31 அக்டோபர், 2012

நான் மலாலா

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலிருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கு பூலோக சொர்க்கம். இயற்கை தனது எழில் மொத்தத்தையும் கொட்டி செதுக்கிய அற்புதம். உலகமெங்கும் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் வாழ்நாளில் ஒரு முறையாவது அப்பகுதியை தரிசிக்க தவம் கிடப்பார்கள். அதெல்லாம் 2003 வரை. ஆப்கானிஸ்தானை ஒட்டியிருந்த இப்பகுதியிலும் தாலிபன் ஆதிக்கம் கொடிகட்டியது. பெண்கள் கல்விகற்க பிறந்தவர்கள் அல்ல என்பது தாலிபனின் தாரகமந்திரம். அவ்வளவு ஏன், வீட்டு வாசற்படியை அவர்கள் தாண்டுவதே பாவம் என்று நம்பினார்கள். 
ஆனால் மலாலா யூசுப்ஸாய் என்கிற பெண் குழந்தைக்கு இதெல்லாம் அவசியமற்ற மூடநம்பிக்கை என்று தோன்றியது. கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கக்கூடிய அப்பா அமைந்தது அவளது பாக்கியம். அங்கிருந்த சிறுநகரமான மிங்கோரவைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

பெண்கள் கல்வி கற்பதைக் குறித்து தாலிபான்கள் பேச்சளவில் ஆட்சேபித்துக் கொண்டிருந்தபோதே மலாலா ஊடகங்களிடம் இதுகுறித்து தனது ஆட்சேபணையை வெளிப்படுத்தி வந்தார். 2008 செப்டம்பரில் பெஷாவரில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், “என்னுடைய அடிப்படை உரிமையான கல்வியை தடுக்க தாலிபான்களுக்கு என்ன தைரியம்?” என்று சீறினார்.

“தாலிபான்கள் தொடர்ச்சியாக ஸ்வாட் மாவட்டத்தின் பள்ளிகளை குறிவைக்கிறார்கள்” என்று மலாலா தனது டயரிக் குறிப்புகளாக பி.பி.சி. நிறுவனத்தின் இணையத்தளத்தில் எழுதியவை உலகைக் குலுக்கியது. மலாலாவுக்கு அப்போது வயது பதினொன்று. பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க அப்பகுதியில் மட்டுமே நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளை தாலிபான்கள் அச்சூழலில் முடக்கியிருந்தார்கள். 2009 ஜனவரியில் இனி பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்று பகிரங்கமாகவே ஆணையிட்டிருந்தார்கள்.

மலாலாவின் தந்தை சில பள்ளிகளை நடத்திவந்தார். தாலிபான்களின் கட்டளைப்படி அப்பள்ளிகள் இயங்கமுடியாத நிலையில் இருந்தன. அப்போது அவரது தந்தையிடம், யாரோ ஒரு பெண் பி.பி.சி. இணையத்தளத்தில் இங்கு நடக்கும் சூழல்களை குறித்து சிறப்பாக எழுதுகிறாள் என்று சில பிரிண்ட் அவுட்களை தந்திருக்கிறார்கள். அவற்றை வாசித்த மலாலாவின் தந்தை புன்முறுவல் செய்திருக்கிறார். அதையெல்லாம் எழுதுவது தனது மகள் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை. “அப்பாவின் ஆதரவுதான் என்னுடைய கல்விக்காக என்னை போராடத் தூண்டியது” என்று பிறிதொரு நாளில் மலாலா சொன்னார். அப்பாவோடு இரவுகளில் நீண்ட நேரம் அரசியல் குறித்து விவாதிப்பது மலாலாவின் பொழுதுபோக்கு. 
பி.பி.சி.யில் மலாலா வெறுமனே தன்னைப் பற்றியும், தன்னுடைய கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளைப் பற்றியும் மட்டும் எழுதவில்லை. ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடக்கும் தாலிபன்களின் கொடூர அடக்குமுறை ஆட்சி, பெண்கள் கல்வி கற்பதின் அவசியமென்று அவருடைய எழுத்தில் உயர்வான சமூகப் பார்வை தொக்கி நின்றது.

“என் வீட்டுக்கு அருகிலேயே ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பள்ளிகளை இடித்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை இழுத்து மூடியிருக்கிறார்கள். பாகிஸ்தான் இராணுவம் அவர்களை ஆதரிக்கிறது என்கிற ஆணவம் அவர்களுக்கு இருக்கிறது. இராணுவம் மட்டும் இங்கே முறையாக தங்கள் பணிகளை மேற்கொண்டால், இப்படிப்பட்ட அபாயச்சூழலே ஏற்பட்டிருக்காது” என்று காட்டமாகவே மலாலா எழுதினார். அவரது அபயக்குரல் அமெரிக்கா வரை அசைத்துப் பார்த்தது. பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக பள்ளத்தாக்கு பகுதிக்கு விரைந்து, தாலிபான்களின் கொட்டத்தை அடக்கியது.

தாலிபான்கள் அங்கே வீழ்ந்தநிலையில் மலாலா சொன்னதுதான் ஹைலைட். “நல்லவேளையாக கடவுள் ஸ்வாட் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநிறுத்திவிட்டார். இல்லாவிட்டால் இங்கே அமெரிக்காவோ, சீனாவோ வரவேண்டியிருந்திருக்கும்”

மலாலாவின் சாதனையை பறைசாற்றும் விதமாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மலாலா குறித்த ஆவணப்படம் ஒன்றினை எடுத்தது. ஊடகங்கள் அவரை பேட்டி எடுக்க போட்டாபோட்டி நடத்தின. ஸ்வாட் மாவட்டத்தின் குழந்தைகள் பாராளுமன்றத் தலைவராக மலாலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப் பட்டது. பாகிஸ்தானின் தேசிய அமைதிக்கான இளைஞர் விருதை முதலில் வென்றவர் இவர்தான்.


“நான் பிறந்ததின் பயன் மனிதகுலத்துக்கு பயன்பட வேண்டும். எனக்கு ஒரு புதிய கனவு இருக்கிறது. நான் அரசியல்வாதியாகி என் நாட்டை காக்க வேண்டும். என் நாடு பிரச்னைகளால் சீரழிந்திருக்கிறது. இச்சீரழிவை எப்பாடு பட்டேனும் சீர்செய்யவேண்டும்” என்று தன்னைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பேசினார் மலாலா.

இதெல்லாம் வரலாறு.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று அன்று, ஒரு தேர்வினை முடித்துவிட்டு பஸ்ஸில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் மலாலா. முகத்தில் முகமூடி போட்டிருந்த மனிதன் ஒருவன் அந்த பஸ்ஸில் ஏறினான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. அங்கிருந்த பெண்களைப் பார்த்து “உங்களில் யார் மலாலா?” என்று வெறிபிடித்தாற்போல கத்தினான். மலாலாவை அடையாளம் கண்டவுடன் காட்டுத்தனமாக சுட்டான். ஒரு குண்டு தலையிலும், இன்னொரு குண்டு கழுத்திலும் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே மலாலா நினைவிழந்தார். அவருக்கு அருகிலிருந்த இரண்டு பெண்களுக்கும் லேசான காயம்.

மலாலா பெஷாவரிலிருந்த இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலையில் பாய்ந்து வலது மூளையின் பக்கத்தை பாதித்திருந்த குண்டினை மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை செய்து நீக்கி, உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானிய தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஈஷானுல்லா ஈஷான், இந்த அடாத கொலைமுயற்சி தங்களுடையதுதான் என்று கொக்கரித்திருக்கிறார். “மலாலா என்பவர் கடவுளுக்கும், சமூக ஒழுங்குக்கும் கீழ்ப்படியாமையின் சின்னம்” என்று விமர்சித்திருக்கிறார்.


“எங்களைப் பற்றி மோசமாக எழுதவேண்டாம் என்று உன் பெண்ணிடம் சொல்லு என்று பலமுறை மலாலாவின் தந்தையை நாங்கள் எச்சரித்திருந்தோம். ஆனால் அவர் எங்கள் பேச்சை கேட்கவில்லை. அதனாலேயே இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்று தங்களது இரக்கமற்ற கொலைமுயற்சிக்கு அவர் நியாயமும் கற்பிக்கிறார்.
இன்று உலகம் முழுக்கவே மலாலா விரைவில் குணம்பெற வேண்டும் என்று பிரார்த்தனைகள் நடக்கின்றன. அதே வேளையில் தாலிபான்கள் முன்பைவிட அதிகமாக கண்டிக்கப்படுகிறார்கள். ஓரளவுக்கு தாலிபான் ஆதரவாளர்களாக இருந்தவர்களை கூட இச்செயல் அவர்களை தாலிபான்களுக்கு எதிரான நிலையை எடுக்க வைத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவில் தொடங்கி, அத்தனை உலகத் தலைவர்களும் மலாலாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய வளைகுடா நாடுகள் ஒட்டுமொத்தமாக மலாலாவுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதின் மூலமாக, தாலிபானின் பெண்கள் கல்விக்கு எதிரான செயலை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றன.

மலாலாவுக்கு சிகிச்சையளிக்க பிரிட்டன் ஆர்வம் காட்டியது. எனவே அவர் இங்கிலாந்துக்கு கோமாநிலையில் கொண்டுச் செல்லப்பட்டார். கடைசியாக கிடைத்த தகவலின் படி மலாலாவுக்கு நினைவு திரும்பி, சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறார். பயப்படும்படியான பாதிப்பு ஏதுமில்லை. மிக விரைவில் முழுநலம் பெறுவார் என்று மருத்துவர்கள் உறுதியளிக்கிறார்கள். 
முன்னாள் பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய சிறப்பு கல்வித் தூதராக இருக்கிறார். அவர் “நான் மலாலா” என்கிற ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். 2015 வாக்கில் உலகில் பள்ளிக்குச் செல்லாத பெண்களே இல்லை என்கிற நிலையை எட்டவேண்டியது நம் இலட்சியம் என்று சொல்லியிருக்கிறார் பிரவுன். பாகிஸ்தானில் எது நடக்கவேண்டும், எம்மாதிரியான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று மலாலா விரும்பினாரோ, இன்று அது உலகம் முழுக்க அவர்மீது நடந்த கொலைமுயற்சியால் ஏற்பட்டிருக்கிறது.

மலாலாவின் பள்ளித்தோழி ஒரு மேற்கத்திய ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் குரலை உயர்த்திச் சொல்கிறார். “நாங்கள் ஒவ்வொருவருமே மலாலாதான். நாங்கள் எங்களுக்காக கல்வி கற்போம். நாங்கள்தான் வெல்லுவோம். அவர்களால் எங்களை எப்போதுமே தோற்கடிக்க முடியாது”
இதைவிட மலாலாவுக்கு வேறென்ன வேண்டும்?

(நன்றி : புதிய தலைமுறை)

30 அக்டோபர், 2012

தலைமுறைகளை தாண்டிய ஹீரோ


எனக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முதலாக ஜேம்ஸ்பாண்டை திரையரங்கில் பார்த்தேன். டிமோதி டால்டன் நடித்த ‘லிவிங் டேலைட்ஸ்’.

டிமோதியின் ஸ்டைலில் மிரண்டுப்போய் அப்பாவிடம் சொன்னேன். “ஜேம்ஸ் பாண்ட் எவ்ளோ அழகா இருக்காம்பா...”

“இவனெல்லாம் என்ன அழகு? ‘டாக்டர் நோ’வுலே சான் கானரியைப் பார்க்கணும். ஜேம்ஸ்பாண்டுன்னா அவன் தான் ஜேம்ஸ்பாண்ட்” அப்பா கானரி ரசிகர்.

போன வருடம் என்ஜினியரிங் முடித்த அண்ணன் பையன் சொல்கிறான். “டேனியல் கிரேக்தான் ஜேம்ஸ்பாண்டுலேயே பெஸ்ட். அவனோட கண்ணு மாதிரி உலகத்துலே எவனுக்குமே இல்லை”

ஒன்று மட்டும் புரிகிறது. ஐம்பது ஆண்டுகளாக சான்கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக்  என்று ஆறு பேர் ஜேம்ஸ்பாண்ட்களாக நடித்துவிட்டார்கள். முதல் தலைமுறை ஜேம்ஸ்பாண்ட் நடிகரை, அடுத்த தலைமுறை ஆட்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதற்கடுத்த தலைமுறை அத்தனை பேரையும் தூக்கிப் போட்டுவிட்டு புதுநடிகருக்காக சண்டை பிடிக்கிறார்கள். ஆனால் மூன்று தலைமுறையுமே ஒன்றுபட்டு ஒற்றுமையாக ‘ஜேம்ஸ் பாண்டை’ தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.

1962ல் ஜேம்ஸ்பாண்டின் முதல் படமான ‘டாக்டர் நோ’ வெளியானது. அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் ‘ஸ்கை ஃபால்’, ஜேம்ஸ்பாண்டின் இருபத்தி ஐந்தாவது திரைப்படம். முதல் படத்துக்கு அப்போது என்ன வரவேற்பு இருந்ததோ, அதைவிட பன்மடங்கு வரவேற்பு வரவிருக்கும் படத்துக்கும் இப்போது இருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக ஒரு நாயகனுக்கு உலகம் முழுக்க மவுசு குறையாமல் இருக்கும் அதிசயம் ஜேம்ஸ்பாண்டுக்குதான் சாத்தியம். சினிமாவில் அவர் ஓர் அதிசயம். ஸ்டார்வார்ஸ் திரைப்படங்களுக்குப் பிறகு, உலகில் அதிகம் பிரபலமான திரைத்தொடர் ஜேம்ஸ்பாண்ட் படங்கள்தான்.

ஏன் ஜேம்ஸ்பாண்டை எல்லோருக்கும் பிடிக்கிறது?

நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பார்

நல்ல லட்சியங்களுக்காக உயிரை பணயம் வைப்பார்

கெட்டவர்களிடம் சண்டை போட தயங்கியதேயில்லை

அழகான பெண்கள் எல்லோருக்குமே அவரைப் பிடிக்கும்

அனாயசமாக அசுரவேகத்தில் அட்டகாசமான ஸ்டைலில் கார் ஓட்டுவார்

படத்துக்குப் படம் வெவ்வேறு நாடுகளை சுற்றுவார். உலகம் சுற்றும் வாலிபன்

நவீன ஆயுதங்களை பயன்படுத்துவார்

பாப் கலாச்சாரத்தின் அடையாளம்

இனம், மொழி, நாடு, அரசியல் என்று அனைத்து எல்லைகளையும் உடைத்து உலகுக்கே பொதுவானவர் 

இன்னும் நிறைய காரணங்களை வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு காரணம் உண்டு. அவர் நிஜமான ‘ஆண்மகன்’. அதுவும் தைரியமான ஆண்மகன். ஓர் ஆண் எப்படி இருக்கவேண்டுமென்று உலகம் விரும்புகிறதோ, குறிப்பாக பெண்கள் விரும்புகிறார்களோ அப்படியே ஜேம்ஸ் இருக்கிறார். ஜேம்ஸை திரையில் பார்க்கும் ஆண்கள் ஆரம்பத்தில் அவர்மீது பொறாமை கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தன்னையே (வேறு வழியின்றி) ஜேம்ஸாக கருதிக்கொண்டு கொண்டாடத் தொடங்குகிறார்கள். எனவேதான் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ஷாருக்கான், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க விரும்புகிறேன் என்று அறிவிக்கிறார்.

ஜேம்ஸ்பாண்டை முதன்முதலாக உருவாக்கிய நாவலாசிரியர் இயான்ஃப்ளெமிங்குக்கு ஆரம்பத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த சுவாரஸ்யமான ஐடியாவும் இல்லை. “1953ல் முதன்முதலாக நாவல் எழுதும்போது என் நாயகனை மந்தமானவனாகவே சித்தரிக்க விரும்பினேன். எந்த சுவாரஸ்யமும் அற்ற ஒருவன் சந்திக்கும் அதிசுவாரஸ்யமான நிகழ்வுகள் என்றே யோசித்தேன். நிகழ்வுகள்தான் முக்கியம். ஹீரோ சும்மா ஒப்புக்குச் சப்பாணி என்பதுதான் அடிப்படை. இதற்காகவே உச்சரிக்கும்போது எந்த சுவாரஸ்யமும் தராத ஒரு பெயரை என் பாத்திரத்துக்கு சூட்டினேன். அதுதான் ஜேம்ஸ்பாண்ட். நான் பிறந்ததிலிருந்து கேட்டதிலேயே ரொம்ப மொக்கையான பெயர் இதுதான்” என்று நியூயார்க்கர் பத்திரிகைக்கு தந்த பேட்டியில் இயான்ஃப்ளெமிங் கூறினார். ஜேம்ஸ்பாண்ட் என்பவர் அப்போது அமெரிக்காவின் பிரபலமான பறவையியல் நிபுணர்.
 வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஃப்ளெமிங். அக்காலத்தில் பிரபலமான ராபர்ட் ஃப்ளெமிங் & கோ என்கிற வங்கி இவர்களது குடும்பத்துக்கு சொந்தமானது. முனிச் மற்றும் ஜெனிவா பல்கலைக்கழகங்களில் படித்தார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் கடற்படையின் உளவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் கடற்படையில் இருந்து விலகி பத்திரிகையாளர் ஆனார். கடற்படையில் பணிபுரியும்போதே தனது நண்பர்களிடம் உளவாளியை நாயகனாக்கி ஒரு நாவல் எழுதப்போவதாக சொல்லியிருந்தார். அவரது போர் அனுபவங்களும், பத்திரிகையுலகம் தந்த அறிவும்தான் ஜேம்ஸ்பாண்ட் என்கிற பாத்திரத்தின் துல்லியத்துக்கு அச்சாரம்.

ஜேம்ஸ்பாண்ட் எம்-ஐ6 என்கிற பிரிட்டிஷ் ரகசிய உளவு ஸ்தாபனத்தின் ஏஜெண்ட்.  007 என்பது அவரது ரகசியக் குறியீட்டு எண். ஆரம்பத்தில் ஃப்ளெமிங் நினைத்தமாதிரியாக இல்லாமல் எழுத, எழுத 007 மிகசுவாரஸ்யமானவராக மாறிப்போனார். தன்னையே ஜேம்ஸாக நினைத்து எழுதித்தள்ளினார். உணவு, மது, உடை, சிகரெட்டு என்று தான் எதையெல்லாம் விரும்பினாரோ, அதையெல்லாம் ஜேம்ஸ்பாண்டுக்கும் விருப்பமானதாக ஆக்கிவிட்டார். நியூயார்க்கர் பேட்டியில் அவர் குறிப்பிட்ட ‘மந்தமான ஏஜெண்ட்’ நிஜத்தில் ஃப்ளெமிங்தான். என்ன எழுதும்போது அவரையறியாமலேயே சுவாரஸ்யமானவராக அவரை அவரே சித்தரித்துக் கொண்டார். ஃப்ளெமிங்தான் ஜேம்ஸ். ஜேம்ஸ்தான் ஃப்ளெமிங். சந்தேகமிருந்தால் ஸ்டைலாக புகைபிடிக்கும் ஃப்ளெமிங்கின் புகைப்படத்தைக் காணுங்கள்.

1964ல் ஃப்ளெமிங் மறைந்துவிட்டார். உயிரோடு இருக்கும்போதே தனது பாத்திரத்தை திரையில் பார்க்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. ஃப்ளெமிங்குக்கு பிறகு ஜான் கார்ட்னர், ரேமண்ட் பென்ஸன், கிங்ஸ்லி அமிஸ், செபஸ்டியன் ஃபாக், ஜெஃப்ரி டேவர் என்று ஏராளமானோர் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி ஃப்ளெமிங்கின் பாத்திரத்துக்கு சாகாவரம் வழங்கியிருக்கிறார்கள். காமிக்ஸ், டிவி தொடர், சினிமா, வீடியோ கேம்ஸ் என்று விஷூவலின் அத்தனை வடிவிலும் ஜேம்ஸ் சக்கைப்போடு போட்டிருக்கிறார். ராணிகாமிக்ஸ் படித்துவிட்டு ‘பாண்ட்... மை நேம் ஈஸ் ஜேம்ஸ்பாண்ட்’ என்று அலட்டிக்கொண்டு பேசும் பொடிசுகளை நீங்களும் பார்த்திருக்கிறீர்கள்தானே?
துப்பாக்கி, அழகிகள், நவீன கார், மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட், வித்தியாசமான வில்லன்கள், ஆக்ன், நீரிலும் நிலத்திலும் வானத்திலும் சேஸிங்... உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த ஃபார்முலா மாறவே மாறாது. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார்.

எல்லா நாடுகளிலுமே ஜேம்ஸ்பாண்டின் தாக்கம் அளப்பரியது. சூப்பர் ஹீரோ போன்ற காதுச்சுற்றல்கள் இல்லாத ஜேம்ஸ்பாண்ட் பாணி, உலகளாவிய ஆக்‌ஷன் இயக்குனர்களை பாதித்ததில் ஆச்சரியமேதுமில்லை. மற்ற ஹீரோக்களைப் போல இல்லாமல் ஜேம்ஸ் கொஞ்சமாகதான் பூச்சுற்றுவார். உலகம் முழுக்கவே கதாநாயகன் என்பவன் நல்லவனாக மட்டுமின்றி வல்லவனாகவும் இருக்க வேண்டும். அநீதியை எதிர்த்து, அஞ்சாமல் போராட வேண்டும். அழகாகவும் இருக்கவேண்டும் என்றுதான் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் முழுக்க பூர்த்தி செய்கிறார் 007. ஹீரோவுக்கு சம்பளம் கொடுத்து பட்ஜெட் கட்டுப்படி ஆகவில்லையென்றால், பெண்களை கூட ‘லேடி ஜேம்ஸ்பாண்ட்’ ஆக சித்தரித்து, படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய இந்தித் திரைப்படமான ‘ஏக் தா டைகர்’ கூட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தாக்கத்தில் வெளிவந்து நூறுகோடி ரூபாய் வசூலித்தது. முன்னதாக ‘ஏஜெண்ட் வினோத்’ என்கிற திரைப்படம். உளவுத்துறை அதிகாரியை ஹீரோவாக்கும்போது தம்மையறியாமலேயே ஜேம்ஸை பிரதியெடுத்துவிடுகிறார்கள் இயக்குனர்கள். நம்மூரில் அந்தகால மாடர்ன் ஆர்ட்ஸ் தயாரிப்புப் படங்கள் பலவும் அச்சு அசலாக ஜேம்ஸ் படங்களை ‘உல்டா’ அடித்து எடுக்கப்பட்டவையே. வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர் போன்ற படங்களை பார்க்கும்போது, அவற்றில் பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்களின் காட்சி அப்பட்டமாக இடம்பெற்றிருப்பதை காணலாம். இவற்றில் பெரும்பாலும் ஜெய்சங்கர்தான் ஹீரோ என்பதால் அவரையே ‘தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட்’ என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். அடுத்து ரஜினி-கமல் சகாப்தம் உருவான காலத்திலும், அவர்களை உயர்த்திப் பிடிக்க ஜேம்ஸ்பாண்டே கைகொடுத்தார். என்ன.. உளவாளி என்பதை சிஐடியாகவோ அல்லது போலிஸ் இன்ஸ்பெக்டராகவோ, இல்லையென்றால் பிரைவேட் டிடெக்டிவ்வாகவோ நம்மூருக்கு ஏற்றமாதிரியாக மாற்றிக் கொள்வார்கள்.

ஜேம்ஸ்பாண்டின் தாக்கம் சினிமாவில் மட்டுமல்ல. கதைகளிலும் வெளிப்படுகிறது. சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று நம்மூர் எழுத்தாளர்களின் க்ரைம் கதைகளிலும் உளவாளிதான் பெரும்பாலும் ஹீரோ. பெண்கள், ஆக்ஷன் என்று ஜேம்ஸ்ரக கரம்மசாலாதான் கதை என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

பிரிட்டிஷ் உளவுப்படையின் ஏஜெண்டான ஜேம்ஸ், இன்று ஒரு பிரபஞ்ச ஹீரோ. ஏனெனில் வில்லன்களிடம் இருந்து அவர் காப்பாற்றிக் கொள்வது தன்னையோ, தன் நாட்டை மட்டுமோ அல்ல. ஒட்டுமொத்த உலகையும் சேர்த்துதான். எனவேதான் உலகின் எந்த மொழியில் எழுதப்படும் கதைகளிலும், எடுக்கப்படும் படங்களிலும் அவரது பாதிப்பு நீடிக்கிறது. அதற்கேற்றாற்போல ஜேம்ஸும் வருடங்கள் ஆக, ஆக தன்னைப் புதுப்பித்துக் கொண்டே செல்கிறார். உடையில் தொடங்கி செல்போன் வரை இன்றைய ஜேம்ஸ் பயன்படுத்துவது அதிசமீபத்திய பொருட்களைதான். எனவேதான் ஜேம்ஸ் இத்தனை ஆண்டுகள் கழித்தும் நமக்கு சலிக்காமலேயே இருக்கிறார்.



007 பிட்ஸ்

உலகப் பிரபலமான பின்னணி இசையோடு ஸ்டைலான நடை நடந்து வந்து ஜேம்ஸ் திரையை சுடுவார். திரை முழுக்க ரத்தமயமாகி ‘டைட்டில்’ வரும். ஓரிரு படங்கள் தவிர்த்து, ஜேம்ஸ்பாண்டின் எல்லா படங்களிலும் இதுதான் டைட்டில் கார்ட்.

இவரது படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ பிரசித்தம். அறிமுகக் காட்சியிலேயே அனாயசமாக ஒரு சாகஸத்தை நிகழ்த்தி முடித்துவிட்டு, ஒரு பஞ்ச் கட்டாயம் வைப்பார்.

டைட்டில் கார்டில் எப்போதுமே அப்போதைய பிரபல பாடகரின் பாடல் இடம்பெறும். பாடல் வரியிலும் படத்தின் பெயர் இடம்பெறும்.

அலுவலகத்தில் நுழைந்ததுமே தன் தொப்பியை கழற்றி, தொப்பி மாட்டும் ஸ்டேண்டின் மீது சரியாக வீசுவார்.

மதுபான விடுதிகளுக்கு செல்லும்போது ‘வோட்கா மார்டினி’ என்கிற வகையைதான் அருந்துவார்.

ஜேம்ஸின் பாஸ் மிஸ் எம்மின் உதவியாளராக மணிபென்னி என்றொரு பெண்மணி இருப்பார். அவர் ஜேம்ஸை ஒருதலையாக ஐம்பது ஆண்டுகளாக காதலித்துக் கொண்டே இருக்கிறார்.

பெண்கள் இன்றி ஜேம்ஸ் படங்களை கற்பனைகூட செய்துப் பார்க்க முடியாது. இவரால் காப்பாற்றப்படும் பெண்கள் இவரை காதலிப்பார்கள். அல்லது இவரைப்போன்ற சக ரகசிய பெண் ஏஜெண்டுகள் காதலிப்பார்கள். அதுவுமில்லையேல் வில்லனின் ஆசை நாயகிகளுக்கு, நம் ஹீரோ மீது காதல் வந்துவிடும். காதலே இல்லாமல் ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கவே முடியாது.

படத்தின் கடைசி காட்சியில் கதாநாயகியோடு இருப்பதுபோல படம் முடிக்கப்படும். ஒரு சில படங்களில் மட்டும் கதாநாயகி இறந்துவிடுவதால் கடைசிக்காட்சியில் இந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிக்க முடிவதில்லை.

27 அக்டோபர், 2012

கருணைப் பெருங்கடலான காவியத்தாய்

முதல்வர் என்கிற பதவிக்கே பெருமை சேர்க்கும் முதல்வராக மாண்புமிகு தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளங்குகிறார்கள். அவரது கருணைப்பார்வையில் தமிழகம் உலகின் நெ.1 மாநிலமாக விளங்குகிறது. அதனால்தான் லக்கிலுக் என்கிற பதிவர்கூட “புரட்சித்தலைவி தாயுள்ளம் கொண்டவர் என்பதிலோ, கருணைக்கடல் என்பதிலோ ஐயம் இருந்தால்கழுவில் ஏற்றப்பட தகுதியானவர்கள் ஆவோம்” என்று ஒபாமாவுக்கே அரசியல் பாடம் எடுக்கும் தங்கத்தாரகை டாக்டர் அம்மாவைப் பற்றி புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

கடந்த தேர்தலில் திருவாரூர் திம்மியான தீயசக்தியை ஓட ஓட விரட்டி, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வக்கில்லாதவாறு அம்மா முடக்கினார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. மக்கள் மீது கருணை கொண்டே கருணைப் பெருங்கடலான காவியத்தாய் இத்தகைய இரும்புக்கர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் வேறுவழியில்லாமல் குடிகார கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தையும், போனால் போகிறதென்கிற கருணைப்பார்வையோடு தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரும், புரட்சித்தலைவியும், கழகப் பொதுச்செயலாளருமான காவிரி தந்த கலைச்செல்வி வழங்கியிருந்தார்.

ஆனால் இந்த சிறிய பொறுப்பைகூட ஒழுங்காக செய்ய துப்பில்லாமல், சட்டமன்றத்துக்கு வந்தால் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவை எதிர்கொள்ள வேண்டுமே என்கிற அச்சத்தில் எதிர்க்கட்சித்தலைவர், சட்டமன்றத்தை ‘கட்’ அடித்துவிட்டு சத்யம் தியேட்டரில் பகல் காட்சி படம் பார்க்கச் சென்றுவிடுகிறார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று மக்கள் தொடர்ச்சியாக மாசேதுங்கின் மறுபிறவியான மாண்புமிகு தங்கத்தாரகையிடம் நித்தம் நித்தம் புகார் மனு வாசிக்கிறார்கள்.

ஜனநாயகம் என்பது ஆட்சிக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் என்பது அம்மாவின் நிலைப்பாடு. எனவேதான் உலகில் எங்குமே இல்லாத அதிசயமாக கழகத்தின் மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் அம்மாவால் ஜனநாயகப் பூர்வமாக நியமிக்கப்படுகிறார்கள். ஜனநாயகத்துக்கு இவ்வளவு மதிப்புத் தரும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சியில், ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் செயலை குடிகாரக்கட்சி மேற்கொள்ளுமேயானால், அதை எப்படி புரட்சித்தலைவி அம்மா அனுமதிக்க முடியும்?

ஆகையால் குடிகாரக் கட்சியில் இருந்தாலும் ‘ஸ்டெடி’யாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த இருதினங்களாக அம்மா சந்தித்து மக்கள் பிரச்சினைகளைப் பேசுகிறார். இதனால் அக்கட்சி உடையுமேயானால், அதற்கு பொறுப்பேற்க வேண்டியது அம்மாவால் வாழ்வு பெற்ற குடிகாரத் தலைவரே அன்றி, அம்மாவோ அம்மாவின் லட்சோப லட்சம் தொண்டர்களோ அல்ல.

இப்போதைக்கு திம்மி கட்சியின் தளபதியை எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயகப் பூர்வமாக நியமிக்க புரட்சிக்கே பெருமை சேர்க்கும் புரட்சித்தலைவி முடிவெடுத்திருக்கிறார். பரிதாபகரமான நிலையில் இருக்கும் திம்மி கட்சி மீதான புரட்சித்தலைவியின் கருணைப்பார்வையாகதான் இதைப் பார்க்க வேண்டும். இந்த அரிய உண்மையை ஆராயாமல் குடிகாரக் கட்சியை உடைக்க புரட்சித்தலைவி முயற்சியெடுக்கிறார் என்று யாராவது எழுதுவார்களேயானால் அவதூறு வழக்கு தொடுக்கவே அவதாரம் எடுத்திருக்கும் நாம் அனுமதிக்க முடியாது என்கிற எச்சரிக்கையை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்.

வாழ்க டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் ஸ்ரீராமராஜ்யம்.

26 அக்டோபர், 2012

மழைப்பாக்கம்


மடிப்பாக்கம்என்பது சென்னை மாநகருக்கு வெகு அருகில் இருக்கும் சிற்றூர். சொல்லிக் கொள்ளும்படியாக எந்த சிறப்பம்சங்களும் இல்லாத இந்த ஊரை மழைக்காலத்தில் மட்டும் தமிழகம் முழுக்க அறிகிறார்கள். சென்னையில் வெள்ளம் என்றால் ஊடகங்கள் முதலில் உச்சரிக்கும் பெயர் மடிப்பாக்கமாக இருக்கிறது. மழை வெள்ளத்தைப் பார்வையிடும் முதல்வர், மடிப்பாக்கத்தை நிச்சயம் பார்வையிடுவார். சென்னையின் சிரபூஞ்சி இது. மற்ற பகுதிகளை விட மழை இங்கே அதிகமாகப் பெய்வதைப் போன்ற தோற்றம் எப்போதுமே கிடைக்கும்.

கட்டுமரத்தை கடலில் பார்த்திருப்பீர்கள். படகுகளை ஆற்றிலோ, ஏரியிலோ பார்த்திருப்பீர்கள். சாலையில் பார்த்திருக்கிறீர்களா? மழைக்காலத்தில் மடிப்பாக்கம் சாலைகளில் பார்க்கலாம். வேளச்சேரியை ஒட்டி மடிப்பாக்கத்தை இணைக்கும் பிரதான சாலை காட்டாறாய் மாறும். அலுவலகத்துக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்பவர்களுக்கு பஸ் நிறுத்தப்பட்டு, போட் சர்வீஸ் தொடங்கும்.

பிறந்ததிலிருந்து முப்பது ஆண்டுகளாக இங்குதான் வசிக்கிறேன். முதன்முறையாக விசைப்படகை பார்த்தது மடிப்பாக்கம் சாலையில்தான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பெருமழைக் காலத்தில், வீடுகளில் மாட்டிக்கொண்டு சோறு, தண்ணீர் இல்லாமல் வாடிக்கொண்டிருந்தவர்களை மீட்க விசைப்படகுகள் வந்தது. வெள்ளக் கரையோரத்தில் கூட்டமாக நின்றுப் பார்த்தோம். தூரத்தில் தெரிந்த பல வீடுகளில் முதல் தளம் முற்றிலுமாக மூழ்கி மொட்டை மாடியில் குளிருக்கும், உயிருக்கும், வெள்ளத்துக்கும் அஞ்சி நடுங்கி குடும்பம் குடும்பமாக அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தவர்களை கண்ட காட்சியை நினைத்தால் இன்றைக்கும் ஜன்னி வருகிறது.

மழையில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்பதால் மாநகரப் போக்குவரத்துத் துறைக்கு, அந்தகாலத்தில் மடிப்பாக்கம் அபிமானமில்லாத ஊராக மாறிப்போனது. “எங்க ஊருக்கு கூடுதல் பேருந்து விடவேண்டும்” என்று கோரிக்கை வைத்தால், “உங்க ஊரில் முதலில் சாலைகளைப் போடுங்கள்” என்று பதிலளிப்பார்கள். முறையான போக்குவரத்து இல்லை. மழைக்காலத்தில் தனித்தீவாகி விடும் போன்ற காரணங்களால் மற்ற பகுதியினரோடு கலாச்சார, பண்பாட்டு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ‘மடிப்பாக்கத்தானுக்கு பொண்ணு கிடையாது’ என்று ‘வேலை காலியில்லை’ பாணி போர்டுகளை பெண்களைப் பெற்றவர்கள் வீட்டு வாசலில் எழுதி மாட்டாததுதான் பாக்கி.

மறைந்த தமிழறிஞர் தென்கச்சி கோ.சாமிநாதன் மடிப்பாக்கத்தில்தான் வசித்தார். யாராவது அவரிடம் எங்கே வீடு என்று கேட்டால், இங்கேதான்.. மழைப்பாக்கத்தில் என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு, வெடிச்சிரிப்பு சிரிப்பார்.
புவியியல்ரீதியாக மடிப்பாக்கம் சபிக்கப்பட்ட பூமி. கடல் மட்டத்தைவிட தாழ்வான பகுதி. அந்த காலத்தில் மடிப்பாக்கத்துக்கு மேற்கே பல்லாவரம், மூவரசம்பேட்டை, கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் நிறைய குன்றுகள் இருந்தன. நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏராளமான ‘கல்’ தேவைப்பட்டதால் குடைந்து, குடைந்து இவற்றில் பெரும்பாலானவை முற்றிலுமாக இன்று சமப்படுத்தப்பட்டு விட்டன. அந்த குன்றுகளில் இருந்து வழியும் மழைநீர் மடிப்பாக்கத்துக்கு தெற்கில் ஒரு சிற்றாறாய் உருமாறி, கழிவுவெளி எனப்படும் பகுதியில் சேர்ந்து மாபெரும் ஏரியாய் உருப்பெறும். இந்த கழிவுவெளி இப்போது ‘கைவேலி’ என்று பெயர் மாறிவிட்டது. இங்கிருந்துதான் உலகப் புகழ்பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதி தொடங்குகிறது. கோடைக்காலத்தில் பசுமையான சமவெளியாக இது உருமாறும் என்பதால், கால்நடை மந்தைகளுக்கு கொண்டாட்டம். உணவுத் தேவைக்காக மந்தை, மந்தையாய் கால்நடைகளை இங்கே ஓட்டி வருவார்கள். எனவே வெயிற்காலத்தில் இப்பகுதியை ‘மந்தைவெளி’ என்றும் அழைப்பார்கள். பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு இயற்கை தந்த கொடையான ‘கைவேலி’ இன்று நகரமயமாக்கலின் அசுரப்பசிக்கு இரையாகிவிட்டது.

ஏரி மாவட்டம் என்று சொல்லப்பட்ட ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவாயிலாக இருந்த காரணத்தால் இரண்டு பெரிய ஏரிகள். ஏராளமான குளங்கள். தங்கு தடையற்ற ஏரிப்பாசனம் என்பதால் கண்ணுக்கு தெரியுமட்டும் பச்சைப்பாய் விரித்த வயல்கள். இவற்றில் பெரும்பாலானவை இன்று குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன. ஆக்கிரமிப்பில் இருந்துத் தப்பிய நீர்நிலைகள் ஓரிரண்டு இன்று அடையாளத்துக்கு மிச்சமிருக்கின்றன. விவசாயம் சுத்தம்.

இன்றைய மடிப்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகே ஒரு குளம் உண்டு. சோழர்காலத்து சிவன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட குளம் அது. மழைக்காலத்தில் தெளிவான நீர் நிரம்பியிருக்கும். இங்கே தெர்மாக்கோல் உதவியோடு படகு கட்டி, நண்பர்களோடு படகு ஓட்டியிருக்கிறேன். நீச்சல் அடித்திருக்கிறேன். தூண்டில் போட்டு மீன் பிடித்திருக்கிறேன். இன்று அந்த குளம் கூவம் ஆற்றின் துணைநதி போல மாறிப்போய் இருக்கிறது.

சென்னை மாநகரப் பெருக்கத்தின் காரணமாய் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட மடிப்பாக்கம் சர்வநிச்சயமாக இன்று ஒரு நகரம். மழைக்காலத்தில் மட்டும் நரகம். இன்று காஃபி டே இருக்கிறது. நவீன உணவு விடுதிகள், பள்ளிகள், வங்கிகள், சூப்பர் மார்க்கெட் என்று ஒரு பெருநகரத்துக்குரிய எல்லா அடையாளங்களும் உண்டு. கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக மடிப்பாக்கம் பஞ்சாயத்து இரண்டு வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் மாநகர அந்தஸ்துக்கு அத்தியாவசியமான கழிவு மற்றும் மழைநீர் வடிகால் வசதி (டிரைனேஜ்) மட்டும் சாத்தியப்படவேயில்லை.

எல்லாமே மாறிப்போனாலும் ‘மழை’ மட்டும் மடிப்பாக்கத்தில் மாறவேயில்லை. இன்றும் மழைக்காலத்தில் மடிப்பாக்கம் ‘வெனிஸ்’தான். அடுத்தடுத்து இரண்டு புயல் வந்தால் ‘போட்’ தான் போக்குவரத்துக்கு எங்களுக்கு ஒரே கதி.

25 அக்டோபர், 2012

உப்புக்கு சயனைடா?

சகோதரி சின்மயி (இவ்வாறே குறிப்பிட விரும்புகிறேன். பெண் வன்கொடுமை சட்டம் பயமுறுத்துகிறது) கடந்த சில வருடங்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது அரிய கருத்துகளை ஆர்ட்டீஷியன் நீருற்றாக அதிரடியாக வெளிப்படுத்தி வருகிறார்.

சிங்கள ராணுவம் இந்திய தமிழக கடலோர மீனவர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது ட்விட்டர்தளத்தில் தமிழர்கள் பொங்கிக் கொண்டிருந்தபோது, சகோதரி ஓர் அருமையான கருத்தினை முன்வைத்தார். அதாவது அவர் விலங்குகளை துன்புறுத்தாத அமைப்பின்
(PETA) ஆதரவாளராம். மீனவர்கள் மீன்களை துன்புறுத்துவதோடு இல்லாமல், அவற்றை கொன்று விற்பனையும் செய்பவர்கள் என்கிற முறையில் அவர்களை அவர் எப்படி ஆதரிக்க முடியும்?

போலவே முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவி நிறைய மதிப்பெண்கள் பெற்றும் தனக்கு ஏதோ கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக குமுற, சகோதரி கைகொடுத்து ட்விட்டினார். இடஒதுக்கீடு என்பது எவ்வளவு அபத்தமென்று விவாதித்தார். இந்தியாவிலேயே எங்கும் நிகழா சாதனையாக அறுபத்தி ஒன்பது சதவிகித இடஒதுக்கீட்டினை தமிழகத்துக்கு பெற்றுத் தந்தவர் நம்மை ஆண்டுக்கொண்டிருக்கிறார். எனவேதான் அவரை ஒடுக்கப்பட்ட சமூகம், சமுகநீதி காத்த வீராங்கனையாக கொண்டாடுகிறது. அப்படிப்பட்ட முதல்வரை விட சகோதரி புத்திசாலி என்பது அவரது இடஒதுக்கீடு குறித்த விவாதம் மூலமாக அறிந்துகொள்ள முடிந்தது.

சமீபத்தில் இயக்குனர் இராஜமவுலி ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார். மனுதர்மம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்லாதது, வாழ்க்கைமுறையின் அடிப்படையில் அமைவது என்று அவரோடு டென்னிஸ் விளையாடும் பிரசாத் என்கிற அறிவுஜீவி விளக்கினாராம்.

அந்த ட்விட்டில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

“பஞ்சம ஜாதியினர் தீண்டத்தகாதவர்கள் : மற்றவர்களை சார்ந்து வாழ்பவர்கள் (ஒட்டுண்ணிகள்)

சூத்திரர்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்துக்காகவும் வாழ்பவர்கள்.

வைசியர்கள் வணிகம் மூலம் தங்களுக்காகவும், தங்களோடு வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபத்தை ஏற்படுத்துபவர்கள்.

சத்திரியர்கள் தமக்கு கீழ் இருப்பவர்கள் சாப்பிட்டதற்கு பிறகு சாப்பிடுபவர்கள்.

பிராமணர்கள் தாங்கள் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு கற்பிப்பவர்கள்”

இந்த கருத்தை ட்விட்டரில் ரீட்விட் செய்து வழிமொழிந்ததின் மூலம் தன்னுடைய சமூகப்பார்வையை அகிலத்துக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் சகோதரி சின்மயி. அவரது அறிக்கைகளிலேயே தொடர்ச்சியாக அவரது சமூகம் குறித்த பெருமையை நாம் கண்டு பெருமிதப்பட்டுக்கொள்ள முடிகிறது.

இவ்வாறான உயர்ந்த சமூகப்பார்வை கொண்டவரோடு வேறுபாடான கருத்துகள் கொண்டவர்கள் விவாதிப்பது இயல்புதான். அவ்வாறு விவாதிப்பவர்களோடு நமக்கு விவாதம் தேவையில்லை எனில் அவர்களை நம் பார்வையிலிருந்து முடக்கிவைக்கும் வசதியினை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகத்தளங்கள் வழங்குகின்றன. ட்விட்டர் தளத்தில் சகோதரி சின்மயியோடு என்னால் இம்மாதிரி விவாதங்களை நிகழ்த்த முடியாது. ஏனெனில் அவர் என்னை ஏனோ தடை செய்திருக்கிறார். அவ்வாறு தடை செய்ததாலேயே இன்று காவல்துறையால் கைது செய்யப்படாமல் இருக்கிறேன் என்பதற்காக சகோதரிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சகோதரியோடு விவாதித்தவர்கள் சிலர் ஆபாசமான முறையில் அவரிடம் விவாதித்ததாக புகார் செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விவாத முறையில் எனக்கும் ஒப்புதல் இல்லை. அதே நேரம் ட்விட்டரில் மோசமாக நடந்துகொண்டார்கள் என்பதற்காக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மாதிரியான பிரிவுகளில் அவர்களை கைது செய்திருப்பது மிக அதிகம். கைது செய்யப்பட்டவர்கள் சகோதரியை நேருக்கு நேராக ஒருமுறை கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

சகோதரி என்னமாதிரியான புகாரை அளித்தார் என்று தெரியவில்லை. அதே நேரம் நேற்று தினகரன் பத்திரிகை பேராசிரியர் சரவணக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு காரணமாக செய்தி போட்டிருப்பது அப்பட்டமான அவதூறு. சரவணக்குமார், சகோதரி சின்மயியின் படங்களை ஆபாசமாக உருமாற்றி, ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பகிர்ந்ததாக செய்தித்தாள் தெரிவிக்கிறது. மற்ற ஊடகங்களிலும் கூட கிட்டத்தட்ட இதேமாதிரியான செய்திகளைதான் வாசிக்க முடிகிறது. மாறாக சரவணக்குமார் மீது புகார் கொடுக்க காரணமான ‘ஸ்க்ரீன்ஷாட்’களை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சகோதரி பகிர்ந்திருக்கிறார். அவை வெறும் ‘டெக்ஸ்ட் மெசேஜ்’களாகதான் இருக்கின்றனவே தவிர, ஆபாசப் படங்களாக தெரியவில்லை. சமூகத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பேராசிரியர் ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஊடகங்களில் செய்தி அளித்திருக்கிறார்கள். பேராசிரியர் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீதும், புகார் கொடுத்தவர் மீதும் அவதூறு வழக்கு கூட இதனால் தொடுக்கலாம். மானத்துக்கு நஷ்டஈடாக சில கோடிகளை கேட்கலாம்.

உண்மையாகவே ஆபாசப் படங்களை பேராசிரியர் பகிர்ந்திருந்தால், ‘கைது, ரிமாண்ட்’ மாதிரி விஷயங்கள் உறுத்தப் போவதில்லை. மாறாக சில ‘ட்விட்’களுக்காக தீவிரவாதிகளை பிடிப்பதைப் போல அவரை பிடித்திருப்பது, இந்த புகாருக்குப் பின்னால் வேறு ‘அழுத்தம்’ இருக்குமோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. குறிப்பாக பெயிலில் எடுக்க முடியாத வண்ணம், கோர்ட் விடுமுறை தினத்துக்கு முன்பாக ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டிருப்பதை இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். வக்கிரமான ட்விட்டுகளுக்கு சிறைத்தண்டனை என்றால், தமிழில் சமூகவலைத்தளங்களில் இயங்கும் தொண்ணூறு சதவிகிதம் பேரை சிறையில் தள்ள வேண்டியிருக்கும். இவர்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒருமுறையாவது வெகுஜன ஊடகங்களில் வெளிவந்த வண்ணப் படங்களையும், அதற்கு எழுதப்பட்ட கமெண்டுகளையும் தங்கள் பக்கங்களில் பிரசுரித்தவர்களாகவே இருப்பார்கள். பேராசிரியர் எழுதியிருப்பதை விடவும் மோசமான கமெண்டுகளையும், கிசுகிசுக்களையும் தமிழில் சகஜமாக பத்திரிகைகளிலேயே நாம் வாசிக்கலாம். பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் இதற்காக சிறைக்குச் செல்வது அநியாயம் என்று அறிவுலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது (சாவி அட்டைப்பட ஜோக் விவகாரம் நினைவிருக்கிறதா?). இவ்வகையில் இதை கருத்துரிமைக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையாகவும் பார்க்கலாம்.

அதிகபட்சமாக காவல்துறையினர் அழைத்து விசாரித்து, இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று எழுதி வாங்கிக் கொள்ளவேண்டிய ஒரு செயலுக்கு, என்னமோ ஆசிட் அடித்தவர்களை நடத்துவது மாதிரி நடத்தியிருப்பதற்கு பின்னால் என்ன அழுத்தம் இருக்குமென்று தெரியவில்லை. சகோதரியின் அங்கிள் ஓர் ஐ.பி.எஸ். அதிகாரி என்று கேள்விப்படுகிறோம். ஒருவேளை அதுதான் காரணமா? சகோதரி சின்மயி என்னவோ ஒரு கரடிப்பொம்மைக்கு ஆசைப்பட்டது போலவும், அதை வாங்கிக் கொடுக்க அவரது தாயாரும், உறவினரும், காவல்துறையினரும் பாடுபடுவதைப் போலவும் இந்த விவகாரம் தோன்றுகிறது.
 சகோதரிக்கு அது வெறும் ஆசை. சிறை சென்றவர்களுக்கோ வாழ்க்கை.

தமிழக முதல்வர் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் தாயுள்ளம் கொண்டவர் என்பதிலோ, கருணைக்கடல் என்பதிலோ ஐயம் இருந்தால் கழுவில் ஏற்றப்பட தகுதியானவர்கள் ஆவோம். எத்தனையோ பேருக்கு சகாயம் செய்யும் அம்மாவின் கருணைப்பார்வை ஒரு சாதாரண அரசு ஊழியருக்கும், பேராசிரியருக்கும் மட்டும் அநீதி செய்துவிடக்கூடாது. அம்மாவின் ஆட்சியில் கண்ணியம் மிக்க காவல்துறையினர் புறா மீது தேர்க்காலை இட்ட இளவரசனாக வரலாற்றில் பதியப்பட்டு விடக்கூடாது. எது குற்றமோ, அதற்கு மட்டும் தண்டனைகள் தருவதுதான் நீதி. இந்த விவகாரத்தில் அநீதி நடந்துவிடக் கூடாது என்பதை மட்டும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்கிற வாதத்தில் எனக்கும் ஒப்புமை உண்டு. அதற்காக உப்பைத் தின்ற குற்றத்துக்காக சயனடை அருந்தவேண்டும் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?