31 மே, 2009
புதுப்பேட்டை!
செல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.
கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.
பொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா? உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே? அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.
சீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.
இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.
புதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும்? சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா?
“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா?”
”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”
ரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது?” என்பார்கள்.
ரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா?” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.
”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா?”
“இருக்குண்ணா”
வண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.
“டேங்கு காட்டுண்ணா”
“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”
வண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது!” என்றார்.
தயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.
“சிடி டான் டேங்க் வேணும்னே”
“இன்னா கலரு”
“பிளாக்”
ஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு!” என்றார்.
பையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ!” என்றான் அந்தப் பையன்.
“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே?”
“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை (?) தான் கொடுக்க முடியும்”
வேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.
“எவ்ளோண்ணா”
“கொடுக்குறதை கொடு”
“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ?
“ரெண்டாயிரம் கொடு”
“புதுசே அவ்ளோ தாண்ணா”
“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி?”
நான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.
டேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.
”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு?”
“நந்தனம்னே, நன்றி. கெளம்புறேன்”
வண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவனுக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.
30 மே, 2009
கிம்-கி-டுக்!
தான் எடுத்த முதல் படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த இயக்குனர். பத்திரிகையாளர் பலரையும் தானே போன் போட்டு அழைத்தார். மூத்தப் பத்திரிகையாளர்கள் சிலரை நேரில் சென்றும் அழைத்தார். சாமானியத் தோற்றம் கொண்ட அந்த இயக்குனரை ஏனோ பத்திரிகையாளர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை. பத்திரிகையாளர் காட்சிக்கு வந்தவர்களும் கூட படம் பற்றி சுமாராகவே எழுதினார்கள்.
ஆனால் அதே படம் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, ‘எங்கள் கிம்-கி-டுக்’ என்று கொரிய பத்திரிகைகள் கொண்டாடின. அந்தப்படம் 1996ல் வெளிவந்த க்ரோகோடைல். சியோலின் ஹான் ஆற்றின் கரையில் வாழும் ஒருவன் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணை காப்பாற்றுகிறான். அவளோடு வன்புணர்வு கொள்கிறான். மோசமாக நடத்துகிறான். ஒருக்கட்டத்தில் இருவருக்குமிடையே அன்னியோன்யம் ஏற்படுகிறது. உறவுகளுக்கு இடையேயான முரணை இப்படம் வெகு அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.
கிம்-கி-டுக்-கின் முதல் படத்துக்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு, அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியது. வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களை குறைந்த செலவில் தரமாக எடுக்கத் தொடங்கினார். 2000மாவது ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படமான ’தி ஐல்’ (The Isle) வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, ஐரோப்பா கிம்-கி-டுக்கை தத்தெடுத்துக் கொண்டது.
யார் இந்த கிம்-கி-டுக்?
1960ல் பிறந்த கிம், ஒன்பது வயதாக இருந்தபோது அவரது குடும்பம் தலைநகர் சியோலுக்கு இடம்பெயர்ந்தது. பதினேழு வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பினை நிறுத்திக் கொண்டவர் ஆலைகளில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பின்னர் வயிற்றுப் பாட்டுக்காக பல வேலைகளை கிம் செய்யவேண்டியிருந்தது. ஒருக்கட்டத்தில் பாதிரியாராகும் எண்ணத்தில் தேவாலயம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.
இலக்கின்றி வாழ்ந்தவர் கிம். திடீரென ஒருநாள் அதுவரை தான் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு பிரான்சுக்கு பறந்தார். சிறந்த ஓவியரான கிம் தான் வரைந்திருந்த ஓவியங்களை பாரிஸ் தெருக்களில் பரப்பி விற்பனைக்கு வைத்தார். சொற்ப வருமானம் வந்தது. அதைவைத்து வயிற்றுப்பசியை தீர்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் தான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக திரையரங்கம் சென்று படம் பார்த்ததாக பின்நாளில் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார். சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் படம் பார்த்தபிறகு தூக்கமின்றி அவதிப்பட்டாராம்.
போன பாராவில் இலக்கின்றி வாழ்ந்தவர் இந்த பாராவில் தனக்கொரு இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு கொரியாவுக்கு திரும்புகிறார். நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார். ’ஏ பெயிண்டர் அண்ட் க்ரிமினல் கண்டெம்ட் டூ டெத்’ என்ற அவரது படைப்புக்கு 93ஆம் ஆண்டு ’எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்’ நிறுவனத்தின் விருது கிடைத்தது. இதையடுத்து 94ஆம் ஆண்டில் கொரிய தயாரிப்பாளர் கவுன்சிலிடம் ‘டபுள் எக்ஸ்போஷர்’ என்ற படைப்புக்காக மூன்றாவது பரிசும், 95ஆம் ஆண்டில் ’ஜேவாக்கிங்’ என்ற படைப்புக்காக முதல் பரிசும் வென்றார். கிம்-கி-டுக்-குக்கு கொரிய சினிமா கதவினை அகலமாக திறந்து காத்திருந்தது.
’தி ஐல்’ படத்துக்குப் பிறகு ஐரோப்பாவில் ஒரு முக்கியமான படைப்பாளியாக கிம் கருதப்பட்டாலும், அவரது தாய்நிலத்தில் விமர்சகர்கள் கிம்மினை குதறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு விலங்கென்றும், சைக்கோவென்றும், தருதலை படத்தயாரிப்பாளர் என்றும் தூற்றப்பட்டார். பத்திரிகையாளர்கள் நேரடியாகவே தங்கள் பத்திரிகைகளில் இதுபோன்ற வார்த்தைகளில் விமர்சிக்க, “இனி எந்த கொரியப் பத்திரிகையாளனுடனும் பேசப்போவதில்லை” என்று காட்டமாக சபதமெடுத்தார் கிம். வெகுவிரைவிலேயே அந்த சபதத்தை வாபஸும் வாங்கிக் கொண்டார்.
கலைப்பட லெவலுக்கு எடுத்துக் கொண்டிருந்ததால் கொரிய ரசிகர்கள் கிம்மை கண்டுகொள்ளாமலேயே இருந்தார்கள். 2002ல் வெளிவந்த ’பேட் கை’ திரைப்படம் கிம்மையும் கொரியாவின் வசூல்ராஜா ஆக்கியது. வசூலில் வென்ற படம் என்றாலும் தரத்தில் எந்த குறையையும் வைக்கவில்லை கிம். பெர்லின் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.
அடுத்தடுத்து வெளியான படங்கள் சர்வதேச அங்கீகாரங்களை வென்று குவித்தாலும், ஏனோ ’பேட் கை’ அளவுக்கு கொரியர்களை கவரவில்லை. சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கையை யதார்த்தம் குன்றாமல் படமாக்குவது கிம்மின் பாணி. அமெரிக்க மோகத்தில் அலையும் கொரியர்கள் எதிர்பார்க்கும் ஃபேண்டஸி அவரிடம் குறைவு. ’ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்.. அண்ட் ஸ்ப்ரிங்’ என்ற அவரது திரைப்படம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 2004ஆம் ஆண்டு ’சமாரிடன் கேர்ள்’ திரைப்படம் பெர்லினிலும், ’3-அயன்’ வெனிஸிலும் சிறந்த இயக்கத்துக்கான விருதுகளை அள்ளியது.
மிகக்குறைவான வசனங்களோடு, விஷூவலாகவே படங்களை எடுப்பதை கிம் பாணியாக கொண்டிருக்கிறார். வசனங்கள் குறைவு என்பதாலோ என்னவோ அயல்நாட்டு ரசிகர்களை கிம் மிக சுலபமாக அடைகிறார். சர்வதேசநாடுகளில் கொரியாவின் சிறந்த இயக்குனராக கிம்-கி-டுக் மதிக்கப்பட்டாலும், சொந்தநாட்டில் சர்ச்சைக்குரியவராகவே பார்க்கப்படுகிறார். அடிக்கடி ஏதாவது எடக்குமடக்காக அறிக்கை விட்டு மாட்டிக்கொள்வது கிம்மின் வழக்கம்.
“ஏராளமான சர்வதேச விருதுகளை குவித்ததற்குப் பின்னால் கொரிய ரசிகர்களை சர்வதேச ரசனைக்கு மாற்ற முரட்டுத்தனமாக முயன்றேன். மக்கள் இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” - கிம் விடுத்த ஸ்டேட்மெண்டுகளில் ஒன்று இது. கிம் இப்போதும் சொல்கிறார். ”என்னுடைய அடுத்தப்படம் கொரியாவில் திரையிடப்படாவிட்டாலும், எனக்கொன்றும் கவலையில்லை!”
பின்குறிப்பு : உலகப்படங்கள் பற்றியும், உலகப்பட இயக்குனர்கள் பற்றியும் பேச அப்படங்களை பார்த்தவர்களால் மட்டும்தான் எழுதமுடியும், பேசமுடியும் என்ற நிலை இன்றில்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. தகவல்களை பெறுவது இன்றைய தேதியில் டீக்கடைக்கு போய் டீ வாங்கிக் குடிப்பதைப் போல சுலபமானது. உலகப்பட ரசிகர்கள், வெறியர்கள் என்று ஃபிலிம் காட்டிவரும் பலரும் எப்படி எழுதுகிறார்கள் என்ற பரிசோதனையை நானே செய்துப் பார்த்ததின் விளைவுதான் மேற்கண்ட கட்டுரை. நான் கிம்-கி-டுக்-கின் ஒரு படத்தை கூட பார்த்ததில்லை. உலகப்படங்கள் குறித்த அறிமுகத்தை தமிழ்வாசகர்களுக்கு பெருமளவில் தந்துவரும் சாருவின் மூலமாகவே அவர் அறிமுகம். உலகப்படங்களை பார்க்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் பொறுமையும், சூழலும் அமைவதில்லை.
என்னைப்போன்ற அறிவிலிகளுக்காக சென்னைப்பதிவர்கள் மாதம் ஒரு உலகப்படம் திரையிடும் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். முதல் படமாக கிம்-கி-டுக்கின் ’ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அண்ட் ஸ்பிரிங்’ திரைப்படம் ஜூன் 7, ஞாயிறு அன்று சரியாக மாலை நான்கு மணிக்கு திரையிடப்படுகிறது. இடம் : ஸ்ரீ பார்வதி ஹால், எல்டாம்ஸ் ரோடு, சென்னை.
மேலும் விபரங்களுக்கு : பைத்தியக்காரன் அவர்களின் விரிவான பதிவு!
28 மே, 2009
ஆன்மீகம்!
“அண்ணே! 'ஆன்மீகம்'னா என்ன?”
“தம்பி! 'ஆன்மீகம்'னா வைப்ரேஷன், அதிர்வுகள்!”
“புரியவில்லை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”
“நம்மை ஏதாவது ஒரு விஷயம் ஈர்க்கும்போது நம் உடலளவிலும், மனதளவிலும் சில அதிர்வுகள் ஏற்படும்!”
“அதுமாதிரி நான் உணர்ந்ததில்லையே?”
“கண்டிப்பாக எப்போதாவது உணர்ந்திருப்பாய். உனக்கு தெரிந்திருக்காது. அதீத மகிழ்ச்சியும், அதீத சோகமும் கூட இதுபோன்ற அதிர்வுகளை உன்னில் ஏற்படுத்தும்!”
“சரி ஆன்மீக அதிர்வுகளை எப்படி உணர்வது?”
“உனக்குள் தான் கடவுள் இருக்கிறார். உனக்கே திருப்தியான அளவில் நீ ஏதாவது பணியை செய்துமுடித்தால் அந்த அதிர்வுகள் ஏற்படலாம்!”
“என் திறமையையும், புத்திக்கூர்மையையும் கொண்டு எனக்கான பணிகளை செய்கிறேன். இதில் கடவுள் எங்கு வருகிறார்?”
“அந்த பணி செய்ய உன்னை தூண்டும் நெம்புகோல் தான் கடவுள். சில பேருக்கு தியானம் செய்யும்போது அதிர்வுகள் வரலாம், சில பேருக்கு கோயிலில் வழிபடும்போது அதிர்வுகள் ஏற்படலாம். அதிர்வு ஏற்பட்டாலோ அல்லது ஏற்படாவிட்டாலோ அதற்கெல்லாம் என்ன காரணம் என்றெல்லாம் ஆராய்ந்து சொல்லமுடியாது!”
“எனக்கு தியானம் செய்யத் தெரியாது. நான் கோயிலுக்கு வந்தால் எனக்குள் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?”
“யார் கண்டது? ஒருவேளை ஏற்படலாம். இப்போது அம்மன் கோயிலுக்கு போய்க் கொண்டிருக்கிறேன். என்னுடன் வருகிறாயா? உன்னால் உனக்குள் இருக்கும் ஆன்மீகத்தை அங்கே உணரமுடிகிறதா என்று சோதனை செய்து பார்ப்போம்”
“சரி”
கோயிலில் நல்ல கூட்டம். ஆண், பெண்ணுக்கு தனித்தனி வரிசை. நிரூபிக்கப்படாத ஒரு சக்தியை கண்டு வணங்க இவ்வளவு பேர் வருகிறார்களா என்று அவனுக்கு ஆச்சரியம். தீபராதனை காட்டும்போது அம்மனின் கம்பீரமான எழிலில் அண்ணன் நெக்குறுகிப் போனார். அவரை அறியாமலேயே அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. அம்மனை வழிபட்டு குங்குமம் வாங்கி நெற்றியில் இட்டு கோயில் பிரகாரத்தை சுற்றி வருகிறார்கள்.
“கோயிலுக்கு வருவதே மன அமைதிக்காகவும், எதிர்காலம் குறித்த நம் கவலையை நம்மை வழிநடத்தும் சக்தியிடம் ஒப்படைப்பதற்காகவும் தான். கோயிலுக்கு வந்தவன் அயர்ச்சியோடு திரும்பக் கூடாது. கோயில் பிரகாரத்தில் சற்று ஓய்வெடுத்து உடலுக்கும், மனதுக்கும் எந்த பாரமுமில்லாமல் நிம்மதியாக திரும்ப வேண்டும் என்பது ஐதீகம். ஓரத்தில் அமரலமா?”
கொடிமரம் தாண்டி விசாலமாக இருந்த மண்டபத்தில் இருவரும் அமர்ந்தார்கள்.
“சிலிர்ப்போ, அதிர்வோ உனக்குள் வந்ததா?”
“ஆம்!”
ஆவலோடு, “இதுதான் ஆன்மீகம். முகத்தைப் பார்த்து உனக்கு சிலிர்ப்பு வந்ததா, இல்லை அம்மனின் அலங்காரத்தைப் பார்த்து உனக்கு அதிர்வு வந்ததா?”
“பாதங்களை பார்த்து வந்தது”
“பாதங்களைப் பார்த்தா? ம்... ஒவ்வொருவருக்கும் ஒரு மனம். எல்லா மனமும் ஒரே மாதிரி இயங்குவதில்லை”
“மருதாணியிட்டு சிவந்த பாதங்கள், அப்பாதங்களில் வீற்றிருப்பதால் சற்றே நாணம் கொண்டு தானும் சிவந்துப் போன வெள்ளிக் கொலுசுகள்! கண்டதுமே உடலும், உள்ளமும் பூகம்பம் வந்தது போல அதிர்ந்தது”
“என்ன சொல்கிறாய்? அம்மன் சிலைக்கு மருதாணியிட்டு சிவந்த பாதங்களா?”
“நீங்கள் அம்மன் சிலையை சொல்கிறீர்களா? நான் எனக்கு எதிரில் இருந்த பச்சைத்தாவணி அணிந்த அம்மனை சொல்கிறேன்”
“தம்பி! உனக்குள் அதிர்வை ஏற்படுத்தியிருப்பது ‘ஆன்மீகம்' அல்ல, ‘ஆண்மீகம்'. சுட்டுப் போட்டாலும் உனக்கு 'ஆன்மீகம்' வரவே வராது என்று உறுதியாக நம்புகிறேன்!”
25 மே, 2009
குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!
முதலாம் திருமணநாளின் போது தான் இளவரசியோடு அம்மா, அப்பா காலில் விழுந்து எழுந்தபோது அம்மா சொன்னாள்.
"யாராவது நல்ல டாக்டரா பாரு குமரா!"
"எதுக்கும்மா?"
"உங்களுக்கு அப்புறமா கல்யாணம் ஆன பாங்க்காரம்மா மருமவ கூட ஆறுமாசம்"
"........"
"எங்கே போனாலும் 'மருமவளுக்கு விசேஷமா?'ன்னு கேட்குறாங்க. பதில் சொல்லி மாளலை!"
"சரிம்மா. பார்க்குறேன்!"
டாக்டரம்மாவுக்கு வயது 30களின் மத்தியில் இருந்தது. சினிமாவில் வரும் டாக்டர்களைப் போலவே கோல்ட் ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். ஆனால் வெள்ளை அங்கி எதுவுமில்லாமல் நார்மலாக புடவையில் இருந்தார்.
"ஜெனரலா இன்வெஸ்டிகேட் பண்ணதுலே ரெண்டு பேருக்கும் ப்ராப்ளம் ஒண்ணும் இருக்குறதா தெரியலை. ரெண்டு பேருக்கும் சின்ன வயசு. மேரேஜ் ஆன ஒன் இயர்க்கெல்லாம் பிரெக்னன்ஸி இல்லைன்னு டாக்டரை யாரு கன்சல்ட் பண்ண சொன்னது?"
"வீட்லே பெரியவங்க சொன்னாங்க டாக்டர்!"
"பெரியவங்களுக்கு வேற வேலையே இல்லை. கல்யாணம் ஆனதுமே பேரன், பேத்தி வந்துடணும் அவங்களுக்கு. இன்னும் ரெண்டு வருஷம் ஜாலியா இருங்களேன். கொழந்தைக்கு ஏன் அவ்வளவு அர்ஜண்ட்?"
"எங்க ஃபேமிலியிலே யாருக்குமே இவ்வளவு டிலே ஆனதில்லைன்னு சொல்றாங்க டாக்டர்!"
"ஓக்கே. நோ ப்ராப்ளம். நீ ஃபோலிக் ஆசிட் டேப்ளட்ஸ் டெய்லி எடுத்துக்கம்மா. நீங்க எச்.சி.க்யூ.எஸ்.சும், லைக்கோரெட்டும் டெய்லி எடுத்துக்குங்க. ஒரு மூணு மாசம் வெயிட் பண்ணலாமே? சொந்த பந்தங்க, ஃப்ரண்ட்ஸ் யாராவது கேட்டா தள்ளிப்போட்டிருக்கோம்னு சொல்லுங்க"
மூணுமாசம் கழிச்சி...
"ஓக்கே. நான் இப்போ ஒரு சார்ட் போடுறேன். இந்த சார்ட்லே சொன்னமாதிரி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம்"
"நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு 101 வடைமாலை சாத்துறேன்னு வேண்டிக்க"
"மென்சஸ் ஆனதிலேருந்து சரியா 14ஆம் நாள்லேருந்து ஸ்கேன் எடுத்து எக் சரியா ஃபார்ம் ஆவுதான்னு பார்க்கணும். சரியா ஃபார்ம் ஆச்சின்னா நோ ப்ராப்ளம். இல்லேன்னா அதுக்கேத்தமாதிரி ட்ரீட்மெண்டை மாத்திக்கலாம்.
"புட்டலூரு புள்ளத்தாச்சியம்மனை பார்த்து வளையல் கொடுத்துட்டு வந்துடுங்க"
"எக் ஃபார்ம் ஆவுறதுலே கொஞ்சம் ப்ராப்ளம் இருந்தது. நோ ப்ராப்ளம். மெடிசின் மூலமாவே சரிபண்ணிடலாம்"
"இன்னுமா விசேஷமில்லை. எங்க ஓரவத்தி பொண்ணு கல்யாணம் ஆயி மொத மாசமே நின்னுருச்சி!"
"இப்போ எல்லாம் சரியாதான் இருக்கு. ஏன் ப்ரெக்னன்ஸி ஆவலைன்னு தெரியலை. 15% பேருக்கு ஏன் இன்ஃபெர்ட்டிலிட்டின்னு ரீசன்னே கண்டுபிடிக்க முடியாது"
"குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வெச்சுடுங்க"
"சாரி. ஐ திங்க் ப்ராப்ளம் வித் யுவர் சைட் மிஸ்டர் குமரன். தப்பா எடுத்துக்க மாட்டீண்க்களே? ஒரு சீமென் கவுண்டிங் எடுத்து பார்த்துடலாமா? மார்க் தான் சென்னையில் பெஸ்ட் லேப். அங்கே ரிப்போர்ட் எடுத்துடுங்க. அப்படியே டெஸ்டிசைட்ஸும் ஸ்கேன் பண்ணனும். ப்ரிசிஸனுக்கு எழுதித்தர்றேன்"
"ஐயப்பன் கோயில் ஜோசியருகிட்டே ஜோசியம் பார்த்தீங்களா?"
"உங்க கவுண்டிங்க்ஸ் பக்காவா இருக்கு. இளவரசிக்கு ஒரு எச்.எஸ்.ஜி டெஸ்ட் பண்ணி பார்த்துடலாமா?"
"கருமாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. எலுமிச்சைப்பழம் கொடுப்பாங்க. வெறும் வயித்துலே சாப்பிட்டா அப்படியே நிக்குமாம்"
"ரெண்டு ட்யூப்லயும் ப்ராப்ளம்னு நெனைக்கிறேன். அடுத்த வாரம் அட்மிட் பண்ணுங்க. லேப்ராஸ்கோபி பண்ணி சரிபண்ணிடலாம்"
"இதுக்கெல்லாம் சித்தவைத்தியம் தான் கரெக்ட். டாக்டர் ஜமுனா எனக்கு தெரிஞ்சவங்க தான். போயி பார்க்குறீங்களா?"
"லேப்ராஸ்கோபில சரியாகலை. டயக்னாஸ்டிக் சென்டருக்கு எழுதித்தர்றேன். டயக்னாஸ்டிக் பண்ணா சரியாக சான்ஸ் இருக்கு!"
"மாசத்துக்கு ஒருமுறை மலைவேம்பு அரைச்சிக் கொடுங்க!"
"டயக்னாஸ்டிக் பண்ணதுலே ஒரு ட்யூப் ப்லாக் க்ளியர் ஆயிடிச்சி. சோ, ப்ரெக்னன்ஸிக்கு நெறைய சான்ஸ் இருக்கு!"
"ஷாலினி டாக்டரை பாருங்க. எம்.டி. டி.ஜி.ஓ.வெல்லாம் படிச்சிருக்காங்க. கைராசி டாக்டர்!"
"இன்னும் ஒரு மூணுமாசம் பார்ப்போம். அதுக்கப்புறமா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம்!"
"நான் கல்யாணத்துக்கு வரலை. யாராவது எத்தனை குழந்தைன்னு கேட்பாங்க!"
"ஆறு மாசத்துக்கு ரெகுலரா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம். உங்க ஸ்பெர்ம்ஸை எடுத்து காண்சண்ட்ரேட் பண்ணி உங்க வைஃபோட எக்லே இன்ஜெக்ட் பண்ணிடுவோம். கண்டிப்பா சக்சஸ் ஆகும். இதுவும் சரிபடலைன்னா டெஸ்ட் ட்யூப்...."
"எனக்கு தான் ப்ராப்ளம்ங்கிற மாதிரி டாக்டர் சொல்றாங்களே? நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?
"என்னன்னே புரியலை. இதுவரைக்கும் என்னோட பேஷண்ட்கள்லே யாருக்கும் மூணுவாட்டிக்கும் மேலே ஐ.யூ.ஐ. பண்ணதில்லை"
ஒரு குழந்தையை தத்தெடுக்கும் மனநிலைக்கு குமரன் வந்துவிட்டிருந்தான். இளவரசி மனரீதியாக அதற்கு தயாராக இல்லை. இளவரசியே தயாராக இல்லாதபோது அம்மாவிடம் இதைப்பற்றி பேசக்கூட முடியாது. "வேண்டாம்னு சொல்றவங்களுக்கெல்லாம் பொறக்குது. இவளுக்கு ஒண்ணே ஒண்ணு பொறந்துடக் கூடாதா?"
லட்சங்களும், நாட்களும் இளவரசியின் கண்ணீரைப் போலவே கரைந்தது. இடைவிடாத மருத்துவத்தையும், மருந்தையும் கண்டு சோர்வடைந்து ஒரு ஆறுமாதம் இடைவெளி விட்டார்கள். பிறகு சித்தமருத்துவத்துக்கு போகலாம் என்று நினைத்திருந்த வேளையில்...
"ஹலோ. இளவரசி பேசுறேங்க. லேப் ரிப்போர்ட் பாசிட்டிவ்வாம். ஈவ்னிங் டாக்டரை பார்த்து கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்"
அக்கடாவென்றிருந்தது குமரனுக்கு. மகிழ்ச்சி என்று சொல்லுவதைக் காட்டிலும் நிம்மதி என்று சொல்லலம். என்றாவது ஏற்படும் நடுராத்திரி விழிப்புகளில் கேட்கும் மனசையறுக்கும் விசும்பல் இனி கேட்காது. ஆஞ்சநேயருக்கு வடமாலை, புட்டலூரு நேர்த்தி, குலதெய்வத்துக்கு பொங்கல், திருப்பதி வேண்டுதல் என்று ஏராளமான நேர்த்திக்கடன் அம்மாவுக்கு பாக்கியிருக்கிறது. 'குழந்தை வளர்ப்பது எப்படி?' புத்தகம் கிழக்கில் கிடைக்குமா? இல்லையென்றால் பரவாயில்லை, மணிமேகலையில் கண்டிப்பாக கிடைக்கும்.
இளையராஜா!
வால்மீகி படவிழாவில் இளையராஜா பேசியதை கேட்டு எனக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. யாரையும் இவ்வளவு விட்டேத்தியாக மேடையில் அவர் பேசியதாக நினைவில்லை. சில மேடைகளில் சூடாகியிருக்கிறார். ஆனாலும் தனிப்பட்ட முறையில் பெயரையெல்லாம் சொல்லித் திட்டியதில்லை.
மிஷ்கினைப் பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் எனக்கு கிடையாது. அவரது முதல் படம் மற்றவர்கள் சொல்லுமளவுக்கு ஆஹா, ஓஹோவென்றெல்லாம் எனக்கு படவில்லை. ’வாளமீனுக்கும்’ பாட்டால் தப்பித்தது. இரண்டாவது படமும் சுமார்தான். ஆனாலும் அவரது பேட்டிகளைப் பார்த்தால் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் மாதிரி பேசுவார்.
கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் யோகியாக மாறிவிட்ட இளையராஜா அவர் மீது கோபப்பட என்னதான் காரணம் இருக்கமுடியும்?
மிஷ்கினின் நந்தலாலா படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் பற்றி பேசும்போதெல்லாம் இளையராஜாவைப் பற்றி தவறாமல் சொல்லிவந்தார் மிஷ்கின். சிலநாட்களாக இளையராஜாவின் பெயரை அவர் உச்சரிக்காதது போல தெரிந்தது. ஏதோ புகைச்சல் என்று அப்போதே யூகிக்க முடிந்தது. விசாரித்துப் பார்த்தால் இளையராஜாவை வற்புறுத்தி ஐந்து பாடல்கள் கேட்டு வாங்கியவர் படத்தில் இரண்டு பாடல்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக சொல்கிறார்கள். அதுகூட இயக்குனரின் சுதந்திரம்.
இருப்பினும் இளையராஜாவுக்கு தெரியாமலேயே ‘ஏலிலோ’ என்ற நரிக்குறவப் பாடல் ஒன்றினை படத்தில் மிஷ்கின் சேர்த்ததாக சொல்கிறார்கள். அதாவது அப்படத்தின் இசையமைப்பாளருக்கு தெரியாமலேயே ரெகார்டிங் ஸ்டுடியோவில் ஒரு சவுண்ட் என்ஜினியரின் உதவியோடு இப்பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். இப்படி ஒரு பாடல் படத்தில் இருப்பதையே அப்படத்தின் இசையமைப்பாளர் யாரோ சொல்லி கேள்விப்படுவது கொடுமைதானே?
‘வால்மீகி’ இசைமேடையில் மிஷ்கினை பார்த்ததுமே இளையராஜா பொங்கிவிட்டதின் பின்னணி இதுதான் என்று சினிமா நண்பர்கள் சொல்கிறார்கள்.
இளையராஜா இதுபோல தொழிற்முறை சர்ச்சைகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல. ‘அஞ்சலி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவின் போது இளையராஜாவின் கால்களில் திரையுலக முக்கியஸ்தர்கள் விழுந்து ஆசிப்பெற்றார்களாம். அக்காலக் கட்டத்தில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ராஜ்கிரண் போன்றோர் அம்மாவின் காலில் விழும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாதிரி இளையராஜாவைக் கண்டதுமே காலில் ‘தொப்பென்று’ விழுவது வழக்கம்.
அதே மேடையில் வீற்றிருந்த தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு அது உறுத்தியதாம். உச்சமும், இளையராஜாவும் அடுத்தப் படத்தில் இணைந்திருந்தார்கள். அப்படத்திலும் இளையராஜாவின் கொடி உச்சத்தின் புகழைவிடவும் அதிகமாக பறந்தது. தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் பட்டியலிடப்படும் அப்படத்தின் இயக்கம், நடிப்பினையும் தாண்டி இளையராஜாவின் இசை சிரஞ்சீவியாக வாழுவதற்கு இன்றும் பி.பி.சி.யின் உலகளவில் பிரபலமான பாடல்கள் பட்டியலே சாட்சி. அதன்பின்னரே இளையராஜா குறிவைத்து முதுகில் குத்தப்பட்டதாக சொல்வார்கள்.
இளையராஜாவிடமும் குறை இருக்கிறது. அவரது கர்வம் மற்றவர்களிடமிருந்து அவரை தனிமைப்படுத்தியிருக்கிறது. மற்றவர்களுக்கும் கர்வம் உண்டு. ஆனால் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ நூலை நீங்கள் வாசித்திருக்கலாம். அந்நூலில் இளையராஜா குறித்த கவிஞரின் கருத்துகள் மிக முக்கியமானவை. அவற்றை இளையராஜா ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எழுதியிருப்பார் கவிஞர்.
இளையராஜா தனது கர்வத்தையும், போராட்டக் குணத்தையும் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டாததே அவரது பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது என்பதையும் மறுக்கமுடியாது. திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேக விவகாரம் இதற்கு நல்ல சாட்சி. தலித் மக்கள் இளையராஜாவை அம்பேத்கருக்கு இணையாக தங்கள் சுவரொட்டிகளில் வெளிப்படுத்தியப்போது, ‘சாதி அடையாளம் வேண்டாம்’ என்றுகூறி அதைத் தீவிரமாக எதிர்த்தவர் திருவண்ணாமலை கோவில் விவகாரத்தில் மவுனமாக அடங்கியது, அவர்மீதான இமேஜை உடைத்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ‘நவீன பார்ப்பனர்’ என்ற அவர்மீதான சொல்லடிகளுக்குப் பின்னால் நியாயமுண்டு என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
‘சிம்பொனி’ சர்ச்சை குறித்து இதுவரை இளையராஜாவிடம் இருந்து தெளிவான பதில் வந்ததே இல்லை. அவர் நிஜமாகவே சிம்பொனிக்கு இசையமைத்தாரா இல்லையா என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. அவரது சிம்பொனியை கேட்டுதான் அவரை நேசிக்க வேண்டும் என்ற காரணமெல்லாம் தமிழனுக்கும் இல்லை.
இளையராஜாவின் இசை மட்டுமல்ல, அவரது கர்வத்தையும் சேர்த்தே அவரை ஏனோ எனக்குப் பிடித்திருக்கிறது!
22 மே, 2009
போலி!
"நான் ஒண்ணாவது படிக்கறப்பவே அவன் பிரச்சினை ஆரம்பிச்சிடிச்சி. நான் எந்த கலர் டிரஸ் போடுறனோ அதே கலர்லே அவனும் டிரஸ் பண்ணுவான். நான் எதுவெல்லாம் வாங்குறனோ அதுவெல்லாம் அவனும் அடம்பிடிச்சி வாங்குவான். என்னோட பக்கத்து வீட்டு பையன் என்கிறதாலே நான் என்னவெல்லாம் பண்ணுறேன்னு பாக்குறது அவனுக்கு ரொம்ப ஈஸி"
"இண்ட்ரெஸ்டிங்.. அப்புறம்?"
"ஒவ்வொரு விஷயத்துலேயும் என்னை இமிடேட் பண்ண ஆரம்பிச்சான். என்னை மாதிரியே தலை வாருவான். நான் எந்த கலர் ஸ்கூல் பேக் வெச்சிருக்கேனோ, அதே கலர் பேக் தான் அவனும் வெச்சிருப்பான். எங்க ரெண்டு பேரையும் ரெட்டையர்னே எல்லாரும் நினைக்க ஆரம்பிச்சாங்க"
"ஓஹோ"
"ஆச்சரியம் என்னன்னா என்னை அப்படியே காப்பியடிச்சதாலே என் லெவலுக்கு அவனுக்கும் இண்டலிஜென்ஸ் இருந்தது. டென்த் ஸ்டேண்டர்ட் வரைக்கும் நான் தான் க்ளாஸ் பர்ஸ்ட். அவன் செகண்ட்"
"ம்"
"டென்த் பைனல் எக்ஸாம்லே தான் முதல் தடவையா அவன்கிட்டே தோத்தேன். அவன் ஸ்கூல் பர்ஸ்ட். நான் செகண்ட். எனக்கு ரொம்பவும் கஷ்டமாயிடிச்சி!"
"ஏன்?"
"அவன் திருடினது என்னோட பர்சனாலிட்டியை மட்டும் இல்லே சார். அறிவு, உழைப்பு எல்லாத்தையும் திருடிட்டான். என்னோட பல வருஷ கடுமையான உழைப்பு மொத்தமா ஒரு போலிக்கு போயிடிச்சி"
"கூல்... கூல்... அப்புறம் என்ன ஆச்சி?"
"அப்புறம் ஹையர் செகண்டரிலே நான் எடுத்த க்ரூப்பையே தான் அவனும் எடுத்தான். மறுபடியும் காம்பெடிஷன்.. ஆனா இந்த முறை அவனை நான் ஜெயிக்க விடலே. அவன் அடுத்தது என்ன பண்ணுவான்னு எனக்கு தெரியும்கிறதாலே அவனுக்கு ஏத்தமாதிரி நான் காய் நகர்த்தினேன். +2லே நான் தான் டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட். அவன் ரொம்பவும் நொந்து போயிருப்பான்"
"வெரிகுட்"
"கொடுமை என்னன்னா நான் சேர்ந்த காலேஜிலேயே.. அதுவும் என் க்ளாஸ்லேயே சனியன் மறுபடியும் வந்து சேர்ந்தான்"
"அடக்கடவுளே?"
"அவனாலே பர்சனலா ரொம்பவும் அபெக்ட் ஆனது இங்கே தான் சார்!"
"ஏன்? என்னாச்சி மறுபடியும்?"
"காலேஜ் கிரிக்கெட் டீமிலே சேருரதுக்கு ஏகப்பட்ட காம்பெடிஷன். ஸ்பின் பவுலரான அவன் என்னைப் போலவே ஸ்பீட் போட்டு பிராக்டிஸ் பண்ணான். பேட்டிங்கும் என்னை அப்படியே இமிடேட் பண்ணனுதுனால ஓரளவுக்கு சுமாரா ஆடுவான். செலக்சன் அன்னிக்கு எனக்கு லைட்டா பீவர் இருந்ததால அவன் நல்லா பெர்பார்ம் பண்ணி டீமுலே செலக்ட் ஆயிட்டான். நான் ரிஜக்ட் ஆயிட்டேன்"
"என்ன கொடுமை சார் இது?"
"ஆமாங்க.. அதுக்கப்புறமா தான் ரொம்ப பர்சனலா எனக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சான். நான் லவ் பண்ண பொண்ணையே அவனும் லவ் பண்ணான். ஆனா எனக்கு ஒருநாள் முன்னாடியே அவகிட்டே காதலை சொல்லி பிக்கப் பண்ணிட்டான். அவனுடைய உருவம், செயல், நடவடிக்கை எல்லாத்திலேயும் என்னோட பாதிப்பு உண்டு. நியாயமா பாத்தா அவ என்னைத்தானே லவ் பண்ணியிருக்கணும்?"
"கேட்குறதுக்கே பரிதாபமா இருக்குங்க"
"காலேஜ் முடிஞ்சது. அடுத்ததா வேலைக்கு அப்ளை பண்ணிக்கிட்டிருந்தோம். நான் எந்த கம்பெனியெல்லாம் அப்ளை பண்ணேனோ அங்கவெல்லாம் அவனும் அப்ளை பண்ணான். நான் அட்டெண்ட் பண்ண இண்டர்வ்யூ எல்லாம் அவனும் அட்டெண்ட் பண்ணான். துரதிர்ஷ்டவசமா ரெண்டு பேரும் ஒரே கம்பெனியிலே செலக்ட் ஆனோம்"
"என்னங்க இது? உங்க நிழல் மாதிரி இருந்திருக்காரே"
"அட. ஆமாங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் ஆச்சி. கொழந்தை கூட ஒரே நாள்ல பொறந்ததுன்னா பாத்துக்குங்களேன்"
"!!!!!!"
"அதுக்கப்புறம் தான் ஆகக்கூடாதது எல்லாம் நடந்துடிச்சி. நீங்களே விரிவா பேப்பர்ல படிச்சிருப்பீங்க. டிவியில பாத்துருப்பீங்க. என் வாழ்க்கை சிரிப்பா சிரிச்சிடுச்சி..." மெலிதான கேவலுடன் சொன்னேன்.
"ராகவ். ப்ளீஸ்... ப்ளீஸ்... கண்ட்ரோல் யுவர்செல்ப். ஆக்சுவலா உங்க ப்ராப்ளம் என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. பேசிக்கலா நீங்க ரொம்ப நல்லவர். உங்க போலி கெட்டவர். ஆனா என்ன ஆச்சின்னா உங்களை இமிட்டேட் பண்ணதுனால அவர் பக்காவா ரொம்ப நல்லவரா ஆயிட்டார். அன்பார்ச்சுனேட்லி ஒரு கட்டத்துலே வெறுத்துப் போயி நீங்க அவர் உங்களை இமிடேட் பண்ணக்கூடாதுன்னு உங்களோட ரெகுலர் ஆட்டிட்யூடை மாத்திக்க ஆரம்பிச்சீங்க. சோ, அந்த கட்டத்துலே நீங்க கெட்டவனா மாறிட்டீங்க. ஆச்சரியமான விஷயம் என்னன்னா உங்க போலி நீங்க கெட்டவனா மாறினதுக்கப்புறமா உங்களை இமிடேட் பண்ணுறதை நிறுத்திட்டார். அவர் உண்மையாவே நல்லவனா மாறிட்டார். நல்லா வாழ்ந்துக்கிட்டிருக்கார். நீங்க இப்படி மாறிட்டீங்க... ஓகே நாளையிலேர்ந்து ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சுடலாம்" என்று சொல்லி "பாய்ஸ்" என்று குரல் கொடுத்தார் டாக்டர் குமார்.
கைகள் கட்டப்பட்ட நிலையிலிருந்த என்னை செல்லில் அடைக்க வீல்சேரில் தள்ளிக் கொண்டு போனார்கள் சிப்பந்திகள். ஏன் கைகள் கட்டப்பட்டிருந்தன என்று கேட்கிறீர்களா? பின்னே? ஒரு தீவிர சைக்கோவின் கைகளை கட்டிவைக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?
15 மே, 2009
மரியாதை!
முன்பெல்லாம் பரப்பரப்பாக படப்பிடிப்புகளில் இருந்த இயக்குனர் ஒருவர் வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்கார்ந்து மெகாசீரியல் பார்த்துக் கொண்டிருந்தாராம். சரி படம் இயக்கத்தான் வாய்ப்பில்லை, மெகாசீரியலாவது எடுக்கலாம் என்று தன்னுடைய பழைய படங்களை உல்டா அடித்து மெகா ஸ்க்ரிப்ட் ஒன்றை தயார் செய்தாராம். இந்த நேரத்தில் அரசியல்வாதியாகி விட்ட பழைய ஹீரோ ஒருவர் இயக்குனரிடம் தனக்கு கதை கேட்டாராம். தயாராக இருந்த மெகாசீரியல் ஸ்க்ரிப்ட்டை ஹீரோவிடம் கையளித்தாராம் இயக்குனர். அனேகமாக ‘மரியாதை’ படத்தின் பின்னணிக்கதை இதுவாக இருக்கக்கூடும்.
’வானத்தைப் போல’ படத்துக்குப் பிறகு விஜயகாந்துக்கும் சரி, இயக்குனர் விக்கிரமனுக்கும் சரி, சொல்லிக் கொள்ளும்படியாக சூப்பர் டூப்பர் ஹிட் எதுவுமில்லை. கிட்டத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்தால்... ‘சூப்பர் டூப்பர் ஃப்ளாப்’
விஜயகாந்த், மீரா ஜாஸ்மினோடு டூயட் பாடுவதைப் பார்ப்பவர்கள் கயிற்றில் தொங்கிவிடலாமா என்று விபரீத முடிவெடுக்கக் கூடும். சீன் சுட அவனவன் ஹாலிவுட் படங்களை பார்க்கும் சூழலில்.. வானத்தைப் போல, பூவே உனக்காக என்று பழைய படங்களை டிவிடியில் திரும்ப திரும்ப பார்த்து சீன் பிடித்திருக்கிறார் விக்கிரமன். பூவே உனக்காக சங்கீதா கேரக்டர் மீரா ஜாஸ்மினுக்கு.
விஜய் ஆண்டனியின் இசை இந்த அளவுக்கு கேவலமாக இருந்ததில்லை. ‘டொய்ங்’கென்றெல்லாம் விக்கிரமனுக்கு அந்த காலத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் பின்னணி போட்டிருக்கலாம். இப்போதும் அதையே ஃபாலோ செய்து கழுத்தறுக்க வேண்டுமா? டிஸ்கோதேவுக்கு போகும் மீனாவை அவமானப்படுத்த கேப்டனும் அங்கே போகிறார். கேப்டனும் டிஸ்கோ ஆடி விடுவாரோ என்று அவனவன் பீதியில் உறைந்துப் போன நிலையில் காளையை அடக்கும் ராமராஜன் மாதிரி பாட்டு பாடுகிறார். இவர் பாடுவதைக் கேட்டு அவமானத்தில் மீனா உறைந்துப் போகிறாராம். படத்திலேயே ரொம்ப ரொம்ப யூத்ஃபுல்லாக இருந்த சீனே இதுதானென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
காமெடி என்ற பெயரில் ரமேஷ்கண்ணா செய்யும் கருமாந்திரங்கள் வாந்தியை வரவழைக்கின்றன. எப்போதுமே விக்ரமன் படங்களில் காமெடி மட்டம் தானென்றாலும் இவ்வளவு மொக்கையாக இருந்ததில்லை. கேப்டன் பஞ்ச் டயலாக் அடித்து பயமுறுத்தவில்லை என்றாலும் மற்றவர்கள் பயமுறுத்துகிறார்கள். ‘இப்போ எல்லார் வீட்டிலேயும் எம்.ஜி.ஆர் போட்டோ இருக்குறமாதிரி நாளைக்கு இவரோட போட்டோ இருக்கும்’
குட்டி குட்டி சீன்களில் முன்பெல்லாம் விக்கிரமனின் புத்திசாலித்தனம் தெரியும். அப்போதெல்லாம் புத்திசாலித்தனமாக தெரிந்தது இப்போது படுமுட்டாள் தனமாக தெரிகிறது. அம்பிகாவுக்கு சமையல் கற்றுத் தருவது, விஜயகாந்த் தங்கச்சிக்கு பாட்டு சொல்லித் தருவது என்று மீராஜாஸ்மின் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் படு அபத்தம். விஜயகாந்த் பி.எஸ்.சி (அக்ரி) படித்து சரியான வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர் என்று சிந்தித்த பாவத்தை காசிக்குப் போயும் விக்ரமனால் கழுவமுடியாது.
கொடுமைகளுக்கெல்லாம் கொடுமையாக க்ளைமேக்ஸ்! :-(
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் கூட இப்படம் சகித்துக் கொள்ளப் பட்டிருக்கும். இன்றைய பின்நவீனத்துவ தமிழ்ச்சூழலில் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள், அடுத்த காட்சிக்கு வரிசையில் நிற்பவர்களை செருப்பால் அடித்து துரத்துகிறார்கள்.
ராஜாதிராஜா!
ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினால் ஐநூறு ரூபாய்க்கு படம் காட்டுகிறார்கள். டைட்டிலுக்கு கீழே ‘லோ க்ளாஸ் கிங்’ என்று போடுகிறார்கள். நிஜமாகவே குப்பத்துராஜா தான் இந்த ராஜாதிராஜா. இருபது வருடங்களுக்கு முன்னால் ரஜினிக்கு ராஜசேகர் எழுதிய ஸ்க்ரிப்ட் மாதிரியே இருக்கிறது.
மூன்று அண்ணன்களை டாக்டர், வக்கீல், போலிஸ் என்று படிக்க வைக்கிறார் தம்பி லாரன்ஸ். வில்லி சைதை சைலஜாவிடம் சோரம் போய் சமுதாய விரோதிகளாக மாறிவிட்ட அண்ணன்களை பழிக்கு பழி வாங்குவதுதான் கதை. இளைய தளபதி விஜய் நடித்திருந்தால் ஒருவருட ஓட்டம் நிச்சயம். ஹீரோவுக்கு அவ்வளவு மாஸ். ஆக்சனில் அவ்வளவு ஃபோர்ஸ். இந்தளவுக்கு சூடான ஓபனிங் சீன் சமீபத்தில் பார்த்ததில்லை. ஓபனிங்கே இண்டர்வெல் பிளாக்கில் தொடங்குகிறது. அதன்பிறகு கரம் மசாலா பிளாஷ்பேக். ஆங்காங்கே லைட்டாக அடிக்கும் இரட்டைவசன நெடி. தியேட்டரில் விசில் அடங்க நெடுநேரமாகிறது.
லாரன்ஸ் ரஜினியை இமிடேட்டுகிறார். சக்தி சிதம்பரம் பழைய ரஜினிபடங்களை தூசிதட்டி ஸ்க்ரிப்ட் ரெடி செய்திருக்கிறார். படிக்காதவன், நல்லவனுக்கு நல்லவன், தளபதி, மிஸ்டர் பாரத் என்று பல படங்களில் ஞாபகம் பல சீன்களில் வருகிறது. கருணாஸ் இசையில் பேக்கிரவுண்ட் மியூசிக் குட். குத்துப்பாடல்கள் வெரி வெரி குட். மசாலாவுக்கு உரப்பு சேர்க்க அண்ணன் விஜய டி.ஆர். ஒரு பாட்டு பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.
ஒன்றுக்கு மூன்று ஹீரோயின்கள். எடைகுறைந்த மும்தாஜ் அழகான வில்லி. மெயின் ஹீரோயின் கிரண்ரத்தோட் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. வசனகர்த்தாவே வசனத்தில் சொல்லிவிடுகிறார். ’கிரண் ஒரு பஞ்சரான ட்யூப்பாம். மும்தாஜ் நல்லா காத்தடிச்ச டன்லப் டயராம்’
முதல்பாதியில் மீனாட்சி ஆட்சி. கருப்புசாமி குத்தகைதாரரில் குத்துவிளக்காய் வந்தவர் இப்படத்தில் குத்து குத்துவென குத்தியிருக்கிறார். அழகான லகான் கோழி. அதுவும் 90% உரிச்ச கோழி. இவரது தொப்புளுக்கு மட்டும் சிறப்பு மேக்கப் போட்டிருக்கிறார்கள் போலும். அல்லது ஏதேனும் கிராபிக்ஸா என்று தெரியவில்லை. அழகான தொப்புள். ஹாலிவுட் தரம்.
இரண்டாவது பாதியில் காம்னா வருகிறார். நர்ஸாக வருபவர் தொப்புளுக்கு கீழே நாலேமுக்கால் இஞ்ச் வரைக்கும் தான் உடையணிந்து வருகிறார். இவரது ஓப்பனிங் அபாரம் என்பதால் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஆனாலும் அதற்கும் மேலே எதுவும் காட்டாமல் ஒரு குத்துப்பாட்டோடு இயக்குனர் இவரது கேரக்டரை முடித்து வைத்துவிடுவதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
படத்தில் ஹீரோயின், வில்லியென்று ஆளாளுக்கு மாராப்பு விஷயத்தில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டதால் கேமிராமேன் புகுந்து விளையாடியிருக்கிறார். ஏகப்பட்ட ஐட்டங்களை இறக்குமதி செய்திருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியம் மிளிர்கிறது. படத்துக்குப் பாடல் எழுதியிருப்பவர் மசாலா கிங் பேரரசு. ‘கத்தரிக்கா கத்தரிக்கா காம்பு நீண்ட கத்தரிக்கா’ என்ற இலக்கிய கவித்துவம் மிக்கப் பாடல் மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்து விட்டார் பேரரசு.
படத்தின் முதல் பாதியில் நிறைய ப்ளஸ். இரண்டாவது பாதியில் நிறைய மைனஸ். குறைந்தது 300 காட்சிகளாவது இருப்பதே இப்படத்தின் பலமும், பலகீனமும். ஆனாலும் இந்த லோ கிளாஸ் கிங் வசூலிலும் கிங்காக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். தெலுங்கில் லாரன்ஸுக்கு நல்ல அறிமுகம் உண்டு என்பதால் அங்கேயும் டப்பினால் டப்பு அள்ளலாம்.
ராஜாதிராஜா - மீனாட்சியின் தொப்புளுக்கு ஜே!
11 மே, 2009
பிரச்சாரம் - யாரு பெஸ்ட்?
தேர்தலில் வாக்குகளை கவருவதில் பிரச்சாரத்துக்கு பிரதான இடமுண்டு. திமுகவின் பிரச்சாரம் பொதுவாக நடுத்தர வர்க்கத்தை குறிவைத்தே நடத்தப்படும். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் அடித்தட்டு மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரத்தை நடத்தினார். அடித்தட்டு மக்களுக்கான பிரச்சாரம் தான் எடுபடும் என்பதை தன்னுடைய அறுபதாண்டுக்கால அரசியல் அனுபவத்தில் கடந்த 2006 தேர்தலில் தான் கலைஞர் உணர்ந்தார்.
சிறுவயதில் டி.ராஜேந்தரின் பிரச்சாரத்தை கண்டு அதிசயித்திருக்கிறேன். மேடையில் பேசும்போது விரல் சொடுக்கி பேக்கிரவுண்டு மியூசிக் தந்து ‘லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்.. டண்டனக்கா’ என்று பாடுவார். கூட்டம் சொக்கிப்போய் நிற்கும். தீப்பொறி, வண்ணை தேவகி, வெற்றிகொண்டான் வகையறாக்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு லாயக்கில்லை. இதே லிஸ்டில் வைகோவையும் சேர்த்துக் கொள்ளலாம். லோக்கல் பாலிடிக்ஸ் பேசாமல் உலக அரசியலும், ஈழப்போராட்டமும் பேசி பிரச்சாரம் செய்வதில் அர்த்தமேயில்லை. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரம் இதனால் தான் எப்போதும் விழலுக்கு இறைத்த நீராகிறது. இந்திய கம்யூனிஸ்டாவது விவசாயிகள் பிரச்சினை பற்றிப் பேசுகிறது.
கூட்டங்கள் தவிர்த்துப் பார்த்தால் சுவர் விளம்பரங்கள், பிளெக்ஸ் பேனர்கள் போன்றவை சின்னங்களை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தும் பிரச்சார சாதனங்கள். தேர்தல் கமிஷனின் கெடுபிடியெல்லாம் நகர எல்லைகளோடு முடிந்துவிடுகிறது. தாம்பரத்தை தாண்டினால் எல்லா வருமே ஏதோ ஒரு கட்சி வண்ணத்தை தாங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது.
ஜெ. பிரச்சாரமே செய்யவேண்டியதில்லை. அவர் வந்து நின்றாலே போதும். இம்முறை ஜெ.வின் பிரச்சாரம் புதுமையானது. டெல்லி தலைவர்கள் பாணியில் பிரச்சாரம் செய்திருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு புதியது. ஒவ்வொரு தொகுதியில் ஒரு பிரச்சார மாநாடு. தெருத்தெருவாக வேனில் போய் பேசவில்லை. ஹெலிகாப்டரில் பதவிசாக இறங்கி குவிக்கப்பட்ட பிரம்மாண்ட கூட்டத்தைப் பார்த்து ’தனி ஈழம்’ என்று முழங்கினார். போயஸ் கார்டனிலிருந்து ஆவடிக்குப் போகக்கூட, மீனம்பாக்கம் போய் ஹெலிகாஃப்டரில் பயணித்த அம்மான்னா அம்மாதான். ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டமும் ஒரு மாநிலமாநாட்டுக்கு சமம். இதுபோன்ற கூட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு குறைவு. அக்கட்சி சார்பான ஊடகங்கள் இதை எப்படி பூஸ்ட் செய்து காண்பிக்கிறது என்பது முக்கியம். ஜெயாடிவி அதை சரியாகவே செய்திருக்கிறது. ஆனால் எத்தனை பேர் ஜெயாடிவியை பார்த்திருப்பார்கள்? என்ற கேள்வியை புறந்தள்ளிவிட முடியாது.
கலைஞரின் பிரச்சாரம் மிகக்குறைந்த அளவே இருந்த தேர்தல் இது. திருச்சியில் நல்லக் கூட்டம். சென்னை தீவுத்திடலில் கூடிய கூட்டம் தேசியமுன்னணிக்கு 89ல் கூடிய கூட்டத்தை நினைவுப்படுத்தியது. ஈழவிவகாரத்தில் கலைஞர் மீது திமுக உடன்பிறப்புகளே கடுங்கோபத்தில் இருந்தார்கள். உண்ணாவிரதம், அப்போலோவில் படுத்துக்கொண்டே உரை என்று அடுத்தடுத்து கலைஞர் போட்ட போடு மக்களை கன்வின்ஸ் செய்ததோ இல்லையோ, திமுக உடன்பிறப்புகளை கன்வின்ஸ் செய்திருக்கிறது. என்ன ஆனாலும் சரி. கலைஞர் இருக்கும் வரை உதயசூரியனுக்கே கண்ணை மூடிக்கொண்டு ஓட்டை போட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு பல உடன்பிறப்புகள் வந்திருக்கிறார்கள்.
திமுகவின் பிரச்சாரம் தளபதி ஸ்டாலினையே இம்முறை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. சில காலம் முன்பு உடல்நலம் குன்றியிருந்த தளபதி தாங்குவாரா? என்ற கேள்வி திமுகவினருக்கு இருந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித தமிழ்நாட்டை வேனிலேயே சுற்றி வந்து ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரத்துக்கும் மேலாக தினமும் பிரச்சாரம் செய்து திமுகவின் அடுத்தத் தலைவர் என்ற இமேஜை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் தளபதி. இதுவரை இவர் பாமக தலைவர் மருத்துவர் அய்யாவை இந்த தேர்தலில் சீண்டிய அளவுக்கு முன்னெப்போதும் சீண்டியதில்லை. ‘அரசியல் வியாபாரி’ என்று தளபதி விமர்சித்தது என்னைப் போன்ற திமுகவில் இருக்கும் அய்யா அனுதாபிகளுக்கு கொஞ்சம் அதிருப்தியாக தானிருக்கிறது. ஆனாலும் மக்கள் ரசித்து கைத்தட்டுகிறார்களே? என்ன செய்வது?
தளபதியை விட மிக அதிகமாக இத்தேர்தலில் உழைத்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரத்தை எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனிலேயே பயணித்து சிங்கிள் சிங்கமாய் முரசுக்கு வாக்கு கேட்டு வந்தார். கடந்த முறை தினமலர், விகடன் போன்ற ஊடகங்கள் கைகொடுத்தது. இம்முறை ஊடகங்களின் ஆதரவு பெரியளவில் அவருக்கு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு ஊருக்கும் நேரில் சென்று வாக்கு கேட்ட அவரது பண்பு அவருக்கு கைகொடுக்கலாம்.
மருத்துவர் அய்யாவின் பிரச்சாரம் இந்த முறை கொஞ்சம் டல் தான். அவருக்கு வயதாகிறது இல்லையா? சின்ன அய்யாவை களமிறக்கியிருக்கிறார். “கொல்லைப்புற வழியா ஏன் வந்தேன்னு உன் தங்கச்சியை கேளு. முப்பது வருஷமா உன் மாமாவைக் கேட்டியா?” என்று தயாநிதி ரேஞ்சில் ஸ்டாலினை ஒத்தைக்கு ஒத்தை அழைத்தது சூப்பர். ஆனாலும் தமிழ்நாடு முழுக்கச் செல்லாமல் குறிப்பிட்ட தொகுதிகளிலில் மட்டும் லைட்டாக உடலை வருத்திக் கொள்ளாமல் பிரச்சாரம் செய்தார். எப்போதுமே கிராமங்களில் திண்ணை பிரச்சாரம் செய்யும் பா.ம.க. இம்முறை மேடைப்பிரச்சாரங்களிலே அதிகக் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது.
காங்கிரஸின் பிரச்சாரத்தைப் பற்றி என்ன எழுதுவது? சூரியன் உச்சிக்கு வந்ததுமே பிரச்சாரத்தை முடிச்சுக்கலாமா? என்பார்கள். டெல்லியிலிருந்து யாராவது தலைவர் வந்தால் உடல்நோகாமல் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு போதுமென்ற மனதோடு திருப்தியடைந்து விடுவார்கள். கூட்டணிக்கட்சிகள் இல்லாவிட்டால் காங்கிரஸ் பிரச்சார மேட்டரிலும் ஜீரோதான். திருமாவின் பிரச்சார வீச்சு இம்முறை ரொம்பவும் குறைவு. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
சீமான் - பாரதிராஜா கூட்டம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என் பார்வையில் இந்த கூட்டம் ஒரு பெரிய காமெடியன்கள் கூட்டமாகவே தெரிகிறது. காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரம் என்று இவர்கள் நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தொண்ணூறு சதவிகிதம் அதிமுக கூட்டணித் தொண்டர்கள். மீதி பேர் சினிமாக்காரர்களை வேடிக்கை பார்க்க வந்தவர்கள். இவர்கள் பிரச்சாரம் செய்யாமலேயே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியடையும் நிலையில் தான் இருக்கிறார்கள். தோற்றதும், எங்களால் தான் தோற்றார்கள் என்று மார்தட்டிக் கொள்ளப் போகிறார்கள்.
பிரச்சாரம் என்ற அடிப்படையில் பார்க்கப் போனால் இந்த முறை அம்மா தான் லீடிங். ஆனால் இத்தேர்தலில் மேடை மற்றும் தெருப்பிரச்சாரத்தைவிட முக்கியமான நவீன பிரச்சார மேட்டர் ஒன்றிருக்கிறது. அரசல் புரசலாக கேள்விப்படுவதில் ஒரு வாக்குக்கு ரூ.200/- என்று தொகுதி தொகுதியாக கட்சிப்பேதமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. எந்தக் கட்சி முழுமையாக இந்த மேட்டரில் கவரேஜ் செய்கிறதோ அக்கட்சிக்கே ’பிரச்சார’ அனுகூலம் அதிகம். தோராயமாக பத்து லட்சம் வாக்காளர்களை கொண்ட ஒரு தொகுதியில் 100% பிரச்சாரத்தை ஒரு கட்சி முடித்துவிட்டதாக கேள்விப்பட்டதில் மயக்கமே வந்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக நேற்று மாலையோடு மற்ற பிரச்சாரங்கள் முடிந்துவிட்டாலும் தேர்தல் நாளான நாளை மாலை வரைக்கும் கூட இந்த நவீனப்பிரச்சாரம் நடந்து கொண்டுதானிருக்கும்.
8 மே, 2009
பசங்க!
தந்தைபெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாவதோ, ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் படம் என்று சொல்லி ஆதம்பாக்கம் ஜெயலட்சுமிக்கு அழைத்துப் போனார்கள். ஒரு தலைக்கு ‘75 காசு’ மானியவிலை டிக்கெட். படத்தின் பெயர் ‘எங்களையும் வாழவிடுங்கள்’ என்பதாக நினைவு. சுமார் ஐந்து, ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையாக நடத்தியே அழைத்துச் சென்றார்கள். அது கூடப்பரவாயில்லை. குழந்தைகளுக்கு இதுதான் பிடிக்கும் என்று நினைத்து அவர்கள் போட்ட அந்த பாடாவதிப்படம். இதைவிட குழந்தைகளுக்கு எதிரான பெரிய வன்முறையை யாரும் நிகழ்த்திவிட முடியாது.
குழந்தைகள் படம் என்றாலே முதலில் தொலைந்துப்போவது யதார்த்தம். குழந்தைகள் வயசுக்கு மீறிய செயல் செய்பவர்களாக காட்டுவார்கள். அல்லது பத்து, பண்ணிரண்டு வயது சிறுவர் சிறுமிகளைகூட நான்கைந்து வயதுக் குழந்தைகளுக்கான மனமுதிர்ச்சியோடு அநியாயத்துக்கு குழந்தைத்தனமாக காட்டுவார்கள். அதிலும் மணிரத்னம் படங்களில் காட்டப்படும் குழந்தைகளை நாலு சாத்து சாத்தலாமா என்று இருக்கும். ’அழியாத கோலங்கள்’ படத்துக்குப் பிறகு யதார்த்தமான ஒரு குழந்தைகளுக்கான படம் வந்ததா என்று யோசித்து யோசித்து மண்டை காய்கிறது. ‘பசங்க’ குழந்தைகளுக்கான எதிர்ப்பார்ப்பை சரியாகப் பூர்த்தி செய்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் காட்சிகள் செம கடுப்பு. அதுவும் போலிஸ் ஸ்டேஷனுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் வந்து பசங்க பற்றி புகார் சொல்லுவதெல்லாம் ரொம்பவும் ஓவர். பில்டப் சாங், ஹீரோ - ஹீரோயின் ஓபனிங்கையெல்லாம் ரசிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கத்திரி போட்டிருந்தால் இயக்குனர் நினைத்ததை விட படம் நறுக்கென்று வந்திருக்கும்.
ஒரு பையன் தான் படிக்கும் ஒரு வகுப்பை மட்டுமன்றி, இரு குடும்பங்களில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறான் தன் ஆட்டிட்யூட்டால் மாற்றுகிறான் என்பதுதான் படத்தின் ஒன்லைனர். ஸ்டார்டிங் ட்ரபுள் இருந்தாலும் ரன்னிங்கில் இயக்குனர் செம ஸ்பீட். ‘பசங்க’ நடிக்காமல் வாழ்ந்திருப்பது ஆச்சரியமோ ஆச்சரியம். இயக்குனர் அப்துல்கலாம் ரசிகர் போலிருக்கிறது. படம் முழுக்க கனவு பற்றி நீதிபோதனை ஏராளம். விக்ரமன் மாதிரி நிறைய குட்டி குட்டி ஐடியாக்களை படம் முழுக்க தூவியிருக்கிறார்.
பசங்க கோஷ்டி சேர்ந்து சண்டை போடும்போது ஒரு புத்திசாலி மாணவி சண்டையை நிறுத்த தேசியகீதம் ஒலிக்கச் செய்கிறார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அப்படியே ஸ்டேண்டடீஸில் நிற்கிறார்கள். தியேட்டரில் ஒருவர் கூட எழுந்து நிற்கவில்லை என்பது இயக்குனருக்கு கிடைத்த படுதோல்வி. இந்திய தேசிய எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
ஒரு சின்ன காதலும் உண்டு. காதலன் தாடிவைத்திருந்தாலும் அழகாக இருக்கிறார். சுப்பிரமணியபுரம் ஜெய்யை நக்கலடித்து நடிக்கிறார். காதலி வேகா. தமிழன் எதிர்பார்க்கும், திரையை வியாபிக்கும் பிரம்மாண்ட கவர்ச்சி அம்சங்கள் இவரிடம் குறைவு. குறைவு என்பதைவிட சுத்தமாக இல்லவேயில்லை எனலாம். ஹீரோயினின் இடுப்பைக்கூட காட்டாத முதல் தமிழ் சினிமாவென்றும் இப்படத்தைச் சொல்லலாம். ஆனால் அடிக்கடி புருவத்தை வில்மாதிரி அழகாக நெரிக்கிறார். தெரித்துவிடுகிறது மனசு. வேகா மாதிரி ஃபிகர்களை காதலிக்கவே முடியாது. கட்டிக்க மட்டும் தான் தோணும். கண்ட கண்ட படங்கள் பார்த்து ஹீரோயின்களை பார்த்து லிட்டர் லிட்டராக ஜொள்ளுவிடும் லக்கியே, பசங்க படத்துக்கு விமர்சனம் எழுது என்று கோஷமிட்ட சென்னை ‘சுட்டி’ வாசகி மன்னிக்க. நாய்வாலை நிமிர்த்த முடியாது. ஹீரோயின்களை வர்ணிக்காமல் இருக்க என்னால் முடியவே முடியாது.
இடைவேளைக்குப் பிறகு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்தப் படமோ என்று சந்தேகம் வருகிறது. முழுக்க லால்லலாலா தான். ஃபிரேமுக்கு ஃப்ரேம் செண்டிமெண்ட். க்ளைமேக்ஸ், தாங்கலை சாமி. படம் முழுக்க நிறைய மைனஸ் பாயிண்டுகள். டைரக்டரின் முதல் படம் என்ற பதட்டத்தை, படத்தில் நிறைந்திருக்கும் யதார்த்தத்தை மீறியும் கணிக்க முடிகிறது. ஆனால் வலுவான கதை, திரைக்கதை மூலமாக மைனஸ்களை, பிளஸ்களாக்கும் சாமர்த்தியம் இயக்குனரிடம் இருக்கிறது.
வெளிவந்து ஒருவாரமாகியிருக்கும் இப்படத்தின் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. காண்வெண்ட் மோக ‘ஏ’ செண்டர்களில் இப்படம் சாதிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. நான் படம் பார்த்த அர்பன் சிட்டி காஞ்சிபுரம் அருணா காம்ப்ளக்ஸில் இருபத்தைந்து சதவிகித இருக்கைகள் கூட நிரம்பவில்லை. இலவச டிவி தரும் அரசாங்கம் இப்படத்துக்கு இலவச டிக்கெட் தந்தாவது இப்படத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம் வரிவிலக்கு அளிக்கவாவது பரிசீலிக்கலாம். குடும்பம் குடும்பமாக பார்த்து மக்கள் ஆராதிக்க வேண்டிய படமிது.
தமிழின் சிறந்த படங்களின் பட்டியலில் ’பசங்க’ளுக்கு கட்டாயம் ஒரு இடமுண்டு.
4 மே, 2009
போயஸ்கார்டன் அங்காள பரமேஸ்வரி மகிமை!
சென்னை போயஸ்கார்டன் திருத்தலத்தில் ஸ்ரீ ஜெயலலிதா அம்மா ஆலயத்தில் ஒரு அற்புதம் நடந்தது. அந்த சமயம் ஒரு தேர்தல் நடந்தது. தேர்தலை கண்ட கோபாலசாமி பூசாரி பயப்படுவதை பார்த்ததும், ”நான் பூமியில் தீயசக்திகளை அழிக்க அவதாரம் எடுத்திருக்கிறேன். தர்மத்தை கெடுக்கும் தீயவன் கருணாநிதியைஅழிப்பேன். இந்த அதிசயத்தை கேட்பவர்கள் தமிழ்நாடு முழுக்க இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு பிரச்சாரம் செய்தால் அவர்கள் நினைத்ததை கூட்டு எண் ஒன்பதாக வரும் நாளொன்றில் தீர்த்து வைப்பேன். இந்த அற்புதத்தை கேள்விப்பட்டும் கூட இன்று, நாளை என்று நாட்களை கடத்தி, பிரச்சாரம் செய்யாவிட்டால் அவர்களுக்கும் கருணாநிதி கதிதான் ஏற்படும்” என்று கனவில் கூறிவிட்டு அங்காள பரமேஸ்வரியின் அவதாரம் ஸ்ரீ ஜெயலலிதா அம்மையார் மறைந்துவிட்டார்.
இந்தக் கனவினை நம்பிய பூசாரி கோபாலசாமி ஊரெங்கும் மேடைபோட்டு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். அவருக்கு சரியாக ஒன்பதாவது நாளில் ரூபாய் நாற்பது கோடி கிடைத்தது. இந்த விஷயத்தைக் கேட்டு பாரக் ஒபாமா என்பவர் அமெரிக்கா முழுக்க அனுமார் சிலையோடு போய் இரட்டை விரலை காட்டினார். அவர் இரட்டை விரலை காட்டிய தொண்ணுற்றி ஒன்பதாவது நாளில் அமெரிக்க அதிபர் ஆனார்.
விஷயத்தை கேள்விப்பட்ட தமிழக கம்யூனிஸ்டுகள் மேடையில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பதாக கனவு மட்டுமே கண்டனர். அடுத்த ஒன்பதாவது நிமிடத்திலேயே கிடைக்க வேண்டியது வெயிட்டாக கிடைத்து இன்று ஊரெல்லாம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள். ராமதாஸர் என்ற பக்தரும் அம்மாவையும், இரட்டை இலையையும் மனதுக்குள் நினைத்து போயஸ் கார்டனை சுற்றி ஒன்பது முறை அங்கப்பிரதட்சணம் செய்ய என்ன நினைத்தாரோ அது ஒன்பது நாளில் கிடைத்தது.
இந்த அற்புதங்களை எல்லாம் கேள்விப்பட்டும் கூட இரட்டை இலைக்கு வாக்கு கேட்க மறுத்த கருணாநிதிக்கு முதுகுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. எனவே தமிழீழம் வேண்டுமென்ற கனவோடு இருப்பவர்கள் அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்ஸர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வட அமெரிக்காவென அவரவர் இருக்கும் பகுதிகளில் மேடை போட்டு அங்காளப் பரமேஸ்வரியாம் அம்மன் ஸ்ரீ ஜெயாவை பூஜை செய்து வழிபட்டு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டால் தேர்தல் முடிந்த ஒன்பதாவது நாளே தமிழீழம் மலரும்.
இதைப் படித்துவிட்டு உதாசீனம் செய்பவர்கள் பன்றிக்காய்ச்சல் வந்து தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுவார்கள் என்பது அவர்கள் தலையில் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஓம்சக்தி அற்புதம்! ஆனால் உண்மை!! ஆதிபராசக்தி!!! ஜெயாசக்தி!! சசிசக்தி!!
தொடர்புடைய பதிவு :
அம்மா கொடுத்த ஆன்மபலம்!
ஈழத்தாய் அம்மா!
3 மே, 2009
நியூட்டனின் 3ஆம் விதி!
இரட்டை அர்த்த வசனங்கள். ஹீரோயினிடம் காமக்குறும்பு - இவையெல்லாம் எப்போதுமே எஸ்.ஜே.சூர்யா படங்களில் பொதுவாக இருக்கும் அம்சம். ’நியூட்டனின் 3ஆம் விதி’யும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் தமிழ் சினிமாவில் முதன்முறையாக மொத்தப் படமுமே க்ளைமேக்ஸ் என்ற விதத்தில் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது. கில்லிக்கு பிறகு இந்தப் படத்தில் தான் அனாயச வேகத்தை காணமுடிகிறது. கமல்ஹாசன் நடிக்க வேண்டிய கதாபாத்திரம். எஸ்.ஜே.சூர்யாவும் ‘நியூ’வுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படி ஈர்க்கிறார்.
’வேட்டையாடு விளையாடு’ படத்தை டைட்டிலுக்காகவே பலமுறை பார்க்கலாம். உண்மையில் அந்த டைட்டிலுக்கு கவுதம் உழைத்த உழைப்பு ஒரு தனிப் படத்துக்கானது. நியூட்டனின் 3ஆம் விதி டைட்டில் அந்த அளவுக்கு இல்லையென்றாலும் ஏகப்பட்ட ஷாட்களோடு அசத்தலாக ஆரம்பமாகிறது. இப்படத்தின் டைட்டிலை தவறவிடுபவர்கள் நரகத்துக்குப் போவார்கள்.
காதலியைக் கொன்ற வில்லனை ஹீரோ டைம் சொல்லி இரண்டு மணி நேரத்தில் பழிவாங்க வேண்டும். அதே இரண்டு மணி நேரத்தில் ஹீரோவை காலி செய்ய வில்லனும் சதிராட்டம் ஆடுகிறார். இரண்டு மணி நேரமும் கிண்டி பூங்கா சீசா மாதிரி ஹீரோவும், வில்லனும் சுவாரஸ்யமாக ஏறி இறங்குகிறார்கள். ஜெயம் படத்தில் இடைவேளைக்குப் பிறகு முழுமையாகவே க்ளைமேக்ஸ் என்றால், இப்படத்தில் டைட்டிலிலிருந்தே க்ளைமேக்ஸ் தொடங்குகிறது.
காண்டம் மெஷின் காமெடி, பேண்ட் அவிழ்ப்பது என்று வழக்கமான எஸ்.ஜே.சூர்யா கலகல. சூர்யா சீரியஸ் ஆனதுமே ரோபோ மாதிரி ஆகிவிடுகிறார். க்ளைமேக்ஸில் குருதிப்புனல் கமலுக்கு சவால் விடும் நடிப்பு. மீசை வைத்த சூர்யா அழகாகவே இருக்கிறார். இடுப்பு சைஸ் 28 தான் இருக்கும் போலிருக்கிறது. தோற்றம் கல்லூரிப் பெண்கள் காதலிக்கக்கூடியதாகவே இருக்கிறது. மனுஷனுக்கு நாற்பது வயசு இருக்கும் இல்லை?
இந்தக் காட்சியில் சாயாலிபகத் ஏன் கையைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியாதவர்கள் சன்னியாசியாகப் போகக் கடவது!
ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் இவ்வளவு வேகமான ஸ்க்ரிப்டுக்கு அது தேவையே இல்லை. ஓரிரு ஷாட்களில் சுருக்கமாக காண்பித்திருக்கலாம். ஆங்கிலப்படத்துக்கு நிகராக இப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் ‘கமர்சியல் காம்ப்ரமைஸ்’ செய்துக்கொள்ள பாடல்களை தேவையின்றி ஸ்பீட்ப்ரேக்கராய் நுழைத்திருக்கிறார். ஹீரோயினின் அதீதக் கவர்ச்சி காது கிழிய விசில் அடிக்க வைக்கிறது. என்றாலும் இந்த ஒரு காரணத்துக்காகவே இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தூக்கி உள்ளே போடலாம்.
ஹீரோயின் சாயாலி பகத். சில கோணங்களில் சூப்பர் ஃபிகர். பல கோணங்களில் அட்டு ஃபிகர். சுத்தமாக டைஸே இல்லை. கால் கையெல்லாம் முருங்கைக்காய் மாதிரி ஒல்லிக்குச்சியாய் இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் இவருக்கு தாராள மனதோ என்று நினைத்து ரசிகர்கள் உவகை அடைகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் க்ளிவேஜ் காட்டும்போது ‘பேட்’ பல் இளித்து ஏமாற்றுகிறது. லென்ஸ் வியூவிலும், மானிட்டரிலும் இதைக்கூட பார்க்காமல் கேமிராமேன் புல் புடுங்கிக் கொண்டிருந்தாரா என்னவென்று தெரியவில்லை.
இயக்குனரின் பெயர் தாய்முத்துச்செல்வன். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத இந்தப் படத்தை இயக்குனரின் பெயருக்காகவே பார்த்தேன். சண்டை என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ஹீரோ பத்து பேரை வானில் பறக்கவிடும் ஹீரோயிஸம் இல்லை. ஆனால் இது அக்மார்க் ஐ.எஸ்.ஓ. 9001 ஆக்ஷன் படம். காட்சிக்கு காட்சி என்றில்லை. நொடிக்கு நொடி அசுரவேகம். இயக்குனர் குறைந்தபட்சம் 300 அயல்நாட்டுப்பட டிவிடியாவது ஸ்க்ரிப்ட் தயார் செய்வதற்கு முன்பாக பார்த்திருப்பார்.
கேமிரா, இசை, எடிட்டிங் என்று டெக்னிக்கல் விவகாரங்களும் அபாரம். குறிப்பாக பின்னணி இசை. அயன் படத்துக்கு மொக்கையாக பின்னணி அமைத்த இசையமைப்பாளர் ரெஃபரென்ஸுக்கு இந்தப் படத்தை நாற்பது முறை பார்க்கலாம். குறைகளே இல்லாத படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிறைகள் வெகுவாக நிறைந்தப் படம். ஆஹா ஹீரோ ராஜீவ்கிருஷ்ணா தான் வில்லன். ப்ரெஷ்ஷாக இருக்கிறார். என்னா வில்லத்தனம்? வாயை மட்டும் ஆஞ்சநேயர் மாதிரி எப்போதும் வைத்துக் கொள்வதை தவிர்த்திருக்கலாம்.
வெய்யிலுக்கு ஜே!
சுட்டெரிக்கத் தொடங்கியிருக்கிறது வெய்யில். இன்று முதல் கத்திரி வேறு ஆரம்பமாம். தேர்தல் சூடு வேற சேர்ந்துக்கொள்ள பற்றியெறிந்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. அம்மா பிரச்சாரத்துக்கு காலை பத்து மணிக்கே ‘அகதிகளை’ பிடித்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். கட்சிக்காரர்களின் பாதுகாப்பு முகாம் ராஜபக்ஷேவின் முகாம்களை விட கொடூரமானது.
பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு அம்மாவின் இன்ஸ்ட்ரக்ஷன். சுட்டெரிக்கும் உச்சிவெயில் நேரத்தில் தான், அதாவது ஒரு மணிக்குப் பிறகு அம்மா ஏர்கூலர்களால் குளிர்விக்கப்பட்ட மேடையில் ஏறுகிறார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பாதுகாப்பு வளையத்துக்குள் மாட்டிக் கொண்டவர்களின் நிலை பரிதாபம். ஆண்கள் கூட ஓக்கே. இயற்கை உபாதை தொந்தரவுகளால் அவதிப்படும் பெண்களின் நிலைமைதான் பரிதாபம். சூடான பிரியாணிக்காகவும், ஐநூறு ரூபாய் பணத்துக்காகவும் தமிழினம் இங்கே தேர்தலுக்காக சித்திரவதைப் படுத்தப்படுகிறது. எது எதையோ பற்றியெல்லாம் விசித்திரமான வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் போடும் தேர்தல் கமிஷன் இந்த மனிதவிரோதப் போக்குக்கு மணி கட்டினால் தேவலை.
நல்ல வெயிலில் மேடையேறி பின்வெயில் என சொல்லப்படும் மாலை நான்கு மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் திரும்புவதற்கு அம்மா சொல்லும் காரணம் வினோதமானது. “என் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருக்கிறது. எனவே தான் ஹெலிகாப்டரில் பயணிக்கிறேன். பகலில் பிரச்சாரம் செய்கிறேன்”. அல்குவைதாவோ, தாலிபனோ அம்மாவின் உயிருக்கு நிச்சயம் குறிவைக்கப் போவதில்லை. பின்பு யார்?
முன்பெல்லாம் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பார். இப்போது தான் தமிழீழத்தாய் ஆகிவிட்டாரே? அப்புறம் எப்படி இவர் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படும்? இந்த மாதிரி லாஜிக்கலான கேள்வி கேட்டாலும் கூட திமுகவின் அடிவருடி, தமிழினத் துரோகி, இத்யாதி.. இத்யாதியென்று பின்னூட்டம் போட புலம்பெயர் போராளிகளும், நடுநிலை நாயகங்களும் தயாராக இருக்கிறார்கள் என்பதே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சைக்கோக்கள் மாதிரி நாலுக்கு நாற்பது பதிவுகள் கலைஞரை இழிமொழியால் திட்டி இணையத்தில் பதிவிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தலைவர் பிரபாகரனா, இல்லை தலைவி ஜெயலலிதாவா என்று சந்தேகம் வருகிறது.
* - * - * - * - * - * - *
விஜயகாந்தின் பிரச்சார விளம்பரம் சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. “முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்று கட்டிவிட்ட தொண்டையில் கமறலாக பேசுகிறார். கடந்த தேர்தலில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய தேதியில் பிரச்சாரத்தில் கில்லி விஜயகாந்த் தான். ஹெலிகாப்டரில் ஜெ.வும், காரில் ஸ்டாலினும் இன்னமும் பாதி தமிழகத்தை கூட சுற்றிவர இயலாத நிலையில் தமிழகமெங்கும் பிரச்சாரத்தை வேனிலேயே கம்பீரமாக முடித்துவிட்டு ஓய்வு, ஒழிச்சல் இன்றி இரண்டு நாட்களாக சென்னையை சுற்றி வருகிறார். 70களிலும், 80களிலும் கலைஞரிடமிருந்த தேனிக்கு ஒப்பான உழைப்பை இன்றைய விஜயகாந்திடம் காணமுடிகிறது.
* - * - * - * - * - * - *
திமுகவின் பிரச்சாரம் இம்முறை தளபதி ஸ்டாலினையும், பேராசிரியரையுமே நம்பிக்கொண்டு இருக்கிறது. கலைஞரின் திருச்சி பிரச்சாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்திருக்கிறது. நேற்று மாலை சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்க வேண்டிய நிலையில் உடல்நலக் குறைவால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதன்முறையாக கலைஞரின் பிரச்சாரம் பிரதானமாக இல்லாத நிலையில் திமுக தேர்தலை சந்திக்கிறது. இந்த பேரிழப்பை திமுகவினரால் ஈடுகட்டவே இயலாது. கலைஞரை விட வயதானவராக இருந்தாலும் இம்முறை பேராசிரியர் சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். நல்லவேளையாக ஆற்காட்டார் சென்னையோடு முடங்கிவிட்டார்.
* - * - * - * - * - * - *
தேர்தல் என்றாலே வைகோ தான் நினைவுக்கு வருவார். இம்முறை ஏனோ தொகுதிக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். ’வெற்றி வாய்ப்பு வீக்’ என்ற தகவல் தான் அவரது மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை முடக்கிவிட்டது என்கிறார்கள். ’கை’ சின்னத்துக்கும் ஓட்டு கேட்க வேண்டுமே என்ற சங்கடத்தால் தான் திருமா கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் சிதம்பரமே கதி என்று கிடக்கிறாராம். முதன்முறையாக தேர்தல்களம் காணும் மனிதநேய மக்கள் கட்சியின் சுறுசுறுப்பு அபாரம். இதே வீரியத்தோடு தொடர்ந்து இருந்தால் 2011 சட்டசபைத் தேர்தலின் போது சில அதிர்வு அலைகளை இவர்கள் கிளப்ப முடியும்.
பா.ம.க. நிலைமைதான் படுமோசம். இந்த தேர்தல் பா.ம.க.வின் எதிர்காலத்துக்கு முக்கியமான ஒன்று. மூன்று தொகுதி தேறினாலேயே பெரிய விஷயம் போலிருக்கிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக பா.ம.க.வுக்கு ஆதரவு தந்துகொண்டிருந்த வன்னிய இனம் இம்முறையும் அதே ஆதரவைத் தருமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இந்த தேர்தலில் பெறும் வெற்றியை வைத்து தான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடமோ, அதிமுகவிடமோ பா.ம.க வியாபாரம் பேசமுடியும்.
* - * - * - * - * - * - *
பெரியார் திராவிடர் கழகம் சென்னையில் திமுகவுக்கு எதிரான வன்முறையில் இறங்கியிருப்பது ஆச்சரியம். ஏரியாவுக்கு நாலு பேர் அந்த கழகத்தில் இருந்தாலே அது உலக அதிசயம். ஆளுங்கட்சியான திமுகவின் பிரச்சார அலுவலகத்தை அடித்து நொறுக்குமளவிற்கு இம்ப்ரூவ் ஆகியிருக்கிறார்கள் என்றால் பொருளாதார ரீதியாகவும், ’மற்ற’ ரீதியாகவும் ஈழத்தலைவியிடமிருந்து உதவி கிடைத்திருக்குமென்றே எடுத்துக் கொள்ளலாம். கடைசியில் இக்கழகம் ’அடியாள்’ ரேஞ்சுக்கு ஆகிப்போனது வருத்தமே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)