7 ஏப்ரல், 2011

லேடீஸ் ஸ்பெஷல் மார்னிங் சர்வீஸ்!

பொதுவாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? வடை, முறுக்கு சுட்டு விற்பார்கள். பூச்சரம் தொடுத்து வியாபாரம் செய்வார்கள். மெஷின் வாங்கி அக்கம் பக்கத்து வீடுகளுக்கு துணி தைத்துக் கொடுப்பார்கள். இத்யாதி.. இத்யாதி.. இம்மாதிரி வங்கியில் கடன் பெற்று ஏராளமான சுயதொழில் செய்பவர்கள். யார் கையையும் எதிர்பாராமல், தங்கள் சொந்தக் காலில் நிற்க முயற்சிப்பவர்கள். அடுத்து?

முடிச்சூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பினர் மக்கள் பணியில் நேரடியாக இறங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரில் தொடங்கி, போக்குவரத்து ஆணையர் வரை இவர்களை நோக்கி புகழ்மாலைகளை சூட்ட வைத்திருக்கிறார்கள்.

படப்பையில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் முடிச்சூர் பிரதான சாலை போக்குவரத்து நெரிசல் மிக்கது. குறிப்பாக லஷ்மி நகர் பேருந்து நிறுத்தம். ‘பீக் அவர்ஸ்’ என்று வழங்கப்படும் அலுவலகம் கிளம்பும் நேரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் இங்கிருக்கும் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துகிறார்கள். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், கூலித்தொழிலாளிகள், பள்ளி மாணவ மாணவிகள், சிறு வியாபாரிகள் என்று பல வகையினரும் இவர்களில் அடங்குவார்கள்.

கூட்டம் குவியும் இடத்தில் நெரிசல் ஏற்படுவது சகஜம்தான். நெரிசலின் விளைவு விபத்து. சாலையை பள்ளிச் செல்லும் குழந்தைகள் அவசரமாக கடக்க நேரிட, வேகமாக வரும் இருசக்கர, நாற்சக்கர வாகனங்களில் மோதி இரத்தக் காயம். ஒரு சில உயிரிழப்பும் ஏற்பட்டதுண்டு.

அருகில் ஒரு சிறிய காவல் உதவி மையம் உண்டு. போக்குவரத்தினை கட்டுப்படுத்த இரண்டு போலிஸார் உண்டு. எனினும் கூட கூட்டமாக வரும் பேருந்துகளில் மொத்தமாக போய் ஏறும் மக்களை கட்டுப்படுத்த அவர்கள் போதாது. பேருந்து வர நேரம் ஆக, ஆக முந்திச் செல்லும் ஆவலில் கூட்டம் நடுச்சாலைக்கு வந்துவிடுவதும் உண்டு.

முடிச்சூர் பஞ்சாயத்தின் கிராமச்சபை கூட்டங்களில் இந்தப் பிரச்சினை அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டது. இவ்வாறான பிரச்சினை நகர்ப்புறங்களில் ஏற்படும்போது அங்கே கூடுதல் காவலர்களை காவல்துறை நியமிக்கும். புறநகர் விளிம்பில் இருக்கும் லஷ்மி நகருக்கு கூடுதல் காவலர்களை நியமிக்குமளவுக்கு காவல்துறைக்கு வசதியில்லை.

அங்கிருக்கும் மகளிர் கூட்டமைப்புத் தலைவி நிர்மலா பாஸ்கரன் காவல்துறையோடு கைகோர்க்க முன்வந்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர், காலை வேளைகளில் போக்குவரத்தினை ஒழுங்குப் படுத்திட தயார் என்று அறிவித்தார்.

குங்குமம், தீபம், வசந்தம், அதிர்ஷ்டம், ரோஜா, விடியல் ஆகிய சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிர் ஒன்றுசேர்ந்து ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு பேர் சீருடையில் வந்து பணியாற்றுவது என்று முடிவெடுத்தார்கள். தங்களுக்குள் பேசி ‘ஷிப்ட்’ முறையில் வந்து ஒழுங்கு செய்கிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களாக, ஒரு நாள் கூட இடைவிடாது பணியாற்றி வருகிறார்கள். விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால், அந்த நாட்களில் மட்டும் இவர்களும் விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள். சரியாக காலையில் ஆறு மணிக்கு லஷ்மிநகர் சந்திப்புக்கு வந்துவிடுகிறார்கள். பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் குறையும் வரை இருக்கிறார்கள். சாலையை பத்திரமாக கடக்க குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உதவுகிறார்கள். பேருந்து வந்தவுடன் கூட்டத்தில் இடித்துக் கொண்டு ஏறாமல், வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ஏற உதவுகிறார்கள். பேருந்து நிறுத்தம் அருகே ஒரு வெள்ளைக்கோடு போட்டு, அந்த கோட்டினை தாண்டி யாரும் சாலைக்கு வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். போக்குவரத்து காவலருக்கும் உதவுகிறார்கள். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம். ஒன்பதரை மணிக்கு கிளம்பி விடுகிறார்கள்.

இல்லத்தரசிகளுக்கு இந்த காலை நேரம் முக்கியமானது. கணவரை பணிக்கும், குழந்தைகளை பள்ளிக்கும் தயார் செய்யும் பரபரப்பான நேரம். அந்த நேரத்தை தியாகம் செய்து, இந்தப் பணிக்கு எப்படி வருகிறார்கள்?

“ஆறு மணிக்கு எழுந்துக்குறவங்க, ஒரு ரெண்டு மணி நேரம் முன்னாடியே எழுந்துக்கிறது பெரிய சிரமமெல்லாம் இல்லைங்க. எங்க குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பி வெச்சிட்டு, பத்திரமா போய் சேருவாங்களான்னு வயித்துலே நெருப்பை கட்டிக்கிட்டு இருக்குறதுக்கு, இம்மாதிரியான ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை நாங்களே செய்திருக்கிறோம்கிறது எங்களுக்கு திருப்தியா இருக்கு” என்கிறார் புவனேஸ்வரி. இவர் குங்குமம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவர்.

காவல்துறை இவர்களது சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் மகளிருக்கு காவல்துறை நண்பர்கள் (Police friends) என்று அடையாள அட்டை வழங்கியிருக்கிறது. எப்போதோ தட சோதனைக்கு வந்த போக்குவரத்து ஆணையர் மு.இராசாராம், இவர்களது பணிகளை பாராட்டி, தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார். அவர் மூலமாக மாவட்ட ஆட்சியர் வரை இவர்களது புகழ் இப்போது பரவியிருக்கிறது.

நாம் விசாரித்தவரை தமிழக அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இதுபோன்ற சேவையில் வேறெங்கும் ஈடுபடுவதாக தெரியவில்லை. அவ்வகையில் முடிச்சூர் இந்த விஷயத்துக்கும் முன்னோடிதான்.

(நன்றி : புதிய தலைமுறை)

4 கருத்துகள்:

  1. லக்கி நான் முடிச்சூரை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் . இந்த ஊராட்சிப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அவர்களின் தந்தையோ , கணவரோ தான் ஆட்சி செய்வார்கள் என்று நினைத்தார்கள் , மாறாக அந்தப் பெண் தலைவர்கள் ஊருக்கு நல்ல திட்ட்ங்களைக் கொண்டு வந்தார்கள் , சிறந்த ஊராட்சித் தலைவர் விருதையும் பெற்றார்கள் , உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் பெண்கள் இவர்களைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ளலாம் . இது முடிச்சூரைப் பற்றிய தங்களின் இரண்டாவது பதிவு என்று நினைக்கிறேன், நன்றி

    பதிலளிநீக்கு
  2. என்ன இது முடிச்சூர் ஸ்பெஷலா? முடிச்சூர் பத்தி இது 2 வது தடவை

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா9:51 PM, ஏப்ரல் 07, 2011

    Lucky

    I am surprised if it is the same person who writes about Neha auntie also :-)

    பதிலளிநீக்கு
  4. செயலில் இறங்கிய அவர்களுக்கும் அறிமுகப் படுத்திய உங்களுக்கும்... வாழ்த்துகளும், பாராட்டுகளும்!!!

    பதிலளிநீக்கு