைக்க வேண்டும். அதே நேரத்தில் ‘சீத்தம்மா’ மாதிரியான குடும்பக்கதையிலும் பவர் ஸ்டாரை நிலைநிறுத்த வேண்டும். இம்முறை ஒவ்வொரு காட்சியை எழுதும்போதும் த்ரிவிக்ரத்தின் பேனா ஒன்றுக்கு பத்துமுறை யோசித்தது. கப்பார்சிங்கில் ரசிகர்களை சிலிர்க்கவைத்த, சிந்திக்கவைத்த, சிரிக்கவைத்த காட்சிகளுக்கு மாற்றுக்காட்சிகளை அதே உணர்வுகளோடு எழுதினார். மனசுக்குள் நெடுநாட்களாக புதைத்து வைத்திருந்த உருகவைக்கும், கண்களை குளமாக்கும் குடும்பக் கதைக்குள் கச்சிதமான இடங்களில் அதை செருகினார். அவ்வளவுதான். இப்போது தெலுங்கானாவும், சீமாந்திராவும் தங்கள் அரசியல் மாச்சரியங்களை மறந்து ஒன்றுசேர்ந்து த்ரிவிக்ரத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து நடக்கும் போராட்டங்களால் திருப்பதி பிரம்மோற்சவத்துக்கே கூட்டமில்லை என்று ஊடகங்கள் அலறினாலும் தியேட்டர்களில் மட்டும் திருவிழாக்கோலம்.

‘அத்தாரிண்டிக்கி’ கதை ரொம்ப சிம்பிள்.

எண்பதைத் தொட்ட தாத்தா. காதல் கல்யாணம் செய்துகொண்டதால் மகளை துரத்தியடித்தவர். பின்னர் மனம் வருந்தி கடைசிக் காலத்திலாவது மகளோடு சேரவேண்டும் என்பதற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். பேரனின் உதவியை இதற்காக நாடுகிறார். தன்னுடைய அத்தையை எப்படி தாத்தாவோடு மீண்டும் பேரன் இணையவைக்கிறார் என்பதுதான் கதை. யூகித்திருப்பீர்களே.. அதேதான். செம சூப்பர் ஃபிகராக இருக்கும் அத்தை மகள் சமந்தாவை பவன் சைட் டிஷ்ஷாக வளைத்துப் போடுகிறார். சமந்தா பார்வைக்கு சின்னதாக இருந்தாலும் சிலுக்கென்றிருக்கிறார். சுபம்.

கதையை கேட்டால் நான்கு, ஐந்து கோடிகளில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே முடித்திருக்கலாமே என்றுதான் தோன்றும். ஆனால் வாங்கியிருப்பது பவன் கல்யாணின் கால்ஷீட் ஆயிற்றே. எனவே கிளாஸோடு மாஸ்ஸையும் மிக்ஸ் பண்ணி காக்டெயிலாக கலந்துக் கொடுத்து போதையாக்குகிறார்கள். “புல்லட் அரை அங்குலம்தான். அதுவே ஆறடி உசர மனுஷனை சாய்ச்சிடும். அந்த புல்லட்டே ஆறடி உசரத்துலே இருந்தா...” என்று தாத்தா (பொம்மன் இரானி) ‘இண்ட்ரோ’ கொடுக்க, பேரன் பவன் கல்யாண் ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமாகும் ஆக்‌ஷன் காட்சிக்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவாம்.
பவனுக்கு அழகான அத்தை. நதியா. அத்தைக்கு அழகான இரண்டு பெண்கள் பிரணிதா, சமந்தா. பிரணிதா ஜோடியில்லை என்றாலும் ஒரு ஜில்பான்ஸான டூயட் பாடுகிறார் பவன். தெலுங்கு சம்பிரதாயத்தின் படி சமந்தாவுடன் ஒரு டூயட், குத்து என்று கும்மாளம்தான். ‘ஆறடி புல்லட்’ ஓபனிங் சாங்கில் தொடங்கி படம் நெடுக தேவிஸ்ரீபிரசாத்தின் இசைவெள்ளம் தாறுமாறாய் ஓடுகிறது. குறிப்பாக கப்பார்சிங்கின் ஃபேபுலஸ் ஹிட்டான ‘கேவ்வூ கேக்கா’ ஐட்டம் சாங்கை, அட்டகாசமான பஜனையாக ரீமேக்கியிருக்கிறார். அதற்கு பவன் போடும் குத்தாட்டமெல்லாம் அநியாயத்துக்கு ஆடம்பரம். ஒரு கிளப் டேன்ஸில் செம ஜில்பான்ஸான ஆண்ட்டியான மும்தாஜ், பவனை பார்த்து கேட்கிறார். “நாம இதுக்கு முன்னாடி எப்பவாவது பார்த்திருக்கோமா?” தியேட்டரே ‘குஷி, குஷி’ என்று ஆர்ப்பரிக்கிறது.

இரண்டாம் பாதியில் கதையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு பிரும்மானந்தத்தை வைத்து நான்கைந்து வெர்ஷனில் ‘அகலிகை’ நாடகம் நடத்துகிறார்கள். வயிற்றைப் பிடித்துக்கொண்டு முன்சீட்டில் தலையை இடித்துக்கொண்டு இடியென விழுந்து, விழுந்து சிரிக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ஒரே ஒரு ஃப்ரேம் கூட போர் அடிக்காதவகையில் பர்ஃபெக்டான செய்நேர்த்தி.

மாஸ் மகாராஜா ரவிதேஜாவின் ‘பலுபு’ புதுசாக ஒரு ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறது. இனிமேல் இது தமிழ், இந்தி என்று தேசியமயமாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். கொடூரமான இரத்த வெறியாட்டம் நடத்திக்கொண்டிருந்த இந்திய ஆக்‌ஷன் சினிமா இனி க்ளைமேக்ஸில் காமெடிப் பந்துகளை உருட்டியே ஆகவேண்டும் என்பதுதான் அந்த ட்ரெண்ட். ‘அத்தாரிக்கி’ அதை அப்படியே கேட்ச் செய்துக்கொண்டது. பவர்ஸ்டாரை அடிக்க இறுதிக்காட்சியில் ஒரு ஊரே கிளம்பி வருகிறது. அவர் ஒரே ஒருவனைதான் போட்டு நையப்புடைக்கிறார். அவன் வாங்கும் அடியைக் கண்டு, அடிக்க வந்தவர்கள் ‘டர்’ராகி அப்படி, அப்படியே செட்டில் ஆகிறார்கள். பீட்டர்ஹெய்ன் அமைத்திருக்கும் இந்த சண்டைக்காட்சி ஆக்‌ஷன் காட்சிகளின் எண்டெர்டெயின்மெண்ட் லெவலை பலபடிகள் முன்னேற்றியிருக்கிறது.

கடைசியில் ஒரே ஒரு ட்விஸ்ட் ஒட்டுமொத்தப் படத்தையும் அஸ்திவாரமாக தாங்கி நிற்கிறது. ‘அத்தாரிண்டிக்கி’ நூறுகோடி எல்லையை அனாயசமாக தாண்ட, இந்த ‘ட்விஸ்ட்’தான் அடிப்படையான காரணம். த்ரிவிக்ரம் எவ்வளவு சிறப்பான சினிமா எழுத்தாளர் என்பதற்கும் இதுதான் சிறந்த உதாரணம்.

அத்தாரிண்டிக்கி தாரேதி - அன்லிமிட்டெட் மீல்ஸ்

5 அக்டோபர், 2013

பசைவாளி தூக்கும் படைப்பாளி!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வெளியான அன்று சாந்தி தியேட்டரில் மாலைக்காட்சியை நண்பர்களோடு பார்த்தோம். திருப்தி தருமளவுக்கு ஓரளவு சுமாரான கூட்டம்தான். படம் முடிந்ததும் டைட்டில் ஓட தொடங்குகிறது. அரங்கில் அப்படியொரு நிசப்தம். அவசரமாக 23-சி பஸ்ஸை பிடிக்க வேண்டியவர்கள் எல்லாம் மவுனமாக அதே நேரம் நிதானமாக கிளம்புகிறார்கள். ஆனால் ஒரு ஐம்பது பேர் அப்படியே திரையைப் பார்த்துக்கொண்டு சிலையாக நிற்கிறார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மெதுவாக ஓடுகிறது. இரண்டரை மூன்று நிமிடம் கழித்து ‘இணை இயக்கம் : புவனேஷ்’, ‘எழுத்து இயக்கம் : மிஷ்கின்’ என்று திரையில் ஒளிர்ந்ததும் ஐம்பது பேரும் கைத்தட்டி, ஆரவாரம் செய்கிறார்கள். படம் முடிந்ததுமே அடித்துப் பிடித்து ஓடும் தமிழ் பாரம்பரிய பழக்க வழக்கத்தினை கைவிட்டு, ஓர் இயக்குனரின் பெயரை பார்ப்பதற்காக கூட்டம் அப்படியே மூன்று நிமிடங்களுக்கு நின்றுகொண்டிருக்கும் காட்சியை என் வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன்.

பொதுவாக கமல்ஹாசன் ஒரு கறாரான விமர்சகர். அவ்வளவு சுலபமாக ஒரு இயக்குனரையோ, படத்தையோ பாராட்டிவிட மாட்டார். அப்படிப்பட்டவரே மனந்திறந்து ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ படத்தை பாராட்டியதோடு, மிஷ்கினின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று ஆசைப்படுவதாக சொல்கிறார். மகத்தான நடிகனான கமலை இயக்க முடியுமாவென்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் எல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அந்த நடிகரே ஓர் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறப்பான விஷயம்?

ஹீரோக்களின் ஓன் பிட்ச்சான தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் போன்றவர்கள் இயக்கத்துக்கான மரியாதையை ஏற்படுத்தினார்கள். நம் காலத்தில் மிஷ்கின் அந்தப் பணியை தொடர்கிறார்.

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி எனக்கு பிடிக்கவில்லை. அஞ்சாதே அவ்வளவாக அசத்தவில்லை. ஏனெனில் அவரது திரைமொழி தமிழுக்கு புதிது. அந்த மொழியை புரிந்துக்கொள்ள இரண்டு படங்கள் தேவைப்பட்டது. ‘யுத்தம் செய்’ வந்தபோது அசந்துப் போனேன். ‘நந்தலாலா’ பிரமிப்பில் ஆழ்த்தியது. ‘முகமூடி’ அவ்வளவு மோசமான படமில்லை என்பது என் அபிப்ராயம். ஒரு சூப்பர் ஹீரோவை தமிழுக்கு உருவாக்கும் கனவு இன்னமும் முழுமை பெறவில்லை (யதேச்சையாக துரைசிங்கம் அமைந்திருக்கிறார்). முகமூடி மூலமாக அந்த டிரெண்டை முயற்சித்தார் மிஷ்கின்.

மிஷ்கினுக்கு காமிக்ஸ் வாசிப்பு உண்டு. அதன் தாக்கம்தான் அவர் வைக்கும் ஃப்ரேம்கள். கொரிய/ஜப்பானிய படங்களில் சாயல் மிஷ்கினின் படங்களில் இருக்கிறது என்பது தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனமாகவே வைக்கப்படுகிறது. கொரிய/ஜப்பானிய இயக்குனர்கள் முழுக்கவே காமிக்ஸ் தாக்கம் கொண்டவர்கள். தமிழில் அரிதாக மிஸ்கின், சிம்புதேவன், பிரதாப் போத்தன், கமல்ஹாசன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களுக்கே காமிக்ஸ் அறிமுகம் இருப்பதால், இவர்களது படங்களின் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய வழக்கத்தை மீறியதாக இருக்கிறது. மிஷ்கினுக்கு காமிக்ஸின் பாதிப்பு மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம்.

மற்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு காட்சி இப்படி ஆரம்பிக்கும். தெருவை ஒரு லாங்ஷாட் காட்டுவார்கள். வீட்டை ஒரு குளோசப் அடிப்பார்கள். வரவேற்பரையில் கணவனும், மனைவி அமர்ந்திருப்பதை மிட்ஷாட்டில் காட்டி குளோசப்புக்கு போவார்கள். மிஷ்கினின் படத்தில் நேரடியாகவே வரவேற்பறைதான். பொது இடங்களில் சர்வைலென்ஸ் கேமிராக்கள் நம்மை எந்த ஆங்கிளில் பார்க்கிறதோ, அதே ஆங்கிளைதான் மிஷ்கின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் காணமுடிகிறது. இது காமிக்ஸ் வாசிப்பு தரக்கூடிய தாக்கம். ஏ/4 அளவுள்ள தாளில், ஒரு பக்கத்துக்கு ஆறு அல்லது எட்டு கட்டங்களில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமிக்ஸ் ஓவியர்கள், இப்படித்தான் ஆங்கிள் வைப்பார்கள்.

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை இணைய விமர்சனங்களிலும் (99% பாஸிட்டிவ் ரிவ்யூ என்பதே சாதனைதான்), ஊடகங்களின் விமர்சனங்களிலும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு இண்டெலெக்ச்சுவல் இயக்குனருக்கு எப்போதுமே தன்னுடைய ரசிகன் மீது நம்பிக்கை இருக்காது. ‘அவனுக்கு புரியுமோ, புரியாதோ தெரியலை’ என்று நினைத்துக்கொண்டு அபாரமான காட்சிகளை எல்லாம் மீண்டும் வசனத்தில் டிரான்ஸ்லேட் செய்து, ஸ்ஃபூன் ஃபீடிங் செய்வார்கள். குறிப்பாக கமலஹாசன் இதில் கில்லாடி. முப்பது வருடங்களாக எதையாவது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவருக்கு ரசிகர்களின் ரசனைத்தரத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை.

மிஷ்கின் ரசிகர்களின் தலையில் மொத்த பாரத்தையும் போட்டு விடுகிறார். படம் எடுக்கற நமக்கே புரியுது, ரசிகனுக்கு புரியாதா என்று சுலபமாக இப்பிரச்சினையை கடந்து செல்கிறார். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் கதை சொல்லும் மரபை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அட்டகாசமாக அடித்து உடைத்திருக்கிறது.

கொசுவர்த்தி சுருளை சுற்றி ஃப்ளாஷ்பேக் சொன்னது ஒரு காலம். பின்னர் டைட்டிலுக்கு முன்பாக மாண்டேஜ் காட்சிகளாக ஹீரோவின் சின்ன வயசு கதையை சொல்வார்கள், சைக்கிள் வீல் சுற்றிக் கொண்டிருக்கும்போதே ஹீரோ பெரியவனாகி விடுவார். ஏதோ ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், இன்னொரு பாத்திரத்தின் கதையை ஃப்ளாஷ்பேக்காக பக்கத்தில் நின்று பார்த்தது மாதிரி சொல்லும். கவுதம் மேனனின் ‘காக்க காக்க’ சிங்குலர் நரேஷனில் ஃப்ளாஷ்பேக் சொன்னது. ஓநாய் சொல்லும் ஃப்ளாஷ்பேக் ரொம்பப் புதுசு. ஃப்ளாஷ்பேக்கில் நடந்ததை காட்டாமல், அதே நேரம் கதை கேட்கும் குழந்தைக்கும் புரியும் வண்ணம் (படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாதா?) மூன்று, மூன்றரை நிமிடத்தில் கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய காட்சிகளை சொல்கிறார்.
மாற்றுப்படமென்றெல்லாம் பம்மாத்து காட்டாமல் க்ளீன் த்ரில்லர் எண்டெர்டெயினராகதான் மகத்தான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் மிஷ்கின். பார்த்த எல்லோருமே நல்ல படம் என்று பாராட்டினாலும், போதுமான திரையரங்குகளில் வெளியாகவில்லை.. வெளியான திரையரங்கங்களிலும் அரங்கு நிறைந்து ஓடவில்லையென்று நிலைமை. பிட்டு படமெடுத்தவனெல்லாம் கூட படைப்பாளி என்று மார்தட்டிக் கொள்கிற சூழலில், நிஜமாகவே நல்ல படைப்பைக் கொடுத்த படைப்பாளியான மிஷ்கின், தன் படைப்புக்காக ஊர் ஊராகப் போய் பசைவாளி ஏந்தி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். போஸ்டர் ஒட்டுவதால் மிஷ்கின் கேவலமாகி விடவில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பாளியை போஸ்டர் ஒட்டவைத்த நம் சமூகம்தான் கேவலப்பட்டு நிற்கிறது. மிஷ்கின் போஸ்டர் ஒட்டுவது ஸ்டண்ட் என்றெல்லாம் கூட விமர்சிக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? அதுவும் ஓர் கவன ஈர்ப்புதான். பிளாட்ஃபாரக் கடையில் கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரியின் நிலைமைக்கு ஒரு கிரியேட்டரை தள்ளிவிட்ட நாம்தான் வேதனைப்பட வேண்டும்.

பாவத்துக்கு பிராயச்சித்தமாக சினிமா ரசிகர்கள் சிலர் இணைந்து, சென்னையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்கு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிஷ்கினுக்கு பாராட்டு விழாவோ அல்லது படத்துக்கு வெற்றிவிழா(!)வோ அல்ல. பேசப்பட வேண்டிய ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கான ஏற்பாடு.
படம் பார்த்திருக்க வேண்டுமென்று கூட அவசியமில்லை. நிகழ்வில் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டுக் கூட படத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வரலாம்.

3 அக்டோபர், 2013

எங்கே போகிறது தமிழ் சினிமா?

அண்மைக்காலமாக வெளிவருகிற திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றும் இளைஞன் எப்படிச் சித்தரிக்கப்படுகிறான்?

பொழுது விடிந்ததுமே குடிப்பவனாக (சூது கவ்வும்)

கும்பலாக உட்கார்ந்து குடிப்பவனாக (மூடர் கூடம்)

வேலை வெட்டி இல்லாமல், அதைத் தேடும் முயற்சி கூட இல்லாமல், பெண்களைத் துரத்திக்கொண்டு அலைபவனாக (கேடி ரங்கா கில்லாடி பில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆள் கடத்துபவனாக (மங்காத்தா, ‘சூது கவ்வும்)

தன் தீய வழக்கங்களைத் திருத்த முயலும் பெற்றோர்களை ஒருமையில் பேசி அவமதிப்பவனாக (தீயா வேலை செய்யணும் குமாரு)

இப்படித்தான் நம் தமிழக இளைஞர்கள் குடிகாரர்களாக, பொறுக்கிகளாக, பொறுப்பில்லாதவர்களாக, பெண்கள் பின்னால் அலைபவர்களாக, அதற்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளும் சோரணையற்றவர்களாக இருக்கிறார்களா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

பாத்திரங்கள் மட்டுமல்ல, அண்மைக்கால சினிமாக்களின் கதைக் கருக்கள் என்ன?

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு முன்பாக திரைக்கு வந்தது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும் வேலையை, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ செய்திருக்கிறது.

தர்மபுரியில் தொடங்கி மரக்காணம் வரை என்னென்ன நடந்தன என்பது நாடறிந்த செய்தி. கௌரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் சமீபமாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கவலைக்குரிய இந்த விஷயத்தை பகடி செய்து பார்க்கிறது படம்.

வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது காதல் எதுவும் இல்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ பாணியில் உடையணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கௌரவத்துக்காக தன் பெண்ணைக் கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜின் பாத்திரம் அறிமுகப்படுத்தப் படுகிறது. ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை அவர் கௌரவமாகக் கருதுகிறார்.

படத்தில் சத்யராஜ் ஏற்றுள்ள பாத்திரம் என்ன ஜாதியாக சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில் பொட்டு. திண்டுக்கல் - பழனி வட்டாரக் கிராமம் என்றெல்லாம் நிறைய க்ளூ இருக்கிறது. ஹீரோவின் ஜாதி என்னவாக இருக்கும் என்பதற்கும் க்ளு இருக்கிறது. அவரது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக - குடிசையாக இருக்கிறது. நெற்றியில் பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.

இப்படத்தில் காட்டப்படுவதுதான் தமிழ்நாடா? காதல் திருமணங்கள் குறித்து பிரச்சினை எழுப்பும் சில அரசியல் கட்சி சொல்லிவரும் குற்றச் சாட்டுக்களில் சில...

பணக்கார / பெரிய இடத்துப் பெண்களாகப் பார்த்துக் காதலிக்கிறார்கள். பிற்பாடு,பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான காதல் அல்ல. நாடகக் காதல்.

ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.

மைனர் பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்.

இப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின் பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.

தர்மபுரி காதல் கலவரம் சமீபத்தில் நிகழ்ந்து இன்னமும் ரத்தக்கறை கூட காயாத நிலையில் காதலையும், கௌரவக் கொலைகளையும் பகடியாகப் பார்த்திருக்கிறது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
வேண்டுமென்றேதான் பகடி செய்தேன். காதலுக்கு ஜாதி/வர்க்கத்தால் எதிர்ப்பு, அதன் காரணமாக கௌரவக் கொலை என்பதெல்லாம் படுமோசமான முட்டாள்தனம். அதைப் பகடி செய்து படமெடுத்திருப்பதும், அத்தீமையை எதிர்ப்பதன் ஒரு வடிவம்தான்" என்கிறார், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குநரான பொன்ராம்.

‘சூது கவ்வும்’ படத்தில் ஓர் அரசியல்வாதி நேர்மையாக இருப்பது தவறு என்பதைப் போல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மாட்டிக் கொள்ளாமல் ஆள் கடத்துவது எப்படி என்று இளைஞர்களுக்கு வகுப்பெடுக்கப்படுகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சித்தரிக்கப்பட்ட இளைஞர்களைப் பாருங்கள். பள்ளிப் பெண்ணைக் கூட துரத்தித் துரத்தி, ‘ஈவ் டீஸிங்’ செய்யும் இளைஞராக பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்திருந்தார். வேலை வெட்டி இல்லாத மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ஈர்ப்பதற்காக, ‘தில்லாலங்கடி’ வேலைகள் செய்கிறார்கள். பல் விளக்குவதைப்போல இயல்பாக தண்ணி அடிக்கிறார்கள். கலாட்டா செய்கிறார்கள். தொடர்ச்சியாக, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, நேற்றைய, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று இந்த போதை இளைஞர்கள்தான் இன்று ஹீரோக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால் இப்படி போதை இளைஞனாக, பொறுக்கியாக இருப்பதுதான் ஹீரோவின் அடையாளம் என இளைஞர்கள் மனதில் பதிந்து போகாதா?
எல்லா ஊரிலும் இருப்பதைப் போல இளைஞர்களில் ரவுடிகளும், பொறுக்கிகளும் நம்மூரிலும் இருக்கிறார்கள். ஆனால் அதுவே பெரும்பான்மை குணம் கிடையாது. பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த படங்களே வருகின்றன. கற்பனை வறட்சி, புதியவற்றை முயற்சிக்கத் தயங்கும் வணிக அழுத்தம் காரணமாக மசாலாப் படங்களில் மட்டுமல்ல, கலைப்படங்களிலும் கூட மிகையாக சித்தரிக்கப்படும் பாத்திரங்களும், காட்சிகளும் இடம்பெறுகின்றன" என்கிறார், திரையார்வலரும், கவிஞருமான சரவண கார்த்திகேயன்.

மது அருந்துவது, புகை பிடிப்பது, சைட் அடிப்பது, அடாவடியாகக் காதலிப்பது, துரத்தித் துரத்தி யாரையோ அடிப்பது, உதைப்பது, வெட்டுவது... இப்படியாகத்தான் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் இளைஞன் சித்தரிக்கப்படுகிறான் அல்லது அரசியல்வாதியாக ஆசைப்படுபவன் வாக்காளர் பட்டியலில் தன் பெயரைப் பதிந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாத படுமுட்டாளாக இருக்கிறான்.

சினிமாவில் சித்தரிக்கப்படும் இதே இளைஞன்தான் சமூகத்திலும் இருக்கிறானா? அநேகமாக அரசியல் கட்சிகள் கைவிட்டுவிட்ட நேரத்தில் ஈழப் பிரச்சினைகாகத் தெருவில் இறங்கித் தமிழக மாணவர்கள் போராடியது நெடுங்காலத்திற்கு முன் அல்ல. ஊழல் குறித்து அன்னா ஹசாரேவின் அழைப்பைத் தொடர்ந்து எழுந்த அலையில் இளைஞர்களின் பங்கு கணிசமானது. பாலியல் வன்முறைகளை எதிர்த்து அவர்கள் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தங்கள் கனவுகளைக் கைவிட்டு வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். உடன் பிறந்த சகோதரிகளது திருமணத்திற்காக கூடுதல் வேலைகள் செய்கிறவர்கள் இருக்கிறார்கள்.கடன் வாங்கியாவது படித்து முன்னேற வேண்டும் என்று வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்களில் இந்தியாவிலேயே தமிழ் நாட்டு மாணவர்கள்தான் முதலிடம். யதார்த்தம் இப்படி இருக்க... டாஸ்மாக் பாரில் மது போதையில் முடங்கிப் போனவனாக இளைஞர்களைச் சித்தரிப்பது ஏன்? இதற்குப் பின்னுள்ள நுண் அரசியல் என்ன?
இந்தப் போக்குக்கு படைப்பாளிகளை மட்டும் குறை சொல்லாதீர்கள்" என்கிறார் இயக்குநர் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள் என்று வித்தியாசமான கதைகளைச் சொல்ல முற்பட்ட இவர் கூட தமிழ் சினிமாவின் இந்த லேட்டஸ்ட் டிரெண்ட்டை நியாயப்படுத்திதான் பேசுகிறார்.

அரசு டாஸ்மாக்கை நடத்துகிறது எனும்போது, மது அருந்துவது சட்டப்பூர்வமாக சரி என்கிற மனநிலை நம் இளைஞனுக்கு ஏற்பட்டு விட்டது. சினிமா மட்டும் மாறவில்லை. டாஸ்மாக் கலாச்சாரத்தால் தமிழ் சமூகத்தின், ‘லைஃப் ஸ்டைல்’ மாறியிருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டே தமிழ் சினிமா இயக்குநர்கள் காட்சிகளை அமைக்கிறார்கள். அத்துடன், தான் எடுக்கும் சினிமா, தயாரிப்பாளருக்கு வணிகரீதியான வலுவையும் தரவேண்டும் என்றே ஒவ்வொரு இயக்குநருக்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது" என்கிறார் ராம்.

திரைப்படத்தின் உள்ளடக்கத்தை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு தணிக்கைக் குழுவிற்கு உண்டு. ஆனால் சில படங்களைப் பார்க்கும்போது தணிக்கைக் குழு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தீய பழக்கங்களைப் பெருமையாகச் சொல்லும் படங்களுக்கும், ஆபாசமான இரட்டை அர்த்தப் பொருள் பதிந்த வசனங்கள் நிறைந்த படங்களுக்கும் ‘யூ’சான்றிதழ் வழங்கப்படுகிறது, சமீபத்தில் திரைக்கு வந்த, ‘ஆர்யா சூர்யா’ அப்படிப்பட்ட படம்தான்.
இது திரைப்படத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல, சமுதாயத்தின் வீழ்ச்சி. வலிமைமிக்க ஊடகமான சினிமாவை இன்றைக்கு எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்? கதாநாயகன் அணியும் கோட், கையில் கட்டியிருக்கும் வாட்ச், முகத்தில் அணிந்திருக்கும் கண்ணாடி மாதிரி கதாநாயகியையும், நாயகனின் விளையாட்டு பொம்மையாக சித்தரிக்கிறார்கள். எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ, அந்த நிலைக்கு இந்த சினிமா ஊடகம் வந்திருக்கிறதே... இந்திய சினிமா குறிப்பாக தமிழ் சினிமா என்கிற வருத்தமும் கோபமும் என்னைப்போல பலருக்கும் உண்டு" என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

ஆனால் இந்த அறிவுஜீவிகளின் கோபம் கையாலாகாத மலட்டுக் கோபம். பெரியார், ராஜாஜி, காந்தி போன்றவர்கள் வெளிப்படையாக சினிமாவை தீமை என விமர்சித்துப் பேசியதுண்டு. எம்.ஜி. ஆர். தன் படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளிலோ, மது அருந்துவது போன்ற காட்சிகளிலோ நடித்தது இல்லை. ஆனால் இன்றைய அரசியல்வாதிகளோ, அறிவுஜீவிகளோ ஏன் ஊடகங்களோ கூட இந்தச் சீரழிவைக் கண்டிப்பதில்லை. குறைந்தபட்சம் ஒரு விவாதத்தைக்கூட முன்னெடுப்பதில்லை. இவர்களில் பலர் சினிமாவால் ஆதாயம் பெறுகிறார்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம்.

அதனால் மக்கள், குறிப்பாக படித்த இளைஞர்கள், இந்தப் படங்கள் நம்மை இழிவுபடுத்துகின்றன என்பதைக்கூட உணர்ந்துகொள்ள இயலாதவர்களாக இந்தப் படங்களை விழுந்தடித்துக் கொண்டு போய்ப் பார்க்கிறார்கள்.சோஷியல் நெட்ஒர்க் புரட்சியாளர்கள், ‘நல்லாயிருக்கு. நாலு வாட்டி பார்க்கலாம்’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டைத் தண்ணி வறண்டு போகுமளவுக்கு டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், ரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி செய்து வந்திருக்கும் படைப்பை, ‘சூப்பர்’ என்று நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.

தெரியாமல்தான் கேட்கிறேன். தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு சொரணை என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா?

(நன்றி : புதிய தலைமுறை)