ஆர்.பாலகிருஷ்ணன் என்கிற சுத்தபத்தமான பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது. பால்கி
என்றால் போதும். விளம்பர ஏஜென்ஸிகளின் வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். லிண்டாஸ்
விளம்பர நிறுவனத்தின் தலைவர். ‘கறை நல்லது’ என்கிற கருத்துக்கு சொந்தக்காரர்
என்றால்தான் இந்தியாவுக்கே இவரை தெரியும்.
இளையராஜாவின் வெறிபிடித்த ரசிகர். இளையராஜாவின் இசையால்தான் இவருக்கு சினிமா
என்கிற துறையே பிடித்தது. சினிமாவில் எழுபதுகளை கட்டி ஆண்டவர்கள் அனைவரும்
பால்கிக்கு ஆண்டவர்கள். அவ்வகையில்தான் அமிதாப். திடீரென்று ஒருநாள் இரவில் பால்கி
இயக்குனர் ஆனார். அவரது ஆண்டவர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் ஹீரோ. படம் ‘சீனி
கம்’. இரண்டு ஆண்டுகள் கழித்து இன்னொரு படம் எடுத்தார். இதிலும் அமிதாப்தான் ஹீரோ.
படம் ‘பா’. இரண்டு படத்துக்குமே இளையராஜாதான் இசை.
அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுந்தபோது ஒரு படம் தயாரிக்கப் போகிறேன், நான்
இயக்கப் போவதில்லை என்றார். சில நாட்கள் கழித்து தான் தயாரிக்கும் படத்தை இயக்கப்
போகிறவர் கவுரி ஷிண்டே என்று அறிவித்தார். கவுரி யாருமில்லை பால்கியின்
திருமதிதான்.
கவுரி படமெடுப்பது பெரிய சாதனையோ, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிகழ்வோ
இல்லை. அவரது படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பதுதான்
குறிப்பிடத்தக்க நிகழ்வாக இதை மாற்றியிருக்கிறது. நம் விருதுநகரைச் சேர்ந்த
ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று இந்திய மொழிகளை ஒரு
கலக்கு கலக்கினார், இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்பதெல்லாம் ஏற்கனவே
தெரிந்த விஷயம்தான். 96ல் அணில்கபூரின் அண்ணனை திருமணம் செய்துக் கொண்டார். 97ல்
திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார். கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள்
கழித்து நடிக்க வருகிறார் என்பதால்தான் கவுரியின் திரையுலகப் பிரவேசம் இங்கே
முக்கியத்துவம் பெறுகிறது.
படத்தின் பெயர் இங்கிலீஷ் விங்கிலீஷ். அமெரிக்காவுக்கு ஒரு குடும்பம்
குடிபெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு இங்கிலீஷ் தெரியாது.
குடும்பத்தில் குழந்தைகள், கணவர் எல்லோரும் இதற்காக அவரை கிண்டலடிப்பது வழக்கம். அமெரிக்க
குடியுரிமை அதிகாரிகூட “தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசி, எங்கள் நாட்டில் என்ன
செய்யப் போகிறாய்?” என்று கேட்கிறார். ஸ்ரீதேவி எப்படி இங்கிலீஷ் கற்றுக் கொள்கிறார்
என்பதுதான் மீதி கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை இழைத்து, என்.ஆர்.ஐ குடும்பங்கள் காட்டும் பகட்டினைப் பற்றிய பகடிதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.
கடந்த ஆகஸ்ட் 13 அன்று இப்படத்தின் ட்ரைலர் மும்பையில் வெளியிடப்பட்டது.
அன்றுதான் ஸ்ரீதேவியின் 50வது பிறந்தநாளும் கூட. ஒரே வாரத்தில் யூட்யூப் தளத்தில்
பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்ரைலரை பார்த்து ரசித்திருக்கிறார்கள். படம்
ஷ்யூர் ஹிட், குறிப்பாக வெளிநாடுகளில் வசூல் அள்ளோ அள்ளுவென்று அள்ளும் என்று
பேசிக்கொள்கிறார்கள். ஸ்ரீதேவிக்காகவும், பால்கிக்காகவும் சிறப்புத் தோற்றத்தில்
நடிக்க அமிதாப் ஒப்புக் கொண்டாராம். இந்திப்படவுலகில் அமிதாப்பின் cameo role, படங்களுக்கு
பெரிய ஓபனிங்கை பெற்றுத் தருவதாக ஒரு செண்டிமெண்ட். சமீபத்தில் கூட ‘போல் பச்சன்’, நூறு கோடி அள்ளியதற்கு அவர் ஒரு பாடலில் தோன்றியதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் என்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் தங்கள் மொழியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவியை ரசிக்கப் போகிறார்கள். குறிப்பாக இப்படத்தின் தமிழ் வெர்ஷன் அக்டோபரிலோ, நவம்பரிலோ (அனேகமாக
தீபாவளிக்கு கூட இருக்கலாம்) வெளியாகும்போது பரபரப்பு பற்றிக்கொள்ளப் போகிறது.
ஏனெனில் இந்தியில் அமிதாப் நடிக்கும் ரோலில் தமிழில் தோன்றப் போகிறவர் அல்டிமேட்
ஸ்டார் அஜித்குமார். இதற்காக தயாரிப்பாளர் அளிக்க முன்வந்த சம்பளப் பணம் வேண்டாமென்று
மறுத்திருக்கிறார் தல. மேலும் போக்குவரத்து, உடை, உதவியாளர் பேட்டா, என்று அவருக்கான இதரச் செலவுகள் அனைத்தையும் தன்னுடைய சொந்த செலவிலேயே செய்துக் கொண்டிருக்கிறார். மூத்த கலைஞரான
ஸ்ரீதேவிக்கு செய்யும் மரியாதையாக இதை ‘தல’ எடுத்துக் கொண்டாராம்.
துக்கடா (மொழி அரசியல் ஆர்வமில்லாதவர்கள் வாசிக்க வேண்டாம்) :
படத்தின் ட்ரைலரைப் பார்த்தேன். அமெரிக்க குடியுரிமை அதிகாரியிடம் ஸ்ரீதேவி
சொல்கிறார். “எனக்கு ஆங்கிலம் சரியாக வராது”
அதிகாரி கேட்கிறார் “ஆங்கிலம் தெரியாமல் எங்கள் நாட்டில் எப்படி இருப்பாய்?”
அதிகாரியோடு பணியாற்றும் இந்தியர் ஒருவர் உடனே சொல்கிறார். “இந்தி தெரியாமலேயே நீ எங்கள் நாட்டுக்கு வரலாம்”
இந்த காட்சி ட்ரைலரில் ஓடும்போது வட இந்திய திரையரங்குகளில் க்ளாப்ஸ் எகிறுகிறதாம். வட இந்தியர்களின் மொழிப்பற்றை நாம் பாராட்டுகிறோம். அதே நேரம் இதே கருத்தை எழுபது/எண்பது வருடங்களாக தம் மொழிக்காக திராவிட இயக்கம் இங்கே முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மொழிக்காக போராடியவர்களை ரவுடிகள் என்று இந்தியாவின் பிரதமரே கூட விமர்சித்திருக்கிறார். “இந்தி தெரியாதா? நீ எப்படி இந்தியன் ஆவாய்?” என்கிற வட இந்தியர்களின் அகம்பாவமான கேள்வியை இதுவரை கோடிமுறையாவது தென்னிந்தியர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இந்திக்காரர்கள் தங்களை பெருந்தன்மையான இந்தியர்களாக இன்று உலக அரங்கில் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அந்த குடியுரிமை அலுவலகக் காட்சி ‘இந்தி’யப் பெருந்தன்மையைதான் வலியுறுத்துகிறது. உண்மையில் நாம்தான் பெருந்தன்மையாளர்கள். தமிழ் தெரியாமலேயே தமிழ்நாட்டில் தொழில்நடத்தி, பரம்பரை பரம்பரையாக பிழைப்பு நடத்த இந்திக்காரர்களை அனுமதித்திருக்கிறோம். இங்கே வாழ்பவர்கள் தமிழ்தான் கற்கவேண்டும், தமிழ்தான் பேசவேண்டும் என்று நாம் நம் மொழியை திணித்ததில்லை. இந்தியாவின் பிராந்திய மக்களுக்கு இருக்கும் இந்த பெருந்தன்மையை, இந்தி பேசும் மெஜாரிட்டியினர் மதிக்கவேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும்.