ஜெய்சங்கர் – கர்ணன் காம்பினேஷனில் சில படங்கள் காமிக்ஸ் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன. ஹீரோ, வில்லன், துணைபாத்திரங்கள் எல்லாருமே பதினெட்டாம் நூற்றாண்டின் அமெரிக்கப் பாணியில் இருப்பார்கள். இசையும் கூட மேற்கத்திய ஸ்டைல்தான். ‘பழிக்குப் பழி’ என்கிற கவுபாய் காமிக்ஸ்களின் ஆதாரமான ஒன்லைனரையும், ஒட்டுமொத்த ‘லுக்’கையும் தவிர்த்து, இப்படங்களில் பெரிய காமிக்ஸ் தாக்கம் இல்லை. ஒருமாதிரியாக தமிழர் கலாச்சாரத்துக்கு விசுவாசமான படங்களே அவை.
அதன்பிறகு இந்தியாவில் யாருக்கும் காமிக்ஸில் சினிமா இருப்பதாக தோன்றவில்லை. எண்பதுகளில் இறுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் டோலிவுட்டில் மெகாஸ்டார் ஆகிவிட்ட சிரஞ்சீவியை பில்டப் செய்ய இந்திய புராண மரபுக்கதைகள் போதவில்லை. எனவே இயக்குனர்களின் பார்வை ஐரோப்பிய, அமெரிக்க காமிக்ஸ்கள் மீது பாய்ந்தது. ஸோரோ, ராபின்ஹூட், டெக்ஸ்வில்லர் என்று காமிக்ஸ் ஹீரோக்களின் கலவையாக சிரஞ்சீவியின் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. கவுபாய் தொப்பி அணிந்திருப்பார். ஸோரோவின் உடை. ராபின்ஹூட்டின் குணநலன்கள் என்று மிக்சராக சில படங்களில் சிரஞ்சீவி தோன்றினார்.
தொடர்ச்சியாக 2010ல் தமிழில் வெளிவந்த ‘இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சரமாரியாக சக்கைப்போடு போட்டது. தீவிரமான காமிக்ஸ் ரசிகரும், சில சிறப்பான காமிக்ஸ் கதைகளை வரைந்து, எழுதி உருவாக்கியவருமான சிம்புதேவன், முல்லை தங்கராசனின் கனவை நிஜமாக்கினார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வெளிவந்த கவுபாய் திரைப்படம் இதுதான். ஜெய்சங்கர்புரம், அசோகபுரம் என்று அவர் உருவாக்கிய பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க கிராமங்களை, மில்லெனியம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள். காமிக்ஸ் ரூட்டை கரெக்ட்டாக பிடித்து, வெற்றி கண்டு சிம்புதேவன் நிரூபித்துவிட்ட பிறகும் கூட நம் இயக்குனர்களுக்கு ஏனோ காமிக்ஸில் ‘கதை’ இருப்பதாக தோன்றவில்லை.
காமிக்ஸ் வெறியரான மிஷ்கின், தன் பால்யகாலத்து ஹீரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ‘முகமூடி’ என்று தன் படத்துக்கு டைட்டில் வைத்தார். இப்படத்தின் ஆரம்பத்தில் ‘முத்து காமிக்ஸ்’ வழங்கும் ‘முகமூடி’ என கிரெடிட் கொடுக்கப் போகிறார் என்றுகூட கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. ஆனால் அப்படம் ஹாலிவுட், சைனீஸ் படங்களின் தாக்கத்தில் இருந்ததே தவிர, காமிக்ஸ் வாசனையற்றதாகவே வந்தது. இத்தனைக்கும் மிஷ்கினின் மற்ற படத்தின் ஷாட்கள், உற்றுப்பார்த்தால் காமிக்ஸ் கட்டங்களின் கோணத்தில்தான் படமாக்கப்படுகிறது என்பதை உணரலாம். இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இந்தியில் சைப்அலிகானின் ‘ஏஜெண்ட் வினோத்’ போன்ற படங்களில் 007 காமிக்ஸ் எஃபெக்ட்டை ஓரளவுக்கு உணரலாம் (அந்தப் படமே கூட காமிக்ஸ் வடிவில் புத்தகமாக வந்தது).
டைட்டிலே ‘சில் அவுட்’ 2டி அனிமேஷனில் கட்டம் கட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சிலந்தி என்கிற பெண் இசைக்கருவியை வாசிக்கும் டைட்டிலின் இறுதிக் கட்டம் 2டியிலேயே ரவுண்ட் ட்ராலி எஃபெக்ட்டில் அனிமேஷன் செய்யப்பட்டிருக்கிறது (அனிமேட்டர் யாரையாவது விசாரித்துப் பாருங்கள் இந்த காட்சியின் சிறப்பை). சராசரி திரைப்பார்வையாளனுக்கு இது எந்த வித்தியாசத்தையும் தராது. ஆனால் நீங்கள் காமிக்ஸ் ஆர்வலராக இருக்கும் பட்சத்தில் இதைக் கண்ட நொடியிலேயே விசில் அடிப்பது உறுதி. ஒவ்வொரு காட்சியுமே காமிக்ஸ் கட்டங்களாகதான் மாறுகிறது. இதுவரை நாம் சினிமாவென்று எதையெல்லாம் நம்பிக் கொண்டிருந்தோமோ அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுபு. தமிழுக்கு முக்கியமான வரவு இவர்.
கோரமலை என்றொரு கற்பனை கிராமம். இங்கே ஆறுவித மக்கள் இருக்கிறார்கள். முதலாம் வகை சோம்பேறி. இரண்டாம் வகை சோம்பேறி. மூன்றாம் வகை சோம்பேறி. நான்காம் வகை சோம்பேறி. ஐந்தாம் வகை சோம்பேறி. ஆறாம் வகை?
உதாரணத்துக்கு இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ‘தொங்காபுரம் ஜமீன்’. ஜமீனின் பெயருக்கு கீழே ‘ஆண்மை தவறேல்’ என்று எழுதியிருக்கும். சட்டென்று பார்த்தால் இதுவெறும் நேம் போர்ட்தான். உங்களுக்கு ‘அமலாபுரம்’ தெரிந்திருக்க வேண்டும். அதன் சிறப்புகளை அறிந்திருக்கும் பட்சத்தில் ‘ஆண்மை தவறேல்’ ஏன் இடம்பெற்றிருக்கிறது என்பது புரிந்து புன்னகைப்பீர்கள். தொங்காபுரத்தை எப்படி அமலாபுரத்தோடு ஹைப்பர்லிங்க் செய்யவேண்டுமென்றால் ‘தொங்கா’ என்கிற தெலுங்குவார்த்தைதான் க்ளூ. ஜமீன்களைப் பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் பிம்பங்களோடு (காமவெறியர்கள் மாதிரி) இதைப் பொருத்திப் பார்க்கவேண்டும். பாரடைஸ் டீ ஸ்டால், ஆங்கிலத்தில் PARADESI TEA STALL என்று ஏன் எழுதியிருக்கிறது என்று யோசிக்க வேண்டும். இதையெல்லாம் வசனத்தில் இயக்குனர் சுட்டிக் காட்டமாட்டார். இப்படியெல்லாம் மூளைக்கு வேலை தர தயாராக இருக்கும் பட்சத்தில் ‘சுட்ட கதை’ பார்க்கலாம். இப்படத்தில் சீரியஸாக ஏதோ கதை இருக்குமென்று நம்பிப் பார்த்தால், படத்தில் வரும் மொக்கை கேரக்டர்களில் நீங்களும் ஒரு மொக்கையாக மாறிவிடுவீர்கள். கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்டுக்காக படத்துக்கு தொடர்பேயில்லாமல் செருகப்படும் டாக்குமெண்டரி, டிவி நிகழ்ச்சி பாணியிலான காட்சிகளையெல்லாம் என்னவென்று சொல்வது? அபாரம்.
ஹீரோக்களுக்கு ரஞ்சன் காலத்து மீசை. தபாங் ஸ்டைல் கூலிங் க்ளாஸ். உ.பி. போலிஸார் பாணி உடை. ஊரில் இருக்கும் சோம்பேறிகள் எப்பவும் வீட்டில் அடைந்து ‘மெட்டி ஒலி’ பார்க்கிறார்கள். டீ போடுபவனை தவிர்த்து ஒரு உழைப்பாளியையும் பார்க்க முடியாது. ஒட்டகம், சிலந்தி என்று மலைவாழ் பாத்திரங்களுக்கு விசித்திரமான பெயர்கள், பழக்கவழக்கங்கள். எல்லாவற்றையும் விட மேலாக சாம்பசிவம் க்ரைம் காமிக்ஸ்.