30 ஜூலை, 2010

’ஓ’ ஞாநி!

குமுதத்தின் நிறுவனர் அமரர் எஸ்.ஏ.பி.க்கு மிகவும் பிடித்தமான தலைவர் ராஜாஜி. அவர் மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் எஸ்.ஏ.பி.க்கு உண்டு. குமுதம் வளர்ந்து வந்த நேரத்தில் பெரும்பாலான தலையங்கங்கள் தனது சவுக்கடியை தொடர்ச்சியாக முதல்வர் ராஜாஜி மீது வீசி வந்தது.

ஓர் உதவியாசிரியர் எஸ்.ஏ.பி.யிடம் கேட்டாராம். “நீங்கள் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை, அவரது ஆட்சியை இப்படியெல்லாம் விளாசலாமா?”

எஸ்.ஏ.பி. சொல்லியிருக்கிறார். “பெரிய பத்திரிகையான நாம் யானையிடம்தான் மோதவேண்டும். திமுக போன்ற கொசுக்களிடம் மோதுவதில் நமக்கென்ன பெருமை?”

திமுக பின்னாளில் புலியாக வளர்ந்து பாய்ச்சல் நிகழ்த்தியபோது எஸ்.ஏ.பி. துப்பாக்கி கொண்டு தலையங்கம் தீட்டவேண்டியிருந்ததாம்.

- எஸ்.ஏ.பி. மறைந்தபோது, ஏதோ ஒரு பத்திரிகையில் (ஆ.வி. என்பதாக நினைவு) ரா.கி.ரங்கராஜன் எழுதியது இது. என் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.

இந்தப் பதிவில் நான் சொல்லவிரும்பியது இதை மட்டும்தான். ஏன் சொல்ல விரும்பினேன் என்பதை இங்கே வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஞாநி மீது பலருக்கும் பல்வேறு குறைபாடுகள் உண்டு. குற்றச்சாட்டுகள் இருக்க வாய்ப்பில்லை. குறைபாடுக்கும், குற்றச்சாட்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர் எழுதுவது எல்லோருக்கும் பிடிக்காது. அதுபோலவே எல்லோருக்கும் பிடிக்கும்படிதான் அவர் எழுதவேண்டும் என்று அவசியமும் கிடையாது.

முப்பதாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் பணியாற்றியவர். அந்நிறுவனம் இவரை ஏதோ காரணத்தால் – என்ன காரணமென்று தெரியவில்லை – நீக்கியதால், தொழிலாளர் உரிமை என்ற அடிப்படையில் கோர்ட்டுக்குச் சென்று வழக்கில் வென்றவர். இந்த மனத்திடம் இப்போது பத்திரிகைகளில் பணிபுரிபவர்களில் எத்தனைப் பேருக்கு இருக்கும் என்பது சந்தேகமே. நிச்சயமாக எனக்கு இல்லை.

பிற்பாடு அவர் தமிழ் பத்திரிகைகளுக்கு வந்தபின்னர்தான் ‘டேபிள் ஒர்க்’ என்ற ஒரு பணி, தமிழ்ப் பத்திரிகையுலகில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று சொல்வார்கள். டேபிள் ஒர்க் என்பது இன்றைய பத்திரிகையுலகில் மிகவும் அத்தியாவசியமானப் பணியாக இருக்கிறது. வேறொன்றுமில்லை. பிறர் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் மெருகேற்றி, தேவையான திருத்தங்கள் செய்து அச்சுக்கு அனுப்புவது. மாவட்டங்களில் பல்வேறு நிருபர்கள் தரும் தகவல்களை அலசி, ஆராய்ந்து, தொகுத்து முழுமையான கட்டுரையாக எழுதுதல் போன்றவையே டேபிள் ஒர்க். இதில் வேறு சில பணிகளும் உண்டு. அவை இங்கே அவசியமில்லை.

ஆங்கிலப் பத்திரிகைகளில் இருந்த இந்தமுறையை தமிழ்ப் பத்திரிகையுலகில் பரவலாக்கிய முன்னோடி என்பதாக ஞாநி பத்திரிகை வட்டாரங்களில் அறியப்படுகிறார். அனேகமாக தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் இந்தப் பாணியில் தமிழ்ப் பத்திரிகைகளின் எடிட்டோரியல் இயங்கத் தொடங்கியது. அதற்கு முன்பாக வரும் கட்டுரைகளையோ கவிதைகளையோ கதைகளையோ – கிட்டத்தட்ட அப்படியே – வெறுமனே பிழைத்திருத்தி அனுப்புவதுதான் வழக்கமாம்.

ஆனந்த விகடனில் ஞாநியின் பங்கு இருந்த காலக்கட்டத்தில் அவர் எப்படி எழுதுவார் என்று சுவாரஸ்யமாக சொல்வார்கள். ஒரே ஒரு பிரச்சினையையோ அல்லது சம்பவத்தையோ நான்கைந்து நிருபர்கள் எழுதி அனுப்புவது வழக்கம். நிறைய ஃப்ரீலான்ஸர்கள் அப்போது இருந்தார்கள். எழுத்து மற்றும் பிரச்சினையைப் பார்க்கும் விதத்தில் ஒவ்வொருவரும் வேறுபடுவார்கள். ஒருவர் சார்புநிலையெடுத்து எழுதியிருப்பார். இன்னொருவர் எதிர்ப்புநிலையை கறாராக கைக்கொண்டிருப்பார். இன்னுமொருவர் நடுநிலை என்ற பெயரில் கத்திமீது நடக்க முயன்றிருப்பார்.

எடிட்டோரியலில் இருப்பவர் இந்த நான்கு கட்டுரைகளையும் வாசித்ததும் நிச்சயமாக குழம்பிப் போய்விடுவது என்பது இயல்புதான். ஞாநி நான்கையும் எடுத்து பொறுமையாக வாசிக்க ஆரம்பிப்பாராம். வாசித்து முடித்ததும் மூடிவைத்துவிடுவாராம் (என்னிடம் சொன்னவர் கிழித்து எறிந்துவிடுவார் என்று சொன்னார்). பிறகு வெள்ளைத்தாளை எடுத்து எந்தவித ரெஃபரென்ஸுமின்றி மடமடவென்று நறுக்குத் தெறித்தாற்போல எழுதிமுடிப்பாராம். கட்டுரையை வாசித்தவர்கள் அது நேரடி ரிப்போர்ட்தான் என்று கையில் அடித்து சத்தியம் செய்யக்கூடிய நேர்த்தி அவரது எழுத்தில் இருக்குமாம்.

கடந்த ஐந்தாண்டு தமிழ்ப்பத்திரிகையுலக வரலாற்றில் ஞாநியின் ‘ஓ’ பக்கங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடமுண்டு. பெரும்பாலும் திமுகமீதான – குறிப்பாக கலைஞர் – கொலைவெறி எதிர்ப்புதான். பலநேரங்களில் கலைஞர்மீது இவருக்கு சொந்தப் பகை ஏதோ உண்டோவென்று ஐயம் வரும் வகையில்தான் எழுதியிருக்கிறார் (சாருநிவேதிதா தொடர்ச்சியாக ஜெயமோகனை எழுதிவருவதைப் போல).

ஆனால் இதையும் மீறி, தொடர்ச்சியாக நான் ‘ஓ’ பக்கங்களை வாசித்து வந்தேன். ஒரு பிரச்சினையை ஒரு பத்திரிகையாளன் எத்தனை விதமான கோணங்களில் பார்க்கலாம் என்பதை ‘ஓ’ பக்கங்கள் பாடமாகவே நடத்தி வந்தது.

இனி ‘ஓ’ பக்கங்கள் குமுதத்தில் வராது என்று அறிவித்திருக்கிறார். சமீபக்கால விகடனின் எழுத்துகளை வாசிக்கும்போது, மீண்டும் விகடனில் வர வாய்ப்பிருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் விகடன் டூ குமுதம் டூ விகடன் என்று ஊஞ்சலாட ஞாநி விரும்புவாரா என்று தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை குமுதமும், விகடனும்தான் இன்றையத் தேதியில் மிகச்சிறந்த பிளாட்ஃபார்ம்கள். இந்த இரு பத்திரிகைகளைத் தவிர்த்து வேறெதிலாவது எழுதினால் எந்தளவுக்கு மக்களிடம் ‘ரீச்’ ஆகுமென்று கணிக்க முடியவில்லை. அப்படியே ஞாநிக்காக ஒரு சிலர் படித்தாலும், விகடன் – குமுதத்தில் அப்பகுதிக்கு கிடைத்த பாப்புலாரிட்டி புதிய பத்திரிகையில் கிடைக்குமென்பது உறுதியில்லை.

தனிப்பட்ட முறையில் ’ஓ’ பக்கங்கள் இல்லாததால் எனக்கு என்ன இழப்பென்று யோசித்துப் பார்க்கிறேன். கடந்த ஒரு வாரமாக சென்னையை மையம் கொண்டிருக்கும் ‘கள்ளக்காதல்’ புயல் பற்றிய ஒரு திட்டவட்டமான தீர்மானத்துக்கு வர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஞாநி ‘ஓ’ பக்கங்களில் இச்சம்பவங்களை அலசி ஆராய்ந்து, பின்னணியை நோண்டி நொங்கெடுத்து தெளிய வைத்திருப்பார்.

அதே வேளையில் விகடன் மற்றும் குமுதம் இப்பக்கங்களை இழக்க வேண்டிய சூழலையையும் புரிந்துகொள்ள முடிகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்!

29 ஜூலை, 2010

தங்கத் தமிழ்நாடு, இனி பிளாட்டின நாடு!

‘பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காது!’, ‘பொன்னா விளையுற பூமி’, ‘பொற்கால ஆட்சி’ – பொன் எனப்படும் தங்கம் நம் மொழியின் சொலவடைகளில் உயர்ந்த இடத்தை எப்போதுமே பிடித்திருக்கிறது. தங்கத்தைவிட உயர்ந்த விஷயம் ஏதுமுண்டா என்ற கேள்வியை கேட்டுவிட்டு பதிலை நாம் எதிர்ப்பார்ப்பதில்லை. ஏனெனில் இந்தியர்கள் தங்கத்தின் காதலர்கள். தங்கம்தான் நமக்கு எல்லாவற்றிலும் உசத்தி. பெண்கள் அணியும் தாலியில் தொடங்கி, ஆண்கள் அணியும் மோதிரம் வரையிலும் எல்லாமே தங்கமயம்.

தங்கத்தைவிட விலையுயர்ந்த இன்னொரு உலோகம் இருக்கிறது என்று சொன்னால் நம்மால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அது பிளாட்டினம். உலகமே பிளாட்டின நகைகளை அணிய ஆவலோடு அலையும்போது, நாம் மட்டும் இன்னமும் தங்கமே தங்கம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உளவியல்ரீதியாகப் பார்க்கப் போனால் வெள்ளியை ஒத்த நிறம் கொண்ட பிளாட்டினத்தைவிட, செம்மஞ்சளாக ஜொலிஜொலிக்கும் தங்கத்தையே நாம் அதிகம் விரும்புகிறோம். ஆனால் இதற்காக பிளாட்டினத்தின் உயர்தன்மையை மறுத்துவிட முடியாது. ஏனெனில் தங்கத்தைவிட பிளாட்டினம் 30 மடங்கு அரிய உலோகம்.

கனிமவளங்களின் அடிப்படையிலேயே ஒருநாட்டின் மதிப்பு உயரும். எல்லா வளங்களும் பெருமளவு கொண்ட இந்தியாவில் பிளாட்டினம் மிகக்குறைந்த அளவில் – ஒரிஸ்ஸாவில் மட்டும் – இதுவரை கிடைத்துக் கொண்டிருந்தது. நம் பிளாட்டினத் தேவையை பூர்த்திச் செய்ய அயல்நாடுகளில் இருந்து கோடிக்கணக்காக செலவழித்து இறக்குமதி செய்துக் கொண்டிருந்தோம். இப்போது பிளாட்டினம் தமிழகத்திலும் பெருமளவில் கிடைக்கும் என்பதை இந்திய புவியியல் துறை உறுதி செய்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக தங்கம் விளைந்து கொண்டிருந்த கோலார் தங்கவயல் மூடப்பட்ட சோகத்தை இனி நாம் மறந்து கொண்டாடலாம்.

சரி, பிளாட்டினம் என்பது என்ன?

Pt என்ற வேதியியல் குறியீடு கொண்ட ஒரு தனிமம். தங்கத்தைப் போலவே வளையக்கூடிய, நெளியக்கூடிய தன்மை கொண்டது என்பதால், எவ்வடிவத்திலும் வார்க்க முடியும். மின்கருவிகளில் உறுதியான மின்னிணைப்பை தரக்கூடிய மின்முனைகளாகவும் இதை பயன்படுத்தலாம். கார்களின் சைலன்ஸர்களில் இருந்து வெளிவரக்கூடிய கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றின் நச்சுத்தன்மையை குறைக்கவும் பிளாட்டினம் உதவும். வெளிர்சாம்பல் நிறம் கொண்ட பிளாட்டினம் எளிதில் அரிக்கப்படாத ஒரு உலோகம். நகைகள் தவிர்த்து, வெப்பநிலையை அளக்கப் பயன்படும் மின்தடை வெப்பமானிகளில் இதை பயன்படுத்தலாம். சில வேதியியல் ஆராய்ச்சிகளில் வினையூக்கியாக செயல்படுத்தலாம்.

பிளாட்டினத்தின் வரலாறு என்ன?

இரும்பு, தங்கம் போன்று பிளாட்டினத்துக்கு நீண்ட, நெடிய வரலாறு இருப்பதாக தெரியவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு முன்பாகவே அங்கிருந்த பழங்குடியினர் பிளாட்டினத்தைப் பற்றி அறிந்திருப்பதாக தகவல் உண்டு. 1557ல்தான் பிளாட்டினம் என்ற உலோகத்தைப் பற்றி இத்தாலியரான ஜூலியஸ் சீஸர் ஸ்காலிகர் என்பவர் எழுதுகிறார். பனாமா, மெக்ஸிகோ ஆகிய இடங்களில் அப்போது பிளாட்டினம் கிடைத்தது என்பதையும், ஆனால் அதை உருக்கமுடியாத நிலை இருப்பதாகவும் அவர் எழுதியிருந்தார்.

இப்போது உலகளவில் பிளாட்டினத்தின் பெருமளவு தேவையைப் பூர்த்தி செய்யும் நாடாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது. கனடாவும், ரஷ்யாவும் அடுத்தடுத்த இடத்தைப் பெறுகின்றன.

தமிழகத்தில் எங்கே கிடைக்கிறது?

இந்திய புவியியல் துறை கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் இண்டு இடுக்கு விடாமல் தோண்டி, துருவி பிளாட்டினத்தை தேடிக் கொண்டிருந்தது. நீண்டதேடுதலுக்குப் பின் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி (கருங்கல்பட்டி, செட்டியாம்பாளையம், தாசமபாளையம் பகுதிகள் உட்பட), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (மல்லநாயக்கம்பாளையம், காரப்பாடி, சோலவனூர் பகுதிகள் உட்பட) ஆகிய பகுதிகளில் கணிசமான அளவில் பிளாட்டினம் இருப்பதற்கான அடிப்படை ஆதாரங்களை கண்டறிந்திருக்கிறார்கள்.

சுமார் 30 மீட்டர்கள் ஆழத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் பிளாட்டினம் இருப்பதை உறுதி செய்திருந்தாலும், 200 முதல் 300 மீட்டர் அளவிலான ஆழத்தில் நடத்தப்படும் சோதனைகளில்தான் எந்தளவு தரம் மற்றும் அளவில் இங்கே சுரங்கம் தோண்டி பிளாட்டினம் எடுக்க முடியும் என்பதை துல்லியமாக அறியமுடியும். ஆயினும் இப்போதைய கண்டுபிடிப்பே கூட மிக முக்கியமானதாக இந்திய கனிமவள வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதற்கட்ட சோதனை முடிவுகளின் படி பார்க்கப்போனால் பிளாட்டினம் உற்பத்தியில் மற்ற நாடுகளை இந்தியா ஓரங்கட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று புவியியல் அறிஞர்கள் யூகிக்கிறார்கள்.

இவ்வளவு ஆண்டுகளாக கனிமம் என்றாலே அதிகபட்சமாக கிரானைட்தான் என்றளவில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) விஷயத்தைக் கேள்விப்பட்டு சுறுசுறுப்பு ஆகியிருக்கிறது. “தமிழ்நாட்டுக்கு இது ஒரு வரப்பிரசாதம்” என்று புளகாங்கிதப்படுகிறார் டாமின் தலைவரான மணிவாசன். முதல்வர் முன்னிலையில் டாமின் அதிகாரிகள், இந்திய புவியியல் துறையோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் உடனடியாக கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதுவரை புவியியல் துறை வெளிநாட்டு நிறுவனங்களோடு மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. முதல் தடவையாக ஒரு மாநில அரசின் கனிம நிறுவனத்தோடு ஒப்பந்தமிடுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய புவியியல் துறை மேற்கொள்ள வேண்டிய மேலதிக ஆய்வுகளுக்கு டாமின் உதவும். பிளாட்டினம் எடுக்கப்படுவதின் மூலமாக கிடைக்கும் வருமானம் மொத்தமும் தமிழ்நாட்டையே சாரும். பாறைகளில் இருந்து பிளாட்டினம் பிரித்தெடுக்கப் படுவதற்கான ஒரு தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்படுகிறது. கனிமவளத் தொழிற்சாலை இரண்டு பகுதிகளுக்கு சேர்த்து ஒன்றாக நடக்குமா அல்லது தனித்தனி தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா என்பது பற்றியெல்லாம் இன்னமும் திட்டமிடப்படவில்லை.

புதியதாக தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தாராளமாக கிடைக்கும். எடுக்கப்படும் பிளாட்டினம் மற்றும் அதன் குடும்ப தனிமங்களின் வருவாய் ஒட்டுமொத்தமாக மாநில அரசுக்கு கிடைக்குமென்பதால் மாநிலமும் வளம்பெறும். சுரங்கம் தோண்டப்படும் நிலைக்கு முன்பாக இன்னமும் ஏராளமான ஆய்வுகள் பாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

வெட்டியெடுக்கப்படும் பிளாட்டினத்தைக் காண மக்கள் மட்டுமல்ல, மாநிலமே ஆவலாக காத்திருக்கிறது!

(நன்றி : புதிய தலைமுறை)

28 ஜூலை, 2010

ஆட்டோ அனுப்பட்டுமா?


தமிழிணையத்தளங்களை பாவிப்பவர்களாக நீங்கள் இருந்தால் அடிக்கடி இதுபோன்ற வசனங்களை ஆங்காங்கே காணலாம். “இன்னும் ஆட்டோ வரலையா?”, “ஆட்டோ வரப்போவுது ஜாக்கிரதை”. இதுமாதிரி ஏராளமான ‘ஆட்டோ’மேட்டிக் டயலாக்குகளை பயன்படுத்துவதில் தமிழிணைய பங்கேற்பாளர்கள் ஆஸ்கர் விருது வாங்குமளவுக்கு திறமைசாலிகள். குறிப்பாக வலைப்பூக்கள் மற்றும் முகப்புத்தகத்தில் இவ்வீர வசனங்கள் அதிகம்.

ஆட்டோ இதுபோல இழிவுபடுத்தப்பட்டு வருவது ஆட்டோக்காரர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்தால் பிய்ந்துப்போன செருப்பை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மின்னஞ்சலில் அட்டாச்மெண்டாக அனுப்பினாலும் அனுப்புவார்கள். ஏனெனில் இருசக்கரவாகனப் பெருக்கம், கால்டாக்ஸி பரவலாதல் போன்ற தொல்லைகளால் அவர்களே சவாரி கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.

பொதுவாக இவ்வசனங்கள் எங்கே பிரயோகிக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். அந்தவார ஜூனியர் விகடனிலோ, குமுதத்திலோ, நக்கீரனிலோ ஏதோ அரசியல்வாதியைப் பற்றி ‘பரபர பதினாறு’ ஸ்டைலில் கிசுகிசுவாக வந்திருக்கும். அதை வாசித்ததுமே நமது இணைய பங்கேற்பாளர்களுக்கு நாடி நரம்பெல்லாம், இரட்சகன் நாகார்ஜூனா மாதிரி துடித்துவிடும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்குப் போய் வரிசையில் நின்று ஓட்டுபோட வக்கில்லை என்றாலும், “ஒரு பதிவுக்கு ஆச்சு” என்று பொங்கியெழுந்து விடுவார்கள்.

கூகிளில் ஏதோ சில புகைப்படங்களை தேடியெடுத்து, “இப்படியெல்லாம் நடக்குது. நம்ம நாடு நாசமாத்தான் போகப்போவுது” என்று ஒரு மொன்னையான நடையில் ஒரு மொக்கைப் பதிவையெழுதிவிட்டு, “ஆட்டோ பின்னூட்டம் வருமா”வென்று தேமேவென்று காத்திருப்பார்கள். பின்னூட்டம் கூட வராதவர்களுக்கு ஆட்டோ எங்கிருந்து வரப்போகிறது?

இந்த மாதிரி பின்னூட்டங்களை அடிக்கடி வாசித்தபின் எனக்கும் கூட சில நேரங்களில் கருத்து மயக்கம் ஏற்பட்டு விடுவதுண்டு. ஏதாவது ஒரு மொக்கைப் பதிவை வாசித்ததுமே, இந்த பதிவருக்கு ஆட்டோ அனுப்பலாமா என்று யோசிப்பேன். கட்சி கொடுக்கும் அலவன்சு டீக்கும், பொறைக்கும், தம்முக்குமே சரியாகப் போய்விடுகிறது. தியாகராயநகரிலிருந்து சைதாப்பேட்டைக்கு ஆட்டோ அனுப்ப வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் ரூ.75/- செலவழித்தாக வேண்டும். பேசாமல் நடந்தேபோய் அடித்துவிட்டு வந்துவிடலாமாவென்று யோசிப்பேன். ச்சே.. போயும், போயும் ஒரு மொக்கைப் பதிவுக்கு இவ்வளவு பிரயாசை படவேண்டுமாவென்று யோசித்துவிட்டு, ராஜ் தியேட்டரில் ஏதாவது படத்தை பார்த்துவிட்டு மறுநாள் ஒரு விமர்சனப் பதிவு எழுத உட்கார்ந்து விடுகிறேன்.

அய்யா.. இணையத்தில் தண்டமாய் எழுதுவதால் மட்டும் போராளிகளாக மாறிவிட்டவர்களே.. நீங்கள் ஒரு யதார்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரம் வாங்கியபின் நம் நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டி வந்திருக்கிறது. இன்னமும் அரசியல்வாதிகள் ஆட்டோவைதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், நீங்கள் சுத்தமாக அப்டேட் ஆகவில்லையென்று அர்த்தம். டி.என்.சேஷனுக்கு ஆட்டோ அனுப்பிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது அரசியல்வாதிகள் டாடாசுமோ, குவாலிஸ் என்று முன்னேறி விட்டார்கள். நீங்களெல்லாம் தெலுங்கு டப்பிங் படங்களை பார்ப்பதே இல்லையா?

நம்மூரு கோயிந்தசாமிகள்தான் ‘ஆட்டோ ஃபீவர்’ பிடித்து அலைகிறார்கள் என்றால் ஃபாரின் தமிளர்கள் இன்னும் மோசம். ஆட்டோவுக்கும், ஆசிட்வீச்சுக்கும் பயந்துப்போய் எழுதுவது போலவே எழுதுவார்கள். பொதுவாக இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை அம்சம் இருக்கும். தமிழ்நாட்டில் இருப்பவெனெல்லாம் சுரணை கெட்டவன். இவ்வளவு அநீதி நடக்கிறது. ஒருத்தன்கூட தீக்குளிக்கவில்லையா? போராட்டம் நடத்தவில்லையா? என்று பொங்கியெழுந்து பதிவு போட்டுவிட்டு பீட்ஸாவும், பர்கரும் தின்றுவிட்டு வீக்கெண்டில் தமிழ் சினிமா பார்க்கப் போய்விடுவார்கள்.

ஏனய்யா. ஒரு ஆட்டோவை விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கும், துபாய்க்கும், சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் வந்து உங்களை அடிக்க ஆகும் செலவு என்ன? அதற்குப் பதிலாக இங்கே ஆளுக்கு ஐநூறு கொடுத்தாலே போதுமே? நீங்கள் எதை எழுதினாலும், தேர்தலில் நாங்கள் ஜெகஜோதியா கும்முகும்முவென்று திருமங்கல கும்மினை கும்மிவிடலாமே?

எந்த இணையப் பதிவாளரிடமாவது பத்திரிகைகளுக்கான எக்ஸ்க்ளூசிவ் தன்மை இருக்கிறதா? தோழர் சவுக்கு மற்றும் வினவு போன்ற சிலருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு கொடுக்கலாம். களத்திலும் செயல்படும் அவர்களை இணையப் போராளிகள் பட்டியலில் சேர்ப்பது நியாயமில்லை. அவர்களுக்கெல்லாம் ஆட்டோவென்ன, விமானத்தையே கூட அனுப்பலாம். மீதியிருக்கும் ஐநூத்தி சொச்சம் இணையத் தயிர்வடைகளுக்கு எல்லாம் ஆட்டோ ஒன்றுதான் கேடு. நம்ம காப்பி & பேஸ்ட் புலிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளை கூட எந்த அரசியல்வாதியும் அனுப்பி வைக்குமளவுக்கு யோக்கியதை இல்லை என்பதுதான் இப்பதிவின் அடிநாதம்.

இறுதியாகவும், உறுதியாகவும் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லிக் கொள்கிறேன் தோழர்களே. தமிழகத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஏழு கோடி. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கிட்டத்தட்ட ஐந்து கோடி. இவர்களில் பத்திரிகைகளை வாசிப்பவர்கள் தோராயமாக இரண்டு கோடி. இணைய அறிமுகம் பத்து லட்சம் பேருக்கு இருக்கலாம். இவர்களிலும் தமிழிணைய பாவிப்பாளர்கள் ஒரு லட்சம் பேர் இருந்தாலே அதிகம். அதிலும் வலைப்பூக்கள், ஃபேஸ்புக் மாதிரி கச்சடாக்களில் ஈடுபடுபவர்கள் பத்தாயிரம் பேர் வரைதான் இருப்பார்கள். இவர்களில் ஆறாயிரம் பேராவது அயல்நாடுகளில் வசிப்பவர்கள். எஞ்சியிருப்பவர்களில் ஆயிரம் பேர் தேர்தல்களில் ஓட்டுபோட்டாலே அதிகம். இப்படிப்பட்ட மொக்கையான ஒரு சமூகம் தினம் ஒரு புரட்சியென்ற பேரில், தினம் ஒரு பதிவு போட்டு, அதற்கு ஆட்டோவையும் எதிர்ப்பார்ப்பது என்பது கொஞ்சமல்ல, நிறையவே ஓவர் இல்லையா?

இனிமேல் எங்காவது ஆட்டோ, கீட்டோவென்று யாராவது பேசட்டுமே? கீசிடுவேன் கீசி...

27 ஜூலை, 2010

கீற்றுவில் அரங்கேறிய தமிழ்ப் பாசிஸம்!

”இதையெல்லாம் சொல்வதால் என்னுடைய சொந்த இன மக்களே என்னை புறக்கணித்தாலும் பரவாயில்லை. என்னுடைய அரசு என்னை கொன்றுபோட்டாலும் நான் இதை சொல்ல தயங்கப் போவதில்லை” – அரங்குக்குள் நாம் நுழைந்தபோது அந்த இஸ்லாமிய நண்பர் ஒலிபெருக்கியில் முழங்கிக் கொண்டிருந்தார்.

அடுத்ததாக ஒரு நீண்ட பட்டியலை கிட்டத்தட்ட கால்மணி நேரம் வாசிக்க ஆரம்பித்தார். எண்பதுகளில் தொடங்கி இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது / கொல்லப்பட்டது குறித்த தலைப்புச் செய்திகளாக அவை அமைந்திருந்தன. சிங்களவர்களில் தொடங்கி தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் பலவும் கூட கடந்த முப்பதாண்டுகளில் இஸ்லாமியர் மீது தொடுத்த தாக்குதல்கள் குறித்த நீளமான அறிக்கையாக அது இருந்தது. மிகக்கவனமாக அந்நண்பர் தொண்ணூறில் இலங்கையின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் எண்பதினாயிரம் முஸ்லீம்கள் கட்டிய துணியோடும் ஐநூறு ரூபாய் காசோடும் வெளியேற்றப்பட்டச் செய்தியை தவிர்த்தே பேசிக்கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் கூட்டத்தில் ஆங்காங்கே சலசலப்பு. கடைசியாக, “எங்கள் மீது தொகுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பரிகாரமாகதான் 2009 மே-யில் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்ததாக இலங்கை இஸ்லாமியர் இன்று சொல்லுகிறார்கள். அது தவறான நிலைப்பாடு. நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றுகூறி முடித்தார். அவர் இஸ்மாயில். இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் என்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

அவரது உரை முடிந்ததுமே ஓவியர் வீரசந்தானம் ஆவேசத்தோடு மேடையை நோக்கி கூட்டத்தின் மையத்திலிருந்து முழங்கினார். “புலிகள் இஸ்லாமியரைத் தாக்கியதாக பட்டியல் வாசித்தீர்கள். ஒவ்வொரு தாக்குதலும் எத்தகைய சூழலில் நடந்தது என்பதை நீங்கள் விளக்கியாக வேண்டும்” என்றார். வீரசந்தானத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தார்கள். ஒருவர், “நாங்கள் ஒரு லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். நீங்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஏதோ பட்டியலை வாசிக்கிறீர்கள்” என்று விசித்திரமாக குரல் கொடுத்தார். மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த தோழர் சுப.வீ.யும் மேடையிலிருந்தவரைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் பின்னால் இருந்தவர்களுக்கு சுப.வீ. என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பது கேட்கவில்லை.

மீண்டும் அந்நண்பர் ஒலிபெருக்கியைக் கைப்பற்றினார்.

முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்...

23 ஜூலை, 2010

சும்மா சுழட்டுங்க!


ராஜேந்திரன் ஒரு மருந்து நிறுவனத்தின் பிரதிநிதி. மாதத்துக்கு இருபது நாட்கள் வெளியூர் வேலை. செல்ல மகள் சுவாதியின் பிறந்தநாளுக்கு மட்டும் எப்படியாவது ஊருக்கு வந்துவிடுவார். நான்கு வருடங்களாக இது தவறியதே இல்லை.

அன்று சுவாதியின் ஐந்தாவது பிறந்தநாள். பணிநிமித்தமாக மும்பையில் இருக்கிறார் ராஜேந்திரன். தவிர்க்க இயலாத வேலை. நேரில்தான் செல்ல முடியாது, ஏதாவது அன்பளிப்பாவது குழந்தைக்கு அளித்து தனது அன்பை தெரிவிக்க வேண்டுமே என்று புத்திர பாசத்தால் தவித்துக் கொண்டிருந்தார்.
உடனிருந்த நண்பர் ஊக்கம் சொன்னார். “ஜஸ்ட் டயல் இருக்க கவலை எதற்கு?”“

ராஜேந்திரனுக்கு இப்படி ஒரு சேவை இருப்பது இப்போதுதான் தெரியும். பிறந்தநாள் அன்று காலை அப்பாவிடமிருந்து கேக்கும், பார்பீ பொம்மையும் சுவாதிக்கு சென்று அடைகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுவாதி அப்பாவுக்கு தொடர்ச்சியான முத்தங்கள் மூலமாக தனது அன்பைத் தெரிவிக்கிறாள்.

ஏதோ விளம்பரப் படத்தின் ஸ்க்ரிப் என்று நினைத்து விடாதீர்கள். இதுதான் ஜஸ்ட் டயல்.

உங்களுக்கு ஏதேனும் தகவலோ, சேவையோ தேவைப்பட்டால் யோசிக்காமல் ஜஸ்ட் டயலுக்கு டயலலாம். எதைப்பற்றியதாகவும் உங்கள் சந்தேகம் இருக்கலாம். உங்கள் நகரின் சிறந்த பீட்ஸா கார்னரில் தொடங்கி, ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் வரை எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் நொடிகளில் உங்களுக்கு பிடித்துத் தருகிறார்கள் ஜஸ்ட் டயல் நிறுவனத்தார்.
இந்தியாவின் நெம்பர் ஒன் தேடுதல் நிறுவனம். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இவர்களுக்கு தூக்கமே கிடையாது. 240 நகரங்கள். இரண்டரை கோடி பயனாளிகள். மிகக்குறுகிய காலக்கட்டத்தில் எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?

வழக்கமான யெல்லோ பேஜ் புத்தகம் செய்யும் வேலையை எளிமை ஆக்கியிருக்கிறது ஜஸ்ட் டயல். தலையணை அளவில் நமக்கு வழங்கப்படும் அந்தப் புத்தகத்தைப் பிரித்து, நமக்கு தேவையான சேவையையோ, தகவலையோ தேடி கண்டறிவதற்குள் மூச்சு முட்டிவிடும். அதுவும் நாம் வசிக்கும் நகரத்தின் தகவல்கள் மட்டுமே அதில் இருக்கும். ஜஸ்ட் டயலோ இந்தியாவின் முக்கிய 240 நகரங்களின் கோடிக்கணக்கான தகவல்களை தனக்குள்ளே அடக்கியிருக்கிறது. தொலைபேசி சேவை மட்டுமல்ல.. இணையத்தளம், எஸ்.எம்.எஸ். என்று காலத்துக்கேற்ப தனது விழுதுகளை விரிவாக்கிக் கொண்டே போகிறது.

சுலபமான வார்த்தைகளில் சொல்வதென்றால், தேடுவோரை தேடும் தகவலுக்கு, சேவைக்கு, பொருளுக்கு அழைத்துச் செல்கிறது ஜஸ்ட் டயல். பயனாளியைப் பொறுத்தவரை அவருக்கு இது முழுக்க முழுக்க இலவச சேவை.

வெறும் ஐம்பதாயிரம் ரூபாயை முதலீடாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று ஆண்டுக்கு 134 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறது. 3500 பணியாளர்கள்.

‘நச்’சென்ற இந்த ஐடியாவுக்கு சொந்தக்காரர் ஒரு தமிழர் என்பது உங்களுக்கு தெரியுமா?

மும்பையின் மலாடு மேற்கில் 20,000 சதுர அடியில் ஜஸ்ட் டயலின் தலைமை அலுவலகம். அலுவலர்களால் செல்லமாக மிஸ்டர் சேஞ்ச் என்று அழைக்கப்படுபவர்தான் அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர். வி.எஸ்.எஸ். மணி. 37 வயது. கொல்கத்தாவைச் சேர்ந்த தமிழர். சில்லறையை (Money) Change என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. இந்த மணியை ‘சேஞ்ச்’ என்று அழைக்க காரணம் வேறு. இவர் மாற்றம் விரும்பி என்பதால். தினமும் ஏதாவது சிறிய சிறிய மாற்றங்களை அலுவலகத்தில் செயல்படுத்திப் பார்ப்பது இவரது வழக்கம்.

“சின்ன வயசுலேயே பிசினஸ் மேலே காதல் இருந்தது. பத்தாவது படிச்சு முடிச்சப்போ வீட்டிலேயே ‘லோன்’ வாங்கினேன். ஒரு கலர் டிவியும், டெக்கும் வாடகைக்கு எடுத்து டிக்கெட் எல்லாம் பிரிண்ட் பண்ணி, செம கூட்டம்! வீட்டு லோனை அடைச்சு எனக்கும் கையில் நல்ல லாபம் கிடைச்சுது“ சிறுவயது நினைவுகளில் சிரிக்கிறார் மணி.

சி.ஏ., படித்துக் கொண்டிருந்த மணி படிப்பினை பாதியில் விடக்கூடிய குடும்பச்சூழல். யெல்லோபேஜஸ் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராக பணிக்கு சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தவருக்கு ‘திடீர் யோசனை’ தோன்றியது. ஏன் இவ்வளவு பெரிய புத்தகம்? தொலைபேசி மூலமாகவே தேவைப்படுபவர்களுக்கு தேவையான தகவல்களை தரமுடியுமே? இந்தியர்கள் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்கிறார்கள். தகவல்கள் தருவதையே தனி சேவையாக தொடங்கினால் வேண்டாமென்றா சொல்லிவிடப் போகிறார்கள்?

1989ல் ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்கள் சிலரோடு சேர்ந்து ‘ஆஸ்க் மீ’ என்ற பெயரில் தகவல் சேவை நிறுவனத்தை தொடங்குகிறார் மணி. இந்தியா உலகமயமாக்கல் ஜோதியில் கலக்காத காலம் அது. நகரங்களில் கூட மிகச்சிலரின் வீடுகளில் மட்டுமே தொலைபேசி இருந்தது. கைப்பேசியெல்லாம் வரும் என்று அப்போது ஜோதிடர்கள் கூட கணித்திருக்க மாட்டார்கள்.

‘நல்ல ஐடியா’ என்று பலரால் பாராட்டப்பட்டாலும் கூட ‘ஆஸ்க் மீ’யால் மூன்று ஆண்டுகளை கூட வெற்றிகரமாக கடக்க முடியவில்லை. அப்போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு சுலபமாக பலியானது. முதலீட்டுப் பற்றாக்குறையும் வணிகத்தை தொடர பெரும் பிரச்சினையாக இருந்தது. தன்னுடைய பங்குகளையும் பங்குதாரர்களுக்கே கொடுத்துவிட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் மணி.

1992ல் இருந்து பலவிதமான வேலைகளை செய்து தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலை வந்தது. ஒரு பெரிய நாளிதழுக்கு திருமண தேவை விளம்பரங்கள் பிடித்து தரும் வேலையை தொடர்ச்சியாக செய்துவந்தார். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது.

ஐம்பதாயிரம் ரூபாயோடு 1994ல் மும்பைக்கு மீண்டும் படையெடுக்கிறார். தனது கனவுத் திட்டத்தை நனவாக்கும் ஊக்கம் மட்டுமே அவரை இம்முறை இயக்கிக் கொண்டிருந்தது. இடையில் உலகமயமாக்கல் தொழில்முனைவோருக்கு திறந்துவிட்ட கதவுகள் ஏராளம்.

அப்போது ஒரு தொலைபேசி இணைப்புக்கே பதினைந்தாயிரம் வரை செலவானது. மூன்றே மூன்று தொலைபேசி இணைப்புகள் மட்டுமே வாங்க முடிந்தது. டேட்டாபேஸ் என்றழைக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை சுனாமி வேகத்தில் சேர்க்கத் தொடங்கினார். இரவல் வாங்கப்பட்ட மேசை, நாற்காலிகள் மற்றும் வாடகை கணினியோடு ‘ஜஸ்ட் டயல்’ உருவான வெற்றிக்கதை இதுதான். இதற்குப் பின் நடந்ததெல்லாம் சரித்திரம்.

தொலைதொடர்புத்துறையின் தாராளமயம், மொபைல் போன்களின் பரவலான பயன்பாடு ஆகியவற்றால் இன்று ‘ஜஸ்ட் டயல்’ அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது. 2007ஆம் ஆண்டு இச்சேவை இணையத்தளத்துக்கும் மாறியபோது கிடைத்த வரவேற்பு மகத்தானது. நாள்தோறும் 2,25,000 பேர் justwww.justdial.com இணையத் தளத்தை பார்வையிடுகிறார்கள்.

இந்தியாவை வெற்றிகண்ட நம் ஐடியாமணியின் பார்வை இப்போது அமெரிக்கா பக்கம் திரும்பியிருக்கிறது. அமெரிக்காவிலும் இதேபோன்ற ஒரு சேவை அமைப்பை நிறுவும் முயற்சிகளில் இப்போது மும்முரமாக இருக்கிறார்.

நம்மூர் தமிழன் ஆயிரம் மைல் தாண்டி வெற்றிக்கொடி நாட்டினால் நமக்கும் மகிழ்ச்சிதானே?

(நன்றி : புதிய தலைமுறை)

21 ஜூலை, 2010

Height of ஈயடிச்சான் copy!



’தில்லாலங்கடி' ட்ரைலர் பார்த்திருப்பீர்கள். நளினியிடம் மொக்கையாக காமெடி செய்ய முயற்சி செய்யும் ஜெயம்ரவி தலையில் ஏன் ஒரு எகனைமொகனை பாணியில் பட்டுத்துண்டு கட்டியிருக்கிறார் தெரியுமா?

உங்களுக்கு எப்படி தெரியும்? பாவம். படத்தின் இயக்குனர் ராஜாவுக்கே தெரியாத மேட்டர் அது. ஏனெனில், தில்லாலங்கடியின் ஒரிஜினலான ‘கிக்’கில் ரவிதேஜாவும் இதுமாதிரி ஓபனிங் சீனில் கட்டியிருப்பார்.

ஆகவே பொதுஜனங்களே, “what is the height of ஈயடிச்சான் copy?” என்று உங்கள் ஆங்கில மிஸ் கேட்டால் தயங்காமல் சொல்லுங்கள். “ஜெயம் கம்பெனி”

ஜெயம் ராஜா மீதான அதீதநம்பிக்கையில் தில்லாலங்கடி அட்வான்ஸ்ட் திரைவிமர்சனம் இங்கே!

19 ஜூலை, 2010

தமிழ் தேசியம், திராவிடம், etc. - சுகுணாதிவாகர்

நீங்கள் புரட்சியாளராக வேண்டுமா? தமிழின உணர்வாளர் ஆக வேண்டுமா? தலித் மக்களின் காவலர் ஆக வேண்டுமா? நவீன இலக்கிய ஆர்வலர் ஆக வேண்டுமா? சுலபம், பெரியார், திராவிட இயக்கம், கலைஞரைத் திட்டினால் போதும். அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம் என்ன? சிம்பிள், பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கைதான். நவீன இலக்கியங்கள் பரவாமல் போனதற்கு காரணம் மு.க.அழகிரிதான் என்று ‘ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டி’ யாக ‘ஆய்வாளர்களால்’ பயன்படுத்தப்படுவது திராவிடர் மற்றும் திராவிட இயக்கம்தான்.

சமீபத்தில் நண்பர் தமிழ்சசி பெட்னா விழா பற்றி எழுதியிருந்த இடுகையைக் காண நேர்ந்தது. செம்மொழி மாநாட்டையும் பெட்னாவையும் ஒப்பிட்டுக் கேள்வி கேட்பது மாதிரியான நோக்கம் எதுவும் என்னிடமில்லை. ஆனால் ‘இனப்படுகொலையின் ஈரம் காய்வதற்குள் இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா?’ என்கிற கேள்வி செம்மொழி மாநாட்டிற்கும் பெட்னாவிற்கும் ஒருசேர பொருந்தித்தான் போகிறது என்பதே என் கருத்து.

இருக்கட்டும், இப்போது பதிவின் இறுதியில் சில முடிபுகளாக நண்பர் தமிழ்சசி முன்வைத்திருக்கும் கருத்துகளுக்கு வருவோம். இதுமாதிரியான கருத்துகள் பல சந்தர்ப்பங்களில் பலரால் முன்வைக்கப்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ளுதல் நலம். இனி சசியின் கருத்துக்கள்.

’’திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் உடன்பாடு உண்டு. இல்லாத திராவிட அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் அடையாளம் சிதைக்கப்பட்டது’’

திராவிட இயக்கம் குறித்து விமர்சனம் செய்வதற்கான காரணங்கள் தமிழ்ச்சூழலில் நிரம்பவே உள்ளன. எல்லா இயக்கங்களையும் போலவே திராவிடர் மற்றும் திராவிட இயக்கங்களும் தமிழ்வெளியில் பல சாதக மற்றும் பாதகமான செயல்பாடுகளை நிகழ்த்தியுள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றுக்கும் காரணமாக திராவிட இயக்கத்தின் மீது பழிபோடுவது அறியாமை அல்லது அபத்தம் என்றே சொல்ல வேண்டும். மேலும் எப்போதும் நிலையான அடையாளங்கள் என்பது ஒருபோதும் இருந்ததில்லை. எனவே ‘இல்லாத திராவிட அடையாளம்’, ‘இருக்கும் தமிழ் அடையாளம்’ என்றெல்லாம் ஒன்றுமில்லை. காலந்தோறும் தமிழ் அடையாளங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இன்னமும் தமிழ் அடையாளத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள இருளர், படுகர், நரிக்குறவர் மாதிரியான பழங்குடி இனங்கள் தமிழகத்தில்தான் வசித்துவருகின்றனர். இது ‘தமிழ் அடையாளம்’ என முன்வைக்கப்படும் பண்பாடு, வழிபாடு ஆகியவற்றுக்கு மாறாகவே உள்ளன.சொல்லப்போனால் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் ‘திராவிட அடையாளம்’ என்பதற்குத்தான் ஏராளமான அறிவியல்பூர்வமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. குறிப்பாக செம்மொழி மாநாட்டில் நமக்கு எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தபோதிலும் வெளிநாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழறிஞர்களின் கட்டுரைகள் முக்கியமானவை. இவை திராவிட அடையாளம் குறித்த வலுவான சான்றுகளை முன்வைத்துள்ளன. மேலும் இந்த வரலாற்றுச் சான்றுகளுக்கு அப்பால் திராவிட இயக்கம் கட்டமைத்த ‘திராவிட அடையாளம்’ இப்போது தமிழ்சசி உள்ளிட்ட தமிழ்த்தேசியர்களால் முன்வைக்கப்படும் ‘தமிழ் அடையாளத்தை’ விடவும் வன்முறை குறைவானது, நெகிழ்வானது.

’’கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது; ஆன்மீகம் மனிதனுக்கு தேவையான ஒன்று”

’கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது’ என்று சசி சொல்வதற்கு ஏதாவது அடிப்படைகள் உள்ளனவா என்பதைத் தர்க்கத்தின் அடிப்படையில் யோசித்தால் எவ்வளவு அபத்தம் என்பது தெரியும். கடவுள் மறுப்பு என்பது எப்படி பார்ப்பனியப் பிடியில் தள்ளும்? 1925ல் சுயமரியாதை இயக்கத்தையும் குடியரசையும் தொடங்கிய பெரியார் நாத்திகத்தை அப்போது வலியுறுத்தவில்லை. சிறிதுகாலம் கழித்தே கடவுள்மறுப்பை வலியுறுத்த வேண்டியவரானார். அப்படியானால் சசியின் கருத்துப்படி கடவுள் மறுப்பு வலியுறுத்தப்படுவதற்கு முன்பு தமிழ்மக்கள் பார்ப்பனியப்பிடியில் சிக்காமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்?

ஆனால் கடவுள்மறுப்பைப் பெரியார் இயக்கம் வலியுறுத்தியதை மறுத்து, வெளியேறிய திமுக ஓரிறைக் கொள்கையை முன்வைத்தபோதுதான் அது பெரிதும் பார்ப்பனியத்தோடு சமரசம் செய்துகொண்டது என்பது வரலாறு. கடவுள் மறுப்பை முன்வைத்த திராவிடர் இயக்கம் மொழி தொடங்கி பல களங்களிலும் பார்ப்பனியத்திற்கு எதிரான தீவிரமான போராட்டங்களை நடத்தியது. இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் தற்போது மட்டுப்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் 80 ஆண்டுகால திராவிடர் மற்றும் திராவிட இயக்கத்தின் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பே.

ஆன்மீகம் மனிதனுக்குத் தேவையான ஒன்றா இல்லையா என்பது தத்துவக் களத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. தம்மத்தை வலியுறுத்திய பவுத்தம் கடவுளை மறுத்தது. ‘உனக்கு நீயே விளக்கு’ என்றது. அமைப்பாகும்போது ‘தம்மம் சரணம்’ என்றும் ‘சங்கம் சரணம்’ என்றும் சொன்னது. மனிதனுக்கு அற மதிப்பீடுகளை வலியுறுத்த ஆன்மீகமும் மதமும் தேவை என்பது சாதாரண பொதுப்புத்தி. ஆனால் மதத்தின் இடத்தில் அறத்தை வைப்பவர்களுக்கு ‘ஆன்மீகம்’ என்பது அவசியமற்ற ஒன்று. கடவுளையும் மதத்தையும் மறுத்த பெரியார், அறவிழுமியங்களின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். பதவி உள்ளிட்ட எல்லாவற்றையும் இழந்த துறவியாக அவர் இருந்தார் என்பதும் மாபெரும் ஆன்மீகத் துறவியாக சாருநிவேதிதா போன்றவர்களால் முன்னிறுத்தப்படும் ரமணர், தனது சொத்தை சித்தப்பா மகனுக்கு எழுதி வைத்ததும், பெரியார் தனது சொத்து முழுவதையும் இயக்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு, ‘’என்னிடம் பணம் எதுவுமில்லை, நான் சாப்பிடுவது இயக்கத்தின் காசு” என்று சொன்னதையும் ஒப்புநோக்கினால் அறமதிப்பீட்டிற்கும், சோ கால்ட் ‘ஆன்மீகத்திற்கும்’ ஒரு தொடர்புமில்லை என்பது விளங்கும். மேலும் ‘ஆன்மீகத்தின்’ தேவையை சசி வலியுறுத்தும் புள்ளியின் பலவீனத்தையும் காண்போம்.

‘’பார்ப்பனீய வழியிலான ஆன்மீகம் மறுக்கப்பட்டு தமிழ் வழிலான நமது மரபு சார்ந்த சிறு தெய்வ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆன்மீகம் மொத்தமாக நிராகரிக்கப்பட்டதால் இன்றைக்கு ஆன்மீகம் பார்ப்பனிய மயமாகி விட்டது”.

சாதாரண அடித்தட்டு மக்களுக்கு தமிழ்சசி வலியுறுத்தும் ‘ஆன்மீகம்’ குறித்து எதுவும் தெரியாது. வழிபாடு, நம்பிக்கைகள், தொன்மங்கள், அது குறித்த கதைகள் ஆகியவற்றோடு பிணைக்கப்பட்டவர்கள் அடித்தட்டுமக்கள். அவர்களது வழிபாடுகளும் தெய்வங்களும் (’கடவுள்கள்’ அல்ல) சடங்குகளும் அவர்களது வாழ்க்கைமுறையினின்றும் பண்பாட்டிலிருந்தும் உருவானவை. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற ‘இந்து ஆன்மீக மரபுகள்’ ஆதிசங்கரருக்கும் தாத்தாச்சார்ய சுவாமிகளுக்கும் ஜெயமோகனுக்கும் தெரியுமே அல்லாது சாதாரண சுப்பனுக்கும் குப்பனுக்கும் தெரியாது. இந்து பார்ப்பனியப் பெருந்தெய்வ மரபுக்கும் அடித்தட்டு மக்களின் நாட்டார்தெய்வங்களுக்குமான நுட்பமான வேறுபாடுகளைப் பெரியாரும் திராவிட இயக்கமும் உணர்ந்துகொள்ளவில்லை என்பது உண்மைதான். இவற்றை மூடநம்பிக்கைகள் என்று கேலி செய்ததும் உண்மைதான். ஆனால் அடித்தட்டு மக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் நாட்டார்தெய்வ மரபுகளையும் பாதுகாத்துக்கொண்டே திராவிட இயக்கத்துடனுடனான தொடர்புகளை எவ்வாறு பேணினார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ‘கடவுள் இருக்கு என்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும்பேச்சு’ என்று சொன்ன பொதுவுடைமை இயக்கத்தை விடவும் ‘கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்று சொன்ன திராவிடர்கழகத்தையும் ‘அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?’ என்று நாத்திகம் பேசிய திமுகவையும் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களின் சுயமரியாதையை அந்த இயக்கங்கள்தான் பேசின. மேலும் பொதுவாக நாத்திகம் பேசினாலும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக திராவிடர் இயக்கங்கள் ‘போர் தொடுக்கவில்லை’ என்பதும்தான்.

இங்கு இன்னொன்று முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது பார்ப்பனியப் பெருந்தெய்வங்களுக்கும் நாட்டார் தெய்வங்களுக்குமிடையிலான வேறுபாடுகளைத் தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தி விவாதத்தைத் தொடங்கிவைத்தவர்களே கடவுள்மறுப்பாளர்களான இடதுசாரி மற்றும் திராவிட இயக்கச் சார்பாளர்களாகிய நா.வானமாமலை மற்றும் தொ.பரமசிவன் போன்ற ஆய்வாளர்களே. மேலும் இந்த சிறுதெய்வ வழிபாட்டை எந்தவித விமர்சன்முமின்றி நாம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யவும் தேவையில்லை. ஏனெனில், சிறுதெய்வ மரபு என்பது பார்ப்பனப் பெருந்தெய்வ மரபுக்கு எதிராயிருக்கும் அதேவேளையில் அது ஒவ்வொன்றும் தனக்கே உரியதான சாதிய மற்றும் நிலப்பிரத்துவக்கூறுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. இனி, தமிழ்சசி வலியுறுத்தும் ‘மாற்று ஆன்மீகத்திற்கு’ வருவோம்.

‘பார்ப்பனீயம் தழைத்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமே ஆன்மீகம் தான்; மாற்று ஆன்மீகமே நமக்கு தேவை. முழுமையான நிராகரிப்பு எதையும் சாதித்து விடாது. இன்று வரைக்கும் சாதிக்கவும் இல்லை;”

என்று சொல்கிற தமிழ்சசி எது ‘மாற்று ஆன்மீகம்’ என்று குறிப்பிடவே இல்லை. முன்பே குறிப்பிட்டதைப் போல பெருவாரியான ‘இந்து’க்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய பிரக்ஞையுமில்லை, கவலையுமில்லை. அவர்கள் அதிகமும் பெரியாரோடு முரண்பட்டு உரசும் இடம் கடவுள்நம்பிக்கை தொடர்பானதாக இருக்கலாம். ஆனால் கடவுள் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொண்டே பார்ப்பனியம் மற்றும் சாதியை எதிர்த்தவர்கள் தோற்றுப்போனதற்கான விரிவான வரலாற்று ஆதாரங்கள் குறித்து நான் இங்கே பேச முயலவில்லை. ஆனால் தமிழ்சசி மட்டுமில்லாது பலரும் இப்போது வலியுறுத்தும் ‘ஆன்மீகத் தேவை’ குறித்து மட்டும் பேசலாம்.

இப்போது பெருகியுள்ள நவீன கார்ப்ரேட் சாமியார்கள் பெருக்கத்தின் பின்னணியிலேயே இதை அணுகலாம். ஜக்கிவாசுதேவ், நித்யானந்தா போன்றவர்கள் பேசும் ‘ஆன்மீகத்தை’ உற்றுக்கவனித்தால், அவை பெரும்பாலும் பவுத்த மற்றும் ஜென்பவுத்த சிந்தனைகளை உருவியதாக இருப்பதைக் காணலாம். இந்த கார்ப்பரேட் சாமியார்களும் அத்வைதம், துவைதம் போன்ற ‘இந்து ஆன்மீக மரபிலிருந்து’ பேசுவதில்லை. கடவுளை அதிகம் வலியுறுத்தாத, மய்யப்படுத்தாத ஆன்மீகமாகவே இவர்களுடையதும் இருக்கின்றன. நமது தமிழ்மரபில் நீண்டகாலம் தங்கியிருந்த பவுத்த, சமண மரபுகளின் கருத்துக்களையும் தியானம், யோகா போன்ற அவைதீக மரபுகளின் பயிற்சிகளையும் எடுத்து, ‘தியான லிங்கம்’ போன்ற இந்துத்துவக்குறியீடுகளை உருவாக்கி நமக்கே விற்பனை செய்கிறார்கள். இந்த கார்பரேட் சாமியார்களை அதிகமும் நாடிச் செல்பவர்கள் நடுத்தர வர்க்கத் தமிழர்கள்தான்.

நவீன வாழ்க்கை உடல் மற்றும் உளவியல் ரீதியிலாக ஏற்படுத்தியிருக்கும் சிக்கல்கள்தான் அவர்களைக் கார்ப்பரேட் சாமியார்களிடம் சரணடையச் செய்திருக்கிறதே அல்லாது, அவர்களின் ‘ஆன்மீக ஈடுபாடு’ அல்ல. இன்னமும் அடித்தட்டு சாதி மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் குறிசொல்லும் சாமியார்களிடம் செல்கிறார்களே அல்லாது கார்ப்பரேட் சாமியார்களிடம் அல்ல. ஏனெனில் அவர்களது அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள், அடுத்த மாதம் எப்படி இருக்கும் என்று ‘குறி கேட்கிற’ விருப்பம் மட்டும்தான் அவர்களின் அதிகபட்ச ‘ஆன்மீகம்’. மிஞ்சிப்போனால் இவர்கள் அதிகபட்சம் பங்காரு அடிகளாரைச் சரணடைவார்கள். அதற்குக் காரணம், பூணூல் அற்ற வெற்றுக் கருப்புடல் நோக்கிய தமிழர்களின் விழைவு, சக்தி பூஜை என்ற பெயரில் முன்வைக்கப்படும் தாய்த்தெய்வ வழிபாடு, மாதவிடாய்க் காலங்களிலும் பெண்கள் கருவறையில் சென்று பூஜை செய்யும் சுதந்திரம் ஆகியவை. தமிழ்சசி விரும்புகிறபடி நாம் மாற்று ஆன்மீகத்தை வளர்ப்பதாக இருந்தால் அதிகபட்சம் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மய்யத்தில் சேரலாம்.

தமிழ்சசி முன்னிறுத்தம் ‘கொண்டாட்டம்’ பற்றிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதான். அந்த கொண்டாட்டத்தைத் தமிழர்கள் திராவிடக்கட்சி ஊர்வலங்கள் தொடங்கி டாஸ்மாக் வரை பலவழிகளில் அடைந்துகொண்டுதானிருக்கிறார்கள். எனவே கொண்டாட்டத்திற்கு மதமோ ஆன்மீகமோ அவசியமில்லை. மாறாக வறட்டுத்தனமான நமது இயக்கங்களின் அணுகுமுறையிலிருந்து நெகிழ்வடைந்து நாம் மாற்றுக்கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும். ஆனால் தமிழ்சசியோ ஆன்மீகம், கொண்டாட்டம், ஆன்மீகத்தேவை போன்ற கருத்தாக்கங்களின் வழி வந்தடையும் முடிவு அபத்தமானது மற்றும் ஆபத்தானது.

'கடவுள் மறுப்பு நம்மை இந்துக்களாக மாற்றி விட்டது.நாம் சைவர்கள் என்பதை சொல்வதையே நான் வலியுறுத்துகிறேன்.' என்கிறார் தமிழ்சசி.

நம்மை ’இந்துக்களாக’ மாற்றியது அரசியலமைப்பின் தன்மையே அல்லாது கடவுள் மறுப்பு அல்ல. இதற்கு விரிவான பல வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. இருக்கட்டும், ஆனால் வெறுமனே தமிழ் அடையாளம் என்னும் ஒற்றை அடையாளத்தை வலியுறுத்துபவர்கள் வந்துசேரும் இடம் இதுவாகத்தானிருக்கும். தமிழ்சசியால் கடவுள் மறுப்பால் அதிருப்தி அடைந்ததாகக் குறிப்பிடப்படும் தமிழர்களில் எத்தனை சதம் பேர் சைவர்கள்? தமிழர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் சைவ மதத்திற்குப் புறம்பானவர்கள். உணவுப்பழக்கம் தொடங்கி வழிபாடு வரை பெரும்பான்மையான தமிழ்ச்சாதிகள் சைவமதத்திற்கு அப்பால் உள்ளவர்கள். தமிழ்சசி சொல்வதைப் போல சைவத்தை வலியுறுத்தத் தொடங்கினால், வைணவ சமயத்தைக் கடைப்பிடிக்கும், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் சாதிகள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை என்ன சொல்லி அழைப்பது? இதைத்தான் நாம் ‘வெளித்தள்ளும் அரசியல்’ என்கிறோம்.

இறுதியாக தமிழ்மக்களுக்கு அவர்களது மொழி மற்றும் தேசிய இன அடையாளத்தின் அடிப்படையில் இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றால் இழைக்கப்படும் அநீதிகளை எதிர்க்க வேண்டியதும், அதற்காகத் தமிழின அடையாளத்தை வலியுறுத்த வேண்டியதும் அவசியமானவைதான். ஆனால், அதனூடாக நாம் இதுவரை பயணித்து வந்த ஒரு நெகிழ்வான, மதக்காழ்ப்பற்ற திசையிலிருந்து எதிர்த்திசைக்கு நம்மை நாமே தள்ளிவிடக் கூடாது. திமுக, கருணாநிதி போன்றவற்றின் மீதுள்ள கோபமும் உணர்ச்சியடிப்படையிலான அவசர முடிவுகளும் நமக்கு இழப்பைத்தான் ஏற்படுத்தும். இதன் பொருள், திராவிட அடையாளத்தை வலியுறுத்துகிறேன் என்ற பெயரில் கலைஞரின் தமிழின விரோத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதும், தமிழக அரசை விமர்சனமற்று ஆதரிப்பதுமல்ல. மாறாக, திராவிட இயக்க அடிப்படைகளிலிருந்து சாதகமான அம்சங்களை எடுத்துக்கொண்டே தமிழின உரிமைப்பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்பதுவே.

எழுதியவர் : சுகுணாதிவாகர்

17 ஜூலை, 2010

தில்லாலங்கடி - திரைவிமர்சனம்


தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘கிக்’ படத்தின் ரீமேக். சிங்கம் வெற்றிக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் வெளியிடும் படம். ரீமேக் கிங் ராஜாவும், அவரது தம்பி ரவியும் மீண்டும் இணையும் படம். எனவே பெரிய எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படம். கிக் அடித்தார்களா இல்லை டக் அடித்தார்களா என்று பார்ப்போம்.

தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான். ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, ஜெயம்ரவி.

காதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் ஷாம் அலைய, திருடன் ரவிக்கும், போலீஸ் ஷாமுக்கும் நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் ரவி திருடனானான்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா? என்பது தான் கதை.

ரவி வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் மொன்னையாய் நடித்திருகிறார். படம் முழுக்க காமெடி செய்ய முயன்றிருக்கிறார். வரவில்லை. க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

தமன்னா இன்னும் இன்னும் இளைத்துக்கொண்டே போகிறார். அழகாய் இருக்கிறார். ரவிக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். மனதை திறந்து காட்டவும் செய்கிறார்.

ரவியை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் 12பி ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். ஆனால் அவரது பேபி வாய்ஸ்தான் சொதப்புகிறது. அது தான் அவ்வளவாக பொருந்தவில்லை.

வழக்கம் போல் வடிவேலு தூள் பரத்துகிறார். அதிலும் ரவியிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்‌ஷனும்.. தமன்னா ரவியை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவியிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.

ராஜசேகரின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. யுவன்ஷங்கர்ராஜா இசையில் மூன்று பாடல்கள் சூப்பர். இரண்டு பாடல்கள் ஓகே. ஒரே ஷாட்டில் படமாகியிருக்கும் பாடல் இப்படத்தின் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன் என்று சொன்னால் மிகையாகாது.

வழக்கமாய் அட்சரம் பிசகாமல் தெலுங்கு படங்களையே அப்படியே டிட்டோவாக இயக்கும் ஜெயம்ராஜா, இம்முறையும் அதையே பின்பற்றியிருப்பது பெரிய லெட்டவுன். காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. முதல் பாதி முழுவதும் ரவி, தமன்னா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைக்கதையின் வேகம் அருமை. இரண்டாவது பாதியில் நடுவில் திரைக்கதை தூக்கு போட்டு தொங்கினாலும், போலீஸ் ஆபீஸருக்கும், ரவிக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் காதில் பூ.

தில்லாலங்கடி - ‘தில்’லாலங்கடி!


விமர்சனம் எழுத ஊக்கம் : நண்பர் கேபிள்சங்கர்

15 ஜூலை, 2010

முன்கதை சுருக்கம்!

இவ்வளவு உற்சாகமாக இதற்கு முன்பாக இருந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. இன்று விடியற்காலை இரண்டு மணியிலிருந்து தன்னம்பிக்கை கொப்பளிக்கும் ஊற்றாய் பீறிட்டுக் கொண்டேயிருக்கிறது. உறக்கமின்றி இரவெல்லாம் விழித்து கண்கள் எரிய இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்னைப்போலவே ஒரு மனிதன் இங்கே வாழ்கிறான். தவறுகள் இழைத்திருக்கிறான். பொய் சொல்லியிருக்கிறான். காமாந்தகனாக திரிந்திருக்கிறான். சில நேரங்களில் சோம்பித் திரிந்தான். சில நேரங்களில் கடுமையாக உழைத்தான். சாதித்தான். உலகம் ஏற்கும் மகத்தான வெற்றி கண்டான். தன்னுடைய தவறுகளை பகிரங்கமாக அறிவித்தான். தன்னைப் பற்றி கர்வம் கொண்டான். தற்புகழ் பேசினான். நாற்பது வயதில் சுயசரிதை எழுதினான். ஆஹா! இருபத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து வாசித்தாலும் முந்தைய பாராவில் சொல்லியிருக்கும் உணர்வை கொடுக்கிறானே? ஓரிரவைக் கொன்று அவன் வாழ்க்கையை வாசிக்கச் செய்கிறானே? பாலகுமாரா நீ தெய்வம்!

நேற்றைய தினம் என் வாழ்க்கையின் மிக மோசமான தினங்களில் ஒன்று. நானே என் மீது அக்கறை கொள்ளாத நிலையிலும், என் எதிர்காலம் குறித்து கவலைப்படும் சில நல்லுள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நல்லிதயம் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நேற்று குரூரமாக கொன்றிருந்தேன். நேற்று மட்டுமல்ல. இரண்டாண்டுகளாகவே நான் இப்படித்தான் இருக்கிறேன். என் சூழல் அப்படி. பொருளாதார அடிப்படையில் மரண அடி வாங்கியிருக்கிறேன். குடும்பம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் சரியாக பொருந்திபோக முடியாத சுயநலமியாக இருக்கிறேன். நொடியில் கோபப்படுகிறேன். உணர்ச்சிவயப்படுகிறேன். சுயகழிவிரக்கத்தால் தோற்றுக் கொண்டிருக்கிறேன். நல்ல வேளையாக நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறூட்டும் அம்மா மாதிரி நண்பர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். இல்லையேல் ஒருவேளை இன்னேரம் நான் மனநலக்காப்பகம் ஒன்றினில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பேன்.

இவ்வாறான ஒரு மனக்கொந்தளிப்பான சூழலை வாசிப்பு மட்டுமே தணிக்கும். நேற்று இரவு பதினோரு மணிக்கு முன்கதை சுருக்கத்தை கையில் எடுத்தேன். டீனேஜில் இதே புத்தகத்தை வாசித்தபோது வெறும் தற்புகழ்ச்சியாகவும், உபதேசமாகவும் தெரிந்த விஷயங்கள் இப்போது வேறொரு பரிணாமத்தில் மனதில் பதிகிறது. எழுத்துகளுக்கிடையே பாலகுமாரன் வைக்கும் ‘கண்ணி’யை வயதும், அனுபவமும் கூடகூடத்தான் புரிந்துகொள்ள இயலுகிறது.

பாலகுமாரன் தனது சிறுவயது தீபாவளியில் தொடங்குகிறார். அப்பாவின் சுயநலம் குறித்து பிரஸ்தாபிக்கிறார். இருபது ஆண்டுகள் கழித்து அயன்ராண்டை வாசித்து ‘எல்லோருமே சுயநலமிகள்’ என்று தெளிகிறார்.

அம்மா. அப்பா. பதிமூன்று வயதில் பொன்னியின் செல்வன். எதிர்பால் ஈர்ப்பு. கதைகள். நாவல்கள். தமிழ்வாணன். பழந்தமிழ் இலக்கியங்கள். டாஃபேயில் டைப்பிஸ்ட். கவிஞனாக முயற்சி. கணையாழியில் கவிதை. பக்தி இலக்கியங்கள். யோகா கற்க முயற்சி. மக்குப் பார்ப்பான் என்று மற்றவர்களின் ஏளனம். சுப்பிரமணிய ராஜூவோடு நட்பு. இலக்கியக் கூட்டங்கள். தொழிற்சங்க செயல்பாடுகள். வேலைநிறுத்தம். டாஃபே லாக்-அவுட். ஒரு வயது மூத்தப் பெண்ணோடு காதல். சோற்றுக்குப் பிச்சை. கசடதபற. ஞானக்கூத்தன். முத்துச்சாமி. சிறுகதை எழுத முயற்சி. இலக்கியச் சிந்தனை. ப.சிதம்பரம். வண்ணநிலவனின் கதையை தன் பெயரில் குமுதத்தில் வெளியிடுதல். சுஜாதாவின் அறிமுகம். கதை எழுத கற்றல். தொடர் காதல்தோல்வி.

எஸ்.ஏ.பி. குமுதம். சாவியில் ரிப்போர்ட்டிங். சினிமா. காமத்தேடல். கல்யாணம். எழுத்து. குழந்தை. ரசிகை. இரண்டாம் கல்யாணம். தொடர். மெர்க்குரிப் பூக்கள். இரும்புக் குதிரைகள். போஸ்டரில் போட்டோ. விகடன். பச்சைவயல் மனது. தொடர்கள். புத்தகங்கள். பரிசுகள். – இதுதான் முன்கதை சுருக்கம். இப்போதிருக்கும் மனநிலையில் தமிழின் மிகச்சிறந்த தன்னம்பிக்கை நூலாக இதை மதிப்பிடத் தோன்றுகிறது.

இப்போதைய என்னுடைய வயதில் பாலகுமாரனும் ரிப்போர்ட்டிங்தான் செய்துக் கொண்டிருந்தார் என்பதை அறிய ஏனோ சிறிய மனக்கிளர்ச்சி தோன்றுகிறது. வீடும், ஊரும், உறவும் காறி உமிழ அடுத்தடுத்து எவ்வளவு தவறுகளை செய்திருக்கிறார். அப்படிப்பட்ட பாலகுமாரனே வென்றிருக்கிறார். மிகக்குறைவான மைனஸ் பாயிண்டுகள் கொண்ட என்னால் முடியாதா?

சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இப்புத்தகத்தின் அசுரபலம்.

சுஜாதா : “என்னய்யா.. சினிமாக்கார ரிப்போர்ட்டா பண்ணிக்கிட்டு இருக்க. உருப்படியா ஏதாவது செய்”

பாலகுமாரன் (ஃபுல் போதையில்) : “உங்களைவிட நான் உருப்படியா பண்ணுவேன். நான் யார் தெரியுமா? என்னோட பவர் என்னன்னு தெரியுமா? நீங்க பாப்புலர்னு எனக்கு உபதேசம் பண்றீங்களா? உங்களை அடிச்சுக் காட்டறேன் சார்”

சாவி : பாலகுமாரன் உங்களுக்கு ஜாஸ்தி ஆயிடிச்சி. வெளியே போய் நில்லுங்க.

இன்னொரு சம்பவம்.

சுப்பிரமணிய ராஜூ : “பாலா, உனக்கு எழுதத் தெரியலைடா. நான் உனக்கு சொல்லித் தரேன்”

பாலகுமாரன் : “சாவி கேட்கறது தர நான் ஆளில்லை. நான் ஒரு ரைட்டர், ரிப்போர்ட்டரில்லை”

ராஜூ : “பாலா.. ரிப்போர்ட்டிங் பண்ணு, ரைட்டிங் தானே டெவலப் ஆகும். நான் உனக்கு கத்து தரேன்”

பாலகுமாரன் : “ராஜூ, எனக்கு தண்ணி ஊத்திக் கொடுத்துட்டு கத்த விடாதே. என் பலவீனம் புரிஞ்சுக்கிட்டு அடிக்காதே”

மாலனை ஆசிரியராக கொண்டு வெளிவந்த ‘திசைகள்’ முப்பதாண்டுகளுக்கு முன்பாக உள்ளடக்க ரீதியாக தமிழ் பத்திரிகையுலகில் நிகழ்த்தப்பட்ட பெரும் புரட்சி. சர்க்குலேஷன் சரியாகப் போகவில்லை என்று அதை சாவி நிறுத்த, மாலன் சாவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் என்ற ஒரு தகவல் போகிற போக்கில் கிடைக்கிறது.

இப்படி உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்கள் புத்தகம் நெடுக நிறைய உண்டு. 240 பக்க புத்தகத்தை 3 மணிநேரங்களில் இடைவிடாமல் படிக்க இதுபோன்ற ‘வரலாற்று நிகழ்வுகள்’ முக்கியக் காரணியாக இருக்கிறது.

‘பதிப்பகம் எழுத்தாளனை நம்பி நிற்கும் வியாபாரம். எழுத்தாளன் பதிப்பகத்தை நம்பி நிற்கும் படைப்பாளி’ ஸ்டைலில் நிறைய ‘பாலகுமாரன் டச்’ வசனங்களும் உண்டு.

“பெரிய மயிரு இவரு. தமிழ்ல எழுதுறா” திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட நேரம் அது. தமிழுக்கு மரியாதை வரத்துவங்கிய காலம் என்று எழுதுகிறார். திமுகவின் பார்ப்பனத் துவேஷம் அச்சுறுத்தினாலும், தமிழை அவர்கள்தான் வாழவைத்தார்கள். தமிழ் எழுத்தாளர்கள் இதற்காக நன்றிக்கடன் பட்டவர்கள் என்று வாக்குமூலம் கொடுக்கிறார். புத்தகத்தில் அரசியல் எட்டிப் பார்க்கிற இடம் இதுமட்டுமே. பொதுவாக பாலகுமாரனுக்கு அரசியலில் பெரிய ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. கம்யூனிஸ்ட் ஆக முயற்சித்து இளம்வயதில் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பியிருக்கிறார்.

பாலகுமாரனின் நாவல்களில் காணப்படுவதைப் போலவே சுயசரிதையிலும் பெண் குறித்த பிரமிப்பு அதிகம். மறுபடி இன்னொரு ‘முன்கதை சுருக்கம்’ சில வருடங்கள் கழித்து வரும் என்று சொல்லி முடிக்கிறார். கடந்த இருபத்து இரண்டு வருடங்களில் வெளிவந்தமாதிரி எனக்கு நினைவில்லை. பாலகுமாரனுக்கு அனுபவங்கள் மூலமாக 40 வயதில் கிடைத்த நிதானத்தை ஒரே புத்தகத்தில் அவரது வாசகன் அடைந்துவிட முடியும் என்பதுதான் அவர் அடைந்த உச்சபட்ச வெற்றி!

பின்கதைச் சுருக்கம் :

முன்கதை சுருக்கம் எழுதும்போது பாலகுமாரன் அடைந்திருந்த உயரம் அவரது பின்கதைச் சுருக்கத்தில் இல்லையென்பதை பாலகுமாரனின் தீவிர வெறிபிடித்த ரசிகனாக வருத்தத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

90களின் தொடக்கத்தில் பாலகுமாரன் சினிமாவில் மிக முக்கியமான ஆளாக மாறினார். அவர் இயக்கியதாக கூறப்பட்ட ‘இது நம்ம ஆளு’ பெரும் வெற்றி பெற்ற படம். ஜெண்டில்மேன், காதலன் என்று அடுத்தடுத்து அவரது வசனங்கள் பெரிதாகப் பேசப்பட்டன.

ஆனால் அவரது சினிமா அறிவு குறித்து இன்று சினிமாக்காரர்கள் கொஞ்சம் ஏளனமாகவே பேசுகிறார்கள். குளோஸ்-அப் எடுக்க வேண்டிய காட்சியில் ஹீரோவுக்கு செருப்பில்லைன்னு கண்டினியூட்டி பார்த்தவர் என்று கிண்டலடிக்கிறார்கள்.

தன் வாழ்நாளிலேயே தன் எழுத்து செத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் எழுத்தாளர் அவர் என்று மற்றொரு எழுத்தாளர் அவரை விமர்சிக்கிறார். கிட்டத்தட்ட உண்மைதான். ஒரு பத்திரிகையின் உதவியாசிரியரை பார்த்து அன்றைய பாலகுமாரன் சொன்னாராம். “என்னய்யா சர்க்குலேஷன் ரொம்ப டவுன் போலிருக்கே? நீ ஒண்ணு பண்ணு. பாலகுமாரன் தொடர் எழுதுகிறார்னு என்னோட போட்டோவைப் போட்டு போஸ்டர் அடி. சர்க்குலேஷன் பிச்சுக்கும்”. நிச்சயமாக இன்று இந்த நிலை இல்லை.

‘உடையார்’ எழுதிய பாலகுமாரனை நானே கூட நிராகரிக்கிறேன். பாலகுமாரனின் ரசிகர்கள் விரும்புவது மெர்க்குரிப் பூக்களையும், இரும்புக் குதிரைகளையும்தான். இன்றும் அவர் நினைவுகூறப்படுவது இதுபோன்ற ஃபிக்‌ஷன்களினால்தான் தவிரவே ஒரு சிந்தனையாளராகவோ, சினிமாக்காரராகவோ அவரை உணரமுடிவதில்லை.

முன்கதைச் சுருக்கத்துக்குப் பிறகு பாலகுமாரன் ஆன்மீகம் பக்கமாக செலுத்திய நாட்டம் அவருடைய பின்னடவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆன்மீகம் வென்றது. பிரியத்துக்குரிய பாலகுமாரன் தோற்றார்.

9 ஜூலை, 2010

என்ன செய்யலாம்?

’காதல்’ படத்தின் க்ளைமேக்ஸ் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

திண்டுக்கல் டிராஃபிக் சிக்னலில் ஒரு மனநோயாளி அலைந்து திரிந்துக் கொண்டிருப்பார். அவரைக் கண்ட ஒரு சாமானியர், அவருடைய பராமரிப்பில் மனநோயாளியைக் கொண்டு செல்வதாக படம் முடியும். மனநோய் அவருக்கு ஏற்படுவதற்கு காரணமான பெண்ணின் கணவர்தான் அந்த சாமானியர்.

படம் பார்த்தவர்கள் கைத்தட்டி அச்சாமானியரை பாராட்டினார்கள். கைத்தட்டிய லட்சக்கணக்கானவர்களில் நாமும் இருக்கக்கூடும். அன்று நாம் கைத்தட்டியது தவறோ என்று எண்ணக்கூடிய வகையில் ஒரு கட்டுரையையும், அக்கட்டுரை எழுத நேர்ந்ததற்கு ஆதார வினையான ஒரு அறிக்கையையும் நேற்று வாசிக்க நேர்ந்தது.

சாலைகளில் அனாதரவாகத் திரிபவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு மனநலம், உடல்நலம் சரிசெய்து பராமரிப்பது என்ற திட்டத்தை இரு மாதங்களுக்கு முன்பாக சென்னை மாநகராட்சி செயல்படுத்த தொடங்கியது.

நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வகையில் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு அவர்களில் சிலர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதில் ஏதோ ஒரு உலகமயச் செயல்பாடு இருப்பதாக அறிந்த உண்மை அறியும் குழு ஒன்று களத்தில் இறங்கி ‘உண்மையை’ அறிந்து ஒரு அறிக்கையினையும் வெளியிட்டிருக்கிறது. நாற்பதாண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட ‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்’ ஏன் தோல்வி அடைந்தது? என்ற நெடுநாள் கேள்விக்கான விடை இப்போதுதான் நமக்கு கிடைக்கிறது.

முதலில் நாம் முன்பு வாசித்த கட்டுரைக்கு வருவோம்.

“பிச்சைக்காரர்களை இல்லாமலாக்குவது என்ற நோக்கத்தையும் உண்மையிலேயே அது நிறைவேற்றுமானால், அதை ஒரு இன அழிப்பு (ethnic cleansing) என்கிற வகையில்தான் பார்க்க முடியும்” என்பதாக மாற்றுச்சிந்தனையோடு கட்டுரை ஆசிரியர் ரோஸாவஸந்த் குறிப்பிடுகிறார்.

நமக்கு உண்மையிலேயே புரியவில்லை. “பிச்சைக்காரன் என்பது ஒரு இனமா?” என்று சுந்தரராமசாமியின் ஜே.ஜே. தனக்குள்ளே அடிக்கடி ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டதைப்போல நாமே ஒருமுறை நம்மை கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சுமேரியம், திராவிடம், ஆரியம், எகிப்து கலாச்சாரம் மாதிரி இதற்கு ஏதேனும் பண்பாடு இருக்கிறதா என்றும் புரியவில்லை.

‘வறுமை கொடிது’ என்பதை பல நூற்றாண்டுகளாக உணர்ந்திருக்கிறோம். அதை ஒழிக்க வேண்டும் என்றும் வர்க்கம், சாதி, இத்யாதி வேறுபாடின்றி உறுதி கொள்கிறோம். வறுமையின் கீழான நிலையான பிச்சை எடுக்கும் நிலையை ஒழிப்பது எவ்வகையில் இனஒழிப்பு என்று நிஜமாகவே தெரியவில்லை. பொதுப்புத்தி, தனிப்புத்தி, மாற்றுப்புத்தி என்று எந்த புத்தியை பயன்படுத்தி யோசித்தாலும் எந்த நியாயமும் நமக்கு உடன்படவில்லை.

அடுத்ததாக, “அரசினால் மேற்கொள்ளப் படும் இப்படிப்பட்ட ஒரு பணி, நாய்களை இல்லாமலாக்கும் அதே மனநிலையுடனேயே நிகழ வாய்ப்பிருக்கிறது. ” என்றும் கட்டுரையாசிரியர் தொடர்கிறார். இந்த ஒப்புமையை எவ்வகையிலும் ஏற்க இயலாது. அதேநேரத்தில் கட்டுரையாசிரியர் இரவு 12 மணி வேளையில் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சாலையை கடக்க வேண்டும். கொலைவெறியோடு குதற ஓடிவரும் தெருநாய்களை எதிர்கொண்டுவிட்டு ‘நாய் ஒழிப்பு’ குறித்த தன்னுடைய சிந்தனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்கிறோம்.

நீங்கள் அடிக்கடி செய்தித்தாள்களில் இத்தலைப்பில் வாசித்திருக்கலாம். “புழுதிவாக்கத்தில் 15 பேரை கடித்த குதறிய தெருநாய்!”. இவ்வகையிலான தெருநாய்களை கட்டுப்படுத்த கட்டுரையாசிரியரிடம் ஏதேனும் சீரியத் திட்டம் இருக்கிறதாவென்று தெரியவில்லை. இப்போதைக்கு இந்நாய்களை பிடித்துச் சென்று நகராட்சி குடும்பக்கட்டுப்பாடு செய்து அனுப்புகிறது. அரசால் முடிந்த அதிகபட்ச ஜீவகாருண்யம் இதுதான்.

அடுத்ததாக பிச்சைக்காரர்களை உருவாக்கும் ‘மாஃபியா’ கும்பலை ஒழிக்கவேண்டும் என்று கட்டுரையாசிரியர் கோருகிறார். மிக நியாயமான கோரிக்கை. ஆனால் இப்படி ஒரு கும்பல் இருப்பது ஆதாரப்பூர்வமாக, வெளிப்படையாக தெரியாத நிலையில் போலிஸ் வெறுமனே காற்றில் கத்தியை சுழற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.

ஓக்கே, இந்த கட்டுரையை அலசியது போதும். ஆதார வினையான உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்கு வருவோம்.

மனநலம் சரியில்லாதவர்கள் என்று பிடிக்கப்பட்டவர்கள் பலரும் நல்ல மனநலத்தோடு இருக்கிறார்கள் என்பதே அக்குழு கொடுத்திருக்கும் அறிக்கையின் மையக்கருத்தாக எடுத்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒரு குழுவில் ஒரு மனநல மருத்துவர் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். மாறாக மனித உரிமைப் போராளிகள் இருவரும், முன்னாள் கல்வி முதல்வரும், மென்பொருள் பணியாளர் ஒருவரும் குழுவின் உறுப்பினராக இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால் அறிக்கையோ பிச்சைக்காரர்களைப் பிடித்து வந்த குழுவில் மனநல மருத்துவரோ, மருத்துவரோ இல்லை என்று குற்றம் சாட்டுகிறது. வேடிக்கையாக இல்லையா? மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் எத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் என்ற அடிப்படையை உண்மை அறியும் குழு அறியத் தவறி விட்டதா?

இக்குழு மூன்று நாட்களில் தொற்றுநொய் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம், மேல்பாக்கம் பிச்சைக்காரர்கள் அரசு பாதுகாப்பு முகாம் ஆகியவற்றிற்குச் சென்று விசாரித்திருப்பதாக அறிக்கையில் தெரியவருகிறது. அறிக்கையின் படி பிடித்துவரப்பட்டவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் இக்குழு விசாரணை நடத்தியிருக்கிறது. பெரிய எண்ணிக்கையிலான ஆட்களோடு முழுமையான விசாரணையை மூன்றே நாட்களில் செய்யக்கூடிய திறன் நிச்சயமாக நான்கு பேர் கொண்ட ஒரு குழுவுக்கு இருக்க வாய்ப்பேயில்லை என்பதை இங்கே ஒரு சவாலாகவே குறிப்பிடுகிறோம்.

ஒரு மனநல மருத்துவர் கூட இல்லாத ஒரு குழு, பிடித்து வரப்பட்டவர்கள் நல்ல மனநிலையோடு இருக்கிறார்கள் என்ற உறுதியை எப்படித் தரமுடியும்? கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இவர்களை in-patient ஆக சேர்த்துக்கொண்ட மருத்துவர்கள் எல்லாம் கோயிந்தசாமிகளா?

ஒரு மனநோயாளியைப் பார்த்து “நீங்கள் மனநோயாளியா?” என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? நம் குழு விசாரித்து அறிந்த ‘உண்மை’ இந்தவகையில்தான் இருக்கிறது.

சாலையில் அனாதரவாகத் திரியும் மனநோயாளிகளால் சமீபகாலமாக நகரில் தொடர்ந்து வந்த குற்றங்களின் அடிப்படையிலும் நாம் மாநகராட்சியின் இத்திட்டத்தைப் பார்க்க வேண்டும். வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகள் எரிக்கப்படுவது, வாட்ச்மேன்கள் தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்வது மாதிரியான குற்றங்களை கைதேர்ந்த குற்றவாளிகளா செய்வார்கள்?

இந்த உண்மை அறியும் குழு, திட்டம் செயல்படுவதற்கு முன்பாக சாலைகளில் அனாதரவாக திரிபவர்கள் பற்றி விசாரித்து, அவர்களது அவலங்களைப் போக்க ஏதேனும் பரிந்துரைகளை அரசுக்கு தந்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. மாறாக திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு பூதக்கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு நவசக்தியில் வந்த எண்ணிக்கை வேறு, மேயர் மேடையில் பேசும் எண்ணிக்கை வேறு என்று பிரச்சினையை வேறுமாதிரியாக ZOOM செய்து, திட்டத்தை முடக்க எதையாவது கிளப்பிவிடுகிறார்களா என்று தெரியவில்லை. பிடித்துவரப்படுபவர்களை மனநலக் காப்பகத்தில் சேர்க்கக்கூடாது என்று கோரிய வழக்கினை மாநகராட்சி சட்டப்பூர்வமாக கையாண்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று.

இத்திட்டத்தின் மூலம் காணாமல் போனவர்களாக அறியப்பட்டவர்கள் சிலர் தத்தம் இல்லங்களுக்கு திரும்பியிருக்கிறார்கள் போன்ற ஏராளமான ‘பாசிட்டிவ்’ கோணங்கள் எதையும் நாம் இக்கட்டுரையில் முன்வைக்கவில்லை. அவற்றை ஏற்கனவே ஊடகங்கள் பிரசுரித்து வந்து கொண்டிருக்கின்றன என்பதால்.

மேலும், சமூகநல வாரியத்தின் தலைவராக எழுத்தாளர் சல்மா இருக்கிறார். அவரது கோரிக்கையின் படியே இத்திட்டத்தை சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. எனவே இதற்குள் ஏதாவது ‘உள்ளரசியல்’ இருக்கிறாவென்றும் தெரியவில்லை.

மனித உரிமைகளுக்கு எதிரானது என்று குழு சொல்லும் மாநகராட்சியின் இத்திட்டம் தேவையில்லை என்றே வைத்துக் கொள்வோம். நம் முன் இருப்பது ஒரே ஒரு கேள்விதான். “சாலைகளில் அனாதரவாகத் திரியும் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநோயாளிகளை என்ன செய்யலாம்?” அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் குழுவின் அறிக்கையை வாசிப்பவர்களுக்கு தோன்றும்.

8 ஜூலை, 2010

செம்மொழியான தமிழ்மொழியே!


மிகச்சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த இதே கோவை வேறு. மேடும் பள்ளமுமான சாலைகள். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்களுக்கு மேலான மின்வெட்டு. ஒரு சர்வதேச மாநாடு அடுத்த மூன்று மாதங்களில் நடத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் அப்போது தெரியவில்லை. தூசும் தும்புமாக கொங்குமண்டலத்தின் தலைநகர் சோம்பிக் கிடந்தது. சொகுசுப் பேருந்து என்ற பெயரில் அப்போது நவீனப் பேருந்துகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு செம்மொழி மாநாடுதான் காரணம் என்று உள்ளூர்வாசிகள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். அடுத்ததாக மரங்கள் ஆங்காங்கே சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்டுக் கொண்டிருக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் அரசுக்கு எதிரான அதிருப்தி வெடித்தது.

இதெல்லாம் பழைய கதை. கடந்த 22ஆம் தேதி இரவு மின்னொளியில் கோவை நிஜமாகவே ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது. சுத்தமான சீரான அகலமான பளப்பள சாலைகள். நகருக்குள் சாரை சாரையாக வாகனங்களின் படையெடுப்பு. எங்கும் பரபரப்பு. உள்ளூர் வாசிகளுக்கு இப்போது மாநாடு குறித்து எந்த வருத்தமும் இல்லை. மாறாக குடும்பம் குடும்பமாக மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கத்துக்கு சென்று ஏற்பாடுகளை கண்டு மகிழ்கிறார்கள். ‘செம்மொழியான தமிழ்மொழியே’ என்று கட்டவுட் எழுத்துகளால் அலங்கரிக்கப்பட்ட முகப்புக்கு அருகில் நின்று செல்போனில் படமெடுத்துக் கொள்கிறார்கள். மாநாடு நடைபெறும் அவினாசி சாலையில் இரவு 12 மணிக்கு கூட கடுமையான போக்குவரத்து நெரிசல்.

கோவையின் இந்த திடீர் வனப்பு மிகக்குறுகிய காலத்தில் இரவுபகல் பாராத அரசு இயந்திரத்தின் உழைப்பால் நிகழ்ந்த அதிசயம். அரசு மனது வைத்தால் நரகத்தை கூட சொர்க்கமாக்கிவிட முடியும். நகரத்தை மாற்றுவது ரொம்ப ஈஸி. இதே வேகத்தில் கோவையைப் போல, தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களையும் பொலிவு பெறவைக்க அரசு முயற்சிக்கலாம். இல்லையேல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஊரில் செம்மொழி மாநாடு நடத்தச் சொல்லி அந்தந்த ஊர் மக்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாம்.

செம்மொழி மாநாடு குறித்த பெருத்த எதிர்ப்பார்ப்பு மக்களைவிட கலைஞருக்கே அதிகம் இருந்திருக்க வேண்டும். கோவைக்கு வந்ததுமே, உடனடியாக மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு, நேரடியாக மாநாட்டுப் பந்தல் போடப்பட்டிருக்கும் கொடிசியாவுக்கு வண்டியை விட சொன்னாராம். பந்தல் அலங்காரத்தை பகலில் பார்ப்பதைவிட இரவில் பார்க்க நன்றாக இருக்கும் என்று சமாதானப்படுத்தி, அவரை ஓய்வு எடுக்க வைத்திருக்கிறார்கள். இந்த ஆர்வமும், விறுவிறுப்பும் மாநாடு முடியும் வரை முதல்வருக்கு சற்றும் குறையவேயில்லை.

23ந்தேதி காலை கொடிசியா அரங்கம் பிரம்மாண்டமான தேன்கூடாக காட்சியளித்தது. வண்டுக்களாய் மக்கள் ஆயிரக்கணக்கில் மொய்க்கத் தொடங்கினார்கள். அரங்கத்துக்கு செல்லவேண்டிய சாலைமுகப்பில் பச்சைப்பசேலென காய்கனிகளையும், தென்னை ஓலையையும் பயன்படுத்தி வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டிருந்தது. அளவில் கோட்டையை ஒத்த மாநாட்டுப் பந்தல் பனைஓலைகளால் கம்பீரமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஜிகுஜிகு சரிகை பேப்பர் அலங்காரங்கள், முகலாயர் காலத்து பாணியில் அமைந்திருந்தது. பந்தல், சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம். அறுபத்தையாயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கக்கூடிய அளவுக்கு விஸ்தாரம். பார்வையாளர்களின் வசதியாக நூற்றுக் கணக்கில் ஆங்காங்கே எல்.சி.டி. திரைகள். எங்கும் எப்போதும் ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ உச்சஸ்தாயியில் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

காலை 9.30 மணியளவில் வி.ஐ.பி.க்கள் முன்வரிசையை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். மாநாட்டு நுழைவு வாயிலில் தள்ளு முள்ளு. நிதியமைச்சர் அன்பழகன், துணைமுதல்வர் ஸ்டாலின், ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா, துணை முதல்வர் ஸ்டாலின், முதல்வர் கலைஞர், குடியரசுத்தலைவர் பிரதீபாபாட்டீல் என்று வி.வி.ஐ.பி.க்களும், வா.செ.குழந்தைச்சாமி, அமெரிக்காவைச் சார்ந்த தமிழறிஞர் ஜார்ட் ஹார்ட், இலங்கையைச் சார்ந்த பேராசிரியர் சிவத்தம்பி, மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை விருதுபெற வந்திருந்த பின்லாந்து நாட்டைச்சார்ந்த அஸ்கோ பர்ப்போலா, என்று தமிழறிஞர்களும் மேடையை அலங்கரித்தார்கள். துவக்கவிழா சம்பிரதாயமான பேச்சுகளோடு மங்கலகரமாக தொடங்கியது. அமெரிக்க அறிஞர் ஹார்ட் அவ்வப்போது தமிழில் எதையாவது எடுத்துவிட கூட்டம் கைத்தட்டி அவரை ஊக்கப்படுத்தியது. குறிப்பாக பாரதியாரின் கவிதைகளை அவர் படிக்க விண்ணதிர கரகோஷம். குடியரசுத் தலைவர் வந்திருப்பதால் மாநாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகளை அமெரிக்க அறிஞரின் கொஞ்சுத்தமிழ் ரிலாக்ஸ் ஆக்கியது. இதே உற்சாகம் மாநாட்டுக்கு வெளியேவும் பரவ கூட்டம் முன்பைவிட வேகமாக மாநாட்டு அரங்குக்குள் நுழைய புயல்வேகத்தில் படையெடுத்தது. சிகப்பாடையில் டமடமவென்று செண்டைமேளம் அடித்துக்கொண்டே சேலத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்தது கண்ணைக் கவர்ந்த கலர்ஃபுல் காட்சி.

‘இது கட்சிமாநாடல்ல. அடக்கியே வாசிக்கவும்!’ என்று முன்பே கலைஞர் அறிக்கை மூலமாக எச்சரிக்கை விடுத்திருந்ததால் எங்கேயுமே கட்சிக்கொடி கண்ணில் படவில்லை. ஆனால் கருப்பு சிவப்பு கரைவேட்டிகளுக்கு பஞ்சமில்லை.

தமிழார்வலரான த.அரங்கநாதன் (77) ஓய்வுபெற்ற ஆசிரியர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். 1968ல் சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டவர். இடையில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்தபோது கலந்துகொள்ள இவருக்கு சாத்தியமாகவில்லை. இப்போது கோவைக்கு வந்திருந்தவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். “சீரணி அரங்கத்தில் அப்போது அண்ணாவால் கூட்டப்பட்ட கூட்டம் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. அன்று கண்ட அதே எழுச்சியை 42 ஆண்டுகள் கழித்து இன்றும்பார்க்கிறேன்” என்று பரவசப்பட்டார். அப்போது மாநாட்டுக்கு முன்பாக எம்.எல்.ஏ ஹாஸ்டல் திறக்கப்பட்டது, இப்போது புதிய சட்டமன்றம் திறக்கப்பட்டிருக்கிறது. அம்மாநாட்டில் அண்ணா, கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற பதத்தை கடற்கரை கூட்டத்தில் மேற்கோள் காட்டினாராம். இம்மாநாட்டில் அது ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தீம்சாங்கின் மையக்கருத்தாக அமைந்திருந்ததையும் ஒப்பிட்டார் அரங்கநாதன். என்ன, அப்போது கடற்கரைச் சாலையில் வரிசையாக தமிழ்ச்சான்றோருக்கு சிலை அமைக்கப்பட்டது. இப்போது அது இல்லை என்பதுதான் அவருக்கு இம்மாநாட்டில் இருக்கும் ஒரே ஒரு குறை.

துவக்கவிழாவின் முத்தாய்ப்பாக ’இனியவை நாற்பது’ வாகன அணிவகுப்பு, மாலை 4 மணிக்கு வ.உ.சி. பூங்காவில் தொடங்கியது. சுமார் 9 கிலோ மீட்டர் நீளம் பயணித்து மாநாட்டு அரங்கத்தை அடைவதாக ஏற்பாடு. கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என்று கலைஞர்கள் கலக்கலாக திறமையைக் காட்ட கூட்டம் கும்மியது. லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த அணிவகுப்பில், தமிழரின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையிலான 40 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நீந்தி அணிவகுப்பு, திட்டமிடப்பட்ட தூரத்தைக் கடக்க நான்கு மணி நேரத்துக்கும் மேலானது. லட்சுமிமில் அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்புமேடையில் குடியரசுத்தலைவர், ஆளுனர், முதல்வர் ஆகியோர் பார்வையிட்டனர். முதல்வர் வரும்போது கூட்டம் ஆர்ப்பரிக்க, குஷியான முதல்வர், கூட்டத்துக்கு ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வாணவேடிக்கைகள் வண்ணங்களை வானில் இறைக்க வண்ணமயமாகத் தொடங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

மாநாட்டின் இரண்டாம் நாள், ஆய்வரங்கங்கள், கண்காட்சிகள் தொடங்கப்பட்டதால் மாநாட்டுக்கு கொஞ்சம் சீரியஸ் தன்மை வந்து உட்கார்ந்துகொண்டது. மாநாட்டுப் பந்தலுக்கு பின்புறமாக அமைந்திருக்கும் கொடிசியா வளாகத்தில் இருக்கும் அரங்குகளில் 50க்கும் மேற்பட்ட தளங்களில், இருநூறுக்கும் மேற்பட்ட அமர்வுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்களால் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படத் தொடங்கின. ஆய்வரங்கங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அறிஞர்களும், நோக்கர்களும் மட்டுமே பார்வையிடலாம் என்று சொல்லப்பட்டதால், பார்வையாளர் பகுதி காத்தாடத் தொடங்கியது. சில அரங்கங்களில் மேடையில் அமர்ந்திருந்தவர்களே, பார்வையாளர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். செம்மொழி மாநாட்டையொட்டி, உத்தமம் (இன்ஃபிட்) அமைப்பினரால் நடத்தப்படும் இணைய மாநாட்டு அரங்குகளிலும் இதுதான் நிலைமை. அறிஞர்களைப் பொறுத்தவரை மேடையில் அமர மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். சக அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்க விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆய்வரங்கங்களில் பகலில் ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டாலும், மாலை வேலைகளில் நவீன நாடகங்கள், நாட்டியங்கள் என்று அறிஞர்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் இருந்தது.

ஆய்வரங்கங்களும், இணைய மாநாட்டு அரங்கங்களும் ஈயடிக்க அதே நேரத்தில் திறக்கப்பட்ட கண்காட்சிகள் களைகட்டத் தொடங்கின. பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தலுக்கு வலப்புறமாக இணையதளக் கண்காட்சி மற்றும் பொதுக் கண்காட்சி மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. மாநாட்டுப் பந்தலுக்கு நேரெதிராக சாலையின் மறுபக்கத்தில் தென்னிந்திய பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக புத்தகக்காட்சியும் நடந்தது. பொதுக்கண்காட்சிக்கு பின்புறம் கைவினைக் கண்காட்சி.

கண்காட்சிகளைப் பார்க்க, மூன்று நாட்களும் மக்களிடையே பலத்த போட்டாபோட்டி. புத்தகக் காட்சியை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த ‘இனியவை நாற்பது’ வாகனங்களை சுற்றிப் பார்க்கத் தொடங்கினார்கள். இப்போது எல்லோரிடமும் கேமிராசெல்போன் இருப்பதால் கொடிசியா, கோடிக்கணக்கான முறை படமெடுக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. கண்காட்சி நுழைவு வரிசை ஒருக்கட்டத்தில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டது என்றால், மக்களின் காட்சி ஆர்வத்தை நீங்கள் அளவிட்டுக் கொள்ளலாம். மாநாட்டுக்கு வந்தவர்கள் எதையாவது பார்த்தே ஆகவேண்டும் என்ற அதீத ஆர்வத்தில், பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஊடகமையத்தையும் சுற்றிப் பார்க்க ஆயிரக்கணக்கில் கிளம்பி வந்துவிட்டார்கள். ஆய்வரங்கங்களை பார்வையிட தங்களை அனுமதிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குறைபட்டுக் கொண்டார்கள். மாநாடு முடியும்வரை கண்காட்சிகளில் திரண்ட கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர, கொஞ்சமும் குறைந்தபாடில்லை. மாநாடு முடிந்தபிறகும் பத்துநாட்களுக்கு கண்காட்சிகள் நீடிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு, கண்காட்சியை ஒருமாதத்துக்கு நீடிக்கலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கானோர் முற்றுகையிட்டாலும் போலிஸ் ஆச்சரியகரமான வகையில் மென்மையாக நடந்துகொண்டார்கள். ஓரிடத்தில் கூட தடியடி நடக்கவில்லை என்பது குறிப்பிடவேண்டிய முக்கியமான விஷயம். கோவை கமிஷனர் சைலேந்திரபாபு, இப்போது அந்நகர மக்களுக்கு ஹீரோ. அவரிடம் கைகுலுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு சிறுவன் ‘ஆட்டோக்ராப் ப்ளீஸ்’ என்று கத்தியபடியே அவரது ஜீப்புக்குப் பின்னால் ஓடுகிறான். எங்கேயாவது கூட்டம் கூடினால் உத்தரவுகள் பிறப்பிப்பதை விடுத்து, தானே நேரடியாக களமிறங்கி சரி செய்கிறார். வாகன அணிவகுப்பின் போது போலிஸார் திணறிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென வந்த கமிஷனர், ரோட்டுக்கு நடுவில் நின்று கூட்டத்தை கையாலேயே சரிசெய்தார்.

இணையதளக் கண்காட்சியில் இணையம், கணினி தொடர்பான ஸ்டால்கள் நிறைய இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு ஸ்டாலாக நின்று கவனித்த மக்கள், இலவசமாக ‘சிடி’ ஏதாவது தருவீர்களா என்று கேட்டு, ஸ்டாலில் நின்றிருந்தவர்களை டென்ஷன் ஆக்கிக் கொண்டிருந்தார்கள். முன்னதாக யாரோ ஒரு புண்ணியவான், ஒரு லட்சம் (?) எழுத்துருக்களை (Font) கொண்ட சிடி இணையத்தள அரங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது என்று புரளி கிளப்பி, அது குறுஞ்செய்திகளில் வேகவேகமாக மக்களுக்கு பரவிக்கொண்டிருந்தது. கணினி என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் அந்த சிடியை வாங்க ஆர்வம் காட்டினார்கள். தமிழிணையப் பயிலரங்கு ஒன்றும் ‘லைவ்’வாக நடைபெற்றது. கணினியில் தமிழ், தமிழ் விசைப்பலகை, தமிழ் யூனிகோடு, விக்கிப்பீடியா, வலைப்பதிவு, விக்‌ஷனரி என்று கணினிதொடர்பான ஏகப்பட்ட விஷயங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக தன்னார்வலர்களால் கற்றுத்தரப்பட்டது. கணிப்பொறி தொடர்பான சொல்களுக்கு மு.சிவலிங்கம் என்பவரால் கலைச்சொல் திரட்டு ஒன்று தமிழில் உருவாக்கப்பட்டு பொதுமக்களின் வசதிக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. DVDஐ தமிழில் பல்திறன்வட்டு என்று சொல்ல வேண்டுமாம்.

மாநாட்டின் ஹைலைட் பொதுக்கண்காட்சிதான். கலை இயக்குனர் தோட்டாதரணியின் கைவண்ணத்தில் அரங்கத்தின் அழகு பார்வையாளர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. ஓலைச்சுவடிகள் மற்றும் பழைய அரியநூல்கள் நிறைய இடம்பெற்றிருந்தன. 1608ல் அச்சிடப்பட்ட பரிசுத்த வேதாகமம், 1894ல் அச்சிடப்பட்ட புறநானூறு ஆகியவை புத்தக ஆர்வலர்களை புல்லரிக்க வைத்தது. புதிய கற்கால ஆயுதங்கள், தொல்மாந்தர் வாழ்ந்த குகை மாதிரி, தமிழகத்தில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்ட ஈமப்பேழை, தாழி போன்ற அகழாய்வுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆதிச்சநல்லூர் அரும்பொருட்கள், சங்ககால மட்பாண்டங்கள் ஆகியவை கவனத்தை கவர்ந்தன.

சங்க இலக்கியங்களில் வனம் குறித்த வெளிப்பாடு, மறவன்புலவு சச்சிதானந்தம் தொகுத்த ‘உலகெங்கும் தமிழரின் வரலாற்றுப் பயணங்கள்’, பள்ளி மாணவர்கள் இயக்கும் ஒலி-ஒளி கண்காட்சியென்று தமிழரின் வாழ்வு, பழம்பெருமை பேசத்தக்க அம்சங்கள் கண்காட்சியை சுவாரஸ்யப்படுத்தியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் இங்கே ’செம்மொழித் தமிழில் விண்வெளி’ என்று ஸ்டால் போட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. சங்க இலக்கியத்தில் வெளிப்பட்ட பல கோட்பாடுகளை இன்று இஸ்ரோ நிரூபித்து வருகிறது என்றார் அங்கிருந்த விஞ்ஞானியான ஆர்.எஸ்.கண்ணு. உலகமே தட்டையான வடிவத்தில் இருந்ததாக உலகம் நம்பிக் கொண்டிருக்க, புறநானூற்றிலேயே கோள்கள் உருண்டையான வடிவம் கொண்டவை என்று எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். “வானை யளப்போம் கடல் மீனையளப்போம், சந்திரமண்டலத்தை கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் இலக்கியக் கனவை சந்திராயன் திட்டம் மூலமாக நிறைவேற்றியிருப்பதாக ஒரு அறிவிப்பும் அங்கிருக்கிறது. ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களின் மாதிரிகள் தத்ரூபமாக இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

புத்தகக்காட்சி விற்பனை குறித்து புதிய தலைமுறையிடம் திருப்தி தெரிவித்தார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்தின் தலைவரான சொக்கலிங்கம். “விற்பனை நல்லமுறையில் நடக்கிறது. செம்மொழி மாநாட்டால் மக்களுக்கும் மகிழ்ச்சி, பதிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி” என்றார். 35000 சதுர அடி பரப்பளவில், 146 ஸ்டால்கள். ஒரு லட்சம் தலைப்புகளில் சங்க இலக்கியத்திலிருந்து, நவீன இலக்கியம் வரை புத்தகங்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டுத் தமிழர்கள் புத்தகங்கள் வாங்க மிகுந்த ஆர்வம் செலுத்தினார்கள்.

கோவையில் இப்போது ‘தமிழ்’ நல்ல விற்பனைப் பொருள். தமிழில் வாசகங்கள் அச்சிடப்பட்ட டீ-ஷர்ட்டுகள் பரபரப்பாக விற்பனையாகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த ’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத் தொண்டர் ஒருவர் மாநாட்டுக்காக ஸ்பெஷலாக வந்து. கொஞ்சுத்தமிழ் பேசி தமிழில் ‘பகவத்கீதை’ விற்கிறார். பகுத்தறிவுவாதிகள் சிலரும் கூட வேறு வழியின்றி இவரது தமிழுக்கு அடிமையாகி ‘பகவத்கீதை’ வாங்கிச் செல்கிறார்கள். இவரது பெயரைக் கேட்டால் ‘உம்பேரும் கிருஷ்ணா, எம்பேரும் கிருஷ்ணா. உலகமே கிருஷ்ணார்ப்பம்’ என்று தத்துவம் பேசுகிறார்.

கண்காட்சிகள், அணிவகுப்பு வாகனங்கள் என்று மக்களின் கண்ணுக்கு விருந்து ஒரு பக்கம் படைக்கப்பட, இன்னொரு புறம் மாநாட்டுப் பந்தலில் தினமும் நடைபெற்ற கருத்தரங்குகள், கவியரங்குகள், நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் மூலமாக தலைவாழை விருந்து பரிமாறப்பட்டது. என்ன? எல்லாம் கலைஞர்மயம். எல்லாவற்றிலும் கொஞ்சமென்ன நிறையவே ‘கலைஞர் டோஸ்’ அதிகம். எல்லாப் புகழும் கலைஞருக்கே என்று கவிஞர்களும், அறிஞர்களும் தொடர்ச்சியாக புகழ்மாலை சூட்டிக் கொண்டிருக்க, ஒருக்கட்டத்தில் எதையும் தாங்கும் இதயம் கொண்ட கலைஞரே நொந்துப்போனார். அவர் தலைமையில் நடந்த ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ சிறப்புக் கருத்தரங்கில் “நாம் தாய்த் தமிழுக்காக இங்கே திரண்டிருக்கிறோம். என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?” என்று ஒரு பேச்சாளரின் இடையே குறுக்கிட்டு, தன் ஆட்சேபத்தை தெரிவித்தார்.

மலேசியாவில் இருந்து மலேசிய எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 250 பேர் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். “இம்மாநாட்டால் என்ன பயன் என்பதை உடனடியாக உணரமுடியாது. இதன் பயன் எதிர்காலத்தில் உணரப்படும். தமிழர்களுக்கு நம்பிக்கை தரும் மாநாடு இது. உலகமயமாக்கலால் அடையாளங்கள் மறையும் சூழலில், நம்முடைய தமிழ் அடையாளத்தை அழுத்தமாக முத்திரை பதிக்க இம்மாநாடு அவசியப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் தமிழ் தொடர்பாக மலேசியாவில் மாநாடுகள் நடத்தபோதெல்லாம், தமிழ் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது” என்றார் அவ்வமைப்பின் தலைவரான ராஜேந்திரன்.

மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் சுதர்சனம் திடீரென சுகவீனம் அடைந்துவிட, செய்தியறிந்த முதல்வர் மருத்துவமனைக்கு உடனே அமைச்சர்களோடு விரைந்தார். அவர் நலம் பெற்று வருகிறார் என்று மருத்துவர்கள் எடுத்துச் சொன்னபிறகே திருப்தியோடு மாநாட்டுக்கு திரும்பினார். ஒருநாள் திடீரென அஸ்கோ பர்போலா சிறப்பு ஆய்வுரை நடத்திய அரங்கத்துக்கு பார்வையாளராக சென்று அமர்ந்தார். கவியரங்கு ஒன்றின் தொடக்கத்தின் போதும் சடாரென பந்தலுக்குள் வந்தார். முதல்வர் எப்போது எங்கே இருப்பார் என்று தெரியாமல் காவல்துறையினர் ஐந்து நாட்களை திணறலாகவே கழித்தார்கள். கிட்டத்தட்ட எல்லா நாளும், எங்காவது இருந்துகொண்டே இருந்தார் கலைஞர்.

மக்களின் ஏகோபித்த ஆர்வத்தோடு கூடிய பங்கேற்பு, அரசின் கச்சிதமான திட்டமிடலால் திருவிழாவாக திறமையாக நடத்தப்பட்டு முடிந்தது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. ஒவ்வொரு நகரத்துக்கும் ஏதோ ஒரு திருவிழா வருடாந்திரமாக நடக்கும். கோவைக்கு சொல்லிக்கொள்ளும்படி அப்படி ஏதுமில்லை. அந்த நெடுநாள் ஏக்கத்தை கோவைவாசிகளுக்கு தற்காலிகமாக இம்மாநாடு போக்கியிருக்கிறது. மாநாட்டில் பேசப்பட்டவைகள், ஆய்வுகள், அறிக்கைகள் - இவற்றின் விளைவாக தமிழின் வளர்ச்சி.. இதையெல்லாம் உடனடியாக நம்மால் கணித்துவிட முடியாது. போகப்போகத்தான் தெரியும். விதை விதைக்கப்பட்டிருக்கிறது. செடியாகி, மரமாகி, பூத்து, காய்க்குமென்று நம்புவோம்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

இவர்தான் பெரியார்!

பூம்புகார் நிறுவனத்தால் உருவாக்கப்படும் பெரியார் சிலைகள்தான் சமத்துவபுரங்களில் நிறுவப்படுகிறது. அங்கே நிறுவப்படும் சிலைகளின் மாதிரி ஒன்று கைவினை கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மார்பளவு இருக்கும் கம்பீரமான சிலை இது. பெரியாரை சிலர் தொட்டுக் கும்பிட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சி.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

செம்மொழி மாநாட்டில் திருக்குறளரசி!

டாக்டர் அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒன்றரை வயது குழந்தை ஒன்று திருக்குறள் ஒப்புவிப்பதை கேள்விப்பட்டு, பாராட்டுக்கடிதம் அனுப்பியிருந்தார். பின்னர் தமிழகம் வரும்போது அக்குழந்தையை சந்திக்கவும் செய்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட அக்குழந்தை மதுராந்தகிக்கு இப்போது 9 வயதாகிறது. செம்மொழி மாநாட்டுக்கு வந்திருக்கிறார். இடையில் 6 விருதுகளும், 70 மேடைகளுமென வளர்ந்துவிட்ட மதுராந்தகி, இப்போது சதுரங்கத்தில் மாநில அளவிலான விளையாட்டு வீராங்கனை. மதுராந்தகிக்கு திருக்குறள் தலைகீழ் மனப்பாடம். குறளில் எந்த கேள்வியை கேட்டாலும் டக்கென்று பதிலளிக்கிறார். ஏற்கனவே ஒருமுறை முதல்வரை சந்தித்துப் பேசியிருக்கும் மதுராந்தகி, மாநாடு முடிந்ததும் மீண்டும் முதல்வரை சந்தித்துப் பேச நேரம் கேட்டிருக்கிறார்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 3 :

அரிசிக்குள் அறம், பொருள், இன்பம்!

மாநாடுகள் என்றாலே சாதனையாளர்களுக்கு கொண்டாட்டம்தான். கோவை உப்பிலிபாளையத்தைச் சார்ந்த எம்.மனோகரன் சுமார் 11,000 அரிசிகளில் 1,330 குறள்களையும் எழுதி, அவற்றை ‘கொலாஜ்’ முறையில் ஓவியம் ஆக்கியிருக்கிறார். இந்த ஓவியம் மாநாடு முடிந்தபின் கலைஞருக்கு பரிசளிக்கப்படும் என்றார் மனோகரன். அரிசியில் குறள் எழுதப்பட்டிருப்பதை பூதக்கண்ணாடி கொண்டு வாசிக்க முடிகிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :

மணல் சிற்பம்!

பொதுக் கண்காட்சியையொட்டி பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘கடல் கடந்த கன்னித்தமிழ்’ மணற்சிற்பம் பலரையும் கவருகிறது. 8 முதல் 11 வயது வரை இருக்கும் தேனியைச் சேர்ந்த 20 பள்ளி மாணவர்கள், இரண்டே நாட்களில் இதை உருவாக்கியிருக்கிறார்கள்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 5 :

காய், கனிச் சிற்பம்!

தேனியைச் சேர்ந்த இளைஞரான இளஞ்செழியன் ஒரு சிற்பி. என்ன சிலையை செதுக்க இவர் கல்லை தேடுவதில்லை. காய்கனிகளே போதும். வரிசையாக இவர் செதுக்கி, கண்காட்சியாக வைத்திருக்கும் தலைவர்களின் சிலைகள் செம்மொழி மாநாட்டின் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன். 1330 சாத்துக்குடிப் பழங்களை அடுக்கி, திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கியிருக்கிறார். ஏரியல் வியூவில் பார்ப்பவர்கள் அசந்துப் போகிறார்கள்.


(நன்றி : புதிய தலைமுறை)

5 ஜூலை, 2010

தமிழருக்காக துடித்த இதயம்!

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளைக்கு ஒரு பழக்கம். தினம் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு காலணா கொடுப்பார். காலணா என்பது 80 வருடங்களுக்கு முன்பாக கொஞ்சம் பெரிய தொகைதான். நான்காவது படிக்கும் அரங்கநாதனின் லட்சியம் தினம் ஒரு காலணாவை சேதுப்பிள்ளையிடம் பெறுவதாக இருந்தது.


இவ்வாறாக விளையாட்டாக குறளை வாசிக்க ஆரம்பித்த அச்சிறுப்பிள்ளை, பிற்காலத்தில் தனது வாழ்க்கையையே குறள் காட்டிய பாதையில் அமைத்துக் கொண்டு நாடெங்கும் பிரபலமானார். குன்றக்குடி அடிகளார் என்று சொன்னால் இன்று குழந்தைகளுக்கு கூடத்தெரியும்.


ஐம்பதுகளில் குன்றக்குடி மடத்தின் பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்ட காலக்கட்டம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க காலக்கட்டம். இந்து சமயம் மீதான தாக்குதல்கள் இறைமறுப்புக் கொள்கையின் பால் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. தமிழின்றி சமய வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அடிகளார், சமயத்தையும் தமிழையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். சமயம், சமுதாயம் இரண்டுக்குமாக தன் பணிகளை சரிசமமாக பகிர்ந்தளித்தார்.


உலகம் முழுவதும் தமிழகத்தின் தூதுவராகச் சென்றார். தமிழ் பரப்பினார். மேடைப் பேச்சில் மட்டுமன்றி, எழுத்திலும் அடிகளாரின் கைவண்ணம் சிறப்பானது. திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு என்று குறள்தொடர்பான ஏராளமான நூல்களை எழுதினார். ஆங்கிலத்திலும் திருக்குறள் குறித்து நூல் எழுதியிருக்கிறார். ஏராளமான சமயநூல்களும், சிலம்புநெறி, கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் என்று இலக்கிய ஆய்வு நூல்களும் உண்டு. பாரதியுக சந்தி, பாரதிதாசனின் உலகம் என்று சமகால நூல்களையும் படைத்திருக்கிறார்.


நூல்களை எழுதியதோடு மட்டுமன்றி மணிமொழி, தமிழகம், அருளோசை என்று இதழ்களையும் நடத்தியிருக்கிறார். எதிர்ப்புகளையும் மீறி தமிழ் தொடர்பான அனைத்துப் போராட்டங்களிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் முன்னின்று போராடிய பெருமை இந்த சமயத்தலைவருக்கு உண்டு.


சமூகத்துக்கும், சமயத்துக்கும், தமிழுக்கும் காலமெல்லாம் போராடிய அடிகளாரின் இதயம் 1995 ஏப்ரல் 15 அன்று தன்னுடைய துடிப்பை நிறுத்திக் கொண்டது.





வ.உ.சி. என்றாலே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், சுதந்திரப்போராளி. அப்புறம்?
அவர் ஒரு தமிழறிஞரும் கூட என்பதை ஏனோ வரலாறு ரகசியமாகவே வைத்திருக்கிறது. ஒரு படைப்பாளியாக மொத்தம் 16 நூல்களை எழுதியிருக்கிறார். மேடைத்தமிழ் என்று இன்று வழங்கப்படுகிற தமிழுக்கு அவரே முன்னோடி.
அகமே புறம், மனம் போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்று பலதரப்பட்ட வாழ்வியல் தத்துவங்களை ஆங்கில மூலங்களிலிருந்து எளிமையான தமிழ் நடையில் எழுதியவர். தமிழில் இன்று பிரபலமாக இருக்கும் வாழ்வியல் நூல்களுக்கு இந்நூல்களை முன்னோடி எனலாம்.
திருக்குறள் மீது பெரியளவிலான மரியாதையும், பற்றும் வ.உ.சி.க்கு இருந்து வந்தது. ராஜாஜியே கூட வ.உ.சி.யிடம் திருக்குறள் பயின்றதாக குறிப்புகள் இருக்கிறது. திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையை முதன்முதலாக பதிப்பித்தவரே இவர்தான். வ.உ.சி.யும் கூட திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். தன்னை திருக்குறள் அன்பன் என்றே அவர் சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டிருக்கிறார்.
சிறையில் இருந்தபோது தன்னுடைய சுயசரிதத்தை கவிதை வடிவில் வடித்தார். அனேகமாக தமிழில் கவிதை வடிவில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை அது. மரபுக்கவிதைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழ் செய்யுள்கள் பலவும் அவருக்கு மனப்பாடம்.
கண்ணனூர் சிறையில் அவர் இருந்தபோது தன்னுடைய சக கைதிகளுக்கு தமிழ் நீதிநூல்களை போதித்தார். இவற்றை பாடல்களாக எழுதிக் கொடுத்தால் மனப்பாடம் செய்து திரும்ப திரும்ப வாசிக்க முடியும் என்று சில கைதிகள் அபிப்ராயப்பட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று நன்னூல், நீதிமுறை ஆகிய நூல்களிலிருக்கும் கருத்துகளை 100 வெண்பாக்களாக, பத்து அதிகாரங்களில் எழுதினார். இது ‘மெய்யறிவு என்ற பெயரில் நூல் ஆனது.
ஒரு போராளியாக அறியப்பட்டதால் அவரது தமிழறிவும், தமிழ்ச்சேவையும் பரவலாக அறியப்படவில்லை. வ.உ.சி. தொகுத்த, எழுதிய நூல்களை திரும்ப பதிப்பித்து அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது இன்றைய தமிழ்ப் பதிப்பாளர்களின் கடமையாகும்.

3 ஜூலை, 2010

எக்ஸ்க்யூஸ் மீ! ஒரு கப் காபி சாப்பிடலாமா?


‘தி கேப்’ என்று அழைக்கப்படும் அந்த மலைமுகடு ஆஸ்திரேலியாவில் ரொம்ப ஃபேமஸ். தற்கொலை செய்துக்கொள்ளும் மகாஜனங்கள் கடைசியாக தரிசிக்கும் புண்ணியஸ்தலம். கிட்டத்தட்ட நம்மூர் ‘சூசைட் பாயிண்ட்’ மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்.

புன்னகை மன்னன் கமல் சாடையில் ஒரு இளைஞன் கண்களில் கண்ணீரோடு குதிக்கத் தயாராகிறான். இளைஞன் என்பதால் தற்கொலைக்கான காரணம் காதல் தோல்வியாக தானிருக்கும். குதிக்க தயக்கம். பெற்றோர்களின் நினைவு காரணமாக இருக்கலாம். இருப்பினும் சோகம் மனதை அப்ப நீச்சல் வீரனின் பாணியில் கைகளை பின்னுக்கு இழுத்து கால்களைத் தூக்க முயற்சிக்க...

“எக்ஸ்க்யூஸ் மீ! என்னோடு ஒரு கப் காபி சாப்பிடமுடியுமா?” ஒரு வயதான குரல் கேட்கிறது.

ஏதோ சினிமாவில் வரும் இறுதிக்காட்சி இதுவென்று நினைத்துவிடாதீர்கள். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக சிட்னி துறைமுகத்தின் நுழைவாயிலான ‘தி கேப்’ பகுதியில் இக்காட்சி சகஜம். சராசரியாக வாரத்துக்கு ஒருவர் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். காப்பி சாப்பிட அழைக்கும் பெரியவரின் பெயர் டான் ரிட்சீ. இப்போது 84 வயதாகிறது. அந்த ஊர் எல்.ஐ.சி.யில் வேலை பார்த்தவராம். எனவேதான் உயிரின் அருமை அவருக்கு தெரிந்திருக்கிறது. அந்த தற்கொலை முகடுக்கு அருகிலேயே ரிட்சீயின் வீடு அமைந்திருக்கிறது.

“அவருடைய சிரிப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. புன்னகையோடு அவர் பேசிய கனிவான மொழிதான் இன்னும் என்னை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது” என்கிறார் கெவின் ஹைன்ஸ். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சித்து ரிட்சீயால் காப்பாற்றப்பட்டவர்.

ரிட்சீ கணக்கில் கொஞ்சம் வீக். எனவே எவ்வளவு பேரை காப்பாற்றியிருக்கிறார் என்று துல்லியமான கணக்கெடுப்பு எதுவும் அவரிடம் இல்லை. 160க்கும் மேற்பட்ட உயிர்களை அவர் இம்மாதிரியாக மறுஜென்மம் எடுக்க வைத்திருக்கிறார் என்று அக்கம் பக்கத்தவர்கள் சொல்கிறார்கள்.

காப்பி சாப்பிடும் அந்த மூன்று நிமிட அவகாசம் போதும். எத்தகைய சோகமும் நீரில் உப்பு கொட்டியதைப் போல கரைந்துவிடும். தனது மன அழுத்தங்களை சூடான காபி அருந்தியபடியே, முழுமையான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரியவரிடம் கொட்டினால் மனம் லேசாகிவிடாதா என்ன? – இதுதான் டான் ரிட்சீயின் டெக்னிக்.

“தற்கொலை எண்ணத்தோடு வருபவர்களிடம் மிகக்கவனமாக பேசவேண்டும். குதிக்காதே என்று கத்தினால் உடனே குதித்துவிடுவார்கள். சிலர் தத்துவங்கள் பேசுவார்கள். சிலர் நம்மை திட்டக்கூட செய்வார்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் நிதானமாகப் பேசுவதின் மூலம், அவர்களது தற்கொலை உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். சிலர் நீண்டநேரமாக விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் ஜன்னலில் இருந்து எங்களை பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவி, போலிசாருக்கு போன் செய்துவிடுவாள். போலிஸை பார்க்கும் யாரும் குதித்து விடுவதில்லை” என்கிறார் ரிட்சீ. இவரது மனைவி மோயாவும் இந்த தற்கொலை தடுப்புப் பணியில் இவருக்கு பெரும் உதவியாக இருக்கிறார்.

“இவ்வளவு உயிர்களை காக்கக்கூடிய இந்த அருமையான வாழ்வு எல்லோருக்கும் கிடைப்பது அரிதில்லையா?” என்று கேட்கிறது இந்த ஜோடி.

இப்பணியில் ஆபத்தும் இல்லாமல் இல்லை. ஒருமுறை இதுபோல ஒரு இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தபோது, திடீரென அவள் இவரையும் கட்டிக்கொண்டு குதிக்க முயற்சித்திருக்கிறாள். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ரிட்சீ உயிர் தப்பினார்.

சோகம் என்னவென்றால் டான் ரிட்சீ இப்போது கேன்சரோடு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். “என்னுடைய மனநிலையோடு ஒருவன் கூடவா இந்த உலகில் இல்லாமல் போவான்? என் காலத்துக்குப் பிறகு அவன் வந்து இந்த தற்கொலைத் தடுப்புப் பணியை திறம்பட செய்வான்!” என்று நம்பிக்கையோடு இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த 84 வயது இளைஞர்.

2 ஜூலை, 2010

ஒரு கோடி ரூபாய் நூலகம்!

“ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அரசுப்பள்ளியில், அதன் முன்னாள் மாணவர்கள் நூலகம் அமைத்திருக்கிறார்கள்!” என்று நாம் கேள்விப்பட்ட செய்தியே ஆச்சரியமளித்தது. ‘அவ்வளவு பணத்தில் எவ்வளவோ செய்யலாமே, ஏன் குறிப்பாக நூலகம்?’ என்ற கேள்வியோடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்குள் நுழைந்தோம்.

பேரூராட்சி நிர்வாகத்திலிருக்கும் ஊத்தங்கரையின் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தால் ஒரு போர்டு வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வூரின் இளைஞர்கள் சிலர் இணைந்து ‘ஊத்தங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை’ ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஊர்வளர்ச்சிக்கு அரசையே எதிர்பாராமல், நாமாகவே நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம், வாருங்கள் என்று மக்களை அழைக்கிறது அந்த போர்டு. வேறு சில தெருமுனைகளிலும் இதே போர்டை திரும்ப, திரும்ப பார்க்க முடிகிறது.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி விசாலமான, தூய்மையான வளாகத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தூய்மையான பள்ளி என்று சான்றளிக்கப்பட்டு, யூனிசெஃப் அமைப்பின் தங்க மெடலை வென்றிருக்கிறது. 1957ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய பொன்விழாவை நிறைவுசெய்திருக்கிறது.

சுமார் இரண்டாயிரத்து ஐநூறு மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல தேர்ச்சியைப் பெற்றுவருவதால் அக்கம், பக்கம் ஊர்களில் இருப்பவர்களும் தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இதனால் மாணவர் எண்ணிக்கை அதிகமாகி மேனிலை வகுப்புகளில் ஒருவகுப்புக்கு தலா நூறு பேர் படிக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

நாற்பத்தி ஒன்பது ஆசிரியர்கள் தேவைப்படும் இப்பள்ளியில், ஆசிரியர் பணிக்கு ஐந்து காலியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால் ஆங்கிலம், தமிழ் மொழி வகுப்புகளுக்கு இரண்டு மூன்று வகுப்புகளை சேர்த்து நடத்த வேண்டியிருக்கிறது. முன்னூறு மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் வகுப்பெடுப்பது என்பது கொஞ்சம் சோதனையான விஷயம்தான்.

ஆனாலும், சிறப்பான கற்பித்தலின் மூலமாக கடந்தாண்டு பத்தாம் வகுப்பில் எண்பத்தியெட்டு சதவிகிதமும், பண்ணிரண்டாம் வகுப்பில் எண்பத்தியிரண்டு சதவிகித தேர்ச்சியையும் எட்டியிருக்கிறோம் என்று பெருமிதப்படுகிறார் தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி.

இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் இதுவரை நான்கு முறை நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார்கள். இங்கே படித்த முன்னாள் மாணவர்களில் ஒருவர் அமெரிக்காவின் ஹார்வர்டு யுனிவர்சிட்டியிலும், இன்னொரு மாணவர் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும் விஞ்ஞானிகளாகப் பணிபுரிகிறார்கள் என்று கூறி பெருமைப்படுகிறார்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. இங்கே செயல்படும் இக்கழகம் மாவட்டத்தில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் பெற்றிருக்கிறது. கற்பித்தலில் ஆசிரியர்களும், கற்றுக்கொள்வதில் மாணவர்களும் சிறப்பாக செயல்படுவதால் பெருமைக்கு மேல் பெருமையாக வந்து சேர்கிறது ஊத்தங்கரை அரசுப் பள்ளிக்கு.

விளையாட்டிலும் மாணவர்கள் கில்லி. மாநில அளவிலான சிறப்பான பங்கேற்பு இருக்கிறது. நான்கு பேர் தேசிய அளவில் மாநிலத்துக்காக கோ-கோ விளையாடுகிறார்கள். கோ-கோவில் தமிழக அணிக்கு கேப்டனாக இருக்கும் ரஞ்சித்குமார், இப்பள்ளியில் +1 படிக்கிறார். இந்திய அளவில் முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்னர் கோ-கோவில் தமிழகத்துக்கு தங்கம் கிடைத்திருப்பது இவரது தலைமையில்தான்.

இதுபோல ஏகப்பட்ட சிறப்புகள் அமைந்திருந்தாலும், சிறப்புக்கெல்லாம் சிறப்பு சேர்க்கும் வகையில் சுழல்வடிவ மின்னணு நூலகம் ஒன்றினை, ஒரு கோடி ரூபாய் செலவில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள். அனேகமாக இந்தியாவில் எந்த அரசுப்பள்ளியிலும் இவ்வளவு நவீன நூலகம் இருக்குமா என்பது சந்தேகமே.

பள்ளியின் பொன்விழாக் காலத்தின் போது ஒரு கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பள்ளிக்கு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது, இந்த மின்னணு நூலகம் அமைப்பது குறித்த யோசனைகள் வந்திருக்கிறது.

ஊத்தங்கரை பகுதியிலிருந்து ஏராளமான பொறியியலாளர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் உருவாகி வருகிறார்கள். ஆனால் ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ்-கள் உருவாவதில்லை என்ற குறை இப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக இருக்கிறது.

ஏராளமான நூல்களும், தங்குதடையில்லா இணையவசதியும் கொண்ட நவீன நூலகம் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நிறைய மாணவர்களை இங்கிருந்து தயார் செய்யமுடியும் என்ற ஒரே காரணத்துக்காக செலவினைப் பற்றி கவலைப்படாமல் இந்நூல் நிலையத்தை உருவாக்க முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டார்கள்.

அரசுப்பள்ளிகளை வசதிபடைத்தவர்கள் தத்தெடுத்துக் கொண்டு, வேண்டிய வசதிகளை செய்துத்தரலாம் என்று ஏற்கனவே அரசு சொல்லியிருக்கிறது. இவ்வகையில் ஊத்தங்கரைப் பள்ளியை தத்தெடுத்திருப்பவர், அங்கிருக்கும் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளர் வே.சந்திரசேகர். அவரது தலைமையின் கீழ் நூலகப் பணிகள் தொடங்கப்பட்டது. சந்திரசேகரும் தன் பங்காக முப்பது லட்சரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். ஊத்தங்கரையில் நடக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் இவரது பங்கு நிச்சயமுண்டு என்பதை ஊர்க்காரர்களிடம் பேசினால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பதால் ஊரே சேர்ந்து, அவரவர் பங்களிப்பை மனமுவந்து தந்து இந்நூலகத்தை கட்டியிருக்கிறது.

கண்ணை கவரும் சுழல்வடிவ கட்டிடம். எட்டுலட்ச ரூபாய்க்கு பதிமூன்றாயிரம் புத்தகங்களை வாங்கி வரிசையாக அடுக்கியிருக்கிறார்கள். முப்பது கணினிகள் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வசதியோடு பொருத்தப்பட்டிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஊத்தங்கரை பொதுமக்களும் இந்நூலகத்தை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும் இலவசமாகவே நூல்களை மட்டுமன்றி இணையத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘UPSC - முயலகம்’ என்று தனியாக ஒரு அறையே உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சிவில் சர்வீஸுக்கு தயார் செய்யும் மாணவர்கள், எந்த தொந்தரவுமின்றி இங்கே படிக்கலாம். நூலகத்தில் சிவில் சர்வீஸுக்கு தயார் செய்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நூல்களும் தனி அடுக்கில் அடுக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கும் அறை நீளமாக, வசதியாக இருக்கிறது.

பாடுபட்டு உருவாக்கிய நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டாமா? அதற்காக பத்துலட்ச ரூபாய் மதிப்பில் வைப்புநிதி ஒன்றினையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு நூலகரை பணிக்கு அமர்த்தி இந்நிதியிலிருந்தே சம்பளமும் எடுத்துக் கொடுக்கிறார்கள்.

“எங்களை உருவாக்கிய பள்ளிக்கு நாங்கள் தந்த பொன்விழாப் பரிசு இந்த நூலகம்!” என்கிறார் முன்னாள் மாணவரான வி.செல்வராஜ். பெங்களூர் தொழிலதிபரான இவர் மட்டுமே நூலகம் அமைக்க இருபது லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார்.

தங்கள் ஊரில் இருந்து ஐ.ஏ.எஸ். / ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாக வேண்டும் என்ற கனவோடு ஊர்கூடி தேர் இழுக்கிறது. உன்னதமான முயற்சிகள் எதுவும் தோற்றதில்லை என்பது வரலாறு. கனவு நனவாக ஊத்தங்கரையை வாழ்த்துவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)