29 ஜனவரி, 2009

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

சென்னை புத்தகக்காட்சி நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் நண்பர்கள் தமிழ்பாரி, நரசிம், முரளிகண்ணன் ஆகியோரோடு அரங்குகளில் உலவிக்கொண்டிருந்தேன். 'பெண்ணே நீ' அரங்கில் அவர்களது பொங்கல் மலருக்கான போஸ்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த என் பெயரை நண்பர்களிடம் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த போது அங்கிருந்த இளைஞர்,

"ஆத்தர் காப்பி வாங்கிட்டீங்கள்லே?" என்றார்.

"முதல் நாளே வாங்கிட்டேன் பாஸ்"

"உங்க நண்பரோட போட்டோவெல்லாம் வந்திருக்கு. நீங்களும் ஆளுக்கொரு புக் வாங்கலாமில்லே?" என்று சிரித்துக் கொண்டே நரசிம்மிடம் கேட்டார்.

அவர் முத்துக்குமார்.

தென் மாவட்ட இளைஞர்களுக்கு உணர்வு அதிகம். சாதாரணமாகப் பேசும்போதே இதுபோல செண்டிமெண்டலாக தான் பேசுவார்கள்.

'ஆட்டோ டிரைவர்' என்று ஏதாவது கட்டுரையில் எழுதியிருந்தோமானால் 'தானி ஓட்டுநர்' என்று அனிச்சையாகவே தட்டச்சிடுவார் முத்துக்குமார். சில மாதங்களுக்கு முன்பாக தான் ஒரு நாளிதழிலிருந்து வெளியேறி பெண்ணே நீ அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தார்.

கடந்த வாரம் பெண்ணே நீ அலுவலகத்துக்கு சென்றபோது கூட முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அவர் கூகிளில் தேடிப்பார்க்கும் விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நான் சென்றபோது நீருக்கடியில் சுவாசிப்பதற்கான நவீன கருவிகளின் படங்களை தேடிப் பார்த்துக் கொண்டிருந்தார். தேடல் மிக்க இளைஞர். தேவைக்கதிகமாக ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். சராசரி தோற்றம். சாதாரணமானவராக தெரிந்தவர் அசாதாரமான‌ தியாகத்தை செய்து தமிழின வரலாற்றில் தாளமுத்து நடராசன் போன்றவர்கள் வரிசையில் இடம்பெறப் போகிறார் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை.

உண‌ர்வாள‌ர்க‌ள் உயிரோடிருப்ப‌தே இன‌விடுத‌லைக்கு செய்யும் உப‌கார‌ம். உண‌ர்வாள‌ர்க‌ள் உயிர்மாண்டால் நாளை த‌மிழ்நில‌ம் ஓருயிர் மிஞ்சாது வெறும் சுடுகாடாக‌வே அறிய‌ப்ப‌டும். த‌மிழெதிரிக‌ள் ஒன்றுப‌ட்டு த‌மிழின‌ அழிப்புக்கு துணைபோய்க் கொண்டிருக்கும் நிலையில் இவ‌ர்க‌ளை அடையாள‌ங்காட்டி த‌னிமைப்ப‌டுத்த‌ வேண்டிய‌ நிலையிலிருக்கும் ந‌ம் த‌லைவ‌ர்க‌ள் அர‌சிய‌ல் மாறுபாடுக‌ளால் ஒருவ‌ரையொருவ‌ர் எதிர்த்து ம‌ல்லுக்க‌ட்டிக் கொண்டிருக்கிறார்க‌ள். த‌மிழெதிரிக‌ளுக்கு அடிவ‌ருடிக‌ளாக‌ செய‌ல்ப‌ட்டுக் கொண்டிருக்கிறார்க‌ள். த‌மிழெதிரிக‌ளை ம‌ட்டும‌ன்றி எதிரிக‌ளுக்கு துணை செல்லுப‌வ‌ர்க‌ளையும் துரோகிகளாக வரலாறு கட்டாயம் பதிவு செய்யும். முத்துக்குமார் உயிர்நீத்து நம் தலைவர்களுக்கு சொல்லியிருக்கும் பாடமிது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் தமிழினத்துக்கு கேடு

20 ஜனவரி, 2009

வில்லு ‍- பார்ப்பவனையெல்லாம் கொல்லு!


முன்பெல்லாம் சூப்பர் ஸ்டாரை ஃபாலோ செய்துக்கொண்டிருந்த இளையதளபதி இப்போது மக்கள் திலகம் பாணிக்கு மாறியிருக்கிறார். பின்னே சூப்பர் ஸ்டார் என்ன தமிழ்நாட்டின் முதல்வராகவா இருந்தார். 2021க்கு இன்னொரு முதல்வர் ரெடி. விஜய் மன்றக்கொடியோடு உன்னால் முடியும் என்ற வாசகத்தோடு தொடங்குகிறது படம். 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று டைட்டில் பாடுகிறது. ஒரு ஆயா எனக்கு பிடித்த ஹீரோ என்று எம்.ஜி.ஆரை சொல்லிவிட்டு அடுத்து விஜய்யை சொல்லும்போது தடாலடி ஓபனிங்.

எல்லாம் சரி. இந்த கும்மாளங்களில் காட்டிய கவனத்தை படத்தில் கொஞ்சமாவது இயக்குனர் காட்டியிருக்க வேண்டாமா? இப்படத்தைப் பார்ப்பவர்கள் குருவியே சூப்பர் படம் என்கிறார்கள். படத்தில் கதை என்ற ஒரு வஸ்து கடைசிவரைக்கும் தென்படவேயில்லை. குசேலனை விட ஒரு மோசமான படத்தை இனிமேல் பார்க்கமுடியுமா என்று தவித்திருந்த வேளையில் மாமருந்தாய் வந்து சேர்ந்திருக்கிறது வில்லு. பாடல்கள் மட்டும் ஹிட்டு. மீதியெல்லாம் கமர்கட்டு.

அழகிய தமிழ்மகன் மூலமாக சாய்மீராவின் சாம்ராஜ்யத்தை நிலைகுலைய வைத்தவர் விஜய். இப்போது அய்ங்கரனுக்கும் பலமாக ஆப்பு வைத்திருக்கிறார். அய்யோ பாவம். வடிவேலுவுக்கு நேரம் சரியில்லை. சிரிப்பு மூட்ட எவ்வளவோ மெனக்கெடுகிறார். சாரி பாஸ். வடிவேலு நிலைமையாவது பரவாயில்லை. நயன்தாரா நிலைமை ரொம்ப மோசம். அழகாக இருந்தும் என்ன பிரயோசனம்?

இந்த கோராமையில் விஜய் டபுள் ஆக்சன் வேறு. அப்பா விஜய்க்கு ஜோடி ரஞ்சிதா. கொடுமையோ கொடுமை. பிரபுதேவா பேசாமல் டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு போகலாம். எதற்கு டைரக்சன் கருமமெல்லாம்? கதையே இல்லாமல் துண்டு துண்டாக காட்சிகளை எடுத்து இரண்டரை மணி நேரத்துக்கு எடிட் செய்துவிட்டால் படமாகிவிடுமா?

இவ்வளவு கொடுமையிலும் விஜய் மட்டும் மிளிர்கிறார். அழகாக இருக்கிறார். ஆக்சனில் அனல் பறக்கிறது. ஆட்டத்தில் சுறுசுறுப்பு. நடிப்பில் விறுவிறுப்பு. க்ளைமேக்ஸில் பசித்த சிங்கத்தின் வெறியை கண்களில் கொண்டு வருகிறார். சண்டைக்காட்சிகளும், ஆகாய விமான ஆக்சனும் ஹாலிவுட் தரம்.

இளகிய மனம் படைத்தவர்களாக இருந்தாலும் சரி. இளகாத மனம் படைத்தவர்களாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் இந்த கருமாந்திரத்தைப் பார்த்துத் தொலைக்க வேண்டாம். 'வில்லு ‍- பார்ப்பவனையெல்லாம் கொல்லு' என்று முடிவெடுத்துவிட்டு படமெடுத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இரட்டை அர்த்த காமெடிகள் வேறு. த்தூ..

16 ஜனவரி, 2009

படிக்காதவன்


முன்பு எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் போன்ற கரம் மசாலா இயக்குனர்கள் தமிழில் இருந்தார்கள். ரஜினி, கமல் போன்றவர்களை முன்னணிக்கு கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள். இவர்களது வரிசையில் சுராஜையும் சேர்க்கலாம். காரம், புளி, உப்பு எல்லாவற்றையும் கலக்க வேண்டிய விதத்தில் கலக்கி நன்றாக மசாலா அரைக்கிறார். படிக்காதவனிலும் குத்து குத்துவென பி அண்ட் சி குத்துவை அழுத்தமாக குத்தியிருக்கிறார்.

எந்த காலத்திலோ வந்த சிரஞ்சீவி படம் ஒன்றின் ரீமேக். தெலுங்கில் 'சூடவாலி'யோ என்னவோ பெயர் சொன்னார்கள். அதனாலோ என்னவோ படம் முழுக்க அக்மார்க் தெலுங்கு ரத்தவாசனை. தனுஷ் மாமனார் நடித்த படிக்காதவனுக்கும் இந்த படிக்காதவனுக்கும் எந்த ஸ்நான பிராப்தியும் இல்லை. மலை எங்கே? மடு எங்கே?

படித்த குடும்பத்தில் படிக்காத தறுதலை. வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு நண்பர்களோடு அரட்டை அடிக்கும் தனுஷ் திருடா திருடியை நினைவுபடுத்துகிறார். குண்டு ஆர்த்தியை பெண்பார்க்கச் செல்லும் இடத்தில் ரியாக்ச‌னில் பின்னுகிறார். அண்ணியிடம் தகராறு செய்யும் ரவுடியை ஆக்சனில் அடி பின்னுகிறார். படித்த பெண்ணை காதலித்து கைப்பிடிக்கும் லட்சியத்தில் தமன்னாவை சுற்றுகிறார். பர்ஸ்ட் ஹாஃப் ஓக்கே.

தமன்னாவை கொல்ல ஆந்திராவிலிருந்து வரும் ரவுடிப் பட்டாளம் சென்னையில் சர்வசாதாரணமாக துப்பாக்கி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களோடு வலம் வருகிறது. எதிர்கோஷ்டியும் துப்பாக்கிகள் சகிதகமாக முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். தமிழகம் பீகாரை மிஞ்சுகிறது என்று சொன்ன தலைமை தேர்தல் கமிஷனர் இந்தப் படத்தைப் பார்த்தால் மகிழ்ச்சியடைவார். போலிஸூ, போலிஸூ என்றொரு அமைப்பு இருப்பதை துணை இயக்குனர்கள் யாராவது இயக்குனருக்கு நினைவுபடுத்தியிருக்கலாம்.

கதையை எப்படி கொண்டு செல்வது என்று செகண்ட் ஹாஃபில் இயக்குனர் பேய்முழி முழித்திருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. விவேக் வந்து காப்பாற்றுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். நிறைய வடிவேல் வாசனை. இண்டர்வெலுக்குப் பிறகு தான் எண்ட்ரி ஆகிறார். அதன்பிறகு ஹீரோ தனுஷா, விவேக்கா என்ற சந்தேகம் வருகிறது. செகண்ட் ஹாஃப் வெயிட்டை விவேக்கும், பனிவண்ண தேகம் கொண்ட பேரழகி தமன்னாவும் சுமக்கிறார்கள். செகண்ட் ஹாஃப் சுமார்.

சுமன், சாயாஜி ஷிண்டே போன்ற சிறந்த நடிகர்கள் அநியாயத்துக்கு வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள். ராங்கு ரங்கம்மா பாட்டுக்கு தியேட்டரில் ஆயாக்கள் கூட கரும்பு கடித்துக்கொண்டே குத்தாட்டம் போடுகிறார்கள். கல்லுப்பட்டி கல்பனாக்கள் சன் மியூசிக்கில் யாருக்காவது பர்த்டே விஷஸ் சொல்லி பாடல்களை டெடிகேட் செய்யலாம். எல்லாப் பாட்டும் செம குத்து.

க்ளைமேக்ஸ் பயங்கர‌ ஆச்சரியம். சமீபத்தில் வந்த படங்களில் மிகச்சிறந்த க்ளைமேக்ஸ். டோனிங் அபாரம். ராக்கி ஸ்டைலில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதுல் குல்கர்னியும், தனுஷும் கடுமையாக மோதிக்கொள்ளும் இக்காட்சியில் புலன்விசாரணை இறுதிக்காட்சி நினைவுக்கு வருகிறது.. குல்கர்னியின் கழுத்தை நெரித்து 'ஹஹ்.. ஹஹ்..' என்று கத்திக்கொண்டே கொடுக்கும் ரியாக்சனில் காதல் கொண்டேன் காலத்து தனுஷ் தெரிகிறார். க்ளைமேக்ஸ் சூப்பர்.

படிக்காதவன் ‍- ஜஸ்ட் பாஸ் ஆகிவிடுவான்.

14 ஜனவரி, 2009

சாரு, தலையணை, திருமங்கலம்


சாரு சந்தேகமில்லாமல் இந்த வருடத்தின் ஹீரோ. ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிரடியாக பத்து புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் இல்லாத வகையில் நன்றாகவும் அவரது புத்தகங்கள் விற்று வருகிறது. சரியாக சேல்ஸ் ஆகவில்லை என்று இம்முறை புலம்பமாட்டார் என நம்புகிறேன். ரூபாய் தொள்ளாயிரத்துக்கு மொத்தமாக பத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. உயிர்மை அரங்குக்கு வருபவர்களெல்லாம் கையில் சாரு இல்லாமல் திரும்புவதில்லை. உயிர்மையில் மட்டுமல்ல ஜீயே பப்ளிகேஷனிலும் சாரு சக்கைப்போடு போடுகிறார். ‘ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பு முப்பது ரூபாய்க்கும், கோணல் பக்கங்களின் ஒரு தொகுதி பத்துரூபாய்க்கும் அள்ளிக்கொண்டு போகிறது.

முன்பெல்லாம் எல்லோரையும் விட்டு ஒதுங்கி தனியாகப் போய்க்கொண்டிருந்தவர் இப்போது பெரும்பாலும் ஒத்துப் போகிறார் என்று நினைக்கிறேன். புத்தக வெளியீடுகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். பொறுமையாக பேசுகிறார். உயிர்மை அரங்கில் இரண்டு நாட்கள் இருந்தார். கையெழுத்து கேட்பவர்களிடம் எல்லாம் முகம் சுளிக்காமல் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார். ”எக்சிஸ்டென்ஷியலிஸம்னா என்ன?” என்று கேட்ட இளைஞர் ஒருவருக்கு பொறுமையாக பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். விகடன் ஜாலி ஸ்பெஷலுக்கு ஜாலியாக இண்டர்வியூ கொடுக்கிறார். டப்ளினுக்கு போவதெற்கெல்லாம் நேரம் கிடைப்பது இப்போது அரிதாகியிருக்கலாம்.

(குட்டிக்கதைகளைத்) காமரூபக் கதைகளைத் தொடர்ந்து அடுத்த தடாலடி பிராஜக்டைத் தொடங்கிவிட்டாராம். அடுத்தாண்டு தொடக்கத்தில் அவரது எழுத்துக்களை இருபது புத்தகங்களாக ஒருசேர வெளியிடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நரசிம் ஏற்பாட்டில் நடந்த தேநீர் விருந்து சிற்சில சலசலப்புகளுக்கு இடையில் சிறப்பாகவே நடந்தது. நரசிம்மும் இன்னொரு நல்லி செட்டியாரா என்று நண்பரொருவர் காதில் கிசுகிசுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அந்த டைமிங் சென்ஸுக்காக அப்போதைக்கு ரசிக்க முடிந்தது. இதுகுறித்த அதிஷாவின் பதிவில் இளவஞ்சி நடத்திய விவாதம் யாராலும் முன்னெடுத்து செல்லப்படவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. ரோமில் ரோமானியனாக இரு என்ற கட்சிதான் நானும் என்பதால் இளவஞ்சியோடு ஒத்துப்போகிறேன். என்னுடைய ஆல்டர் ஈகோவான அதிஷாவோடு இவ்விஷயத்தில் கடுமையாக முரண்படுகிறேன். அப்பதிவு குறித்த என்னுடைய கண்டனத்தை அதிஷாவிடம் நேரிலேயே தெரிவித்திருக்கிறேன்.

நான்கு பேர் குடிக்கும் இடத்தில் ஐந்தாமவன் ஒருவன் குடிக்காமல் வேடிக்கை பார்ப்பது என்பதே வன்முறைதான். பொண்டாட்டி பிரச்சினை, வைகுண்ட ஏகாதசி போன்ற நியாயமான காரணங்களுக்காக குடிக்காத ஒழுக்கசீலர்களை மன்னித்து விடலாம். அதிலும் குடித்துவிட்டு அடித்த கும்மிகளை பொதுப்பார்வைக்கு கேலிக்குரிய ரீதியில் கொண்டு செல்வது பாசிஸ்ட்டுத்தனம் என்பதால் அதிஷாவை மிக வன்மையாகவும், செல்லமாகவும் கண்டிக்கிறேன்.

அப்புறம் ’சாருவின் தொண்டரடிப்பொடியாழ்வார்’ என்ற இளவஞ்சியின் விமர்சனம் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. ஒன்றுமில்லாத ரஜினியையே புனிதப் பிம்பமாக்கி மகிழும், முரட்டுத்தனமாக ரசிக்கும் ரசிகமனோபாவம் கொண்ட தமிழ் குமுகாயத்தை சேர்ந்தவர்கள் நாம். சாருவை தூக்கி வைத்துக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. நாத்திகம்-ஆத்திகம் தொடர்பான அவரது கருத்துக்கள் எனக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக (உவகையளிப்பதாக) தோன்றாத போதிலும் சாருவை ஏனோ ரொம்பவும் பிடித்திருக்கிறது. அதிஷாவுக்கும் பிடித்திருக்கலாம். என் கருத்து எனக்கு என்று இருக்கும் சாருவிடம் எதிர்கருத்து வைத்து பிரயோசனம் இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்புறம் மனிதர் மம்மி-ரிட்டர்ன்ஸ் ரேஞ்சில் எதுவாவது நம்மைப் பற்றி எழுதுவானேன், வேலியில் போகும் ஓணாணைப் பிடித்து வேட்டிக்குள் விட்டுப்பானேன்.

* - * - * - * - * - * - *

மெகாசைஸ் புத்தகங்கள் பெரும்பாலும் காலச்சுவடில் கிடைக்கும். பிரபல எழுத்தாளர்களின் தொகுப்பு நூல்கள் ஆகாசவிலையில் என்னைப் போன்ற ஏழைகள் தொட்டுப் பார்க்கும் ரேஞ்சிலேயே அரங்குகளை அலங்கரிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணுபுரம், கொற்றவை என்று ஜெயமோகன் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். சாருவும் தன் பங்குக்கு ராஸலீலா மூலமாக திகிலடைய வைத்தார். இப்போது பாராவின் முறை. மாயவலை தடிமனாக கிழக்கு அரங்கை சிங்கள ராணுவம் மாதிரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ஆக்கிரமிக்கிறது. அவரே மாயவலையை தூக்கமுடியாமல் தூக்கி காலில் போட்டுக் கொண்டதால் தான் எலும்புகளுக்கிடையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாக பி.பி.சி. செய்திகளில் சொன்னார்கள். தமிழினியில் வெளியாகியிருக்கும் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் சொல்லவே தேவையில்லை. பார்த்தாலே சும்மா அதிருது. அடுத்தாண்டு மீண்டும் ஜெமோ அட்டகாசம் ‘அசோகவனம்’ ரூபத்தில் தொடரும் எனத் தெரிகிறது. (மூவாயிரம் பக்கமாம்).

இந்த நூல்கள் டூ-இன்-ஒன் பர்ப்பஸ் கொண்டவை. வாசிப்புக்கும் உதவும். வாசிப்புக்கு இடையில் தூக்கம் வந்தால் முண்டுக் கொடுத்து உறங்க தலையணையாகவும் உதவும். அட்டையில் ஸ்பாஞ்ச் வைத்து பைண்ட் செய்யும் வசதியை ஏற்படுத்தித் தர பதிப்பாளர்கள் முன்வரவேண்டும்.

* - * - * - * - * - * - *

திருமங்கலம் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது. போர்க்காட்டார் புண்ணியத்தில் ஒண்ணுக்கு அடிக்கவேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்று பயந்திருந்த நேரத்தில் அஞ்சாநெஞ்சன் ஆறுதல் அளித்திருக்கிறார். பணம் விளையாடியது, பிணம் விளையாடியது என்று புலம்பும் புண்ணியக்கோடிகள் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக என்னென்ன உளறிக் கொட்டினார்கள் என்பதை கவனமாக கவனித்துத் தொலைக்க வேண்டும். சில ஆயிரம் பிரதிகளே விற்றுக் கொண்டிருக்கும் தினமணி தூக்கு மாட்டிக் கொள்ளுமா என்பதை அதன் தலையங்கம் மூலமாக தெளிவுப்படுத்த வேண்டும்.

திமுகவை பணரீதியாக எதிர்க்கமுடியாது என்பதால் அதிமுகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தோம் என்று சொன்ன வைகோ தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது கைப்புள்ள பாணி நகைச்சுவை. “திருமங்கலம் மக்கள் பணத்துக்கு விலை போகமாட்டார்கள்”. இப்போது அதே கைப்புள்ள முடிவுகளைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதை தினத்தந்தி படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

”திமுக ஆட்சியிலிருக்கும் வரை தேர்தல் என்பதே தமிழ்நாட்டில் கேலிக்கூத்தாக இருக்கும்” என்று தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் சொன்ன ஜெயலலிதா எந்த கருமத்துக்கு தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். அதுவும் மதிமுகவிடமிருந்து அடாவடியாக பிடுங்கி. கம்யூனிஸ்டுகள் பாவம். அவர்கள் இன்றைய நிலையில் செத்தப் பாம்புகள் கூட இல்லை. அவர்களைப் போய் என்னத்தைச் சொல்வது?

அதிமுக கூட்டணியில் இம்முறை தேர்தல் கமிஷனும் இணைந்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “பீகாரை விட மோசமாக திருமங்கலம் இருக்கிறது” என்று ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதி சொல்லலாம். தேர்தல் கமிஷனர் சொல்லலாமா? அப்புறம் எதற்கு துணைராணுவப் பாதுகாப்போடு தொகுதியை தேர்தல் கமிஷன் தன் கையில் எடுத்துக் கொண்டது? எனவே, “தேர்தல் கமிஷன் தேவையா?” என்ற கலைஞரின் கேள்வி நியாயமானதே. ஆட்டுக்கு எதுக்கு தாடி?

திமுக கூட்டணி இந்த இடைத்தேர்தலில் படுவீக்காக இருந்தது என்பது உண்மைதான். காங்கிரஸின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததாக தெரியவில்லை. பொதுவாக காங்கிரஸின் மேல்மட்டம் திமுகவுக்கு அனுசரணையாக இருந்தபோதிலும் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் அதிமுக கூட்டணிக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிறார்கள் என்று நினைக்கிறேன். வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் துட்டு பார்க்க வேணாமா? திமுகவிடம் அஞ்சு பைசா பெயராது என்று அவர்களுக்கு கடந்தகால அனுபவம் பாடம் கற்றுத் தந்திருக்கிறது.

விஜயகாந்தைப் பொறுத்தவரை டெபாசிட் இழந்தாலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. திமுக - அதிமுக மும்முரமாக நேருக்கு நேர் அனல்பறக்க மோதிக்கொண்ட தேர்தலில் அவர் பெற்ற ஒன்பது சதவிகித வாக்குகள் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது. ‘கூட்டணி இல்லை. என் வழி தனி வழி’ என்ற இப்போதைய பாதையையே அவர் தொடர்ந்தால் 2016ல் அல்லது 2021ல் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சரத்குமார் சுயேச்சை வேட்பாளரை விட குறைவாக வாக்கு வாங்கியது எதிர்ப்பார்த்த ஒன்றே. அஇசமக துணைத்தலைவர் ராதிகாவின் ஒரு பேச்சு குறிப்பிடத்தக்கதாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. “என் கணவர் குடிகாரர் என்று பெயரெடுத்தவர் இல்லை. ஆனால் சில பேர் குடித்துவிட்டே சட்டமன்றத்துக்கு வருகிறார்கள்”.

வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு, வேட்டி சேலை ஆகியவை தற்காலிகமாக திமுகவை கரை சேர்த்திருக்கிறது. இதே ஹைப் பாராளுமன்றத் தேர்தல் வரை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

* - * - * - * - * - * - *

சென்னை புத்தகக்காட்சி மூலமாக மீண்டும் காமிக்ஸ் புரட்சி. ஸ்டால் எண் 35, இன்ஃபோ மேப்ஸ் அரங்கில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் ஐந்துரூபாய், ஆறு ரூபாய் விலைக்கு ஏராளமாக கிடைக்கிறது. ரூபாய் நூறு விலையில் பெரிய சைஸ் கவுபாய் ஸ்பெஷலும் அங்கேயே கிடைக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி, மருத்துவர் ப்ரூனோ, கவிஞர் யெஸ்.பாலபாரதி உள்ளிட்ட ஏராள பிரபலங்கள் காமிக்ஸ் புத்தகங்களை மொத்தமாக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வரங்கில் இருக்கும் அருண் என்ற நண்பரை தொடர்பு கொண்டால் புத்தகங்களை விலை மற்றும் தரம் வாரியாக பிரித்து செட்டாக எடுத்துக் கொடுப்பார்.

மர்ஜானே சத்ரபி வரைந்த சித்திரக்கதை வடிவிலான சீரிய இலக்கியம்ஒன்று இரு நூலாக விடியல் மற்றும் கீழைக்காற்றில் கிடைக்கிறது. சிம்புதேவனின் ’கி.மு.வில்...’ முழுநீள கார்ட்டூன் தொடர் புத்தகம் நர்மதாவில் கிடைக்கிறது. நர்மதாவில் கிடைக்கும் குறிப்பிடத்தக்க இன்னொரு புத்தகம் வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம். ஹார்ட்பவுண்ட் அட்டையில் 400 பக்கத்துக்கும் மேலான இந்நூலில் கொக்கோக சாஸ்திரமும் இணைக்கப்பட்டிருக்கிறது. விலை ஜஸ்ட் ருபீஸ் ஒன்ஃபிப்டி ஒன்லி.

11 ஜனவரி, 2009

பேசுங்க.. பேசுங்க.. பேசிக்கிட்டே இருங்க!!


“நல்ல பொண்ணு தான். என்ன வாய் கொஞ்சம் அதிகம்!” யாருக்காவது பெண் பார்க்கப் போகும்போது, அக்கம் பக்கத்தில் விசாரித்தால் இதுபோல எந்தப் பெண்ணைப் பற்றியாவது சொல்லியிருப்பார்கள். வாய் இருப்பது பெரிய குற்றமில்லை தான். வாயாடியாக இருப்பது மட்டும் குற்றமாகி விடுமா என்ன?

சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு கூட வாயே இல்லாமல் தானிருந்தது. கணவன் ‘கிணற்றில் குதி’ என்று சொன்னாலும் கூட, முட்டாள்தனமாக குதித்துவிட தயாராக இருந்த பத்தினித் தெய்வமாக தான் அவளை இளங்கோவடிகள் சித்தரித்திருந்தார். சைநாயகியை நாடிப்போனவ கணவனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருப்பாளா? சைநாயகி அலுத்துப்போய் திரும்பியவனை பார்த்தாவது ஏதாவது சொன்னாளா? சாகிறவரைக்கும் கண்ணகி அப்படியே வாழ்ந்திருந்தால் கண்ணகிக்கு கோட்டம் அமைத்திருப்போமா? சென்னை கடற்கரைச் சாலையில் சிலை தான் வைத்திருப்போமா?

பாண்டிய மன்னனிடம் பக்கம் பக்கமாக ‘தேராமன்னா செப்புவதுடையேன்’ என்று வசனம் பேசியதால் தானே கண்ணகிக்கு பெருமை. நீதி வழுவியது புரிந்து “யானோ மன்னன்? யானே கள்வன்!’ என்று சொல்லி பாண்டியன் உயிர்நீத்தான். அதன்பிறகு கண்ணகி மதுரையை எரித்தாள். அவளுக்கும், அவள் கணவனுக்கும் வானுலகில் இடம் கிடைத்தது. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் தேவையான இடத்தில் தேவையான விஷயத்தை தேவையான அளவு பேசியே தீரவேண்டும். பேசாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். அதிகம் பேசுபவர்கள் படுதோல்வி அடைகிறார்கள்.

பேசாவிட்டால் தோல்வி. அதிகம் பேசினால் படுதோல்வி. என்னதான் செய்வது என்கிறீர்களா? பேசுங்கள். எதைப் பற்றியும் நாலு பேரிடம் அதிகம் பேசுங்கள். பதிலுக்கு அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேளுங்கள். பேசுவதற்கு தானே வாய்? கேட்பதற்கு தானே காது?

ஒரு இழவு வீட்டுக்குப் போன மாமியாரும் மருமகளும் அதிகம் பேசிக் கெட்ட கதையைப் பார்ப்போம். இழவு வீட்டில் பெண்கள் எதிரேதிரே அமர்ந்து ஒப்பாரி பாடி மாரிலடித்துக் கொண்டு அழுவார்கள். இறந்து கிடப்பவனை நினைத்து அழுவதைக் காட்டிலும் தத்தம் சொந்த சோகங்களை நினைத்து இழவு வீடுகளில் அழுபவர்களே அதிகம்.

அந்த ஊரின் தெருக்கோடி முனைவீட்டில் ஒரு கிழவன் செத்துத் தொலைத்தான். வீட்டின் முகப்பில் பாகற்காய் பந்தல். பந்தல் முழுக்க பாகற்காயாய் காய்த்து தொங்குகிறது. ஒப்பாரி வைக்க வரும் பெண்களுக்கெல்லாம் பாகற்காய் மீது கண். இழவு விசாரிக்கப் போன நம் மாமியாரும், மருமகளும் ஒப்பாரி வைத்து எப்படி அழுதார்கள் தெரியுமா?

‘பந்தலிலே பாவக்கா,
பார்த்து அறு மாமியாரே!’

- ஒப்பாரி ராகத்தில் மருமகள் மாமியாருக்கு சுட்டிக் காட்டுகிறாள்.

அதே ராகத்தில் மாமியாரும் பதில் சொல்கிறாள்.

‘போகும்போது பார்த்துக்கலாம்.
பொறுத்திருடி மருமகளே’

மாமியாரும், மருமகளும் பாகற்காயை ட்டை போட நினைத்ததை கவனித்துவிட்டாள் இழவு வீட்டுக்காரி. மாமியார், மருமகள் இருவருக்கும் பதிலளிக்கும் வண்ணம் அவளும் ஒப்பாரி வைத்து சத்தமாக பாடுகிறாள்.

‘விதைக்கல்லோ விட்டிருக்கேன்
விரலாலே தொட்டிடாதே’

அக்கம் பக்கம் பார்க்காமல் மாமியாரிடம் பாகற்காயை சுட்டிக்காட்டியது மருமகளின் தவறு. பக்கத்தில் பாகற்காய்க்கு சொந்தக்காரி நிற்கிறாள் என்பது தெரியாமல் மருமகளுக்கு பதில் சொல்லியது மாமியாரின் தவறு. மாமியார் - மருமகள் நோக்கத்தை சோகத்துக்கு இடையிலும் கண்டறிந்து சரியான பதிலடி கொடுத்தது பாகற்காய்காரியின் சாமர்த்தியம். நேரம் கெட்ட நேரத்தில் எதையாவது பேசி மாட்டிக் கொள்வானேன்? அவலை நினைத்து உரலை இடித்துக் கொள்வானேன்?

எதை பேசவேண்டும், எங்கு பேசவேண்டும், என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டும் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். மகிழ்ச்சி, குதூகலம், அன்பு, காதல், வெற்றி, காதல், கத்தரிக்காய், இத்யாதி.. இத்யாதி எல்லாம் உங்களைத் தேடி வரும். நீங்கள் எதையும் தேடி அலைய வேண்டியதில்லை.

பேசுவது தான் பல பேருக்கு தொழிலே தெரியுமா?

வாத்தியாரம்மா பேசாவிட்டால் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிட்டு போய்விட வேண்டியது தான். டாக்டரம்மா பேசாவிட்டால் நோயாளிகளின் கதி அதோகதி தான். காய்கறிகாரனிடம் பேரம் பேசாவிட்டால் அஞ்சரைப் பெட்டியில் சேர்த்து வைத்த காசு சீக்கிரமே கரைந்துவிடும். அரசியல்வாதி பேசாவிட்டால் ட்சியை யார் பிடிப்பது?

பால்காரர், கண்டக்டர், டெய்லர், கறிகடைக்காரர், வாட்ச்மேன், ட்டோக்காரர், மேனேஜர், கிளார்க், ரிசப்ஷனிஸ்ட்... இதுபோன்றவர்களிடமெல்லாம் பேசாமல் ஏதாவது காரியம் சாதிக்க முடியுமோ? வேலைக்காரப் பெண்ணிடம் அக்கம் பக்கம் புரளி பேசாவிட்டால் நமக்கு தூக்கம் வருமா? வேதாளத்துக்கு பதில் சொல்லாவிட்டால் விக்ரமாதித்தனின் தலையே சுக்குநூறாகி விடுமாம். பேசவேண்டிய இடங்களில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவதே நலம்.

முன்பெல்லாம் கணவனோடு தனிமையில் கிசுகிசுவென்று பேசுவார்களாம் இல்லத்தரசிகள், ‘தலையணை மந்திரம்’. இப்போதெல்லாம் பைக் பில்லியனில் உட்கார்ந்து கொண்டு காதோரம் தெருவெங்கும் கிசுகிசுத்துக் கொண்டே போகிறார்கள், ‘பில்லியன் தந்திரம்?’. நல்லவேளையாக கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு கொண்டு வந்ததோ இல்லையோ.. ஏகப்பட்ட இல்லத்தரசர்களின் காது தப்பியது.

கைப்பேசி வந்து தொலைத்தாலும் தொலைத்தது. எல்லோரும், எப்போதும், எதையாவது, எங்கேயாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நின்றால் பேச்சு, நடந்தால் பேச்சு, படுத்தால் பேச்சு. செல்போன் கம்பெனி முதலாளிகள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். பெட்ரோல் விலையேற்றம், விலைவாசி உயர்வு, காவிரி பிரச்சினை எந்தப் பிரச்சினையையாவது எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்ப்பதற்கு நாடு தழுவிய பந்த் நடத்தப்படுகிறது. ஏதாவது பிரயோசனம் இருக்கிறதா? ஒரே ஒருநாள் யாரும், யாரோடும் பேசவே மாட்டோம் என்றொரு பந்த் நடத்தினால் என்னவாகும்? எவ்வளவு கோடிகள் நஷ்டமாகும்? டிவியில் செய்தி வாசிப்பவர் சாடை மொழியில் செய்தி வாசித்தால் எப்படியிருக்கும்?

காலையில் இரண்டு இட்லியை விண்டு வாயில் போட்டுக்கொண்டு நாள் முழுக்க உண்ணாவிரதம் கூட இருந்துவிடலாம். இப்போதெல்லாம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியை வெட்டு வெட்டென்று வெட்டி உண்ணும் விரதம் கூட இருக்க ரம்பித்து விட்டார்கள். மவுனவிரதம் இருப்பது ஒன்றே இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லாததும், மிகக்கடுமையானதாகவும் இருக்கக்கூடும்.

உரிமைகளை கேட்கவும், உணர்வுகளை சொல்லவும், உறவாடவும், நட்பினைக் கொண்டாடவும், மகிழ்ச்சியையும் சோகத்தையும் பகிர்ந்துக் கொள்ளவும்.. எதற்கெடுத்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் பேசியாக வேண்டியிருக்கிறது. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்?

பாருங்கள். உங்களிடம் சமயசந்தர்ப்பம் தெரியாமல் எதையோ வெட்டியாக பேசிப்பேசி எனக்கு வாய் வலிக்கிறது. தொண்டை கட்டிக் கொண்டது. எனக்குப் பதிலாக நீங்களாவது சத்தமாக பேசுங்கள்.. மன்னியுங்கள்.. கத்துங்கள்.. விண்ணதிர கோஷமிடுங்கள்.. “பொங்கலோ பொங்கல்!”

('பெண்ணே நீ' பொங்கல் சிறப்பு மலர் 2008)

9 ஜனவரி, 2009

சென்னை புத்தகக் காட்சி - முதல் நாள்..


சென்ற வருடம் போல இந்த வருடமும் தினசரி புத்தகக்காட்சி தரிசனம் சாத்தியமா என்று தெரியவில்லை. இன்று கூட போய்வரும் சாத்தியமில்லை. ரிசர்வில் எத்தனை நாள்தான் வண்டி ஓட்டுவது? முரளிதியோரா விரைவாக மனசு வைத்தால் கடைசி ஐந்து நாட்களாவது தினமும் போய்வர முடியும். சென்னை சங்கமத்தை வேறு போட்டியாக நாளை தொடங்குகிறார் ‘தலைவரின் கனி, தமிழின் மொழி’.

புத்தகக்காட்சியை தொடக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு உடம்பு சரியில்லையாம். வாழ்த்துச்செய்தியோடு தன் கடமையை முடித்துக் கொண்டார். மெர்சிடிஸ் பென்ஸில் வந்திறங்கி கொச்சையான மேடைத்தமிழில் இலக்கியச்சேவை ஆற்றினார் நல்லி குப்புச்சாமி செட்டியார். எனக்கொரு சந்தேகம். கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வாங்குபவர்கள் எல்லாமே பார்ப்பதற்கு பாவமாகவே இருக்கிறார்களே? ஏன்?

சென்ற வருடத்தை விட புத்தகக்காட்சி விசாலமாக காற்றோட்டத்தோடு இருப்பது போல ஒரு பிரமை. முதல் நாள் அனுமதி இலவசமென்றாலும் கூட்டம் நஹி. பல ஸ்டால்களில் இன்னமும் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஞாநி ‘ஓ ஞாநி’ ஆகிவிட்டாராம். அலங்காரம் செய்துக் கொண்டிருக்கும் போது கருவறையை திரைபோட்டு மூடியிருப்பது போல அவரது ஸ்டாலும் திரைபோட்டிருந்தது. மஞ்சள் திரை.

பாரதி புத்தகாலயம் சுறுசுறுப்பாக இருந்தது. புத்தகங்களை அடுக்கி வைத்திருந்த முறை அபாரம். திருக்குடந்தை பதிப்பகம் (கேள்விப் பட்டிருக்கிறீர்களா?) மட்டுமே முதல்நாளில் முழுமையாக தயாராகியிருந்தது. காலச்சுவடு கருப்புமயம். உயிர்மையில் இன்னமும் புதிய பத்தகங்களை பார்வைக்கு வைக்கவில்லை. சுஜாதா, ஜெயமோகன், சாரு மூவருமே உயிர்மையின் 90 சதவிகித இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கல்லாப் பெட்டியில் முதலாளியம்மா. குழந்தை பீடிங் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருக்கிறது.

பத்து ரூபாய்க்கு பீர்வாசனையில் ஆப்பிள் ஜூஸ் கிடைக்கிறது. இனிப்பு மசாலா தடவிய வேர்க்கடலையின் விலை அதிகம் என்று ப்ளூ கலர் குல்லாய் போட்டு மாறுவேடத்தில் இருந்த ஒரு பிரபல எழுத்தாளர் புலம்பிக் கொண்டிருந்தார். தூர்தர்ஷன் ஒரு ஸ்டால் போட்டு தன்னுடைய நிகழ்ச்சிகளை(?) ஒரு விசிடி இருநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் என்றளவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பர்மாபஸாரில் ‘திண்டுக்கல் சாரதி’ டிவிடியே பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கிறது என்று தூர்தர்ஷன் அதிகாரிகளுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை.

மணிமேகலைப் பிரசுரம் வழக்கம்போல சுறுசுறுப்பு. காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த பழைய கண்காட்சி ஒன்றில் இங்குதான் ‘ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி?’ புத்தகத்தை வாங்கி தற்கொலை எண்ணத்தை கைவிட்டேன். அந்தப் புத்தகத்துக்கு அருகிலேயே ‘குண்டாக இருக்கும் நீங்கள் ஒல்லியாவது எப்படி?’ என்றொரு புத்தகமும் இருந்தது நினைவில் நீங்கா கொடூரம். கண்ணதாசன் பதிப்பக கல்லாவில் இங்கும் வழக்கம்போல முதலாளியம்மாவே உட்கார்ந்திருக்கிறார். அதே சுறுசுறுப்பு. ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. முடிச்ச பையன் இன்னமும் நிர்வாகப் பொறுப்புக்கு வரவில்லை போலிருக்கிறது.

பாக்கெட் நாவல் ஜீ.ஏ. அண்ணாச்சியும் இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறார். சாருவின் ’ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பாக ரூபாய் முப்பதுக்கு கிடைக்கிறது. அச்சு அவ்வளவு மோசமில்லை. கோணல் பக்கங்கள் இரண்டாவது தொகுதி ரூபாய் நூற்றி நாற்பது விலையில் தரமாக அச்சிடப்பட்டு விற்கிறது. அண்ணாச்சியிடம் விசாரித்தபோது ஸீரோ டிகிரி மலிவுப் பதிப்பு இருபதாயிரம் காப்பிகளுக்கு மேலாக இதுவரை விற்றதாக சொன்னார். அஜால் குஜால் டாக்டர் பிரகாஷின் நூல்களும் இங்கே மலிவுவிலையில் கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ மக்கள் பதிப்பும் இங்கே பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கக்கூடும். இந்த ஸ்டாலின் முதல் கஸ்டமர் என்பதால் அண்ணாச்சி ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு எங்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

சினிமா செட் ரேஞ்சுக்கு செட் போடும் நக்கீரன் பதிப்பகம் இவ்வருடம் அடக்கி வாசிக்கிறது. கோபால் அண்ணாச்சி சேலஞ்ச் செய்யும் ஒரே ஒரு கட்-அவுட்டோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாசலில் கிழக்கு எடிட்டர் மருதனோடு பேசிக்கொண்டிருந்தவர் “பெரியவங்க எங்களையும் ஞாபகம் வச்சிக்கோங்க” என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்.

கிழக்கு ஸ்டாலில் ’பிரபாகரன்’ புத்தகமே இவ்வருட பிரதான அலங்காரம். அதற்கும் தடை போட்டுவிட்டதாக பாராவும், பத்ரியும் எழுதியிருக்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோலவே ‘நான் வித்யா’ புத்தகம் விற்பனையில் சூடாக இருந்தது. ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்துக்கு அருகில் ‘கிரிமினல்கள் ஜாக்கிரதை’ புத்தகத்தை பார்வைக்கு வைத்திருந்தது யதேச்சையானதுதான் என்று கிழக்கின் விற்பனை மேலாளர் ஹரன்பிரசன்னா எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் மீது சத்தியம் செய்கிறார்.

விகடன் பிரசுரம் முழுமையாக தயாராகாததால் உள்ளே நுழையவில்லை. குமுதத்தின் பு(து)த்தகம் ஸ்டாலில் ரேஞ்ச் குறைவு என்றாலும் ஆடம்பரத்துக்கு குறைவில்லை. ப்ளக்ஸ் பேனர்களும், கண்காட்சி முகப்பில் வரவேற்பு வளைவுகளுமாக ரொம்ப ஆடுகிறார்கள். சாருவின் ‘ஸீரோ டிகிரி’ ஆங்கிலப் பதிப்பை வெளியிட்ட ப்ளாப்ட் பப்ளிகேஷன்ஸ் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் பல்ப் பிக்‌ஷன் நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் இந்நிறுவனத்தின் ஸ்டாலில் தமிழ்வாணனின் ‘சங்கர்லால்’ வேடத்தில் ஒருவர் பயமுறுத்திக் கொண்டிருந்தார். நல்லவேளை கையில் துப்பாக்கி இல்லை.

நீண்டகாலமாக தமிழ் வாசகர்களின் டவுசர் கயட்டும், தாவூதீரும் நடையில் புத்தகங்கள் வெளியிட்டு வரும் க்ரியா பதிப்பகம் இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறது. ஒவ்வொரு புத்தகத்தின் விலையிலும் ஒரு கல்யாணம் காட்சி செய்துக் கொள்ளலாம். பார்வைக்கு மட்டும் இவர்கள் வைத்திருக்கும் விண்டேஜ் கலெக்‌ஷன் புத்தகங்கள் கண்ணை கொள்ளை கொள்ளுகிறது. இவற்றை வேடிக்கை பார்ப்பதே மெகா சுவாரஸ்யம். மைக்கா கவரில் சுற்றி பாதுகாக்கப்பட்ட சுராவின் ஜே.ஜே.சில குறிப்புகள் முதல் பதிப்பை கையில் எடுத்துப் பார்க்கும்போது எதையோ சாதித்தது போல சொல்லவொண்ணா மகிழ்ச்சி.

இந்த வருடத்தின் டாக்காக சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ இருக்கக்கூடும். அறுநூறு ரூபாய் விலையில் வந்திருக்கும் ஆயிரம் பக்கத்துக்கும் மேலான மெகாநாவல். முதல்நாளிலேயே பலரும் ஆவலோடு புரட்டிப் பார்த்தார்கள். எத்தனை பேர் வாங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நூலாசிரியரின் பத்தாண்டு உழைப்பு வீண்போகாமல் வெற்றியடைய வாழ்த்துவோம்.

முதல்நாள் விசிட் வெறும் பறவைப் பார்வை பார்க்கவே உபயோகப்பட்டது. அடுத்தடுத்து செல்லும் நாட்களில் எதையாவது உருப்படியாக வாங்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் என்றெல்லாம் அறிவிப்பினை கண்டு பேஜார் ஆகியும் போயிருக்கிறேன். எழுத்துப்போராளி சாருவின் ‘காமரூபக் கதைகள்’ கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று எண்ணம். பாராவின் ‘மாயவலை’யும் நிச்சயமாக வீட்டு நூலகத்தில் இடம்பெற்றாக வேண்டிய நூல்.

பாரதி புத்தகாலயத்தில் சில பிரதிகள் வாங்க வேண்டும். மணிமேகலையில் ‘கல்யாணம் செய்துகொள்வது எப்படி?’ என்ற நூல் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். எங்கேயோ ‘காதலிப்பது எப்படி?’ என்றொரு நூலைப் பார்த்தேன். சென்ற வருடம் வாங்கிய இதேபோன்ற ஒரு நூலால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஒரு ஸ்டாலில் டாக்டர் ஒருவரின் செக்ஸ்நூல்கள் சூடாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஸ்டாலுக்கு அடிக்கடி போகவேண்டும்.

5 ஜனவரி, 2009

அபியும், நானும்!


சீக்கிரமாக ஒரு கல்யாணம் காட்சி செய்துகொண்டு ஒரு பெண்குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது. முன்பெல்லாம் தேவதைகள் என்றாலே அத்தைகளுக்கு மகள்களாக பிறப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. ‘அபியும் நானும்’ படம் பார்த்தபிறகு தேவதைகள் நமக்கும் மகள்களாக பிறக்கக்கூடும் என்ற இன்னொரு சாத்தியம் புரிந்தது. எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போது மண்டையைப் போட்ட என்னுடைய ஆயா கோயிந்தம்மா எனக்கு மகளாக பிறக்க வேண்டும். அவளுக்கு திருமண வயதாகும்போது எவனோ ஒரு சர்தார்ஜி பயலை லவ்வித் தொலைத்து, வயிறு எரிந்துகொண்டே கன்னிகாதானம் செய்துத் தரவேண்டும்.

மங்கி குல்லாவோடு ஊட்டியில் வாக்கிங் செல்லும் பிரகாஷ்ராஜில் படம் தொடங்குகிறது. தன் குட்டிக் குழந்தையோடு பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்கும் பிருத்விராஜிடம் பேச ஆரம்பிக்கிறார் பிரகாஷ்ராஜ். நர்ரேஷன் ஸ்டைலில் அபியும், நானும் தொடக்கம். பெண்ணை பெற்று, வளர்த்து, கட்டிக் கொடுத்தது வரைக்கும் முழுவதையும் நகைச்சுவைப் பொங்க சொல்கிறார். சின்ன வயதில் திண்ணையில் சிவராம் பெரியப்பாவிடம் கேட்ட கதையை விட பன்மடங்கு சுவாரஸ்யம்.

ரோஜாப்பூ மாதிரி பிறந்த மகளை கையில் ஏந்தும் காட்சியில் பிரகாஷ்ராஜ் காட்டும் ரியாக்‌ஷன். அடடா. பிறவி நடிகனய்யா நீர். ஸ்கூல் சேர்க்கும்போதும், அடம்பிடிக்கும் பெண்ணுக்காக பிச்சைக்காரரை வீட்டில் சேர்த்துக் கொள்ளும் போதும், பெண்ணுக்கு சைக்கிள் வாங்கித் தர மறுக்கும்போதும், மகளுக்கு முதல்முதலாக வந்த காதல் கடித மேட்டரை டீல் செய்வதும், மேற்படிப்புக்காக டெல்லிக்கு அனுப்ப மறுத்து அடம்பிடிக்கும் போதும் படம் முழுக்க பிரகாஷ்ராஜ்யம்.

கனவுதேவதை திரிஷா உருப்படியாக ஒரு படம் நடித்துவிட்டார். எல்லோரும் கைத்தட்டலாம். அழகான அம்மாவாக ஐஸ்வர்யா. நடிப்பு ஓக்கே. குரல் தான் பயமுறுத்துகிறது. தம்மாத்தூண்டு கேரக்டராக இருந்தாலும் படம் முழுக்க வரும் மனோபாலா. பிச்சைக்காரராக அறிமுகமாகும் குமாரவேலு நார்த் இண்டியன் ஃபிகரை மடக்கும்போது காட்டும் காதல் சென்சேஷன். ஒரே ஒரு குழந்தைக்காக ஏங்கும் தலைவாசல் விஜய் என்று படம் முழுக்க கேரக்டர்களாக செதுக்கித் தள்ளியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். இவர் கேரக்டர்களை உருவாக்கி விட்டு அதன் பின் காட்சிகளை பிடிப்பார் போலிருக்கிறது.

படத்தின் கதையை விமர்சனத்தில் வாசிப்பதை விட திரையில் பார்ப்பதே நியாயம். “என்னம்மா பேங்குலே மேனேஜரா இருக்குறாரு என்பது மாதிரி எங்க ஸ்கூல் வாசலிலே பெக்கரா இருக்குறாருன்னு சொல்றே” வசனங்கள் அநியாயத்துக்கு ஜாலி. இந்தப் படத்துக்கு பாடல்களே தேவையில்லை. முதல் பாதியின் சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதிக்கும் நீட்டியிருக்கலாம். செகண்ட் ஹாப்பில் கமர்ஷியல் காம்ப்ரமைஸுக்காக செருகப்பட்ட பாடல்களின் போது வெளியே சென்று கோன் ஐஸ் வாங்கி சாப்பிடலாமா என்றிருக்கிறது.

பிரகாஷ் ராஜ் - ராதாமோகன் கூட்டணியிடம் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. எப்போது பார்த்தாலும் மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸுகளை குறிவைத்தே படங்களை எடுத்துத் தொலைக்கிறார்கள். அபியும் நானும் படத்தின் கதாபாத்திரங்களை லோயர் மிடில்க்ளாஸ்களாக சித்தரித்திருந்தால் படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கக் கூடும். மேல்தட்டு வர்க்க கதாபாத்திரங்களை உபயோகிப்பதன் மூலம் ரிச்சாக காட்ட முடியும். அதுமட்டுமன்றி லொக்கேஷன்களிலும், காட்சியமைப்புகளிலும் ஆடம்பரத்தை ரசிகனுக்கு பரிசளிக்க முடியும் என்றாலும் சினிமா என்பது வெகுஜன ரசிகர்களின் உணர்வுகளோடு பேசாவிட்டால் என்ன பிரயோஜனம்?

இதே கூட்டணியின் ’மொழி’யை விட சிறந்த படமாக ’அபியும் நானும்’ எனக்கு தோன்ற இப்போதைய வயதும், வாழ்வின் காலக்கட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு அப்பனும், அப்பனாகப் போகிறவனும் கட்டாயம் பார்த்து தொலைக்கலாம்.

அபியும் நானும் - அழகானது வாழ்க்கை!

1 ஜனவரி, 2009

வயசாயிடிச்சில்லையோ?


நினைவு தெரிந்த முதல் ஆங்கிலப் புத்தாண்டு அம்மாவுக்கு கோலம் போடும்போது உதவுவதில் ஆரம்பித்ததாக நினைவு. பத்து மணி வாக்கில் வீட்டு வேலையை எல்லாம் முடித்துவிட்டு அம்மா கோலம் போட ஆரம்பிப்பார். அவர் சொல்லும் இடங்களில் வண்ணம் சேர்ப்பது என் பணி. பண்ணிரெண்டு மணி அளவில் தூக்கம் கண்ணை சுழற்றும்போது கமல்ஹாசன் ‘இளமை இதோ இதோ’வென நடனம் ஆடுவார் டிவியில். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இப்படித்தான் எனக்கு புத்தாண்டு விடிந்திருக்கும். இன்னமும் அதே கமல் அதே இளமையோடு டிவிக்களில் பாடிக்கொண்டிருக்கிறார். இதுமட்டும் தமிழனுக்கு மாறாத ஒரு அம்சம்.

அப்புறம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வந்தபிறகு புத்தாண்டு அங்கே பிறந்தது. குடும்பத்தோடு கூட்டத்தில் கசகசவென உள்ளே புகுந்து ஆஞ்சநேயரை அண்ணாந்துப் பார்த்து, புத்தாண்டு பரிசாக அவர் தரும் ஐந்து ரூபாய் நாணயத்தை வாங்கிக் கொண்டு வருவதில் சில புத்தாண்டுகள் கழிந்தது. கொஞ்சம் தாமதமாகப் போனாலும் ஐந்து ரூபாய் நாணயம் இரண்டு அல்லது ஒரு ரூபாயாக மாறிவிடக் கூடிய ஆபத்துண்டு. அப்பாவின் தலைமையில் தான் ஆஞ்சநேயர் தரிசனம் நடக்கும். அப்பா தலைமையில் எது நடந்தாலும் எரிச்சல் தந்த காலக்கட்டம் அது. காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டதைப் போல பரபரவென்று எரிந்து விழுந்துக் கொண்டேயிருப்பார். ஆஞ்சநேயரை தரிசித்து மூன்று, மூன்றரை மணிக்கு அப்பாடாவென்று கண்ணயர்ந்தால் நாலு, நாலரைக்கெல்லாம் எழுப்பி உயிரை வாங்குவார். மாங்காடு கோயிலுக்கு காலையிலேயே போகவேண்டும். இதுபோன்ற தருணங்களில் தான் அவருக்கு முக்கியத்துவம் என்பதால் ரொம்ப ஓவராய் ஆடுவார்.

பியர் குடிக்க கற்றுக்கொண்ட காலத்து புத்தாண்டுகள் தான் சுவாரஸ்யமானது. ஒன்பதரை, பத்து மணியளவில் வேளச்சேரி பைபாஸ் அல்லது தரமணி ரோட்டில் ஏதாவது ஒரு கடையில் மேட்டரை முடித்துவிட்டு பெசண்ட் நகருக்கு மின்னல் வேக பைக் பயணம். மார்கழி குளிர் முகத்தில் அறைந்தாலும் எதையுமே சாதிக்காமல் எதையோ சாதிக்கப்போவது மாதிரி, சாதித்தது மாதிரி பரவசம் நிறைந்திருக்கும். எதிர்காலம் குறித்த அச்சமோ, நிகழ்காலம் குறித்த வெட்கமோ இல்லாத பட்டாம்பூச்சி வயசு. பெசண்ட் நகர் டூ மெரினா. எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் வாய்குழற “ஹேப்பீ ந்யூ ஹியர்!”. ஒன்றிரண்டு ஃபிகர்கள் பதிலுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லிவிட்டால் போதும் வந்தது வம்பு.

“அவ என்னைப் பாத்துதாண்டா சொன்னா”

“உம்மூஞ்சிக்கு உன்னை பாத்து சொன்னாளா? இதுக்கெல்லாம் என்னை மாதிரி பர்சனாலிட்டி இருக்கணும் மாமே!”

“டேய் ரெண்டு பேரும் அஜித் விஜய் மாதிரி பேசிக்கிறீங்க. மாமாவைப் பாத்து தாண்டா அவ சொன்னா” மூன்றாமவனும் தன் பங்குக்கு ஜல்லியடிப்பான்.

பொதுவாக இதுபோல விவாதங்கள் ஜாலியாக முடிந்தாலும், சில நேரங்களில் சீரியஸாகி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மணலில் புரண்டதுமுண்டு.

பாலாஜி அண்ணாவும், ஓம்பிரகாஷ் மாமாவும் ஒரு புத்தாண்டுக்கு ‘மணக்குளம் விநாயகரை தரிசனம் பண்றோம்” என்று சொல்லி, அப்பாவிடம் பர்மிஷன் வாங்கி என்னை பாண்டிச்சேரிக்கு நண்பர்களோடு பைக்கில் அழைத்துச் சென்றார்கள்.

“சின்னப்பையன், இதெல்லாம் சாப்பிடுவானா?” அடிக்கடி ஓம்பிரகாஷ் மாமா பாலாஜி அண்ணாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

“இந்த காலத்து பசங்க நம்மளை விட கேடிங்க மச்சான். எல்லாம் சாப்பிடுவான்! ஹாட் அடிப்பியாடா?”

“ம்ம்..” வெட்கப்பட்டுக்கொண்டே பொய் சொன்னேன். அதுவரை எந்த கருமத்தையும் அடித்ததில்லை.

பிரெஞ்ச் ரம். ஊற்ற ஊற்ற உறிஞ்சுக் கொண்டேயிருந்தேன். ஐந்து ரவுண்ட். ‘ஒண்ணுமே ஏறலையே? பீர் தான் பெஸ்ட்டு!’ மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். ரம் லேட்டாக பிக்கப்பாகும் என்பதை யாரும் சொல்லித் தொலைக்கவில்லை. அதிலும் பிரெஞ்ச் ரம் ரொம்ப ரொம்ப லேட் பிக்கப்பாம். கடையோர கையேந்திபவன் ஒன்றில் கல்தோசை சாப்பிடும்போது கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. கை கால் உதற, இருதயமே வெளியே வந்து விழுந்து விடுமோ என்று அஞ்சும் வகையில் உவ்வ்வாக்...

கண்விழித்தபோது காலை பதினொரு மணி. ‘மணக்குளம் விநாயகர் தரிசனம்’ அபாரம்.

சுனாமி வந்து சூறையாடிச் சென்ற நிலையில் 2005 புத்தாண்டு. சுனாமி நேரத்தில் அப்பா சர்க்கரைநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அம்மா ஒத்தாசைக்கு அப்பாவோடு இருக்க வீட்டில் தனியாகவே பத்து நாட்களை சமாளித்தேன். அந்த புத்தாண்டை கொண்டாட நண்பர்கள் யாருக்கும் மனமில்லை. பாலாஜி அண்ணா மட்டும் என்னை அழைத்துச் சென்று லோக்கல் டாஸ்மாக்கில் விடிய விடிய கவனித்தார்.

சில ஆண்டுகளாக ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று பணம் கட்டி கிளப்களில் மெம்பர்களாகியிருக்கும் நண்பர்கள் தயவில் புத்தாண்டு விடிகிறது. எட்டு, ஒன்பது மணிக்கு லைட் மியூசிக்கோடும் சரக்கு மற்றும் உணவுவகைகளோடும் மெல்ல சூடு பிடிக்கிறது. மேடையில் குட்டைப்பாவாடையோடு ஃபுல் மேக்கப்பில் போதைக்குரலோடு ஒரு பாடகி பாடிக்கொண்டிருப்பாள். நிறைய பேர் போலியாக நடனம் ஆடுவது போல கையையும், காலையும் ஆட்டிக்கொண்டே சரக்கடிக்கிறார்கள்.

முப்பதுகளின் ஆரம்பத்திலேயே பலருக்கும் தொப்பை. பெரிய தொந்தியோடு கையை காலை ஆட்டியபடியே மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள். முகம் உண்மையின் உரைகல். குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டியோடு வந்து தண்ணி போடுகிறார்கள். மனமொன்றி இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடமுடியவில்லை என்றாலும் வேறு வழியில்லை. கொண்டாடுவதைப் போல நடிக்கவாவது செய்யவேண்டும். ‘பூமாலை பாவையானது’ என்று பாடும்போது வெறுமனேவாவது கைத்தட்ட வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாண ஊரில் கோவணம் அணிந்தவனின் கதியாகிவிடும்.

‘தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா’ - வடநாட்டு சிவப்பு மேனி அஞ்சலைகள் சிலர் கையில் பீர்பாட்டில்களோடு பெருத்த ஸ்தனங்களை குலுக்கி, குலுக்கி ஆடுகிறார்கள். அப்பனும், அண்ணன், தம்பிகளும் சுற்றி நின்று கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். சரியாக பண்ணிரண்டு அடிக்கும்போது ‘இளமை இதோ இதோ’. க்ளப்பின் ஏற்பாட்டில் வாணவேடிக்கை. எல்லோரும் எழுந்து நின்று ‘ஓ’வென்று கத்துகிறார்கள். ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

‘போலிஸ்காரன் பிடிப்பானோ?’ என்ற பயத்தோடு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப வேண்டியதாக இருக்கிறது. அடுத்த தலைமுறை பேய்வேகத்தில் வண்டி ஓட்டுவதை பார்த்து பயமாக இருக்கிறது. அந்த காலத்தில் நம்மைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருப்பார்களோ? ஒவ்வொரு சிக்னலை தாண்டும்போதும் தலை தப்புவது தம்பிரான் புண்ணியம். பேருக்கு சில டிரிங்க் & ட்ரை கேஸ் போடுகிறார்கள். அன்று வண்டி ஓட்டுபவன் எல்லோருமே டிரிங்க் & டிரைவ் தான் எனும்போது பாவம் அவர்களால் என்னதான் செய்யமுடியும்? சர்ச்சுகளில் உற்சாக வெள்ளம். கோயில்களிலும் புத்தாண்டு ஸ்பெஷல் ஆராதனை. இஸ்லாமியர்கள் மட்டும் ஆங்கிலப் புத்தாண்டை கோலாகலத்தோடு வரவேற்பதில்லை என்று தோன்றுகிறது. மானம் கெட்ட இந்துக்கள் இன்னும் சில காலத்தில் கிறிஸ்துமஸை கூட கிருஷ்ணர் சிலை வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

நீண்ட இருசக்கரப் பயணத்தின் இடையே சிரமப் பரிகாரத்துக்கு ஒரு டீக்கடைப் பக்கம் ஒதுங்கினால் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று எஃப்.எம்.மில் தேன் வழிகிறது. எத்தனையோ முறை ரேடியோவில் கேட்ட பாட்டு தான் என்றாலும் இதுவரை ஒரு தடவை கூட முழுமையாக கேட்டதில்லை. ஏனோ நேற்று முழுமையாக கேட்கவேண்டும் என்று தோன்றியது. வயசாயிடிச்சில்லையோ?