31 அக்டோபர், 2009

ஆதலினால் கல்வி கற்பீர்!


சென்னைக்கு அருகில் இருக்கும் ஆவடியில் நந்தகுமாரின் இளமைப்பிராயம் கழிந்தது. பண்ணிரண்டு வயது. ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். பள்ளிக்குச் செல்வது வேப்பங்காயாய் கசந்தது. கற்கும் பாடங்கள் நினைவில் நிற்பதில்லை. கற்றல் குறைபாடு அவருக்கு தீராதப் பிரச்சினையாக இருந்தது. ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா (Dyselxia) என்று அழைக்கப்படும் இந்த உளவியல் பிரச்சினை கற்றல் தொடர்பானது.

பள்ளிக்குச் செல்வதை நிறுத்தும் மாணவர்கள் வழக்கமாக நம்மூரில் என்னவெல்லாம் செய்வார்களோ, அதையே தான் நந்தாவும் செய்தார். லாட்டரி டிக்கெட் விற்றார். வீடியோ கடையில் எடுபிடியாக வேலை பார்த்தார். மெக்கானிக் ஷெட்டில் கையில் க்ரீஸ் அழுக்கோடு நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருந்தது. ஜெராக்ஸ் கடையில் சில காலம். இப்படியாக எதிர்காலம் குறித்த எந்த தெளிவான முடிவும் அவரிடம் இல்லாமல் வாழ்க்கை சக்கரம் சுற்றிக் கொண்டிருந்தது.

பிரச்சினை நந்தகுமாரோடு முடிந்துவிட்டிருந்தால் தேவலை. நந்தகுமாருக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. முன் ஏர் எப்படிப் போகுமோ, அப்படித்தான் பின் ஏரும் போகும் என்பது ஊர்களில் பேசப்படும் சொலவடை. நந்தகுமாரைப் பின்பற்றி அவரது தங்கைகளும், தம்பியும் மிகச்சரியாக, சொல்லி வைத்தாற்போல் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள்.

ஒரு குடும்பத்தின் நான்கு வாரிசுகளுமே கல்வியை பாதியில் விட்டால், சமூகம் அந்தக் குடும்பத்தை எப்படிப் பார்க்கும்? இத்தனைக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத அளவுக்கு வறுமையெல்லாம் அக்குடும்பத்தில் இல்லை. தெருப்பிள்ளைகள் இவர்களோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. “அந்தப் பசங்க மக்குப்பசங்க. அவங்களோட சேர்ந்தா நீங்களும் மக்காயிடுவீங்க!” உற்றாரும், உறவினரும் கேலியாகவும், கிண்டலாகவும் நால்வரையும் பார்த்தார்கள்.

புத்தருக்கு ஞானம் கிடைக்க போதிமரம் கிடைத்தது. போதிமரத்தடியில் உட்காராமலேயே திடீரென ஒருநாள் புத்தர் ஆனார் நந்தகுமார். பள்ளிக்குப் போகாமலேயே பிரைவேட்டாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் என்ன? நண்பர் ஒருவர் அதுபோல எழுதலாம் என்று ஆலோசனை சொல்ல எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்தார் நந்தா. இந்த வெற்றி தந்த பெருமிதம் பத்தாம் வகுப்புத் தேர்வையும் எழுதவைத்தது. இதுவும் பாஸ். “அடடே. எல்லாமே ஈஸியா இருக்கே? பள்ளியிலேயே சேர்ந்து படிக்கலாம் போலிருக்கே?” என்று எண்ணினார் நந்தா. எட்டாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் பிரைவேட்டாக எழுதிய அவரை +1 வகுப்பில் சேர்க்க பள்ளிகள் மறுத்தன. போராடிப் பார்த்தார். முடியவில்லை. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல +2 தேர்வையும் பிரைவேட்டாகவே எழுதி வென்றார் நந்தா.

இப்போது கல்லூரியில் சேர்ந்து பயிலும் ஆசை நந்தாவுக்குள் முளைவிட்டிருந்தது. பள்ளியில் படிக்காமல் எட்டு, பத்து, பண்ணிரெண்டு என்று எல்லா வகுப்புகளையுமே பிரைவேட்டாக தேறியிருந்த நந்தாவை சேர்த்துக்கொள்ள கல்லூரிகளுக்கு மனமில்லை. கல்லூரிதோறும் கால்கடுக்க ஏறி, இறங்கி கடைசியாக வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆங்கிலம் இளங்கலை படிப்பை படிக்க ஆரம்பித்தார் நந்தா. அம்பேத்கர் கல்லூரியில் இளங்கலை முடிந்ததும் சென்னை மாநிலக்கல்லூரியில் அதே ஆங்கில இலக்கியத்தை முதுகலையாக கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போது கல்வி தவிர்த்து, என்.சி.சி. போன்ற விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

முதுகலைப்பட்டம் பெற்ற பிறகும் ‘என்னவாக ஆகப்போகிறோம்?’ என்று எந்த முன்முடிவும் நந்தாவிடம் இல்லை. என்.சி.சி.யில் இருந்ததால் இராணுவம் தொடர்பான பணி எதிலாவது சேரலாம் என்று நினைத்தார். சென்னையில் இராணுவ அதிகாரிகளை உருவாக்கும் ஆபிஸர்ஸ் டிரைனிங் அகாடமி (OTA)-யில் சேர்ந்தார். இடையில் ஒரு விபத்து ஏற்பட, அந்தப் படிப்பையும் பாதியில் விட வேண்டியதாயிற்று.

அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து அறிந்தார். அதுவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்றால் பட்டப்படிப்பு போல மூன்று வருடங்கள் படிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எல்லோரையும் போல நந்தாவும் நினைத்திருந்தார். சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டித்தேர்வு போதுமானது என்ற விஷயமே நந்தாவை மிகவும் கவர்ந்தது.

இன்று நந்தகுமார், ஐ.ஆர்.எஸ், சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தில் துணை ஆணையளராகப் பணிபுரிகிறார். ஒரு காலத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் சேர்க்கத் தயங்கிய மாணவர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, நாட்டை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்.

முப்பத்து மூன்று வயதான நந்தகுமாரை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

“எனக்கே எல்லாமே ஆச்சரியமாதாங்க இருக்கு. திடீருன்னு மறுபடியும் படிக்கணும்னு ஆர்வம் வந்தது. விடாமுயற்சியோடு, கடுமையாகப் படித்தேன்னு எல்லாம் சொல்லமுடியாது. சின்சியரா படிச்சேன். அவ்ளோதான்” என்று அளவாகப் புன்னகைக்கிறார்.

“கல்வி மிக மிக முக்கியமானதுங்க. ஆனா நம்மோட கல்விமுறையிலே எனக்கு கொஞ்சம் அதிருப்தி இருக்கு. நம்ம கல்விமுறை படிப்பாளிகளை உருவாக்குதே தவிர, அறிவாளிகளை உருவாக்குவதாக தெரியவில்லை. மாணவர்கள் கல்வி என்றால் கசப்பானது என்று நினைக்காமல் ஆர்வத்தோடு பள்ளிக்கு வரும் வகையில் நம்ம கல்விமுறையை மாற்றணும்.

கொடுமை பாருங்க. நான் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தயாராகும்போது படிச்சதெல்லாம் ஏற்கனவே பள்ளியில் படிச்சதா தானிருக்கு. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை வேறு வேறு வடிவங்களில் படிச்சிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. ஒருவன் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த வயதுக்கு தேவையான வாழ்க்கைக்கல்வி இன்றைய சூழலில் அவசியம்!

அப்புறம், சிவில்சர்வீஸ் எக்ஸாம்னாலே எல்லோரும் ஏதோ பெரிய பட்டப்படிப்பு மாதிரி பயப்படுறாங்க. இது ஒரு போட்டித்தேர்வு, பட்டப்படிப்பு அல்ல. பயமில்லாம நிறைய பேர் இந்த தேர்வுகளை எழுதணும். நம்ம இளைய தலைமுறை எதிர்ப்பார்க்கிற அட்வெஞ்சர் கேரியரா நிச்சயமா சிவில் சர்வீஸ் அமையும். ஆறாவது ஊதியப்பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்த்துக்கு அப்புறமா நல்ல சம்பளமும் கிடைக்குதுங்க!” என்கிறார். கற்றல் தொடர்பான டிஸ்லெக்சியா பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட வென்றுவிட்டேன் என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.

“அதிருக்கட்டும் சார், உங்களைப் பார்த்து படிப்பை பாதியில் விட்ட உங்க தங்கைகள், தம்பி என்ன ஆனாங்க?” என்று கேட்டால், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார்.

“சொன்னா நிச்சயமா நம்பமாட்டீங்க. நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ன்னு அவங்களும் என்னை பின் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்கன்னா உங்களால நம்ப முடியுதா?”

படிப்பை பாதியில் நாலுபேரும் அடுத்தடுத்து விட்டதை கூட நம்பிவிடலாம். மீண்டும் தன்னெழுச்சியாக படித்து நல்ல நிலைக்கு சொல்லிவைத்தாற்போல நான்கு பேருமே உயர்ந்திருப்பது என்பது கொஞ்சம் சினிமாத்தனமாக தெரிந்தாலும், நந்தகுமாரின் குடும்பத்தில் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கல்வி அடிப்படையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான குடும்பம் இன்று, அதே கல்வியாலேயே தலைநிமிர்ந்து வாழ்வது மகிழ்ச்சியான விஷயம்தான் இல்லையா?


டிஸ்லெக்சியா!

அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ படம் வெளியானதற்குப் பிறகு இந்த குறைபாடு குறித்த விவாதங்கள் அதிகளவில் எழுந்த்து. கற்றல் குறைபாடு இருப்பவர்களும் சராசரியானவர்களே. ஆனால் அவர்களிடம் வாசிப்புத்திறன் குறைவாக காணப்படும். கவனம் பிறழ்வது, எழுத்துத்திறன் குறைவது, கணிதப்பாடத்தை புரிந்துகொள்ள முடியாமை ஆகியவை டிஸ்லெக்சியாவின் பாதிப்புகள். எழுத்துக்களையும், அதற்கான உச்சரிப்புகளையும் அவ்வப்போது மறந்துவிடுவதாலேயே இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த கற்றல் குறைபாடுக்கும், அறிவுவளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிறுவயதில் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சமூகத்தின் உயர்ந்த நிலைகளுக்கு உயர்ந்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில், வால்ட் டிஸ்னி போன்றவர்களுக்கும் சிறுவயதில் இக்குறைபாடு இருந்திருக்கிறது.

இக்குறைபாடுக்கு காரணமான மூளைதிசுக்களை முற்றிலுமாக சரிசெய்ய முடியாது என்றாலும், மனநல மருத்துவரின் ஆலோசனைகளோடு தகுந்த மாற்றுச் சிகிச்சைகளின் மூலமாக குறைபாட்டினை போக்க முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)

30 அக்டோபர், 2009

இடியுடன் கூடிய மழை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!

1967ல் மார்ச்சில் தொடங்கிய நக்சல்பாரி எழுச்சியை ஒடுக்க மாநில காவல்துறை பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று. புரட்சியை தூண்டிவிட்ட தலைவர்களை கைதுசெய்ய அதே ஆண்டு மே 23ஆம் தேதி சென்ற காவல்துறையினர் நக்சல்பாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்கள். காவல்துறையினரே தாக்கப்பட்டதால் உச்சபட்ச வலுவோடு நக்சல்பாரிகளை ஒடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டது. நக்சல்பாரிகள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை பச்சைவயல்களை செந்நிறமாக்கியது. மே 25ல் நக்சல்பாரி கிராமத்தில் ரத்த ஆறு ஓடியது. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினொன்று பேர் மாண்டார்கள். இரண்டு மாதங்கள் கடுமையாக போராடிய பின்னரே நக்சல்பாரி கிராமத்தை காவல்துறையினரால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

ஆனால் காவல்துறையால் நக்சல்பாரி கிராமத்தை மட்டுமே தற்காலிகமாக அடக்கமுடிந்தது. நக்சல்பாரி புரட்சி நாடு முழுவதும் பரவியது. தெற்கில் ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நக்சல்பாரிகள் காலூன்றினர். பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நக்சல்களின் செங்கொடி பறக்க ஆரம்பித்தது.

நக்சல்பாரி புரட்சியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. சாரு மஜும்தாரும், கானு சன்யாலும் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட்டு புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினை தொடங்கினார்கள். நாடெங்கும் இருக்கும் கம்யூனிஸ்ட்டு ஆதரவாளர்கள் சாருவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அணி திரளத் தொடங்கினார்கள். நக்சல்பாரிகளின் போராட்டம் வெறுமனே விளைநிலங்களுக்கான போராட்டமல்ல, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்று அறிவித்து “உழுபவருக்கே நிலம், உழைப்பவருக்கே அதிகாரம்!” என்ற கோஷத்தை நாடெங்கும் ஒலிக்கச் செய்தார்கள் நக்சல்பாரிகள். இவர்களது வர்க்கப் போராட்டம் காட்டுத்தீயாய் நாடெங்கும் பரவியது.

ரஷ்யப் புரட்சியாளரான லெனினின் நூறாவது பிறந்ததினமான ஏப்ரல் 22ஆம் நாளில் 1969ஆம் வருடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற பெயரில் அரசியல் கட்சியாக உருவெடுத்தார்கள். சாரு மஜூம்தார் கட்சியின் மத்திய அமைப்பினுடைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறித்துவர்களுக்கு கிறிஸ்துமஸ் போல கம்யூனிஸ்டுகளுக்கு மே 1. அதே ஆண்டு மே ஒன்றாம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் கூடியது. கட்சியின் முன்னணித் தலைவரான கானு சன்யால் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மோதல் வெடித்தது. கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) தொண்டர்களுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட உரசல், ஆயுதங்களோடு மோதிக்கொள்ளும் அளவுக்கு உக்கிரமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடனான தொடர்மோதலுக்கு அச்சாரம் இட்ட சம்பவம் இது.

நிலங்களை தாண்டி நக்சல்பாரிகளின் போராட்டம் தொழிற்சாலைகளுக்கு பரவியது. பாட்டாளிகள் பலரும் அணிதிரண்டார்கள். வேலை நிறுத்தம் செய்தால் கதவடைப்போம் என்று மிரட்டிய ஆலை அதிபர்கள் வயிற்றில் புளியை கரைத்தார்கள். நக்சல்பாரி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் என்பதையும் தாண்டி முதலாளிகளை நோக்கிய முற்றுகைப் போராட்ட வழிமுறைகளை கையாண்டார்கள். முதலாளியை ஒரு அறையில் அடைத்து சுற்றி முற்றுகை இடுவதே இந்தப் போராட்டம். கிட்டத்தட்ட சிறைப்படுத்துதல். விவசாயிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் அரசியல் கற்றுத் தந்தார்கள் நக்சல்பாரிகள்.

இக்கட்சி நாடெங்கும் கொரில்லாக் குழுக்களை உருவாக்கியது. இந்த கொரில்லாக் குழுக்களின் முக்கியப் பணி ‘அழித்தொழிப்பு'. அழித்தொழிப்பு என்றால் என்னவென்று சாருவின் வார்த்தைகளிலேயே வாசித்தால் தான் புரியும். 1969ல் தமிழ்நாட்டுக்கு வந்த சாரு மஜூம்தார் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது, “வர்க்க எதிரிகளை கொன்று குவித்து அவர்களது இரத்தத்தை மண்ணில் சிந்தச் செய்பவர்களே புரட்சியாளர்களாக வரலாற்றில் இடம்பெறுவார்கள். கிராமங்களில் கட்சியின் ரகசிய கொரில்லாக் குழுக்க அமைக்கப்பட வேண்டும். ஏழை எளியவர்களிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து அவர்களின் சொத்துக்களை அபகரிப்பவர்கள், கொடுங்கோல் மனப்பான்மை கொண்ட நிலமுதலாளிகள் மற்றும் பள்ளி, கோயில் நிலங்களை அபகரித்து வயிறு வளர்ப்பவர்களை நம் குழு அழித்தொழிக்க வேண்டும். அழித்தொழிப்பு பணிகளை மிக விரைவாகவும் செய்யவேண்டும்”.

அழித்தொழிப்பு என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தம் புரிகிறதா? சட்டப்பூர்வமான மொழியில் சொல்வதாக இருந்தால் ‘கொலை' என்றும் சொல்லலாம். ஆயுத வழியிலான போராட்டங்களில் ஈடுபட்ட இக்கட்சி பாராளுமன்ற - சட்டமன்ற ஓட்டுவங்கி அரசியலை முற்றிலுமாக புறக்கணித்தது.

நக்சல்பாரிகளின் அழித்தொழிப்புப் பணிகளை முடக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. ஆங்காங்கே நக்சல்பாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பீகார் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலப்பிரபுக்களை, இடைத்தரகர்களை கொன்று அடகுவைக்கப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களை மீட்டார்கள். பஞ்சாபில் போலிஸ் அதிகாரிகளும், பணக்கார நில உடமையாளர்களும் நக்சல்பாரிகளால் கொல்லப்படுவதற்காக குறிவைக்கப்பட்டனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியை தன்னாட்சி பெற்ற பகுதியாக நக்சல்பாரிகள் அறிவித்து ஆட்சி செய்தனர். மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினத்தவரின் ஆதரவு நக்சல்பாரிகளுக்கு பெருமளவில் இருந்தது.

போராட்டங்களை வடிவமைத்து வழிநடத்திய நக்சல்பாரிகள் நாடெங்கும் காவல்துறையினரால் வேட்டையாடப் பட்டார்கள். உயிர் பிழைத்தவர்கள் குற்றுயிரும், குலையுயிருமாக நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டார்கள். “வர்க்க எதிரிகளை மக்கள் நலனுக்காக அழித்தொழித்தோம். எங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுங்கள்” என்று நீதிமன்றங்களில் கலகக்குரல் எழுப்பினார்கள். மக்களுக்கு காவல்துறை மீதிருந்த அச்சம் அகன்றது. சட்ட, பாராளுமன்ற, நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருந்த புனிதமாயை அகன்றது.

(புரட்சி தொடர்ந்து வெடிக்கும்)

29 அக்டோபர், 2009

வானிலை ஆராய்ச்சி நிலையம்!


வானிலை ஆராய்ச்சி நிலையம்! - என்றப் பெயரைக் கேட்டாலே வர வர கடுப்பாக இருக்கிறது. என்னத்தை ஆராய்கிறார்களோ தெரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பாக மண்டையைப் பிளக்கும் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. நம் வானிலை ஆராய்ச்சி நிலையம் மூடிக்கொண்டு சும்மா இருந்தது. நேற்று மேகமூட்டம் லைட்டாக வந்ததுமே ஆராய ஆரம்பித்து விட்டார்கள். மாலை இடியும் காற்றுமாக மழை ஜமாய்த்ததுமே, அடுத்த இரண்டு நாட்களுக்கு கனத்த மழை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று அடித்து விட்டார்கள்.

இவர்கள் ஆராய்ச்சிக் குறிப்பை நம்பி ரெயின் கோட் போட்டுக் கொண்டு வந்தால், வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. சாலையில் நடந்துச் சென்றால் அயல்கிரகவாசியைப் பார்ப்பது போல, சக சாலைப்போக்கர்கள் வினோதமாக பார்க்கிறார்கள். நாய்கள் குலைக்கின்றன, துரத்துகின்றன. இனிமேல் மழை வருமா, வராதா என்று தெரிந்துகொள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தை நம்பித் தொலைப்பதைவிட தெருவோர கிளிஜோசியக்காரனிடம் சீட்டு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

இப்போது என்றில்லை. எப்போதுமே இந்த கிராக்கிகள் இப்படி குன்ஸாகதான் அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்போதாவது லேசாக தூறல் போட்டுத் தொலைத்தாலே புயல், மழை, சுனாமி என்று பீதியைக் கிளப்பி பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இலவச விடுமுறை வாங்கித் தந்து விடுகிறார்கள். நான் படிக்கும்போது மழைக்காக விடுமுறை விடப்பட்ட ஒரு நாளில் கூட மழை வந்ததே இல்லை. இன்றும் இந்த நிலை மாறியதாக தெரியவில்லை. இனிமேலும் மாறாது என்ற அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

இவர்கள் ’இடியுடன் கூடிய மழை வரும்’ என்று குறிப்பிட்டு சொல்லும் நாட்களில் கடுமையான வெயிலும், சம்மந்தமில்லாத மற்ற நாட்களில் பேய்மழையும் சுளுக்கெடுக்கிறது. பத்திரிகைகள் எவ்வளவு கேலி ஜோக் எழுதினாலும் இத்துறை திருந்துவது போல தெரியவில்லை. இந்த ஆபத்பாண்டவர்களை நம்பி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் அவர்களது பிழைப்பும் கெடுகிறது.

புயல் வந்துவிட்டால் போதும். இப்போ கரையைக் கடக்கும், அப்போ கரையைக் கடக்கும், சென்னைக்கு அருகில், கடலூருக்கு எதிரில் என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் மாதிரி மாறி, மாறி கும்மியடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் சொன்ன நேரத்தில், சொன்ன இடத்தில் இதுவரை புயல் கரையை கடந்ததாக சரித்திரமேயில்லை. நம்மூரில் குழந்தையைக் கேட்டால் கூட சரியாகச் சொல்லும். புயல் என்பது கடப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஊர் மசூலிப்பட்டினம் என்று.

அறிவியல் எவ்வளவோ முன்னேறிவிட்ட காலக்கட்டத்திலும் கூட ‘லொள்ளு சபா’ டீம் போல காமெடி செய்துக் கொண்டிருக்கிறார்கள் நம் வானிலை ஆராய்ச்சியாளர்கள். சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு. மழை வருமா வராதா என்று இவர்கள் டாஸ் போட்டு நியூஸ் சொல்லுகிறார்களோ என்று. நம் அரசாங்கம் இந்த துறையை உருப்படியான வல்லுனர்களை கொண்டு சீரமைக்க வேண்டும். இல்லையேல் கிளி ஜோசியக்காரர்களை, இவர்களுக்குப் பதிலாக பணியில் அமர்த்த வேண்டும்.

தகவல் கேளுங்கள்!


வெளிப்படையான, விரைவான அரசு நிர்வாகம் நடக்க என்ன தேவை? மாற்றம் தேவை என்று ஒரே வரியில் சொல்வீர்கள். மாற்றம் நிகழ அடிப்படையான விஷயம் தகவல் பரிமாற்றம். இதனால் தான் அரசுக்கும், மக்களுக்குமிடையே தகவல் பாலமாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் செயல்படுகிறது.

பிறப்பு - இறப்பு சான்றிதழ், ரேஷன்கார்டு, கல்விக்கடன், தொழிற்கடன், பத்திரப்பதிவு என்று மக்களை இழுத்தடிக்கும் எல்லா விஷயங்கள் குறித்தும் அரசிடமிருந்து நாம் இச்சட்டத்தின் மூலம் தகவல் பெறலாம். ஊராட்சி மன்றத்தில் தொடங்கி ரேஷன்கடை, மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். தகவல்கள் அறிந்துகொள்வதே தீர்வுக்கான சரியான பாதை.

தெருவிளக்கு, சாக்கடை, பாலங்கள், சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளலாம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், செயல்பாடுகள் எதை குறித்தும் இச்சட்டம் மூலமாக நாம் கேள்வியை எழுப்ப முடியும்.

மக்களின் தேவைக்காக அரசை செயல்பட வைக்க, மக்களின் உரிமைகளையும், பங்கேற்பையும் உறுதிசெய்யவும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் வாயிலாக அரசு தொடர்பான நிறுவன அலுவலகங்களின் ஆவணங்களில் இருக்கும் தகவல்களின் நகலினை கேட்டுப் பெற முடியும். எந்த ஒரு பொது அதிகாரத்திடமிருந்தும் தகவலை ஒரு குடிமகன் கேட்டுப்பெற இச்சட்டம் வகை செய்கிறது.

நமது அரசும், அரசு நிறுவன்ங்கள் குறித்த தகவல்களும் ஒன்றும் தனியார் சொத்தல்ல. மக்கள் சொத்து. எனவே யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கமுடியும் என்பதுதான் இச்சட்ட்த்தின் சிறப்பே. ‘உனக்கு தொடர்பில்லாத துறை, நீ ஏன் கேட்கிறாய்?’ என்று யாரும் பதிலுக்கு கேட்டுவிட முடியாது. ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்!’ என்ற பதத்துக்கு உண்மையான பொருள்தரும் சட்டம் இது.

இச்சட்ட்த்தின் அடிப்படையில் ஒருவர் எப்படி கேள்விகள் கேட்கமுடியும்?

இதற்கென தனியாக வரையறுக்கப்பட்ட படிவம் எதுவுமில்லை. ஒரு முழு வெள்ளைத்தாளில் உங்களது பெயர், முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு “தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழாக கீழ்க்காணும் தகவலைப் பெற விரும்புகிறேன்” என்று எழுதிவிட்டு, எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். இதற்கான கட்டணம் ரூபாய் பத்து மட்டுமே. நீதிமன்ற வில்லையாகவோ (Court Fee Stamp) அல்லது வரைவோலையாகவோ (Demand Draft) கட்டணம் செலுத்தப்பட வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களுக்கு அஞ்சல் ஆணை (Postal Order) மற்றும் வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியத் தேவையில்லை.

சரி, மனுவும், கட்டணமும் ரெடி. அடுத்து யாருக்கு அனுப்பவேண்டும்?

அரசு தொடர்பான ஒவ்வொரு அலுவலகத்திலும் பொதுத்தகவல் அதிகாரி ஒருவர் கட்டாயம் இருப்பார். அவரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். இல்லையேல் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நீங்கள் சரியான துறைக்கு அனுப்பாமல் தவறான துறைக்கு அனுப்பிவிட்டாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. மனுவைப் பெற்ற சம்பந்தப்பட்ட அதிகாரி, அதை சரியான துறைக்கு அவரே அனுப்பி வைப்பார். மனுதாரருக்கும் சரியான துறைக்கு திருப்பி அனுப்பி வைத்தது பற்றிய தகவலை தெரிவித்து விடுவார். எனினும் இதனால் காலவிரயம் ஏற்படக்கூடும்.

மனுவைப் பெற்றுக் கொண்ட துறை, மனு கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள் பதில் கொடுத்தாக வேண்டும் என்பது சட்டம். இக்காலக்கெடுவுக்குள் பதில் கிடைக்காத பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தின் மேல்முறையீட்டு பொதுத்தகவல் அதிகாரிக்கு அதே மனுவை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். இவராலும் முப்பது நாட்களுக்குள்ளாக பதில் அளிக்க இயலவில்லை எனில் மாநிலத் தலைமை ஆணையத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகவல் அளிக்காத அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் இருநூற்றி ஐம்பது வீதம், ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வரை ஆணையம் அபராதம் விதிக்கும். உங்கள் மனுவுக்கான பதில் விரைவில் கிடைக்கும் ஏற்பாட்டையும் ஆணையம் செய்யும்.

இந்தியாவின் இறையாண்மை குறித்த தகவல்கள், வெளியே தெரிந்தால் அயல்நாட்டு உறவைப் பாதிக்கும் என அரசாங்கம் இரகசியமாக காக்கும் விவரங்கள், மற்றவர்களின் தொழில் ரகசியங்கள், பொதுநலனுக்கு தொடர்பில்லாத அடுத்தவரின் அந்தரங்கம், முக்கியமான சில புலன்விசாரணை அமைப்புகள் குறித்த விஷயங்கள் போன்றவை குறித்த தகவல்களுக்கு மட்டுமே பதில்கள் மறுக்கப்படலாம். ஆயினும் ஆணையமே இத்தகவல்களுக்கு பதில் அளிக்கலாமா கூடாதா என்று முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.

உங்கள் வீட்டில் அடிக்கடி மின்தடையா? துவரம்பருப்பு விலை ஏன் விண்ணை எட்டிவிட்டது? உங்கள் தெரு சாலைகள் ஒழுங்காக பராமரிக்கப் படுவதில்லையா? அருகிலிருக்கும் அரசு பள்ளிக்கு இன்னமும் ஏன் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை? ஏனென்று உடனே இச்சட்டத்தின் கீழ் மனு போட்டு பதில் கேளுங்கள். கேள்வி எழுப்புவது உங்கள் உரிமை. பதில் அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை!

28 அக்டோபர், 2009

வசந்தத்தின் இடிமுழக்கம்

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!

“எங்கு பார்த்தாலும் ஊழல். ஊழலற்ற எதுவுமே இந்த நாட்டில் இல்லை. நாட்டையே சுரண்டி கொள்ளையடிக்க தான் எல்லோருமே விரும்புகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு தீர்வாக சுரண்டல்வாதிகள் சிலரையாவது பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்க விடவேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கு அது பாடமாக இருக்கும்” உணர்ச்சிக் கொந்தளிப்போடு இந்த வார்த்தைகளை உச்சரித்தவர் ஒரு நக்சல்பாரி அல்ல. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய காட்ஜு. ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்ட பீகாரைச் சேர்ந்த பிராஜ் பூஷன் பிரசாத் என்பவர் பெயில் கேட்ட வழக்கின்போது காட்ஜு சொன்ன வார்த்தைகள் இவை. தன்னையே ஒரு கணம் மறந்துவிட்டு நீதிபதி சொன்ன கருத்தாக கூட இருக்கலாம். ஆனால் இந்தக் கருத்து நியாயமானதா, இல்லையா என்பதை நம் ஒவ்வொருவர் மனச்சாட்சியையும் கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியே உணர்ச்சிவசப்பட்டு சொன்ன இந்த கருத்தை தான் நக்சல்பாரிகள் சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். மாவோயிஸ்டுகளின் ஜன் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்) வலியுறுத்துவதும் இதுபோன்ற தீர்ப்பை தான்.

மேற்கு வங்கத்தின் வடகிழக்கு முனையில் இருக்கும் மிகச்சிறிய கிராமம் நக்சல்பாரி. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிறது. டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டம். ஆயிரக்கணக்கான இந்திய கிராமங்களைப் போலவே இங்கும் விவசாயிகளிடம் நிலப் பிரபுக்கள் சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தார்கள். அடக்குமுறை கொடுமைகளை எதிர்த்து வாய் பேச இயலா ஊமைகளாக உழைப்பாளிகள் வாழ்ந்தார்கள்.

இரத்தத்தையும், தியாகத்தையும் தோய்த்தெடுத்து எழுதப்படும் செங்கொடியின் வீரவரலாறு தொடங்கியது இங்கேதான். ‘துப்பாக்கி முனையில் அரசியல் அதிகாரம் பிறக்கிறது' என்ற மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து நக்சல்பாரி உழவர்களின் ஆயுதமேந்திய புரட்சி வெடித்தது. உழவர்கள் மட்டுமன்றி சிலிகுரி மாவட்டத்தின் தேயிலைத் தொழிலாளர்களும் இந்தப் புரட்சியின் போது வீறுகொண்டு எழுந்தார்கள்.

1967ஆம் ஆண்டு ‘கிராமப்புற புரட்சியின் மூலமாக அதிகாரத்தை கையகப்படுத்துதல்' எனும் கருத்தாக்கத்தை மையப்புள்ளியாக வைத்து சாரு மஜூம்தார் என்ற நாற்பத்தொன்பது வயது கம்யூனிஸ்ட்டு தலைவர் தன்னுடைய நண்பரான கானு சன்யால் என்பவரோடு இணைந்து நக்சல்பாரி இயக்கத்தை கட்டமைக்கிறார். நக்சல்பாரி கிராமத்தில் இந்த எழுச்சிக்கான விதை விதைக்கப்பட்டதால் இவர்கள் பிற்பாடு நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டனர்.

அப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெடித்த நக்சல்பாரிகளின் புரட்சி பல நிலைகளை தாண்டி நீறுபூத்த நெருப்பாக இன்று இந்திய மாநிலங்களில் கனன்று கொண்டிருக்கிறது. நக்சல்பாரிகளின் புரட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவினைக்கும் அடிகோலியது. மேற்கு வங்கத்தில் ஆண்டுகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு கம்யூனிஸ்டுகளை பிரதிநிதித்துவப் படுத்தாமல் மத்தியில் ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட புரட்சியாளர்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்கள். தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்டினார்கள்.

“பெரும் நில முதலாளிகளிடமிருந்து நிலங்களை பிடுங்கி ஏழைகள் பங்கிட்டு கொள்ள வேண்டும். ஏழைகளே நேரடி நடவடிக்கைகளில் இறங்கி தங்களுக்கான நிலத்தை எடுத்துக் கொள்வார்கள்” என்று திடீரென சாரு மஜூம்தார் அறிவிக்க நாடே கலங்கிப் போனது. மேற்கு வங்காளத்தில் கூட்டணி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தன் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த ஒருவர் இதுபோன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு சிக்கலை அளித்தாலும் தீவிர கம்யூனிஸ்டுகள் சாருவின் அறிவிப்பை வரவேற்றார்கள். நக்சல்பாரிகளின் எழுச்சி இந்திய மக்கள் புரட்சியை வெடிக்கச் செய்யும் என்று நம்பினார்கள். மேற்கு வங்காளத்தில் இளையதலைமுறையினர் பலர் சாருவை பின்பற்றிச் செல்ல தங்கள் குடும்பங்களை துறந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது பலமாக இருந்த உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த திடீர் புரட்சியாளர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவர்கள் ஒன்றிணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான கலகக்காரர்களாக செயல்பட்டார்கள். கட்சியின் கொள்கைகளை விளக்க தேசப்ரதி, லிபரேஷன், லோக்யுத் ஆகிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆயுதமேந்திய கிராமக்குழுக்களை உருவாக்கினார்கள். நிலப்பிரபுக்களின் பட்டாக்களையும், அவர்களிடம் தாங்கள் அடகுவைத்திருந்த கடன்பத்திரங்களையும் கைப்பற்றி கொளுத்தினார்கள். ஜன் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து வர்க்க எதிரிகளை கூண்டிலேற்றி விசாரித்து கடுமையான தண்டனைகளை வழங்கினார்கள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த நிலப்பிரபுக்களுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை மக்கள் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சாரு மஜூம்தாரின் அறிவிப்பினை கொண்டாடியது. ‘வசந்தத்தின் இடிமுழுக்கம்' என்று பெயரிட்டு மகிழ்ந்தது. சீன கம்யூனிஸ்டுகள் கொண்டாடினாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) வரவேற்கவில்லை. நக்சல்பாரிகளை அடக்கும் முயற்சியில் அங்கே ஆளும் கம்யூனிஸ்ட்டு கட்சி அரசு இயந்திரத்தை பயன்படுத்தியது. நக்சல்பாரிகளை கண்டு ஆளும் கட்சிகள் “பயங்கரவாதம்” என்று குரலெழுப்பத் தொடங்கினார்கள். நக்சல்பாரிகளோ தாங்கள் நடத்துவது தங்களது உரிமைப்போர் என்று நியாயப்படுத்தினார்கள். அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் விவசாயிகளுக்கு சமமாக பங்கிடப்பட்டது. வயல்கள் தோறும் செங்கொடி பறந்தது.

(புரட்சி தொடர்ந்து மலரும்)

25 அக்டோபர், 2009

துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!


ரஷ்யாவில் 1917 அக்டோபரில் வெடித்த புரட்சி உலகளாவிய பொதுவுடைமை சிந்தனையாளர்களுக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. உடனடியான பாதிப்பு மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இருந்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் துயர்நீக்க மார்க்சியப் பாதை தான் சிறந்தது என்று எண்ண தலைப்பட்ட சிந்தனையாளர்கள் கம்யூனிஸக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு கம்யூனிஸ்டு அமைப்புகளை 1920கள் வாக்கில் அமைக்கத் தொடங்கினார்கள். அப்போது இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

லெனினின் சிந்தனைகள் அடிப்படையிலான கம்யூனிஸ்டு கட்சி அமைப்பு முறை போல்ஷ்விஸம் என்று அழைக்கப்படும். போல்ஷ்விஸம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களை அன்றைய ஆட்சியாளர்களும் உணர்ந்திருந்தனர். கம்யூனிஸ்டு என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள் வேட்டையாடப் பட்டனர். பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டனர். பல நெருக்கடிகளை தாண்டியே பல்வேறு பொதுவுடைமை சிந்தனைக் குழுக்கள் இணைந்து கம்யூனிஸ்டு கட்சி ஏற்படுத்தப்பட்டது.

நாட்டில் அப்போதிருந்த முக்கியப் பிரச்சினை ஏகாதிபத்தியம். காங்கிரஸ் கட்சியோ ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தி மும்முரமாக போராடிக் கொண்டிருக்க, கம்யூனிஸ்டு இயக்கங்கள் வர்க்க விடுதலைக்கு தீவிரமாக போராடின. ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முன்னால் வர்க்க விடுதலை மக்களுக்கு பெரியதாக தோன்றவில்லை. விவசாய தொழிலாளர்களின் உரிமையை ஒருபுறம் வலியுறுத்தி, இன்னொரு புறம் தேசவிடுதலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்குமேயானால் காங்கிரஸ் இயக்கத்துக்கு கிடைத்த செல்வாக்கு ஒருவேளை அப்போதே கம்யூனிஸ்டுகளுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் முதலாளி வர்க்க எதிரிகள் என்ற அடிப்படையில் தான் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்களே தவிர அவர்கள் அந்நியர்கள் என்ற அடிப்படையில் தீவிரமாக எதிர்க்கவில்லை. எனவே தேச விடுதலையில் காங்கிரஸ் அளவுக்கான பங்கினை, செல்வாக்கினை கம்யூனிஸ்டுகள் பெற இயலாமல் போனது.

இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்திலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் உள்ளியக்க கருத்து வேறுபாடுகள் தோன்றின. போர் எதிர்ப்பு நிலையை கம்யூனிஸ்டு இயக்கங்கள் மேற்கொண்டதால் பல தலைவர்கள் சிறைக்கு செல்ல வேண்டியதாகியது. ஹிட்லர் ரஷ்யா மீது போர் தொடுத்தபோது சிறைபடாமல் தலைமறைவாகியிருந்த கட்சியினர் சோவியத் யூனியனுக்கு உதவி செய்ய ஒரே வழி, தேசிய விடுதலைக்கு தீவிரமாக போராடுவதே என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போரால் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் பலவீனமடையும், அது சோசலிஷ ரஷ்யாவுக்கு பிற்பாடு வலிமை சேர்க்கும் என்பது அவர்களது கணிப்பு.

ஆனால் சிறையிலிருந்த கம்யூனிஸ்டு தலைவர்களின் சிந்தனையோட்டம் வேறுமாதிரியாக இருந்தது. ஆங்கிலேயர்களின் போர் தயாரிப்புகளுக்கு முழுமூச்சான ஆதரவு தரவேண்டும் என்றும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நிறுத்திவிட வேண்டும் என்றும் சொன்னார்கள். இதற்கு பிரதியுபகாரமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உலகப்போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்கள்.

இரண்டாம் உலகப்போரின் முடிவு உலக வரைப்படத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் போர் முடிவில் பலவீனமாக காட்சியளித்தனர். இந்நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மக்கள் ஆயுதம் மூலமாக ஆங்காங்கே கலகம் செய்தனர். இச்சந்தர்ப்பத்தையும் இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலகக்காரர்களை ஆங்கிலேயர்கள் காங்கிரசோடு கூட்டு அமைத்து காலி செய்தார்கள். திடீரென்று விழித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள் தங்கள் தரப்பு தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் செய்தது. மாணவர்களும், தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

தந்திரத்தில் கரைகண்ட வெள்ளையர்கள் காங்கிரஸிடம், முஸ்லீம் லீக்கிடமும் சரணடைந்தனர். விவகாரமான சுதந்திரமும், ஆங்கிலேயர்களை கொண்ட அரசியல் நிர்ணயசபையும் இந்தியர்கள் மீது திணிக்கப்பட்டது. ஏகாதிபத்திய நாடுக்களுக்கான பின்வாசல் எப்போதும் திறந்தே வைத்திருக்கும்படியான சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்தது. இப்போதும் கூட கம்யூனிஸ்டு இயக்கங்கள் காங்கிரஸை நம்பின. நேரு, காந்தி போன்ற காங்கிரஸின் முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று கோஷமிட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னும் தொடர்ந்த தொழிலாளர் துயரத்தை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

பி.டி.ரணவேதி என்ற கம்யூனிஸ்டு தலைவர் கலகக்காரரானார். தன்னைப் போன்ற தீவிர ஒத்த சிந்தனை கொண்டவர்களின் துணையோடு கட்சியின் தலைமையை கைப்பற்றினார். நேருவின் அரசு ஆங்கிலேயர்களின் கைப்பாவை அரசு என்று இந்த கலகக்கார கம்யூனிஸ்டுகள் அறிவித்தனர். வர்க்க சமரசத்திற்கு எதிரான புரட்சியை நடத்த வன்முறைப்பாதையையும் மேற்கொள்ள தயாராயினர். தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தமும், மக்களின் கிளர்ச்சியும் தான் தங்கள் பாதை என்றனர்.

இதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானாவில் வன்முறைப் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. நிலமுதலாளிகளுக்கும் அவர்களது வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டம் தெலுங்கானா என்று சொல்லக்கூடிய பகுதிகளில் அங்கிருந்த பிரதேச கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. இங்கே போராடிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் சீனாவின் புரட்சியாளர் மாவோவின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தவர்கள். எனவே இவர்கள் பி.டி.ரணவேதியின் போராட்டத்தை மாவோ கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர்த்தார்கள்.

நிலமுதலாளித்துவத்துக்கும், நகர்ப்புற முதலாளி வர்க்கத்துக்கும் எதிரான போராட்டங்கள் ஒரே சமயத்தில் நடந்தால், போராட்டங்களின் வீரியம் நீர்த்துப் போகும் என்பது தெலுங்கானா புரட்சியாளர்களின் கணிப்பு. அவர்களது மொழியில் சொல்வதானால் ஜனநாயகப் புரட்சியையும், சோஷலிசப் புரட்சியையும் ஒரே நேரத்தில் நடத்த இயலாது. கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் முறையான விவசாயத் திட்டத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே புரட்சியை வெடிக்கச் செய்யமுடியும் என்பது அவர்களது நிலைபாடாக இருந்தது. கிராமப்புறங்களில் ஏற்படும் புரட்சி நகரத்தை சுற்றி வளைத்து இறுதியில் கைப்பற்றும். ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியைக் காட்டிலும் சீனப்புரட்சியைப் போன்ற செயல்பாடு தான் இந்தியச்சூழலுக்கு தகுந்ததாக இருக்கும் என்றும் தெலுங்கானா போராளிகள் நினைத்தனர். இன்றைய நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு முன்னோடிகளாக தெலுங்கானா போராளிகளை குறிப்பிடலாம்.

பி.டி.ரணதிவே இந்த சிந்தனைகளை முற்றிலுமாக நிராகரித்தார். மாவோவை ஒரு போலி மருத்துவர் என்று காரமாக குற்றம் சாட்டினார். ஆயினும் 1950களின் ஆரம்பத்தில் தெலுங்கானா கிளர்ச்சியாளர்கள் ஆந்திராவில் மிகுந்த செல்வாக்கோடு காணப்பட்டனர். ஐதராபாத் இந்தியாவுக்குள் இணைந்தபோது அங்கே முற்றுகையிட்டிருந்த இந்திய ராணுவத்தின் மூலமாக தெலுங்கானா போராளிகளின் புரட்சி நசுக்கப்பட்டது.

கம்யூனிஸ்டு இயக்கங்களில் இன்று பிரபலமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் சரி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் சரி.. தெலுங்கானா போராட்டத்தை அரசியல் அதிகாரத்துக்கான போராட்டமாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நிலமுதலாளிகளிடமிருந்து நிலங்களை கைப்பற்றி தக்கவைத்துக் கொள்ள நடந்த போராட்டம் தான் அது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொல்கிறது. தெலுங்கானாவில் நடந்தது முழுக்க முழுக்க அராஜகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. ஆனால் தெலுங்கானா போராட்டத்தை ஆதரித்துப் பேசுபவர்களோ அப்போராட்டம் ‘ஆந்திராவில் மக்கள் ஆட்சி’ என்பதை முன்னிறுத்தி நடந்தப் போராட்டம் என்கிறார்கள்.

ரஷ்யாவிலும் ஸ்டாலினுக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்களால் கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள் அவரவர் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருந்த நேரமது. “ஏற்கனவே இருக்கும் அரசமைப்பை புரட்சி மூலமாக தூக்கியெறிய வேண்டியதில்லை. முதலாளிகளோடு தொழிலாளி வர்க்கம் சமரசமாகி அதிகாரத்தை பங்கிடுவதின் மூலமாகவே தேசிய ஜனநாயக அரசை ஏற்படுத்த முடியும்” என்று ரஷ்யாவில் ஆட்சிபுரிந்த குருசேவ் தலைமையிலான கம்யூனிஸ்டுகள் கூறிவந்தனர். இது லெனின் – மாவோ உள்ளிட்டோரின் கோட்பாடுகளுக்கு நேரிடையானதாக இருந்தது.

இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்டு இயக்கமோ ‘ரஷ்யா சொன்னா சரி’ என்று தலையாட்டியது. இந்திய - சீன எல்லைப்போர் தொடங்கிய நேரமது. கட்சித்தலைமையோ சீனாவை ஆதரித்தால் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவோமோ என்ற அச்சத்தில் சீன எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. கட்சியில் இருந்த தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் உட்கட்சி கிளர்ச்சி செய்து கட்சியை உடைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

கிளர்ச்சி செய்து புதுக்கட்சியை உருவாக்கியிருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமரச வழியிலான சோஷலிஸத்தை நோக்கிதான் பயணம் செய்தது. சரியாக சொல்ல வேண்டுமானால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வெற்றி என்பதை நோக்கிய பயணமாக இருந்தது. மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பலமானது. விவசாயிகள் - தொழிலாளர் போராட்டங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கையோடு சேர்த்தே திட்டமிடப்பட்டது.

மார்க்சிஸ்டுகளின் திட்டங்களுக்கு நல்ல பலன் இருந்தது. 1967ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி முன்னணி மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அதே கட்சியிலிருந்து தேர்தல் பாதைக்கு எதிரான மனோபாவம் கொண்ட புரட்சியாளர்களின் தலைமையில் நக்சல்பாரி புரட்சி ஆயுதமேந்தி நடந்தது. தங்கள் இயக்கத்தில் இதுநாள் இருந்தவர்களையே போலிஸை விட்டு கண்மூடித்தனமாக தாக்கி புரட்சியை நசுக்கியது மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு. இதன் மூலமாக பாட்டாளிகள் தலைமையிலான மக்கள் ஆட்சியை விட்டு விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிற்பதாக நக்சல்பாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நக்சல்பாரிகளுக்கு இன்னொரு வேடிக்கையான பெயரும் தமிழகத்தில் உண்டு. தீ.கம்யூனிஸ்டுகள் என்று அவர்களை செய்தித்தாள்களில் எழுதுவார்கள். அதாவது தீவிர(வாதி) கம்யூனிஸ்டுகளாம். இந்த தீ.கம்யூனிஸ்டுகள் ‘நாடாளுமன்ற அரசியல் மூலமாகவோ, சமரச அரசியல் மூலமாகவோ அதிகாரத்தை கைப்பற்ற முடியாது’ என்று பிரகடனப்படுத்தி இயங்கி வருகிறார்கள்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரிகளாக நான்கு விஷயங்களை குறிப்பிடுகிறார்கள். நிலமுதலாளித்துவம், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், குருசேவ் காலத்துக்கு பின்னரான ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் - இவை நான்குக்கும் எதிரான போராட்டங்களே உழைக்கும் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை ஏற்படுத்தும் என்பது நக்சல்பாரிகளின் நிலைப்பாடு.

சீனா மற்றும் வியட்நாமில் தோன்றிய மக்கள் போர் மூலமாகவே இந்திய உழைக்கும் மக்களுக்கான விடுதலையை ஏற்படுத்த இயலும். துப்பாக்கிக் குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று முழக்கமிட்டார்கள். கிராமப்புறங்களில் நிலமுதலாளிகளை பலவீனமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நிலப்பிரபுக்களை கொன்று குவிப்பதை ‘அழித்தொழிப்பு’ என்ற பெயரிலான கிளர்ச்சியாக குறிப்பிட்டார்கள். நகர்ப்புற இளைஞர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளை ‘அழித்தொழிப்பு’ பணிகளுக்கு தயார்படுத்தினார்கள்.

(புரட்சி மலரும்)

24 அக்டோபர், 2009

வாயாடிகளுக்கு சம்பளம்!


எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேசுவதற்கு யாராவது சம்பளம் வழங்கினால் மாட்டேன் என்றா சொல்வீர்கள். கொடுக்கிறார்களே? ரேடியோ நிறுவனங்களில் வாயாடிகளை தேடிப்பிடித்து ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள். பந்தயங்களில் குதிரை ஓட்டுபவர்கள் வெறும் ‘ஜாக்கி’. ரேடியோவில் நேயர்களை ஓட்டோ ஓட்டுவென்று ஓட்டுபவர்கள் ரேடியோ ஜாக்கி. சுருக்கமாக ஆர்.ஜே.

ஒரு காலத்தில் எல்லோருக்கும் துணைவனாக இருந்தது ரேடியோ. பாட்டு கேட்க, செய்தி கேட்க, நாடகம் கேட்க, ஒலிச்சித்திரம் கேட்கவென்று நிறைய ‘கேட்க’ சொல்லலாம். ஆனால் காட்சி ஊடகமான தொலைக்காட்சி வந்த புதிதில் ரேடியோவுக்கு இருந்த ‘மவுசு’ கொஞ்சம் குறைந்தது. தொலைக்காட்சி அளவுக்கு ரேடியோவில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

டிவி முன்பாகவே சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தால் மற்ற வேலைகள் கெட்டுவிடும். ஆனால் ரேடியோ கேட்டுக் கொண்டே கம்ப்யூட்டரில் வேலை பார்க்கலாம். சமையல் செய்யலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம். சும்மாவும் இருக்கலாம். கலகலப்புக்கு ரேடியோ நிச்சய உத்தரவாதம்!

மீண்டும் எஃப்.எம். (பண்பலை) வானொலிகள் வந்ததோ இல்லையோ.. மறுபடியும் பழைய மவுசு ரேடியோவுக்கு கிடைத்துவிட்டது. ஜாக்கிகள் விதவிதமான நிகழ்ச்சிகளை தந்து மீண்டும் ரேடியோ மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்கள். முன்பெல்லாம் அரசின் தகவல் தொடர்பு ஊடகங்களான ஓரிரு வானொலி நிலையங்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலான சேவைகளையே கொஞ்சம் ‘வறட்சியான மொழியில்’ வழங்கி வந்தன.

ஆனால் இப்போதோ சூரியன், ரேடியோ மிர்ச்சி, ரேடியோ ஒன், ஹலோ, ஆஹா, பிக் என்று தனியார் எப்.எம். சேவைகள் வரிசையாக படையெடுத்து தமிழர்களின் காதில் தேனையும், பாலையும் இருபத்து நான்கு மணி நேரமும் தொடர்ச்சியாக ஊற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது ‘தமில்’ தான் தாங்கலை என்றாலும் தனியார் எப்.எம்.களின் வருகைக்கு பிறகு ஏராளமான வேலைவாய்ப்புகள்.. குறிப்பாக ரேடியோ ஜாக்கிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

ரேடியோ ஜாக்கிகள் என்றால் பொதுவாக பாடல் நிகழ்ச்சிகளை வழங்குபவர்கள் என்றே எல்லோரும் நினைக்கிறோம். இவர்கள் மட்டுமன்றி வேறு வேறு வித்தியாச நிகழ்ச்சிகளை வழங்குபவர்களையும் ரேடியோ ஜாக்கி என்றே அழைக்கலாம், தப்பில்லை. வீட்டு வரவேற்பறையில் நம்மோடு குலாவும் விருந்தினரைப் போன்ற உணர்வுகளை நிகழ்ச்சிகளின் மூலமாக தருபவர்கள் இவர்கள். முகம் காட்டாமலே நமக்கு நெருக்கமாகும் சுவாரஸ்யமான நட்புகள். ஒவ்வொரு வானொலி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இவர்களது பங்கு மிக முக்கியமானது. இவர்களுக்கு எல்லாம் இன்னமும் தமிழ்நாட்டில் ரசிகர்மன்றம் தொடங்கப்படாதது ஒன்றுதான் பாக்கி!

“எனக்குத் தெரிஞ்சு பத்தாவது படிச்சவங்கள்லேருந்து எம்.எஸ்.சி. படிச்சவங்க வரைக்கும் ரேடியோ ஜாக்கியா ஒர்க் பண்றாங்க. முறையான கல்வித்தகுதின்னு எதுவும் இந்தத் துறைக்கு அவசியமில்லை. குரல் இனிமையா இருக்கணும்னு சொல்ல மாட்டேன். ஆனா வசீகரமா இருக்கணும். மிமிக்ரி தெரிஞ்சா ரேடியோவில் ஜாக்கி ஆயிடலாம்னு ஒரு ‘மித்’ இருக்கு. அது தப்பு. சுவாரஸ்யமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிற திறமை, டைமிங் சென்ஸ் இதெல்லாம் தான் ரேடியோ ஜாக்கியா வரணும்னா முக்கியமான தகுதிகள்” என்கிறார் ரேடியோ ஒன் நிறுவனத்தில் நிகழ்ச்சிகளை வழங்கும் சுசித்ரா.

ரேடியோ ஜாக்கிகளுக்கு சமூகத்தில் கிடைக்கும் கூடுதல் கவனிப்புகள், சினிமா வாய்ப்புகள் போன்றவை அவரவர் தனிப்பட்ட திறமையைப் பொறுத்த விஷயம். வானொலியில் நிகழ்ச்சிகள் வழங்குவதால் மட்டுமே இவை கிடைத்துவிடாது என்பது சுசித்ராவின் கருத்து. இவர் மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சினிமாவிலும் தொடர்ந்து பாடி வருகிறார்.

பிக் எப்.எம்.மில் பணிபுரியும் தீனாவும் பிரபலமான ரேடியோ ஜாக்கி. தற்போது ‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ரேடியோ மிர்ச்சியின் ஜாக்கியான சுஜாதா கமல்ஹாசனுடன் இரு படங்களில் உதவி இயக்கம், தயாரிப்பு, ஆடை வடிவமைப்பு போன்ற துறைகளில் பணிபுரிந்திருக்கிறார். ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீதைப் பற்றி அறிமுகப்படுத்தவே தேவையில்லை. இலங்கை வானொலியில் ’பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்தவர், இன்று அதே நிகழ்ச்சியை டிவியிலும், மேடைகளிலும் நடத்தி உலகத் தமிழர்களிடையே பிரபலமானவராக இருக்கிறார்.

நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறும், ஒவ்வொரு ரேடியோ ஸ்டேஷனுக்கு ஏற்றவாறும் இவர்களது பணிகளில் சின்ன சின்ன மாறுதல்கள் இருக்கும். பொதுவாக சில அடிப்படைத் தகுதிகளை மனதில் வைத்தே ஜாக்கிகளை ரேடியோ நிர்வாகம் தேர்ந்தெடுக்கிறது. தனியார் நிறுவனங்களில் முப்பத்தைந்து வயதுக்கு மிகாதவராக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். குரல்வளமும், பேச்சுத்திறமையும் அடிப்படைத் தகுதி என்பது உங்களுக்கே தெரியும். உச்சரிப்பு தெளிவானதாக இருக்க வேண்டியது அவசியம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களையே ரேடியோ ஜாக்கிகளும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறார்கள். எனவே மொழிப்புலமை கட்டாயம் இருந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. மொழிப்புலமை இருந்தால் அது கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். பொழுதுபோக்கு துறைக்கு தேவையான எல்லாத் திறன்களும் ரேடியோ ஜாக்கிகளுக்கும் தேவை. ரேடியோ ஜாக்கிகளாக தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு பொதுவாக தேர்ந்தெடுத்த நிறுவனமே பயிற்சியையும் வழங்குகிறது.

பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலும், சில கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படும் கம்யூனிகேஷன்ஸ் & பிராட்காஸ்டிங் கல்வியை கற்பவர்கள் சுலபமாக ரேடியோ ஜாக்கி ஆகிவிடலாம். சில தனியார் கல்வி நிறுவனங்கள் குறுகியகால சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது. இது இரண்டுமாத சான்றிதழ் கோர்ஸிலிருந்து, ஒருவருட டிப்ளமோ கோர்ஸ் வரை வேறுபடுகிறது.

வருமானத்தைப் பொறுத்தவரை இத்தொழிலில் வரையறை ஏதும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. அவரவர் திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றவகையில் பணம் கிடைக்கும். பயிற்சிக்காலத்திலேயே குறைந்தபட்சம் மாதத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமே ரேடியோக்களில் இவர்களுக்கு வேலை இருக்கும். மீதி இருக்கும் நேரத்தில் டப்பிங், விளம்பரப் படங்களுக்கு குரல் கொடுப்பது உள்ளிட்ட வருவாயைத் தரக்கூடிய வேறு பணிகளையும் செய்யலாம். இல்லையேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ரேடியோ அலுவலகத்திலேயே நிர்வாகம் மாதிரியான வேறு பணிகளையும் செய்து கூடுதல் வருவாய் பெறலாம்.

“இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து, விரிந்து வாழ்வதால் அவர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் வானொலிகள் தமிழ் சேவை தொடங்கி வருகின்றன. சாட்டிலைட் ரேடியோக்களும் தமிழ்சேவையை தொடங்கியிருக்கின்றன. அதுபோலவே இண்டர்நெட்டுகளில் இயங்கும் ரேடியோக்களும் பெருகிவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ரேடியோ ஜாக்கிகளுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. தகுதியும், திறமையும் இருப்பவர்களுக்கு இத்துறையில் நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது” என்கிறார் வளைகுடாவில் இருந்து ஒலிபரப்பாகும் சக்தி எப்.எம்.மில் பணியாற்றிய ஆர்.நாகப்பன்! இவர் இண்டர்நெட் ரேடியோக்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!’ என்பது பழமொழி. வாய் மட்டும் போதாது. சில கூடுதல் தகுதிகளும் அதோடு இருந்தால் ரேடியோ ஜாக்கியாகி பிழைத்துக் கொள்ளலாம். பிழைப்போடு சேர்த்து புகழும், கூடுதல் கவனிப்புகளும் கிடைக்கப் போகிறது என்றால் கசக்கவா செய்யும்?

(நன்றி : புதிய தலைமுறை)

22 அக்டோபர், 2009

இரண்டு வெற்றிக்கதைகள்!


சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்ட மூன்றெழுத்து படம் அது. இயக்குனருக்கு அது முதல் படமல்ல என்றாலும், வாழ்க்கை கொடுத்த படம். தயாரித்தவரும் ஒரு பிரபல/பிரம்மாண்ட இயக்குனர். மதுரை மண் சார்ந்த படங்கள் தொடர்ச்சியாக வெளிவர அச்சாரம் போட்ட படமாகவும் அதைச் சொல்லலாம்.

ஆர்ப்பாட்டமின்றி வெளிவந்து அள்ள அள்ளப் பணத்தை கொட்டிய படம். பாடல்களும் சூப்பர்ஹிட். அறிமுக இசையமைப்பாளர் அடுத்தடுத்து தனிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி காணாமல் போனார். படத்தின் கதை சூப்பர் என்பது ஏற்கனவே தெரிந்தது என்றாலும், பின்னணிக்கதை அதைவிட சூப்பர் என்று ஒரு உதவி இயக்குனரான நண்பரின் மூலம் தெரியவந்தது.

வடநாட்டுப் பெயர் கொண்டவர் அந்த தயாரிப்பாளர். கொசுவர்த்தி பெயர் கொண்ட படநிறுவனம் அவருடையது. மகனுக்காக ஒரு படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார். அடுத்ததாக ஒரு படத்தை தன் நிறுவனத்தை வைத்தே தயாரித்தால், அப்பாவே மகனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் என்ற அவப்பெயர் வந்துவிடுமே என்று ஒரு பினாமி தயாரிப்பாளரை செட் செய்தார்.

ஒரு இயக்குனரை கூப்பிட்டு கதை கேட்டார். இளமை நாயகன் என்பதால், இளமைவாசனையும், மண்மணமும், க்ரீஸ் அழுக்கும் கொண்ட ஒரு அட்டகாசமான கதை இயக்குனரால் முன்மொழியப்பட்டது. இயக்குனர் நேரில் சந்தித்த ஒரு கேரக்டரின் கதை அது. ”ஆரம்பத்துலேயே என் பையன் அழுக்கா நடிச்சா சரிப்படாது. சப்ஜெக்ட் வேற ஆர்ட்ஃபிலிம் ரேஞ்சுக்கு இருக்குது. நல்ல சிட்டி/லவ் சப்ஜெக்டா ரெடி பண்ணுங்க!” என்று தயாரிப்பாளர் சொன்னதுமே, இயக்குனர் தற்காலிகமாக அக்காவியத்தை கைவிட்டார். இருப்பினும் பின்னர் அதே கதையை வேறு நடிகரை வைத்து எடுக்க தயாராக இருப்பதாகவும் தயாரிப்பாளர் உறுதிகூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.

இந்த டிஸ்கஷன்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, முதல் பாராவில் இடம்பெற்ற இயக்குனரும் அந்த டீமில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இளமை நாயகனை வைத்து தித்திக்க தித்திக்க ஒரு படம் தயாரானது. ஓவர் செண்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது என்பதுபோல அந்தப்படமும் பப்படம் ஆகியது என்பது இங்கே தேவையில்லாத கதை. படம் போண்டியாகிவிட்டதால் இந்த இயக்குனருக்கு அடுத்தடுத்து டிமாண்ட் இல்லாமல் போய்விட்டது. எனவே காவியக்கதை அப்போதைக்கு அவரது மனதுக்குள் பாலூற்றி அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இதற்கிடையே முதல் படத்தை படுதோல்வி படமாக எடுத்துவிட்டிருந்த முதல் பாரா இயக்குனர் அடுத்த வாய்ப்புக்காக வெறித்தனமாக அலைந்துகொண்டிருந்தார். மெகா ஸ்டாரை வைத்து முதல்படத்தை சூப்பர்ஹிட்டாக்கி, யாரும் எதிர்பாராவண்ணம் அடுத்தப் படத்தில் அமுல் பேபி நாயகனை ஆக்‌ஷன் ஹீரோவாக்கியிருந்த இயக்குனர் ஒருவர் படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருந்தார். இந்த இயக்குனர் நம் முதல் பாரா இயக்குனருக்கு வாய்ப்பளிக்கவும் தயாராக இருந்தார். காரணம் முதல் பாரா சொல்லியிருந்த காவியக்கதை. கொசுவர்த்தி தயாரிப்பாளரிடம் தித்தித்த இயக்குனர் சொன்ன அதே கதை. இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை. இயக்குனர் வேறு இயக்குனருக்கு வாய்ப்பளித்துவிட்டார்.

இந்த நேரத்தில் தான் பிரம்மாண்ட இயக்குனரும் படத்தயாரிப்பில் குதித்தார். முதல் பாரா அவரிடமும் இதே காவியக்கதையை சொல்ல புராஜக்ட்டுக்கு இக்னீஷியன் கொடுத்து ஸ்டார்ட் ஆனது. படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது எல்லோருக்கும் தெரிந்த கதை. இப்படத்தை ப்ரிவ்யூவின் போது பார்த்து கொசுவர்த்தி தயாரிப்பாளர் கடுமையான அதிர்ச்சியடைந்தாராம். விஷயம் பெரிதுபடுத்தப்படாமல் போவதற்கு உப்புமா இயக்குனருக்கு பெரியளவில் ஏதோ செட்டில்மெண்ட் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

* - * - * - * - * - * - * - * - *

இது இன்னொரு மசாலாக் கதை.

இந்த இயக்குனர் எடுத்த முதல் படம் வெளியானதே திருட்டு வீடியோ கேசட்டாகதான். அடுத்த வாய்ப்புக்கு அலைந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டு இயக்குனரின் எதிர்காலமே கேள்விக்குறியானது. எப்படியோ தட்டுத் தடுமாறி முன்னுக்கு வந்த அவர், இன்று தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க எண்டெர்டெயினர்களில் ஒருவர்.

நாலெழுத்து நடிகரை வைத்து இவரெடுத்த இரண்டெழுத்து படமொன்று வசூலில் பல சாதனைகளை புரிந்தது. நடிகருக்கு மட்டுமன்றி இயக்குனருக்கும் அப்படம் திரையுலகில் சிகப்புக் கம்பளத்தை விரித்தது. உண்மையில் இப்படத்தின் கதை, வசனம், லொட்டு, லொசுக்கெல்லாம் இன்னொரு நாலெழுத்து மசாலாவுடையதாம்.

படத்தின் உருவாக்கத்தின் போது கூட இருந்து இரவுபகலாக உழைத்தவர் பஞ்ச் டயலாக்குகளுக்கு பேர்போன அந்த நாலெழுத்து மசாலாவாம். படம் வெளியானபோது தியேட்டரில் பார்த்து, டைட்டிலில் தன் பெயர் இல்லையென்றதுமே நாலெழுத்து டென்ஷன் ஆகிவிட்டாராம். கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக திறமையிருந்தும் திரையுலகில் சரியான வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தவருக்கு அது பேரிடி.

வெறுத்துப் போன நாலெழுத்து, மீண்டும் அதே கதையை - கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வந்து ரவுடிகளை சுளுக்கெடுக்கும் கதை - வேறு ட்ரீட்மெண்டில், கொசுவர்த்தி தயாரிக்க, மூன்றெழுத்து நடிகரை வைத்து, ஆறெழுத்து படமாக எடுத்து சில்வர் ஜூப்ளி ஹிட் அடித்தார். அவருடைய இரண்டாவது படத்துக்கே ஃபார்ட்டி எல் வாங்கியதெல்லாம் தமிழ் திரையுலக வரலாற்றில் செதுக்கி வைக்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள்.

* - * - * - * - * - * - * - * - *

மேற்கண்ட இரு மேட்டர்களிலும் நம்பகத்தன்மை எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்பது எனக்கு திட்டவட்டமாக தெரியாது. ஆனாலும் இன்று கோடம்பாக்கத்தில் எங்காவது இரண்டு உதவி இயக்குனர்கள் சந்தித்துக் கொண்டால் பேசிக்கொள்ளும் கதைகள் இவைதான்.

திரையுலகில் சிலர் பெறும் வெற்றிக்கு, அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகமானது என்பது மட்டும் புரிகிறது. திரையுலகில் வெற்றிபெற விரும்புபவர்கள் முதலில் இழக்க வேண்டியது அவர்களது அடிப்படை அறமாக இருக்கிறது.

19 அக்டோபர், 2009

பத்தாவது தவறியவர், இன்று பி.எச்.டி. முனைவர்!


1989ஆம் ஆண்டில் ஒருநாள்.

“உன் பெயர் என்ன?” டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் அந்த இளைஞரிடம் கேட்கிறார்.

“பரசுராமன்”

“நல்ல பெயர்”

இப்படி சாதாரணமாகதான் சாமிநாதனிடம் அறிமுகமானார் பரசுராமன். இந்த சந்திப்பு அவரது வாழ்க்கையையே மாற்றி வரையப்போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியாது. சென்னை ஐஐடி கெமிக்கல் லேப் ஒன்றில் அசிஸ்டண்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார் பரசுராமன். ஐஐடிக்கு விசிட்டிங் புரொபஸராக வந்து சென்று கொண்டிருந்தார் சாமிநாதன்.

இன்று உலகமெங்கும் அறிவியலாளர்களால் கொண்டாடப்படும் எம்.எஸ்.சாமிநாதன் பவுண்டேஷன் தொடங்கப்பட்டபோது அதில் மூன்றே மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் நிறுவனர். நிறுவனருக்கு உதவியாக ஒரு அறிவியல் பேராசிரியர். இன்னொருவர் பரசுராமன்.

“டாக்டர் அழைத்ததுமே ஐ.ஐ.டி. வேலையை உதறிவிட்டு அவரிடம் உதவியாளராக வந்து சேர்ந்துவிட்டேன். சின்ன ஒரு அறைதான் அலுவலகம். முதல் ஐந்து மாதங்களுக்கு சம்பளமே கிடையாது. ஆறாவது மாதம் நான் பெற்ற முதல் சம்பளம் 850 ரூபாய். அதன்பிறகு சிறியதாக ஒரு அலுவலகம். வேலை நேரத்தில் ஊன், உறக்கம் எதுவுமே கிடையாது.

அந்த சம்பவம் நன்றாக நினைவிருக்கிறது. ஒரு நாள் டாக்டர் அழைத்தார். ‘எனக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வாப்பா’ என்றார். தோசை வாங்கிவரும்போது அலுவலகத்தில் அனைவருமே கிளம்பி விட்டிருந்தார்கள். டாக்டர் மட்டும் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘சாப்பிடு. உனக்காகதான் வாங்கிட்டு வரச்சொன்னேன். இளைஞனா இருக்கே. மூணு வேளை ஒழுங்கா சாப்பிட வேணாமா? இனிமேல் நீ ஒழுங்கா சாப்பிடறியான்னு நான் கண்காணிப்பேன்’ என்றார்.

என் கண்கள் கலங்கிவிட்டது. என் பெற்றோரைத் தவிர்த்து என் மீது இவ்வளவு அக்கறை காட்டிய ஒருவரை அதுவரை நான் சந்தித்ததில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் கடவுளுக்கு நிகரானவர்!”

சாமிநாதனை சந்திக்கும்போது பரசுராமன் பத்தாம் வகுப்பினை கூட முடிக்காதவராக இருந்தார். இன்று சமூகவியலில் முதுகலைப்பட்டம் முடித்திருக்கிறார். சமூகவியலில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இளைஞர் மற்றும் மனிதவள மேம்பாடு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். ஐ.நா.வின் உலக இளைஞர்வள வங்கியின் இந்தியாவுக்கான தூதர் இவர். டாக்டர் சாமிநாதனுக்கு தனிச்செயலரும் இவரே.

குன்றத்தூருக்கு அருகில் இருக்கும் தண்டலம் கிராமத்தில் பள்ளிப்படிப்பை படித்தார். அப்போதெல்லாம் டியூஷன் பீஸ் ஒரு பாடத்துக்கு ஒரு ரூபாய் என்று ஆறு ரூபாய் மாதத்துக்கு கட்டவேண்டும். அதை கட்டக்கூடிய நிலை கூட இல்லாத வறுமைச்சூழல். பத்தாம் வகுப்பு தவறிய பிறகு ஐ.ஐ.டி.யில் பணிபுரிய வந்துவிட்டார். தனது சம்பளத்தில் ஒரு பகுதியை கல்விச்சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு படிக்கும் காலத்திலேயே இருந்தது.

சிறுவயதில் தனக்கு கிடைக்காத டியூஷன் மற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவே கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். 87ஆம் ஆண்டு தான் வசித்த வேளச்சேரி பாரதியார் தெரு பகுதியில் அம்பேத்கர் பெயரில் ஒரு இரவு பாடசாலை அமைத்தார். இவரைப்போலவே ஆக்கப்பூர்வமாக சிந்தித்த அந்தோணி, மதிவாணன், ஜகதீசன், மைக்கேல், ரவி, ஞானப்பிரகாசன், எஸ்ரா என்று இளைஞர்கள் தோள் கொடுத்தார்கள். மாநகராட்சி இடமும் ஒதுக்கித் தந்தது. “இதெல்லாம் தேவையில்லாத வேலை. அந்த இடத்தை எனக்கு என் பெயருக்கு எழுதித் தந்துடு. காசு கொடுத்துடறேன்” என்று அப்பகுதியில் இருந்த பெரிய மனிதர் ஒருவர் முண்டாசு தட்டிக் கொண்டு வந்தார். அம்பேத்கர் பாடசாலையை காக்க இவர்கள் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பரசுராமனுக்கு இருந்த தன்னம்பிக்கையால் இரவு பாடசாலை வளர்ந்தது. ஆரம்பத்தில் இருபத்தைந்து குழந்தைகள் மட்டுமே கற்ற அந்தப் பாடசாலையில் இன்று நூற்றி இருபத்தைந்து பேர் பயில்கிறார்கள். இங்கு பயிலும் மாணவர்களும் பரசுராமனையும், அவரது நண்பர்களையும் போலவே சமூகச்சேவைகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். சமூக மாற்றத்துக்கான சிறுபொறியை வேளச்சேரி பாரதியார் தெருவில் நாம் கண்ணெதிரே காணமுடிகிறது.

அப்பகுதியில் சாலை சரியில்லை என்று இளைஞர்களை கூட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஒருமுறை மறியல் நடத்தினார் பரசுராமன். அப்போதிருந்த எக்ஸ்கியூடிவ் இன்ஜினியர் உடனடியாக ஒரு லாரியை அனுப்பி, சாலை அமைத்துக் கொடுத்ததோடு இல்லாமல், அவரது சொந்தச் செலவிலேயே அச்சாலைக்கு தெருவிளக்குகளும் அமைத்துக் கொடுத்தாராம். இளைஞர்களை பயன்படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்தி சமூகத்துக்கு அவசியமானவற்றை பெற்றுக் கொள்ளமுடியும் என்பது இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்பகுதி ரோட்டரி அமைப்புகளும் இவர்களது நோக்கங்களை புரிந்துகொண்டு, தேவையான விஷயங்களுக்கு நிதியுதவியும் செய்கிறார்கள்.

‘ஒரு பள்ளி திறக்கப்படும்போது, ஆயிரம் சிறைக்கதவுகள் மூடப்படுகிறது’ என்றார் அண்ணல் அம்பேத்கர். கல்விச்சாலைக்கு அவரது பெயரைவிட பொருத்தமான பெயர் வேறு என்ன கிடைத்துவிடும்? ‘கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை ஒரு குழந்தையின் கல்விக்கு செலுத்து!’ என்றும் சமூகத்துக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பரசுராமன் கல்வி மீது ஆர்வத்தை செலுத்தியது அதிசயம் ஒன்றுமில்லை.

“பத்தாவது வகுப்பில் தோல்வியடைந்த நான் இன்று முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன் என்றால் நிறைய பேர் நம்ப மறுக்கிறார்கள். சிறுவயதில் பி.எச்.டி. என்றால் என்னவென்று தெரியுமே தவிர, நான் அதை முடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. என்னுடைய தன்னம்பிக்கையும், பெற்றோர் ஆதரவும், டாக்டர் சாமிநாதன் அவர்களின் ஊக்கமும் என்னை மேன்மையான நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

தயவுசெய்து நம்புங்கள். முடியாதது என்று உலகில் எதுவுமேயில்லை. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் என்னால் ஓரிரு வார்த்தைகள் கூட பேசமுடியாது. இன்று பதினோரு நாடுகளுக்கு போய்வந்திருக்கிறேன். பல சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறேன். என்னால் முடிவது உங்களாலும் முடியுமில்லையா?

என் வாழ்க்கை அனைவருக்கும் கற்றுத்தரும் முக்கியமான பாடம் ஒன்று உண்டு. பள்ளிக் கல்வி தடைபட்டால் வாழ்க்கை முடிந்துப் போய்விடுவதில்லை. கல்விகற்க திறந்தவெளி பல்கலைக்கழகம் மாதிரியான மாற்றுத் தளங்கள் நமக்கு ஏராளமாக இருக்கிறது.

ஒவ்வொருவரும் கல்விக்காக தனி நேரம் ஒதுக்கி கற்கவேண்டும். மாணவர்கள் என்றில்லை. எல்லோருமே தினமும் எதையாவது கற்றே ஆகவேண்டும் என்று இலக்கு வைத்து செயல்பட வேண்டும்.
நம் கல்விமுறையிலும் சில மாற்றங்கள் செய்யப்படுவது முக்கியம். இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் ஐம்பத்தி நான்கு சதவிகிதம் பேர் இளைஞர்கள். பள்ளியில் படிக்கும்போதே தொழிற்கல்வியும், வேளாண்மையும் தனிப்பாடமாக இருந்திருக்கும் பட்சத்தில் உலகமே கண்டிராத தொழிற்புரட்சியையும், வேளாண்புரட்சியையும் நாம் சாதித்திருக்க இயலும்.

இன்று சம்பாதிக்கும் இயந்திரங்களை உருவாக்கும் எண்ணம் பெற்றோரிடையே இருக்கிறது. அப்படியில்லாமல் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அரசாங்கமும் ஒரு ஆண்டுக்கு இத்தனை லட்சம் பேர் என்று இலக்கு வைத்து விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும்.

நாம் வசிப்பது அறிவுநூற்றாண்டில். நம்முடைய நோக்கம் அறிவியலாளர்களை உருவாக்குவதாக இல்லாவிடில், உலக ஓட்டத்தில் நாம் பின் தங்கிவிடுவோம். ‘முடியும்’ என்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை. மீண்டும் சொல்கிறேன். என்னால் முடிந்தது. உங்களாலும் நிச்சயம் முடியுமில்லையா?” என்கிறார் பரசுராமன்.

வெற்றி பெறுவதற்கான சூழல் எல்லோருக்கும் இயல்பிலேயே வாய்த்துவிடுவதில்லை. பரசுராமனைப் போல வலிய அச்சூழலை ஏற்படுத்திக் கொள்வதே, இலக்கினை உருவாக்கிக் கொள்வதே வெற்றிக்கான எளிய சூத்திரம்.

(நன்றி : புதிய தலைமுறை)

16 அக்டோபர், 2009

தீபாவளி


தேர்தல் அரசியல் தலைவர்களில், கலைஞர் மட்டும் இன்னும் கொள்கை பிடிப்பாய் தீபாவளி வாழ்த்து தெரிவிக்காமலிருக்க, கலைஞர் டீவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ̀சன்'னுடன் போட்டியிடும் காலத்தின் கட்டாயத்தில், தீபாவளி பற்றிய சில கருத்துக்கள்; தீபாவளி பற்றி ஏதோ வகையில் எதிரெண்ணம் கொண்டவர்களை முன்வைத்து.

கிட்டத்தட்ட 15 வருஷங்கள் தீபவளியை கொண்டாடாமலும், விலகியும், பட்டும் படாமலும், தவிர்த்தும் வந்து, கடந்த மூன்று வருடங்களாய் கொண்டாடுகிறேன்; கொண்டாடுவது என்பது புத்தாடை, வெடிகளுடன், ̀சகலை' வீட்டில் கொண்டாட்டங்களில் பங்கேற்பது. மகன் பிறந்த பிறகு தீபாவளியை தவிர்ப்பது வன்முறையாகவும், அராஜகமாகவும் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் பெரியார் இயக்க பாதிப்பில், கொள்கை பிடிப்புள்ள ஒரு கூட்டம் தீபாவளி பற்றி எதிர் எண்ணம் கொண்டு, ராவணனை/நரகாசூரனை -என்ற திராவிடன/ ̀சூத்திரனை'- கொன்ற தினமாக கருதி, கொண்டாட்டங்களை தவிர்த்து வருகிறது. இஸ்லாத்திற்கோ, கிரிஸ்தவத்திற்கோ , முடிந்தால் பௌத்தத்திற்கு மாறுவது இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. (எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று சொல்லவில்லை.) மிக தெளிவாக ̀நாம் வேறு; தீபாவளி நமக்கானதல்ல' என்ற எண்ணம் திடமாக வந்து, கொண்டாடாததன் மனக்குறை இருக்காது; குறிப்பாக குழந்தைகளுக்கு இருக்காது. இந்துவான அடையாளத்தை மாற்று மதத்தில் கரைக்காமல், குழந்தைகளிடம் தீபாவளியை பிடுங்குவது நிரப்ப முடியாத வெற்றிடத்தையும், மனக்குறையையும், தாழ்வு மனப்பான்மையை ஒத்த ஒரு மனநிலையையையுமே ஏற்படுத்தும்.

மேலும் எந்த ஒரு செயலுக்குமான பொருளை நாம் புதிது புதிதாக கற்பிக்க இயலும்; 80களின் (இளைஞ)தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக முந்தய தினம் முட்ட முட்ட தண்ணியடிப்பதே. மூன்று மதத்தவரும் சம அளவில் வாழும் தூத்துக்குடியில் வாழ்ந்த போது, 80களின் தெரு முக்கு க்ரூப்களில், இந்துக்கள் தீபாவளியன்று (எல்லோரும் கலக்க) பார்ட்டி தருவதும், ரம்ஜானில் இஸ்லாமிய இறுப்பினர்களும், கிரிஸ்மஸ் அன்று கிருஸ்தவ நண்பர்கள் தருவதும் ஒரு பண்பாடாய் உருவானது. அந்த தீபாவளி நீர் கொண்டாட்டத்திற்கு நரகசூரனோ, ராவணனோ, ராமனோ, கிரிஷ்ணனோ அருத்தம் தருவதில்லை. ஆகையால், இப்போதைக்கு தீபாவளியை வேறு தினத்திற்கு, வேறு சந்தர்ப்பத்திற்கு மாற்றவோ, இதே அளவு குதுகலத்தை பதிலீடு செய்யவும் இயலாததால், எல்லாரையும் தீபாவளி கொண்டாட அறைகூவுகிறேன். மீறி கொண்டாடாதவர்களை நான் திட்ட மாட்டேன். கொண்டாடுபவர்களை யாரும் திட்டாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!

கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரோஸாவசந்த் எழுதியது. அப்போது படிக்கும்போது தெனாவட்டாக சிரித்தேன். இப்போது கிட்டத்தட்ட இப்பதிவு சுட்டிக்காட்டும் மனநிலைக்கு மாறிவிட்டிருப்பதை உணர்கிறேன். :-)

15 அக்டோபர், 2009

டுக்.. டுக்.. டுக்...


சென்னை-28 திரைப்படத்தின் கிரிக்கெட் பட்டாளம் மாதிரி கலாட்டாவாக இருக்கிறது இந்த இளமை டீம். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த என்.ஜி.ஓ. அமைப்பு நடத்திய போட்டி ஒன்றில் வெற்றிவாகை சூடிய தெம்பு ஒவ்வொருவரின் முகத்திலும் பளிச்சிடுகிறது. இப்போது இவர்கள் தான் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் செல்லப் பசங்க. ஆட்டோப் பசங்க.

“மீடியாக்காரங்க போட்டோவுக்கு போஸ் கொடுத்தே டயர்ட் ஆயிட்டேம்பா” என்று டீம்லீடர் அங்கூர் சிணுங்க, மற்றவர்கள் ரவுண்டு கட்டி ஜாலியாக முதுகில் குத்துகிறார்கள்.

பல்கலைக் கழகத்தின் ஆட்டோமொபைல் ஷெட் பளிச்சென்று, பக்காவாக இருக்கிறது. ஷெட்டில் இருப்பவர்கள் யார் கையிலும் க்ரீஸ் கறை பேருக்கு கூட இல்லை. தரை சுத்தமோ சுத்தம். சம்மணமிட்டு அமர்ந்து சோறு சாப்பிடலாம். “ஹலோ இது ஆட்டோமொபைல் ஷெட்டா? இல்லைன்னா கம்ப்யூட்டர் லேபா?” என்று கேட்டால், “ஷெட்டுன்னு எல்லாம் சொல்லக்கூடாது. இதையும் லேப்புன்னு தான் சொல்லணும்” என்று சீரியஸாக அட்வைஸ் செய்கிறார்கள்.

ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் வினோத வடிவ வாகனங்களைப் பார்க்கும்போது ஏதோ சயன்ஸ் பிக்‌ஷன் ஹாலிவுட் படங்களுக்கு மாடல் தயாரிக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. விசித்திரமாக காட்சியளித்த குட்டிவிமானம் இருந்த ஒன்றைப் பார்த்து, “இதிலே உட்கார்ந்துட்டு எத்தனை பேர் பறக்கலாம்?” என்றால், “உங்க ஊருலே காரெல்லாம் கூட பறக்குமா?” என்று கலாய்க்கிறார்கள். விரைவில் இவர்கள் கால இயந்திரம் கூட தயாரித்து விடுவார்கள் போலிருக்கிறது.

ஓர் ஓரமாக அமைதியாக கவர்ச்சியான சாக்லேட் வண்ணத்தில் நிற்கிறது அந்த ‘டுக் டுக்..’
“அதென்னங்க பேரு டுக் டுக்?”

“பாரின்லே எல்லாம் ஆட்டோன்னு சொல்ல மாட்டாங்க. ‘டுக் டுக்’னு தான் சொல்வாங்க. ரோட்டுலே ஆட்டோ ஓடுறப்போ வர்ற சவுண்டை கவனிச்சிங்கன்னா தெரியும். ‘டுக்.. டுக்.. டுக்..’னு ஒரு ரிதம் பேக்கிரவுண்ட்லே நைசா ஓடிக்கிட்டே இருக்கும்” நீலக்கலரில் உடை அணிந்திருந்த ஒருவர் அக்கறையாக நமக்கு விவரிக்க, டீமில் இருந்த பரத், “ஏய் யாருய்யா நீயி? உன்னை நம்ம ப்ராஜக்ட்டுலே நான் பார்த்ததே இல்லையே?” என்று மிரட்டுகிறார்.
“சாரி பாஸ். நான் வேற ப்ராஜக்ட்டுலே இருக்கிறேன். சும்மா எட்டிப் பார்த்து ஒரு கருத்து சொல்ல்லாமேன்னு வந்தேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக அந்த கருத்து கந்தசாமி எஸ்கேப் ஆனார்.

“பாய்ஸ் விளையாட்டு போதும். சீரியஸாப் பேசுவோம்” என்று ஒருவழியாக அங்கூர் சீரியஸ் மூடுக்கு வர, குழுவினர் வலிய வரவழைத்துக் கொண்ட சீரியஸ் முகபாவத்தோடு வரிசையாக அட்டென்ஷனில் நிற்கிறார்கள். எட்டு பேர் கொண்ட டீம் இது. அங்கூர், சூரஜ், பரத், புனீத், சத்யா, அபய், மிருத்யுஞ்சய், சாஹித் – இவர்கள் தான் இந்த வெற்றிக் கூட்டணி.

“என்வியூ (Enviu) என்ற நெதர்லாந்து என்.ஜி.ஓ ஒரு போட்டி நடத்துறதா கேள்விப்பட்டோம். அதாவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஆட்டோவை உருவாக்குறது சம்பந்தமான போட்டி அது. போன வருஷம் போட்டியிலே கலந்துக்க விண்ணப்பிச்சோம்.

அப்புறமா ஜூலை மாசம் வேலையை தொடங்கினோம். எங்களோட ப்ளான் என்னன்னா, ஏற்கனவே இருக்கிற இன்ஜினை லேசா மாத்தி சுற்றுச்சூழலுக்கு பங்கம் வராம பாத்துக்கிறதுதான். புதுசா ஏதாவது பண்ணோம்னா ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஆட்டோ டிரைவர்கள் உடனடியா மாறமாட்டாங்க. அதுவுமில்லாம நாங்க எடுத்த சர்வேல ஒரு விஷயம் புரிஞ்சது.

ஆட்டோக்காரர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லை. ஆனா மைலேஜ் கிடைச்சுதுன்னா மாற்றத்தை ஏத்துக்க தயாரா இருந்தாங்க. பெட்ரோல் விக்கிற விலைக்கு அவங்களுக்கு மைலேஜ் தான் முக்கியமான பிரச்சினையா படுது. எனவே எங்க பிராஜக்ட் சுற்றுச்சூழலுக்கும் பங்கம் வராம, பெட்ரோலும் கையை கடிக்காத கண்டுபிடிப்பை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சது. ஏற்கனவே இருக்குற செட்டப்புலே மாற்றம் வேணும். ஆனா அது ரொம்ப சுளுவா இருக்கணும்னு முடிவு பண்ணோம்.

ஏற்கனவே இருக்கிற ஆட்டோவோட செட்டப்புலே சின்ன சின்ன மாற்றங்கள் தான் பண்ணினோம். கார்பரேட்டர்லே இருக்கிற ஜெட்டை மாத்தி, டூவீலரோட ஜெட்டை பொருத்தினோம். கார்பரேட்டருக்கு வர்ற பெட்ரோல் அளவை கம்மி பண்ணினோம். இதனாலே மைலேஜ் கிடைக்கும். சைலன்ஸர்லே வெளிவரும் புகையும் கம்மியா இருக்கும். ஆனா ஏர் ஃபில்டர் ரொம்ப ஹீட் ஆகி பிக்கப் குறைஞ்சது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க ஏர் ஃபில்டருக்கு ஒரு கூலர் செட்டப் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணினோம்.

ஈஸியா சொல்லிட்டோமே தவிர, இதெல்லாம் நடக்க ஒருவருஷம் இரவு, பகல் பாராத உழைப்பும், சிந்தனையும் தேவைப்பட்டது. இப்போ ரெடியாயிட்ட இந்த ஆட்டோவைப் பார்த்தீங்கன்னா மற்ற ஆட்டோக்களை விட இதில் கார்பன் மோனாக்ஸைடு கம்மியா வெளிவரும். அதாவது 3%லேருந்து 0.3%க்கு குறைஞ்சிருக்கு. அதுபோலவே ஹைட்ரோ கார்பனும் 60 ppm அளவிலே இருந்து, 26 ppm அளவுக்கு குறைஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் மேல மைலேஜ் 40% அதிகரிச்சிருக்கும்.

ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ஒரு ஆட்டோவில் இந்த மாற்றங்களை செய்ய வெறும் ஆறாயிரம் ரூபாய் செலவு பண்ணா போதும். இந்த காசை ரெண்டே மாசத்துலே ஒரு ஆட்டோ டிரைவர் சம்பாதிச்சிட முடியும். அதுக்கு மேலே ஆட்டோக்கள் ’காசு மேலே காசு வந்துன்னு’ சம்பாதிச்சு கொட்டும்”

டீம் ஆட்கள் எட்டு பேரும் மாற்றி, மாற்றி தங்கள் ‘டுக் டுக்’கின் வரலாற்றை விவரிக்கிறார்கள். உஷாராக இது ஆட்டோக்காரர்களுக்கு பொருளாதார ஆதாயம் கொடுக்கக் கூடியது என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தி சொல்கிறார்கள்.

“எங்க கண்டுபிடிப்பு என்வியூ நடத்திய ‘ஹைப்ரிட் டுக் டுக்’ போட்டியின் ஃபோர் ஸ்ட்ரோக் பிரிவில் முதல் பரிசு வாங்கிடிச்சி. இந்தியாவிலிருந்தும், நெதர்லாந்தில் இருந்தும் ஏழு டீம் கலந்துக்கிட்டாங்க. இந்த கண்டுபிடிப்பு ஆட்டோ வரலாற்றில் ஒரு மைல்கல்லுன்னு கூட சொல்லலாம்.

பேடண்ட் ரைட்ஸ் மாதிரியான மற்ற நடைமுறைகள் நடந்துக்கிட்டிருக்கு. மிக விரைவில் இது மார்க்கெட்டுக்கு வரும். ஆட்டோ டிரைவர்களுக்கு வரப்பிரசாதமா அமையும்” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்கள்.

முதல் பரிசு பத்தாயிரம் யூரோவாம் (இந்திய மதிப்பில் ரூபாய் ஆறு இலட்சத்து எழுபதாயிரம்). தயவுசெஞ்சி ட்ரீட் கொடுங்க பாய்ஸ்!!

12 அக்டோபர், 2009

கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழநியம்மாள்..

கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழநியம்மாள்..100 % மொக்கை..! - இதை படித்து தொலைத்துவிட்டு இங்கே வரவும்.


"நீதான் கேத்தரின் பழனியம்மாளா?" ஆவேசமடைந்தவன் போல கேட்டவன் அடுத்த நொடியே என் முகத்தில் காதலை காட்டினேன்.

என் ஆவேசத்தையும், உடனே மாறிய முகபாவத்தையும் கவனித்தவள், "உன் பேரென்ன?" என்றாள்.

"பேரு கெடைக்குது கழுதை, உங்கிட்டே பேச எனக்கு நிறைய விஷயம் இருக்கு"

"எங்கிட்டேயா? என்ன பேசப்போறே?"

"உன்னை பத்தி, உன் கவிதைகளை பத்தி, என்னை பத்தி, என் காதலை பத்தி"

"என்னை பத்தி சரி.. என் கவிதைகளை பத்தி எதுக்கு? நானே அதெல்லாம் கவிதைன்னு ஒத்துக்க மாட்டேன். உன்னை பத்தியும், உன் காதலை பத்தியும் தெரிஞ்சுக்க எனக்கு எந்த ஆர்வமும் இல்லே!"

"உனக்காக ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி வந்திருக்கேன்"

சாந்தி பாக்கு ஒன்றை கையில் எடுத்தாள். வாயாலேயே பாக்கெட்டை கடித்து திறந்தாள். பாக்கை வாயில் கொட்டிக் கொண்டவள், "அதுக்காக" என்றாள் கொஞ்சம் சத்தமாக.

சக சரக்குவண்டிகள் எங்களை விநோதமாக பார்க்க, கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தேன். "வெளியே போய் பேசலாமா?"

மெதுவாக வெளியே நடந்தோம். என்னைவிட அதிகமாக சரக்கடித்திருந்தாலும் கேத்தரீனா ஸ்டெடியாக இருந்தாள். என் கால்கள் தான் கொஞ்சம் தடுமாறியது. சாலையில் இருவரும் நடந்து செல்லும்போது எதிர்பட்ட பார்வைகள் கொஞ்சம் வித்தியாசத்தை காட்டியது. ஒரு போலிஸ்காரர் கேத்தரீனுக்கு வைத்த சல்யூட் என்னை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது.

"தாயோளி, போனவாரம் வந்து ஓசிலே மேஞ்சிட்டு போன நாயி சல்யூட் வைக்குது. இவன் சல்யூட் வெச்சாலே மறுபடியும் ஓசிக்கு வருவான்னு அர்த்தம்" என்றவள் பாக்கு எச்சிலை புளிச்சென்று துப்பினாள்.

"உங்களை கவிதைகள் வாயிலாக அறிந்தவன் நான்" என்றேன்.

"அதுக்கு என்னா இப்போ? நேருல பார்த்துட்டே இல்லே. என்னா வேணும்?"

"உங்களை காதலிக்கிறேன்" கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன். சாலையில் நடந்துகொண்டிருந்த கூட்டம் ஒரு நொடி நின்றது. என்னை ஆச்சரியத்தோடும், கிண்டலோடும் பார்த்தவர்கள் மறுகணம் தத்தம் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

மவுனித்தாள் கேத்தரீன். அவள் முகத்திலும் வெட்கம் தோன்றியதைப் போல இருந்தது. அவளது கால் கட்டைவிரல் தரையில் கோலம் போட ஆரம்பித்ததை நானே எதிர்பார்க்கவில்லை.

"உன் பேரு என்னா?" பெண்மையின் மென்மை முதல் தடவையாக அவளிடம் இழையோட, மெல்லிய குரலில் கேட்டாள்.

"சத்யா.. என்னை பொட்"டீ"க்கடைன்னு கூப்பிடுவாங்க. அவுஸ்திரேலியாவிலிருந்து வருகிறேன்" என்று பதிலளித்தேன்.

9 அக்டோபர், 2009

நோபல் பரிசு!


என்ன கொடுமை சார் இது?

கடைசியில் நோபல் பரிசும் கூட கலைமாமணி விருது ரேஞ்சுக்கு போய்விட்டதே?

ஏற்கனவே தமிழகத்தின் தங்கத்தாரகைக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்றளவில் பெரிய கோரிக்கை ஒன்று சில காலத்துக்கு முன்பாக எழுந்தது. தொல்காப்பியப் பூங்கா எழுதியதற்காக கலைஞருக்கு வழங்கப்படும் என்று திமுகவினரும் எதிர்பார்த்தார்கள். நோபல் கமிட்டியின் நொள்ளைக்கண்ணுக்கு ஏனோ தங்கத்தாரகையும், டாக்டர் கலைஞரும் கண்ணிலேயே படவில்லை.

இப்போது அமைதிக்கான நோபல் பரிசு ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் வியட்நாம் புகழ் அமெரிக்காவின் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்தாண்டுக்கான நோபல் பரிசாவது பச்சைத் தமிழருக்கு கிடைக்க வேண்டும். கண்ணகி காலத்திலிருந்தே தீயாய் பற்றியெறியும் வன்முறை நகரம் மதுரை. பல நூற்றாண்டுகளாக கத்தியும், இரத்தமும், தீயுமாக பற்றியெறிந்த மதுரை இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இதற்கு காரணம் அண்ணன் அஞ்சாநெஞ்சனார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக சாதனை வெற்றியடைந்து, இந்தியாவுக்கே அமைச்சரானது உலக சரித்திரம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக அமைதியிழந்து தவித்த நகரை அமைதியின் மறுபெயராக மாற்றிய அஞ்சாநெஞ்சனாருக்கு அடுத்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதே நியாயமானதாக இருக்க முடியும். அதுவே தமிழுக்கு கிடைக்கும் பெருமையும் ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் பரிசு வழங்கியதைப் போல, அண்ணனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென்று தமிழகமே நோபல் கமிட்டியை இந்தப் பதிவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறது. தகுதியான ஒருவருக்கு இப்பரிசினை வழங்கி நோபல் தனக்கான கவுரவத்தை காத்துக் கொள்ளுமா என்பதே இப்போது நம் முன் உள்ள பில்லியன் டாலர் கேள்வி!

இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும்...

இடாகினி என்பது தமிழ் சொல்லா? இடாகினி என்ற வார்த்தைக்கு சத்தியமாக என்ன பொருள் என்பது புரியவில்லை. ஆனாலும் மோகிணி என்று சொல்லுவதைப் போல இடாகினி என்று சொல்லுவதும் கவர்ச்சியாக, நாக்குக்கு இதமாக இருக்கிறது. இடாகினி இடாகினி என்று சொல்லிப் பாருங்கள். கேட்பவர்களின் காதுகளில் நிச்சயம் தேன் ஒழுகும். என்ன ஒரு அழகான வார்த்தை.

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை அவரது எழுத்தைப் போலில்லாமல் துயரமானதாக இருந்திருக்கக்கூடும். துயரமும், கொண்டாட்டமும் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே அமைகிறது. ஒரு அரசுசாரா சேவை நிறுவனத்தில் 750 ரூபாய் சம்பளத்தில் கோபிகிருஷ்ணன் என்னத்தை பெரியதாக கொண்டாடியிருக்க முடியும்? சிகரெட்டும், குடிப்பழக்கமும் இல்லாது இருந்திருந்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோவென்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் அவரது எழுத்து கொண்டாட்டம் நிறைந்தது. மற்றவர்களை எந்தளவுக்கு எள்ளல் செய்கிறாரோ, அதே அளவு சுயஎள்ளலும் செய்துகொள்கிறார். அடுத்தவர்களை வெறுக்கும் அளவுக்கு தன்னையும் வெறுத்துக் கொள்கிறார். அடுத்தவர்களை புகழும் அளவுக்கு தன்னையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார். அடுத்தவர்களை திட்டும் அளவுக்கு தன்னையும்... இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். கோபிகிருஷ்ணனுக்கு வாய்த்த மனம் எல்லோருக்கும் வாய்ப்பது அரிது.

‘இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!’ - குறுநாவலில் தலைப்பே ஒருவரி கதை மாதிரிதானிருக்கிறது. தலைப்பைப் பார்த்து மிரளாதே என்று முதல் பத்தியிலேயே நட்போடு ஆலோசனை கூறுகிறார். 28-09-1989 முதல் 24-03-1997 வரையிலான ஒரு மனிதரின் டயரிக்குறிப்புதான் இக்குறுநாவல். நாவலை எழுதுவதற்கான நியாயங்களாக கோபி குறிப்பிடுவதில் முக்கியமானது சமூகப்பணித்துறையில் பல கறுப்பு ஆடுகள் நுழைந்து கொண்டிருப்பது. மற்றொன்று, இந்த... என்ன சொல்வார்கள் அதை.. ஆம் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் என்ற வார்த்தை நெருடலாக இருப்பது மட்டுமின்றி இயல்பான உணர்வுகள் மீது ஒடுக்குமுறையை திணிக்கிறது. இப்படியே எழுதிக் கொண்டு போகிறார். கோபிகிருஷ்ணனின் புகைப்படம் எதையும் பார்த்ததில்லை நான். இந்நாவலை வைத்து அவரது உருவத்துக்கு என் மனதில் ஒரு பிம்பம் வரைந்து வைத்திருக்கிறேன். அனேகமாக அசோகமித்திரன் உடல்வாகோடு கூடிய பிம்பம் அது.

நாவல் முழுக்க ஆங்காங்கே இறைந்து கிடக்கும் கோபியின் சுயபிரகடனங்களும் சுவாரஸ்யமானவை. ‘நான் நல்லவனா, கெட்டவனா என்பது பிரச்சினை இல்லை. இந்த அடைகள் தேவை இல்லாதவை. நான் வரம்புகள் அற்றவன். ஆனால் ஒன்றை நிச்சயம் சொல்லியாக வேண்டும். நீங்கள் எனக்கு கொடுக்கும் சுதந்திரங்களை தவிர்த்து வேறு சுதந்திரங்களை நான் என்றைக்கும் எடுத்துக் கொள்ளமாட்டேன்’

நந்தன் இதழில் வெளிவந்திருந்த தந்தை பெரியாரின் கூற்று ஒன்றினை வாசித்தபோது இந்நாவலுக்கான அவசியம் கோபிக்கு ஏற்பட்டிருக்கிறது. ’நாட்டில் யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமல் போய்விட்டது. எந்த ஸ்தாபனமும் யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பிழைக்க வேண்டும் என்பதல்லாமல் பொது மக்கள் நலனுக்காக ஏற்படவில்லை’. இந்தக் கூற்றை வாசிக்கும்போது அது எல்லா நிறுவனங்களுக்குமே பொருந்துகிறது. இதுவரை மதங்கள் உலகுக்கு தந்த எல்லா தீர்க்கதரிசிகளை விடவும் சிறந்தவர் தந்தை பெரியார்.

கோபி பணிபுரிந்த அலுவலகம், அது அமைந்திருந்த சாலை, கட்டிடம், அறைகள், வராண்டா என்று விஸ்தாரமாக அஃறிணைகளில் தொடங்கி அவ்வலுவலகத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியரைப் பற்றியுமான அறிமுகத்தை தமிழ் வாசகனுக்கும், வாசகிக்கும் கொடுக்கிறார். ஹாலிவுட் படங்களில் கையாளப்படும் உத்தி இது. ஒரு படத்தின் இரண்டு மணி நேரத்தை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொண்டு முதல் பாகத்தில் முழுக்க முழுக்க கேரக்டர் எஸ்டாபிளேஷன். அடுத்த பாகத்தில் கேரக்டர்களுக்கிடையேயான சிக்கலை, பிரச்சினைகளை உருவாக்குவது. மூன்றாவது பாகத்தில் சிக்கு எடுத்து சுபம். இடாகினி இந்த ஃபார்முலாவில் அச்சுபிசகாமல் பயணிக்கிறது. க்ளைமேக்ஸ் மட்டும் ஆண்ட்டி-க்ளைமேக்ஸ்.

இன்று இணையத்தில் சாத்தியமாகியிருக்கும் ஹைப்பர்-லிங்க் முறையை ப்ரிண்ட் மீடியத்தில் பரிசோதித்து இந்நாவலில் வெற்றி கண்டிருக்கிறார் கோபி. ‘இணைப்பு-1ல் அந்தப் பரிசோதனை ஓர் அற்புதமான உளவியல் ஆவணம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, புது எழுத்துவில் வெளியாகி மானிட வாழ்வு தரும் ஆனந்தம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இலியும் வழியும் புறப்பாடும் தெறிப்பும் என்ற படைப்பு ஆகும். இதை இணைப்பு 1-அ என்று வைத்துக் கொள்ளலாம்’ என்ற ரேஞ்சுக்கு நாவல் முழுக்க ஒன்பது இணைப்புகள். நல்லவேளையாக அவற்றை புது எழுத்துவிலோ, கணையாழியிலோ, கோபியின் தொகுப்புகளிலோ தேடிப்படிக்கும் அசாதாரமாண வேலையை வைக்காமல் நூலின் பிற்பகுதியிலேயே பதிப்பகத்தார் இணைத்திருக்கிறார்கள்.

இதை புனைவு என்றோ, என் சொந்தக்கதை என்றோ எப்படி உனக்குத் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக்கொள் என வாசகனுக்கு சுதந்திரத்தை அவர் தந்துவிட்டாலும், அந்த சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள வாசகன் தயாரில்லை. இதைப் புனைவு என்று யாருமே நினைக்கமுடியாத அளவுக்கு அனுபவித்தால் மட்டுமே எழுதியிருக்கக்கூடிய உயிரோட்டமான எழுத்துகள். இப்படைப்பின் நாயகன் கோபி என்றால், நாயகி அவரோடு பணிபுரிந்த விக்டோரியா சமாதானம். மெல்லிய ரொமான்ஸும் உண்டு. சமாதானம் குறித்து எழுதும்போது கோபியின் பேனா நிறைய ஜொள்ளு விடுகிறது. பெண்களுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டுமென்றால் பேண்டீஸும், ப்ராவும்தான் கோபியின் சாய்ஸ்.

நூலாசிரியரின் பலமே புரியும்படி எழுதுவது. தமிழில் வன்மையான வார்த்தைகள் நிறைய உண்டென்றாலும் வாசிக்கும் எல்லோருக்கும் புரியும் வார்த்தைகளையே பயன்படுத்துகிறார். சிற்றிலக்கியம் என்ற பெயரில் வாசகனுக்கு பூச்சாண்டி காட்டவில்லை. இவ்வகையிலும் கோபியையும், சாருவையும் நிறைய ஒப்பிட முடிகிறது. நண்பர் என்ற அடிப்படையில் சாருவுக்கு கோபியின் இன்ஃப்ளூயன்ஸ் எழுத்தில் நிறைய இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். கோபியின் இடாகினியும், சாருவின் ராஸலீலாவும் பணிசார்ந்த அனுபவங்கள் என்ற அடிப்படையில் ஒரே தளத்தில் இயங்கும் படைப்புகள். இருவருமே குமாஸ்தாப்பணியை திறம்பட செய்தவர்கள். அப்பணியை வெறுத்தவர்கள். நரகத்தில் இருந்ததைப் போல உணர்ந்தவர்கள் பணியில் இருந்து வெளிவந்ததை விடுதலையாக கொண்டாடியவர்கள். அதே நேரத்தில் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அந்தரங்க வெளிப்பாடு வாசகனுக்கு கிசுகிசு படிக்கும் போதையையும் ஏற்றுகிறது.

நூல் சொல்லும் கதையைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. படிக்க விரும்புபவர்களுக்கு அது ஸ்பாய்லர் ஆகிவிடும். ஆனால் மாறுபட்ட சுகமான வாசிப்பனுபவத்துக்கு இடாகினி நிச்சய உத்தரவாதம் அளிக்கிறாள் என்று மட்டும் உத்தரவாதம் அளிக்க இயலும்.


நூலின் பெயர் : இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!

நூல் ஆசிரியர் : கோபிகிருஷ்ணன்

விலை : ரூ.40/-

பக்கங்கள் : 128

வெளியீடு : தமிழினி,
342, டி.டி.கே. சாலை, சென்னை-14


கோபிகிருஷ்ணனின் பிற படைப்புகள் :

1) ’ஒவ்வாத உணர்வுகள்’ (சிறுகதைகள்) 1986 - சிட்டாடல் வெளியீடு

2) ’உணர்வுகள் உறங்குவதில்லை’ (குறுநாவல்கள்) 1989 - சரவணபாலு பதிப்பகம்

3) சஃபி, லதா ராமகிருஷ்ணன் - இவர்களுடன் இணைந்து எழுதிய ’கொஞ்சம் அவர்களைப் பற்றி.. மனோதத்துவம் ஓர் அறிமுகம்’ (கட்டுரைகள்) 1992 - சவுத் ஏஷியன் புக்ஸ்

4) சஃபியுடன் இணைந்து எழுதிய ‘சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’ (ஒரு நீண்ட கட்டுரை) 1992 - முன்றில் வெளியீடு

5) ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ (மனநோய்கள் குறித்த புத்தகம்) 1993 - முன்றில் வெளியீடு

6) ’முடியாத சமன்’ (சிறுகதைகள்) 1998 - ஸ்நேகா வெளியீடு

7) ‘டேபிள் டென்னிஸ்’ (குறுநாவல்) 1999 - தமிழினி

8) ‘தூயோன்’ (சிறுகதைகள்) 2000 - தமிழினி

9) ‘மானிட வாழ்வு தரும் ஆனந்தம்’ (சிறுகதைகள்) 2001 - தமிழினி

6 அக்டோபர், 2009

புவனேஸ்வரி!


ஒரு ஏழெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். வடபழனி பக்கமாகப் போனபோது சுவரெங்கும் ஒட்டப்பட்டிருந்த அந்த ‘வாழ்த்து சுவரொட்டிகள்’ கண்ணைக் கவர்ந்தது. “தானைத்தலைவி புவனேஸ்வரிக்கு 21வது பிறந்தநாள் வாழ்த்துகள் – இவண் அகில உலக புவனேஸ்வரி ரசிகர் மன்றம்”

அப்போது புவனேஸ்வரி சினிமாவில் கூட நடித்ததாக நினைவில்லை. ஒரு சில டிவி சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தார். ‘பூனைக்கண் புவனேஸ்வரி’ என்று அடைமொழியோடு ஓரளவு அறியப்பட்டிருந்தார். மறுநாள் தினத்தந்தி தொடங்கி எல்லாப் பத்திரிகைகளில் புவனேஸ்வரி பிறந்தநாள் விழா செய்திகளும், அதையொட்டி அவரது ரசிகர்மன்ற நற்பணிகளும் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. படங்களும் அட்டகாசமாக ‘கவர்’ செய்யப்பட்டிருந்தது.

அடுத்த ஓராண்டுக்குள்ளாகவே விபச்சார வழக்கில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதாக அதே பத்திரிகைகளில் வாசிக்க நேர்ந்தது. புவனேஸ்வரியை பற்றி மட்டுமல்ல, அந்த சீசனில் வினிதாவைப் பற்றியும் கூட இதேமாதிரி ‘விபச்சார வழக்கு’ செய்திகளை காணநேர்ந்தது. ‘விபச்சார வழக்கு’ என்றொரு வழக்கு இருக்கிறதாவென்றே எனக்குத் தெரியவில்லை.

இ.பி.கோ.வில் இதற்கு என்ன செக்‌ஷன்? சரி. புவனேஸ்வரியும், வினிதாவும், ஏனைய சில இரண்டாம் கட்ட நடிகைகளும் விபச்சாரம் செய்தார்கள் என்று வழக்குப் போடப்பட்டிருந்தால், அவ்வழக்குகளில் இதுவரை ஏதேனும் தீர்ப்புகள் வந்திருக்கிறதா? அவர்களிடம் விபச்சாரத்துக்கு போனவர்கள் மீது ஏதேனும் வழக்கு பதியப்பட்டிருக்கிறதா? – இதுபற்றிய செய்திகளை எங்குமே காணநேரவில்லை. சமீபத்தில் கூட பத்மாலட்சுமியோ என்னவோ பெயர். ஒரு நடிகை இதுபோல கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வழக்கும் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. எது எதற்கோ ஃபாலோ-அப் கொடுக்கும் பத்திரிகைகள் இந்த பரபரப்பான செய்திகளுக்கு ஏன் ஃபாலோ-அப் கொடுப்பதில்லை என்பதும் புரியவில்லை.

இப்போது மீண்டும் புவனேஸ்வரி ‘விபச்சார வழக்கில்’ கைது செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகைகள் ஒருவாரமாக பரபரத்துக் கொண்டிருக்கின்றன. காவல்துறையின் விசாரணையின் போது மேலும் சில நடிகைகளின் லிஸ்டை கொடுத்து இவர்களையெல்லாம் கைது செய்யமாட்டீர்களா? என்று கேட்டதாகவும் வாசிக்க நேர்கிறது. காவல்துறை விசாரணை பத்திரிகைகளுக்கு ‘லீக்’ ஆகிறதா, அப்படியென்றால் லீக் செய்த கருப்பாடு காவல்துறையில் இருக்கிறதா என்பதெல்லாம் இயல்பாக எழவேண்டிய துணைக்கேள்விகள். தினமலர் ஒரு படி மேலே போய் புவனேஸ்வரி கொடுத்த லிஸ்டில் இருந்த நடிகைகள் என்று ஷகீலா, அஞ்சு, சீதா, மஞ்சுளா, நமீதா, ஸ்ரீப்ரியா, நளினி என்று படங்களோடு செய்திகள் வெளியிட்டிருந்தது. அனேகமாக தமிழ் பத்திரிகையுலக வரலாற்றிலேயே இவ்வளவு தில்லாக (அது உண்மையா பொய்யா என்பது வேறு விஷயம்) ஒரு செய்தி வெளிவந்திருப்பது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.

இதையடுத்து நடிகர் சங்கம் அவசரமாக கூடி, ஏதோ முடிவெடுத்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாக இன்றைய செய்தித்தாள்களில் போட்டோவோடு காணமுடிகிறது. (மஞ்சுளா) விஜயகுமார் ஆவேசமாக, “குடும்பப் பெண்களைப் பற்றி இதுபோல செய்திகள் வெளிவந்தால், எப்படி இவர்களோடு குடும்பம் நடத்துவது?” என்று கேட்டிருப்பதாகவும் வாசித்தேன். ஃபுல் மேக்கப்போடு சில நடிகைகள் கமிஷனர் ஆபிஸுக்கு வந்த வண்ணப்படங்கள் பிரதானமாக பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ‘இவங்களா ஏன் ஜீப்புலே ஏறுராங்க!’ என்ற லெவலுக்கே படத்தைப் பார்த்து டீக்கடைகளில் கமெண்டு அடிக்கிறார்கள்.

இந்த மேட்டரை இந்த அளவுக்கு பப்ளிசிட்டி செய்யாமலேயே சம்பந்தப்பட்ட நடிகைகளும், நடிகர் சங்கமும் முடித்துக் கொண்டிருக்கலாம். முன்பு குஷ்புவையும், இயக்குனர் பாலச்சந்தரையும் இணைத்து குமுதம் ஏப்ரல் ஃபூல் செய்தபோது, மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து பிரச்சினையை முடித்துக் கொண்டார்கள். இந்த விவகாரத்திலும் தினமலர் மீது சம்பந்தப்பட்ட நடிகைகள் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கலாம். அல்லது அவதூறு வழக்கு கூட போட்டிருக்கலாம். கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் தினமலர் மீதா அல்லது புவனேஸ்வரி மீதா என்பது சரிவரத் தெரியவில்லை. தினமலரில் வந்தது போன்ற விபச்சார லிஸ்ட்டை புவனேஸ்வரி வாக்குமூலத்தில் தரவில்லை என்று கமிஷனர் அலுவலகம் விளக்கியும் இருக்கிறது.

எப்படியிருந்தாலும் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு தான் இந்த பரபரப்பு இருக்குமென்று கருதுகிறேன். கடந்த கால பரபரப்புகளுக்கு ஏற்பட்ட கதிகளை பார்த்ததின் அடிப்படையில் இந்த முடிவுக்கு உடனே வந்துவிட முடிகிறது. எனது கவலை என்னவென்றால், புவனேஸ்வரிக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருக்கிறானாம். அவனது பிறந்தநாள் அன்றே புவனேஸ்வரி கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த சிறுவனின் இன்றைய மனநிலை என்னவாக இருக்கும்? அவனால் சகஜமாக படிக்க முடியுமா? தன் சக பள்ளித்தோழர்கள், நண்பர்களின் முகத்தில் எப்படி முழிப்பான்? எதிர்காலத்தில் என்ன ஆவான்? - கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை.

5 அக்டோபர், 2009

3டி தில்லாலங்கடி!


3டி படமென்றாலே நமக்கெல்லாம் உடனடியாக ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ நினைவுக்கு வந்துவிடும். படம் பார்த்தவர்களின் முகத்துக்கு நேராக கோன் ஐஸ் நீட்டியதும், படம் பார்த்தவர்கள் தம்மை மறந்து கோன் ஐஸை வாங்க காற்றில் கைநீட்டி ஏமாந்ததும் இனிப்பான மலரும் நினைவுகள் அல்லவா?

3டி படங்களைப் பார்க்க சிறப்புக் கண்ணாடி தேவை. இதை தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு வினியோகிப்பதும், திரும்பப் பெறுவதும் சிக்கலான மற்றும் நேரத்தை விழுங்கும் காரியமென்பதால் தியேட்டர் ஊழியர்களிடையே 3டி படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அதுவுமின்றி நம்மூரில் 3டி படங்களுக்கான சாத்தியமென்பதே மந்திர மாயாஜால, புராணப்படங்களுக்கு தான் என்பதாலும் தொடர்ந்து 3டி படங்களை பெரும் பொருட்செலவில் தயாரிக்க தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை. சில சிறப்பு கேமிராக்களை வைத்து 3 பரிமாணங்களில் படமாக்க வேண்டியிருந்த்தால் தயாரிப்பு செலவு, சாதாரணப் படங்களை விட இருமடங்கு அதிகமாகியது என்பதும் மற்றொரு காரணம்.

இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் 3டி மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகப்பிரகாசமாக காணப்படுகிறது. இடைபட்ட காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் நாலு கால் பாய்ச்சலில் அல்ல, நாலாயிரம் கால் பாய்ச்சலில் முன்னேறியிருக்கிறது. அனிமேஷன் முறையில் உருவாக்கப்படும் 3டி ஹாலிவுட் படங்கள் உலகெங்கும் குழந்தைகளை மட்டுமன்றி பெரியவர்களையும் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த 3டி படங்களை காண சிறப்புக் கண்ணாடியெல்லாம் தேவையில்லை. ஆனால் கோன் ஐஸ் உங்கள் முகத்துக்கு நேராக நீட்டப்படும் எஃபெக்ட் எல்லாம் கிடைக்காது என்றாலும், அதைவிட சிறப்பான அனுபவம் அரங்கில் கிடைக்கிறது.

திரையரங்குகளும் இந்த 3டி அனிமேஷன் படங்களை திரையிட தகுந்தவாறு தங்களது அரங்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வைத்திருக்கின்றன. சென்னை சத்யம் சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் 3டி அனிமேஷன் திரைப்படங்களை மட்டுமே திரையிட தனி அரங்கு இருக்கிறது. ஒலி, ஒளி துல்லியத்தோடு 3டி படங்களை ரசிக்கும் ரசிகர்கள் எப்போதுமே இந்த அரங்குக்கு ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு மாட்ட வைக்கிறார்கள் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள் இந்த தியேட்டர் நிர்வாகத்தினர்.

ஃபைண்டிங் நிமோ, ரேட்டட்டைல், ஐஸ் ஏஜ், மான்ஸ்டர்ஸ், கார்ஸ், வால்-ஈ, தி இன்க்ரிடிபிள்ஸ், குங்பூ பாண்டா போன்று 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்ட ஏராளமான படங்கள் யாரும் எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றிகளை கண்டது. மனிதர்களை படமாக்கி உருவாக்கும் வழக்கமான படங்களுக்கு ஆகும் செலவை விட பன்மடங்கு செலவினை 3டி படங்களுக்கு செய்யவேண்டியிருக்கிறது. செய்தாலும் லாபம் உத்தரவாதம் என்ற நிலையில் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் அடுத்தடுத்து 3டி படங்களை மும்முரமாக உருவாக்கி வருகின்றன.

3டி அனிமேஷனில் ஒரு வசதி என்னவென்றால் விலங்குகளை பேசவைக்கலாம். ஹீரோவை அனாவசியமாக பறக்க வைக்கலாம். ஆயிரம் பேரை அடிக்க வைக்கலாம். யாருமே லாஜிக்கலாக ஏனென்று கேட்கமாட்டார்கள். எனவே திரைக்கதை ஆசிரியர் தன் கற்பனைக்குதிரையை இஷ்டத்துக்கு தட்டிவிட்டு வேலை வாங்கலாம். ஃபைண்டிங் நிமோ படத்தில் மீன் தான் ஹீரோ. குங்ஃபூ பாண்டா படத்தில் கரடி தான் ஹீரோ. இவையெல்லாம் மனிதர்களைப் போலவே பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, பஞ்ச் டயலாக் பேசுகின்றன. அவற்றுக்கும் செண்டிமெண்ட் உண்டு.

சமீபகாலமாக இப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்படுகிறது. ஆங்கிலத்தில் வந்தபோது பெருநகரங்களில் மட்டுமே ரசிக்கப்பட்டுக் கொண்டிருந்த இப்படங்கள் இப்போது தமிழ்நாடு முழுவதும் எல்லாத் தரப்பினராலும் நன்கு வரவேற்கப்படுகிறது. அழுகாச்சி, நம்பமுடியாத சாகசங்கள், அரசியல் பஞ்ச் டயலாக் என்று சில ஆண்டுகளாக வந்த தமிழ் சினிமாப்படங்களை பார்த்து நொந்துப் புண்ணாகிப்போன உள்ளங்களுக்கு ஆங்கில டப்பிங் படங்கள் புனுகு பூசுகின்றன. குறிப்பாக 3டி அனிமேஷன் படங்களை குழந்தைகள், குடும்பத்தோடு ரசிக்க இயலுகிறது.

மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டவர்கள் இப்போது இந்தியாவிலும் 3டி அனிமேஷன் படங்களை உருவாக்கத் தயாராகிவிட்டார்கள். கால்ஷீட் பிரச்சினை, பாரின் லொகேஷன்கள் தொந்தரவு இல்லாமல் அனிமேஷன் ஸ்டுடியோக்களில் இலகுவாக படமாக்கமுடிகிறது. நினைத்த விஷயத்தை எந்தவித காம்ப்ரமைஸுக்கும் இடம் கொடுக்காமல் ஒரு இயக்குனரால் எடுக்க முடிகிறது என்றால், இன்றைய தேதியில் அது 3டி அனிமேஷன் படங்களுக்கே சாத்தியம்.

இந்தியாவின் முதல் 3டி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு சில மாதங்களுக்கு முன்பாக ‘இனிமே நாங்கதான்’ என்ற படம் தமிழில் வெளிவந்தது. மாயபிம்பம் என்ற நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் வெங்கிபிரபு. இயக்குனர் ஷங்கர் படங்களுக்கெல்லாம் அனிமேஷன் செய்து தேசிய விருது பெற்றாரே? அதே வெங்கிதான். இளையராஜா இசையமைத்தார். வாலி பாடல்கள் எழுதியிருந்தார். முழுக்க முழுக்க இப்படம் சென்னையிலேயே உருவாக்கப்பட்டது. இப்படம் குழந்தைகளை கவர்ந்தாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. காரணம், கதை. அரதப்பழசான பஞ்சதந்திரப் பாணியிலான கதையாக அமைந்துவிட்டதால் பெரியவர்களின் ஆதரவை பெறமுடியவில்லை. இருப்பினும் 96 நிமிடத்திற்கு எடுக்கப்பட்ட இந்த முழுநீளப்படம், தமிழில் அடுத்தடுத்து 3டி படங்கள் வெளிவர இப்படம் முன்னோடியாக அமைந்துவிட்டது.

இப்போது இந்தியா முழுவதும் 3டி அனிமேஷன் படங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். தமிழில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ‘சுல்தான் தி வாரியர்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ரஜினியின் உருவத்தையே கம்ப்யூட்டரில் உருவாக்கி சுல்தானாக உலவ விட்டிருக்கிறார். சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனம், அயல்நாட்டு அனிமேஷன் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி இரவுப்பகலாக இத்திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி ரசிகர்களிடம் மட்டுமன்றி பொதுவாக எல்லாத் தரப்பினரிடமும் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் இருக்கிறது. பல கோடி செலவில் உருவாக்கப்படும் இப்படம் வெற்றி கண்டால், தமிழில் 3டி அனிமேஷன் படங்கள் வரிசையாக அணிவகுத்து வரும்.

ஏற்கனவே இந்திய மொழிகளில் நிறைய 3டி அனிமேஷன் படங்கள் உருவாக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் பாலகணேஷ், அனுமன், கடோத்கஜன் என்று புராண கதாபாத்திரங்களை நாயகர்களாக கொண்ட படங்கள். 3டி அனிமேஷனில் குழந்தைகளுக்கான படங்களை தான் உருவாக்க முடியும் என்று இந்தியாவில் கருதுகிறார்கள். குழந்தைகள் புராணங்களையும், கடவுளர்களையும் தான் ரசிப்பார்கள் என்ற மூடநம்பிக்கையும் இங்கே அதிகமாக இருக்கிறது. ‘சுல்தான் தி வாரியர்’ போன்று மசாலா நோக்கில் எடுக்கப்படும் அனிமேஷன் படங்கள் வெற்றி பெறுமானால், இந்த ட்ரெண்ட் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

4 அக்டோபர், 2009

காலும் கை கொடுக்கும்!


டெர்ரி ஃபாக்ஸுக்கு அப்போது 18 வயது. தனக்கு கேன்சர் என்பதை நம்பவே முடியாமல் இருந்தார். அவரது காலில் தீராத கடுமையான வலி இருந்து வந்தது. அதற்கு காரணம், அவருக்கு நடந்த கார் விபத்து என்று நம்பிக் கொண்டிருந்தார். மருத்துவர்களோ கேன்சர் என்றார்கள். முழங்காலுக்கு கீழே காலை எடுத்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு உலை வைத்துவிடும் என்று எச்சரித்தார்கள். விளையாட்டுத் துறையில் எவ்வளவோ சாதிக்க வேண்டிய கனவுகள் அவருக்கு இருந்தது. தன் தாய்நாடான கனடாவுக்கு தடகளத்துறையில் பதக்கங்களை குவிக்கும் லட்சியம் இருந்தது. லட்சியம் வெறும் கனவாகவே முடிந்துவிடுமோ என்று டெர்ரி மனம் வெதும்பினார்.

விளையாட்டுக் காதலரான டெர்ரி சிறுவயதில் கால்பந்து, ரக்பி, பேஸ்பால் மற்றும் டைவிங் ஆகிய விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் செலுத்தினார். பள்ளிப் பருவத்தில் கூடைப்பந்து மீது தீராத வெறி அவருக்கு இருந்தது. அப்போது ஐந்தடி உயரம் மட்டுமே இருந்த டெர்ரி அசாத்தியப் பயிற்சி மூலமாக சிறப்பான வீரராக திகழ்ந்தார். டெர்ரியின் தந்தை ரோலி ஃபாக்ஸ் ஒருமுறை தன் மகனைப் பற்றி குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. “டெர்ரியை விட சிறந்த வீரர்கள் பலர் இருந்திருக்கலாம். அவர்கள் டெர்ரியை விட சிறப்பாக அவனோடு விளையாடியிருக்கலாம். ஆனாலும் வெற்றிக்கனியை சுவைக்கும் வரை டெர்ரி சோர்வடையாமல் விளையாடிக் கொண்டேயிருப்பான். அவன் வெற்றியின் சிகரத்தைத் தொடும் வரை எதிராளியும் அவனோடு விளையாடித்தான் ஆகவேண்டும்”. டீனேஜ் வயதுகளில் டைவிங் விளையாட்டுகளில் டெர்ரி வெற்றி மீது வெற்றி கண்டார்.

நவம்பர் 12, 1976. எதிர்பாராத அந்த கார் விபத்து. அரை டன் எடையை ஏற்றிவைத்திருந்த டிரக் ஒன்றின் மீது அவர் பயணித்த கார் மோதியது. டிரைவர் எந்த சேதாரமுமின்றி வெளியே வர, டெர்ரிக்கு மட்டும் வலது முழங்காலில் நல்ல அடி. ஆயினும் விரைவில் குணம்பெற்று வழக்கமான விளையாட்டுகளை விளையாடி வந்தார். அடுத்த ஆண்டு மீண்டும் அடிப்பட்ட இடத்திலேயே வலி அதிகமாக, மருத்துவர்கள் பரிசோதித்து ‘கேன்சர்’ என்றார்கள். டெர்ரியின் லட்சியங்களில் இடி விழுந்தது. தொடையில் தொடங்கி, முழங்காலுக்கு கீழாக காலை முற்றிலுமாக வெட்டி எறிவதைத்தவிர வேறு வழியே இல்லை.

கேன்சருக்கு போதிய மருத்துவமில்லை என்பதை டெர்ரி அறிந்தார். கேன்சர் ஆராய்ச்சிக்கு ஏராளமான பணம் செலவிடப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். ஒவ்வொரு கனடியரிடமும் ஒரு டாலர் வசூலித்து, கேன்சர் ஆராய்ச்சிக்காக மிகப்பெரிய தொகையை திரட்ட முன்வந்தார். கனடா முழுவதும் தொடர்ச்சியான மாரத்தான் ஓட்டம் ஓடி பணத்தை திரட்ட முடிவெடுத்தார். இந்த ஓட்டத்துக்கு ‘நம்பிக்கை ஓட்டம்’ என்று பெயரும் வைத்தார். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. டெர்ரிக்கு இதயப்பிரச்சினையும் இருந்து வந்தது. அவர் ஓட்டத்தை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக இதயநிபுணர் ஒருவர் டெர்ரியை சந்தித்து, “தயவுசெய்து இந்த விபரீதமுயற்சியை எடுக்க வேண்டாம். இவ்வளவு பெரிய ஓட்டத்தை ஓடுமளவுக்கு உங்கள் இதயம் இடம் கொடுக்காது” என்று வேண்டுகோள் விடுத்தார். டெர்ரி சம்மதிக்கவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

ஒட்டுமொத்தமாக எட்டாயிரம் கிலோ மீட்டர்கள் ஓட வேண்டியிருந்தது. மாரத்தான் மரபுப்படி ஒரு நாளைக்கு நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடுவதின் அடிப்படையில் 185 நாட்களில் நாட்டையே ஓடிக்கடக்க திட்டமிட்டார் டெர்ரி. அதற்கு முன்பாக நியூயார்க் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டம் ஒன்றில் செயற்கைக்காலோடு ஒருவர் ஓடியதை அறிந்தபின்னரே, இந்த சிந்தனை டெர்ரிக்கு வந்திருந்தது.

1980, ஏப்ரல் 12ஆம் நாள் அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் தொடங்கிய அவரது ஓட்டத்தின் இலக்கு நாட்டின் மறுகரையில் இருந்த பசிபிக் கடற்கரை. செயற்கைக்காலோடு மிக நீண்ட, அதே நேரம் தொடர்ச்சியாக ஆறுமாதங்களுக்கு ஒருவர் தன்னலமின்றி, கேன்சர் ஆராய்ச்சிக்கு பணம் திரட்ட ஓடுகிறார் என்பதை கேள்விப்பட்ட கனடிய மக்கள் அவர் ஓடிய நகரங்களில் எல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள். ஒவ்வொரு கனடியரும் தம் பங்காக ஒரு டாலரை கையளித்தார்கள்.

ஒட்டாவா, ஒண்டாரியோ நகரங்களை அவர் கடந்தபோது கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோ மீட்டரை கடந்திருந்தார். மக்களின் வரவேற்பு அவருக்கு மிகுந்த நம்பிக்கையை தந்திருந்தது. “நான் சாலையில் காணும் ஒவ்வொருவருமே எனக்கு நம்பிக்கை தருகிறார்கள். நல்லது நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இதுபோன்ற முயற்சியை யாராவது மேற்கொண்டிருந்தால் கேன்சர் நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவமுறையை ஒருவேளை நாம் இப்போது கண்டறிந்திருக்கலாம்” என்று பேசினார்.

இதற்கிடையே கேன்சர் தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. ஃபாக்ஸின் நுரையீரலை தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. அவரது இடது நுரையீரலில் எலுமிச்சைப்பழ அளவுக்கு கேன்சர் கட்டி உருவெடுத்திருந்தது. செப்டம்பர் 1, 1980ஆம் நாளன்று தனது தொடர்ச்சியான ஓட்டத்தை பாதியில் டெர்ரி பாக்ஸ் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 143 நாட்களில் 5,373 கிலோ மீட்டர்களை அவர் கடந்திருந்தார். டெர்ரி பாக்ஸின் ஓட்டம் தடைப்பட்டதுமே நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் மாரத்தான் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு பெரும் பணம் திரட்டப்பட்டது. டெர்ரி பாக்ஸ் தேசிய நாயகனாக போற்றப்பட்டார். ஒட்டுமொத்தமாக மக்களிடையே இரண்டரைக்கோடி டாலர்கள் திரட்டப்பட்டது. ஒரு கனடியரிடம் ஒரு டாலர் என்ற டெர்ரியின் கனவு நனவானது.

1981 ஜூன் 27ஆம் தேதி மருத்துவ சிகிச்சையில் இருந்த டெர்ரிக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியது. அவர் கோமா நிலைக்கு சென்றார். மறுநாள், மிகச்சரியாக தனது 23வது பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பாக அவர் மரணமடைந்தார். நாட்டின் பிரதமரும், அவைகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தின. அவரது இறுதிமரண ஊர்வலம் நாடெங்கும் நேரலையாக ஒளிபரப்பானது. கோடிக்கணக்கான கனடியர்கள் கண்ணீர் சிந்தினர். அதே ஆண்டு டெர்ரி பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி வருடந்தோறும் ‘டெர்ரி பாக்ஸ் ஓட்டம்’ என்ற பெயரில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டங்களை நடத்தி, கேன்சர் ஆராய்ச்சிகளுக்கு நிதி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. முதன்முதலில் நடந்த கனடாவில் நடந்த ஓட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்று பதிவாகியிருக்கிறது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ‘டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்’ நடைபெறுகிறது. இந்த ஓட்டம் நடைபெறும் நாடுகளில் எல்லாம் டெர்ரியின் தாய்நாடான கனடாவின் தூதரகங்களை இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

சமீபத்தில் முதன்முறையாக சென்னையில் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் புகையிலைக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தி கலந்துகொண்டார்கள். இனி வருடாவருடம் சென்னையிலும் இந்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், கல்லூரி மாணவர்களும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு ஓடினர்.

இந்த ஓட்டத்தினை சென்னையில் நடத்த ஐடியா கொடுத்தவர் பதினேழு வயது பள்ளி மாணவர் ஆகாஷ் துபே. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆகாஷ் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். “கேன்சர் சிகிச்சைக்காக எனக்கு ரத்தம் தேவைப்பட்ட போது, முகம் தெரியாத பலரும் தன்னார்வத்தோடு வந்து உதவினார்கள். சென்னையில் இப்படி ஒரு ஓட்டம் நடைபெறுவதே மக்களிடையே கேன்சர் குறித்த விழிப்புணர்வை பரவலாக்குவதற்காகதான்!”“ என்று சொன்னார் ஆகாஷ்.

கனட தூதரக அதிகாரி ஷான் வெட்டிக் கலந்துகொண்டு, இதுவரை டெர்ரி பாக்ஸ் ஓட்டங்கள் மூலமாக 300 மில்லியன் டாலர் அளவுக்கு கேன்சர் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டப்பட்டிருப்பதாக கூறினார். சென்னையில் திரட்டப்பட்ட நிதி டாடா மெமோரியல் சென்டரின் கேன்சர் ஆராய்ச்சிக்க்கு வழங்கப்படுகிறதாம்.

டெர்ரி பாக்ஸின் லட்சியம் வெறுமனே ஓடுவது மட்டுமல்ல. கேன்சரை உலகத்தை விட்டே ஓட்டுவது. அந்நிலை விரைவில் மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக மலரும் என நம்புவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)