27 ஜூலை, 2012

ஒலிம்பிக்ஸ் 2012


தண்ணீராகச் செலவிட்டு விட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
செலவு எவ்வளவு?

லண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்குக்கு தோராயமாக எவ்வளவு செலவாகும் என்று நினைக்கிறீர்கள்..ஆயிரம் கோடி? ஐயாயிரம் கோடி? ஸாரி, நீங்கள் ரொம்ப கஞ்சூஸ். ஏனெனில் செலவாகும் தொகை அப்படி.மெரிக்க டாலரில் 14.5 பில்லியன் அளவிற்குச் செலவாகும் என்கிறது எகானாமிஸ்ட் பத்திரிகை. அதாவது இந்திய ரூபாயில் 800,00,00,00,000. பூஜ்ஜியங்களை எண்ணி, ரொம்பச் சிரமப்படாதீர்கள். ஜஸ்ட் எண்பதாயிரம் கோடி ரூபாய் மட்டும்தான். இன்னும் சிலர் 19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அவை மேலும் சில ஆயிரம் கோடிகள்.

என்ன லாபம்?

பல கோடி ரூபாய் பணத்தைப் போட்டு ஒலிம்பிக் நடத்துவதால் இங்கிலாந்திற்கு என்ன லாபம்? ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சியில் வீழ்ந்துக் கொண்டிருக்கும் தம் நாடு, இதனால் மீண்டும் கம்பீரமாக தலைநிமிர வாய்ப்பிருக்கிறது என்று இங்கிலாந்து கருதுகிறது. லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் டிக்கெட் விற்பனை, தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமை, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) போன்றவை மூலம் நேரடியாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும்.

மறைமுகமான பல லாபங்களும் உண்டு. உதாரணத்துக்கு கிழக்கு லண்டனின் ஸ்ட்ராபோர்ட் பகுதி அவ்வளவாக வளர்ச்சியடையாத பகுதி. ஒலிம்பிக் போட்டிகளை சாக்காக வைத்து, இப்பகுதியை நவீனமாக கட்டமைத்திருக்கிறது லண்டன். இப்பகுதியில் அடுத்த முப்பதாண்டுகளில் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளை கடந்த ஏழே ஆண்டுகளில் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இப்போது நேரடியாக கோடிகள் அனாயசமாக புழங்குவது கட்டுமானத்துறையில்தான். மைதானங்கள் கட்டுவது, சாலை ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது என்று ஜரூராக வேலை நடந்து முடிந்திருக்கிறது. ஒலிம்பிக்குக்கு உருவாக்கிய கட்டமைப்பு நகருக்கு எதிர்காலத்தில் ஏராளமான அனுகூலங்களை ஏற்படுத்தித் தரும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இங்கிலாந்தில் உருவெடுத்திருக்கும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது. கட்டுமானத்துறை மட்டுமன்றி போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறது. 2009 பொருளாதார மந்தத்துக்குப் பிறகு, இப்போதுதான் இங்கிலாந்து சுறுசுறுப்பு பெறுகிறது என்று சொன்னால் அது மிகையான கூற்று அல்ல.

லண்டன் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருப்பவர் செபஸ்டியன் கோ. ஒலிம்பிக்கில் இவர் இரண்டு முறை 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர். “உத்தேசமாக நாங்கள் ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இவர்களில் பன்னிரெண்டு சதவிகிதம் பேர் வரை முன்பு வேலையில்லாமல் வாடிக் கொண்டிருந்தவர்கள்” என்கிறார் செபஸ்டியன்.

இம்மாதிரி லாபங்களை பட்டியலிட்டுப் பேசுவது என்பது நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி. ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட இதே அளவு தொகை செலவிடப்பட்டது. ஒலிம்பிக்கின் தாயகம் என்பதால் கவுரவத்துக்காகவாவது மிகப்பிம்மாண்டமான ஏற்பாடுகளை செய்தது க்ரீஸ் அரசு. துரதிருஷ்டவசமாக ஒலிம்பிக் நடத்தியதாலேயே, இப்போது அந்த அரசாங்கத்தின் பொருளாதாரம் வயிற்றுக்கும், வாய்க்கும் போதாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஒலிம்பிக்கால் ஏற்பட்ட பலத்த நஷ்டத்தை தாங்கமுடியாமல் பரிதாபகரமான நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது க்ரீஸ். 1976ஆம் ஆண்டு கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடத்தப்பட்ட ஒலிம்பிக்தான் பொருளாதாரரீதியாக படுதோல்வி அடைந்த ஒலிம்பிக். அப்போது செலவிடப்பட்ட தொகைக்கு, முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போதும் வட்டி கட்டி மாளவில்லயாம் மாண்ட்ரீலுக்கு. இம்மாதிரி லண்டனின் வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய வரலாறும் ஒலிம்பிக்குக்கு உண்டு.

போட்டிகளை நடத்துவதற்கு பெரும் பணம் செலவிடப்பட வேண்டும். ஒலிம்பிக் என்பதால் தரத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள முடியாது. போட்டி நடக்கும் இடங்களை கட்டுவதிலும், அதைச்சுற்றிய போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்கும் முதல்தர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு செலவு செய்து போட்டிகளை நடத்தும் நகரத்துக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டால் அதைப்பற்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கவலைப்பட்டதாக சரித்திரமே இல்லை. இங்கிலாந்து அரசாங்கம் யாரும் ஏற்பாடுகளில் குறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காக சுகாதரம், கல்வி மாதிரியான முக்கியமான துறை முதலீடுகளை ஒலிம்பிக்குக்கு திருப்பிவிட்டதாக ஏற்கனவே பிரிட்டன்வாசிகள் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணமாக செலவிடப்பட்ட கோடிகளை விடுங்கள். அரசுப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோரின் பொன்னான நேரம் இதற்காக செலவிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து, தங்கும் வசதி என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு செலவு செய்து மாளவில்லை லண்டனுக்கு. சர்வதேச ஊடகவியலாளர்கள் மனம் கோணாமல் ‘எல்லா’ வசதிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் தண்ணியாக செலவிட்டு விட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எனினும் கடந்தகால ஒலிம்பிக் செயல்பாடுகளை எடைபோடும்போது லண்டன் ஒலிம்பிக் பொருளாதாரரீதியாகவும் பெரும் வெற்றி பெறும் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 84 லாஸ் ஏஞ்சல்ஸ், 88 சியோல் ஒலிம்பிக் போட்டிகளில் கிடைத்த அபரிதமான லாபம் மாதிரி ஒரு மேஜிக்கை 2012ல் லண்டனும் நிகழ்த்தும் என்கிறார்கள்.

லாப, நஷ்டக் கணக்கெல்லாம் ஆகஸ்ட் 12க்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது போட்டிகள் தொடங்கப்போகிறது. அந்த கோலாகலத்துக்கு முதலில் தயாராவோம்.


கொஞ்சம் மலரும் நினைவுகள்...

ஒலிம்பிக் கொடி


நவீன ஒலிம்பிக்கை உருவாக்கியவரான கூபர்டின் 1914ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கென்று பிரத்யேகக் கொடியை உருவாக்கினார். வெள்ளை பின்னணியில் நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிகப்பு நிறங்களில் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிய ஐந்து வட்டங்கள். இந்த ஐந்து வட்டங்களும் ஐந்து கண்டங்களை குறிப்பிடுகின்றன. 1920ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போதுதான் முதன்முறையாக இந்த கொடி ஏற்றப்பட்டது.



தொடக்க விழா

ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டுப் போட்டிகளின் சுவாரஸ்யத்தை தவிர்த்து அனைவரும் எதிர்ப்பார்ப்பது வண்ணமயமான கோலாகலமான தொடக்கவிழாவைதான். 1908ல் இதே லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்த சம்பிரதாயம் உருவாக்கப்பட்டது.


முதல் சாம்பியன்
 1896ல் மீண்டும் ஒலிம்பிக் நவீனமுறையில் தொடங்கப்பட்டபோது, முதன்முதலாக சாம்பியன் ஆனவர் என்கிற பெருமை அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரரான ஜேம்ஸ் பி.கனோலிக்கு கிடைத்தது.


நிறுத்தப்பட்ட ஒலிம்பிக்

நவீன ஒலிம்பிக் 1896ல் இருந்து தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காரணமாக மூன்று முறை நடத்தப்படவில்லை. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவில்லை.


ஒலிம்பிக் டென்னிஸ்

1924க்குப் பிறகு ஏனோ தெரியவில்லை, ஒலிம்பிக்கில் டென்னிஸ் சேர்க்கப்படவேயில்லை. பிற்பாடு 1988 ஒலிம்பிக்கில் இருந்துதான் மீண்டும் டென்னிஸ் போட்டிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டது.


ஜிம்னாஸ்டிக்ஸ்

ஜிம்னாஸ்டிக்ஸ் என்கிற சொல் கிரேக்க மொழியின் ‘ஜிம்னோஸ்’ என்கிற வார்த்தையில் இருந்து பிறந்தது. இச்சொல்லுக்கு ‘நிர்வாணம்’ என்று பொருள். ஜிம்னாஸ்ஸியம் என்பது உடைகளற்று விளையாடும் விளையாட்டு. புராதன ஒலிம்பிக்கில் இவ்வாறான முறையில்தான் போட்டிகள் நடந்திருக்கிறது.


சாதனை லண்டன்

லண்டனில் ஒலிம்பிக் நடைபெறுவது மூன்றாவது தடவை. ஏற்கனவே 1908, 1948 ஆகிய ஆண்டுகளில் இங்கே ஒலிம்பிக் போட்டிகள் நடந்திருக்கிறது. மூன்றாவது முறையாக ஒரே நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது இதுதான் முதன்முறை என்கிற சாதனை லண்டனுக்கு சொந்தமாகிறது.


சாம்பியன் பிளேட்டோ
புராதன ஒலிம்பிக்கில் தத்துவமேதை பிளேட்டோ ‘பான்க்ரேஷன்’ (Pankration) என்கிற விளையாட்டில் இரட்டை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

  
நோபல் வீரர்
நோபல் பரிசுபெற்ற ஒரே ஒலிம்பிக் வீரர் பிரிட்டனின் பிலிப் நோயல் பேக்கர். இவர் 1920ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 1500 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இவர் அமைதிக்கான நோபல் பரிசினை 1959ஆம் ஆண்டுக்காக பெற்றார்.


ராணி குடும்பத்து குதிரை வீராங்கனைகள்
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும், வீராங்கனைகளும் ஆணா, பெண்ணா என்பதற்குரிய பாலியல் சோதனை நடத்தப்படுவது வழக்கம். 1976 ஒலிம்பிக்கில் ஒரு வேடிக்கையான விஷயம் நடந்தது. பிரிட்டனின் குதிரையோட்டக் குழுவில் இளவரசி ஆனி இடம்பெற்றிருந்தார். மகாராணி எலிசபெத்-2 அவர்களின் மகள் என்பதால் இவருக்கு அச்சோதனை நடத்துவது அர்த்தமற்றது(!) என்கிற முடிவுக்கு வந்த ஒலிம்பிக் கமிட்டி, ஆனியிடம் சோதனை நடத்தி சான்றிதழைப் பெற திராணியில்லாமல் நழுவிக் கொண்டது. நவீன ஒலிம்பிக் வரலாற்றில் பாலினச்சோதனை நடத்தப்படாத ஒரே வீராங்கனை இவர் மட்டும்தான். தனிநபர் மற்றும் குழுப்போட்டி இரண்டிலுமே ஆனி படுதோல்வி அடைந்தார். இளவரசி ஆனியின் மகள் சாரா பிலிப்ஸும் குதிரையோட்ட வீராங்கனையே. இவர் 2004 மற்றும் 2008 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இருமுறையும் இவரது குதிரைக்கு காயமேற்பட்டு, எந்தவொரு போட்டியிலும் ‘திறமை’ காட்டவில்லை.


சோக ஒலிம்பிக்

1972. ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் மறக்கவியலாத சோகத்துக்கு சான்றாகிவிட்டது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களின் மீது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்களோடு, சில பயிற்சியாளர்களும், போட்டி நடுவர்களாக பங்கேற்க வந்தவர்களுமாக சேர்த்து பதினோரு பேர் பலியானார்கள்.


ஒலிம்பிக்கில் தாத்தா, பாட்டி
 ஸ்வீடனைச் சேர்ந்த ஆஸ்கர் ஸ்வான் 1908, 1912, 1920 மற்றும் 1924 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்றவர். 1912ல் தங்கப்பதக்கம் வாங்கியபோது அவருக்கு வயது 65. இன்றுவரை தங்கப்பதக்கம் வாங்கியதிலேயே வயதான வீரர் என்கிற பெருமையை பெறுகிறார். 1924ல் இவரே வெள்ளிப்பதக்கமும் 73 வயதில் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிக வயதில் பதக்கம் வென்றவர் என்கிற சாதனையும் இவருக்கு இன்றுவரை நீடிக்கிறது. அதே நேரம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அதிக வயதான வீரர் என்றும், தன் வயது மூலமாக ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

1972 ஒலிம்பிக்கில் பிரிட்டிஷ் வீராங்கனை லோர்னா ஜான்ஸ்டோன் குதிரையோட்டப் பிரிவில் பங்கேற்றபோது அவருக்கு வயது 71. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அதிக வயதான வீராங்கனை என்கிற சாதனை இன்றுவரை அவரிடம்தான் இருக்கிறது.


குட்டி சாம்பியன்

1936ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் டென்மார்க்கைச் சேர்ந்த இன்கே சோரென்ஸென் வெண்கலம் வென்றார். அப்போது அவருக்கு வயது பதிமூன்று. இன்றுவரை தனிநபர் பிரிவில் இவ்வளவு குறைவான வயதில் யாரும் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதில்லை.


தங்கநாடு

1896ல் இருந்து நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்றுவரை ஒவ்வொரு ஒலிம்பிக்குக்கும் குறைந்தது ஒரு தங்கப்பதக்கமாவது வென்ற நாடு என்கிற பெருமையை இங்கிலாந்து பெறுகிறது.


இரண்டு முறை தங்கம், இரண்டு நாடுகளுக்கு

ஆஸ்திரேலிய ரக்பி வீரர் டேனியல் கேரோல் 1908 ஒலிம்பிக்கில் தன் தாய்நாட்டுக்கு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். 1920லும் அவர் ரக்பியில் தங்கம் வென்றார். ஆனால் இம்முறை அமெரிக்காவின் சார்பில் பங்கேற்றார்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த பலு தூக்கும் வீரர் அகாகைட் காக்கியாஸ்விலி, ஒருங்கிணைந்த ரஷ்ய அணியின் சார்பில் பங்கேற்று பார்சிலோனாவில் நடந்த 1992 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.  மீண்டும் அட்லாண்டாவில் 1996ல் நடந்தப் போட்டியிலும், சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் அடுத்தடுத்து தங்கம் வென்றார். 1996லும், 2000லும் கிரேக்க குடியுரிமை பெற்று க்ரீஸ் நாட்டின் சார்பில் பங்கேற்றார்.
  

ஒலிம்பிக் டிவி

1936ல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் பிரமாதப்படுத்தினார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன்முதலாக போட்டிகள் டிவி கேமிராவில் பதிவு செய்யப்பட்டு, பெர்லின் நகர் முழுக்க பிரும்மாண்டமான திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. வீடுகளில் இருந்த டிவி பெட்டிகளில் ஒலிம்பிக் விளையாட்டு 1948 லண்டன் போட்டிகளின் போதுதான் ஒளிபரப்பப்பட்டது. இதை இங்கிலாந்துவாசிகள் மட்டுமே ரசிக்க முடிந்தது. 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளின் போதுதான் உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் டிவி வாயிலாக விளையாட்டுப் போட்டிகளை தரிசிக்க முடிந்தது.


இரு நாடுகளில் ஒலிம்பிக்

ஒலிம்பிக் வரலாற்றிலேயே ஒரே ஒருமுறைதான் போட்டி நடந்த இடங்கள் இரு நாடுகளில் அமைந்திருந்தது. 1920ல் நடந்த போட்டிகளின் போது படகுப் போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாண்டு ஆகிய இரண்டு கடற்பகுதிகளில் நடத்தப்பட்டது.


குட்டிப்பையன்

1896ல் நடந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் போது கிரேக்க ஜிம்னாஸ்டிக் வீரர் டிமிட்ரியோஸ் லவுண்ட்ராஸ் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தார். அப்போது அவருக்கு வயது பத்து மட்டுமே. இன்றுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற மிகக்குறைந்த வயதுடைய வீரர் என்கிற சாதனையை அவர் தக்கவைத்திருக்கிறார்.

(நன்றி : புதிய தலைமுறை)

26 ஜூலை, 2012

காணாமல் போனவை @ சென்னை


சாதாரண பேனா காணாமல் போனாலே துடிதுடிக்கின்ற இளகியமனதுக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். தலைநகர் சென்னையில் சமீபத்திய சில வருடங்களில் காணாமல் போன முக்கியமான சில லேண்ட்மார்க்குகள் இவை...

உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் ஓட்டல்
சென்னையில் ‘சந்திப்பு’ என்றாலே, ஒரு காலத்தில் உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் தான். நகரின் இதயப் பகுதியில் அமைந்திருந்தது உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன். அண்ணா சாலை கதீட்ரல் சாலை சந்திப்பில். காட்டுக்குள் அமர்ந்திருப்பதைப் போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும். திறந்தவெளியில் வாகனத்தை நிறுத்தி, சூடாக போண்டாவோ, மசாலா தோசையையோ உள்ளே தள்ளலாம். ‘ட்ரைவ் இன்’ எனப்படும் வாகனத்திலிருந்தே உணவு அருந்தும் வசதிகொண்ட சென்னையின் முதல் ஓட்டலாக இது இயங்கத் தொடங்கியது. அட்டகாசமான ஃபில்டர் காபி குடிக்கலாம். இலக்கியமோ, சினிமாவோ எதை வேண்டுமானாலும் நேரம் போவது தெரியாமலேயே அரட்டையடித்து கழிக்கலாம்.

1962ஆம் ஆண்டு 18 ஏக்கர் நிலம், தோட்டக்கலைத் துறையினரிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டது. நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் கூடிப்பழகும் இடமாக நாளடைவில் பரிணாமம் பெற்றது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் சென்னையின் நடுத்தர வர்க்கத்தினருக்கு வேடந்தாங்கலாக உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் திகழ்ந்தது. இடையே ஏராளமான நவீன ஓட்டல்கள் சென்னையில் பெருகிவிட்டாலும், உட்லண்ட்ஸுக்கான மவுசு மட்டும் மக்களிடம் கடைசிவரை குறையவேயில்லை.

சில வருடங்களுக்கு முன்பு தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்ட இந்த இடத்தை மீண்டும் தோட்டக்கலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென அரசுரீதியான அரசியல் அழுத்தம் தரப்பட்டது. உயர்நீதிமன்றம் வரை விவகாரம் சென்று, கடைசியாக 2008ல் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் இழுத்து மூடப்பட்டது. 46 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது.

அப்போதைய அரசாங்கம் அதே இடத்தில் ‘செம்மொழிப் பூங்கா’ அமைத்தது. பூங்காவும் சிறப்பான ஏற்பாடுதான் என்றபோதிலும், அந்த இடத்தை இப்போது கடக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பழைய உட்லண்ட்ஸ் ரசிகர்கள் அன்றைய அரசாங்கத்தை இன்னமும் சபித்தபடியே கடக்கிறார்கள்.
  
மூர் மார்க்கெட்
சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. அதையொட்டி ஒரு காலத்தில் ஒரு வணிகவளாகம் சீரும், சிறப்புமாக செயல்பட்டு வந்தது. 1898ல் ஜார்ஜ் மூர் என்கிற வெள்ளைக்காரத்துரை அடிக்கல் நாட்டி உருவாக்கப்பட்ட வளாகம் இது. பிராட்வே சாலையில் வணிகர்களுக்கு இடம் போதவில்லை என்பதால் இது உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இறைச்சிக்கடை, உணவுப் பொருட்களுக்கான அங்காடிகள், பூக்கடைகள் என்றிருந்த மார்க்கெட் பிற்பாடு பரிணாமம் பெற்று பழங்காலப் பொருட்கள், கலைப்பொருட்கள், புத்தகங்கள், செல்லப் பிராணிகள் என்று பன்முகத்தன்மை பெற்றது. இங்கு ஒரு பொருள் கிடைக்காவிட்டில், சென்னையில் வேறெங்குமே கிடைக்காது என்கிற நிலை கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. பழையப் பொருட்களை மலிவுவிலையில் செகண்ட் ஹேண்ட் ஆக வாங்க வேண்டுமானால் மூர்மார்க்கெட்தான் ஒரே கதி.

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை விரிவுபடுத்த இந்திய ரயில்வே இந்த இடத்தை கையகப்படுத்த நினைத்தது. வணிகர்களின் எதிர்ப்பால் இம்முயற்சி வெற்றிபெறவில்லை. 1985ஆம் ஆண்டு ஒரு ‘மர்மமான’ தீவிபத்தால் இந்த வளாகம் முற்றிலுமாக சீர்க்குலைந்தது. பின்னர் அதே இடத்தில் சென்னைப் புறநகர் ரயில்வே முனையமும், ரயில் முன்பதிவுக்கான நிலையமும் அமைந்தது.

1986ல் மூர்மார்க்கெட் இருந்த இடத்துக்கு மேற்கே ‘லில்லி பாண்ட் காம்ப்ளக்ஸ்’ என்கிற பெயரில் மூர்மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஒரு வளாகத்தை அரசு அமைத்துக் கொடுத்தது. ஆயினும் பழைய மார்க்கெட்டுக்கு இருந்தமாதிரியான வரவேற்பு, புதிய மார்க்கெட்டுக்கு கிடைக்கவில்லை. இடையே தி.நகர் பெரும் வணிககேந்திரமாக உருவெடுத்துவிட்டது. புத்தகங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், டிவிடி, செல்லப் பிராணிகள் என்று பல்வேறு விஷயங்கள் இன்னும் விற்றுக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி விற்பனை இல்லை. பழம்பெருமையின் மிஞ்சிய நினைவுகளாக, சோகையான விளக்கொளியில், கடனுக்கே என்று இயங்கிக் கொண்டிருக்கிறது இப்போதைய மூர்மார்க்கெட்.
  
சென்ட்ரல் ஜெயில்
இந்தியாவின் பழமையான சிறைச்சாலைகளில் ஒன்று சென்னை சென்ட்ரல் சிறைச்சாலை. 1837ல் இயங்கத் தொடங்கிய இச்சிறைச்சாலை 172 வருடங்களாக லட்சக்கணக்கானோரை தங்கவைத்து, கடைசியாக 2009ல் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. இதற்குப் பதிலாக புதிய சிறைச்சாலை நவீன வசதிகளுடன் சென்னை புறநகர் புழலில் உருவாக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தீவாந்தர தண்டனை பெற்ற கைதிகள் அந்தமான் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவார்கள். இந்தியா முழுக்க இருந்து அதுபோல அனுப்பப்படும் கைதிகள் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். கப்பலில் ஏற்றுவதுவரை அவர்களை சிறைபிடித்து வைக்கவே சென்னையில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. பதினோரு ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான சிறைச்சாலையை கட்டுவதற்கு அப்போது ஆன செலவு ரூ.16,496/- மட்டுமே.

சுதந்திரக் காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர்சாவர்க்கர் ஆகியோர் இங்கு அடைபட்டிருந்தார்கள். தமிழக முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் இங்கு சிறைவாசிகளாக இருந்ததுண்டு.

சிறை இடிக்கப்பட்ட இடம் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காகவும், அரசு பொதுமருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இடிக்கப்படுவதற்கு முன்பாக முன்னாள் சிறைவாசிகள் பலரும் நேரில் வருகைதந்து, பழம் நினைவுகளை மீட்டிக் கொண்டது உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணம்.
  
ஜெமினி ஸ்டுடியோ
திரையுலக ஜாம்பவான் கே.சுப்பிரமணியம் 1940ஆம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் இருந்த அந்த இடத்தை விற்றபோது, அதன் மதிப்பு 86,000 ரூபாய். திருத்துறைப்பூண்டி சுப்பிரமணியன் சீனிவாசன் (ஆனந்தவிகடன் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன்) என்பவர் வாங்கி ஜெமினி ஸ்டுடியோஸ் என்று பெயரிட்டார். முன்னதாக இது மோஷன் பிக்சர் ப்ரொடியூஸர்ஸ் ஸ்டுடியோ என்கிற பெயரில் இயங்கி வந்தது.

குதிரைப் பந்தயங்களில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் வாசன். அடிக்கடி ஜெயிக்கிற தன்னுடைய அதிர்ஷ்டக்கார குதிரையான ஜெமினியின் பெயரையே, தன்னுடைய ஸ்டுடியோவுக்கும் சூட்டினார். தென்னிந்திய திரைப்படத்துறையே ஒரு காலத்தில் ஜெமினியில் இயங்கிவருமளவுக்கு, இந்த ஸ்டுடியோ செல்வாக்கு பெற்றிருந்தது. அருகில் இருக்கும் அண்ணா மேம்பாலத்தை, இன்னும் கூடஜெமினி மேம்பாலம்என்றே பழைய சென்னைவாசிகள் குறிப்பிடுகிறார்கள். கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்பட்ட ஸ்டுடியோ, பிற்பாடு பல்வேறு காரணங்களால் களையிழக்கத் தொடங்கியது.

ஸ்டுடியோ இருந்த ஒரு பகுதியில் ஜெமினி பார்சன் என்கிற பெயரில் வணிகவளாகம் உருவானது. ஜெமினி ஸ்டுடியோ இருந்த இடத்தில் இப்போது ‘தி பார்க்’ என்னும் நட்சத்திர ஓட்டல் இயங்கிக் கொண்டிருக்கிறது.
  
கெயிட்டி தியேட்டர்
1914ல் சென்னையில் சினிமா காட்டவென்றே ஒரு நிரந்தரமான அரங்கினை ஆர்.வெங்கையா என்பவர் அமைத்தார்.  தென்னிந்தியாவில் சினிமா தியேட்டர் கட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமையையும் பெற்றார். அந்த அரங்கம் கெயிட்டி. அண்ணாசாலைக்கு வெகு அருகாமையில், நரசிங்கபுரம் ரேடியோ மார்க்கெட்டை ஒட்டி, சிந்தாதிரிப்பேட்டையில் இது அமைந்தது.

மவுனப்படங்கள் காலத்திலேயே கிட்டத்தட்ட இருபதாண்டுகள் தாக்குப்பிடித்த தியேட்டர், பிற்பாடு பேசும் படங்கள் வெளிவந்தபோது சக்கைப்போடு போட்டது. இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி இங்கே தாறுமாறாக ஓடியதாக பழைய திரைப்பட ரசிகர் ஒருவர் நினைவுறுத்துகிறார்.

எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 1983ல் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டது. ஏர்கண்டிஷன் வசதி செய்யப்பட்டது. அதன்பிறகு பெரும்பாலும் ஆங்கிலப்படங்கள். குறிப்பாக சைனீஸ் சண்டைப்படங்கள்.

இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் கெயிட்டி கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை நிறுத்தத் தொடங்கியது. இரண்டாந்தரப் படங்களாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்க, ரசிகர்களின் ஆதரவை முற்றிலுமாக இழந்தது. 2005ஆம் ஆண்டு ஒருவழியாக தன்னுடைய நூற்றாண்டை காண்பதற்கு ஒன்பது ஆண்டுகள் முன்பாகவே தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. தற்போது இங்கே ஒரு வணிகவளாகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வெறும் திரைப்படங்களை மட்டுமே திரையிட்டுக் கொண்டிருந்த அரங்கம் அல்ல இது. ஏராளமான ஆவணப்படங்களையும் திரையிடும் அரங்காக இருந்தது. வன உயிர்கள் குறித்த அற்புதமான ஆவணப்படமான ’ப்யூட்டிஃபுல் ப்யூப்பிள்’ பள்ளி மாணவர்களின் ஆதரவோடு இருநூறு நாட்களுக்கும் மேலாக இங்கே ஓடியது குறிப்பிடத்தக்கது.

(நன்றி : புதிய தலைமுறை)

25 ஜூலை, 2012

உம்மாச்சிக்குட்டியை பிரேமிச்ச நாயருட கதா


நடிகர், கதையாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று சீனிவாசனுக்கு பல முகங்கள் உண்டு. சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜூனியர். மலையாள சினிமாவுலகில் நையாண்டிக்கும், கருப்பு நகைச்சுவைக்கும் பெயர்போனவர். மோகன்லாலின் எக்கச்சக்க சூப்பர்ஹிட் படங்களின் பின்னணியில் இருந்தவர்.

மல்லுவுட்டில் இவ்வளவு செல்வாக்கோடு இருப்பவர் நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்? தன்னுடைய ஒரே மகனை ’லிட்டில் சூப்பர் ஸ்டார்’ ஆகவோ, ‘இளைய தளபதி’யாகவோ உருமாற்றி, மசாலா படங்களில் பஞ்ச் டயலாக் அடிக்கவைத்து கேரளாவுக்கு முதல்வர் ஆக்கியிருக்க வேண்டுமா இல்லையா?

இல்லை. சீனிவாசனின் மகன் வினீத் இயக்குனர் ஆகியிருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த வினீத், தற்கால தென்னிந்திய ஹீரோக்களை போலவே பொலிவான தோற்றம் கொண்டவர். 2008ல் வெளிவந்த ‘சைக்கிள்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். 2009ல் ‘மகன்டே அச்சன்’னில் திரையிலும் தன்னுடைய அப்பா சீனிவாசனுக்கு மகனாகவே நடித்தார். இரண்டு படங்களுமே சூப்பர்ஹிட் என்றாலும், “திஸ் ஈஸ் நாட் மை கப் ஆஃப் காஃபி” என்று முடிவெடுத்தார் வினீத். அருமையான பாடகரான வினீத்துக்கு இசையிலும், இயக்கத்திலும்தான் ஆர்வம். தானே பாடல் எழுதி, பாடி ஆல்பங்களை இயக்கினார். அடுத்து திரைப்பட வாய்ப்புக்காக அலைந்துக் கொண்டிருந்தார்.

சீனிவாசனுக்கும், உச்சநடிகர் ஒருவருக்கும் அப்போது உரசல் ஏற்பட்டிருந்தது. “உன் மகன் எப்படி இங்கே காலூன்றுகிறான் என்று பார்த்துவிடுகிறேன்” என்று உச்சநடிகர் உருமினாராம். தன்னுடைய தனிப்பட்ட விரோதத்தால் மகனுடைய வாழ்க்கை பாதிக்கப்படுமோவென்று சீனிவாசன் கவலைப்பட, அவருடைய கவலையைப் போக்க முன்வந்தார் இன்னொரு உச்சநடிகரான திலீப். நம்மூர் அஜித்தைப் போலவே கேரளாவில் தன்னம்பிக்கைக்கு பெயர்போன திலீப்புக்கு இளையவர்களை மேலே தூக்கிவிடுவதில் ஆர்வம் அதிகம். சொந்தமாக படமெடுத்து வினீத்தை இயக்குனராக களமிறக்கினார் திலீப். ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’. முற்றிலும் புதுமுகங்களை வைத்து, சுமார் இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் ஆறு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து அசத்தியது. கேரளர்கள் மீதான கம்யூனிஸ தாக்கம், அவர்களது இயல்பு வாழ்க்கையில் எவ்வாறாக பிரதிபலிக்கிறது என்பதை படம் பிடித்துக் காட்ட வினீத்துக்கு ஆர்வம்.

முதல் படம் வெற்றியடைந்து விட்டதால் அடுத்த படத்துக்கான கருவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தார் வினீத். எம்.ஜே.அக்பரின் சிறுகதை ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தபோது சட்டென்று மூளைக்குள் பல்பு எரிந்தது. தன்னுடைய இரண்டாவது படத்தின் நாயகன் வினோத்தையும், நாயகி ஆயிஷாவையும் அந்த சிறுகதையில் கண்டுகொண்டார். காதல்தான் கரு என்பதில் உறுதியானார். செக்கஸ்லோவியாவுக்கு பயணமாக சென்றிருந்தபோது ஏற்பட்ட உணர்வெழுச்சியில் மடமடவென்று காட்சிகளை எழுதத் தொடங்கினார். தட்டத்தின் மறயத்து திரைப்படம் வினீத்தின் மனதுக்குள் வளரத் தொடங்கியது. அவர் எழுதிய முதல் காட்சியே நாயகன், நாயகியிடம் காதலைத் தெரிவிக்கும் காட்சிதான். “அக்காட்சியை எழுதும்போது வினோத்தின் மனநிலையிலேயே நானும் இருந்தேன். அவனுடைய படபடப்பான மூச்சுக்காற்றை உணர்ந்தேன். கூடவே ஆயிஷாவின் மிரட்சியையும்” என்கிறார் வினீத்.

ஸ்க்ரிப்ட் தயாரானதும் தனக்கான குழுவினரை தேடினார். முதல் படத்துக்கு இசையமைத்த ஷான் ரஹ்மானையே இப்படத்துக்கும் தேர்ந்தெடுத்தார். பாடல்கள் தேன். பின்னணி வசீகரம். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜோமோன் ஜான் அமைந்தது பத்மநாபசாமியின் அனுக்கிரகம். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ காம்பினேஷனில் மதமறுப்புக் காதலை வலியுறுத்தும் திரைப்படம் உருவாகத் தொடங்கியது. பட்ஜெட் சுமார் நாலு கோடி. ஸ்க்ரிப்ட்டை வாசித்துப் பார்த்த சீனிவாசன் தானே தயாரிக்க முன்வந்தார். ஆனால் செலவு அவரது சக்திக்கும் மீறியது. வினீத்தின் முந்தையப் படத்தை தயாரித்து சீனிவாசனுக்கு திலீப் உதவியதைப் போல, இம்முறை நடிகர் முகேஷ் முன்வந்தார். அவரும் சீனிவாசனும், இணைந்து தயாரித்தார்கள். மலையாளத் திரையுலகில்தான் எத்துணை பெருந்தன்மையாளர்கள் இருக்கிறார்கள்? இம்மாதிரி உதாரணங்களை தற்கால தமிழ் சினிமாவுலகில் தேடினாலும் கிடைப்பதில்லை.

வினீத்தின் முந்தையப் படத்தில் நடித்த நிவின்பாலியே இதிலும் கதாநாயகனாக நடித்தார். வெளிவந்த ஒரு வாரத்திலேயே பதினான்கு கோடிக்கும் மேலாக வசூலித்து ‘ப்ளாக் பஸ்டர் ஹிட்’ அடித்திருக்கிறது படம். மலையாளத் திரைப்பட உலகத்தின் அடுத்த பத்தாண்டுகளை ஆளப்போகிற சூப்பர்ஹிட் இயக்குனரையும் அடையாளம் காண்பித்திருக்கிறது.

“நாயர் பையன், இஸ்லாமியப் பெண்ணை காதலிக்கிறான்” என்கிற அரதப்பழசான ஒன்லைன். நம்மூரில் பாரதிராஜா சக்கைப்போடு போட்ட அதே ‘அலைகள் ஓய்வதில்லை’ கதைதான். விஜய்க்கு நிரந்தரப் புகழ் கொடுத்த அதே ‘காதலுக்கு மரியாதை’ கதைதான். தலைமுறைகள் மாறலாம், காதல் மாறாது என்பதால், மீண்டும் அதே காதலை இன்றைய இளைஞர்களின் மனப்போக்குக்கு ஏற்ப மாற்றியமைத்து வென்றிருக்கிறார் வினீத். மம்முட்டி, லால்களின் ஆதிக்கம் குறைந்தநிலையில், இந்திய சினிமா மசாலாப் போக்கோடு போரிட முயன்று, தன்னுடைய பொருளாதார போதாமையால் தடுமாறிக் கொண்டிருந்த மலையாளத் திரையுலகுக்கு சரியான திசையை காட்டியிருக்கிறது ‘தட்டாத்தின் மறயாது’.

மலையாளி இந்து நாயர் பையன் என்று காட்டுவதற்காக நாயகன் பாரம்பரிய பட்டுவேட்டி, சட்டை, சந்தனம் என்றில்லாமல் நார்மலான கேரளனாக இருக்கிறான் என்பது பெரும் ஆறுதல். மரபு என்பது கேரளர்களுக்கு உயிர். அந்த தேன்கூட்டில் பெரிய சலசலப்பின்றி கல்லெறிந்திருக்கிறார் வினீத். கட்டுப்பெட்டியான இஸ்லாமியக் குடும்பம் என்று நாயகியின் பின்புலம் காட்டப்பட்டாலும், உலகமயமாக்கலின் தாக்கத்தில் அவர்களும் அவர்களையறியாமலேயே மாறியிருப்பதை நாயகி பாத்திரம் வாயிலாக இயல்பாக காட்டுகிறார். நாயகியின் அக்காவுக்கோ, அம்மாவுக்கோ கிடைக்காத வாய்ப்புகள் இவளுக்கு கிடைக்கிறது. இவளை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். இசைக்குழுவில் பாட அனுமதிக்கிறார்கள்.

கண்டதும் காதல் என்றாலும் தனக்கும், அவளுக்கும் பொருந்துமா என்று தன் வீட்டுச்சூழலை மையப்படுத்தி வினோத் சிந்திக்கும் காட்சிகள் அபாரம். அரசியல் பின்புலம் கொண்ட பணக்காரக் குடும்பத்தின் பெண். மதம் ஒரு பிரச்சினை என்றால், வர்க்கம் இன்னொரு பிரச்சினை. காலையிலிருந்து இரவுவரை மாத்ரூபூமியில் மூழ்கிப்போய் முத்தெடுக்கும் அப்பா (அப்படி என்னத்தைதான்யா இந்த மாத்ரூபூமிகாரன் எழுதறான்?), சாணி அள்ளுவதற்காகவே பிறந்த தங்கையைப் பார்த்து நொந்துபோய், ”மாடு வளர்ப்பதற்கு பதில் நம் வீட்டில் நாய் வளர்க்கக்கூடாதா?” என்றெல்லாம் வகை தொகையில்லாமல் சிந்தித்து தனக்கும் அவளுக்குமான யதார்த்த முரணை மெல்லிய நகைச்சுவையோடு பகிர்ந்துக் கொள்கிறான். “ச்சே.. ஒரு அட்டாச்ட் பாத்ரூம் கூட இல்லை. ஆயிஷா கிட்டே எப்படி இதுதான் என் வீடுன்னு காட்டுவேன்”

இவனுடைய காதலுக்கு இன்னொரு பிரச்சினை. நாலு வருடமாக ஆயிஷாவை இன்னொருவன் காதலிக்கிறான். அவன் ஆயிஷா இடம்பெற்ற இசைக்குழுவில் பாடும் பாடகன். பாடுபவர்கள் அழகாக வேறு இருந்துத் தொலைக்கிறார்கள். போதாக்குறைக்கு அவனுக்கு சிக்ஸ்பேக் வேறு உண்டு. “கேரளாக்காரனுக்கு எதுக்கு சிக்ஸ் பேக்? மம்முட்டியும், மோகன்லாலும் சிக்ஸ்பேக் வெச்சிக்கிட்டா திரியறாங்க?”

ஆயிஷாவுடன் முதன்முறையாக பழகும் சந்தர்ப்பம் வினோத்துக்கு கிடைக்கிறது. கேமிரா, இசை, இயக்கம், எழுத்து, நடிப்பு என்று அனைத்து அம்சங்களுமே கவித்துவமாக இயங்கும் காட்சி அது. “வடகேரளாவின் தென்றல் காற்று என் முகத்தில் வீசியது. இருளான வராண்டாவில் அவளும், நானும் மட்டும் நடந்துக் கொண்டிருந்தோம். நிழலில் இருந்து வெளிச்சத்துக்கு அவள் நடந்த காட்சி, முகிலிலிருந்து நிலவு வெளிவரும் காட்சிக்கு ஒப்பானதாக இருந்தது”

தடங்கல்கள் தடையல்ல. எப்படியோ, அடித்துப் பிடித்து ஆயிஷாவிடம் காதலை சொல்கிறான் வினோத். இவன் எதிர்ப்பார்க்கும் பதில் வர தாமதமாகிறது. வினோத்தின் கம்யூனிஸ நண்பன் ஒருவன் சொல்கிறான். “மற்றவர்களின் உணர்வுகளை மதி. அவளுக்கு உன்னை காதலிக்க ஆர்வமில்லை. திரும்பத் திரும்பத் தொல்லை தராதே”. நன்கு யோசித்துப் பார்த்ததில் வினோத்துக்கும் இது உண்மையென்றே படுகிறது. கடைசியாக ஒருமுறை அவளை பார்த்துவிட்டு மட்டும் வருவதற்காக செல்கிறான். இவன் எதிர்பாராவிதமாக இவனிடம் அவள் தனது காதலை ‘பிராக்டிக்கல்’ ஆக சொல்கிறாள். “இறந்துப்போன என்னுடைய அம்மாவுக்குப் பிறகு என்னை இவ்வளவு முக்கியமாக நினைத்த வேறொருவரை நான் சந்திக்கவில்லை. எனவே உன்னை காதலிக்கிறேன்”

அவளிடம் காதலைப்பெறுவதில் வெற்றி கண்டவன், தங்கள் காதலை எப்படி வெற்றியடைய வைத்தான் என்பதுதான் உருக உருக, சிரிக்க சிரிக்க, லேசான டிராமாவோடு சொல்லப்பட்டிருக்கும் மீதி கதை. இரண்டாம் பாதியில் நம்மூர் விக்ரமன் பாணியில் பாசிட்டிவ்வாக வாழ்க்கையில் முன்னேறுகிறான் நாயகன். உள்ளூர் போலிஸ் உதவியோடு ஹெல்மெட் விற்று பணம் சம்பாதிக்கிறான். பிறகு ஒரு பர்தா கடை திறக்கிறான். “உலகத்திலேயே பர்தா ஷாப் வைத்திருக்கும் ஒரே இந்து நான்தான்”

ஒரு சாதாரண காதல்கதையை அனைவருக்கும் பிடிக்கும் மாதிரியான ட்ரீட்மெண்டில் கொடுத்திருப்பதுதான் வினீத்தின் வெற்றி. காட்சிகளை சுவாரஸ்யப்படுத்த அவர் சின்ன, சின்ன போங்கு ஆட்டம் ஆடுகிறார். அதுவும் பார்வையாளர்களை செமையாக வசீகரிக்கிறது என்பதால் இந்த வயலேஷனை எல்லாம் மன்னித்துவிடலாம். படத்தின் கதைக்கு நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், இரண்டு குட்டி ஃப்ளாஷ்பேக்குகள் அசத்துகிறது. ஒன்று குட்டி கேங் ஸ்டோரி. இன்னொன்று வினோத்தின் தங்கையை ஒரு தலையாக ‘இன்று போய் நாளை வா’ பாணியில் லவ்வும் இன்னொரு இளைஞனின் ப்ளாஷ்பேக். ஆனால் இந்த காட்சிகளையும் நைச்சியமாக கதைக்குள் இணைக்கும் கலையால்தான் வினீத் மலையாளத் திரையுலகின் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர்களில் ஒருவராக உருமாறுகிறார்.

நம்மூர் இளைஞனுக்கு திராவிடப் பாதிப்பு எப்படியோ, அப்படியே கேரள இளைஞனுக்கு கம்யூனிஸப் பாதிப்பு இருக்கிறது. சிறு சிறு காட்சிகளில் இதை வினீத் வெளிப்படுத்தவும் செய்கிறார். லேசான நையாண்டியோடு கம்யூனிஸம் பேசினாலும், அந்த சித்தாந்தம் மீது அவர் கொண்டிருக்கும் மரியாதையையும் புரிந்துகொள்ள முடிகிறது. படம் முழுக்க ஆங்காங்கே பின்னணியில் சேகுவேரா போஸ்டர்களில் காணப்படுகிறார். முக்கியமான காட்சி ஒன்றில் போஸ்டரில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் அக்காட்சியை வெகுவாக சுவாரஸ்யப்படுத்துகிறது. “நீங்கள் இன்று எங்களை கொன்றொழிக்கலாம். ஆனாலும் கடைசியில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்”

மலையாளப் படம், அதுவும் காதல் படம். நிச்சயம் ‘பிட்’ இருக்குமென்று, ஆவலோடு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு நம்மூர் ஊன்னா தான்னாக்கள் தியேட்டருக்கு ஓடுவார்கள். சாரி ஜெண்டில்மென். இந்தப் படத்தில் ஹீரோயினின் முகத்தைத் தவிர வேறெதையும் காட்டவேயில்லை. இப்போதெல்லாம் எந்தப்பட ஹீரோயினைப் பார்த்தாலும், “என்னா தொப்புளுடா” என்றுதான் அதிசயிக்கத் தோன்றுகிறது. நீண்டகாலத்துக்குப் பிறகு ஓர் நாயகியைப் பார்த்து “என்னா அழகுடா” என்று ஆச்சரியம் கிளம்புவது இந்தப் படத்தில்தான். இஷாதல்வாருக்கு ஒருமாதிரியான இரானியத் தோற்றம். பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி மாதிரி மங்களகரமாக இருக்கிறார். அளவான லிப்ஸ்டிக், பாந்தமான உடைகள் என்று திரையில் பார்த்ததும் நமக்கே காதலிக்கத் தோன்றும்போது.. வினோத், ஆயிஷாவை கண்டவுடன் காதலில் விழுந்ததில் ஆச்சரியமேதுமில்லை.

வினீத் சீனிவாசன் – மலையாளத் திரையுலகில் நிகழ்ந்திருக்கும் அதிசயம். இதே அதிசயத்தை பாரதிராஜா, தன் மகன் மனோஜ் மூலமாக இங்கே நிகழ்த்தியிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக அம்மாதிரி அதிசயங்கள் நமக்கு வாய்ப்பதில்லை.