புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 ஆகஸ்ட், 2014

அழைத்தார் பிரபாகரன்

ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ்’வென்று இருக்கும்.

பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அன்றைய நாட்களை எப்படி இவ்வளவு துல்லியமாக நினைவுக்கு கொண்டுவந்து ஜப்பார் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்ற நாளிலிருந்து அவர் சந்திக்க நேர்ந்த மனிதர்கள், இடங்கள், உண்ட உணவு, அடைந்த உணர்வு என்று அனைத்தையுமே அங்குல அங்குலமாக நாமே நேரில் சென்று வந்ததைப் போன்ற உணர்வை தரும் விவரிப்பு. இன மேலாதிக்க மனோபாவ நாடுகளின் சதியால் முற்றிலுமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்டுவிட்ட ‘தமிழ் ஈழம்’ என்கிற தமிழர்களின் நாடு எப்படியிருந்தது என்பதற்கு வரலாற்று சாட்சியாக, ஆவணமாக இந்நூலை கொடுத்திருக்கிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தவற்றையெல்லாம் எழுதி பக்கத்தை கூட்டவில்லை. அதையெல்லாம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகளில் நாம் வாசித்துவிட்டோம். தொலைக்காட்சியில் பார்த்துவிட்டோம். எனவே அதை மிகக்கவனமாக தவிர்த்திருக்கிறார். இந்நூலின் நாற்பத்தியெட்டு பக்கங்களுமே இதுவரை நாமறியாத சம்பவங்களை எக்ஸ்க்ளூஸிவ் தன்மையோடு கொடுக்கிறது.

அய்யாவுக்கு விருந்தோம்பல் செய்ய பணிக்கப்பட்ட பெண்புலி, ஊன்றுகோல் கொண்டு சிரமப்பட்டு நடந்தாலும் முகத்தில் நிரந்தரப் புன்னகையோடு வலம் வந்த தமிழ்ச்செல்வன், அய்யாவை ஆரத்தழுவி வரவேற்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், அய்யாவை வழியனுப்பி வைக்க பணிக்கப்பட்ட இளைஞர் பவநந்தன் என்று அப்பயணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அழுத்தமான சித்திரங்களை நம் மனதில் உருவாக்குகிறார்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களில் அய்யா ஜபாரை மட்டும் தனியாக அழைத்து பிரத்யேகமாக சந்தித்தார் பிரபாகரன். “உங்களுடைய ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரோடு பிரபாகரன் நிகழ்த்திய உரையாடல்தான் நூலின் மையச்சரடு.

அந்த அற்புத நேரத்தை இவ்வாறாக விவரிக்கிறார்.

குழந்தையைப் போல ஓடிச்சென்று கடிப்பிடிக்க ஆசை. ஆனால் ஆயுதமேந்திய அந்த இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும் எண்ணத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சிலையாக நின்றேன். என்னை நெருங்க, நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது. நெருங்கி வந்து அப்படியே கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில். இன்னும் பிடி இறுகுகிறது. “நான் உங்கள் பரம ரசிகன் அய்யா” என்கிறார்.

உறவுகளிடம் விடை பெற்று நாடு திரும்பும்போது ஓர் இராணுவ அதிகாரியோடு அய்யாவின் உரையாடல்.

“பிரபாகரன் எப்படி இருக்கிறார்?”

“நன்றாக இருக்கிறார்”

“ஓ. நாங்கள் இலங்கையர். அதனால் சகோதரர்கள். ஆனால் விதியின் குரூரம் நாங்கள் எதிரெதிர் முகாம்களில் இருக்கிறோம்”

“ஆம். அப்படிதான்”

“உங்களுக்கு ஒன்று தெரியுமா, இஸ்ரேலின் மோஷே தயானுக்கு பிறகு ராணுவ திட்டமிடலில் பிரபா வல்லவர். அவரைப்பற்றி நான் பெருமைப்பட வேண்டும்”

அனேகமாக ராஜபக்‌ஷேவும்கூட இந்த அதிகாரியை போலதான் பிரபாகரனை மதிப்பிட்டிருப்பார். இதைவிட வேறென்ன பெருமை வேண்டும் நமக்கு?

நூல் : அழைத்தார் பிரபாகரன்
எழுதியவர் : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
பக்கங்கள் : 48
விலை : ரூ.50
வெளியீடு : தமிழ் அலை, 80/24-B, பார்த்தசாரதி பேட்டை தெரு,
தேனாம்பேட்டை, சென்னை-600 086.
போன் : 044-24340200 மின்னஞ்சல் : tamilalai@gmail.com

நூல் வெளியீட்டு விழா 03-08-2014, ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துக் கொள்ளலாம்.

28 ஜூன், 2014

துலக்கம்

அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் காணோம் என்றாலே கண்டுபிடிப்பது கடினம். இவனோ ஆட்டிச பாதிப்பில் இருப்பவன். ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லாதவர்களைப் பொறுத்தவரை அவன் மனநிலை பிறழ்ந்தவன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு பழகிய அனுபவம் கொண்டவரான பாலபாரதி இந்த செய்தியை ஓர் இணையத்தளத்தில் வாசிக்கிறார். அவருக்குள் ஒரு குறுநாவலுக்கான கரு தோன்றுகிறது. அதுதான் ‘துலக்கம்’.

சமீப பத்து, பதினைந்து வருடங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு மாற்றங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டு வருகிறது. வாழ்வு குறித்த புரிதல்களை தெளிவாக்கிக் கொண்டு, அதை எதிர்கொள்வது குறித்த தீர்வுகளை முன்வைப்பதே பொதுவாக இலக்கிய நாவல் மரபு. உயர்தர மொழி கட்டமைப்பில், எளிய வெகுஜனவாசகர்கள் சுலபத்தில் அணுகிவிட முடியாதபடி, அறிவுஜீவிகள் பொத்தி பொத்தி பாதுகாத்த இலக்கியம் இன்று அனைவருக்குமானதாக மாறிவருகிறது. குறிப்பாக சிறு பத்திரிகைகள் தங்களுடைய கறார்தன்மையில் சமரசம் செய்துகொண்டு ‘எல்லோருக்குமானது இலக்கியம்’ என்று செயல்பட துவங்கியிருக்கும் காலக்கட்டம் இது. இதன் மூலமாக இதுவரை தீவிர இலக்கியம் என்று பேசப்பட்டதற்கும், வெகுஜன வாசிப்புக்கான எழுத்துகளுக்கும் இடைநிலையில் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஏராளமாக உருவாகி வருகிறார்கள். மரபான நாவல்முறையை உடைத்து புதிய வடிவங்களை முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பின்நவீனத்துவ எழுத்தாளர்களும் இதே காலக்கட்டத்தில்தான் கோலோச்சி வருகிறார்கள் என்றாலும், அவர்கள் வேற்றுக்கிரகத்தில் வாழ்பவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம்.

இந்த புதிய போக்கில் பத்திரிகையாளர்களும் புனைவிலக்கியம் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பியிருப்பது ஒரு முக்கியமான திருப்பம். குறிப்பாக பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற எழுத்தாளர் மனோஜை குறிப்பிடலாம். முக்கியமான சிறுகதைகள் சிலவற்றை தமிழில் எழுதியிருக்கும் இவரது எழுத்துப்பாணி ‘ரிப்போர்ட்டிங் ஸ்டைல்’ என்று சொல்லக்கூடிய வெகுஜன பத்திரிகை நடையில், இதுவரை இலக்கியம் என்று நம்பப்பட்ட மதிப்பீடுகளை கதையாக்குவது. ‘துலக்கம்’ நாவலையும் இந்த வகையில் சேர்க்கலாம். யெஸ்.பாலபாரதியும் சுமார் பதினைந்து ஆண்டுகால பத்திரிகையுலக அனுபவம் கொண்டவர். குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபோது அதை நேரடியாக அங்கேயே சென்று, குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு ரிப்போர்ட்டிங் செய்தவர்.

‘துலக்கம்’ – காணாமல் போன ‘அஸ்வின்’ என்கிற சிறுவனைப் பற்றிய துல்லியமான ரிப்போர்ட்டிங். இருவேறு கிளைகளில் பிரிந்து பயணிக்கும் கதையை, கடைசி அத்தியாயத்தில் ஒன்றிணைக்கும் வழக்கமான பாணிதான் என்றால், பத்திரிகையாளருக்கே உரிய விவரணைகளோடு ‘ஆட்டிஸம்’ என்கிற மனகுறைபாடு குறித்த பார்வையை எல்லோருக்குள்ளும் ஆழமாக விதைக்கிறது.

நகரில் கள்ளநோட்டு கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கிறது. சுமார் நாற்பது பேர் கொண்ட கும்பல் இதற்காக நகரெங்கும் ஊடுருவியிருப்பதாக ஒரு தகவல். இத்தகைய சூழலில் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒரு சிறுவன் மாட்டுகிறான். தோற்றத்திலும், நடவடிக்கையிலும் வித்தியாசமாக தோன்றும் அவன்மீது சந்தேகப்படுகிறார்.

இதே நேரம் சென்னை புறநகர் மடிப்பாக்கத்தில் கல்யாண் என்பவர் தன்னுடைய மகன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அவனுக்கு ஆட்டிசப் பாதிப்பு இருப்பதாக விசாரணையில் கூறுகிறார். புகாரை வாங்கும் போலிஸ்காரர்களோ ஆட்டிஸம் என்பதை மனநிலை தவறியதாக புரிந்துக் கொள்கிறார்கள். இப்படியாக இரண்டு டிராக்குகளில் கதை நகர்கிறது.

முருகன் தன்னிடம் மாட்டிய சிறுவனை விசாரிக்கும் முயற்சியில் ‘ஆட்டிஸம்’ பற்றி அறிந்துக் கொள்கிறார். கல்யாண் தன்னுடைய மகன் தொலைந்த சோகத்தில் இருக்கும்போது ப்ளாஷ்பேக்கில், தன் குழந்தைக்கு ஆட்டிஸம் என்று கண்டறிந்ததில் இருந்து, அதிலிருந்து அவனை மீட்க செய்யும் போராட்டங்கள் என்று கதை விரிகிறது.

துலக்கம் என்கிற சொல்லுக்கு குத்துமதிப்பாக ‘விசாரணை’ என்று பொருள் கொள்ளலாம். ‘துப்புதுலக்குவது’ என்று ஏற்கனவே நமக்கு பரிச்சயமான வார்த்தையில் வரும் ‘துலக்குவது’தான் துலக்கம். ஆட்டிஸம் குறித்த விசாரணை என்று துலக்கத்தின் ஒன்லைனர் அமைந்திருப்பதால், மிக கச்சிதமாக கதைக்கு தலைப்பு பொருந்துகிறது.

கரணம் தப்பினாலும் டாக்குமெண்டரி ஆகிவிடக்கூடிய கதையை சுவாரஸ்யமான நடையில் சிறப்பான நாவலாக உருவாக்கியிருக்கிறார் பாலபாரதி. அனேகமாக ‘ஆட்டிஸம்’ குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவலாக இதுவாகதான் இருக்கக்கூடும். எழுதத் தெரிந்த யாருமே எதைப்பற்றியும் எழுதிவிடலாம் என்று தன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மையில் இம்மாதிரி குறிப்பிட்ட ஒரு பிரச்சினை சார்ந்த எழுத்தை எவ்வித தர்க்கப்பிழையுமின்றி எழுதுவதற்கு சலிக்காத உழைப்பும், அப்பிரச்சினை குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும். பாலபாரதிக்கு இருந்திருப்பதால் ‘துலக்கம்’ சாத்தியமாகி இருக்கிறது. எளிதில் வாசிக்கக்கூடிய நடையை மிகக்கவனமாக அவர் தேர்ந்தெடுத்திருப்பதற்கு பின்னால், ‘ஆட்டிஸம்’ குறித்த விழிப்புணர்வு எல்லா தரப்புக்கும் போய்ச்சேர வேண்டும் என்கிற அக்கறை இருப்பதை உணரமுடிகிறது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு வாசித்தாலும் குறைகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கச்சிதமான எடிட்டிங். சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்துக்கு மட்டுமல்ல, சமூகம் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சினை குறித்த புரிதலுக்காகவும் துலக்கத்தை அனைவரும் வாசிக்கலாம்.

நூல் : துலக்கம்
எழுதியவர் : யெஸ்.பாலபாரதி
பக்கங்கள் : 128
விலை : ரூ.85
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணாசாலை, சென்னை-600 002
போன் : 044-42634283/84 மின்னஞ்சல் : books@vikatan.com

‘துலக்கம்’ நூல் வெளியீடு, நாளை மாலை சென்னையில் நடக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

26 மார்ச், 2014

மரணருசி

“வீட்டில் நான் இல்லாதபோது, நான் இருக்கிறேனா என்று யாராவது கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். இதுபோல நாம் ஏராளமான இடங்களில் இருக்கிறபோதே ‘இல்லை’ ஆகிக்கொண்டிருக்கிறோம். இந்த இன்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நாம், என்றோ ஒருநாள் நிரந்தரமாக உலகில் ‘இல்லை’ எனப்படும் மரணம் குறித்துதான் எப்பவும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம்”

‘கதைகள் பேசுவோம்’ இலக்கிய முகாமில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோதே, அங்கு வந்திருந்த சில பத்திரிகையாளர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துகொண்டிருந்தது. சகோதரர்களான இரு மூத்த பத்திரிகையாளர்களின் தாயார் காலமாகி விட்டார். உடனடியாக செங்கல்பட்டிலிருந்து கிளம்பிவந்து, இறுதிமரியாதையில் கலந்துகொள்ள சாத்தியமில்லை.

மறுநாள் அண்ணன் சிவராமனோடு துக்கம் விசாரிக்க சென்றிருந்தேன். மொட்டை அடித்திருந்தவர் மெதுவாக பேச ஆரம்பித்தார். “நமக்கு இந்த நம்பிக்கையெல்லாம் இல்லைன்னா கூட, அம்மாவுக்கு இதில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. அதனாலே அவங்க ஆசைப்பட்டமாதிரியே அனுப்பி வெச்சிட்டோம்”

மரணத்துக்கு முன்பாக சில காலம் அவரது தாயார் அனுபவித்த உடல் உபாதைகள், அதன் விளைவாக அவர் மற்றவர்களை சிறுசிறு தேவைகளுக்காகவும் அணுகவேண்டியதினால் ஏற்பட்ட சுயமரியாதை தொடர்பான உளவியல் சிக்கல், மருத்துவ சிகிச்சைகள் என்று பேசிக்கொண்டே இருந்தார்.

சட்டென்று கண்கலங்கியவர் சிறுவயது நினைவுகளுக்குள் நுழைந்தார். தன்னையும், தம்பியையும் அவர் வளர்த்த விதம், தொடர்பான சம்பவங்கள் என்று முன்பின்னாக சொல்லத் தொடங்கினார். தன்னுடைய தாயாரின் நுண்ணுணர்வு குறித்து அவர் சொன்ன தகவல்கள், கேட்பவர்களுக்கு கொஞ்சம் அமானுஷ்யமான தன்மையை தரும். எத்தனையோ வருடங்களுக்கு முன்பாக யதேச்சையாக வீட்டுக்கு வந்தவர்களை, பல வருடங்கள் கழித்து சந்தித்தாலும் துல்லியமாக முந்தைய சந்திப்பின்போது நடந்தவை, பேசியவற்றையெல்லாம் நினைவுகூர்வார் என்றார். அவர் கற்ற கல்விக்கும், வெளியுலக அனுபவத்துக்கும் சற்றும் தொடர்பில்லாத துல்லியமான கேள்விகளை மற்றவர்களிடம் எழுப்பக்கூடியவராக வாழ்ந்திருக்கிறார்.

எண்பத்தேழு வயது தாயை பற்றி அவரால் எண்ணூறு பக்கங்களுக்கு எழுதக்கூடிய நினைவுப்பொக்கிஷங்கள் நிறைய இருக்கிறது என்று தெரிந்தது. மரணம் ருசித்த ஒரு முழு மனிதர் ஒட்டுமொத்தமாக, உலகில் எந்த தடயமுமின்றி இல்லாமல் போய்விடுவதில்லை. நினைவுகள் வாயிலாக உற்றார், உறவினரிடம் சில காலத்துக்கு அவர் இருந்துக்கொண்டுதான் இருக்கப்போகிறார்.

அன்றிரவு எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’ வாசித்தேன்.

நாவலின் முதல் வரியிலேயே நாயகன் சம்பத் மரித்துப் போகிறான். அவனோடு கல்லூரியில் படித்த மூன்று நண்பர்கள் கானகத்துக்குள் நடந்துக்கொண்டே இருக்கிறார்கள். சம்பத்தின் மரணம் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமான மனப்பிறழ்வுக்கு ஆளாக்கியிருக்கிறது. அந்த கானகத்துக்குள் தங்கியிருந்த நாட்களில், அவர்களது ஒவ்வொருவரின் மீள்பார்வையாக நாவல் விரிகிறது. இடையில் சம்பத்தின் மனைவி, முன்னாள் காதலி ஆகியோரும் அவரவர் தொடர்புடைய சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதாக, கிட்டத்தட்ட ‘ரோஷோமான்’ உத்திகொண்டு நாவல் பின்னப்பட்டிருக்கிறது.

சம்பத் குறித்த குழப்பமான பிம்பமே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. வாசிப்பவர்களுக்கும் அந்த பாத்திரத்தை எடைபோடுவதில் சிக்கல் ஏற்பட்டு தத்தளிப்பதை எழுத்தாளர் விஷமப் புன்னகையோடு ரசிக்கிறார். ஒரு கட்டத்தில் உலகத்திலேயே இவன்தான் புத்திசாலி என்று கருதக்கூடியவனாக இருக்கிறான். மறு சந்தர்ப்பத்தில் அவன் மனநோயாளியா என்று சந்தேகிக்கக்கூடிய சாத்தியங்கள் தோன்றுகிறது. சம்பத்தோடு வாழ்ந்த அவனுடைய மனைவிக்கே கூட இறந்தபின்னும் அவனை எப்படி எடுத்துக் கொள்வது என்கிற குழப்பம் இருக்கிறது. பாதசாரி எழுதிய காசியின் தாக்கம் சம்பத்துக்கு உண்டு என்று எஸ்.ரா சொல்கிறார்.

கல்லூரி நாட்களில் கதாநாயகனாக பார்க்கப்பட்ட சம்பத் காட்டாறாய் வாழ்ந்து தனக்கும் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளையும், சொல்லவொண்ணா துயரங்களையும் சரிபாதியாய் வழங்குகிறான். மனம்போன போக்கில் வாழவிருப்பப்படும் சம்பத்துக்கு குடும்பமும், சமூகமும் தடைகளாக தோன்றியிருக்க வேண்டும் என்று நாம் யூகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இரத்தம் சுண்டத் தொடங்கும் நடுத்தர வயது காலக்கட்டத்தில் காமத்தின் தேவைக்காவும், வாழ்க்கைத் துணைக்காகவும் திருமணம் செய்துக் கொள்கிறான். அவன் அன்பான கணவனா அல்லது சைக்கோவா அல்லது இரண்டுமேவா என்கிற தெளிவு நாவல் முடிந்தபோதும் நமக்கு ஏற்படுவதில்லை. ஐந்து பேர் அவனது வாழ்க்கையை அக்குவேறு ஆணிவேறாக அலசியும் கடைசிவரை சம்பத் ஒரு மர்மப் பாத்திரமாகவே, விளங்காத புதிராகவே இருப்பதுதான் நாவல் தரும் சுகமான சுவாரஸ்யம்.

இந்நாவல் மரணம் குறித்த விசாரணைகளை விஸ்தாரமாக அலசுகிறது. நவீன மனிதவாழ்வு மரணங்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. மரணவீட்டின் அபத்தத்தை கேலி பேசுகிறது (உதா : கணவன் பிணமாக கிடக்கிறான். தலைமாட்டில் அமர்ந்திருக்கும் மனைவிக்கு சிறுநீர் முட்டிக்கொண்டு வருகிறது). மரணத்துக்கு முன்னான நோய்மைக்காலத்தை வலியோடு எழுதுகிறது. மருத்துவமனை வராண்டாவில் இருவர் நடக்கும் காட்சியை, ‘நாங்கள் நோய்மையின் தாழ்வாரத்தில் நடந்துக்கொண்டிருந்தோம்’ என்று விவரிக்கிறார் எஸ்.ரா.

நாவலை வாசித்து முடித்ததுமே இதுதான் தோன்றியது. சாதாரண மனிதனின் மரணம் ஒன்றும் சமூகத்துக்கு அவ்வளவு முக்கியமான நிகழ்வு அல்ல. நாம் அச்சப்படக்கூடிய அளவுக்கு நம்முடைய மரணம் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடாது. பைக் பஞ்சர் ஆனதுமே, கடையில் கொடுத்து பஞ்சர் ஒட்டி ஓட்டிக்கொண்டு செல்வதைப் போல, நம்முடைய மரணத்துக்குப் பிறகு ஒரு சில நாள் சோகத்தை முடித்துக்கொண்டு காரியம் செய்துவிட்டு சுற்றமும், நட்பும் வழக்கம்போல வாழத் தொடங்கிவிடும். மிகக்குறைவான நபர்களின் நினைவில் மட்டுமே மரணத்துக்குப் பிறகும் சில காலம் நாம் வாழக்கூடும்.

மரணம் ஒரு சலுகை தருகிறது. வாழும்போது நாம் செய்த காரியங்களில் பெரும்பாலான கெட்டதை எல்லாம் அழித்துவிட்டு, நல்லதை மட்டுமே மற்றவர்களின் நினைவுகளில் உலவவிடுகிறது. மரணித்து விட்டவர்கள் மீது யாருக்கும் கறாரான விமர்சனங்கள் இருப்பதில்லை.
நூல் : உறுபசி
எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 136
விலை : ரூ.110
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018.
போன் : 044-24993448

4 பிப்ரவரி, 2014

நேர்மையான பெண்மொழி

“நாப்கின் வாங்கவும் பணம் இன்றி நாதியற்றுப் போன நாட்களில்... நானும் பேசாம ஆம்பளப் புள்ளையா பொறந்திருக்கலாம் என நினைத்து அழுதிருக்கிறேன்... என் உள்ளாடைக் கிழிசலைப் போலவே, என் அப்பாவைப் பற்றிய ரகசியமும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது”

இந்த வரிகளை வாசித்து கடக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பிடித்தது. ஓரிரவு தூக்கம் சிந்தனையிலேயே சிதறியது. ‘ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும்’ என்பதெல்லாம் அலங்காரத்துக்கு சொன்னது அல்ல. அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் என்று எந்தப் பெண்ணைப் பற்றியுமே எந்த ஆணுக்கும் எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. இத்தனைக்கும் நம் வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித காலத்தை குடும்பம், பள்ளி, கல்லூரி, பணியிடம், வெளியிடம் என்று பெண்களோடுதான் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் பெண்ணை பற்றி நமக்கு –அதாவது ஆண்களுக்கு- என்ன மாதிரியான புரிதல் இருக்கிறது?

தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’ ஓரளவுக்கு தெளிவு கொடுக்கிறது. மனரீதியாக தானே தன்னை பெண்ணாக உணர்ந்தால்தான் அப்படிப்பட்ட ஒரு அற்புத நூலை வரலாறு, உளவியல், சமூகம் என்று அத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கி எழுதியிருக்க முடியும்.

அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, சித்தி, அத்தை என்று பிறந்ததிலிருந்தே நிறைய பெண்களின் மத்தியில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போதும் என் வீட்டில் ஏழு பெண்கள், இரண்டே இரண்டு ஆண்கள்தான். பெட்டிகோட், நைட்டி, புடவை, பூ, குங்குமம், சாந்து, பொட்டு, சீப்பு, லிப்ஸ்டிக் முதலான மேக்கப் சாதனங்கள் என்று எப்போதும் என் வீட்டில் பெண்வாசனைதான் வீசிக்கொண்டிருக்கும். ஏராளமான அண்ணிகள் (சட்டென்று எண்ணிக்கையே சொல்லமுடியாத அளவுக்கு). கடந்த இருபத்தைந்து வருடங்களாக சீரான இடைவெளியில் அவ்வப்போது எங்கள் குடும்பத்துக்கு ஒரு வெளி பெண் வாழ வந்துக்கொண்டே இருக்கிறார். மொத்தமாக இவர்கள் அத்தனை பேரிடமும் சேர்த்து நான் இதுவரை நூறு வார்த்தைகள் பேசியிருந்தாலே அதிகம். வெளி பெண்களிடம், சக மாணவிகளிடமெல்லாம் எப்படி பழக வேண்டும், பேசவேண்டும் என்றெல்லாம் கண்டிப்பான கட்டுப்பெட்டித்தனமான அறிவுரைகளோடு வளர்ந்திருக்கிறேன். வயதில் சிறிய பெண்களாக இருந்தாலும் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. நேருக்கு நேராக கண்களை பார்த்து மட்டுமே பேசவேண்டும், தேவையற்ற அரட்டை கூடாது மாதிரி ஏகப்பட்ட நிபந்தனைகளும் விதிமுறைகளும். சிறுவயதில் கூட கல்லாங்கோலோ, தாயக்கட்டையோ அல்லது வேறு விளையாட்டோ விளையாடிக் கொண்டிருக்கும் அக்காக்களை குறிப்பிட்ட சில நாட்களில் தொட்டுப் பேசக்கூடாது என்பார்கள். அப்படி தெரியாமல் தொட்டுவிட்டால் உடனே போய் குளிக்க வேண்டும். ஏன் என்று கேட்டால் பல்லு மேலேயே நாலு போடுவார்கள். என்னை மாதிரிதான் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தில் பிறந்த ஆண்களும். நகரங்களில் மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பங்களில் வளர்ந்தவர்களின் பார்வை சற்று மாறுபட்டிருக்கலாம். இப்படியிருக்கையில் பெண்கள் குறித்து எங்களுக்கு என்ன exposure இருக்க முடியும்? மனைவியே கூட கணவனிடம் முழுமையாக தன்னுடைய பிரத்யேகப் பிரச்சினைகளை பேசுவது கிடையாது.

தங்கள் பிரச்சினைகளாக பெண்கள் இதுகாறும் எழுதியவை அவர்களது நிஜமான பிரச்சினைகளே அல்ல. அவர்களது உள்ளாடைக் கிழிசல் யாருக்கும் தெரியாததை போல, அவர்களும் அவர்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ஆணோ அவன் அன்று உள்ளாடை அணிய மறந்ததை கூட பெருமையாக நாலு பேரிடம் சத்தம் போட்டு சிரித்துக்கொண்டே சொல்கிறான். ஓரளவுக்கு நேர்மையான பெண்மொழி கடந்த கால் நூற்றாண்டுகளாக புதிய தலைமுறை பெண் படைப்பாளிகளிடமிருந்து தீவிரமான வீச்சில் வெளிப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் பலகீனமான குரலாக வெளிப்பட்டு, விரைவிலேயே அடக்கப்படும் நிலைதான் இருந்தது. அல்லது ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் பெண்ணியத்தை, ஆண்களும் சேர்ந்து ஆராதித்தார்கள். வழக்கமான முரணற்ற பாரதியார் பாட்டு வாதங்களும் பட்டிமன்றங்களும், கலகம் செய்ய வாய்ப்பில்லாத மேம்போக்கான எழுத்துகளும், பேச்சுகளுமாகதான் பெண்ணிய சடங்கு நம் மண்ணில் அரங்கேறியது. நம் பெண்கள் அவர்களுக்கு வசதியான மேக்ஸி, நைட்டி போன்ற ஆடைகளுக்கு மாறவே இருநூறு, முன்னூறு வருஷம் ஆகியிருக்கிறது. இன்றைய உடைப்பின் பெருமை தமிழக அளவில் திராவிட இயக்கங்களையும் (பெரியாரிய சிந்தனைகளின் நடைமுறையாக கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை அடிப்படையில்), தேசிய அளவில் பொதுவுடைமை இயக்கங்களையுமே (இண்டு இடுக்கு விடாத தீவிரப் பிரச்சாரம்) சாரும்.
இச்சூழலில்தான் சுமதிஸ்ரீ எழுதியிருக்கும் ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் தமிழ்த்துறை விரிவுரையாளரான இவர் பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பல களங்களில் செயல்படுகிறார். சினிமாவிலும் பாட்டு எழுதியிருக்கிறாராம். காந்திய மக்கள் இயக்கத்தில் மாநில அணி இலக்கியத்தலைவர்.

எங்கள் குடும்பத்தில் யாருக்காவது குழந்தை பிறக்கப் போகிறது என்றால் “மங்கம்மா (எங்கள் குலதெய்வத்தின் பெயர்) வந்து நல்லபடியா பொறக்கணுமுன்னு வேண்டிக்குங்கப்பா” என்றுதான் பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்றாற்போல பெரும்பாலும் எங்கள் அண்ணன், தம்பிகளுக்கு பிறந்ததெல்லாம் மங்கம்மாக்கள்தான். எனக்கும் இரண்டு மங்கம்மா பிறந்திருக்கிறார்கள். இதற்காக யாரும் விசனம் கூட பட்டதில்லை. பெண் குழந்தை பிறந்தால் மகாலட்சுமி பிறந்ததாக மகிழும் ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. கள்ளிப்பால் எல்லாம் எங்கள் ஊரில் நூற்றாண்டுகளாக கேள்விப்படாத சமாச்சாரம். இதற்கு நேரெதிரானது சுமதிஸ்ரீயின் கதை.

ஆண்குழந்தை பிறக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் இருந்த சுமதிஸ்ரீயின் அப்பா, இவர் பிறந்ததால் ஒருமாதிரி விரக்திநிலையில் இவரை வெறுக்கத் தொடங்கியிருக்கிறார். துரதிருஷ்டமாக அடுத்து பிறந்ததும் மகள்தான். எதற்கெடுத்தாலும் அடி. முதல் ரேங்க் எடுக்காதற்காக. சோறு குழைந்ததற்காக. தோழியை வீட்டுக்கு அழைத்து வந்ததற்காக. கவிதை எழுதியதற்காக. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சுமதியை அடிக்க வேண்டும் அவ்வளவுதான். வயசுக்கு வந்தால் அடிக்க மாட்டார்கள் என்று ஏதோ சினிமாவில் டயலாக் கேட்டுவிட்டு, சீக்கிரமாக வரணும் என்று கடவுளை பிரார்த்திக்குமளவுக்கு கொடுமை.

ஒன்பது வயதிலேயே ஒரு முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். திரும்ப பிடித்துவந்து முன்பைவிட மோசமாக சித்திரவதை. ஓரளவுக்கு வளர்ந்தபிறகு ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “நான் இல்லன்னா, உன்னால இப்படி ஒருவேளை சோறு திங்கமுடியுமா?” என்று சொல்லில் நெருப்பை கொட்ட, முழுமையாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஸ்பான்ஸர் பிடித்து கல்லூரியில் சேர்ந்து, கட்டணம் கட்டாததால் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டு, சாப்பிட பணம் கட்டாதவர்கள் பட்டியல் என்று மெஸ் போர்டில் பெயர் எழுதி அவமானப்பட்டு, நல்ல சாப்பாடு சாப்பிட ஒரு விருந்துக்கு சென்று அங்கிருந்தவர்கள் கேலி கிண்டலால் அழுதுக்கொண்டே ஓடி, பிற்பாடு வேலைக்கு சேர்ந்த இடத்துக்கு எல்லாம் சொந்த அப்பாவால் தாறுமாறாக புகார் சொல்லப்பட்டு, காதலித்து மணந்த கணவனின் புகுந்த வீட்டிலும் அப்பாவே வந்து பிரச்சினையென்று பராசக்தி கல்யாணியைவிட வாழ்க்கையின் ஓரத்துக்கு அதிவேகத்தில் ஓடியிருக்கிறார் சுமதிஸ்ரீ. பிற்பாடு ஓர் ஐடியல் அப்பா எப்படியிருக்க வேண்டும் என்று சுமதிஸ்ரீ எழுதிய ‘தகப்பன்சாமி’ என்கிற கவிதை அவருக்கு பலரிடம் பாராட்டும், விருதுகளையும் பெற்றுத்தந்தது. ஆனால் அந்த கவிதையின் ஒரு சொல்லில்கூட அவரது சொந்த அப்பா இல்லை.

வாசிக்கும்போது நம்பமுடியாததாகவும், மிகையானதாகவும் தோன்றும். ஆனால் இதற்கெல்லாம் சாட்சியான மனிதர்கள் –குறிப்பாக சுமதியின் அப்பா- இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். நூலில் இடம்பெற்றிருக்கும் இந்த ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ மிகவும் அழுத்தமான, ஆழமான கட்டுரை. கோடிக்கணக்கான தமிழ்ப் பெண்களின் பிரதிநிதியாக சுமதிஸ்ரீயின் வாழ்வியல் வாக்குமூலம். பச்சாதாபத்துக்காக சுயகழிவிரக்கம் தேடும் நோக்கிலான மிகைத்தன்மை இல்லாமல், இயல்பான பகிர்தலாக, நேருக்கு நேர் பேசும் நேரடி மொழியில் எழுதப்பட்டிருக்கும் பதிவு. சுமதிஸ்ரீ குறிப்பிடும் இச்சம்பவங்கள் கடந்த முப்பது வருடங்களுக்குள்ளாகதான் நடந்திருக்கிறது. ஏதோ குக்கிராமத்தில் பாமரக் குடும்பத்தில் நடந்த விஷயமுமில்லை. பட்டறிவும், பகுத்தறிவும் பெற்றவர்கள்கூட இப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று நம்புபவர்களும் நம்மூரில்தான் இருக்கிறார்கள். குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டதாலேயே தன்னுடைய ரத்தம் என்றும் பாராமல் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.

நூலின் மற்ற கட்டுரைகள் எல்லாமே the girl thing தான். பட்டுப்புடவை மீது மோகம், முதல் விமானப் பயணம், பள்ளி கல்லூரி கலாச்சார விழாக்களில் நடனம், வளைகாப்பு, சினிமாவில் பாடல் எழுதிய அனுபவம், தன்னுடைய குழந்தைக்கு கடிதம் என்று தான் கடந்துவந்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

சுமதிஸ்ரீயின் எழுத்துகளில் வெளிப்படும் பெண்ணியம் முற்போக்கானது என்று சொல்ல மாட்டேன். நீயும் நானும் சமம்தானே, நீ தம் அடித்தால் நானும் அடிப்பேன், நீ தண்ணி அடித்தால் நானும் அடிப்பேன் என்கிற மாதிரி வகை அல்ல. பெண்ணடிமைத்தனத்தை ஒரு வடிவமாகவே அமைத்து வைத்திருக்கும் சமூக அமைப்பையே புரட்டி போடவேண்டும் என்கிற எண்ணங்கள் எதுவும் அவரது எழுத்தில் வெளிப்படுவதாகவும் தோன்றவில்லை. ஆனால் விதிக்கப்பட்ட சமூகத்தில் தன்னுடைய பங்கினை போராடி, சண்டை போட்டாவது வாங்கும் முனைப்பு அவரது எழுத்துகளில் வெளிப்படுகிறது.

இந்நூலை வாசிக்கும் ஆண், பெண் குறித்த தன்னுடைய புரிதலை கொஞ்சம் மீளாய்வு செய்து அப்டேட் செய்துக்கொள்வான். பெண்கள் தங்களுடைய சக பயணியின் அனுபவங்களை வாசித்து, தங்களையும் ஒப்பிட்டுக் கொள்ள முடியும். சிந்தனையை கிளறும் சுவாரஸ்யமான, நேர்மையான எழுத்து. வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் சுமதிஸ்ரீ!
நூல் : என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்
எழுதியவர் : சுமதிஸ்ரீ
பக்கங்கள் : 96
விலை : ரூ.80
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை-600 002.
போன் : 044-42634283/84

27 ஜனவரி, 2014

எக்ஸ்பிரஸ் வேக புத்தகம்

1992. மார்ச் மாத தொடக்கத்தில் தினத்தந்தியில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ரஜினி ஸ்டில்லோடு கவிதாலயாவின் அண்ணாமலை படம் பற்றிய அறிவிப்பு. இயக்கம் வசந்த்.

சல்மான்கான் படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மார்ச் 9 அன்று சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. அங்கே காத்திருந்த கவிதாலயா மேனேஜர், நேராக அவரை பாலச்சந்தரிடம் அழைத்துச் செல்கிறார்.

“வசந்த் விலகிட்டான். அண்ணாமலையை நீ பண்ணு” பாலச்சந்தர் சொன்னபோது சுரேஷ்கிருஷ்ணாவால் நம்பவே முடியவில்லை. கையை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார். ரஜினி ரசிகராக இருந்தாலும் முன்பாக அவர் இரண்டு கமல் படங்களைதான் இயக்கியிருந்தார். தன்னை ஏன் எதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

“ஜூன் ரிலீஸ்னு ப்ளான் பண்ணிட்டோம். தனிப்பட்ட காரணங்களாலே வசந்த் விலகிட்டான். கவிதாலயாவோட மானம் காப்பாத்தப் படணும். நாளை மறுநாள் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. போயஸ் கார்டன் போய் ரஜினியை பார்த்து பேசிடு”

தானாக வந்து பொறியில் மாட்டிக்கொண்டது அப்போதுதான் அவருக்கு புலப்படுகிறது. சூப்பர் ஸ்டாரை முதன்முதலாக இயக்கப் போகிறோம். எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் இரண்டு நாளில் ஷூட்டிங் தொடங்கியாக வேண்டும். எதையும் பேசவிடாமல் நூற்றி ஒன்பது ரூபாய் அட்வான்ஸை கையில் திணித்துவிட்டார் குருநாதர் கே.பி. அவரிடம் பதினாலு படங்கள் வேலை செய்த சிஷ்யர் சுரேஷ் கிருஷ்ணா.

“என்னாலே முடியும் சார். நான் செய்யறேன்” என்று தன்னம்பிக்கையோடு சொல்லிவிட்டு, ரஜினியை காண கிளம்பினார்.

இது அண்ணாமலையின் கதை மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற சாதனை சிகரமான ‘பாட்ஷா’வுக்கும் ‘அ’ன்னா போடப்பட்டது இங்கேதான். தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக அசைக்க முடியாத உயரத்தில் இருக்கும் நடிகர் ஒருவரை, கிட்டத்தில் பார்த்து பேசி அவரை புரிந்துகொண்டு அவர் ஏன் சூப்பர் ஸ்டார் என்பதை பாட்ஷாவின் திரைக்கதை வேகத்தில் எழுதியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவரோடு மூத்தப் பத்திரிகையாளர் மாலதி ரங்கராஜனும் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல் மு.மாறனின் தமிழாக்கத்தில் ‘பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது.

மூன்று மாத கால குறுகிய கால தயாரிப்பாக இருந்தாலும் அண்ணாமலையின் தரம் என்னவென்பதை இருபது ஆண்டுகள் கழித்தும் நாம் இன்றும் உணரமுடிகிறது. நம்மை இன்றும் வசீகரிக்கும் பல காட்சிகளின் பின்னணியை விலாவரியாக விவரித்திருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

குறிப்பாக அண்ணாமலையின் ‘கடவுளே கடவுளே’ பாம்பு காட்சி. ரஜினியின் மீது ஏறிய பாம்புக்கு வாய் தைக்கப்படவில்லையாம். இது படப்பிடிப்பில் ரஜினி, சுரேஷ்கிருஷ்ணா யாருக்குமே தெரியாது. பாம்பை கொண்டுவந்தவரின் கவனக்குறைவால் இது நேர்ந்திருக்கிறது.

சரத்பாபுவிடமும், ராதாரவியிடமும் சவால் விட்டு தொடை தட்டும் காட்சிக்கு வித்தியாசமான டிராலிஷாட் அமைத்திருந்தார். பொதுவாக ட்ராலி நேர்க்கோட்டிலோ அல்லது ரவுண்டிலோ டிராவல் செய்யும். மாறாக இக்காட்சிக்கு முக்கோண வடிவில் ஏற்பாடு செய்திருந்தார் சுரேஷ்கிருஷ்ணா. ரஜினிக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி இது எப்படி திரையில் தெரியப்போகிறது என்பது தெரியாது. ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் இணைந்து சாதனை படைத்த காட்சி இது. கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பல படிகள் நாம் முன்னேறிவிட்டாலும் இன்றும் இந்த காட்சி தரும் அனுபவம் அலாதியானது.

அண்ணாமலை தயாரானபோதே சுரேஷ்கிருஷ்ணாவோடு அடுத்தும் படம் செய்யவேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார். அதுதான் ‘பாட்ஷா’. அவர் சொன்ன கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துவிட்டிருக்கிறது. ஆனால் அதிரடியான அண்ணாமலையை செய்துவிட்டு, அதற்கடுத்து அதைவிட அதிரடியான ‘பாட்ஷா’ என்று இருவரின் கூட்டணியில் வந்தால் சரியாக இருக்காது என்று ரஜினி நினைக்கிறார். dilute செய்வதற்காக ஒரு படம் நாம பண்ணலாம் என்று காமெடி சப்ஜெக்டாக வீராவை கொண்டுவருகிறார். தன்னுடைய படங்கள் என்னமாதிரி வரிசையில் அமையவேண்டும் என்று ரஜினி மெனக்கெட்டிருக்கிறார்.

அண்ணாமலை மாதிரியில்லாமல் வீரா செய்யும்போது ரஜினியோடு சில கருத்துவேறுபாடுகள் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு தோன்றுகிறது. அடிப்படையில் அவருக்கு கதையே பிடிக்கவில்லை. தெலுங்கு ‘அல்லரி மொகுடு’வை தமிழுக்கு கொண்டுவந்தால் சரியாக வராது என்று நினைக்கிறார். ரஜினிக்கு அந்த ஸ்க்ரிப்டில் முழு நம்பிக்கை இருந்தது. இளையராஜா முதலில் போட்ட ட்யூன்களில் ஏதோ குறைகிறது என்பதில் தொடங்கி, பாடல் காட்சிகளுக்கு யோசித்த ஐடியா வரை சுரேஷ்கிருஷ்ணாவுக்கு நிறைய சங்கடங்கள். அதையெல்லாம் எப்படி ரஜினியின் உதவியோடு தாண்டி வெற்றிப்படமாக எடுத்தார் என்பதை எந்த ‘சென்சாரும்’ இல்லாமல், திறந்த புத்தகமாய் எழுதியிருக்கிறார்.

‘பாட்ஷா’ எடுத்தபோது, சூப்பர் ஸ்டாரை கம்பத்தில் வைத்து அடிக்கும் காட்சிக்கு தயாரிப்பாளர் ஆர்.எம்.வீ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ரஜினியை வைத்துதான் இந்தப் பிரச்சினையையும் இயக்குனர் கன்வின்ஸ் செய்திருக்கிறார். படம் எடுக்கும்போதே ரஜினிக்கும், சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் தெரிந்துவிட்டது. இதுதான் தங்கள் வாழ்க்கையின் ‘மாஸ்டர் பீஸ்’ என்று. பாட்ஷா தயாரிப்பில் இருந்தபோது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இருவரும் ‘பாட்ஷா’வாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

பல சிரமங்களை தாண்டி படம் தயார். அன்று மாலை ஆர்.எம்.வீ பார்க்க இருக்கிறார். அதற்கு முன்பாக காலையில் ரஜினி பார்க்கிறார். இரண்டாம் பாதி சரியாக வரவில்லை என்று ரஜினிக்கு தோன்றுகிறது. கையைப் பிசைந்துக் கொண்டிருந்தவருக்கு கை கொடுத்தார் சுரேஷ்கிருஷ்ணா. அவசர அவசரமாக இரண்டாம் பாதியில் பல காட்சிகளை வெட்டி, சில எஃபெக்ட்டுகளை சேர்த்து ஆர்.எம்.வீ.க்கு போட்டு காட்டுகிறார். எடிட்டிங் டேபிளில் தயாரான படம் பாட்ஷா என்கிறார் அதன் இயக்குனர். புத்தகத்தின் க்ளைமேக்ஸான இந்த பகுதி பாட்ஷாவின் க்ளைமேக்ஸுக்கு நிகரான பரபரப்பு கொண்டது.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன்னுடைய காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இயக்குனரில் தொடங்கி மேக்கப் அசிஸ்டண்டுகள், லைட்டிங் பாய்கள் அனைவரோடும் பேசி தயாராகி நடிக்கும் ரஜினியின் பண்பினை பல பக்கங்களில் விவரித்திருக்கிறார். ரஜினி ஓய்வுக்கு கேரவன் பயன்படுத்துவதில்லையாம். காட்சி இடைவேளைகளில் ஏதாவது பெஞ்சில் படுத்தபடியே, கண்ணை மூடி, கண்களுக்கு மேல் துணியை போட்டு (வெளிச்சம் பாதிக்காமல் இருக்க) அடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு மனதுக்குள்ளாகவே ரிகர்சல் பார்ப்பாராம். ரஜினியின் ஒர்க்ஸ்டைல் என்னவென்பதை அக்குவேறு ஆணிவேராக அலசியிருக்கிறார்.

பொதுவாக ரஜினியை பற்றி மக்களிடம் இப்படியொரு எண்ணம் இருக்கிறது. அவர் நடிப்பைத் தவிர்த்து வேறெதிலும் ஆர்வம் காட்ட மாட்டார். மாறாக கமல் ஒரு படத்தின் அத்தனை நிலைகளிலும் உழைப்பார் என்று. சுரேஷ்கிருஷ்ணாவின் இந்த புத்தகம் அதற்கு நேரெதிரான பிம்பத்தை உருவாக்குகிறது. படத்தின் ஒன்லைனரில் தொடங்கி பாடல்கள், இசை, காட்சிகள், வசனங்கள் என்று அனைத்துக்குமே ரஜினி மெனக்கெடுகிறார். படப்பிடிப்பில் காட்சியின் தாக்கத்தை மனதில் கொண்டு இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஐடியாவும் கொடுப்பதுண்டு. கதைக்கு மாறாக காட்சிகள் எடுக்கப்பட்டால் அது ஏன், எதற்கென்று கேட்டு தனக்கு திருப்தி தராவிட்டால் அதுகுறித்த ஆட்சேபணைகளையும் தெரிவிப்பார். ஷூட்டிங் தாமதப்பட்டு தயாரிப்பாளருக்கு பணநஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இதனால் பகலில் பாடல் காட்சிகள், இரவில் சண்டைக் காட்சிகள் என்று இருபத்து நான்கு மணி நேரம் உழைக்கவும் அவர் எப்போதும் தயாராகதான் இருந்திருக்கிறார்.

நூலின் பலவீனம் அதன் தலைப்புதான். மூன்று படங்களில் ரஜினியுடனான சுரேஷ்கிருஷ்ணாவின் அனுபவங்கள்தான் இப்புத்தகம். ஆனால் பாட்ஷா குறித்து மட்டுமே என்கிற மனோபாவத்துடன் தான் நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். “எப்படா பாட்ஷா வரும்” என்று ஆவலாக பக்கங்களை புரட்ட புரட்ட அண்ணாமலையும், வீராவும் சலிக்கிறார்கள். நூற்றி எண்பது பக்கங்கள் தாண்டியபிறகுதான் பாட்ஷா வருகிறார்.

தன்னோடு பணியாற்றிய ஒரு நடிகரை குறித்து இம்மாதிரி ஓர் இயக்குனர் புத்தகம் எழுதுவது அற்புதமான விஷயம். முன்பு தமிழில் இருந்த இந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. உலகம் சுற்றும் வாலிபன் எப்படி உருவானது என்று எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் இயக்குனர்கள் சிலர் (ப.நீலகண்டன் மாதிரியானவர்கள்) அவரைப் பற்றி பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள். சிவாஜி பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது (ஆரூர்தாஸ் எழுதிய புத்தகங்கள் முக்கியமானவை). சுரேஷ்கிருஷ்ணா மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இதேபோல பேசும்படம், அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் படங்களையொட்டி கமலைப்பற்றி சிங்கீதம் எழுதினால் நன்றாக இருக்கும். கமலே எழுதினால் அது இலக்கியமாகிவிடும், வாசிக்க சகிக்காது.

பாட்ஷாவும் நானும் : புனைவுக்கு நிகரான சாகஸம்!


நூல் : பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்
எழுதியவர்கள் : சுரேஷ் கிருஷ்ணா & மாலதி ரங்கராஜன்
பக்கங்கள் : 264
விலை : ரூ.125
வெளியீடு : வெஸ்ட்லேண்ட் லிமிடெட்
இணையத்தில் வாங்க : டிஸ்கவரி புக் பேலஸ் இணையத்தளம்

18 ஜனவரி, 2014

இன்னொருவனின் கனவு

’அந்திமழை’ என்பது வெறும் பெயரோ, பத்திரிகையோ, இணையத்தளமோ மட்டுமல்ல. அது ஓர் இயக்கம்.

கால் நூற்றாண்டுக்கு முன்பாக கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ‘அந்திமழை’ என்கிற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார்கள். கல்லூரிப் படிப்பு முடித்ததுமே அந்த பேட்ச், தன்னுடைய கல்லூரிக்கால செயல்பாடுகளை சராசரி வாழ்வின் அழுத்தம் காரணமாக கைவிடுவதுதான் இயல்பானது. ‘அந்திமழை’க்கு அந்த அவலம் நிகழாமல் பார்த்துக் கொண்டார்கள். அடுத்து வந்த கல்லூரித் தலைமுறைகளுக்கு அப்படியே அந்திமழை கடத்தப்பட்டு கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து அச்சுப் பத்திரிகையாக பரிணாமம் பெற்றது. வெகுஜனத் தளத்தில் இயங்கும் இதழ்களுக்கும், சிற்றிதழ்களுக்கும், இடைநிலை இதழ்களுக்கும் சவால் விடும் வண்ணமாக ஒரு கல்லூரிப் பத்திரிகையான அந்திமழை செயல்பட்டது. இளங்கோவன், அசோகன், கவுதமன், குமரகுருபரன் என்று ஏராளமான இதழாளர்களை அந்திமழை பிரசவித்தது.

’முடிவில்லாத கனவு’ என்று அந்திமழையை ஒரு வரியில் வர்ணிக்கலாம்.

அந்திமழையின் தொடக்கமான இளங்கோவனுக்கு அதை வெகுஜனத் தளத்தில் பரவலாக கொண்டுவரவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஓரளவுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றவுடன் அதை இணையத்தளம் ஆக்கினார். தம்பிகள் தோள் கொடுத்தனர். இணையத்தளத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு அதை அச்சிதழாக தரமேற்றியது. தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக, பின் தொடரும் நிழலாகவே இன்றுவரை அந்தகால மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அந்திமழையை ஆராதிக்கிறார்கள்.

இத்தகைய பிரசித்தி பெற்ற அந்திமழையின் ஒரு துளிதான் குமரகுருபரன். விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வாகி, வெர்டினரி டாக்டர் என்கிற சமூகத்தின் கவுரமான அந்தஸ்தை உதறி முழுநேரப் பத்திரிகையாளர் ஆனார். வார இதழ், தினசரி, தொலைக்காட்சி, இணையத்தளம் என்று ஊடகத்தின் அத்தனை பரிமாணங்களிலும் போதுமான அனுபவம் பெற்றார்.

இளங்கோவன் அழைத்து, “ஏதாவது அந்திமழைக்கு எழுதேன்” என்று கட்டளையிட்டவுடன் அவர் எழுதிய தொடர்தான் “இன்னொருவனின் கனவு”. சினிமாவின் காதலரான குமரகுருபரன் சினிமாவைப் பற்றி எழுதுவது ஆச்சரியமல்ல. ஆனால் நமக்கு ஆச்சரியம் தருவது அவர் எழுத எடுத்துக்கொண்ட களம்தான். சினிமா என்றாலே விமர்சனம் எழுதுவார்கள். கலைஞர்களை பற்றிய ஃப்ரொபைல் கட்டுரையோ, பேட்டியோ எழுதுவார்கள். குமரகுருபரன் தன்னுடைய கனவுத் திரைப்படங்கள் எப்படி உருவானது என்கிற ரிஷிமூலத்தை தேடிப் பயணித்து எழுதியிருக்கிறார்.

சினிமா ஏன் ஒரு பார்வையாளனை வசீகரிக்கிறது?

அதை தன்னுடைய கனவின் நீட்சியாக கருதுகிறான். கனவு கருப்பு வெள்ளைதான். அதற்கு டி.டி.எஸ்., க்யூப் மாதிரி நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு இல்லை. ஆனால் வெள்ளித்திரையில் வண்ணங்களை வாரியிறைத்து, துல்லியமான ஒலியோடு காட்டும் ஆச்சரியமான அறிவியல் சாதனத்தை தன்னுடைய வாழ்வுக்கு நெருக்கமான விஷயமாக மனிதன் கருதுவது இயல்பானதுதான். பார்வையாளனுக்கு இப்படியான கனவு என்றால், படைப்பாளிக்கு அது வேறு மாதிரியான கனவு. அவனுக்கு லட்சியம், கனவு, இத்யாதி இத்யாதியெல்லாம் சினிமாதான். பார்வையாளன், படைப்பாளி மற்றும் விமர்சகன் என்று சினிமாவின் நுகர்வோரை சுலபமான மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். புதியதாக நான்காம் பிரிவு ஒன்றை உருவாக்க முயல்கிறார் குமரகுருபரன். அதாவது இந்த தொடர்ச்சியை எட்ட நின்று பார்த்து, என்ன நடந்தது என்பதை அழகாக ‘ரிப்போர்ட்டிங்’ செய்யும் வேலையை ‘இன்னொருவனின் கனவு’ மூலமாக சாத்தியமாக்கி இருக்கிறார்.

அந்திமழை பதிப்பகத்தின் (போன் : 9443224834, 43514540) வெளியீடாக ‘இன்னொருவனின் கனவு’ கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் 320 பக்க நூலாகியிருக்கிறது. விலை ரூ.220/-

நூலுக்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் அணிந்துரை ‘மீறல்களின் கனவு’ அட்டகாசமான அறிமுகத்தை தருகிறது (எனக்குள் எப்போது ஒரு ஜெயமோகன் வாசகன் உருவானான் என்று கடுப்போடு தேடிக்கொண்டே இருக்கிறேன்). நிழலுலகம் குறித்த திரைப்படங்கள் பற்றிய பார்வையை நறுக்காக தருகிறார் ஜெமோ. நிஜமான நிழலுகத்தை சினிமாவில் சித்தரிக்கவே முடியாது என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார். ஜெயமோகன் கொடுக்கும் அணிந்துரையின் துள்ளலான சுவாரஸ்யம், அவர் குமரகுருபரனின் நூலை வாசித்து சிலாகித்திருப்பதின் தொடர்ச்சியாக கிடைத்திருக்கும் பொக்கிஷம்.

சினிமா குறித்த நூல் என்பதால் சினிமா ஆர்வலர்களுக்கானது என்று தனியாக ‘இடஒதுக்கீடு’ செய்திட வேண்டாம். புனைவு தரும் கேளிக்கையையும், தீவிர சிந்தனைகளையும், நுண்ணுனர்வுகளையும் கலந்து மிக்ஸராக ‘இன்னொருவனின் கனவு’ கொடுக்கிறது. இந்நூலுக்காக நீங்கள் செலவழிக்கும் பணத்தைவிட, கூடுதலான விஷயங்களை நிச்சயம் கண்டடைவீர்கள் என்று மட்டும் உறுதி கூறுகிறேன். மிக நேர்த்தியாக எழுதப்பட்ட இந்த புத்தகம்தான் குமரகுருபரனின் முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் அந்திமழை ஸ்டாலில் இந்நூல் கிடைக்கிறது.

வாழ்த்துகள் குமரகுருபன் சார். அடுத்த ஆண்டு சினிமா நூலுக்கான தேசிய விருதை மீண்டும் தமிழில் நாம் பெறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

21 ஜனவரி, 2013

விஸ்வரூபம்

இரா.முருகனை ரொம்பவும் பிடிக்கும். சுஜாதாவின் எழுத்துலக வாரிசு இவர்தான் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறேன். ‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ வந்துக் கொண்டிருந்தபோது, இரா.முருகனை வாசிக்க ஆரம்பித்தேன். கதைகளும் எழுதுவார் என்று பிற்பாடுதான் தெரிந்தது.

நல்ல கட்டுரையாளர்கள் சுமாரான கதைசொல்லிகளாக இருப்பார்கள். சுவாரஸ்யமாக கதை எழுதுபவர்கள் சுமாராக கட்டுரை எழுதுவார்கள். ரெட்டை மாட்டு வண்டியை சிறப்பாக ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மிகக்குறைவானவர்களே. முருகன் இரண்டையும் சிறப்பாக ஓட்டுபவர் என்பதால்தான், அவரை சுஜாதாவின் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 
இணையத்திலும், நூல்களிலுமாக ஆங்காங்கே வாசித்த இரா.முருகனின் எழுத்து பிடித்துப் போனதால்தான் சிலவருடங்களுக்கு முன்பாக பெரும் பட்ஜெட் செலவில் அவரது முழு கதைகள் தொகுப்பினை வாங்கினேன். முருகனின் கதைகள் பெரும்பாலும் nostalgia தன்மை கொண்டவை. நாம் ஒருவாறாக கற்பனைகூட செய்து பார்த்துவிட முடியாத அறுபதுகளின், எழுபதுகளின் நடுத்தர வாழ்க்கையை முழுவதுமாக அவிழ்த்து நிர்வாணமாக முன்வைப்பவை. அவருடைய புனைவுகளில் ‘நெம்பர் 40, ரெட்டைத்தெரு’ (சாரு அடிக்கடி சொல்லும் பயோஃபிக்‌ஷன் வகை) தான் மாஸ்டர்பீஸாக இருக்க முடியும். பாரதிராஜாவும், பாலச்சந்தரும் இணைந்து நடித்த ‘ரெட்டைச் சுழி’ படத்துக்கு இதுதான் இன்ஸ்பிரேஷன் என்று படம் வரும்போது பேசப்பட்டது.

அபுனைவுகளில் முருகனின் எளிமையும், துல்லியமும் அசாத்தியமானது. ராயர் காஃபி க்ளப், லண்டன் டயரி இருநூல்களும் இணையத்தில் (ப்ளாக், ஃபேஸ்புக், லொட்டு லொசுக்கு) தமிழில் எழுத விரும்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டியது. எதை சொல்லலாம், எதை விழுங்கலாம், சொல்ல வேண்டியவற்றை சொல்லவேண்டிய முறை என்றெல்லாம் பாடம் எடுக்கக்கூடிய தகுதிபெற்றவை இந்நூல்கள். பத்திரிகைகளுக்கும், நூல்களுக்கும் இருக்கும் தன்மை இணையத்துக்கு அப்படியே பொருந்தாது என்கிற பிரக்ஞை முருகனுக்கு இருக்கிறது. இணையத்தில் வாசிப்பவர்களின் பல்ஸ் அவருக்கு அத்துப்படி. எனவேதான் அவர் இணையத்தில் எழுதும்போது இணையவாசகர்களின் வாசிப்புமுறையை உணர்ந்து, அதற்கேற்ற மொழிநடையை பயன்படுத்துகிறார்.

ஐ.டி. புரட்சி ஏற்பட்டு எல்லோரும் தீயாய், பேயாய் ஐ.டி. படிக்க காவடி தூக்கியபோது அவர் எழுதிய நாவல் ‘மூன்று விரல்’. சாஃப்ட்வேர் துறை வெறுமனே அதில் பணிபுரிபவர்களுக்கு பணம் காய்க்கும் மரமல்ல, ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு.. அரசியலுக்கு இடையே இயங்கிவருகிறது என்பதை வாழைப்பழத்தில் மாத்திரை சொருகி இயல்பாக சொல்லியிருந்தார். இத்துறை குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் புனைவு இதுவாகத்தான் இருக்கும். 
முருகனின் பணிகளில் பிரமிக்க வைத்தது நிச்சயமாக ‘அரசூர்வம்சம்’தான். புனைவுவழியாக அவரது முந்தையத் தலைமுறைகளுக்கு இடையே பயணிக்கும் முயற்சி அது. ஒருமாதிரி கடாமுடா மொழிநடையில், முன்னுக்கும் பின்னுக்குமாக நான்லீனியராக மாறி, மாறி பயணிக்கும் கதை. வாசிப்பு உழைப்பை வெகுவாக கோரும் நாவல் என்பதால், உள்நுழைய சற்று சிரமமாக கூட இருக்கும். முருகனின் வேவ்லென்த்தை சரியாக கேச் செய்ய முடிந்துவிட்டால், அட்டகாசமான அமானுஷ்ய அனுபவத்தை அளிக்கிது அரசூர் வம்சம்.

இந்நூல் குறித்து சமகால இலக்கியவாதிகள் பெரிதாக ஏன் சிலாகிக்கவில்லை என்பது எப்போதுமே எனக்கு ஆச்சரியமான ஒன்று. புதிய முறையில் சொல்லப்படும் ஒன்றை வாசகர்கள் புறக்கணிப்பதை கூட ஏற்றுக் கொள்ளலாம். சக படைப்பாளிகளும் பாராமுகம் காட்டுவதை காணும்போதுதான் நம் தற்போதைய இலக்கியச்சூழலின் அவலத்தை உணரமுடிகிறது. 

அரசூர் வம்சம் அதோடு முடிந்துவிடவில்லை. ஒரு டிரையாலஜி என்கிறார் இரா.முருகன். இதில் இரண்டாம் நூலான ‘விஸ்வரூபம்’ இப்போது கிழக்கு மூலமாக விற்பனைக்கு வந்திருக்கிறது. எழுத்துக்காக தேசியவிருது பெற்ற ஓவியர் ஜீவானந்தத்தின் அருமையான ஓவியமுகப்போடு, அட்டகாசமான பேக்கிங்கில் புஷ்டியான புத்தகம். 792 பக்கம். நானூறு ரூபாய் விலை. இவ்வருட முதல் சாய்ஸ் இதுதான். அடுத்த புத்தகக் காட்சிக்குள் வாசித்து முடித்துவிட வேண்டும். அதற்குள் மூன்றாவது மற்றும் இறுதிப்பாகம் வந்துவிடும்.
விஸ்வரூபத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். அரசூர் வம்சத்தை வாசித்துப் பிடித்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு நானூறு ரூபாய் இன்வெஸ்ட் செய்யலாம். சில அத்தியாயங்களை ஏற்கனவே வாசித்திருக்கிறேன் என்கிற முறையில், இரா.முருகன் ஏமாற்ற மாட்டார் என்று உத்தரவாதம் அளிக்கலாம். புதியதாக வாசிக்க விரும்புபவர்கள் டிரைலராக அரசூரை முயற்சித்துவிட்டு, விஸ்வரூபத்துக்குள் குதிக்கலாம்.

ஆனால், கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்கிறேன். கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு இரா.முருகன்தான் வசனம். அதிலிருந்து தொடர்ச்சியாக கமலின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார். எனவே விஸ்வரூபத்திலும் இரா.முருகனின் பங்களிப்பு நிச்சயமிருக்கும்.


இன்னொரு சுவாரஸ்யமான தகவல். கமல் டவுசர் போட்டு விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே அவரை இரா.முருகன் சிவகங்கை தெருக்களில் பார்த்திருக்கிறார். இருவருக்கும் கிட்டத்தட்ட சமவயதுதான். களத்தூர் கண்ணம்மாவில் நடித்து ஃபேமஸ் ஆகியிருந்த அப்போதைய கமலைப் பார்த்து சற்று பொறாமையாக இருந்ததாககூட முருகன் எழுதியிருக்கிறார்.

இரா.முருகன் என்று கூகிளிட்டு தேடினால், பதிவின் மேலே காணக்கிடைக்கும் படம் கூகிளில் கிடைத்தது. கண்ணுக்கு பசுமையாக தெரிவதால் அதையே படமேற்றிவிட்டேன். இரா.முருகனின் வண்ணப் படத்தை அவருடைய இணையத்தளமான Era.முருகன்.inல் பார்த்துக் கொள்ளலாம்.

6 அக்டோபர், 2012

விகடன் டைம்பாஸ்

சிக்கென்ற வடிவில் ஸ்லிம் சைஸில் ஐந்து ரூபாய் விலைக்கு கிடைக்கும் டைம் பாஸை வாசிக்க ஐந்து நிமிடங்கள் முழுதாகப் பிடித்தது.

(பழைய) குமுதத்தின் சேட்டை + வண்ணத்திரை, சினிக்கூத்து ரக உள்ளடக்கம் = விகடன் டைம்பாஸ்

அட்டையோடு சேர்த்து அறுபத்தியெட்டு பக்கம். முழு வண்ணம். அட்டை மட்டும் ஆர்ட் பேப்பர். உள்ளே வழக்கமான நியூஸ் பிரிண்ட். என்றாலும் ஐந்து ரூபாய்க்கு தரும் டைம்பாஸ் சற்றே அதிகம்தான். மெயின் டிஷ் சினிமா. தொட்டுக்க ஊறுகாய் மாதிரி லேசாக அரசியல்.

குட்டி சாமியாரை ரிமைண்ட் செய்த ஐடியா குட். அம்மாவின் கைப்பேசி அசத்தல். தாண்டவம் ரிவ்யூ தாங்கலை. போட்டோவுக்கு காசு கொடுக்காத விஜயகாந்த், சீரியஸ் சீண்டல். ‘அத்த பெத்த ரத்தினமே’ போட்டோ காமிக்ஸ் சூப்பர். ஷகிலா பேட்டி சபாஷ்.  வில்பர் சர்குணராஜ் பேட்டி வேஸ்ட்.

விகடனின் சாபக்கேடாக அமைந்துவிட்ட வைகோ டைம்பாஸுக்குள்ளும் தொடர்கிறார். ‘மழை’ ஸ்ரேயா கணக்காக இரண்டு பக்கங்களுக்கு கவர்ச்சி போஸ். ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் கிசுகிசுக்களும், துணுக்குகளும் நல்ல தேர்வு. ‘அவதூறு வழக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் ஜெயலலிதாவைப் பற்றி கட்டுரை எழுதுவது எப்படி?’ என்கிற கட்டுரைதான் இதழின் பெஸ்ட். இன்னும் இரண்டு பக்கங்களுக்கு நீண்டிருக்கக்கூடாதா என ஆசைப்பட வைத்தது.

ஏராளமான ஐட்டங்கள் இருந்தாலும், இதழை வாசித்து முடித்ததும் ஏதோ ஒரு வெறுமை சூழ்கிறது. ’சிரி’யஸ் பத்திரிகை என்று மொத்தமாக குத்து குத்துவென்று குத்தினாலும் சில சீரியஸ் ஆர்ட்டிக்கிள் இருந்தால் தப்பேதுமில்லை. ஒன்றோ, இரண்டோ ரியல் ஹ்யூமன் ஸ்டோரி இருக்குமேயானால் அந்த பத்திரிகையின் ரேஞ்சே வேறு.

விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இதழில் லே-அவுட் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வது மன்மோகன் சிங்கின் டர்பன் ப்ளூ கலர் என்று சொல்வதை மாதிரி ஆகிவிடும். வழக்கம்போல ஆசிப்கானின் கேரிகேச்சர்கள் தத்ரூபம், பிரமாதம். தமிழ் பத்திரிகையுலகில் இவருக்கு முன்னுதாரணம் சொல்லக்கூடிய கேரிகேச்சர் ஆர்ட்டிஸ்ட்டுகள் யாராவது இருந்தார்களா என்றே எனக்கு நினைவில்லை. ஆனாலும் ஒரே மாதிரியான தன்மையுள்ள படங்கள் விரைவில் அலுத்துவிட வாய்ப்பிருக்கிறது. மாதநாவல்களின் அட்டைப்படங்களில் மாருதி தத்ரூபமாக பெண்களை வரைந்தபோது ஆரம்பத்தில் இருந்த ஆச்சரியம், போகப்போக மங்கிக்கொண்டேப் போனதை மறந்துவிடக்கூடாது.

இந்த பத்திரிகைக்கான ஐடியா ஆனந்த விகடன் உருமாற்றம் பெற்றபோது உருவான யூத்ஃபுல் விகடனில் தொடங்கியிருக்கும் என்று கருதுகிறேன். பிற்பாடு ‘என் விகடன்’ ஆகி, கடைசியாக டைம்பாஸில் விடிந்திருக்கிறது என்று தோன்றுகிறது. புதிய தலைமுறையின் வெற்றிக்கு அதன் ஐந்து ரூபாய் சூத்திரம் ஆரம்பக் காலங்களில் உதவியது. அதே உத்தியை இதற்கும் முயற்சித்திருக்கிறார்கள். ஐந்து ரூபாய் என்பது ஆரம்பக்கால usp (unique selling proposition). இது மூன்று மாத காலத்துக்குகூட தாக்குப்பிடிக்காது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். ஒவ்வொரு வாசகரையும் வாரந்தோறும் தக்கவைக்க வேறொரு மேஜிக் ஏதோ தேவைப்படுகிறது. இது பவளவிழா கண்ட விகடனுக்கு நிச்சயம் தெரியும். டைம்பாஸில் என்னென்ன பாய்ச்சலை விகடன் நிகழ்த்தப் போகிறது என்று ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தப் பத்திரிகை குமுதத்துக்கு சவால் விடும் என்று வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகையுலகத்தில் இருக்கும் நண்பர்களால் கிசுகிசுக்கப்பட்டது. குமுதத்துக்கு சவால் குமுதமாக மட்டுமே இருக்க முடியும் என்பது என் எண்ணம். முன்பு குமுதம் இதழே வெளியிட்ட ‘குமுதம் ஸ்பெஷல்’ என்றுமே என்னுடைய கனவுப் பத்திரிகை. குமுதம் குழுமமே நினைத்தாலும் அம்மாதிரியான ஒரு பத்திரிகையை மீண்டும் நடத்த முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அதுபோலவே குமுதத்தில் இருந்து வெளிவந்த ‘ஜங்ஷன்’ கூட என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க ஒரு முன்மாதிரிப் பத்திரிகைதான்.

விகடன் டைம் பாஸின் முதல் இதழ் ஜஸ்ட் பாஸ். விரைவில் டிஸ்டிங்ஷன் பெற அதன் ஆசிரியர் நண்பர் ரீ.சிவக்குமாரை வாழ்த்துகிறேன்.

2 ஏப்ரல், 2012

பருவச்சீட்டு பயணிகள் சங்கம்

சென்னையைப் பற்றி வாசிக்கவோ, கேட்கவோ சலிக்கவே சலிக்காது. பிறந்து வளர்ந்தது முழுக்க முழுக்க சென்னையின் எல்லையிலிருக்கும் மடிப்பாக்கத்தில்தான். என்றாலும் இரண்டு தலைமுறைகளாகதான் சென்னை எங்களுக்கு அன்னை. அப்பா வழி தாத்தா காஞ்சிபுரத்துக்காரர். முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். இராணுவத்தில் ஓய்வுபெற்ற பிற்பாடு சென்னை மாகாண காவல்துறையின் குதிரைப்படையில் பணியாற்றினார். கொண்டித்தோப்பு போலிஸ் லேனில் குவார்ட்டர்ஸ். பெரியப்பாவில் தொடங்கி, அப்பாவரை பதிமூன்று பேரை அவர் பெற்று வளர்த்தது இங்கேதான்.

அப்பாவின் அம்மா வழி தாத்தா மடிப்பாக்கத்து வாசி. அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்காக கிராமங்களில் வரிவசூல் செய்துத்தரும் அஃபிஷியல் ஏஜெண்ட். ‘ஜமீன்தார்’ என்று ‘க்ளெய்ம்’ செய்துக்கொண்டு ஊரில் கும்மாளம் போட்ட பரம்பரை என்று வைத்துக் கொள்ளுங்களேன். என் பாட்டிக்கு சொந்த ஊர் என்பதால் எங்கள் குடும்பம் கடந்த தலைமுறையில் மடிப்பாக்கத்தில் செட்டில் ஆகிவிட்டது.

இப்போது சென்னை மாநகராட்சிக்குள் இணைந்துவிட்டாலும் மிகச்சரியாக இருபதாண்டுகளுக்கு முன்புவரை மடிப்பாக்கம் கிராமம்தான். ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை கூட ஓரளவு கிராம அடையாளங்கள் மிச்சமிருந்தது. சைதாப்பேட்டை வரை பஸ்ஸில் போய்வருபவர்கள்கூட ‘பட்டிணத்துக்கு போயாறேன்’ என்று சொல்வார்கள். மவுண்ட்ரோடு போய் சினிமா பார்த்துவிட்டு வருவது ஒரு கவுரவமான சடங்காகவே அப்போது இருந்தது. இப்போதும் மடிப்பாக்கத்தின் பூர்வகுடிகள் யாரும் தங்களை சென்னைவாசி என்று சொல்லிக் கொள்வதில்லை. நானும்கூட வெளியூர்களுக்கு செல்லும்போது, “சென்னைக்கு பக்கத்துலே மடிப்பாக்கம்” என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எல்லா ஊர்க்காரர்களுக்கும் இருப்பதைப் போல ‘மெட்ராஸ்’ எனக்கும் வியப்பூட்டும் ஊர்தான், இப்போதும் கூட. எக்ஸிபிஷன், மியூசியம், பீச், கிண்டி பார்க், பிளானட்டோரியம், அலங்கார் தியேட்டர் என்று மெட்ராஸுடனான சுகமான சிறுவயது நினைவுகளை அசைபோடுவது சுகமான விஷயம்தான். சென்னைக்கு வெகு அருகில் வசிப்பவனையே தனக்கேயுரிய தனித்துவ அலட்டலால் மிரட்டும் இந்த நகரம், வெளியூர்க்காரர்களுக்கு என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

‘நம்ம சென்னை’ வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘சென்னையும் நானும்’ ஏற்படுத்தும் நாஸ்டால்ஜியா உணர்வுகள் அற்புதமானவை. ஞாநி, பிரபஞ்சன், மருது, நாசர், மாஃபா பாண்டியராஜன், வெற்றிமாறன் ஆகிய பிரபலங்கள் தங்கள் சென்னை அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பாண்டியராஜனின் பேட்டியாக வருவது மட்டும் தேவையற்றத் திணிப்பாக – அவரது நிறுவனத்துக்கு விளம்பரமாக – புத்தகத்துக்கு திருஷ்டிப் படிகாரமாக அமைந்திருக்கிறது. சப்ஜெக்ட் தாண்டுகிறோமேவென்று சென்னையின் வளர்ச்சி குறித்து கொஞ்சமே கொஞ்சம் அகாடமிக்காக பேசியிருக்கிறார் பாண்டியராஜன்.

ஞாநி, நாசர் இருவருமே செங்கல்பட்டுக் காரர்கள். சென்னைக்கு அருகிலிருக்கும் பெரிய நகரைச் சேர்ந்தவர்கள். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இங்கே கோலோச்சிக்கொண்டிருந்த ‘நாடகம்’ அவர்களை இங்கே இழுத்து வந்திருக்குமென யூகிக்கிறேன்.

இந்நூலிலும் தன் வழக்கப்படி ஆற, அமர பொறுமையாக பேசும் ஞாநி தஞ்சாவூரில் பிறந்திருக்க வேண்டியவர். அடித்தட்டு மக்கள் நகரை விட்டு வெளியேற்றப்படும் போக்கினை கவலையோடு காண்கிறார். நடுத்தர வர்க்கம் மனச்சாட்சியை இழந்து வருவதை இதற்கு காரணமாக சுட்டிக் காட்டுகிறார். செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரிக்கு வந்து படித்துக் கொண்டிருந்த ஞாநி, பட்டப்படிப்பை முடித்ததும் முழுக்க சென்னைவாசியாகிறார். நகரைப் பற்றிப் பேசும் பேட்டியில் தன்னுடைய குடும்பப் பின்னணி மொத்தத்தையும் அழகாக நெருடல் இன்றி பேசியிருக்கிறார். சென்னையில் தன்னை கவர்ந்தவையாக பரந்து விரிந்த கடற்கரையையும், நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகிறார்.

மதுரையைச் சேர்ந்த டிராட்ஸ்கி மருது சென்னை ஓவியக்கல்லூரியில் படிப்பதற்காக சென்னை வாசியானவர். மந்தைவெளி செயிண்ட் மேரிஸ் ரோடு தாண்டி இன்றைய ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் விவசாயம் நடந்து வந்ததாக தன் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். கபாலி தியேட்டர் வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது என்று அவர் சொல்லுவதை இன்றைய சென்னைவாசிகள் நம்புவது கடினம். அன்றைய மூர் மார்க்கெட் குறித்த மருதுவின் விவரணைகள் சுவாரஸ்யமானவை. கலைஞர்களுக்கான பொதுவான வெளியற்ற நகரமாக சென்னையை இவர் பார்க்கிறார். கலிபோர்னியாவில் உள்ள கல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தை மனதில் வைத்து எண்பதுகள்ன் இறுதியில் அரசாங்கத்திடம் ஒரு யோசனையை இவர் முன்வைத்திருக்கிறார். ஒரே வளாகத்துக்குள் ஏழு விதமான கலைகளையும் கற்றுத்தரும் திட்டமிது. ஒப்புக்கொண்ட அன்றைய திமுக அரசு 1991ல் கவிழ்ந்ததால், இந்த கலைப்பல்கலைக்கழக யோசனை கிடப்பில் போடப்பட்டுவிட்டதாம்.

நாசர் எழுபதுகளில் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர். ரயிலில் மாம்பலம் நிலையத்தில் இறங்கி, வேர்க்கடலை கொரித்தப்படியே ரங்கநாதன் தெரு, பனகல் பார்க், ஜி.என்.செட்டி சாலை வழியாக மவுண்ட்ரோடுக்கு நடந்து வருவாராம். அப்போதைய சென்னை முழுக்க நடந்தே கடந்துவிடும் பரப்பளவில் இருந்ததாக சொல்கிறார். ஜி.என்.செட்டி சாலையில் இருந்த வீட்டில் நச்சினார்க்கினிய சிவன், வண்டார்குழலி என்று பெயர்ப்பலகை இருந்ததை நினைவுகூர்கிறார். இத்தனை ஆண்டுகளில் சென்னை வளரவில்லை, மாறியிருக்கிறது என்பது நாசரின் வாதம். சென்னை அழகியலை விற்று, குப்பையை வாங்கி வீங்கிக் கொண்டிருக்கிறது என்பது இவரின் வருத்தம்.

நூலின் மிக சுவாரஸ்யமான பேட்டியாக வெற்றிமாறனின் பேட்டியைச் சொல்லலாம். பிறந்தது கடலூராக இருந்தாலும் சிறுபிராயத்தை பெரும்பாலும் சென்னையில் கழித்திருக்கிறார். மேல்நிலை படிக்கும்போது உறவினர் வீட்டில் ஏற்பட்ட ஏதோ பிரச்சினையால் பள்ளி நண்பணின் வீட்டில் தங்கிப் படித்த இவரது அனுபவம் அபாரம். தங்கள் மகனோடு, வேறு யாரோ ஒரு பிள்ளையையும் மகனாக வளர்த்த அந்த குடும்பத்தின் அன்பு, இதுவரை இலக்கியமோ, சினிமாவோ நமக்கு காட்டிய அன்புகளையெல்லாம் விட பேரன்பு. சென்னையின் அடையாளமான டீக்கடைகளைப் பற்றி இப்புத்தகத்தில் விலாவரியாக பேசியிருப்பவர் இவர் மட்டும்தான். சென்னையைக் கெடுப்பவர்கள் எல்லாருமே வெளியூரிலிருந்து வருபவர்கள் என்று நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார். சென்னையின் மீது மற்றவர்களால் வைக்கப்படும் புகார்களை இவர் கோபத்தோடு பார்க்கிறார். நமது கழிவுகளை சுமக்கும் கூவத்தை எப்படி இளக்காரமாகப் பேசமுடியும் என்று கேட்கிறார். ‘வடசென்னைதான் அசல் சென்னை’ என்பது வெற்றிமாறனின் வாதம்.

சென்னை குறித்த பிரபஞ்சனின் சில கட்டுரைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிரபஞ்சனின் கட்டுரை நன்றாக இருக்கிறது என்று சொல்வது க்ளிஷேவாகிவிடும். அவரோடு மேன்ஷனில் தங்கியிருந்த வெளியூர்க்காரர் ஒருவரிடம் பிரபஞ்சன் கேட்டாராம்.

“ஊருக்கு போவதே இல்லையா?”

“எதுக்கு? இதுவும் ஊர்தானே?”

சென்னையை நேசிப்பவனாக என்னை நெகிழவைத்த வரிகள் இவை. சென்னையை ஊராக சென்னைவாசி உட்பட யாருமே மதிப்பிடுவதில்லை என்பதுதான் உண்மை. இங்கு எல்லாமே இருந்தும், எதுவுமே இல்லாதது மாதிரி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பது வாடிக்கையாகி விட்டது. கோயமுத்தூர் மாதிரி வருமா, மதுரை மாதிரி வருமாவென்று புலம்பிக் கொண்டேயிருப்பவர்கள் கோயமுத்தூருக்கோ, மதுரைக்கோ போனால் ஒரே வாரத்தில் தெறித்துக்கொண்டு சென்னைக்கு ஓடிவருகிறார்கள். இங்கு எதுவுமே சரியில்லை என்பவர்கள்தான் இங்கேயே நிரந்தமாக வசிக்க வழிவகை செய்துக் கொள்கிறார்கள்.

சினிமாக்களில் காட்டப்படுவது போல எல்.ஐ.சி.யோ, சென்ட்ரலோ மாதிரி சென்னைக்கென்று எதுவும் தனித்துவமான பொதுப்பிம்பம் உருவாகியிருப்பதாகத் இந்நூலை வாசிக்கும்போது தோன்றவில்லை. இந்நகரைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு மனச்சித்திரத்தை இந்நகரம் வழங்குகிறது. நாசருக்கு தேவிபாரடைஸ் தியேட்டரில் இருந்த சிவப்பிந்திய சிலையும், அலங்காரத் தண்ணீர் ஊற்றும் சென்னையாகத் தோன்றுகிறது. இதுபோல ஒவ்வொருவருக்கும் சென்னை என்றால் ஏதோ ஒரு அடையாளம். மற்ற நகரங்களை மனதுக்குள் நினைத்தாலே நச்சென்று ஒரு லேண்ட்மார்க் மூளைக்குள் பல்ப் அடிக்கும். சென்னைக்கு நிறைய லேண்ட்மார்க்குகள். ஆனால் எதுவும் பொதுப்பிம்பம் உருவாக்கக்கூடிய அளவுக்கு ‘பளிச்’சென்று இல்லை.

சென்னையில் திருவிழாக்கள் மிகக்குறைவு. கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர், திருப்பதி குடை மாதிரி ஒரு சிலவற்றை யோசித்துதான் சொல்லமுடியும். மாறாக வருடாவருடம் பொங்கலுக்கு தீவுத்திடலில் நடக்கும் எக்ஸிபிஷனை நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் திருவிழாவாக குறிப்பிடலாம். எண்பதுகளில் செல்வாக்கோடு (போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ் விடுமளவுக்கு) இருந்த இந்த விழா, இன்றளவுக்கும் ஓரளவுக்கு சிறப்பாகவே மூன்றுமாத காலத்துக்கு நடக்கிறது. முன்பெல்லாம் காணும் பொங்கலுக்கு மாட்டு வண்டி கட்டி பீச்சுக்கு வரும் வழக்கம்தான் இப்போது சுத்தமாக வழக்கொழிந்துப் போய்விட்டது. பழைய படங்களில் காணக்கிடைக்கும் சென்னையை பார்க்க இப்போது ஏக்கமாக இருக்கிறது. வளர்ச்சியோ, மாற்றமோ.. இரண்டாயிரங்களுக்குப் பிறகு.. குறிப்பாக ஐ.டி. தலைமுறை உருவானபிறகே சென்னை தன்னுடைய பிரத்யேக அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது என்பது என்னுடைய அவதானிப்பு.

புத்தகத்தில் மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் ஞாநி சொன்னது. ஞாநியின் தந்தை சென்னையில் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றியவர். பேரறிஞர் அண்ணா இவரது கல்லூரித் தோழர். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகள் செங்கல்பட்டில் இருந்து நகருக்கு சீசன் டிக்கெட் எடுத்து ரயிலில் வரும் வழக்கம் கொண்டவர் என்பதால் ‘சீசன் டிக்கெட் பயணிகள் சங்கம்’ என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் (ஞாநிக்கே அப்பாவாச்சே?). ஆண்டுதோறும் செங்கல்பட்டில் இந்த சங்கத்தின் ஆண்டுவிழாவுக்கு அண்ணா, ராஜாஜி, காமராஜர் மாதிரி ஆட்கள் சிறப்பு விருந்தினர்களாக வருவார்கள். ஒருமுறை கலைஞர் வந்திருக்கிறார். ஆங்கிலத்தில் சங்கத்தின் பெயர் இருப்பதைக் கண்டவர் கவர்ச்சிகரமாக தமிழில் மாற்றிவைத்த பெயர்தான் இந்த கட்டுரையின் தலைப்பு.


நூல் : சென்னையும் நானும் (பிரபலங்கள் பார்வையில் சென்னை)

பக்கங்கள் : 80, விலை : ரூ.40

வெளியீடு : நம்ம சென்னை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
B-1, கீழ்த்தளம், ஆர்.ஈ. அப்பார்ட்மெண்ட்ஸ்,
70, ஆரிய கவுடர் சாலை, மேற்கு மாம்பலம்,
சென்னை-600 033. போன் : 044-24718501
மின்னஞ்சல் : nammachennai@gmail.com

7 பிப்ரவரி, 2012

கதிரேசன் செட்டியாரின் காதல்

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அழகான வடிவமைப்பு கொண்டவை என்கிற ஒரே காரணத்துக்காகவே சில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று மா.கிருஷ்ணன் எழுதிய ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’. அவரே வரைந்த முகப்பு ஓவியத்தோடு, கவர்ச்சிகரமான தலைப்போடு.. அதேநேரம் மனதை மயக்கக்கூடிய vintage feelingஐ உருவாக்கியது இந்த நூலின் அட்டைப்படம். அட்டையிலேயே subcaption ஆக ‘ஒரு துப்பறியும் நவீனம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பழையநூல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் என்கிற எண்ணத்தோடு, வேறெதுவும் பெரிய எதிர்ப்பார்ப்புகள் இன்றியே புரட்டினேன்.

இந்நூலின் அட்டையை வடிவமைத்த சந்தோஷ் தற்போது உயிர்மை, காலச்சுவடு உள்ளிட்ட பிரபல பதிப்பகங்களின் பெரும்பாலான நூல்களின் மேலட்டையை அலங்கரித்து வருகிறார். ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ நூலில் உள்ளே இடம்பெற்ற படங்களை மிக சுமாரான தரத்தோடு இவர்தான் வரைந்திருக்கிறார். என்னை மாதிரியே சந்தோஷும் இது நாற்பதுகளிலோ, ஐம்பதுகளிலோ நடைபெறும் கதையென்று நினைத்து வரைந்திருப்பார் போல. போலிஸ்காரர்கள் டவுசர் அணிந்திருக்கிறார்கள்.

மாறாக இது 1989ல் நடக்கும் கதையென்று நாவலின் பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1995ல் இந்த நாவலை எழுதத் தொடங்கும்போது நூலாசிரியரின் வயது 83. அடுத்த ஆண்டே காலமாகிறார். அதே ஆண்டுதான் இந்நூலும் முதல் பதிப்பு பெறுகிறது. உலகளவில் பிரபலமான சூழலியலாளரான மா.கிருஷ்ணன் எழுதியிருக்கும் முதல் நாவல் இது. 1970லேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர் இவர். எனக்கென்னவோ நாவலை விட இந்த பின்னுரை ஏகத்துக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

கதிரேசன் செட்டியாரின் வீட்டு வேலைக்காரன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்படுகிறான் என்று முதல் அத்தியாயம் தொடங்குகிறது. நேரடியாக கதைக்குள் இறங்கிவிடும் ஆசிரியர், அடுத்தடுத்து ஏராளமான பாத்திரங்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்தி நிதானமாக டெஸ்ட் மேட்ச் ஆடியிருக்கிறார். விறுவிறுப்பான நடையிலேயே துப்பறியும் நாவல்களை வாசித்து பழகிய நமக்கு இது ஒரு புதுவித அனுபவம்தான்.

ஒரு கொலை மட்டுமே முழுநீள நாவலுக்கு போதுமான சரக்கில்லை என்பதை நாவல் எழுத முயற்சிப்பவர்கள், எழுதியவர்கள் அறிந்திருப்பார்கள். மா.கிருஷ்ணனும் எழுதத் தொடங்கும்போது உணர்ந்திருப்பார். எனவே ஊரில் நடைபெற்ற ஒரு கோயில் கொள்ளையையும் துணைக்கு சேர்த்துக் கொள்கிறார். விவேக், நரேன், கணேஷ்-வசந்த் என்று ஆக்‌ஷன் ஹீரோக்களையே பெரியளவில் வாசித்த நமக்கு இந்நூலில் ஆற, அமர விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரிகள் ‘திக்கை’யாக தெரிவதில் ஆச்சரியமேதுமில்லை.

நூலின் மிகப்பெரிய பலம் மா.கிருஷ்ணனின் மொழி. இவ்வளவு வசீகரமான மொழியை சமீபத்தில் நான் வாசித்ததேயில்லை. விசாரணை அதிகாரியான முகைதீன் என்கிற பாய் கூட ‘அவா ஊதுனா, இவா வருவா’ ஸ்டைலில் பிராமண பாஷைதான் பேசுகிறார். இந்த மாதிரி ‘லாஜிக்’கெல்லாம் பெரிய பொருட்டல்ல என்று நினைக்கக்கூடிய வாசிப்பின்பப் பிரியர்களுக்கு இந்நூல் சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் சைட் டிஷ்ஷாக கொண்ட மட்டன் பிரியாணி விருந்து.

ஏகத்துக்கும் கேரக்டர்களை அறிமுகப்படுத்திவிட்டு ஆசிரியர் திணறுவதாக சில இடங்களில் தோன்றுகிறது. முடிச்சு மேல் முடிச்சு போட்டுவிட்டு அவிழ்ப்பது என்பதுதான் க்ரைம் தில்லர்களின் அடிப்படையே. மாறாக எங்கே முடிச்சுப் போட்டோம், அதை எங்கே அவிழ்க்கப் போகிறோம் என்கிற திட்டமிடல் க்ரைம் நாவல்களை எழுதுபவர்களுக்கு அவசியம். மசலா கதைகளுக்கு லாஜிக் பார்ப்பது பாவம்தானென்றாலும், 89ல் மதுரைக்கு அருகிலிருக்கும் ஒரு சிறுநகர காவல்நிலையத்தில் போன் கூட இருக்காதா என்றெல்லாம் எடக்குமடக்காக யோசிக்கத் தோன்றுகிறது. இந்நாவலை மட்டும் லாஜிக் லபக்குதாஸூகளான விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் வாசித்தால், கிழித்து தோரணம் மாட்டி, வூடு கட்டி குத்தாட்டம் போடுவார்.

இருபத்தாறு அத்தியாயங்கள் வரை சாவகாசமாக வெத்தலைப்போட்டு அன்னநடை நடந்துக் கொண்டிருந்த நாவலாசிரியர் திடீரென முடிக்கும் பொருட்டு சஸ்பென்ஸை மொக்கையாக கட்டுடைக்கிறார். அதன் பிறகு திடீரென கதைக்கும், கதையின் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று யோசித்திருப்பார். நாவலின் கடைசி மூன்று பாராகிராப்புகளில் அட்டகாசமாக சம்பந்தப்படுத்தி முடிக்கிறார். இந்த ‘யூ’ டர்ன்தான் இந்நாவலை ஒரு கலைப்படைப்பாக மனதுக்குள் நிறுத்துகிறது. இதுவரை வாசித்த கதையின் பரிமாணத்தை அப்படியே ஒட்டுமொத்தமாக வேறு பரிமாணத்துக்கு அள்ளிச் செல்லுகிறது. இந்த புதிய பரிமாணத்தில் மீண்டும் ஒருமுறை உடனே வாசிக்க வைக்கத் தூண்டுகிறது.


நூல் : கதிரேசன் செட்டியாரின் காதல்

ஆசிரியர் : மா.கிருஷ்ணன்

பக்கங்கள் : 244

விலை : ரூ.125/-

வெளியீடு : மதுரை பிரஸ்
60-பி, கோதண்டராமர் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.
மின்னஞ்சல் : maduraipress@gmail.com

13 ஜனவரி, 2012

டேபிள் டென்னிஸ்!


வயதுக்கும், மனதுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விளையாடிக் கொண்டேயிருக்கிறோம். சில நேரங்களில் கிரிக்கெட். பல நேரங்களில் ஓட்டப்பந்தயம். கேரம்போர்ட், செஸ், செக்ஸ்.. எந்த விளையாட்டு விளையாடினாலும் போங்கு ஆட்டம் ஆடுபவர்களும் இருக்கவே செய்வார்கள்.

48 வயது. உடல் ஒத்துழைத்திருந்தால் டென்னிஸ் விளையாடியிருப்பார் கோபிகிருஷ்ணன். அதிவேகமாக மனம் ஒத்துழைத்ததால் டேபிள் டென்னிஸ் ஆடியிருக்கிறார். டென்னிஸை விட டேபிள் டென்னிஸுக்கு வேகமாக இயங்க வேண்டும். ஆனால் டென்னிஸ் போல இங்கும் அங்குமாக ஓடியாடி உழைப்பை பெருமளவில் கொட்ட வேண்டியதில்லை. பெண்ணாக பிறந்திருந்தால் கோபிகிருஷ்ணனை காதலித்திருக்கலாம். இரண்டு நாட்களாக சிந்தையெல்லாம் விஸ்வரூபமெடுத்து கொன்று கொண்டிருக்கிறார். காதலும், காமமுமாக பொழுது இப்போதெல்லாம் பரவசமாயிருக்கிறது.

அத்தியாயத் தலைப்புகளாக கேம் பாயிண்டுகள். ஒவ்வொரு அத்தியாயமும் இவ்வளவு நீளம், இவ்வளவு அகலம் என்றெல்லாம் எந்த வரையறையும் இல்லை. போன அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்குமான தொடர்ச்சிகள் எதுவுமில்லை. புத்தகத்தில் எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் முன்பின்னாக நகர்ந்து வாசித்துக் கொள்ளலாம். குறுநாவல் என்று சொல்லப்பட்டாலும் நாவல், குறுநாவல், சிறுகதைத் தொகுப்பு, சுயசரிதை என்றெல்லாம் எப்படியுமே வகைப்படுத்த இயலாத வினோத வடிவம். சாருநிவேதிதாவின் ராஸலீலாவுக்கு இந்நூலை முன்னோடியாக எடுத்துக் கொள்ளலாம், சாரு ஒத்துக்கொள்ளா விட்டாலும் கூட.

என்னுரையிலேயே தெளிவாக சொல்லிவிடுகிறார். படைப்பில் இருக்கும் (கவனிக்கவும் நாவலில் அல்ல, படைப்பில்) சம்பவங்கள் அனைத்துமே மனப்பதிவுகளாகக் கொள்ளப்பட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். டேபிள் டென்னிஸ் ஒரு உளவியல் ஆவணமென்பதாலேயே பிரசுரிக்கப்பட வேண்டியதற்கான நியாயத்தைப் பெறுகிறது என்று justify செய்கிறார்.

சரி. டேபிள் டென்னிஸின் கதைதான் என்ன?

கோபிகிருஷ்ணனுக்கே இந்தக் கேள்விக்கு விடை தெரியாது. நாற்பத்தெட்டு பக்க (எழுதும்போது அவர் வயசும் 48) நோட்டுப் புத்தக அளவில் இருக்கும் புத்தகத்தில் எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம் காதலும், காமமும், இவற்றால் விளையும் பரவசமும். பண்பாடு, கலாச்சார கந்தாயங்களால் காயடிக்கப்பட்டவர்களுக்கு - பாலியல் வாய்ப்புகள் தாராளமாக கிடைத்தாலும் பாலியல் வறட்சியில் வாடுபவர்களுக்கு - டேபிள் டென்னிஸின் Erotica கிளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று அனுமானித்திருக்கிறார். ’...ச்சீ’ என்று வெட்கப்படுபவர்களோ அல்லது பாலுறவைப் பாவம் என்று நம்பும் மனநோயாளிகளோ இந்தப் பக்கமே வராதீர்கள் என்று ஆரம்பத்திலேயே துரத்தியடித்தும் விடுகிறார்.

“நடுவில் உருவி விட்டுக்கொண்டு வர இயலாது தோழரே” - முதல் ஷாட்டிலேயே பாயிண்ட் அடித்துவிட்டு பிறகு ஆற அமர செட்டில் ஆகிவிட்டு விளையாடுகிறார். வாசகனையும் விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்கிறார். இங்கே ஆசிரியனுக்கும், வாசகனுக்கும் பாயிண்ட் ட்யூஸ். நூல் முழுக்க விரவியிருக்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட பக்கத்தில் டிக்‌ஷனரியை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

”என்ன கடினமான உழைப்பானாலும் அழகியின் கேசமும் மார்பகங்களும் ஒரு இதம்தான்” இதுபோல அழகியல் வர்ணனைகள் வாசிக்கும்போதே மனதுக்கு இதம். வாசகனின் கற்பனை ரெக்கை கட்டி ஜெட்விமான வேகத்தில் வானுக்கு பறக்க அவகாசமும் கிடைக்கிறது. “இடுப்புக்கு கீழே நீ ஒரு புரட்சிக்காரிதான்” பாலுணர்வை நயமாக, அலுங்காமல், குலுங்காமல் பகிர்ந்து கொள்கிறார்.

“இழவுச் சாமியார் ஒரு கொழுத்த பன்றி. ருத்திராசக் கொட்டைகள் அவரது கொட்டைகளைவிட மிகச் சிறியவை. முருகர் வியாபாரம். நல்ல லாபம். வேல் வேல் வெற்றி வேல்” - நகைக்கவும் சில தருணங்கள். “ஐயங்கார் : மனைவியுடன் படுப்பது சிற்றின்பம். பிற பெண்களுடன் படுப்பது பேரின்பம்”

“ஆயுத பூசை. குங்குமம் இடப்பட்ட குறி அவசரகதியில் நுழைந்தது உள்ளே. உச்சக்கட்ட சிலிர்ப்பின் போது கற்பூரம் ஏற்றி வழிகாட்டினாள் எங்க பேட்டை அம்மன். அம்மனுக்குத்தான் எத்தனை வாளிப்பான உடம்பு! ஓரிரவு படுக்கைத் தோழியாக இருக்க இசை. குறி கேட்கிறது. அவிழ்த்துவிடு. இறுக்கம் தாளமுடியவில்லை. திருக்கரங்களைப் படரவிடு” - இவ்வளவு இயல்பாக, அசூயை கொல்லும் வார்த்தைகள் இல்லாமல் காமத்தை எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட புத்தகம் நெடுகிலும் காமம் குலுக்கப்பட்ட ஷாம்பெயின் பாட்டிலாக பொங்கி வழிகிறது. இன்னொரு சின்ன உதாரணம். “அவளுக்கு என்ன ஆகிவிட்டது இன்றிரவு? தலையில் இருந்த பூச்சரத்தை எடுத்துக் குறிக்குச் சுற்றிவிட்டாள். மணம் பிரமாதம்”.

”Black Knight அரை போத்தலில் அருமையான போதை”. சூழலை எப்போதும் கொண்டாட்டமாக வைத்திருப்பவர்கள் தான் இதுமாதிரி வரிகளை எழுதமுடியும். “தங்கள் Panties சாம்பல் நிறம்தானே என்றேன் தணிந்த குரலில். இடது கன்னத்தில் உள்ளங்கையை வைத்து முகத்தை தள்ளினார். வலது கன்னத்திலும் கையை வையுங்கள்; பிரான் அப்படித்தானே உபதேசித்திருக்கிறார் என்றேன்” கிறிஸ்தவ தேவதை ஒருவருடனான கிருஷ்ணனின் அனுபவம். காமமும், காதலும் ஒரு கொடியில் பூத்த இருமலர்களே.

“என் காதலிகூடக் காலையில் கக்கூஸுக்குத்தான் போகிறாள்” - புனிதமயமாக்கப்பட்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட காதலை இதைவிட அழகாக கட்டுடைக்கமுடியுமா?

”ஒரு schic எப்படிக் கவிதைகள் எழுதமுடியும் என்று கேட்டார். என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், நானே ஒரு paranoid schic என்றேன். இல்லை, நீங்கள் விளையாடுகிறீர்கள், ஒரு மனநோயாளியால் இவ்வளவு தெளிவாக விவாதிக்க முடியாது என்றார். 1974ல் 45 நாட்களும் 1980-ல் 10 நாட்களும் மனநலக் காப்பக நரகத்தில் சிகிச்சை பெற்றேன் என்று சொன்னேன்” - ஒரு மனநோயாளியாக் இருப்பது எவ்வளவு பெரிய பேறு. கோபிகிருஷ்ணனுக்கு வாய்த்திருக்கிறது. வாய்க்கப்படாதவர்கள் பூமியில் வாழும்போதே வாழ்நாள் முழுக்க நரகத்தில் உழல்கிறார்கள். நூலை வாசித்த கணத்தில் இருந்து பருத்த முலைகளும், சிகப்பு யோனிகளும் மனசெல்லாம் நிறைகிறது.


நூல் : டேபிள் டென்னிஸ்
பக்கங்கள் : 48
விலை : ரூ.15
பதிப்பகம் : தமிழினி, 342, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.

10 ஜனவரி, 2012

வால்கள்!


குறும்பு குத்தாட்டம் போடும் கும்மிகளை ஏன் ‘வாலு’ என்று அழைக்கிறார்கள் என்ற சந்தேகம் சிறுவயதில் இருந்தது. குரங்கு என்று நாகரீகமாக அழைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே ‘வாலு’ வந்தது என்று பிற்பாடுதான் தெரியவந்தது. நரிக்கும் வாலுண்டு, ஓநாய்க்கும் வாலுண்டு. ஏனோ தந்திரவாதிகளை வாலு என்று அழைக்காமல் ஓநாய் என்கிறார்கள். குரங்கு நல்ல விலங்கு என்பதாலோ?

ராஜேந்திரகுமார் என்றால் என்ன நினைவுக்கு வரும்? முதலில் நினைவுக்கு வருவது தொப்பி. அடுத்தது ‘ஙே’. இந்த ‘ஙே’ என்ற எழுத்தை தமிழில் எனக்குத் தெரிந்து பயன்படுத்தியவர் இவர் மட்டும்தான். ஒருவேளை சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ’ஙே’-வுக்கு அடுத்தது பேய்க்கதைகள். சிறுவயதில் அவரது நிறைய பேய்க்கதைகளை படித்து பயந்திருக்கிறேன். அப்புறமாக பேய்களோடு வசதியாக சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு டிஃபன் சாப்பிடும் லெவலுக்கு பழகிப்போனது.

ராஜேந்திரகுமாரின் பேய்கள் பொதுவாக நல்ல பேய்கள். கெட்டவரை பழிவாங்குவதோடு சமர்த்தாக மரத்தில் தொங்க ஆரம்பித்துவிடும். டீனேஜுக்குள் நுழையும்போது அவரது சில எழுத்துக்கள் கிளுகிளுப்பும் ஊட்டியதுண்டு. விட்டலாச்சாரியா படங்களில் வருவதுபோல சில பேய்கள் இவரது கதைகளில் மனிதர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டதும் கூட நினைவுக்கு வருகிறது.

மாலைமதி, குங்குமச்சிமிழ் மாதிரியான பத்திரிகைகளின் தீவிரவிசிறியான அம்மா மட்டுமே ராஜேந்திரகுமாரை ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று என்பார். அவர் குமுதத்தில் எழுதிய நகைச்சுவைத் தொடர் ‘வால்கள்’. மாணவியாக இருந்தபோது இடைவிடாமல் படித்ததாக அம்மா சொல்லுவார். வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் தொடராம். ‘வால்கள்’ வந்தபோது அம்மாவுக்கு எட்டுவயசாம். அப்போன்னா ராஜேந்திரகுமாருக்கு என்ன வயசு இருக்கும்? தாத்தா வீட்டில் ’பொன்னியின் செல்வன்’ தவிர்த்து வேறு தொடர்கதைகளை ‘பைண்டு’ செய்து வைக்கும் வழக்கம் இல்லாததால் எனக்கு எதிர்ப்பார்ப்புகளை கிளப்பிய வால்களை நீண்டகாலமாக வாசிக்கும் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தது.

கிழக்குப் பதிப்பகத்தின் அதிரடிக் கண்காட்சி ஒன்றில் ‘வால்கள்’ கிடைத்தது ஆச்சரியமான ஒன்று. மே 2006லேயே வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு எப்படி தெரியாமல் போயிற்று?

நூலை விடுங்கள். கிழக்கு தந்திருக்கும் முன்னுரை நல்ல சுவாரஸ்யம். ராஜேந்திரகுமாருக்கு வாசகர் வட்டம் பரவியதே வால்களுக்குப் பின்னர்தானாம். 1963ல் இது தொடராக வந்தபின்னர் ஏராளமான தொடர்கதைகள், சிறுகதைகளை எழுதி தமிழ்வார இதழ்களின் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தாராம். இதே காலக்கட்டத்தில் ராஜேஷ்குமார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். திரைப்படத்துறையிலும் ராஜேந்திரகுமார் வெற்றிகண்டதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னென்ன படங்கள் என்று யாராவது பெருசுகள் பின்னூட்டத்தில் எடுத்துத்தந்தால் தேவலை.

மாவடிபுரம் லேடி சாமுவேல் நினைவு பெண்கள் உயர்நிலைப்பள்ளி. ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவைக் கண்டாலே மாவடிபுரத்துக்கு அலர்ஜி. அந்த ஊரின் வால்கள் மொத்தத்தையும் இந்த பிரிவிலேயே சிறை வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒரு யமன். பள்ளி ஆசிரியைகளுக்கோ அந்த வகுப்புக்கு போகும் ஒவ்வொரு பீரியடும் சிம்ம சொப்பனம் தான். உள்ளே புகுந்ததுமே ‘பே’ என்று பேய்க்கத்து கத்தி அலறவைப்பார்கள். ஆசிரியைகள் ’ஙே’ என்று விழிக்க வேண்டியதுதான்.

லீடர் அணிலா, சினிமாநட்சத்திரத்தின் தங்கை பிரேமாதேவி, மைதிலி, வைதேகி, ரேவம்மா, போட்டோகிராபர் சோணாச்சலம்,சீதா, விஜயா, மிலிட்டரி புருஷன் அடிக்கடி கொஞ்சும் மரகதம் டீச்சர், தலைமையாசிரியை என்று நிறைய கேரக்டர்கள். வாலுகள் சமைக்கிறார்கள், படிக்கிறார்கள், பிக்னிக் போகிறார்கள், சினிமா பார்க்கிறார்கள், நூல் முழுக்க கலகலப்பு. ஆனால், நிச்சயமாக இது குழந்தைகள் இலக்கியம் அல்ல. ஆண்ட்டிகள் படித்தால் மலரும் நினைவுகள். ஸ்கூல் ஃபிகர்கள் படித்தால் நடப்பு வாழ்க்கை. ஆண்களுக்கோ டீனேஜ் பெண்களின் புது உலகம். இளமையாக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. நிச்சயம் வாசிக்கலாம். 1960 என்றாலே பிளாக் & ஒயிட்டில் அழுதுவடியும் படங்கள் நினைவுக்கு வருகிறது. ஃபிலிம் மட்டும் தான் கருப்புவெள்ளை, வாழ்க்கை அப்போதும் கலர்ஃபுல்லாகவே இருந்தது என்பதற்கு இந்நூல் நல்ல ஆதாரம்.

ஆனால், எனக்கு அம்மா சொன்னமாதிரி குலுங்க குலுங்க சிரிக்கவைக்கவில்லை. கிழக்கு பதிப்பகம் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது மாதிரி ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக புன்னகை வந்தது அவ்வளவுதான். கிழக்கு பதிப்பக நூல்கள் மீது பலரும், பலவிதமான விமர்சனங்களை வைப்பதுண்டு. என்னுடைய விமர்சனம் என்னவென்றால் இவர்கள் நகைச்சுவை என்று வகைப்படுத்தி பிரசுரிக்கும் நூல்கள் எனக்கு நகைச்சுவையை வரவழைப்பதில்லை, கிரேஸிமோகன் நூல்கள் மாதிரியான ஓரிரண்டு நீங்கலாக. மற்றபடி வெகுஜனவாசிப்புக்கான புதிய தளத்துக்கான கதவுகளை மிக விசாலமாகவே திறந்துவைத்திருக்கிறார்கள் கிழக்குப் பதிப்பகத்தார்.


நூலின் பெயர் : வால்கள்!

நூல் ஆசிரியர் : ராஜேந்திரகுமார்

விலை : ரூ.70/-

பக்கங்கள் : 96

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
177/103, முதல் தளம், அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
ராயப்பேட்டை, சென்னை - 600 014.
தொலைபேசி : 044-42009601
தொலைநகல் : 044-43009701

31 டிசம்பர், 2011

சோழிகள் - குறுநாவல் விமர்சனம்!

"சிரித்தபடி சிதறின சோழிகள்" இவ்வளவு எளிமையான ஒரு அறிமுகத்தோடு கூடிய ஒரு கதையை வாசித்ததாக நினைவேயில்லை.

ரேகை ஜோசியம் பார்த்திருக்கிறேன். கிளி ஜோசியம் பார்த்திருக்கிறேன். எலி ஜோசியம் பார்த்திருக்கிறேன். ஏன் கொஞ்சநாட்களுக்கு முன்பாக ஆக்டோபஸ் ஜோசியம் கூட பார்த்திருக்கிறேன். சோழிகளை உருட்டி ஆரூடம் சொல்லுவது எனக்கு புதிது. நாவலுக்கான காலம் ஐம்பதுகள் என்பதால், அப்போது ஒருவேளை இம்முறை பரவலாக இருந்திருக்கலாம்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் வார்த்தைகளை கொண்ட இந்த நெடுங்கதையில் மொத்தமே ஐந்தே ஐந்து பாத்திரங்கள். இவர்கள் பேசிக்கொள்ளும் இடங்களும் ரொம்ப குறைவு என்பதால், மீதி இடங்களை எழுத்தாளரே எடுத்துக்கொண்டு பேசித்தீர்க்க வேண்டிய கட்டாயம். சலசலவென்று ஓயாமல் ஓடைபோல பேசிக்கொண்டே இருக்கிறார். மனித வாழ்வு தொடர்பான எதிர்மறை நியதிகளை விசாரிக்கும் நேர்மறை சிந்தனைகள். கொஞ்சம் நவீனமாகச் சொல்லவேண்டுமானால், 'பார்ப்பனத் தமிழில் புரட்சிவாதம்' என்றுகூட சோழிகளை சொல்லலாம்.

திருவல்லிக்கேணி கதைக்கான களம். அறுபதைக் கடந்த ராயர் நாயகன். ஜோசியம் முழுநேரத் தொழிலல்ல என்றாலும், கேட்பவர்களுக்கு சோழிகளை உருட்டித் துல்லியமாக சொல்கிறார். வாழ்வின் இறுதிக்காலத்தை மற்றவர்களுக்கு உதவி நிம்மதியாக வாழநினைக்கும் பரந்த மனப்பான்மை கொண்டவர். திருவல்லிக்கேணி இடையர்களுக்கு அடிக்கடி மாடு தொலைந்துபோவது பெரியப் பிரச்சினை. ராயரிடம் ஆரூடம் கேட்பார்கள். "மந்தவெளி காடுதாண்டி நடைபோடுது. சாயரக்‌ஷைக்குள்ளே பிடிச்சாந்துடு. கோபதாபத்துலக் குச்சிய வீசிடப் படாது. வாயில்லா ஜீவனை அடிக்கறதுக்கான ஆயுதமில்லையே இதுசும்மா அதட்டதான் புரியறதோ" - பெரும்பாலும் இதுதான் ராயரின் ஜோசியம்.

ஒருநாள் சூர்யஸ்தமனத்துக்குப் பிறகு கைக்குழந்தையோடு ஒரு பெண் வருகிறாள். வெள்ளிக்கிழமை கார்த்தாலே வேலைக்குப் போன ஆத்துக்காரர் ரெண்டு நாளா வீடு திரும்பலை. "ஆரூடம் பார்க்கோணும் ஸாமி" எப்படி கேட்கக்கூடாதோ அப்படிக் கேட்கிறாள். ராகவேந்திரசாமிகள் மீது பாரத்தை போட்டுவிட்டு சோழிகளை உருட்டுகிறார் ராயர். அவராலேயே நம்பமுடியவில்லை. உருண்ட சோழிகள் உண்மையை சொல்கிறது. இதுவரை இப்படியொரு ஆரூடம் சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்ததில்லை. ஒருவேளை சோழிகள் பொய் சொல்கிறதோ?

மீண்டும் உருட்டுகிறார். மீண்டும் அதே பதில். இவர் கேட்க கேட்க சோழிகள் எந்த உணர்வுமில்லாமல் சொன்ன பதிலையே திரும்ப சொல்கிறது. சோழிகள் அஃறிணை. உணர்ச்சியோ நெகிழ்ச்சியோ கிடையாது. ராயர் மனிதர் ஆயிற்றே? அந்தப் பெண்ணுக்கு என்ன பதில் சொல்வார்? குழந்தைக்கு ஒன்று, ஒன்றரை வயதுதான் இருக்கும். "என்னமோ தெரியல. கணக்கு தப்பாவே வந்துண்டிருக்கு. செத்த ஸ்ரமம் பாக்காம காத்தால வர முடியுமாம்மா" என்று சமாதானம் சொல்லி அனுப்புகிறார்.

அந்த கிருஷ்ணபட்சத்து இரவு ராயருக்கு தூங்கா இரவு. அவரது பத்தினி சுலோசனா பாய் தனது பர்த்தாவை இந்தக் கோலத்தில் கண்டதேயில்லை. கடவுளோடு மனதில் பேசுகிறார். அல்ப மனித வாழ்வு குறித்த ஆத்ம விசாரம். தர்ம நியாயம். காற்றில் வெறுமனே கத்தி சுத்தி களைப்படைகிறார். இவ்வளவுதானா மனிதவாழ்வு? காலையில் அந்தப் பெண் வந்துவிடுவாள். மகள் வயதில் இருப்பவளிடம் என்ன பதில் சொல்வது? சோழிகள் சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்லிவிடலாமா? நல்ல ஆரூடம் சொல்வேன் என்று என்னை நம்பி வந்தவளை நானே ஏமாற்றலாமா?

இப்படியாகப் போகிறது கதை. கடைசியில் "நதி எதுவாய் இருந்தாலும் சங்கமித்தாக வேண்டிய இடம்தானே கடல்" என்ற யதார்த்த வரியோடு முடிகிறது.

விமலாதித்த மாமல்லன் எடுத்தாண்டிருக்கும் பார்ப்பன மொழி மிக மிக அழகானது. தூர்தர்ஷன் நாடகங்களிலும், தமிழ் சினிமாவிலும் நாம் கண்ட, கேட்ட மொழியல்ல இது. நாவல் முழுக்கவே இம்மொழியாளுகை மிகச்சிறப்பாக எழுத்தாளருக்கு கைவந்திருக்கிறது. ஆனாலும் ஒரு நறுக்கென்ற சிறுகதைக்கான புள்ளியை குறுநாவலாக - வேறு சில சம்பவங்களை புத்திசாலித்தனமாக கோர்த்திருந்தாலும் - நீளமாக இழுத்திருப்பதால், இடையில் மெகாசீரியல் அலுப்பு வாசகனுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கதையின் தொடக்கத்தில் பார்த்தசாரதி கோயில் பட்டரோடு ராயர் பேசும் சமூக விவாதம் இக்கதையின் ஹைலைட் என்று எடுத்துக் கொள்ளலாம், அது கதைக்கு சம்பந்தமற்ற, இடைச்செருகலான நிகழ்ச்சி என்றபோதிலும்.

"பிராம்மண குலத்தையே வாய்க்கு வந்தபடி தூஷிக்கிற துடைப்பக்கட்டைப் பயல்களுக்கெல்லாம் சோழி உருட்டி ஜோசியம் சொல்றீரே சொரணை இல்லையோ உமக்கு" - பட்டர்.

ராயர் சிரிக்கிறார்.


"நேக்கு வயத்தப் பத்திண்டு வரதுக்கு சிரிப்பா இருக்காங்காணும்"

"படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோயில்னு இருக்கறவாளைப் பாத்து சிரிக்காம வேற எண்ணப் பண்ணச் சொல்றேள்"

"நாத்தழும்பேற நாஸ்திகவாதம் பேசற நாய்களைப் போய் சப்போர்ட் பண்றீரே நியாயமாய்ப் பட்றதா உமக்கு"

ராயர் ஒரு நீண்ட விளக்கம் கொடுக்கிறார். பூணூல் போட்டிருந்தா பார்ப்பானா? போட்டவாளுக்குப் பொறந்துட்டா பார்ப்பானா? எத்தனை பேரு வேளை தவறாம சந்தி பண்றான்? எத்தனை பேரு அர்த்தம் புரிஞ்சி காயத்ரி சொல்றான்? முக்காலே மூணு வீசம் பேருக்கு முதுகு சொறியத்தான் பூணூல் உபயோகப்பட்டுண்டிருக்கு என்று பிராமண நிந்தனை செய்கிறார்.

"க்ருஷ்ண. க்ருஷ்ண" என்று தலையில் அடித்துக் கொள்ளும் பட்டர், "என்னங்காணும் நீர். நாயக்கரை (பெரியாரை) தோக்கடிச்சிடுவீர் போலிருக்கே? உம்ம பூணூலை கழட்டிப் போட்டுற வேண்டியதுதானே?" என்று சொல்லிவிட்டு பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடுகிறார்.

டீடெய்லிங் கொடுப்பதில் விமலாதித்த மாமல்லன் கிங். கதாபாத்திரங்களுக்கான விவரணை ஆகட்டும், போலவே சம்பவங்களுக்கான விவரணை ஆகட்டும். மிக சுவாரஸ்யமாக, விஸ்தாரமாக - திண்ணையில் அமர்ந்து வெத்தலைப்பெட்டி செல்லத்தை திறந்து இலையின் காம்பை ஒடித்து, விரலில் சுண்ணாம்பு சுரண்டி இலையின் பின்பக்கத்தில் அளவுப் பார்த்து தடவி, ஏ.ஆர்.ஆர். சுகந்தப் பாக்கு சேர்த்து, சொகுசாக வெத்தலைப்போடும் லாவகம் அவரது எழுத்துகளில் மிளிர்கிறது.

1994ல் எழுதப்பட்ட இந்த குறுநாவல் 1996ல் மாலைக்கதிர் இதழில் வெளிவந்திருக்கிறது. இருபது வயதுகளிலேயே தீவிர இலக்கியத்தில் முத்துக்குளித்து, தமிழிலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக கவனிக்கப்பட்ட இவர் அடிக்கடி வாழ்விலும் சரி, இலக்கியத்திலும் சரி சந்நியாசம் வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட இவரின் பதினாறு ஆண்டுகால வனவாசத்தை அகநாழிகை இலக்கிய இதழ் முடித்து வைத்திருக்கிறது. 'சோழிகள்' குறுநாவல் செப்டம்பர் - நவம்பர் 2010 தேதியிட்ட அகநாழிகை இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இவரின் கும்பகர்ண இலக்கியத் தூக்கத்தை நீர் தெளித்து எழுப்பியிருக்கிறார் அகநாழிகை ஆசிரியர் பொன்.வாசுதேவன். இதன் மூலமாக அடுத்த இலக்கிய இன்னிங்சை துவக்குவதற்கான வாய்ப்பு விமலாதித்த மாமல்லனுக்கு வாய்த்திருக்கிறது. இச்சூழலில் இது ஒரு முக்கியமான இலக்கிய நடவடிக்கையாக கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

இடைப்பட்ட காலத்தில் ஒன் டே மாட்சுகள் மட்டுமின்றி, டி20 மாட்சுகளும் பிரபலமாகி விட்டது மாமல்லன் சார். இதையும் கொஞ்சம் கவனத்தில் கொண்டு விளையாடுங்க. உங்க அடுத்த இன்னிங்ஸுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!


விமலாதித்த மாமல்லன் கதைகள் - கடந்தாண்டு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளில் இவர் எழுதிய மொத்த முப்பது கதைகளும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. விலை ரூ.180. பக்கங்கள் : 312

சில இணைப்புகள் :