நண்பர்கள் நர்சிம், நிலாரசிகன், அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆகியோரின் கவிதைத் தொகுதிகள் இந்த நாளில் உயிர்மை வெளியீடாக வெளியிடப்பட இருக்கின்றன.
நர்சிம் - தீக்கடல் - விலை ரூ.40
நிலாரசிகன் - வெயில் நின்ற மழை - விலை ரூ.50
பொன்.வாசுதேவன் - ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
என்னைப் பொறுத்தவரை 'கவிதை' என்றாலே கெட்டவார்த்தை. இருந்தாலும் நண்பர்கள் எழுதிய கவிதைகள் என்பதால் சகித்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை. நண்பர் சரவண கார்த்திகேயனின் சமீபத்திய கவிதை நூலான 'பரத்தை கூற்று' வாசித்ததில் இருந்து ஓரளவுக்கு கவிதை மீதான அலர்ஜி குறைந்திருக்கிறது. கவிஞர்களுக்கு நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ் கிடைப்பார்கள் என்று ஒரு கற்பிதம் இருக்கிறது. எனவே நானும் புதுவருடத்தில் கவிதை, கிவிதை எழுதலாமா என்று அபாயகரமாக யோசித்து வருகிறேன்.
நர்சிம்மின் இரண்டாவது நூல் இந்த 'தீக்கடல்'. முதலாவதாக அகநாழிகை வெளியீடாக வந்திருந்தது 'அய்யனார் கம்மா' சிறுகதைத் தொகுதி. ஆக்சுவலி, யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைப் போட்டு உடைக்கிறேன். அய்யனார் கம்மா-வுக்கு முன்பாக நர்சிம்மின் கட்டுரைத் தொகுதி ஒன்று வெளியாக இருந்தது. அந்த புரொடக்ஷன் டீமில் சுறுசுறுப்புக்குப் பெயர்போன நானும், மாடசாமி என்கிற என்னுடைய நண்பரும் இன்வால்வ் ஆகியிருந்ததால் அம்முயற்சி குறைப்பிரசவமாக லே-அவுட்டோடு நின்றுவிட்டது. இதுபோல நர்சிம்மின் முதல் முயற்சி நின்றுபோனது தமிழிலக்கிய வாசகர்களுக்கு அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா என்பதை எல்லாம் வல்ல இலக்கியமாதா தான் முடிவு செய்யவேண்டும்.
நண்பர் நிலாரசிகனோடு எனக்கு பெரியளவில் பரிச்சயமில்லை. சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் அடிக்கடி பார்ப்போன். 'ஹாய்' சொல்லிக் கொள்வோம். நீண்டகாலமாக தமிழிணையத்தில் இயங்கி வருபவர். ஸ்விட்ச்சு போட்டால் பேன் சுற்றுவதைப் போல, சொடக்குப் போட்டதுமே கவிதைகளை கொட்டக்கூடிய ஆற்றல் பெற்ற கவிஞர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சில கவிதைத் தொகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு திரிசக்தி பதிப்பகத்தில் இவரது சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது.
பொன்.வாசுதேவனைப் பொறுத்தவரை என்ன சொல்வது? வழக்கறிஞர். அச்சகத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இலக்கியத்தோடு இருபதாண்டு பரிச்சயம் கொண்டவர். பத்திரிகையாளர். அகநாழிகை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர். இதுபோல எண்ணற்ற முகங்கள். சர்வநிச்சயமாக இவர் ஒரு சகலகலா வல்லவர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை'தான் இவருடைய முதல் நூல்.
கடைசியாக மச்சி சார்.
சில மாதங்களுக்கு முன்பாக ஒரு புது வலைப்பதிவர் வலைபதிய வந்திருந்தார். எடக்கு முடக்கான மொழியில் தீவிர இலக்கியம் பேசுபவராக இருந்ததால் ட்விட்டர், பிளாக் போன்ற தளங்களில் அவரோடு தொடர்பினை வளர்த்துக்கொண்டேன். சோம்பலான ஒரு ஞாயிறு மதியத்தில் போன் செய்தார். "நான் தாம்பா விமலாதித்த மாமல்லன் பேசுறேன்" என்று ஆரம்பித்தார். ஒரு மணிநேர உரையாடல். அவர் பேசிக்கொண்டே இருந்தார். நான் காதுகளை விரியவைத்து கேட்டுக்கொண்டே இருந்தேன். முன்பின் தெரியாதவர்களிடம் - குறிப்பாக ஒரு ஞானசூனியத்திடம் - அன்னியோன்னியமான உரையாடலை ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக நிகழ்த்த முடிகிறதென்றால் அது கின்னஸ் சாதனையை விட சிறப்பானது.
ஆரம்பத்தில் சார் போட்டு பேசினால் கோபப்படுவார். "யோவ் நானும் யூத்துதான். உங்க சாருவை விட பத்து வருஷம் யூத்து. மாமு, மச்சின்னே கூப்பிடு" என்றார். அவரது வேண்டுக்கோளுக்கிணங்க மச்சி என்று கூப்பிட்டாலும், மரியாதைக்காக 'சார்' போட்டு 'மச்சி சார்' என்று அழைக்கிறோம். இன்று தமிழிணையத்துக்கே செல்லமான 'மச்சி சார்' அவர்.
80களில் தொடங்கி, 90களின் மத்தி வரையிலும் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் தீவிரமாக இயங்கிய இலக்கியவாதி அவர். 35 வயதிலேயே இலக்கியத்தில் இருந்து வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிவிட்டார். அவரது இருபத்து சொச்சம் வயதுகளிலேயே அமரப்புகழை இலக்கியத்தில் பெற்றுவிட்டவர். அவர் எழுதுவதை நிறுத்தி பதினைந்து ஆண்டுகள் கழிந்தும் இன்றும் வாசகர்கள் 'விமலாதித்த மாமல்லன்' என்ற பெயரை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே அவரது புகழுக்கு சான்று. தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று யார் பட்டியலிட்டாலும் இவரது 'சிறுமி கொண்டுவந்த மலர்' கட்டாயம் இடம்பெறும். இந்தக் கதையை விட சிறந்த கதைகளை இவர் எழுதியிருந்தாலும் கூட, சிங்கத்தை ஏனோ சிறுமிக்குள்ளேயே அடக்கி வைக்கிறார்கள்.
சுந்தரராமசாமி அவருக்கு உயிர். அதனால்தான் என்னவோ இன்று தனது தோற்றத்தையும் கூட 'சுரா' பாணியிலேயே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். எல்லா வழியும் ரோமுக்கே என்பது மாதிரி என்ன பேசினாலும் கடைசியாக 'சுரா'வில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார். "எனக்கும், ராமசாமிக்கும் இடையிலே எவனையும் விடமாட்டேன்" என்று சொல்லிவிட்டு பி.எஸ்.வீரப்பா பாணியில் கடகடவென சிரிப்பார்.
மச்சி சார் இலக்கிய உலகத்துக்குள் தொபுக்கடீரென்று தவளைக்காய் குதி குதித்து, ஆமை மாதிரி அவசரப்படாமல் பொறுமையாய், ஆழத்தில் நீந்தி மிகச்சரியாக இவ்வருடத்தோடு முப்பதாண்டுகள் ஆகிறது. ஒரு நாவல் கூட எழுதியதில்லை. அவருக்குப் பிடித்த வடிவம் குறுநாவல். இரண்டு மூன்று குறுநாவல் எழுதியிருக்கிறார். மீதியெல்லாம் சிறுகதைகள். தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத சக்திகளில் ஒருவரான இவரது மொத்தப் படைப்புகள் மொத்தமே முப்பதுதான்.
'விமலாதித்த மாமல்லன் கதைகள் - முழுத்தொகுப்பு', 30 படைப்புகளும், 300க்கும் மேற்பட்ட பக்கங்களில், ரூ.180/- விலையில் அதே டிச. 26ல், அதே விழாவில் வெளியிடப்படுகிறது. சுனாமியைக் கொண்டாட இதுவும் ஒரு காரணம். விமலாதித்த மாமல்லனின் இந்தத் தொகுப்பு நிச்சயம் பல விருதுகளை அள்ளிக் குவிக்க தகுதியானது. ஆனால் விருதுகளுக்குப் பின்னாலான அரசியல் அவருக்கு தெரியாது என்பதால், வாசகர்கள்தான் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
விழாவில் சிறப்புரை ஆற்ற இருப்பவர்கள் : அழகிய பெரியவன், சுகுமாரன், மணா, இந்திரன், ஜே.பி.சாணக்யா, ந.முருகேச பாண்டியன், ஷாஜி, சுப்ரபாரதி மணியன், அ.ராமசாமி, ந.முத்துக்குமார், பவா.செல்லத்துரை, ஸ்ரீநேசன்
நாள் : 26-12-2010, ஞாயிற்றுக்கிழமை. மாலை 5.30 மணி
இடம் : தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலகம், எல்.எல்.ஏ. பில்டிங்,
735, அண்ணா சாலை, சென்னை.
735, அண்ணா சாலை, சென்னை.
குறிப்பு : முன்னதாக 25-12-2010 அன்று மாலை இதே அரங்கில் மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா இருக்கிறது. சாரு இம்முறை பேசப்போகிறார். எந்தப் புத்தகத்தையும் கிழிக்காமல் சினிமா, அரசியல், இலக்கியத் தளங்களில் நடைபெறும் ஊழல்களை கிழிக்க இருக்கிறார். பல கனவான்களின் (கணவன்களின் அல்ல) முகமூடியை டார் டாராக கிழித்தெறியப் போகிறார்.