30 ஜூன், 2012

ஹோல்டன்

ஊருக்கு முதன்முதலாக பஸ் வந்த அந்த விநாயகர் சதுர்த்தி அன்றுதான் அந்த வார்த்தையை முதன்முதலாக கேட்டேன். “ஹோல்டன்”

ரெட்டைமாடி வீடு கட்டிய என்ஜினியர் ஸ்டைலாக வாயில் ப்ளூபேர்ட்ஸ் சிகரெட் வைத்தபடியே கையை நீட்டி உரக்கச் சொன்னார். அவர் சொல்லியிருக்கா விட்டாலும் எம்-11 என்கிற நாமகரணத்தைத் தாங்கிய அந்த சிறுபேருந்து ஹோல்டன்னாகியிருக்கும். ஏனெனில் அவர் கைகாட்டி நிறுத்திய இடம் தான் பேருந்து நிலையம். பொன்னியம்மன் கோயில் வாசலில் இருந்த அரச மரம். ஊர் முழுக்க திறந்தவெளிதான் என்றாலும் ‘லேண்ட்மார்க்’காக ஓர் இடத்தில் பேருந்து நின்றால்தான் அனைவருக்கும் வசதியென்று அந்த இடத்தை பேருந்து நிலையமாக ஊர்ப்பெருசுகள் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

என்ஜினியர் எந்த நேரத்தில் ‘ஹோல்டான்’ சொன்னாரோ, எல்லாருக்கும் ‘ஹோல்டன்’ பைத்தியம் பிடித்துக் கொண்டது. “ஹோல்டன்” என்று கத்தினால் பேருந்தின் இயந்திரம் ஆட்டோமேடிக்காக நின்றுவிடும் என்று மக்கள் நினைத்துக் கொண்டார்கள். அதை காதில் வாங்கி, டிரைவர் ப்ரேக்கை மிதித்தால்தான் வண்டி நிற்கும் எனுமளவுக்கு அப்போதெல்லாம் பொறியியல் அறிவு மக்களிடையே வளரவில்லை. சைதாப்பேட்டை அருகில் அப்போது ‘ஹால்டா’ என்றொரு தொழிற்சாலை இருந்தது. டைப்ரைட்டிங் மெஷின்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு ‘ஹால்டா’ என்று பெயர். மக்களுக்கோ அதுகுறித்த ‘ஓர்மை’ எதுவுமில்லை. ‘ஹோல்டன்’ என்கிற சொல் மருவியே, அப்பேருந்து நிலையத்துக்கு ‘ஹால்டா’ என்று பெயர்வைத்திருப்பதாக சாகும்வரை நம்பிக் கொண்டிருந்தார்கள்.

உண்மையை சொல்லப்போனால் பேருந்து என்கிற வாகனத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை நாகரிகம் கூட எங்கள் மக்களிடம் அப்போது இல்லை. மடிப்பாக்கத்திலிருந்து சைதாப்பேட்டை சந்தைக்கும், கால்நடை மருத்துவமனைக்கும் ஆடுகளை முன்பெல்லாம் நடத்தியே கொண்டு செல்வார்கள். பேருந்து வந்தபிறகு ஆட்டையும் வண்டியில் ஏற்றிச் சென்றாகவேண்டும் என்று அடம் பிடித்தார்கள். “கவருமெண்டு பஸ்ஸுதானே.. அதுபாட்டுக்கும் போவப்போவுது. ஆடு வந்தா உனக்கேன் எரியுது.. அதுவும் உயிர்தானே.. நீயா சுமக்கப் போற.. அது பாட்டுக்கும் ஓரமா நின்னுக்கிட்டு வந்துட்டுப் போவுது” என்று தர்க்கம் பேசினார்கள். கண்டக்டர்களுக்கு தாவூ தீர்ந்தது. ஆட்டுக்கும் டிக்கெட் போடவேண்டுமா என்பதுகுறித்த அறிவுறுத்தல் எதையும் பல்லவன் போக்குவரத்துக் கழகம் தராததால், ‘லக்கேஜ் டிக்கெட்’டாவது போடலாமென முயற்சித்த கண்டக்டர்களுக்கு எதிராக ஊரில் பெரும் போராட்டம் நடந்தது. “ஆட்டைப்போய் லக்கேஜ்னு எப்படி சொல்லமுடியும்? சூட்கேஸைதான் லக்கேஜ்னு சொல்லணும். இந்த கண்டக்டர்களுக்கு இங்கிலீஸ் கத்துக் கொடுக்குறதுக்குள்ளே நம்ம தாலியறுந்துடும் போல” என ஆடு கொண்டுச் செல்பவர்கள் புலம்பத் தொடங்கினார்கள். மனிதர்களை விட ஆடுகள் அதிகமாக பேருந்தில் பயணித்த காலக்கட்டம் அது. மடிப்பாக்கத்து ஆடுகள் சீட்டுகளில் வசதியாக – குறிப்பாக சன்னலோர சீட்டுகளில் – அமர்ந்து செல்வது வழக்கம். ஆடுகள் சிறுநீர் கழிப்பது, புழுக்கை போடுவது என்று ஏகத்துக்கும் அட்டகாசம்.

சம்பத் வீட்டு ஆடுகளுக்குதான் பேருந்து வசதி கிடைத்தபிறகு ஏகத்துக்கும் குஷி. சம்பத் ஆடுகளோடு அதன் மொழியிலேயே பேசக்கூடிய வல்லமை பெற்றிருந்தார். ‘ம்ம்மேஏஏஏஏ’ என்று அவர் குரல் கொடுத்தால், ஆடுகளுக்கும் பதிலுக்கும் ‘ம்ம்மேஏஏஏய்’ என்று பதில் கொடுக்கும். “வயிறு நெறைஞ்சிடிச்சின்னு சொல்லுது. வீட்டுக்கு ஓட்டிட்டு போவணும்” என்று ட்ரான்ஸ்லேட் செய்து சொல்வார். சம்பத்தை ‘சம்பத்’ என்று யாராவது அழைத்தால் திரும்பிக்கூட பார்க்க மாட்டார். ‘சம்பேஏஏய்ய்’ என்று அழைத்தால்தான் அவருக்கு தன்னை யாரோ அழைக்கிறார்கள் என்று சுயவுணர்வே ஏற்படும். அடிக்கடி “ஹோல்டன்” என்கிற சொல்லை அவர் உச்சரித்ததைக் கேட்ட அவரது ஆடுகளும், அதன் மொழியில் “மேஏஏஏய்யங்ன்” என்று ஒருவழியாக ஹோல்டானுக்கு இணையான உச்சரிப்பை உச்சரிக்கப் பழகின.

ஆடுகள் மட்டுமின்றி சம்பத்தின் வீட்டில் நான்கு எருமை மாடுகளும், மூன்று பசுமாடுகளும் இருந்தது. அவற்றில் ஓர் எருமைக்கு அன்று வயிற்றுப்போக்கு. மாட்டாஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல பேருந்துச் சேவையை நாடினார். நடத்துனர் மாட்டை வண்டியில் ஏற்றிச் செல்வதற்கு மறுப்புச் சொல்ல, “ஆடுகளை ஏத்திட்டுப் போற, மாடு அதைவிட கொஞ்சம் பெருசு. அதை ஏத்துனா உன் பஸ்ஸு குடை சாஞ்சுமா என்ன?” என்று அறிவியல்பூர்வமான கேள்வியை எழுப்பி, நடத்துனரின் வாயை அடைத்தார். துரதிருஷ்டவசமாக ஆடு மாதிரி துள்ளி பேருந்தின் படிக்கட்டில் ஏறுமளவுக்கு மாடுகளுக்கு சாமர்த்தியம் போதவில்லை. எனவே கடைசிவரை பேருந்தில் மடிப்பாக்கத்து மாடுகள் பயணிக்கும் சந்தர்ப்பம் அமையவேயில்லை. அப்படி ஆகியிருந்தால் மாடுகளும் தம் மொழியில் “ம்மா..ய்யங்ன்” என்று ஹோல்டனுக்கு இணையாக உச்சரிக்கப் பழகியிருக்கும்.

இப்படியாக ஆரம்பக் காலக்கட்டங்களில் மனிதர்களைவிட அதிகமாக ஆடுகளை பயணிகளாக பெறும் பாக்கியம் எம்-11 டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் கிடைத்தது. செல்லப் பிராணிகளாக நாய் வளர்ப்பவர்கள் சிலர் இருந்தார்கள். நாய் என்றால் ராஜபாளையமோ, அல்சேஷனோ அல்ல. தெருநாய்தான். எஜமானர்களை எந்நிமிடமும் பிரியாத அந்நாய்கள் பேருந்துப் பயணத்தின் போதும் கூடவே சென்றாக வேண்டுமென அடம் பிடித்தன. டிவிக்காரரின் நாய் அம்மாதிரியான ஒரு பயணத்தின் போது, பேருந்தில் ஆக்ஸிலேட்டரை அமுக்கும்போது ஏற்படும் ‘விர்ர்ர்….’ சத்தத்தில் அதிர்ச்சியாகி, நடத்துனரை கடித்துவைத்த சம்பவமும் நடந்தது.

ஒருமுறை ராஜூ டிரைவர்தான் வண்டியை ஓட்டிவந்தார். இளவயசு என்பதால் கொஞ்சம் ‘டீக்’காக ட்ரெஸ் செய்து, பெண்கள் எதிர்ப்படும் போதெல்லாம் வசீகரமாக புன்னகைக்க முயற்சித்துக் கொண்டிருப்பார். கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ், கர்ச்சீப்பில் பவுடர் என்று காக்கிச்சட்டை போட்ட மைனர் அவர். பரங்கிமலை ரெயில்வே லெவல் கிராஸிங்கில் அன்று தாமதம் ஆகிவிட்டதால், ஒரு ‘சிங்கிள்’ பறிபோய், மேலதிகாரியிடம் ‘மெமோ’ வாங்கிவிடுவோமோ என்கிற அவசரத்தில் மிதி மிதியென மிதித்துக் கொண்டிருந்தார். கோழிப்பண்ணை திருப்பம் என்பது ஹேர்பின் வளைவுக்கு ஒப்பானது. கடினப்பட்டு திருப்பும்போது, “ஹோல்டான்” சத்தம் கேட்டது. எரிச்சலாக பிரேக்கை மிதித்தார்.

உள்ளூர் அரசியலில் வளர்ந்துவந்த நாகரத்தினம் நாயக்கர்தான் குரல் கொடுத்தவர். “சைதாப்பேட்டை நூர்ஜகான் தியேட்டருக்கு குடும்பத்தோட படம் பார்க்கப் போறேன். எம் பொண்டாட்டி சேலை கட்டிக்கிட்டிருக்கா. திரும்ப வர்றப்போ. இதே இடத்துலே ‘ஹோல்டான்’ பண்ணிட்டு, ஆரன் அடி” என்று கட்டளையிட்டார். அவசத்தில் சரி, சரியென தலையாட்டிய ராஜூ, திரும்ப வரும்போது அந்த குறிப்பிட்ட இடத்தில் ‘ஹோல்டான்’ செய்ய மறந்துவிட்டார். நாயக்கரின் மனைவியோ வெளியே செல்லும்போது கொஞ்சம் கவனமெடுத்து குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்தையாவது சேலை கட்டுவதில் செலவிடுவார். சைதாப்பேட்டை போய்விட்டு, திரும்பவரும்போதுதான் இந்த விஷயமே ராஜூவுக்கு நினைவுக்கு வந்தது. கோழிப்பண்ணை அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரில் மாபெரும் கூட்டமொன்று சாலைமறியலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார். நாகரத்தினம் நாயக்கர் தலைமையில் ஏராளமானோர், தலைவரது ஹோல்டான் கோரிக்கைக்கு மதிப்பு தராத பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் எதேச்சாதிகார ஏகாதிபத்திய செயல்பாடுகளுக்கு எதிராக திரண்டிருந்தனர். இந்தியெதிர்ப்புப் போருக்குப் பிறகாக எம் மக்கள் தமிழுணர்வோடு கலந்துகொண்ட மாபெரும் போராட்டம் அது. வந்து நின்ற பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கொஞ்சம் காரசாரமாகி கைகலப்பு வரை சென்று, படுகாயமான நிலையில் ஓட்டுனரையும், நடத்துனரையும் காவல்துறையினர் மீட்டனர். பிற்பாடு ஸ்தலத்துக்கு வந்த பல்லவன் போக்குவரத்துத் துறையின் பிரதான அதிகாரிகள், மக்கள் ‘ஹோல்டான்’ கோரிக்கை வைக்கும்போதெல்லாம், அதை தவறாமல் தங்கள் ஊழியர்கள் நிறைவேற்றுவார்கள் என்று வாக்குறுதி தந்தனர்.

காலம் கொசுவர்த்தி சுற்றி, அதுபாட்டுக்கும் விரைந்தோடியது. எங்கள் ஊரில் நிறைய மாணவர்கள் நங்கநல்லூருக்கும், ஆலந்தூருக்கும் போய் +1, +2 என்று மேற்படிப்பு படிக்க ஆரம்பித்தார்கள். ‘ஹோல்டன்’ என்று சொல்லப்படுவது ஆங்கில உச்சரிப்புப் பிழை என்பதை கண்டறிந்தார்கள். ‘ஹோல்ட் ஆன்’ என்று பிரித்து, மொழியைச் சிதைக்காமல் தெளிவாக உச்சரிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் தமிழார்வலரான கனகசபா செட்டியார் மட்டும், வடமொழிகலந்த ‘ஹோ’வை புறக்கணிக்கத் தொடங்கினார். இந்த காலக்கட்டத்தில் ஒத்தையடிப் பாதையாக இருந்த மடிப்பாக்கம்-வேளச்சேரி சாலை சீர்படுத்தப்பட்டு, 51-ஈ என்கிற புதியத்தடம் உருவாகி போக்குவரத்துப் புரட்சி மடிப்பாக்கத்தில் ஏற்பட்டிருந்தது. வேளச்சேரி விஜயநகருக்கும், கைவேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் இரவுவேளைகளில் கனகசபா வண்டியை நிறுத்துவார். “ஓல் டன்” என்ற ஓங்காரமான அவரது அலறலைக் கேட்டு, ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே ‘கீர்’ குறைத்துவிடுவார் வேம்புலி டிரைவர். பஸ் மெதுவாக அவருக்கு அருகில் வரும்போது, தாவி ஏறியவாரே மீண்டும் ஒருமுறை “ஓல் டன்” என்று கொஞ்சம் குறைந்த டெசிபலில் சொல்லுவார். கண்டக்டர் செல்வமும் அவரைப் பார்த்து மர்மமாக புன்னகைத்தவாறே, “டன் டன்.. டனா டன்” என்பார். கனகசபா அவரைப் பார்த்து வெட்கமாகச் சிரித்தபடியே, ஐம்பது காசு எடுத்து நீட்டி டிக்கெட் வாங்குவார். சைதாப்பேட்டையிலிருந்து கடைசி சிங்கிள் இரவு 8.40 வண்டியில் வழக்கமாக நடைபெறும் சம்பவமிது.

கனகசபா செட்டியார் காலமாகி நான்கு ஆண்டுகள் கழித்துதான் செல்வம் ஒருமுறை அந்த ரகசியத்தை எங்களிடம் சொன்னார். “விசயநகர் ஓரத்துலே குளத்தங்கரையை மடக்கிப்போட்டு செட்டியார் ஒரு குடிசை போட்டிருந்தாரு. ஒரு மாதிரி பொண்ணை, ஆந்திராவிலேருந்து தள்ளிக்கிட்டு வந்து வப்பாட்டியா அங்கிட்டு வெச்சிருந்தாரு”. செல்வத்தின் ‘டன் டன்.. டனா டன்-னு’க்கும், பதிலுக்கு செட்டியாரின் வெட்கச் சிரிப்புக்கும் அர்த்தம் அப்போதுதான் காலம் கடந்துப் புரிந்தது.

இப்போது ஊர் என்றே எங்கள் ஊரை சொல்லமுடியாது. மக்கள் நாகரிகம் ஆகிவிட்டார்கள். ஆடு, மாடெல்லாம் அபூர்வப் பிராணிகள் ஆகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் பேருந்து என்பது மனிதர்கள் மட்டுமே பயணிக்க, அரசாங்கத்தால் கருணையோடு செய்யப்படும் ஏற்பாடு என்பதை உணர்ந்துவிட்டார்கள். ‘ஹோல்டன்’ ‘ஹோல்ட் ஆன்’ போன்ற குரல்களை இப்போது கேட்க முடிவதில்லை. அந்த கலாச்சாரத்தை கடைப்பிடித்தவர்கள் கிட்டத்தட்ட எல்லோரும் இறந்துவிட்டார்கள். அல்லது மீதி பேர் நாகரிகமாகி விட்டார்கள். பேருந்தை கைகாட்டி நிறுத்தும் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று தோன்றுகிறது. பேருந்து என்பது பேருந்து நிலையங்களில் நிற்கும். எனவே அங்கு சென்றுதான் ஏறவேண்டும் என்கிற ஒழுங்கியல்தன்மை எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

போனவாரம் எம்-45ல் தி.நகருக்குப் போய்க் கொண்டிருந்தேன். விஜயநகரை நெருங்கும்போது கரகாட்டக்காரன் செந்திலுக்கு ஏற்பட்ட அதே டவுட்டு எனக்கும் ஏற்பட்டது. “கனகசபை செட்டியார் வெச்சிருந்த ‘வைப்’பை இப்போ யாரு வெச்சிக்கிட்டிருப்பாங்க?”

27 ஜூன், 2012

டெசோ


‘டெசோ’வால் இப்போது என்ன செய்ய முடியுமென்று திட்டவட்டமாக தெரியவில்லை. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்த ‘டெசோ’வுக்கும், இன்றிருக்கும் ‘டெசோ’வுக்குமான வேறுபாடுகள் புரிந்தே இருக்கிறது.

அதே நேரம் ஈழப்பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான் தீர்வு என்று சொல்லக்கூடிய ஒரே பெரிய கட்சியாக இங்கே திமுக மட்டுமே இருக்கிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவோ, ஆளுங்கட்சியான அதிமுகவோ, ஓரளவுக்கு தேசிய அளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் இடதுசாரிகளோ ஏற்றுக்கொள்ளாத நிலைபாடு இது. உதிரிக்கட்சிகளை விட்டு விடுவோம். அவர்களது நிலைப்பாடு கூட்டணி சமரசங்களுக்கு உட்பட்டது. திமுகவே கூட மத்தியக் கூட்டணிக்காக பல சமரசங்களை ஏற்றுக்கொள்ளும்போது, சிறுகட்சிகளை குறைசொல்லிப் பிரயோசனம் இல்லை. எனவேதான் திமுக முன்வைக்கும் ‘டெசோ’வுக்கு இங்கே முக்கியத்துவம் ஏற்படுகிறது.

முந்தைய ‘டெசோ’வின் போது திமுகவால் ’ஈழம்’ குறித்த தனது கருத்தாக்கத்தை தேசிய அளவில் பலரையும் ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இன்றைய திமுகவால் அதை செய்யமுடியுமாவென்று தெரியவில்லை. எமர்ஜென்ஸிக்குப் பிறகு திமுகவோடு நட்பு அடிப்படையில் அன்று கைகோர்த்த மாநில, தேசியக் கட்சிகள், தலைவர்கள் ஆகியோருக்கு இருந்த தன்மை சமகால கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இருப்பதாக தெரியவில்லை. திமுகவுக்கே கூட அன்றிருந்த கொள்கை அடிப்படையிலான சமூகப்பிடிப்பு இன்று இருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். முன்பொருமுறை பெரியார் சொல்லி, அதையே 2009ல் கலைஞர் சொன்ன வசனம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. “நானே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன செய்துவிட முடியும்?”

பழைய டெசோ காலத்துக்கு வருவோம். இந்த அமைப்பு தமிழக நகரங்களில் ஈழத்தமிழருக்காக மாபெரும் பேரணிகளையும், கூட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி சாதித்தது. தேசியத் தலைவர்களான வாஜ்பாய், பகுகுணா, என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி (இவரேதான் அவரும்) என்று பலரையும் தமிழகத்துக்கு அழைத்துவந்து ஈழம் தொடர்பான நியாயங்களை மக்கள் முன் வைத்தது. ஈழத்துக்கு ஆதரவான போக்கினை கைக்கொள்ள இந்திய அரசினை கடுமையாக நெருக்கியது. ஈழப்பிரச்சினை என்பது தமிழர்கள் பிரச்சினை அல்ல. ஆசியப் பிராந்தியப் பிரச்சினை என்பதான தோற்றத்தை உருவாக்கியது. ஈழப்போராளிகள் ஒன்றுபட்டு ஈழம் பெறவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியது. இப்போது ஈழப்பிரச்சினையில் கலைஞர் துரோகி என்று வசைபாடிவரும் நெடுமாறன், வைகோ ஆகியோரும் அப்போது டெசோவில் தீவிரமாகப் பணியாற்றியவர்கள்தான். அன்றைய டெசோ பிறந்த இரண்டே ஆண்டுகளில் உருக்குலைந்துப் போனதற்கு காரணம் போராளிக் குழுக்களிடையே ஒற்றுமையின்றி போனதுதான். இந்திய, தமிழக அரசுகள் வெற்றிகரமாக இதை செய்துமுடித்தன. ‘காங்கிரசுடனான கூட்டணிக்காக டெசோவை கலைஞர் கலைத்தார்’ என்று இன்று புதுகாரணம் சொல்கிறார் நெடுமாறன். 2004ல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்காக 87ல் கலைஞர் டெசோவை கலைத்தார் என்கிற தர்க்கம்தான் எத்துணை சிறப்பானது?

2009ல் திடீரென்று ஞானஸ்தானம் பெற்று, இன்று ஈழத்துக்காக உயிரை விட்டுக் கொண்டிருக்கும் அமைப்பின் நண்பர் ஒருவர், சமீபத்தில் புதிய டெசோ பற்றிய விவாதத்தில் முகநூலில் சொல்லியிருந்தார். “தமிழீழத்திற்காக போராட திமுகவை யாரும் அழைக்கவில்லை”. நண்பர் வரலாற்றில் கொஞ்சம் வீக். அவருக்காக சில தகவல்கள்.

-    1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் இலங்கைத் தமிழருக்கு திமுக ஆதரவளிக்கிறது என்கிற தீர்மானத்தை கலைஞர் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேறியது.

-    1977ல் சென்னையில் ஐந்து லட்சம் பேர் பங்குகொண்ட பேரணி திமுகவால் நடத்தப்பட்டது.

-    1981ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கு ஈழப்பிரச்சினை திமுகவால் கொண்டு செல்லப்படுகிறது. ஈழப்பிரச்சினையில் மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அது தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் கலைஞர் எம்.ஜி.ஆர் அரசால் கைது செய்யப்படுகிறார்.

-    வெலிக்கடை சிறையில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டவுடன் மறுநாளே சென்னையில் ஏழரை லட்சம் பேர் கலந்துக்கொண்ட கண்டனப் பேரணியை திமுக நடத்தியது.

-    1983 இனப்படுகொலை நடந்து இரண்டு மாதங்களாகியும் இந்திய அரசோ, தமிழக அரசோ அப்பிரச்சினை குறித்து வாய்திறக்கவில்லை என்று சட்டமன்றத்தில் திமுக பிரச்சினையைக் கிளப்பியது. பேராசிரியரும், கலைஞரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து எதிர்ப்பைக் காட்டினார்கள்.

-    1986 மே மாதத்தில் மதுரையில் டெசோ சார்பாக திமுக முன்நின்று நடத்திய ‘ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு’தான் ஈழத்தமிழருக்காக தமிழகத் தமிழர்கள் குரல் கொடுத்ததின் உச்சபட்ச எழுச்சி.

-    1989ல் திமுக பதிமூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு வருகிறது. மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி மலர்கிறது. தமிழக திமுக அரசின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, ராஜீவ் காலத்தில் அனுப்பப்பட்ட அமைதிப்படையை மத்திய அரசு திரும்பப் பெறுகிறது. சென்னை துறைமுகம் வந்து சேர்ந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மாநில முதல்வர் கலைஞர் மறுத்தார். இதன் மூலம் இந்திய இறையாண்மையை அவமதித்து விட்டதாக திமுக மீது பிரச்சாரம் செய்யப்பட்டது.

-    இதே ஆட்சிக்காலத்தில் போராளிக்குழுக்களின் உட்சண்டை காரணமாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் கொலைகள் திமுக ஆட்சியை கலைப்பதற்கு காரணமாக காட்டப்பட்டன.

-    உச்சக்கட்டமாக 91 மே 21. திமுக மீது கொலைப்பழி. அடுத்த தேர்தலில் அக்கட்சி அடைந்த படுதோல்வி.

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஈழத்துக்காக முதன்முதலாக தீக்குளித்தவரும் கூட ஒரு இசுலாமிய திமுக தோழர்தான்.

‘திமுகவை யாரும் அழைக்கவில்லை’ என்று சொன்ன நண்பர், இதெல்லாம் திமுக யாரும் அழைக்காமலேயே தன்னெழுச்சியாக ஈடுபட்ட செயல்பாடுகள் என்பதையும் அறிந்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஈழப்பிரச்சினையை இங்கே பேசிய இயக்கம் திமுக. பேசிய தலைவர் கலைஞர்.

சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டதாலேயே “புரட்சித்தலைவி என்றால் புரட்சித்தலைவிதான்” என்று பாராட்டுக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில் இதையெல்லாம் பேசுவது வீண்தாண். அப்படிப் பார்த்தால் கடந்த திமுக அரசு ஈழத்தமிழர்களுக்காக ஐந்து சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. என்ன செய்வது. கலைஞர் தமிழினத் துரோகி. அம்மா ஈழத்தாய். இராணுத்தை அனுப்பி ஈழம் பெற்றுத்தரப்போகும் ஈழநாயகி போட்ட தீர்மானம் ஆயிற்றே. பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆட்சியில் இருந்த அரசியல் கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் ஈழவிவகாரத்தில் போதுமானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஈழம் குறித்த தாக்கத்தை வலுவாக தமிழகத் தமிழர்களிடையே ஏற்படுத்திய சமூக இயக்கம் என்று திமுகவால் பெருமிதமாக மார் தட்டிக்கொள்ள முடியும்.

இன்றைய ‘டெசோ’வால் உடனடியாக என்ன செய்துவிட முடியும் என்பதை உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால் இச்செயல்பாடு திமுகவினுடைய வழக்கமான இயல்புதான் என்பதை திமுகவின் கடந்தகால செயல்பாடுகளை அறிந்தவர்கள் உணர்ந்துக்கொள்ள முடியும். இன்று இலங்கையில் ‘தமிழ் ஈழம்’ கோரி யாரும் போராட முடியாது. அந்த கருத்தாக்கம் மக்கள் மனதிலாவது நீறுபூத்த நெருப்பாக இருக்க வேண்டுமானாலும் ‘டெசோ’ போன்ற முயற்சிகள் நடந்துக்கொண்டெ இருக்கவேண்டும்.

புகழுக்காக, பணத்துக்காக போராளி ஆனவர்கள் காற்றடைத்த பலூன்கள். உண்மை எனும் ஊசி குத்தப்பட்டபின், சூம்பிப்போய் வரலாற்றால் தயவுதாட்சணியமின்றி பரிதாபகரமாக தூக்கியெறியப் படுவார்கள். அதை உணர்ந்து நமக்கு முன்னால் உழைத்தவர்களின் உழைப்பை மதித்து, வார்த்தைகளை விடும்போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் ஆதரவில் உருவாகும் ‘டெசோ’ பயனற்றது என்றால், வருடாவருடம் மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்தினால் மட்டும் ஈழம் வென்றுவிட முடியுமா என்பதை தர்க்கரீதியாக, யதார்த்தமாக யோசிக்க வேண்டும்.

22 ஜூன், 2012

புதைக்கப்படுகிறது புரட்சி?


எண்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக உலகப் பொதுவுடைமை சிந்தனையாளர்களின் புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் ரஷ்யத் தலைவர் லெனின் காலமானார். இத்தனை ஆண்டுகளாக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல், பதப்படுத்தி ரஷ்ய அரசால், மாஸ்கோவில் செஞ்சதுக்கம் எனும் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவ்வுடலை இப்போது அடக்கம் செய்யவேண்டும் என்கிற குரல் ரஷ்யாவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

பல்வேறு தடைகளை தாண்டி, இடையறாப் போராட்டங்கள் மூலம் ஒரு யுகப்புரட்சியை முன்னெடுத்ததால் ஏற்பட்ட உச்சக்கட்ட மனக்களைப்பு. ஆட்சியாளராக ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர கடும் உழைப்பு. புரட்சிக்கு முன்பாக உள்நாட்டுப் போர்களில் பங்கெடுத்ததால் ஏற்பட்ட உடல்நல குறைபாடுகள். பலமுறை இவர் மீது பிரயோகிக்கப்பட்ட கொலைமுயற்சிகள். அதுபோன்ற ஒரு முயற்சியின் போது இவரது தொண்டையில் சிக்கிய துப்பாக்கிக் குண்டு. அதை நீக்க ஒரு அறுவை சிகிச்சை. இன்னும் ஏராளமான காரணங்கள். புரட்சி மூலமாக 1917ல் ஆட்சிக்கு வந்த லெனினின் உடல், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக சீர்க்குலைவு அடைந்துக்கொண்டே போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

1924, ஜனவரி 21 அன்று தனது ஐம்பத்து மூன்றாவது வயதில் லெனின் காலமானார். ‘நியூரோசிபிலிஸ்’ எனப்படும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகளே அவரது மறைவுக்கு காரணமென்று மருத்துவர்களால் சொல்லப்பட்டது. லெனின் மறைந்தபோது ரஷ்யப்புரட்சியை கடுமையாக எதிர்த்தவரும், லெனினின் எதிரியாக கருதப்பட்டவருமான பிரிட்டிஷ் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சிலின் அஞ்சலி சுவாரஸ்யமானது. “ரஷ்யர்களின் துரதிருஷ்டம் லெனினின் பிறப்பு. அதைவிட மோசமான படுமோசமான துரதிருஷ்டம் அவருடைய இறப்பு”. சம்பிரதாயத்துக்காக சொல்லாமல், சர்வநிச்சயமாக சொல்லலாம். ரஷ்யர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு லெனின்.

எனவேதான் அவரது உடலை புதைக்க அப்போதிருந்த ரஷ்ய கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்களுக்கு மனமில்லை. எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியில் எது வேண்டுமானால் சாத்தியமாகலாம் என்று கூறி, லெனினின் உடலை பதப்படுத்தி பாதுகாக்க முடிவெடுத்தார்கள். ஒருவேளை இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் வருமேயானால், லெனினை உயிர்ப்பிக்க வைக்கலாம் என்றுகூட அவர்கள் நம்பியிருக்கலாம்.

மூன்று நாட்கள் லெனினின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பத்து லட்சம் பேர் அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் பதப்படுத்தப்பட்டு நிரந்தர காட்சியாக மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த இடத்துக்கு லெனின் மாஸோலியம் என்று பெயர் சூட்டப்பட்டது. ‘மாஸோலியம்’ என்றால் கல்லறை என்று பொருள். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக பல கோடி உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் லெனினின் உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரஷ்யாவில் நாத்திகம் ஒரு மதமாகவே நிலைநின்று விட்டாலும், கிறிஸ்தவ ஆதிக்கத்துக்கு செல்வாக்கு அதிகம். அவ்வப்போது கிறிஸ்தவ குருமார்கள் லெனின் உடல் முறையாக அடக்கம் செய்யப்படாதது குறித்து முணுமுணுத்தாலும், வெளிப்படையாக குரல் கொடுக்க தைரியமின்றி கிடந்தார்கள்.

1989ஆம் ஆண்டு ரஷ்ய பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர், “லெனின் தனது உடலை தனது தாயாரின் சமாதிக்கருகில் புதைக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே செஞ்சதுக்கத்தில் இருக்கும் அவரது உடலை செயிண்ட் பீட்டஸ்பர்க்கில் புதைக்க வேண்டும்” என்று சொன்னார். நாடு முழுக்க அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

1990ஆம் ஆண்டு லெனினால் உருவாக்கப்பட்ட சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு (யு.எஸ்.எஸ்.ஆர்) சிதறியது.கம்யூனிஸம் தோற்றுவிட்டதுஎன்று கூறி, ரஷ்யப் புரட்சியின் அடையாளங்களாக இருந்த நினைவுச்சின்னங்கள் பலவும் அப்போது அழிக்கப்பட்டது. பொதுமக்களே இந்த அழிப்புப் பணியில் ஆர்வமாக இருந்தார்கள். ரஷ்யாவின் அசைக்கமுடியாத சர்வாதிகாரியாக திகழ்ந்த ஸ்டாலினின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் அப்போதும் கூட லெனினின் உடலை அடக்கம் செய்வது குறித்து யாரும் நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. ஏனெனில் ரஷ்யர்களிடம் அவருக்கு இருந்த இமேஜ் அந்தளவுக்கு அசைக்க முடியாததாக இருந்தது.

காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. எழுபதுகளிலும், எண்பதுகளில் பிறந்து வளர்ந்த தலைமுறைக்கு முந்தையத் தலைமுறை மாதிரி பெரியளவில்லெனின் செண்டிமெண்ட்இப்போது இல்லை. இந்த சூழலைப் புரிந்துகொண்ட மிக்கேல் கோர்ப்பச்சேவ் (சோவியத் ரஷ்யா சிதற காரணமாக இருந்தவர்) சில ஆண்டுகளுக்கு முன்பாக, யாரும் பேச விரும்பாத இந்த விஷயத்தை பேசத் தொடங்கினார். “புதைந்துப்போன விஷயங்களை தோண்டியெடுக்கும் நிலையில் நாம் இப்போது இல்லை. இன்னமும் லெனின் உடலை நாம் பதப்படுத்தி, பாதுகாத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. அவரது குடும்பத்தினர் விரும்பியபடி முறையாக மரியாதை செய்து அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றார்.

கோர்ப்பச்சேவின் இந்தப் பேச்சுக்கு கம்யூனிஸ்ட்டு ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியபோதிலும், அவரது கருத்துக்கும் நிறைய பேர் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட நான்கைந்து காலமாக எதிரும், புதிருமாக வரிந்து கட்டிக்கொண்டு ரஷ்யர்கள் இந்த விஷயத்தை விவாதித்து வருகிறார்கள். ரஷ்ய ஆளுங்கட்சி இந்த விவகாரத்தை முள் மேல் பட்ட சேலையாக மிகக்கவனமாக கையாண்டு வருகிறது. அதே நேரம் லெனினின் உடல் புதைக்கப்பட வேண்டும் என்கிற மனவோட்டத்தை மக்களிடம் ஏற்படுத்தும் பணிகளையும் மறைமுகமாக செய்துவந்தது. கடந்த ஆண்டு லெனினின் உடலை புதைக்கலாமா என்று மக்களிடம் கருத்துகோரி ‘குட் பை லெனின்’ என்கிற இணையத்தளத்தை கூட உருவாக்கி இருந்தது.

மூன்றாவது முறையாக விளாதிமீர் புடின் ரஷ்ய அதிபராகிவிட்ட நிலையில் மீண்டும் ‘லெனின் உடல் புதைப்பு’ விவகாரத்தை தீவிரமாக்கியிருக்கிறார். குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல சில நாட்களுக்கு முன்பாக புடினுக்கு நெருக்கமானவரும், ரஷ்ய கலாச்சார அமைச்சருமான விலாடிமீர் மெடின்ஸ்கியை வைத்து ஒரு கருத்து கூற வைத்திருக்கிறார்.

“லெனினின் உடல் இத்தனை காலமாக அடக்கம் செய்யப்படாமல் இருப்பது அபத்தமானது. மரியாதைக்குரிய தலைவரான அவரது உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட வேண்டும். தனது உடல் எளிமையான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது அவரது கடைசி ஆசை. அதைகூட இத்தனை ஆண்டுகளாக நாம் செய்யாமல் இருப்பது வெட்கத்துக்குரியது. தற்போது அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சோவியத் வரலாற்று நினைவிடமாக மாற்றிவிடலாம்” என்று ரஷ்ய வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பொரிந்து தள்ளியிருக்கிறார் மெடின்ஸ்கி.

முன்பு 89ல் லெனின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக அமைச்சர் ஒருவர் பேசியபோது எழுத கடும் எதிர்ப்பெல்லாம் இப்போது இல்லை. மாறாக இணையத்தளத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 56 சதவிகிதம் பேர் லெனினின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள். முந்தையக் கணக்கெடுப்பில் 48 சதவிகிதம் பேர் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். வருடா வருடம் லெனினின் உடலை அடக்கம் செய்யவேண்டும் என்கிற கருத்துக்கு ரஷ்யர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. நடப்பு நிலவரத்தை பார்த்தால் விரைவில் லெனினின் உடல் அடக்கம், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவரது தாயாரின் சமாதிக்கருகே நடக்கும் என்றுதான் தெரிகிறது.

இந்த விவகாரங்கள் சூடு பிடிப்பதற்கு முன்பாக ரஷ்ய கம்யூனிஸ்ட்டு கட்சி தன் கவலையை தெரிவித்திருந்தது. “சோவியத்தின் வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறார்கள். புரட்சித் தலைவர் லெனினின் நினைவுகளை மக்கள் மனதில் இருந்து முற்றிலுமாக அகற்ற நினைக்கிறார்கள்” என்று அக்கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

புரட்சியை புதைக்க முடியுமா என்கிற கேள்விக்கு காலம்தான் விடையளிக்க வேண்டும்.

(நன்றி : புதிய தலைமுறை)

21 ஜூன், 2012

குமுதம் பிரார்த்தனை கிளப்


போன ஞாயிறு கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். வீட்டு லைப்ரரியில் சேகரிப்பில் இருந்த பழைய புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். பழைய ‘குமுதம்’ இதழ் ஒன்று கிடைத்தது. எந்த புத்தகம் வாங்கினாலும் உடனே அட்டையிலோ, முதல் பக்கத்திலோ தன்னுடைய கையெழுத்தை போட்டு வைத்துக் கொள்வது அப்பாவின் வழக்கம். அதுபோலவே புத்தகத்தில் அவரை கவர்ந்த வாசகங்கள் ஏதேனும் இருந்தால் அடிக்கோடிட்டு வைத்திருப்பார். கட்டுரைகள் அருகே அப்பிரச்சினை குறித்த அவரது கருத்தை சுருக்கமாக (வாசகர் கடிதம் மாதிரி) எழுதிவைப்பார். இதழைப் புரட்டும்போது உள்ளே ‘பிரார்த்தனை கிளப்’ பகுதியில் prayed என்று எழுதி கீழே கையெழுத்திட்டிருந்தார். நீண்டநாள் கழித்து அவரது அழகான கையெழுத்தை கண்டது மகிழ்ச்சியை தந்ததோடு, வேறு சில சிந்தனைகளையும் கிளறியது.


குமுதம் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற பகுதியை இந்த தலைமுறை குமுதம் வாசகர்கள் எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆசிரியர் எஸ்.ஏ.பி-க்கு கூட்டுப் பிரார்த்தனையில் நம்பிக்கை அதிகம். பிரார்த்தனை மூலமாக இறைவனிடம் எதையும் சாதித்துவிடலாம் என்கிற கருத்தை கொண்டிருந்தவர். எனவேதான் தன்னுடைய இதழில் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற வாசகர்கள் அமைப்பை உருவாக்கியிருந்தார். நோய் நொடியில் இருப்பவர்கள், அறுவைச்சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் என்று இன்னலில் இருப்பவர்கள் குமுதத்துக்கு கடிதம் எழுதிப் போடுவார்கள். பிரார்த்தனை கிளப் பகுதியில் அக்கடிதம் பிரசுரிக்கப்படும். கீழே ஆசிரியர் ‘இவருக்காக இன்ன நேரத்தில் அனைவரும் அவரவர் வழிபடும் இடத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்று வாசகர்களை கோருவார்.

சிறுவயதில் அப்பகுதியை வாசிக்கும்போது ‘டைம் வேஸ்ட்’ என்று நினைப்பேன். எங்கோ இருக்கும் யாருக்கோ எதற்காகவோ யார் மெனக்கெட்டு பிரார்த்திப்பார்கள் என்றெல்லாம் கருதியிருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பாவே அதை தொடர்ச்சியாக பின்பற்றி வந்திருக்கிறார் என்பது எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரிந்தது. பிற்பாடு நானெடுத்த குட்டி கணக்கெடுப்பு ஒன்றில் அப்போதிருந்த குமுதம் வாசகர்கள் (பிரார்த்தனையில் நம்பிக்கை கொண்டவர்கள்) பெரும்பாலான பேர் நேரமெடுத்து, மெனக்கெட்டு இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் என்பதை அறிந்துகொண்டேன். உள்ளகரம் ஆயில்மில் அருகே ஒரு யாக்கோபு சர்ச் உண்டு. ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அந்த தேவாலயத்துக்கு சென்றபோது, குமுதம் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு அன்பர் மனமுருக ‘யாருக்கோ’ பிரார்த்திருத்துக் கொண்டிருந்ததை கூட கண்டிருக்கிறேன்.

இப்போது குமுதத்தில் ‘பிரார்த்தனை கிளப்’ வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை ஒன்பது முதல் ஒன்பது மணிக்குள்ளாக வாசகர்கள் ஒட்டுமொத்தமாக முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்களா என்பதற்கு நிச்சயமுமில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் மனிதநேயம் நிறைய வளர்ந்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் நிறைய உருவாகியிருக்கின்றன. சாதி, சமய, இன, தேச வேறுபாடுகள் குறித்த பிரக்ஞை குறைந்திருக்கிறது. அடுத்தவர் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது. அதேநேரம் ஆன்மீகமும் பல்வேறு வடிவங்களில் முன்பிலும் அதிகமாக மக்களை ஈர்க்கிறது. இப்படியெல்லாம் ஒரு தோற்றம் எனக்குள் இருக்கிறது. சமகால தலைமுறை குறித்து சமகாலத்தில் வாழும் யாருக்கும் இருக்கும் பெருமிதம்தான் இது. ஆனால், போன தலைமுறையிடம் இருந்த ஏதோ ஒன்று, இன்றைய தலைமுறையிடம் ‘மிஸ்’ ஆகிறது என தோன்றுகிறது. முந்தையத் தலைமுறை அதற்கு முந்தையத் தலைமுறையோடு ஒப்பிட்டு இவ்வாறாக ‘ஃபீல்’ செய்ததாக தெரியவில்லை.

என் அப்பாவை விட நான் அறிவாளி. என் அப்பாவுக்கு கிடைத்த வாய்ப்புகளைவிட எனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அவரைவிட வசதியாக வாழ்கிறேன். அவர் நினைத்தே பார்க்க முடியாத உயரங்களை நான் அனாயசமாக அடைகிறேன். ஆனால் அவரளவுக்கு நான் உன்னதமானவனாக, உண்மையானவனாக இல்லை. சமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.

கடந்த தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்குமான மரபுத்தொடர்ச்சியில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இப்போதையத் தலைமுறைக்கும் தொடர்ச்சியே இல்லாத விரிசலுக்கும் வாய்ப்பிருக்கிறது. எதை, எங்கே தொலைத்திருக்கிறோம் என்பதைக் குறித்து கொஞ்சம் துல்லியமாகவே ஆராய வேண்டும்.


20 ஜூன், 2012

மனசாட்சி வியாபாரம்



முந்தையப் பதிவான ‘வாய்ப்பும்,யோக்கியதையும்’ பதிவின் தொடர்ச்சியாக இதைக் கொள்ளலாம். ஏனெனில் அப்பதிவு பூடகமாக எழுதப்பட்டிருந்தது என்று சில நண்பர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். என்ன எழவு பூடகம் என்று புரியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்களாக இருப்பவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி சம்பளம் வாங்கிக் கொள்ளலாம். அது வெறும் கூலி. உழைப்புக்கு தரப்படுவது. ஆனால் டாட்டாவுக்கு விளம்பரப்படம் எடுத்ததாலேயே லீனா கைக்கூலி என்பது மாதிரியான அதிசய விளக்கங்களை பின்னூட்டங்களில் பெற நேர்ந்தது.

காலச்சுவடு நிறுவனத்தின் மீது ஷோபாசக்தி நீண்டகாலமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டிருந்தார். ‘பிராமின்ஸ் டுடே’ என்கிற சாதியப் பத்திரிகை காலச்சுவடு முகாமில் இருந்து வந்துக் கொண்டிருப்பதாக. காலச்சுவடு சார்பாக இது மறுக்கப்பட்டு வந்தது. அந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கான டி.டி.பி/வடிவமைப்புப் பணிகளை மட்டுமே தாங்கள் செய்துத் தருவதாகவும், இது தொழில்ரீதியான உறவேயன்றி, உணர்வுரீதியான உடன்பாடான உறவல்ல என்பது மாதிரியான மறுப்பு அது. ஆனாலும் காலச்சுவடு பற்றி எப்போது ஷோபா விமர்சிக்கும்போதும் ‘பிராமின்ஸ் டுடே’-வுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு உண்டு.

இம்மாதிரி ஒரு குற்றச்சாட்டு என் மீதோ, உங்கள் மீதோ சாட்டப்பட்டால் நாம் என்ன செய்வோம்? அதைதான் காலச்சுவடும் செய்தது. ஷோபா தொடர்பான ‘ஓட்டை’கள் ஏதேனும் மாட்டுமா என புலனாய்வு செய்தது. இந்த தூண்டிலில் மாட்டியது லீனா. டாடா ஸ்டீலுக்கான புதிய விளம்பரங்களை ஓகில்வி நிறுவனம் தனது தளத்தில் வெளியிடும்போது கிரெடிட்ஸ் பகுதியில் ‘தேஜஸ்வினி’ திட்டம் குறித்த விளம்பரத்துக்கு இயக்குனர் லீனாமணிமேகலை என்கிற தகவல் வெளிப்பட்டிருந்தது. ஷோபாவை மாட்டவைக்க எதுவும் கிடைக்காவிட்டால் என்ன, அவருடைய நண்பரான லீனாவை மாட்டிவிட்டால் போதுமே. குறைந்தபட்சமாகவாவது ஷோபாவை சங்கடப்படுத்தலாம் என்பதே காலச்சுவடின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். மற்றபடி அதே டாட்டா ஸ்டீல் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக காலச்சுவடின் பின்பக்க அட்டையில் விளம்பரம் தருகிறேன் என்று சில லட்சங்களை தர முன்வந்தால், காலச்சுவடு ஆதிவாசிகளுக்கு நியாயம் தேடும் அறச்சீற்றத்தோடு மறுக்குமென நாம் கருத இடம் ஏதுமில்லை.

ஆனால் காலச்சுவடு என்ன நினைத்ததோ அதை சாதித்துக் கொண்டது என்றே தோன்றுகிறது. அது பற்ற வைத்த தீ செழிப்பாகவே எரிந்தது. லீனாவுடைய எதிரிகள் மட்டுமின்றி அவரது நண்பர்களும் கூட கறாராக அறம் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஜெயமோகனும் தன் பங்குக்கு எழவு வீட்டில் வேர்க்கடலை விற்க கிளம்பிவிட்டார். இச்சந்தர்ப்பத்தைபயன்படுத்தி காலச்சுவடு கண்ணன், அ.மார்க்ஸ் ஆகியோரிடம் தனக்கு ஏற்கனவே இருக்கும் பழையகணக்கு வழக்குகளை தீர்த்துக் கொள்கிறார். அதையெல்லாம் விட ஆச்சரியம். எப்போதோ செத்துப்போய் அடக்கம் செய்துவிட்டவர்களை எல்லாம் தோண்டியெடுத்து இழிவுசெய்யும் ஜெயமோகன் அப்பதிவில் இவ்வாறாக எழுதுகிறார். “தமிழில் இந்த அளவுக்கு கீழ்த்தரமான வன்மம் வேறெங்காவது வெளிப்படுகிறதா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

அத்தோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. “அன்புள்ள அல்லிக்கு...” பாணியில் தினமும் யாராவது ஒரு வாசகர் ஜெயமோகனிடம் உலகின் சர்வபிரச்சினைகளுக்கும் தீர்வு கேட்டு கடிதம் எழுதுவது வழக்கம். இந்த குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக பாண்டியன் எம்.கெ. என்பவர் கடிதம் எழுதி, அதற்கு ஜெயமோகன் பதிலும் அளிக்கிறார். வழக்கமான ஊன்னா தான்னா பாணியிலான படுநீளமான, கொட்டாவி விடவைக்கும் பதில்தான். தொடர்ச்சியாக ஜெயமோகனின் பதிவுகளை வாசித்து வருகையில் அவர் கடந்த ஜென்மத்தில் ராஜாஹரிச்சந்திராவாக பிறந்திருப்பாரோ என்கிற சந்தேகம் நமக்கு எழாமல் இருக்காது. இந்தப் பதிவும் அவ்வகையிலான செல்ஃப் ப்ரமோஷன் பதிவுதான். முழுக்க சிங்குலர் பர்சனில் ‘அரசாதி அரச அரச குலோத்துங்க’ பாணியில் அவரை அவரே வாழ்த்தி, பாராட்டி, மெய்சிலிர்த்து, கண்கலங்கி சிலாகித்துக் கொள்கிறார். இதெல்லாம் நமக்குப் பிரச்சினையில்லை. தினம் தினம் இவரை வாசித்து நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளும் மசோகிஸ்ட்டுகளாக ஜெயமோகனால் ஏற்கனவே நாம் உருவெடுத்துவிட்டோம்.

நைசாக தலைவர் ’பிட்டை’செருகுகிறார். ‘சிந்துசமவெளி’ என்கிற ‘பிட்டு’ படத்தில் தனக்கு பங்களிப்பே இல்லை. ஆனாலும்அதை என்னோடு தொடர்புபடுத்தி அவதூறு பேசுகிறார்கள் என்கிறார். நன்றாக நினைவிருக்கிறது. அப்படம் வெளிவருமுன்பாக ஜெயமோகன் தனது தளத்தில் ‘சிந்து சமவெளி’ குறித்து விரிவாக எழுதிய விளம்பரக் கட்டுரை ஒன்று. இயக்குனர் சாமி எப்படிப்பட்ட அப்பாடக்கர். சினிமாத்தொழில் எப்படி இவருக்கு நிறைவை அளிக்கிறது என்றெல்லாம் விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். இப்போது மிகக்கவனமாக தனக்கும், சிந்துசமவெளிக்குமான உறவை வரலாற்றில் இருந்து முற்றிலுமாக மறைக்க நினைக்கிறார் ஜெயமோகன். விக்கிப்பீடியாவில் ஏதாவது ஆதாரம் தட்டுப்படுமா என்றெல்லாம் தேடிப்பார்க்காதீர்கள். விக்கிப்பீடியா என்பது விஷ்ணுபுரம் ஏரியா.

//அந்தப்படத்தில் பங்களிப்பாளர்களின் பெயர்களில் என்பெயர் சொல்லப்படவில்லை // என்று எப்படித்தான் வாய்கூசாமல் இவரால் சொல்லமுடிகிறதோ தெரியவில்லை. மேற்கண்ட விளம்பரம் சிந்துசமவெளி திரைப்படத்துக்கான இசைவெளியீட்டின் போது வெளியிடப்பட்டது. இன்றும் சிந்துசமவெளி எங்காவது ‘கில்மா’ படம் ஓடும் தியேட்டர்களில் ஓடினால், அதற்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளில் நாம் ‘ஜெயமோகன்’ பெயரை காணலாம். ஜெயமோகன் தனது தளத்தில் பதிந்திருக்கும் தினமலர் நேர்காணலில் கூட ‘நான் கடவுள்’, ’அங்காடித்தெரு’ படங்களைத் தொடர்ந்து ‘சிந்து சமவெளி’ படத்துக்கு வசனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்என்றே இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே தான் திரைப்பங்களிப்பு அளித்த திரைப்படங்களாக இரண்டே இரண்டு படங்களை (நான் கடவுள், அங்காடித்தெரு) மட்டும் குறிப்பிடுகிறார். அவை அதுவரை திரையில் பேசப்படாத ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை இத்யாதி, இத்யாதியெல்லாம் பேசுவதால் அவற்றை மட்டும் தன்னுடைய கணக்கில் சேர்த்துக் கொள்கிறார். முன்பாக படுதோல்வியடைந்த ‘கஸ்தூரி மான்’ என்கிற திரைப்படத்துக்கும் இவர்தான் வசனம் என்று அறிகிறோம். என்ன காரணமோ தெரியவில்லை. அது ஜெமோவின் அக்கவுண்டுக்கே வரவில்லை. ஒருவேளை ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களைப் பற்றி அது பேசவில்லையோ என்னவோ? ஜெயமோகனைப் போல செய்துவிட்ட ஒரு வேலையை செய்யவேயில்லை என்று லீனா மறுக்கவில்லை.

இப்படிப்பட்ட ஜெயமோகன்தான் போலிவேடதாரிகள், தங்கள் மூளைகளை விற்பனைக்காக சந்தையில் விரித்து வைத்திருப்பவர்கள், அற்ப பிழைப்பு வாதிகள், சில்லறை நோக்கங்களுக்காக வாழ்பவர்கள் என்று தனக்கு உவப்பில்லாதவர்கள் அத்தனை பேர் மீதும் முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்.

என்ன செய்வது? ஊர் ரெண்டு பட்டிருக்கிறது. ஜெயமோகனுக்கு கொண்டாட்டம்தான்!

16 ஜூன், 2012

வாய்ப்பும், யோக்கியதையும்


ஓகில்வி & மாதர் (ஓ & எம்) என்பது ஓர் உலகளாவிய விளம்பர நிறுவனம். உலகம் முழுக்க 450 அலுவலகங்கள். 120 நாடுகளில் இயங்குகிறது. சுமார் இருபதாயிரம் ஊழியர்கள். விளம்பரம் என்றாலே உங்களுக்கு நினைவு வரும் விளம்பரங்கள் பத்து என்றால், அதில் குறைந்தபட்சம் ஐந்தாவது ஓ & எம் நிறுவனம் எடுத்தவையாகதான் இருக்கும். நம்மூரிலேயே ஃபெவிகால், ஹட்ச் என்று பேசப்பட்ட அவர்களது விளம்பரங்கள் ஏராளம். சினிமாவில் ‘வார்னர் பிரதர்ஸ்’ எப்படியோ, விளம்பரத்துறையில் இவர்கள் அப்படி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த நிறுவனம் ஒரு விளம்பரப்படம் இயக்கச் சொல்லி ஒரு இயக்குனரை கேட்டுக்கொண்டால் அவரால் மறுக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.

அவ்வாறு மறுக்கக்கூடிய ‘தில்’ இருப்பவர்கள், ‘அக்கிரகாரத்தில் கழுதை’ மாதிரி ஆர்ட் படங்கள் எடுத்துதான் காலத்தை ஓட்ட முடியும். ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த இயக்குனராவது, “ரஜினி தமிழனுக்கு எதுவும் செய்யவில்லை. மைசூரில்தான் தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறார்” என்கிற கருத்தையையோ, தமிழ்தேசிய-திராவிட-இடதுசாரி-லொட்டு-லொசுக்கு கொள்கைகளையோ முன்வைத்தோ இங்கு மறுக்கக்கூடிய சூழல் இருக்கிறது என்று யாரேனும் நினைக்கிறீர்களா?

நல்லதோ, கெட்டதோ. உலகமயமாக்கல் சூழலில் யாரும் வாய்ப்புகளை தவறவிட விரும்புவதில்லை. ஆனானப்பட்ட அறிவுப்பேராசான் மார்க்ஸே கூட ‘பொதுவுடைமை’ எழுதவும், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான கருத்துகளை சிந்திக்கவும் பொருளாதாரரீதியாக ஏங்கெல்ஸ் என்கிற முதலாளிதான் உதவியிருக்கிறார். தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பொருளுதவி செய்தவர்களுள் சில பார்ப்பனர்களும் அடக்கம். நாமெல்லாம் எம்மாத்திரம்?

ஓரிரு விதிவிலக்குகள் நிச்சயமாக இருக்கலாம். எல்லா இயக்கங்களிலுமே கொள்கை சமரசத்துக்கு துளியும் ஆட்படாதவர்கள் நான்கைந்து பேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். கிட்டத்தட்ட இது துறவி மனநிலை. துறவியாக வாழ நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது பேரால் முடியாது. இதற்காக இந்த தொண்ணூற்றி ஒன்பது பேரும் அயோக்கியர்கள் என்று பொருளல்ல. வாய்ப்புகளுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கும் அல்பஜீவிகள்தான் எல்லாருமே. இதில் யார் சின்ன அல்பம், யார் பெரிய அல்பம் என்று பட்டிமன்றம் வைப்பதைவிட அபத்தமான செயல்பாடு வேறொன்று இருக்க முடியாது.

யாரோ ஒருவர் மாட்டிக் கொண்டால், ஒட்டுமொத்தமாக சூழ்ந்து அவரை சாத்துவது என்பதை நம்முடைய பண்பாட்டுச் செயல்பாடாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு, நாம் எந்தவகையிலும் எங்குமே சமரசமே செய்துக் கொண்டதில்லை என்று சீதை மாதிரி தீக்குளித்து நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்? சிறு சமரசங்கள் பரவாயில்லை. பெரிய சமரசம்தான் தப்பு என்று சப்பைக்கட்டு கட்டித்தானே நம்முடைய யோக்கியதையை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்?

அடிக்கடி அறிவுஜீவிகள் ‘நடுத்தர வர்க்கத்து மனோபாவத்தை’, சாதாரண லவுகீக செயல்களில் எல்லாம் கண்டுபிடித்து கிண்டலடிப்பதும், கண்டிப்பதும் வழக்கம். அறிவுசார் செயல்பாடுகளில் அறிவுஜீவிகளின் நடவடிக்கையும் அச்சு அசலாக நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையோடே இருப்பதை பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடிகிறது. நம் சூழலில் செயல்படும் பெரும்பாலான அறிவுஜீவிகள் அல்லது அறிவுஜீவி ஜீப்பில் தாமாக வந்து ஏறிக்கொண்ட கோமாளிகளும் எவ்வகையிலும் நடுத்தர மனப்பான்மையை தாண்ட முடியாதவர்கள் என்பதே உண்மை. நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பொறாமை, பொச்சரிப்பு, புறம் பேசுதல் என்று எல்லா நடவடிக்கைகளையும் கைக்கொள்ளும் இவர்கள் எப்படி அறிவுஜீவிகளாக இருக்கமுடியும்?

பைபிளை எனக்கு ஏன் பிடிக்குமென்றால் “உங்களில் யார் யோக்கியரோ, அவர் முதல் கல்லை எறியலாம்” என்கிற வசனத்துக்காக. நம்மூரில் எப்போதும், யார்மீதாவது லோடு, லோடாக கல் எறியப்படுவது வாடிக்கை. முதல் கல்லை எறிந்தவரிடம் மட்டுமல்ல, கடைசிக்கல்லை எறிந்தவர் வரை யாரிடமும் யோக்கியதையை எதிர்பார்க்க முடியவில்லை.

14 ஜூன், 2012

ஓர் அணில் உதவி


நாமக்கல் அருகே உள்ள நல்லிப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்  திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வருகிறார்.  ஆறு செமஸ்டர்களை நிறைவு செய்துவிட்டு ஏழாவது செமஸ்டரில் அடியெடுத்து வைக்கும் அந்த மாணவர், நல்லிப்பாளையம் UCO வங்கியில் கல்விக் கடன் பெற்று படித்து வருகிறார். ஏழை மாணவர் என்பதால் வட்டிக்கு அரசு அளிக்கும் மானியம் பெறத் தகுதியானவர்.

கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு.இந்த மானியத்தை கடனளிக்கும் வங்கிகள் அவர்களே அரசு நியமித்துள்ள வங்கிளிடமிருந்து  பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களை ஜூன்7 2012  புதிய தலைமுறையில் வெளியிட்டிருந்தோம்

விதிகள் இவ்வாறிருக்க  வட்டித் தொகையான 24000 ரூபாயைக் கட்டினால்தான் இந்த செமஸ்டருக்கான கடன் தொகையைத் தரமுடியும் என வங்கி மேலாளார் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். கடந்த ஆண்டும் இதே போல வற்புறுத்தி 16500 ரூபாயைச் செலுத்தச் சொல்லியிருக்கிறார். கல்லூரி திறக்கிற நேரமானதால் அவரது பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.கந்து வட்டிக்காரர்களிடம் 36 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி வங்கியில் பணம் கட்டிவிட்டனர்.

கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு. என்ற தகவல்களை வெளியிட்டிருந்த புதிய தலைமுறைக் கட்டுரையில் Education Loan Task force (ELTF) என்ற அமைப்பின் இணைய முகவரியையும் வெளியிட்டிருந்தோம். இந்த அமைப்பு அப்துல் கலாமின் கனவான விஷன் 2020 என்பதால் உந்தப்பட்டு அவரது ஆசியுடன் நடந்து வரும் அமைப்பு. ஸ்ரீநிவாசன்  என்ற விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி/ இந்த அமைப்பை முன்னின்று நடத்தி வருகிறார். .

புதிய தலைமுறையைப் படித்த விக்னேஷ்,  ஸ்ரீநிவாசனை ஜூன் 7ம் தேதி இரவு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் மறுநாள் UCO வங்கியின் நல்லிப்பாளையம் கிளை மேலாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வங்கி மேலாளார் ஆணவமாகப் பதில் சொன்னதாக ஸ்ரீநிவாசன் தெரிவிக்கிறார். “நீ யார் கிட்ட வேணா போய்ச் சொல்லிக்கோ, வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும். எங்கள் பாங்க் விதிகள் அப்படித்தான் சொல்கின்றன” என்று சொல்லிவிட்டார்.

உடனே ஸ்ரீநிவாசன் அன்றே மேலதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அவரது மின்னஞ்சலில் புதிய தலைமுறைக் கட்டுரையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அன்று மாலை (ஜூன் 8) வங்கியின் துணைப் பொது மேலாளர் திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசனுடன் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்கிறார். அவர் கிளை மேலாளரைத் தொடர்பு கொண்டு விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில் வங்கிக் கிளை மேலாளரே விக்னேஷைத் தொடர்பு கொண்டு அடுத்த செமஸ்டருக்கான கல்விக் கட்டணத்திற்குரிய வரைவோலையை வங்கியில் வந்து வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். ஜூன் 9ம் தேதி விக்னேஷ் வங்கிக்குச் சென்று வரைவோலையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்.

இது போல் இந்தக் கிளையில் இன்னும் எத்தனை மாணவர்களுக்கு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஸ்ரீநிவாசன் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார். ஜூன் 9ம் தேதி மாலை கோவை மண்டல மேலாளர் பாஷா ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தான் ஜூன் 11ம் தேதியன்று  வங்கிக் கிளைக்கே சென்று விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்தார் .


அவர் விசாரணைக்கு வந்த போது 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரிடம்  வங்கிக் கிளை மேலாளர் மூலம் சந்தித்து வரும் பிரச்சினைகளத் தெரிவித்ததாக அறிகிறோம். தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்களிடம் வட்டியாக வாங்கிய பணத்தைத் திருப்பியளிக்க ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளதாக திரு. பாஷா புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையைப் படித்து முறையிட்ட மாணவருக்கு மின்னல் வேகத்தில் உதவிகளைப் பெற்றுத் தந்த ELTF அமைப்பிற்கும், ஸ்ரீநிவாசனுக்கும், அவர்  மின்னஞ்சலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த UCO வங்கியின் மேலதிகாரிகளுக்கும் பணிவன்போடு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிது.
இது ஒரு வங்கியில் ஒரு கிளையில் மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. இது போன்று அநேகமாக எல்லா வங்கிகளிலும் ஏதோ ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிளைகளில் மாணவர்களும் பெற்றோர்களும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.

வங்கிகளின் மேல் அதிகாரிகள் வங்கிக் கிளைகளில் விதிமுறைகளின்படி தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை மேற்பார்வையிட மண்டல வாரியாக சமூக அமைப்புக்கள், பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதே போல் கல்விக் கடன் தொடர்பான புகார்களை மின்னல் வேகத்தில் விசாரித்து அவற்றைத் தீர்ப்பதற்கென்று பிரத்யேக குறை தீர்க்கும் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனப் புதிய தலைமுறை வலியுறுத்துகிறது.


(நன்றி : புதிய தலைமுறை - ஆசிரியரின் தலையங்கத்திலிருந்து...)

13 ஜூன், 2012

ஷாங்காய்


நான் பிறந்து வளர்ந்த ஊரான மடிப்பாக்கம் குக்கிராமமாக இருந்த காலத்தில் நான் குழந்தையாக இருந்தேன். பள்ளிப் புத்தகத்தில் ஒரு பாடம் இருந்தது. எனது ஊருக்கே மேற்கே மலையிருக்கிறது. தெற்கே ஆறு இருக்கிறது என்று வரிகள் இருந்ததாக ஞாபகம். மடிப்பாக்கத்துக்கு மேற்கே மலை இருந்தது. பல்லாவரம் மலை. தெற்கே ‘மடு’ என்று சொல்லப்படக்கூடிய சிற்றாறு இருந்தது. கிழக்கே கழிவுவெளி என்று சொல்லக்கூடிய ஒரு பகுதி. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நீட்சி. பள்ளிக்குச் செல்லும்போது சாலைகளின் இருபுறமும் சாமந்திப்பூக்கள் பூத்துக் குலுங்கும். என் வீட்டுக்கு எதிரே சுமார் இருநூறு மரங்கள் கொண்ட மாந்தோப்பு கூட இருந்தது. கோடை எங்களை சுட்டெரித்ததில்லை. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் குறைந்தது ஒரு வேப்பமரம். வீட்டுக்குப் பின்னால் நிச்சயமாக புளியமரம். கிணறுகளில் பத்தடியில் இளநீர் சுவையோடு குடிநீர். வெயில்காலங்களில் கூட அதிகபட்சம் இருபத்தைந்து அடிகள் வரைதான் தண்ணீர் வற்றும். ஓரிருவரிடம் மட்டுமே ‘பைக்’. வெயில்கால இரவுகளில் காற்றுக்காக சாலைகளுக்கு வந்துகூட பாய்விரித்து படுத்துக் கொள்ளலாம். ஊருக்கே தெற்கே கண்ணில் படக்கூடிய எல்லை வரை பசுமை. எண்ணிக்கையிலடங்கா பாசனக் கிணறுகள். தென்மேற்கில் சவுக்குத்தோப்பு. மிகப்பெரிய பரப்பளவில் ஓர் ஏரி. நிறைய குளங்கள். குட்டைகள். இரவுகளில் சிலவேளைகளில் நரி ஊளையிடும். நினைவுப்படுத்திக் கொண்டே போனால் பட்டியல் ‘பழைய ஏற்பாடு பைபிள்’ அளவுக்கு நீளும்.

இன்று மடிப்பாக்கம் சென்னை மாநகராட்சிக்குள் இணைந்துவிட்டது. அன்றிருந்த விஷயங்களில் இன்று ஓரிரண்டு கூட இல்லை. இந்த ஓரிரண்டில் மனிதர்களும் அடக்கம். இன்று காஃபி டே இருக்கிறது. நவீன ரெஸ்டாரண்டுகள். குடியிருப்புகள். வீட்டுக்கு ஒரு கார். இரண்டு பைக். ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். ஒரு நகரத்துக்குள் என்னென்ன இருக்க வேண்டும் என்கிறார்களோ, எல்லாமே இருக்கிறது. பாதாள சாக்கடை மாதிரி இல்லாத அடிப்படை விஷயங்களைப் பற்றி யாரும் மெனக்கெடுவதில்லை. அப்போது இருந்ததற்கும், இப்போது இருப்பதற்குமான வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்குமென நினைக்கிறேன். ஒரு பூர்விகவாசி என்கிற முறையில் என் இதயத்தில் இம்மாற்றங்கள் எம்மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை எனக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த மாற்றத்தை முன்னேற்றம் என்றோ, வளர்ச்சி என்றோ பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய சூழலில் நான் இல்லை. இத்தனைக்கும் இங்கே அரசின் சிறப்புத் திட்டம் எதுவோ, புதிய தொழிற்சாலைகளோ எதுவும் அமைக்கப்படாமலேயே அசுர வளர்ச்சி. மடிப்பாக்கத்தில் இடம் மலிவு. குடிநீர் நன்றாக இருக்கும் என்கிற மக்களின் வாய்மொழி விளம்பரம் மூலமாக இத்தகைய மாற்றம் சாத்தியமாகியிருக்கிறது. போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலத்து மடிப்பாக்கத்து வாசி, இன்று என்னவாக இருக்கிறான் என்பது இங்கே யாரும் கேட்க விரும்பாத, அறிந்துக் கொள்ள விரும்பாத ஒரு கேள்வி.

‘பொலிட்டிக்கல் த்ரில்லர்’ என்று அறியப்படும் ‘ஷாங்காய்’ திரைப்படம் இப்படியெல்லாம் என்னை வகைதொகையில்லாமல் சிந்திக்க வைக்கிறது. அரசியல் தொடர்பு கொண்டது என்பதற்காக இதை ‘பொலிட்டிக்கல் த்ரில்லர்’ எனலாமா என்று தெரியவில்லை. ‘நம்முடைய வளமும், மக்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூட்டிக் கொடுக்கப் படுகிறது’ என்கிற ஒன்லைனரை நெற்றியலடித்தாற்போல பளாரென சுட்டிக் காட்டியிருப்பதுதான் இப்படத்தின் மையம். அவன் இங்கே வந்து தொழிற்சாலை கட்டுவான். ஊரில் இருப்பவர்களுக்கு மெக்கானிக் வேலையோ, டிரைவர் வேலையோ தருவான். டீக்கடை டீ ஷாப் ஆகும். சினிமா கொட்டகைகள் ‘சினிப்ளக்ஸ்’ ஆகும்.  இட்லிக்கடை பீட்ஸா கார்னராகும். எல்லாம் முடிந்ததும் வேறு ஊருக்குப் போய் ‘டெண்ட்’ அடிப்பான். அதற்குள் நம்முடைய ஊர் ஒட்டுமொத்தமாக சுரண்டப்பட்டு பாலைவனமாகி இருக்கும். நேரடியாக சொல்லாமல் ‘ஷாங்காய்’ இந்த மறைமுகக்கதையைதான் பார்வையாளனுக்கு புரியவைக்க முயற்சிக்கிறது.

மஹாராஷ்டிர மாநில அரசு, பாரத் நகர் என்கிற இரண்டாம் கட்ட நகரமொன்றில் ‘இண்டர்நேஷனல் பிசினஸ் பார்க்’ என்றொரு சொர்க்கத்தை நிறுவ முயற்சிக்கிறது. இம்முயற்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களிடம் பரவலான வரவேற்பு. மாநகரமயமாக்கலின் பொருளாதார, அதிகாரப் பலன்களை ஆளும் கட்சி, முதலாளிகளோடு பகிர்ந்துக் கொள்ளும் நோக்கத்தில் இதை கனவுத்திட்டமாக விளம்பரப் படுத்துகிறார்கள். இது வந்துவிட்டால் எல்லாமே மாறிவிடும் என்று உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் நம்புகிறார்கள். இம்மாதிரியான வளர்ச்சியின் பாதகங்களை உணர்ந்த சமூகசேவர்கள் சிலர் இதை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள்.

தடை செய்யப்பட்ட புத்தகம் ஒன்றினை எழுதியவரான டாக்டர் அகமதி இதற்காக பாரத் நகருக்கு வருகிறார். ஆளுங்கட்சி தனது தொண்டர்களின் மூலமாக விபத்து ஒன்றினை உருவாக்கி அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர் மருத்துவமனையில் இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைத்து இச்சம்பவத்தை முடக்க நினைக்கிறது அரசு. விசாரணை செய்யும் அதிகாரி கொஞ்சம் நேர்மையானவர் (நம்மூர் சகாயம் மாதிரி). ஏனென்றே தெரியவில்லை. அவர் தமிழ் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்படுகிறார். டாக்டரின் ஆதரவாளரான ஒரு பெண்ணும், உள்ளூர் அஜால் குஜால் போட்டோகிராபர் ஒருவரும் சூழல் கட்டாயங்களின் பேரில் இணைந்து, இது கொலைமுயற்சி என்பதற்கான ஆதாரங்களை திரட்டுகிறார்கள். ஆதாரங்களைப் பெறும் அரசு இயந்திரம் என்ன செய்யும், விளைவுகள் என்னவென்பது ‘க்ளைமேக்ஸ்’.

‘த்ரில்லர்’ என்று சொல்லிக்கொண்டால் படம் பார்ப்பவர்களுக்கு ‘த்ரில்’ இருக்க வேண்டுமில்லையா? அது சுத்தமாக இல்லாத படம். மிக மெதுவாக, விஸ்தாரமாக விரியும் காட்சிகள். ஆவணப்படங்களுக்கான பாணியில் கேமிரா கோணங்கள். பாடல் காட்சிகள் தவிர்த்து, மற்றபடி சினிமாத்தனமற்ற இசை. யதார்த்தத்தை எவ்வகையிலும் மீறிவிடக்கூடாது என்கிற அச்ச உணர்வுடனேயே, ஒவ்வொரு காட்சியையும் மிகக்கவனமாகப் படமாக்கியிருக்கிறார்கள். நக்ஸல்பாரிகள் படமெடுத்தால் எப்படியிருக்குமென்ற கேள்விக்கு இப்படத்தை விடையாக சொல்லலாம்.

அரசியல் கட்சி மெக்கானிஸம் – அதுவும் ஆளுங்கட்சியாக இருந்தால் – எப்படி இயங்குமென்பதை துல்லியப்படுத்தி இருக்கிறார்கள். அதிகாரத்துக்கு சோரம் போகும் புரோக்கர்களையும் தெளிவாக அம்பலப்படுத்தப் படுகிறார்கள். இப்படிப்பட்ட படத்தை தயாரிக்க எப்படி மத்திய அரசு நிறுவனமான என்.எஃப்.டி.சி. பணம் கொடுத்தது என்பது ஆச்சரியம்தான். தணிக்கைக் குழு அனுமதித்திருப்பது மற்றொரு ஆச்சரியம். இப்படத்தை வெளியிட சிலர் உயர்நீதிமன்றத்தில் தடைகோரியதாக தெரிகிறது. கோர்ட் தடைவிதிக்க மறுத்து இருப்பது ஆச்சரியங்களிலும் பெரிய ஆச்சரியம்.

பத்தரை கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், மேல்தட்டுப் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று ஐந்து நாட்களிலேயே இருபத்தோரு கோடி வசூலித்திருக்கிறது. விமர்சகர்கள் ஒரேகுரலில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு ‘ஐரனி’ என்னவென்றால், இப்படம் சுட்டிக்காட்டும் சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள்தான் இப்படத்தை இப்போது பெரிதும் கொண்டாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எளிய, கீழ்த்தட்டு மக்களுக்கு புரியும்படியான கலைமொழி இப்படத்துக்கில்லை என்றே சொல்லலாம். மற்ற பெரிய இந்திப்படங்களைப் போல மண்டலமொழிகளில் ‘டப்’ செய்யப்படாமல், நேரடியாக திரைக்கு வந்திருப்பதும் பெரிய குறை. இந்தி தெரியாத மாநிலங்களில் வெளியிடும்போது, குறைந்தபட்சம் ‘சப்-டைட்டில்’ ஆவது சேர்க்க முயற்சிக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், ஷாங்காய் இந்திய சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட நேர்மையான முயற்சிகளுள் ஒன்று என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

12 ஜூன், 2012

உலகம் சுற்றும் வாலிபன்


'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம். தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது. உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
 இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.
 * இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.
 * தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
 * லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.
 * மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
 * சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.
 * இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.
 * வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை. சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.
 * படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால் செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.
 * "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.
 * பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக் காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.." என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில் கொடிகட்டிப் பறக்கும்.
 * தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
 * படத்தின் படப்பிடிப்பின் போது தலைவர் திமுகவில் இருந்ததால் ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும் பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
 * படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.
 * கடைசியாக ராஜூ கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு ஃப்ளைட்டில் ஏறும்போது லதா, சந்திரகலா இரண்டு ஃபிகர்களையும் ஓட்டிக்கொண்டு போவார். ராஜூவுக்கு திருமணம் ஆனது தெரியாமல் லதாவிடம் அவரது அண்ணி மஞ்சுளா செய்த சத்தியத்துக்காக துணைவியாராக ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியவில்லை.

11 ஜூன், 2012

‘காதலி’ காவ்யா


லெட்டரை நீட்டியவன் ஜொள்ளை துடைத்துக்கொண்டே சொன்னான்.

“உடனே பதில் கொடுக்கணும்னு அவசியமில்லை காவ்யா. என் காதலை ஏத்துக்கிட்டேன்னா நாளைக்கு மஞ்சக்கலர் சுடிதார் போட்டுக்கிட்டு வா. புரிஞ்சுக்கறேன்”

மறுநாள் காவ்யா மஞ்சள் சுடிதார் போட்டிருந்தாள். ஆனால் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

இவன் இன்னொருவன்.

“காவ்யா ஐ லவ் யூ”

மையமாக நாணத்தோடு சிரித்தவாறே நகர்ந்தாள். ‘எகிறிக் குதித்தேன், வானம் இடித்தது’ என்று பாடிக்கொண்டே துள்ளிக்கொண்டு சென்றான். அடுத்தடுத்து இவனைப் பார்க்கும்போதெல்லாம் அதேமாதிரி சிரித்து வைக்கிறாள். ஆனால் காதலிக்கிறாளா என்பதை மட்டும் சொல்லித் தொலைக்க மாட்டேன் என்கிறாள்.

இது மற்றுமொருவனின் கதை.

“டேய் எனக்கு வண்டி ஓட்டச் சொல்லித் தர்றியாடா...”



“சொல்லிக் கொடுக்கறேன். ஆனா நீ என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கணும்”

இதற்கும் அதே நாணச்சிரிப்பு.

இப்போதெல்லாம் காவ்யா ஹோண்டா ஆக்டிவாவில் அசுரவேகத்தில் பறக்கிறாள். வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுத்தவனோ, இவள் தன்னைக் காதலிக்கிறாளா என்பது தெரியாமல், கிருக்கல் அடித்துப்போய் ஃபாலோ செய்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு பெண்ணுக்கு அதிகபட்சம் எத்தனை காதல் கடிதம் வந்திருக்கும்? ஐந்து, பத்து, ஐம்பது.. ஒரு எண்ணிக்கைக்கு நூறு என்றுகூட வைத்துக் கொள்ளலாம். வயதுக்கு வந்த முதல் நாளிலிருந்து, தனது இருபத்தைந்தாவது பிறந்தநாள் வரை காவ்யாவுக்கு வந்த காதல் கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே நாலாயிரத்து எழுநூற்றி நாற்பத்தி ஐந்து. வாய்மொழியாக சொல்லப்பட்ட ‘ஐ லவ் யூ’க்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. சரியான தரவுகளோடு கூடிய ஆதாரங்கள் இல்லாததால் மட்டுமே கின்னஸ் சாதனை புத்தகத்துக்கு காவ்யாவின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.

அவளுக்கு முதன்முதலாக காதல் கடிதம் கொடுத்தவன் அருணகிரி. விஜயகாந்த் ரசிகனான அவனது கடிதம் இவ்வாறு தொடங்கியது. ‘வானத்தைப் போல’ மனம் படைத்த ‘சின்னக் கவுண்டரான’ ‘ஹானஸ்ட் ராஜ்’ நான். உன் ‘ஊமை விழிகள்’ பேசும் காதல்மொழியால் ’சக்கரை தேவன்’ ஆனேன். ‘தர்ம தேவதை’யும் ‘நவக்கிரக நாயகி’யும் ஆன உன்னை...” – இப்படியே அச்சுபிச்சுவென ஏதோ எழுதித் தொலைத்திருந்தான். கடிதத்தைப் படித்ததுமே ‘களுக்’கென்று சிரித்துவிட்டாள். அந்த சிரிப்பை தனது காதலுக்கான பச்சைக்கொடியாக அவன் எடுத்துக் கொண்டான்.

கோணைமூஞ்சி அருணகிரியின் கடிதத்துக்கே எந்த மறுப்பையும் காவ்யா சொல்லவில்லை என்கிற தைரியத்தில் பள்ளியில் படித்த அத்தனை பேரும் அவளுக்கு இதே ரீதியில் கடிதம் கொடுக்கத் தொடங்கினார்கள். அவளைவிட வயது குறைந்த பயல்கள் கூட காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.


எந்தக் காதலையும் காவ்யா வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நேரடி மறுப்பையும் யாருக்கும் சொன்னதில்லை. நம் காதலர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. கடிதம் கொடுத்தால் குறைந்தபட்சம் செருப்படியோ, கன்னத்தில் அறையோ இவளிடம் கிடைப்பதில்லை.

அவள் கல்லூரிக்கு சென்றபோதும், பிற்பாடு அலுவலகத்துக்குப் போனபோதும் கூட இதே ‘ட்ரெண்ட்’ தொடர்ந்தது. அவளுடன் பழகும் ஒவ்வொரு ஆணுமே, தன்னை காதலிப்பதாக உணர்த்தும் வகையில் தன் இயல்பை வேண்டுமென்றே மாற்றிக் கொண்டாள். நூற்றுக்கணக்கானோரை தன்னை சின்சியராக காதலிக்க வைத்த காவ்யாவுக்கு ஏனோ ஒருவனை கூட திருப்பிக் காதலிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் வந்ததேயில்லை.

போனவாரம் காவ்யாவுக்கு திருமணம் நடந்தது. ஜாதகம், பெயர் ராசி என்று எல்லாப் பொருத்தமும் சோதித்து வீட்டில் பார்த்து வைத்த ‘அரேஞ்ஜ்டு மேரேஜ்’. இப்போது ஊரில் குறைந்தது ஆயிரம் காதலர்களாவது ‘காதல்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி போல ‘ங்கை... ங்கை...’ என்று தலையில் குத்திக்கொண்டே சேது மாதிரி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.