27 பிப்ரவரி, 2014

ஆஹா கல்யாணம்

ஆதித்யா சோப்ராவின் யாஷ்ராஜ் பிலிம்ஸின் முதல் தென்னிந்திய பிராஜக்ட். மொத்தமாக முப்பத்தைந்து கோடியை போட்டுவிட்டு, ரிசல்ட்டுக்காக நகம் கடித்துக் கொண்டிருந்தார்களாம். ‘ஏ’ சென்டர் தியேட்டர்களில் நல்ல ரிசல்ட். தமிழ், தெலுங்கு இரண்டிலும் சேர்த்து ஈஸியாக ஃபிப்டி சி தாண்டிவிடும் என்று மார்க்கெட்டில் சொல்கிறார்கள். இனி இந்தியில் ஹிட் அடிக்கும் படங்களை டப் அடிக்காமல், இதுபோல தென்னிந்திய நடிகர்களை வைத்து பை-லிங்குவலாக ஏகப்பட்ட படங்கள் நம்மூர் தியேட்டர்களை நோக்கி காவடி தூக்க போகின்றன. முன்பு நம்மூர் ஜெமினி வாசன்களும், ஏவிஎம்களும், சித்ராலயா ஸ்ரீதர்களும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த பிசினஸ் இது. இப்போது வட இந்திய பனியாக்களின் டர்ன்.
ஹீரோ நானியை விடுங்கள். ஹீரோயின் வாணிகபூர் ஓர் அட்டகாசமான வரவு. சாமுத்ரிகா லட்சணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த அம்சங்களுக்கும் கட்டுப்படாத காட்டுத்தனமான அழகு. ஜெயப்பிரதாவையும், அனுஷ்காவையும், ஸ்ருதிஹாசனையும் பிசைந்துசெய்தது மாதிரி அசாதாரணமான காம்பினேஷனில் பிரமிக்கவைக்கும் பேரெழில். கழுத்துக்கும், கழுத்துக்கு கீழான பிராப்பர்ட்டிக்கும் இடையில் மட்டுமே ஒண்ணு, ஒன்றரை அடி கேப் இருக்கும் போலிருக்கிறது. தமிழர்கள் அகலமான முதுகுக்கே ஆவென்று வாயைப்பிளப்பார்கள். முன்புறத்தில் செக்கச்செவேலென்ற நீண்ட, அகன்ற கழுத்தை பார்த்து மெண்டலாகி திரியப் போகிறார்கள். வாணியின் கழுத்தழகை ‘பளிச்’சிடவென்றே பர்ஃபெக்டான காஸ்ட்யூம்கள். போலவே அவரது மத்திய இடைப்பிரதேசத்தின் நீளம், அகலமும் ஜாஸ்தி. இடுப்பை அப்படியும் இப்படியுமா ஆட்டி, ஆட்டி டேன்ஸ் ஆடும்போது தியேட்டரில் ஏகப்பட்ட விக்கெட்டுகள் டொக்காகின்றன. இண்டர்வெல் ப்ளாக்கில் சூடான லிப்லாக் சீன் வேறு. பெரிய ராட்டிணத்தில் ரவுண்ட் அடித்து கோலிவுட் + டோலிவுட்டின் அடுத்த சில ஆண்டுகளை ஆளப்போகிறார் இந்த தேவதை.

பெரும்பாலான காட்சிகள் அனைத்திலும் நாயகன், நாயகி இருவருமே இருக்கிறார்கள். அல்லது இவர்களில் ஒருவர் இடம்பெறும் காட்சிகள் மட்டும்தான். வேறு கிளை பாத்திரங்களோ, கிளைக்கதைகளோ, தனியாக காமெடி டிராக்கோ இல்லவே இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் இருந்தும் இரண்டே இரண்டு கேரக்டர்களை மட்டுமே மையப்படுத்தி அறுபத்தஞ்சி சீன் எழுதுவது எப்படியென்று, உதவி இயக்குனர்கள் இப்படத்தின் திரைக்கதை கட்டுமானத்தை பாடமாக படிக்க வேண்டும். இடைவெளி இன்றி அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் இருந்தும் காட்சிகள் சலிக்கவேயில்லை. லேசான டப்பிங் வாசனைதான் பெரும் குறை. மற்றபடி பக்காவான மல்ட்டிப்ளக்ஸ் மூவி. கம்ப்ளீட் ஃபேமிலியோடு ஜாலியாக பார்க்கலாம்.

ஆஹா ஓஹோ கல்யாணம்!

25 பிப்ரவரி, 2014

வி.ஐ.பி.களின் காலர் ட்யூன்!

மாதத்துக்கு முப்பது ரூபாய் செலவழித்தால் போதும். நமக்கு போன் செய்பவர்களின் காதில் ‘ட்ரிங் ட்ரிங்’குக்கு பதிலாக நாமே தேர்ந்தெடுக்கும் பாடல் இசைவெள்ளமாய் பாய்கிறது. சாமானியர்களுக்கு மட்டும்தான் இந்த ‘காலர் ட்யூன்’ வசதியா. அரசியல் புள்ளிகளும் அசத்தலாமே. ஒய் நாட்? வி.ஐ.பி.களின் தற்போதைய ‘மூடு’க்கேற்ப நம்முடைய தாழ்மையான பரிந்துரைகள்...

அஞ்சா நெஞ்சன் :
“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை...
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை?”
தளபதி :
“முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி
பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக 
அன்பாலே இணைந்து வந்தோம் 
ஒண்ணுக்கு ஒண்ணாக” 

(சோக வெர்ஷன் பாடல்) 
கலைஞர் :
“கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்த காலமே...
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே...
என் தேவனே ஓ தூக்கம் கொடு 
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு 
பாலைவனம் கடந்து வந்தேன் 
பாதங்களை ஆறவிடு” 
புரட்சித்தலைவி :
“பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குதான்
என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் 
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்”

டாக்டர் அய்யா & சின்ன அய்யா :
“மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
திண்டிவனத்து மாம்பழம்
அழகான மாம்பழம் 
அல்வா போன்ற மாம்பழம் 
உங்களுக்கும் வேண்டுமா 
ஓடி இங்கே வாருங்கள் 
பங்கு போட்டு தின்னலாம் 
பரவசமாய் பாடலாம்” 
(ரைம்ஸ்) 
கேப்டன் :

பாஜகவோடு கூட்டணி அமைந்தால் :

“தாமரைப் பூவுக்கும்
‘தண்ணிக்கும்’ என்னிக்கும்
சண்டையே வந்ததில்லை
மாமனை அள்ளி நீ
தாவணி போடுக 
மச்சினி யாருமில்லை”


காங்கிரஸோடு கை கோர்த்தால் :

“கை, கை, கை வெக்கிறா வெக்கிறா
கைமாத்தா என் மனசை கேக்குறா கேக்குறா”


தனித்து நின்றால் :

“தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமையும் இழந்தோம் 
உடமையும் இழந்தோம் 
உணர்வை இழக்கலாமா?” 
அண்ணியார் :

“வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தா
கரை சேரும் காலம் எப்போ?”
எழுச்சித் தமிழர் : 

“வருது வருது – அட
விலகு விலகு
சிறுத்தை வெளியே வருது
சிறுத்தை நான்தான்
சீறும் நாள்தான்” 

செந்தமிழன் :

“நான் யாரு
எனக்கேதும் தெரியலியே
என்னைக் கேட்டா
நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி 
கொண்டு வந்த சாமி 
யாரைதான் கேட்டானோ?” 
பொன்னார், புரட்சிப்புயல், பாரிவேந்தர், நீதிக்காவலர் மற்றும் கொ.மு.கவின் எல்லா பிரிவு தலைவர்களுக்கு சேர்த்து க்ரூப் ட்யூன்!

“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளிக்கூட்டம் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்”
தா.பா, ஜி.ரா மற்றும் பிரகாஷ்காரத், பரதன் உள்ளிட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் அனைவருக்கும் சேர்த்து க்ரூப் ட்யூன்!

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
புரட்சித் தாயன்றி வேரொன்று ஏது?”

21 பிப்ரவரி, 2014

நாற்பதும் நமதே, நாடும் நமதே!

மாண்புமிகு ஈழத்தாய் டாக்டர் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஜனித்த அறுபத்து ஆறாவது பெருநாள் இவ்வருஷம் 24-02-14 அன்று வரவிருப்பதை அம்மாவின் விசுவாசிகளும், அன்பர்களும் அறிந்ததே. இந்த எண்களை கூட்டி வாசித்த கணிதவியல் பேராசியர்களும், ஆராய்ச்சியாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால் கூட்டுத்தொகை 40 வருகிறது என்கிறார்கள். வரக்கூடிய சித்திரை மாதம் (ஆங்கிலத்தில் மே) புரட்சித்தலைவி அவர்களின் சோவியத் கூட்டணி தமிழகம் மற்றும் புதுவை பாராளுமன்றத்தின் நாற்பது தொகுதிகளையும் வெல்லப்போகிறது என்பதன் குறியீடாகவே தங்கத்தாரகை தாயின் இவ்வருட பிறந்தநாள் அமைந்திருக்கிறது என்று பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் இந்த போக்கினை அவதானிக்கிறார்கள். குடிகாரர்களும், தீயசக்திகளும் இந்த அறிவியல் மற்றும் இலக்கிய பேருண்மையை விரைவில் உணர்வார்கள்.

இந்த நாற்பதை மட்டுமே வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் எப்படி இந்திய தாய் திருநாட்டுக்கு பிரதமர் ஆக முடியுமென்று அண்டோமேனியா அடிமைகளும், தேநீர்கடை மாஸ்டரின் தேவாங்குகளும் கெக்கலிக்கிறார்கள். அங்கேதான் இருக்கிறது புரட்சித்தலைவியின் சாமர்த்தியம். தேசிய ஆன்மீக தமிழ் நாளிதழான ஸ்ரீ தினமலர் நம் தங்கதாயை சோவியத் தாய் என்று தலைப்புச்செய்தியாக குறிப்பிட்டிருப்பதை மானமுள்ள உலகத்தமிழர்கள் அறிவார்கள். எனவே சோவியத் தாயின் தவப்புதல்வர்களாம் பிரகாஷ்காரத், பரதன் போன்ற தோழர்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மேற்குவங்காளம், பீகார், நேபாளம், ரஷ்யா, மக்கள் சீனம், புரட்சி கியூபா போன்ற இந்திய மாநிலங்களிலும் ’புரட்சித்தலைவியே பிரதமர்’ என்கிற கோஷத்தை முன்வைத்து நமக்கு வாக்குகள் சேகரிக்க இருக்கிறார்கள். தோழர்களுக்கு எப்படி தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்று அப்பகுதிகளுக்கு சென்று அம்மாவின் ரத்தத்தின் ரத்தங்கள் கற்றுக் கொடுப்பார்கள்.

அம்மா பிரதமர் ஆன அடுத்தநொடியே இந்தியா சோஷலிஸ்ட்டு யூனியன் நாடாக மாற்றம் பெறும். தமிழ் ஈழம் பிறக்கும். இதற்காக பாராளுமன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிக்கை வாசித்து தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு கனவு நனவாகும். ஆஸ்திரேலியாவில் அம்மா மெஸ் திறக்கப்படும். வெள்ளை மாளிகை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகும். பாகிஸ்தானுக்கு பல்லு உடைக்கப்படும். ஐ.நா.சபையில் சீனாவுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்படும். சோவியத் ருஷ்யா அம்மாவின் ஆளுகைக்குள் வரும். அமெரிக்காவின் அணுகுண்டுகள் பறிமுதல் செய்யப்படும். ஆப்பிரிக்காவில் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படும். உலக மக்கள் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும். செவ்வாய் கிரகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும்.

அண்ணா நாமம் வாழ்க. அம்மா புகழ் ஓங்குக.

17 பிப்ரவரி, 2014

தோழரை காதலிக்கும் பூர்ஷ்வா

போன தலைமுறை புனிதமாய் கருதி பொத்தி பொத்தி பாதுகாத்த காதலையும், கம்யூனிஸத்தையும் பகடிக்கு உள்ளாக்குவது மலையாள இளம் இயக்குனர்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அதிலும் இந்த வினித் சீனிவாசன் க்ரூப் களமிறங்கிய பின்பு ஒரே அதகளம்தான்.

இயக்குனர் ஜூடே ஆண்டனி ஜோசப்பின் அறிமுகப்படமான ‘ஓம் சாந்தி ஓசண்ணா’ அமர்க்களமான ரொமாண்டிக் காமெடி கமர்சியல். சாஃப்ட்வேர் என்ஜினியராக பொட்டி தட்டிக் கொண்டிருந்த ஆண்டனிக்கு திடீரென ஒருநாள் சினிமாவில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. திலீப் நடித்த ‘கிரேஸி கோபாலன்’ படத்தில் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ம்ஹூம். க்ளாப் அடிக்க கற்றுக் கொண்டதை தவிர வேறெதையும் அங்கே கற்க முடியவில்லை. ஹீரோ திலீப்புக்கு இவரைப் பார்த்து பரிதாபமாகி விட்டது. அடுத்து வினீத் சீனிவாசனை இயக்குனராக அறிமுகப்படுத்தி, ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’ படத்தை திலீப் தயாரித்தார். அதில் பணிபுரிய ஆண்டனியை, வினீத்திடம் திலீப்பே சிபாரிசு செய்தார். இந்த படத்தில்தான் கேரளாவின் இன்றைய ட்ரீம்பாயான நிவின்பாலி அறிமுகமானார்.தொடர்ச்சியாக வினீத் சீனிவாசின் அடுத்த ப்ளாக் பஸ்டர் படமான ‘தட்டத்தின் மறயத்து’விலும் ஆண்டனி தொழில் கற்றார். போதும். தனிக்கடை போட்டுவிட்டார்.

‘ஓம் சாந்தி ஓசண்ணா’வும் அதே வினீத் ஸ்டைல் தீம் படம்தான். முந்தைய தலைமுறை ‘ச்சோ.. ச்சோ’ கொட்டி ரசித்து ஆராதித்த விஷயங்களை, உலகமயமாக்கலுக்கு பிறகான தலைமுறை எப்படி பார்க்கிறது என்பதுதான். பக்காவான ஸ்க்ரிப்ட். மீடியம் பட்ஜெட். பர்ஃபெக்ட்டான போஸ்ட் புரொடக்‌ஷன். ஃப்ரேமுக்கு ஃப்ரேம்.. இன்ச் பை இன்ச் ரிச்சான குவாலிட்டி. மலையாளத் திரையுலகில் வீசிக்கொண்டிருக்கும் புதிய அலை இதுதான்.

எண்பதுகளின் மணிரத்னம் பட நாயகிகளை மறக்க முடியுமா? மவுனராகம் சுட்டி ரேவதி, இதயத்தை திருடாதே துறுதுறு கிரிஜா. இவர்களின் நீட்சியாக இந்த படத்தில் நஸ்ரியா. படம் தொடங்கும்போதே நிவின்பாலி தன் ரசிகர்களிடம் (!) விளக்கம் அளிக்கிறார். இந்த படம் ஹீரோயினின் வ்யூபாயிண்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.

ஸ்கூல் படிக்கும் பூஜா பையன் மாதிரி வளர்கிறாள். ஜீன்ஸ் பேண்ட், டீஷர்ட், ஹீரோ ஹோண்டா பைக்கென்று. இவளது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஆக்டிவிட்டி என்னவென்றால் ‘ஒயின் டேஸ்டர்’. பூஜாவின் சமூகத்தில் நூறு, இருநூறு சவரன் கொடுத்து ஒரு மொக்கையான பையனுக்கு பெண் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. எனவே தன்னுடைய பெட்டர் ஹாஃபை தானே ‘செலக்ட்’ செய்யவேண்டுமென்று மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். ஸ்கூலில் சகமாணவன் ஒரு பக்காவாக செட் ஆகிறான். ஆனால் அவனிடம் பெண்கள் விரும்பத்தக்க ரஃப் ஆன ஆண்மை மிஸ்ஸிங் என்று பூஜாவுக்கு தோன்றுகிறது.

பூஜாவின் இடைவிடா தேடுதலில் மாட்டுபவன்தான் நம் தோழர் கிரி. பக்கா கம்யூனிஸ்டான கிரி, பட்டம் படித்திருந்தாலும் ஊரில் விவசாயம்தான் பார்க்கிறான். பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காக அதிகாரங்களோடு மோதுகிறான். அநீதிகளை தட்டி கேட்கிறான். இது போதாதா. பூஜாவுக்கு காதல் பற்றிக் கொள்கிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த –அதாவது பூர்ஷ்வா ஆன- பூஜாவை கிரி விரும்புவானா என்பதுதான் கேள்வி.

அந்த வருட ஓசண்ணா திருநாளன்றுதான் கிரிக்கு பிறந்தநாளும் வருகிறது. தன்னுடைய காதலை அவனிடம் தெரிவிக்க முயல்கிறாள். கிரியின் சித்தாந்த மூளை இக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வர்க்க வேறுபாடுகளை தாண்டி, அவள் பள்ளி மாணவி. தான் பொறுப்பான கம்யூனிஸ்ட் என்பதை சுட்டிக்காட்டி, அவளை ஒழுங்காக படித்து உருப்படுமாறு உபதேசம் செய்கிறான்.

இதற்கிடையே ஒரு காதலை சேர்த்து வைப்பதில் ஏற்படும் பிரச்சினையால், ஒரு பூர்ஷ்வாவின் (ஸ்ஸப்பா) வன்முறை தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்கள் சீனத்துக்கு (முடியல) போய் தலைமறைவாகிறான். பூஜாவுக்கு மெடிக்கல் அட்மிஷன் கிடைக்கிறது. அங்கு வரும் புரொபஸர் ஒருவரோடு லேசான ஈர்ப்பு தோன்றுகிறது. ஆனால் அது காதல் அல்ல என்று அவளது மனம் அவளை தெளிவுப்படுத்துகிறது.

அப்படி இப்படியாக ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டது. இப்போது பூஜா டாக்டர். மக்கள் சீனத்திலிருந்து தோழர் கிரி திரும்பிவிட்டார். அதே ஓசண்ணா நாள். அன்றுதான் கிரிக்கும் பிறந்தநாள். என்னவாகிறது இவர்கள் காதல் என்பதை நொடிக்கு நாலு முறை கிச்சுகிச்சு மூட்டி, வயிறு வலிக்க வைக்கும் திரைக்கதை வசனங்களோடு சுடச்சுட கேரளா ஸ்பெஷல் மீல்ஸ் பரிமாறியிருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின் ஆகச்சிறந்த ஆச்சரியம் நஸ்ரியா. குள்ளச்சியும், ஒல்லிப்பிச்சானுமான நஸ்ரியா எப்படிப்பட்ட திறமைவாய்ந்த நடிகை என்பதை யாராவது நையாண்டி இயக்குனர் சற்குணத்திடம் முன்பே எடுத்துச் சொல்லியிருக்கலாம். அவரைப்போய் தொப்புளை காட்டச் சொல்லி வற்புறுத்தியிருக்க மாட்டார். படம் முழுக்க நஸ்ரியாவின் நரேஷனில்தான் ஓடுகிறது. அதிலும் கிளைமேக்ஸில் “இந்த ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு கெட்டப்பழக்கம். தன்னோட முதல் காதலியோட பேரைதான் பொண்ணு பொறந்தா வைப்பானுங்க” என்று சொல்லும்போது காட்டும் முகபாவம் ஏ க்ளாஸ். நிவின் பாலி படம் முழுக்க அண்டர்ப்ளே செய்து, நஸ்ரியாவுக்கு க்ளாப்ஸ் வாங்கித்தரும் பெருந்தன்மையுடைய இளம் நம்பிக்கை நட்சத்திரம்.

ஒருநாள் முழுக்க நண்பர்களோடு சீயர்ஸ் அடித்து ‘சிப்’பி ‘சிப்’பி ஒயின் சாப்பிட்ட போதையை பின்னணி இசையும், பாடல்களும் அளிக்கிறது. திரையின் ஒவ்வொரு பிக்ஸெல்லிலும் இளமையோடு போட்டி போடும் இன்னொரு சமாச்சாரம், கேமரா அள்ளித்தரும் பசுமை. கொஞ்சமும் திகட்டாத கடவுளின் தேசம் கிளியோபாட்ராவின் மேனியைவிட பேரழகு கொண்டது என்பதை மறுக்க முடியாது. கேரளாவில் பிறக்கும் பெண்கள் ஏன் சூப்பர் ஃபிகர்களாக இருக்கிறார்கள் என்று அறிவியல்பூர்வமாக யோசித்துப் பார்த்தால் ஈ ஈக்குவல் டூ எம்சி ஸ்கொயர் என்கிற ஐன்ஸ்டீன் ஃபார்முலாவின் தாத்பரியம் புரியவருகிறது.

திருப்புமுனை நாயகன்

வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆரம்பத்திலிருந்தே நேரு களத்தில் இறங்கி பணியாற்றக்கூடியவர். தொண்டர்களின் உணர்வுகளை துல்லியமாக எடைபோடுபவர். கட்சி வேலை என்று வந்துவிட்டால் கவுரவம் பார்க்காமல் கரைவேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இறங்கிவிடுவார். 91 – 96 அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுகவின் பழைய தலைவர்கள் அதுவரை எதிர்கொண்டிராத அடாவடியான அரசியலை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். அன்பில் குடும்பம் நடத்திய ‘ஜெண்டில்மேன் பாலிடிக்ஸ்’, ‘ஜெ’ காலத்தில் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து, அதிரடி அரசியலை திருச்சி திமுகவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திமுகவில் நேர்பிளவு ஏற்பட்டு மதிமுக உருவானபோது, மாவட்டமெங்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரில் சென்று, கட்சியின் வலிமையை உறுதி செய்தார்.

96 தேர்தலுக்கு முன்பாக திமுக மாநில மாநாடு நடத்த உத்தேசித்தபோது, உரிமையோடு சண்டை போட்டு திருச்சியில்தான் நடத்த வேண்டும் என்று வெற்றி கண்டார். அப்போது திருநெல்வேலி திமுகவினர் இவர்மீது கொலைவெறி கொண்டார்கள். திருச்சியில் நடந்த அம்மாநாடு திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. லட்சக்கணக்கான தொண்டர்களை பிரச்சினைகள் ஏதுமின்றி கட்டுக்கோப்போடு மாநாட்டில் பங்குபெறச் செய்த நேருவின் உழைப்பு கலைஞரை கவர்ந்தது. பல பேரணிகளையும், மாநாடுகளையும் பிரும்மாண்டமாக நடத்திக்காட்டிய கலைஞரே, அம்மாநாட்டு ஏற்பாடுகளை கண்டு பிரமித்தார். ‘அஸ்தமித்து விட்டது திமுக’ என்று அலறிக்கொண்டிருந்த தேசிய ஊடகங்கள், திமுகவின் உயிர்ப்பினை ஒப்புக்கொண்டன. சோர்ந்திருந்த அக்கட்சி தொண்டர்களையும் எழுச்சி பெறவைத்த நிகழ்வு அது.

2001ல் படுதோல்வி கண்ட திமுக, 2006 தேர்தலை எதிர்கொள்ளும்போது ‘வெற்றி சூத்திரம் திருச்சியில் இருக்கிறது’ என்று கண்டுகொண்டது. எனவே திரும்பவும் அங்கேயே ஒரு மாநில மாநாடு. நேருவின் மேஜிக் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மிகச்சரியாக மாநாடு நடைபெறும்போது அதுவரை கூட்டணியில் இருந்ததாக நம்பப்பட்ட வைகோ, போயஸ் தோட்டத்துக்கு ‘பூங்கொத்து’ கொடுக்கச் சென்றுவிட்டார். வைகோ வருவார் என்று நம்பி மாநாட்டுக்கு வந்த மதிமுகவினரை அப்படியே அலாக்காக அள்ளி திமுகவுக்கு கொண்டுவந்தார் நேரு. மதிமுக மீது மக்களுக்கு இருந்த நம்பகத்தன்மை முற்றிலுமாக குலைந்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். வைகோவின் முடிவால் ‘அப்செட்’ ஆகியிருந்த கலைஞரை, ‘கூல்’ செய்தது நேருவின் இரவு பகல் பாராத உழைப்புதான். ‘மீண்டும் ஆட்சி கானல்நீர்தான் போல’ என்று சந்தேகப்பட்ட சில கட்சித் தலைவர்களுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்தது திமுகவின் ஒன்பதாவது மாநில மாநாடு. பேரணியில் அணி அணியாக திரண்ட தொண்டர்கள் ‘ஆட்சி நமதே’ என்று கட்டியம் கூறினார்கள்.
2011லும் திமுகவை ‘தோல்வி சாபம்’ தொடர்ந்தது. முன்னெப்போதுமில்லாத வகையில் அனைத்துத் தரப்பும் ஆச்சரியப்படும் வகையில் அதிமுகவின் ஆட்சியும், பெரிய புகார்கள் இன்றி சிறப்பாக செயல்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை இழந்த சோகத்தில் இருந்து தொண்டர்கள் இன்னமும் மீண்டெழ வாய்ப்பே கிடைக்கவில்லை. நேருவுக்கு தனிப்பட்ட சோகம் வேறு. சிறைக்கும், வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருந்தார். அவ்வளவு செல்வாக்கும், அதிகாரமும் மிக்க நேருவின் தம்பியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டு விட்டார். கிட்டத்தட்ட பொதுவாழ்க்கையில் இருந்து விலகி ‘டை’ அடிக்காத வெள்ளைக்கேசம், தாடியென்று சாமியார் கெட்டப்புக்கு நேரு மாறிவிட்டார். திமுகவும் அப்படிதான் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஸ்பெக்ட்ரம், அழகிரி என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் இருந்து மீள, திமுகவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்த திருச்சியைதான் தேர்ந்தெடுத்தார் கலைஞர். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சி கொஞ்சம் ‘ப்ரெஷ்’ ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தவிர்த்து நேருவையும் அவரது தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளெழச்செய்ய இதைத்தவிர்த்து வேறு உபாயம் கலைஞருக்கு தோன்றவில்லை.

‘திருச்சியில் மாநாடு, நேரு ஏற்பாடு செய்வார்’ என்று கலைஞர் அறிவித்தவுடனேயே, முதல் வேளையாக ‘ஷேவிங்’ செய்தார் நேரு. தன்னுடைய ஸ்பெஷலான கத்தி மீசையை கூராக தயார் செய்தார். தலை முடிக்கு ‘டை’ அடித்துக் கொண்டார். எண்பதுகளில் கட்சி வளர்க்க உதவிய ‘என்ஃபீல்ட் புல்லட்டை’ நல்ல மெக்கானிக்கிடம் கொடுத்து தயார் செய்தார். இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கு முந்தைய களவீரர் நேரு ரெடி. திருச்சி முழுக்க புல்லட்டில் நகர்வலம். இரண்டு மாத காலமாக இரவு பகல் பாரா உழைப்பு.

மாநாடு மாபெரும் வெற்றியென்று திமுகவின் எதிர்க்கட்சிகளும், எதிர்நிலையில் இருக்கும் ஊடகங்களும் கூட இன்று ஒப்புக்கொள்கின்றன. உடனடியாக வரவிருக்கும் தேர்தலில் இதன் தாக்கம் தெரியுமாவென்று சொல்ல முடியாது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலை திமுக ‘தில்லாக’ எதிர்கொள்ள, அக்கட்சியை வலுவாக தயார்படுத்தியிருக்கிறது திமுகவின் பத்தாவது மாநில மாநாடு. எல்லாவற்றுக்கும் மேலாக திருச்சியின் செயல்வீரரான நேரு திமுகவுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறார். கலைஞருக்கு இதுதான் இம்மாநாட்டின் ‘ஸ்பெஷல் போனஸ்’.

11 பிப்ரவரி, 2014

புலிவாலும் பத்மினியும்

வர்க்கமுரண் தான் ஒன்லைன். எதிர் எதிரான எக்ஸ்ட்ரீம் கார்னரில் வசிக்கும் இரு மனங்கள் ஏன் எப்படி முட்டிக்கொள்கிறது என்பதுதான் தீம். முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்து விடுகிறது. பணத்துக்கு பஞ்சமில்லாத பிரசன்னா. பஞ்சமே வாழ்க்கையென வாழும் விமல். முன்னவருக்கு காதல் சைட் டிஷ். காமம் மெயின் டிஷ். பின்னவருக்கு காதல் புனிதம். காமத்தை பற்றி கல்யாணத்துக்கு அப்புறம்தான் பரிசீலனை. அட்டகாசமான கேரக்டர் ஸ்கெட்ச்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மின்னலை பிடித்து மேகத்தில் குழைத்து பெண்ணென்று செய்துவிட்ட நடிகையின் ‘பிட்டு’ என்றொரு சமாச்சாரம் இணையத்தளங்களிலும், பர்மாபஜாரிலும் உலவிவந்தது நினைவிருக்கிறதா. காமவெறி தமிழ்சமூகம் வயது வித்தியாசம் பாராமல் பார்த்து ரசித்ததே? பின்னர் அது நடிகையுடையது அல்ல, ஒரு பெங்களூர் கல்லூரி மாணவியுடையது என்று பின்கதைச் சுருக்கம் வந்தது. அதற்கு பிறகு அந்த ‘பிட்டு’ டேட்டிங் போனபோது பாய்பிரண்ட் பிடித்தது. அவனுடைய செல்போன் சர்வீஸுக்கு போனபோது கடைக்காரன் நெட்டில் ஏற்றிவிட்டான். அவமானம் தாங்காமல் அந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டாள் என்று கதை தொடர்ந்துகொண்டே போனது. புலிவாலில் அந்த கதை அப்படியே பதிவாகியிருக்கிறது. நீலப்படத்தில் வந்தவர் எந்த கோணத்தில், எம்மாதிரியான உடையில் வந்தாரோ (நாமும் காமவெறி தமிழ்சமூகத்தின் அங்கம்தான் என்பதால் அந்த பிட்டை எப்பவோ பார்த்திருக்கிறோம்) அப்படியே இப்படத்தில் ஓவியா வருகிறார். எதையுமே செல்போனில் பதிவு செய்துக்கொள்ளும் பிரசன்னா, இருவரும் ‘பேசிப்புழங்குவதையும்’ தெரியாத்தனமாக பதிவு செய்துவிடுகிறார். ‘டெலிட்’ செய்ய நினைக்கும்போது, ஏதோ போன் வந்து டெலிட்ட மறந்துவிடுகிறார்.

இந்த போன் எதிர்பாராவிதமாக விமலிடம் சிக்குகிறது. அதன்பிறகு படம் ரோலர் கோஸ்டர் ரைடுதான். இயக்குனர் மாரிமுத்து ஆறுவருடங்களுக்கு முன்பு எடுத்த கண்ணும் கண்ணும் படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு மீண்டு வந்திருக்கிறார்.

புலிவால் - அட்டகாசமான கமர்ஷியல் த்ரில்லர்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் பிறந்தவர்கள் கொண்டாடக்கூடிய திரைப்படம். பத்மினி என்கிற காரை இப்போதைய இளசுகள் சாலையில் கூட பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ரஜினி வைத்திருந்த கார் (செல்ஃப் டிரைவிங்). டாக்டர்களும், வக்கீல்களும் கார் வைத்திருந்தால் அது பத்மினியாகதான் இருக்கும். ஹ்யூண்டாய் என்றொரு கார் எந்த எமகண்டத்தில் வந்ததோ அம்பாசிடர்களும், பத்மினிகளும் காணாமல் போய்விட்டன. அட்லீஸ்ட் அம்பாஸடராவது டிராவல்ஸுக்கு ஓடுகிறது. பத்மினி சுத்தம்.

நீண்டகாலம் கழித்து, இன்னும் கொஞ்ச நேரம் ஓடியிருக்கக்கூடாதா என்று என்னை ஏங்கவைத்த திரைப்படம். எந்த கமர்சியல் காம்ப்ரமைஸும் இல்லாமல் யதார்த்தமான போக்கில் மிகதுல்லியமாக ஒரு காலக்கட்டத்தின் அடையாளங்களை திரையில் பதித்திருக்கிறார் இயக்குனர். படம் முடியும்போது பத்மினியில் நாமும் ஒரு ரவுண்டு அடிக்கமாட்டோமா என்று ஏக்கம் வருகிறது.

அழியாத கோலங்கள் பாணியில் ஒரு இளைஞனின் பிளாஷ்பேக்காக படம் விரிகிறது. ஒரு ஊர்லே ஒரு பண்ணையார். அவரிடம் ஒரு பத்மினி. அந்த பத்மினியை ஓட்டுறதுக்கு ஒரு டிரைவர். பண்ணையாருக்கு ஒரு பொண்டாட்டி. ஒரு பொண்ணு. டிரைவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் (க்ளீனர் மாதிரி). டிரைவருக்கு ஒரு காதலி. பத்மினியின் முன்சீட்டில் ஒரு வாட்டியாவது உட்கார்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு அஞ்சு ரூபாய் (க்ளீனருக்கு லஞ்சம்) சேர்க்கும் சிறுவன் என்று பாத்திரங்களை பக்காவாக செட்டப் செய்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர்.

புகுந்தவீடு எவ்வளவு வசதியாக இருந்தாலும் பொறந்தவீட்டில் இருந்து அல்பத்தனமாக சின்ன சின்ன பொருட்களை எடுத்துப்போகும் பெண், சமையலறையில் அலட்சியமாக அறுவாமனையை நிமிர்த்துவைத்துவிட்டு வேலை பார்க்கும் குடும்பத்தலைவி, அதை பார்த்தவுடனேயே எடுத்து படுக்கவைக்கும் கணவன் என்று இயக்குனரின் சின்ன சின்ன நகாசு வேலைகள் படம் முழுக்க ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகாக அலங்கரிக்கிறது. சர்ப்ரைஸ் போனஸாக ஜெயப்பிரகாஷ் – துளசி காதல்.

படத்தின் நாயகி முந்தைய விஜய்சேதுபதி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தவர் போலிருக்கிறது. கண்களில் சாராயத்தை தேக்கி வைத்திருக்கிறார். மற்ற அம்சங்கள் என்ன என்னவென்று விரிவாக அலச போதுமான ஸ்பேஸ் இந்த படத்தில் இல்லை என்பதால், அடுத்த படம் வரும் வரை வெயிட் செய்தாக வேண்டும். அவரை தரிசித்ததில் இருந்து தாவணி போட்ட பெண் யாரையாவது காதலிக்க வேண்டும் என்று திடீர் ஆசை ஏடாகூடமாக வந்து தொலைக்கிறது.

எனிவே, வதந்திகளை நம்பாதீர்கள். ’பண்ணையாரும் பத்மினியும்’ சூப்பர். மிஸ் பண்ணாமல் டிவிக்கு வரும் வரை வெயிட் செய்யாமல் தியேட்டருக்கு போய் பார்த்துவிடுங்கள்.

குழந்தைகளை இப்படி காட்டலாமா?

சினிமாவில் விலங்குகள் கூட துன்புறுத்தப்படக்கூடாது என்று இந்திய தணிக்கை வாரியம் கடுமை காட்டி வருகிறது. எனவே விலங்குகள் கதைக்கு தேவைப்படும் காட்சிகளை கூட நிஜ விலங்குகளை பயன்படுத்தாமல், கிராஃபிக்ஸ் முறையில் காட்சிகளை அமைக்கிறார்கள் படைப்பாளிகள். நிலைமை இப்படியிருக்கையில் சமீபமாக இந்திய சினிமாவில் பாலியல் காட்சிகளில் குழந்தை நடிகர்களை நேரடியாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. தணிக்கை வாரியம் தூங்கிக் கொண்டிருக்கிறதா, சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் டிவியில் மெகாசீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா?
இந்திய தணிக்கை வாரியத்துக்கு தலைமை செயல் அலுவலராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட ராகேஷ்குமார் ஒரு பத்திரிகை பேட்டியில் சொல்கிறார்.
“ஓர் இந்திப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய ஐந்து வயது மகள் என்னை கேட்டாள். “அப்பா! இந்த படத்துலே ‘அந்த’ மாதிரி சீன் ரொம்ப ஓவரா இல்லே?”. இன்னொரு படம் பார்க்க அவளோடு போயிருந்தேன். குழந்தையும் இதை பார்க்கிறாளே என்று பல காட்சிகளில் நெளிந்தேன். இனிமேல் UA சான்றிதழ் பெற்ற படங்களைகூட குழந்தையோடு போய் பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்”
‘வற்றாத நதியெல்லாம் கடலிடம் போகும். அந்த கடலே வற்றிவிட்டால் எங்கே போகும்?’ என்று நாமும் சினிமா வசனம் பேசவேண்டியதுதான். சென்சார் செய்யும் தணிக்கை வாரியத்தின் தலைமை அதிகாரியே சினிமா பார்த்து நெளியும்போது, நம்முடைய நிலைமை? U/A சான்றிதழ் பெற்ற படங்கள் மட்டுமல்ல. U சான்றிதழ் பெற்ற படங்களையேகூட குழந்தைகளோடு பார்க்க முடியவில்லை. ஐந்து வயது குழந்தையோடு சினிமாகூட பார்க்க முடியவில்லை என்று அவர் குமுறும்போது, குழந்தைகளையே பயன்படுத்தி ‘அந்த’ மாதிரி காட்சிகள் வருகிறதே. அதை நாம் எப்படி சகித்துக் கொள்வது?
  • ‘நடுநிசி நாய்கள்’ என்றொரு படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. டீனேஜைகூட எட்டாத மகனோடு, அவனுடைய அப்பாவே ஓரின பால் உறவு கொள்வதாக காட்சி. இதன் காரணமாக அந்த சிறுவன் மனநோயாளியாகி, வளர்ந்து பாலியல் வக்கிரம் நிறைந்தவனாக மாறுவதாக கதை.
  • ‘விடியும் முன்’ என்கிற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு படம் வெளியாகியது. பதினோரு, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியை, அறுபது வயது கடந்த ஒரு பெரியவருக்கு ஏற்பாடு செய்து அழைத்து வருகிறாள் ஒரு பாலியல் தொழிலாளி. அந்த குழந்தைக்கு மேக்கப் செய்து அழகுபடுத்தி தயார் படுத்துகிறாள். அப்போது குழந்தை அவளிடம் கேட்கிறாள். “நீ மேக்கப் போட்டுக்கலையா?”. அதற்கு அவள் சொல்லும் பதில், “இன்னைக்கு நீதான் ராணி”. அந்த குழந்தையிடம் பெரியவர் பாலியல் வக்கிரத்தை காட்டுவதாக அடுத்த காட்சி.
  • ‘கோலி சோடா’ என்கிற திரைப்படம் தற்போது வெற்றிகரமாக அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடலோரத்தில் ஒரு தனிமையான, இடிந்துபோன தேவாலயம். பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி, அங்கே தினமும் பிரார்த்தனைக்கு வருகிறாள். ஒரு நாள் அவள் வரும்போது சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சிறுமியைப் பார்த்ததுமே, அவளை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சிக்கிறார்கள்.
வாசிக்கும்போதே காறித்துப்பலாம் என்று கோபம் வருகிறது இல்லையா?
இதெல்லாம் சாம்பிள்தான். இன்னும் யோசித்துப் பார்த்தால் குழந்தைகளை வைத்து இந்த சினிமாக்காரர்கள் என்னவெல்லாம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்று நீங்களே சிந்தித்து, இம்மாதிரி படங்களின் காட்சிகளை கொண்டு பெரிய பட்டியல் ஒன்றை தயாரிக்க முடியும். ஒப்பீட்டளவில் பார்க்கப் போனால் தமிழில் இந்த மோசமான போக்கு குறைவு. அப்படியென்றால் மற்ற மொழி படங்களில் எவ்வளவு ஆபாசம் தலைவிரித்து ஆடுமென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படியெல்லாம் ஒரேயடியாக தீர்ப்பு எழுதிவிடாதீர்கள் என்கிறார் பெண் இயக்குனரான சந்திரா தங்கராஜ்.
“உலகளவில் எடுக்கப்படும் இதுபோன்ற திரைப்படங்களை நாம் சமீபமாக நிறைய பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அந்த படங்களிலும் குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள். அப்படங்களை பார்க்கும்போது நமக்கு வராத தார்மீக உணர்வு நம் ஊரில் எடுக்கப்படும் படங்களை பார்க்கும்போது மட்டும்தான் வருகிறது. நம்முடைய பண்பாட்டு, கலாச்சாரப் பின்னணி காரணமாக நம் குழந்தைகளை இதுபோல காணும்போது சீற்றம் அடைய வைக்கிறது. தமிழ் குழந்தையை திரையில் அப்படி சித்தரிப்பதா என்று கோபம் வருகிறது.
ஆணோ, பெண்ணொ ஐந்தில் ஒரு குழந்தை இம்மாதிரி பாலியல் சீண்டலை எதிர்கொள்ளும் மோசமான சமூகத்தில் இருக்கிறோம். இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை, எல்லா ஊடகங்களைப் போலவே சினிமாவும் மக்களுக்கு செய்தாக வேண்டும். ஆனால் இப்பிரச்சினையை கையாளும் படைப்பாளிகளுக்கு இதுகுறித்த அடிப்படை தெளிவு இல்லாவிட்டால், காட்சிகள் பல்லிளித்துவிடும்.
எனவே, இம்மாதிரி காட்சிகளை தடை செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவற்றுக்கான தேவை இருக்கிறது. ஆனால் அது மிக ஜாக்கிரதையாக கையாளப்பட வேண்டும் என்பதே என் கருத்து” என்கிறார் சந்திரா.
‘விடியும் முன்’ திரைப்படத்தின் வசனகர்த்தா ஆப்ரகாம் பிரபுவும் இதேமாதிரிதான், அப்படம் மீது குற்றம்சாட்டி எழுதப்பட்ட ஒரு இணையக் கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்.
“மூன்று வயது குழந்தையை கூட பாலியல் வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டி சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரி இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்க்கும் முயற்சி சினிமாவில் அவ்வப்போது நடைபெறுகிறது. கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நாம் நினைக்கக்கூடாது. நிஜங்களை சற்று தைரியமாக அவ்வப்போது உரசிப்பார்க்க வேண்டும்” என்கிறார் அவர்.
இக்காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள், நாளை பள்ளியிலும் வெளியிடங்களிலும் அவர்களை நோக்கி செய்யப்படும் கேலி கிண்டல்களை எப்படி சகித்துக்கொள்ளப் போகிறார்கள்? சினிமாவில் குழந்தைகளின் உழைப்பு சுரண்டப்படுவதும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஒப்பானதுதான் என்கிறார் பேராசிரியர் சுமதிஸ்ரீ.
“குழந்தைகளை பணியிடங்களில் பணிக்கு அமர்த்துவது குற்றம் என்றால், ஊதியம் தந்து சினிமாவில் நடிக்க வைப்பதற்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்கமுடியும்? சினிமாக்களில் நம் குழந்தைகள் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறார்கள். உயரமான கட்டிடங்களில் இருந்து தூக்கிப் போட்டுவிடுவேன் என்று வில்லன்களால் பயமுறுத்தப் படுகிறார்கள். அந்தரத்தில் தொங்கியபடியே கதறுகிறார்கள். நம் கதாநாயகர்களின் வீரபிரதாபத்தை பறைசாற்ற குழந்தைகள் விதம் விதமாக சித்திரவதைப்படுகிறார்கள்.
போதாதற்கு இப்போது பாலியல் காட்சிகளிலும் அவர்களை பயன்படுத்தத் தொடங்கியிருப்பது மோசமான ஆரம்பம். வன்புணர்வு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத குழந்தைகளை அம்மாதிரி காட்சிகளில் நடிக்க வைப்பதைவிட மோசமான கலாச்சாரம் வேறெதுவுமில்லை. சினிமாக்காரர்களுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வாவது வேண்டாமா. ஒரு படத்தில் நடிப்பதோடு அந்த குழந்தையின் வாழ்வு முடிந்துவிடுகிறதா என்ன. திரைப்படங்களில் வில்லனாக நடித்த நம்பியார் நிஜமாகவே கெட்டவர்தான் என்று உறுதியாக நம்புகிற சமூகம், ஒரு மாதிரி பாத்திரங்களில் நடித்த குழந்தைகளை எப்படி நடத்தும். படிப்பு, வேலை, திருமணம் என்று தொடரப்போகும் வாழ்வில், மோசமான ஒரு பாத்திரத்தில் நடித்த குழந்தை எவ்வளவு பேரை எப்படியெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏளனங்களையும், பரிதாபத்தையுமே தொடர்ந்தால் மனப்பிறழ்வு ஏற்பட்டு விடாதா. தங்களுடைய குழந்தைப் பிராயம் களவாடப்படுவது கூட தெரியாமல், சினிமாவில் பயன்படுத்தப்படும் குழந்தைகள் இருக்கிறார்கள். சட்டப்பூர்வமாகவே இந்த அநியாயங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்” என்று சூடாகப் பேசுகிறார் சுமதிஸ்ரீ.
சமீபமாக நம் தேசத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சகித்துக்கொள்ள முடியாத குற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இதற்கு எதிராக ‘நிர்பயா சம்பவம்’ போன்ற கொடுஞ்செயல்களுக்கு பிறகாக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். ஆனால் சமூகத்தின் இந்த உணர்வுக்கு நேர்மாறாக இந்தியத் திரைப்படங்களில் மட்டும் பாலியல் காட்சிகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முத்தமிடுதல், ஆபாச அசைவுகள், கள்ள உறவு, ஐட்டம் பாடல், படுக்கையறைக் காட்சிகள், வன்புணர்வு என்று காட்சிகள் இல்லாத படங்களையே விரல்விட்டு எண்ணிவிடலாம். பெண்ணை போகப்பொருளாக மட்டுமே சினிமா முன்வைக்கிறது என்கிற விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. இக்காட்சிகளில் இப்போது குழந்தைகளையும்கூட விட்டு வைப்பதில்லை என்பதுதான் அநியாயம். தலைமை தணிக்கைத்துறை அதிகாரியே கூட தன் குழந்தையோடு படம் பார்க்க முடியவில்லை என்றால் எப்படிப்பட்ட சீரழிவுக்கு நம் சினிமா ஆளாகியிருக்கிறது?
“நாங்கள் தியேட்டரில் படம் பார்ப்பதை எங்கள் பெற்றோர் விரும்புவதில்லை. படம் பார்த்துவிட்டு வகுப்பறையில் வந்து தோழிகள் சொல்லும் கதைகளையும், காட்சிகளையும் கேட்கும்போது, எங்கள் பெற்றோரின் அச்சம் நியாயம்தான் என்று எண்ண வேண்டியிருக்கிறது” என்கிறார் சென்னையில் +2 படிக்கும் மாணவியான அபிநயா.

படைப்பாளிகளுக்கும் வணிக நெருக்கடி இருக்கிறது என்பதும் உண்மைதான். அதற்காக சமூக அக்கறைக்கு எதிரான திசையில் அவர்கள் பயணிக்கக்கூடாது. அதே நேரத்தில் அரதப்பழசான நம்முடைய தணிக்கை நடைமுறைகளை நவீனப்படுத்த வேண்டிய காலக்கட்டத்திலும் இருக்கிறோம். தணிக்கையில் அரசியல் தலையீடுகள் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ள முடியாது. ஒவ்வொரு தரப்பையும் நோக்கி நாம் தனித்தனியாக விரல் சுட்டி குற்றம் சாட்ட வேண்டியதில்லை. நூற்றாண்டு கண்ட இந்திய சினிமா, ஒட்டுமொத்தமாக தன்னை கறாரான சுயபரிசீலனை செய்துக்கொண்டு, மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

7 பிப்ரவரி, 2014

டாஸ்மாக்குக்கு எதிராக கேப்டன் போர்முழக்கம்!

“முன்னே பின்னே கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும். நீங்கதான் சரிப்படுத்தி எழுதிக்கணும்” என்று விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து மாநாட்டில் சொல்லியிருந்தாலும், இந்த கட்டுரையை எப்படி எங்கே ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தோடே எழுத ஆரம்பிக்கிறோம்.

சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை உளுந்தூர்ப்பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெறுவதற்கான சுவடுகள் ஓரளவுக்குதான் தெரிந்தது. ஆனால் செங்கல்பட்டில் தொடங்கி, மாநாடு நடைபெற்ற இடமான ‘எறஞ்சி’ வரை பேனர்கள் கட்டி ஜமாய்த்துவிட்டார்கள் தேமுதிக தொண்டர்கள். பத்தடிக்கு ஒரு கொடிக்கம்பம். பைபாஸ் சாலை முழுக்க பேரணியாக தொண்டர்களின் கொண்டாட்ட ஊர்வலம்தான். விஜயகாந்தின் செல்வாக்கு குறைந்திருக்கிறது என்கிற ஊடகங்களின் கணிப்பையும், மற்ற கட்சிகளின் அரசியல் கணக்கையும் தவிடுபொடியாக்கி இருக்கிறது லட்சக்கணக்கானோர் பங்கேற்ற உளுந்தூர்ப்பேட்டை ஊழல் எதிர்ப்பு மாநாடு.

பேனர்களில் விஜயகாந்த் நடித்த எல்லா சினிமாக்களின் ‘கெட்டப்பும்’ இடம்பெற்றது. குறிப்பாக அவர் போலிஸ் வேடத்தில் நடித்த சத்ரியன், வல்லரசு, வாஞ்சிநாதன், புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் முதலான திரைப்படங்களின் ஸ்டில்கள். எல்லாமே அதிரடியான ஆவேசமான ‘போஸ்’ தான். மறக்காமல் எல்லோருமே ‘அண்ணியார்’ பெயரையும் பிரதானமாக குறிப்பிட்டே அச்சடித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் தேமுதிக பேனர்களில் தவறாமல் இடம்பெறும் எல்.கே.சுதீஷின் பெயர் பெரும்பாலான இடங்களில் ஏனோ மிஸ்ஸிங்.

மாநாட்டுக்காக வண்டி கட்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு வந்த தொண்டர்களுக்கு திடீர் அதிர்ச்சி. ஆங்காங்கே அதிமுக கொடிகட்டி டூவீலரில் இப்படியும், அப்படியுமாக அக்கட்சியின் தொண்டர்கள் அணி அணியாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். இங்கே நடைபெறுவது தேமுதிக மாநாடா அல்லது ஏதேனும் அதிமுக கட்சி நிகழ்வா என்று தேமுதிகவினர் குழம்பினார்கள். வேண்டுமென்றே அவர்களை வெறுப்பேற்ற உளுந்தூர்பேட்டை உள்ளூர் அதிமுகவினர் செய்த அசத்தல் ஏற்பாடு இது. இவர்களைப் பார்த்து பாமகவினரும் ’காப்பி’ அடித்து, தங்கள் பங்குக்கு கொடி கட்டிக்கொண்டு ‘சும்மனாச்சுக்கும்’ சுற்ற ஆரம்பிக்க ஏகப்பட்ட கலாட்டா. ஆனாலும் திருச்சி பைபாஸில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு பிரியும் சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக்கில், மூன்று கட்சியினருமே, அவ்வப்போது ஒற்றுமையாக ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டது கண்கொள்ளா காட்சி.

‘உளுந்தூர்ப்பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு’ என்று உ-னாவுக்கு ஊ-னா போட்டு பிரமாதமாக பெயர் பிடித்துவிட்டாலும், மாநாட்டின் இலக்கு என்னவென்கிற குழப்பம் தொண்டர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. மேடையில் பேசியவர்களிலும் ‘அண்ணியார்’, ‘கேப்டன்’ தவிர அனைவருக்கும் இதே குழப்பம்தான்.

இதுமாதிரி ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும், சிலர் மட்டும் ஊழல் எதிர்ப்பு தெளிவோடு மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.

“டெல்லியில் ஆம் ஆத்மியின் எழுச்சிதான் கேப்டனுக்கு இந்த ‘ஐடியா’வை கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேமுதிக தவிர வேறெந்த கட்சியும் தமிழ்நாட்டில் ஊழல் எதிர்ப்பு பேசமுடியாது. ஊழலுக்கு எதிரான அவர்களது திட்டம் என்னவென்று தெரிந்துகொள்ளவே சென்னையில் இருந்து வந்திருக்கிறேன். இக்கட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார் இளைஞரான பீர்முகம்மது. பிரபலமான புஹாரி ஓட்டல் குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், தன்னை கட்சி சார்பற்றவர் என்றும் கூறினார்.

வடகரையம்மான் பூண்டி என்கிற ஊரைச்சேர்ந்த எண்பத்தியேழு வயது பெரியவர் சிவா, பட்டுவேட்டி கட்டி மாப்பிள்ளை மாதிரி வந்திருந்தார். “சுதந்திரம் வாங்கிய காலம் தொட்டு ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்த்து போராடி போராடி தோற்றுவிட்டோம். இவர்களாவது ஏதாவது செய்வார்களா என்கிற எதிர்ப்பார்ப்பில் வந்திருக்கிறேன். நான் முன்பு காங்கிரஸ் ஆதரவாளன். இப்போது கட்சி, கிட்சியெல்லாம் கிடையாது” என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை நகர எல்லையில் இந்திய ஜனநாயக கட்சி பிரம்மாண்டமாக பிரமாதமாக ஒரு மாநாடு நடத்திக் காட்டி அசத்தியிருந்தது. அதே இடத்தில் இந்த மாநாட்டையும் நடத்த வேண்டும் என்றுதான் விஜயகாந்த் ஆசைப்பட்டார். அரசியல் அழுத்தம் காரணமாக அந்த இடம், மாநாடு நடத்த தேமுதிகவினருக்கு கிடைக்கவில்லை என்று கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். எனவேதான் ’எறஞ்சி’யில் அவசர அவசரமாக யார் யாரையோ பிடித்து கரும்பு, சோளம் பயிரிடப்பட்டிருந்த பொட்டல்காட்டை தயார்படுத்தினார்கள்.

பிப்ரவரி இரண்டு, ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு ‘கேப்டன்’ மாநாட்டு முகப்பில் கொடியேற்றுவார். மூன்று மணி வாக்கில் மாநாடு தொடங்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஒரு மணிக்கு நாம் அங்கே சென்றபோது மூவாயிரத்துக்கும் குறைவானவர்களே திடலில் இருந்தார்கள். மாநாடு நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மூன்று மணிக்கு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பித்தது. மூன்றே முக்காலுக்கு திறந்த வேனில், எம்.ஜி.ஆர் பாணியில் கூலிங் க்ளாஸ் அணிந்து விஜயகாந்த் ஊர்வலமாக மாநாட்டு முகப்புக்கு வர விசில்சத்தம் விண்ணைப் பிளந்தது. வேனில் இருந்தபடியே ஸ்டைலாக கொடியேற்ற, “வருங்கால தமிழக முதல்வர் கேப்டன் வந்துவிட்டார்” என்று மைக்குகள் அலற ஆரம்பித்தன. தலைவரைப் பார்த்ததுமே தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு, கொஞ்சநாட்கள் முன்பாக கட்சியை விட்டு தானாக விலகி எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த பண்ருட்டி ராமச்சந்திரனை அர்ச்சித்து கோஷங்கள் எழுப்பத் தொடங்கினார்கள். விஜயகாந்த் வாயில் விரல்வைத்து ‘உஸ்’ஸென்று சொல்லி அனைவரையும் அமைதிப்படுத்தினார்.

“கூட்டணி முடிவை தலைவர் அறிவிப்பாருன்னு வந்திருக்கோம். ஊழல் எதிர்ப்புன்னு சொல்லிட்டதாலே நிச்சயம் காங்கிரஸோடு கூட்டணி இருக்க வாய்ப்பில்லை. பிஜேபியோடு சேருவதைதான் பெரும்பாலான தொண்டர்கள் விரும்புகிறோம்” என்றார் தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தேமுதிக துணைச்செயலாளரான எஸ்.பெருமாள்.

“தனித்து கூட ஓக்கே. ஆனா திமுகவோடோ, அதிமுகவோடோ கூட்டணின்னு சொல்லிட்டா அதை தொண்டர்கள் ஏத்துக்கிறது சிரமம். ரெண்டு கட்சியும் எங்களை கொஞ்சநஞ்ச பாடா படுத்தியிருக்காங்க. கேப்டனுக்கு எங்க உணர்வுகள் தெரியும்” என்றார் பொன்னன்குறிச்சி கிளைச்செயலாளர் ஈ.கந்தன்.

இம்மாதிரி பெரிய மாநாடுகள் நடத்துவதில் தேமுதிகவுக்கு இருக்கும் அனுபவமின்மை அப்பட்டமாக வெளிப்பட்டது. ஏனோதானோவென்று அமைக்கப்பட்டிருந்தது மாநாட்டு சுவராக அமைக்கப்பட்டிருந்த செஞ்சிக்கோட்டை. மாநாட்டு மேடை தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகம் மற்றும் பாராளுமன்றத்தை கலந்து புது வடிவில் சுமாரான டிசைனில் இருந்தது. மேடை மிக தாழ்வாக இருந்ததால், கூட்டம் தலைவர்களை காணமுடியாமல் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வந்தது. தொண்டரணியினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், கட்டுப்பாடு இழந்து சில இடங்களில் பலப்பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் தொண்டர்களுக்கும், தொண்டரணியினருக்குமே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சும் நடந்தது. அவசர அவசரமாக இரு ஆம்புலன்ஸ்கள் கிளம்பின.

“ஆங்காங்கே எல்.சி.டி. திரைகள் வைத்திருக்கிறோம். அதில் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மேடையில் அறிவிக்கப்பட்டதுமே, ‘ஊக்க மருந்து’ செலுத்தப்பட்டது மாதிரி உற்சாகத்தில் இருந்த கூட்டம் அவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ‘கேலரி’களின் சவுக்குக் கம்புகளை உடைத்தெறிந்துவிட்டு எல்.சி.டி. திரைகள் வைத்திருந்த இடங்களை நோக்கி, அணிந்திருந்த பிளாஸ்டிக் சேர்களோடு முன்னேறினார்கள். பொட்டல்காடு புழுதிக்காடானது. மாநாட்டுத் திடலே மகாபாரதப்போர் நடைபெற்ற குருஷேத்திரம் மாதிரி பரபரப்பாக, மீண்டும் மைக்கில் அறிவிக்கப்பட்டது. “பிளாஸ்டிக் சேர்களை யாரும் கையில் எடுக்க வேண்டாம். ஒரு சேரின் விலை ரூபாய் ஐநூறு. தொண்டர்களின் இரத்தமும், வியர்வையும் இந்த பணத்தில் இருக்கிறது” என்றதுமே தொண்டர்களுக்கு உற்சாகம். சிலர் செட் செட்டாக சேர்களை தூக்கிக்கொண்டு அவர்கள் வந்திருந்த வாகனங்களை நோக்கி நடைபோடத் தொடங்கினார்கள்.

கருத்தரங்கம் தொடங்கியபோதும் கூட்டம் அமைதியடையவில்லை. பேசியவர் ஆம் ஆத்மி கட்சியை தாக்கி பேசிக்கொண்டிருக்க, ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் ஊழல் எதிர்ப்பு கட்சியை ஏன் தாக்கிப் பேசுகிறார் என்று பத்திரிகையாளர்களிடையே பரபரப்பு. டெல்லியில் தேமுதிகவை ஆம் ஆத்மி வென்றதால் ஏற்பட்ட ஆவேசம் இது என்று சிலர் விளக்கினார்கள். அடுத்து பட்டிமன்றம். ஒரு நடுவர். கேப்டனின் வெற்றிகளுக்கு காரணம் திட்டமா செயலா என்று பேச இருதரப்புக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என்று தலா ஒருவர். யாராவது ஏதாவது தொணதொணவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்களே என்று தொண்டர்கள் சலிப்படைந்திருந்த நேரத்தில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் பரதநாட்டியம். ‘தேவுடா’ என்று சோர்ந்து போனபோது ஆரம்பித்தது அதிரடி. பாடகர் வேல்முருகன் ‘மதுரை குலுங்க குலுங்க’ மெட்டில் கேப்டனின் புகழ்பாட ஆரம்பித்ததுமே உற்சாகம் பிய்த்துக்கொண்டு போக, ஆள் ஆளுக்கு டேன்ஸ் ஆடத் தொடங்கினார்கள். விசிலும், கைத்தட்டலுமாக திடல் முழுக்க பரவச அலை. தங்கள் அபிமான நடிகரின் படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்க்கும் மகிழ்ச்சி ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது.

“இன்னமும் ரசிகர்களாவே இருக்காங்க. நிச்சயமா இவங்கள்லாம் முரசுக்குதான் ஓட்டு போடுவாங்க. ஆனா அரசியல்மயமாகி தொண்டர்களா மாறினாங்கன்னாதான் இவங்களாலே மக்களை கன்வின்ஸ் பண்ணி தேமுதிகவுக்கு ஆதரவா வாக்குகளை சேகரிக்க முடியும். அந்த ‘மேஜிக்’ எப்போ நடக்குமோ, அப்போதான் கேப்டனாலே முதல்வர் ஆக முடியும்” என்று நம்மிடம் கொஞ்சம் சலிப்பாகவே பேசினார் கட்சி நிர்வாகி ஒருவர்.

“இந்த கூட்டத்தை பார்க்கும்போது இனிமே தமிழ்நாட்டின் எதிர்காலம் தேமுதிகன்னுதான் எனக்கு தோணுது. பிஜேபியோடு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தால், அடுத்த ஆட்சியில் மத்திய மந்திரி பதவியேகூட எங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றார் கோவில்பட்டி கேப்டன் மன்றத்தை சேர்ந்த பழனி. பெரும்பாலான தொண்டர்களுக்கு கூட்டணியென்றால் பிஜேபி அல்லது தனித்து போட்டி என்கிற எண்ணம்தான் இருக்கிறது.

விஜயகாந்த் பேசும்போது இவர்களது எண்ணத்தையே எதிரொலித்தார். ஆனால் அவர் பிஜேபியையும் லேசாக தாக்க தவறவில்லை. “சாதி மற்றும் மதத்தை வைத்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது” என்றார்.

“ஒரு ரூபாய்க்கு இட்லியை கொடுத்துட்டு, பத்து ரூபாய்க்கு ‘தண்ணீ’ விக்கறீங்க. மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய முதல்வரே ‘தண்ணீ’ காட்டுறாங்க” என்று அடுக்கடுக்காக அவர் பேசபேச விண்ணை முட்டும் கரகோஷம்.

“மக்களை ஏமாத்தணும், மூடர்களாக்கணுங்கிற எண்ணத்துலே டாஸ்மாக் திறக்கிறார்கள். இருநூறு கோடி, முன்னூறு கோடின்னு டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயிக்கிறவங்க, விவசாயம் நல்லாருக்கணும்னு ஏன் இலக்கு நிர்ணயிக்கிறதில்லே. மக்கள் நல்லாருக்கணும்னு ஏன் இலக்கு நிர்ணயிக்கிறதில்லே?” என்று காரசாரமாக பேசினார்.
“இப்போ இருக்குற போலிஸை பார்த்தா, நான் கண்ணியமான போலிஸா படங்களில் நடிச்சதுக்காக வெட்கப்படுறேன்” என்று அவர் வேதனைப்பட்டபோது, கூட்டமும் அவரோடு சேர்ந்து வேதனைப்பட்டது.

கடைசியாக ‘ஆம் ஆத்மி’ பாணியில் “கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” என்று தொண்டர்களை நோக்கி கேட்டார். வேண்டாம், வேண்டாம் என்று குரல் எழுந்ததுமே, “என் தொண்டர்கள் வேண்டாம்னு சொல்றாங்க. ஒரு கூட்டணியில் சேர்ந்து எப்படியெல்லாம் அசிங்கப்பட்டோம்னு அவங்களுக்கு தெரியும். தொண்டர்கள் என்ன சொல்றாங்களோ, அதை நான் கேட்பேன். ஒரு வேளை நான் ஏதாவது முடிவெடுத்தா, அதுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவாங்க” என்று பொத்தாம் பொதுவாக முடித்தார்.

“எங்க உணர்வுகளை கேப்டன் அப்படியே பிடிச்சிக்கிட்டாரு. தனித்து நிற்பதைதான் தன்மானமுள்ளவங்க விரும்புறோம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் எல்லாரையும் கலந்துப்பேசி நல்ல முடிவாதான் எடுப்பாரு” என்று நத்தம் ஊராட்சி ஒன்றிய துணை செயலாளரான சாந்தி மகிழ்ச்சியோடு நம்மிடம் சொன்னார்.

ஆனால், கூட்டணி இருக்கிறதா இல்லையா என்று தெரியாத குழப்பத்தோடே பெரும்பாலான தொண்டர்கள் கலைந்தார்கள். சீக்கிரமா ஒரு தெளிவான முடிவு எடுங்க கேப்டன்!

(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இவ்வார புதியதலைமுறை வார இதழில் வெளியாகியிருக்கிறது)

4 பிப்ரவரி, 2014

நேர்மையான பெண்மொழி

“நாப்கின் வாங்கவும் பணம் இன்றி நாதியற்றுப் போன நாட்களில்... நானும் பேசாம ஆம்பளப் புள்ளையா பொறந்திருக்கலாம் என நினைத்து அழுதிருக்கிறேன்... என் உள்ளாடைக் கிழிசலைப் போலவே, என் அப்பாவைப் பற்றிய ரகசியமும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது”

இந்த வரிகளை வாசித்து கடக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பிடித்தது. ஓரிரவு தூக்கம் சிந்தனையிலேயே சிதறியது. ‘ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும்’ என்பதெல்லாம் அலங்காரத்துக்கு சொன்னது அல்ல. அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் என்று எந்தப் பெண்ணைப் பற்றியுமே எந்த ஆணுக்கும் எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. இத்தனைக்கும் நம் வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித காலத்தை குடும்பம், பள்ளி, கல்லூரி, பணியிடம், வெளியிடம் என்று பெண்களோடுதான் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் பெண்ணை பற்றி நமக்கு –அதாவது ஆண்களுக்கு- என்ன மாதிரியான புரிதல் இருக்கிறது?

தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’ ஓரளவுக்கு தெளிவு கொடுக்கிறது. மனரீதியாக தானே தன்னை பெண்ணாக உணர்ந்தால்தான் அப்படிப்பட்ட ஒரு அற்புத நூலை வரலாறு, உளவியல், சமூகம் என்று அத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கி எழுதியிருக்க முடியும்.

அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, சித்தி, அத்தை என்று பிறந்ததிலிருந்தே நிறைய பெண்களின் மத்தியில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போதும் என் வீட்டில் ஏழு பெண்கள், இரண்டே இரண்டு ஆண்கள்தான். பெட்டிகோட், நைட்டி, புடவை, பூ, குங்குமம், சாந்து, பொட்டு, சீப்பு, லிப்ஸ்டிக் முதலான மேக்கப் சாதனங்கள் என்று எப்போதும் என் வீட்டில் பெண்வாசனைதான் வீசிக்கொண்டிருக்கும். ஏராளமான அண்ணிகள் (சட்டென்று எண்ணிக்கையே சொல்லமுடியாத அளவுக்கு). கடந்த இருபத்தைந்து வருடங்களாக சீரான இடைவெளியில் அவ்வப்போது எங்கள் குடும்பத்துக்கு ஒரு வெளி பெண் வாழ வந்துக்கொண்டே இருக்கிறார். மொத்தமாக இவர்கள் அத்தனை பேரிடமும் சேர்த்து நான் இதுவரை நூறு வார்த்தைகள் பேசியிருந்தாலே அதிகம். வெளி பெண்களிடம், சக மாணவிகளிடமெல்லாம் எப்படி பழக வேண்டும், பேசவேண்டும் என்றெல்லாம் கண்டிப்பான கட்டுப்பெட்டித்தனமான அறிவுரைகளோடு வளர்ந்திருக்கிறேன். வயதில் சிறிய பெண்களாக இருந்தாலும் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. நேருக்கு நேராக கண்களை பார்த்து மட்டுமே பேசவேண்டும், தேவையற்ற அரட்டை கூடாது மாதிரி ஏகப்பட்ட நிபந்தனைகளும் விதிமுறைகளும். சிறுவயதில் கூட கல்லாங்கோலோ, தாயக்கட்டையோ அல்லது வேறு விளையாட்டோ விளையாடிக் கொண்டிருக்கும் அக்காக்களை குறிப்பிட்ட சில நாட்களில் தொட்டுப் பேசக்கூடாது என்பார்கள். அப்படி தெரியாமல் தொட்டுவிட்டால் உடனே போய் குளிக்க வேண்டும். ஏன் என்று கேட்டால் பல்லு மேலேயே நாலு போடுவார்கள். என்னை மாதிரிதான் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தில் பிறந்த ஆண்களும். நகரங்களில் மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பங்களில் வளர்ந்தவர்களின் பார்வை சற்று மாறுபட்டிருக்கலாம். இப்படியிருக்கையில் பெண்கள் குறித்து எங்களுக்கு என்ன exposure இருக்க முடியும்? மனைவியே கூட கணவனிடம் முழுமையாக தன்னுடைய பிரத்யேகப் பிரச்சினைகளை பேசுவது கிடையாது.

தங்கள் பிரச்சினைகளாக பெண்கள் இதுகாறும் எழுதியவை அவர்களது நிஜமான பிரச்சினைகளே அல்ல. அவர்களது உள்ளாடைக் கிழிசல் யாருக்கும் தெரியாததை போல, அவர்களும் அவர்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ஆணோ அவன் அன்று உள்ளாடை அணிய மறந்ததை கூட பெருமையாக நாலு பேரிடம் சத்தம் போட்டு சிரித்துக்கொண்டே சொல்கிறான். ஓரளவுக்கு நேர்மையான பெண்மொழி கடந்த கால் நூற்றாண்டுகளாக புதிய தலைமுறை பெண் படைப்பாளிகளிடமிருந்து தீவிரமான வீச்சில் வெளிப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் பலகீனமான குரலாக வெளிப்பட்டு, விரைவிலேயே அடக்கப்படும் நிலைதான் இருந்தது. அல்லது ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் பெண்ணியத்தை, ஆண்களும் சேர்ந்து ஆராதித்தார்கள். வழக்கமான முரணற்ற பாரதியார் பாட்டு வாதங்களும் பட்டிமன்றங்களும், கலகம் செய்ய வாய்ப்பில்லாத மேம்போக்கான எழுத்துகளும், பேச்சுகளுமாகதான் பெண்ணிய சடங்கு நம் மண்ணில் அரங்கேறியது. நம் பெண்கள் அவர்களுக்கு வசதியான மேக்ஸி, நைட்டி போன்ற ஆடைகளுக்கு மாறவே இருநூறு, முன்னூறு வருஷம் ஆகியிருக்கிறது. இன்றைய உடைப்பின் பெருமை தமிழக அளவில் திராவிட இயக்கங்களையும் (பெரியாரிய சிந்தனைகளின் நடைமுறையாக கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை அடிப்படையில்), தேசிய அளவில் பொதுவுடைமை இயக்கங்களையுமே (இண்டு இடுக்கு விடாத தீவிரப் பிரச்சாரம்) சாரும்.
இச்சூழலில்தான் சுமதிஸ்ரீ எழுதியிருக்கும் ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் தமிழ்த்துறை விரிவுரையாளரான இவர் பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பல களங்களில் செயல்படுகிறார். சினிமாவிலும் பாட்டு எழுதியிருக்கிறாராம். காந்திய மக்கள் இயக்கத்தில் மாநில அணி இலக்கியத்தலைவர்.

எங்கள் குடும்பத்தில் யாருக்காவது குழந்தை பிறக்கப் போகிறது என்றால் “மங்கம்மா (எங்கள் குலதெய்வத்தின் பெயர்) வந்து நல்லபடியா பொறக்கணுமுன்னு வேண்டிக்குங்கப்பா” என்றுதான் பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்றாற்போல பெரும்பாலும் எங்கள் அண்ணன், தம்பிகளுக்கு பிறந்ததெல்லாம் மங்கம்மாக்கள்தான். எனக்கும் இரண்டு மங்கம்மா பிறந்திருக்கிறார்கள். இதற்காக யாரும் விசனம் கூட பட்டதில்லை. பெண் குழந்தை பிறந்தால் மகாலட்சுமி பிறந்ததாக மகிழும் ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. கள்ளிப்பால் எல்லாம் எங்கள் ஊரில் நூற்றாண்டுகளாக கேள்விப்படாத சமாச்சாரம். இதற்கு நேரெதிரானது சுமதிஸ்ரீயின் கதை.

ஆண்குழந்தை பிறக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் இருந்த சுமதிஸ்ரீயின் அப்பா, இவர் பிறந்ததால் ஒருமாதிரி விரக்திநிலையில் இவரை வெறுக்கத் தொடங்கியிருக்கிறார். துரதிருஷ்டமாக அடுத்து பிறந்ததும் மகள்தான். எதற்கெடுத்தாலும் அடி. முதல் ரேங்க் எடுக்காதற்காக. சோறு குழைந்ததற்காக. தோழியை வீட்டுக்கு அழைத்து வந்ததற்காக. கவிதை எழுதியதற்காக. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சுமதியை அடிக்க வேண்டும் அவ்வளவுதான். வயசுக்கு வந்தால் அடிக்க மாட்டார்கள் என்று ஏதோ சினிமாவில் டயலாக் கேட்டுவிட்டு, சீக்கிரமாக வரணும் என்று கடவுளை பிரார்த்திக்குமளவுக்கு கொடுமை.

ஒன்பது வயதிலேயே ஒரு முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். திரும்ப பிடித்துவந்து முன்பைவிட மோசமாக சித்திரவதை. ஓரளவுக்கு வளர்ந்தபிறகு ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “நான் இல்லன்னா, உன்னால இப்படி ஒருவேளை சோறு திங்கமுடியுமா?” என்று சொல்லில் நெருப்பை கொட்ட, முழுமையாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஸ்பான்ஸர் பிடித்து கல்லூரியில் சேர்ந்து, கட்டணம் கட்டாததால் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டு, சாப்பிட பணம் கட்டாதவர்கள் பட்டியல் என்று மெஸ் போர்டில் பெயர் எழுதி அவமானப்பட்டு, நல்ல சாப்பாடு சாப்பிட ஒரு விருந்துக்கு சென்று அங்கிருந்தவர்கள் கேலி கிண்டலால் அழுதுக்கொண்டே ஓடி, பிற்பாடு வேலைக்கு சேர்ந்த இடத்துக்கு எல்லாம் சொந்த அப்பாவால் தாறுமாறாக புகார் சொல்லப்பட்டு, காதலித்து மணந்த கணவனின் புகுந்த வீட்டிலும் அப்பாவே வந்து பிரச்சினையென்று பராசக்தி கல்யாணியைவிட வாழ்க்கையின் ஓரத்துக்கு அதிவேகத்தில் ஓடியிருக்கிறார் சுமதிஸ்ரீ. பிற்பாடு ஓர் ஐடியல் அப்பா எப்படியிருக்க வேண்டும் என்று சுமதிஸ்ரீ எழுதிய ‘தகப்பன்சாமி’ என்கிற கவிதை அவருக்கு பலரிடம் பாராட்டும், விருதுகளையும் பெற்றுத்தந்தது. ஆனால் அந்த கவிதையின் ஒரு சொல்லில்கூட அவரது சொந்த அப்பா இல்லை.

வாசிக்கும்போது நம்பமுடியாததாகவும், மிகையானதாகவும் தோன்றும். ஆனால் இதற்கெல்லாம் சாட்சியான மனிதர்கள் –குறிப்பாக சுமதியின் அப்பா- இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். நூலில் இடம்பெற்றிருக்கும் இந்த ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ மிகவும் அழுத்தமான, ஆழமான கட்டுரை. கோடிக்கணக்கான தமிழ்ப் பெண்களின் பிரதிநிதியாக சுமதிஸ்ரீயின் வாழ்வியல் வாக்குமூலம். பச்சாதாபத்துக்காக சுயகழிவிரக்கம் தேடும் நோக்கிலான மிகைத்தன்மை இல்லாமல், இயல்பான பகிர்தலாக, நேருக்கு நேர் பேசும் நேரடி மொழியில் எழுதப்பட்டிருக்கும் பதிவு. சுமதிஸ்ரீ குறிப்பிடும் இச்சம்பவங்கள் கடந்த முப்பது வருடங்களுக்குள்ளாகதான் நடந்திருக்கிறது. ஏதோ குக்கிராமத்தில் பாமரக் குடும்பத்தில் நடந்த விஷயமுமில்லை. பட்டறிவும், பகுத்தறிவும் பெற்றவர்கள்கூட இப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று நம்புபவர்களும் நம்மூரில்தான் இருக்கிறார்கள். குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டதாலேயே தன்னுடைய ரத்தம் என்றும் பாராமல் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.

நூலின் மற்ற கட்டுரைகள் எல்லாமே the girl thing தான். பட்டுப்புடவை மீது மோகம், முதல் விமானப் பயணம், பள்ளி கல்லூரி கலாச்சார விழாக்களில் நடனம், வளைகாப்பு, சினிமாவில் பாடல் எழுதிய அனுபவம், தன்னுடைய குழந்தைக்கு கடிதம் என்று தான் கடந்துவந்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

சுமதிஸ்ரீயின் எழுத்துகளில் வெளிப்படும் பெண்ணியம் முற்போக்கானது என்று சொல்ல மாட்டேன். நீயும் நானும் சமம்தானே, நீ தம் அடித்தால் நானும் அடிப்பேன், நீ தண்ணி அடித்தால் நானும் அடிப்பேன் என்கிற மாதிரி வகை அல்ல. பெண்ணடிமைத்தனத்தை ஒரு வடிவமாகவே அமைத்து வைத்திருக்கும் சமூக அமைப்பையே புரட்டி போடவேண்டும் என்கிற எண்ணங்கள் எதுவும் அவரது எழுத்தில் வெளிப்படுவதாகவும் தோன்றவில்லை. ஆனால் விதிக்கப்பட்ட சமூகத்தில் தன்னுடைய பங்கினை போராடி, சண்டை போட்டாவது வாங்கும் முனைப்பு அவரது எழுத்துகளில் வெளிப்படுகிறது.

இந்நூலை வாசிக்கும் ஆண், பெண் குறித்த தன்னுடைய புரிதலை கொஞ்சம் மீளாய்வு செய்து அப்டேட் செய்துக்கொள்வான். பெண்கள் தங்களுடைய சக பயணியின் அனுபவங்களை வாசித்து, தங்களையும் ஒப்பிட்டுக் கொள்ள முடியும். சிந்தனையை கிளறும் சுவாரஸ்யமான, நேர்மையான எழுத்து. வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் சுமதிஸ்ரீ!
நூல் : என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்
எழுதியவர் : சுமதிஸ்ரீ
பக்கங்கள் : 96
விலை : ரூ.80
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை-600 002.
போன் : 044-42634283/84