30 அக்டோபர், 2010

கோபுரங்கள் சாய்வதுண்டு!

சில நாட்களுக்கு முன்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த சம்பவம் இது. இரவு 9 மணியளவில் திடீரென்று சுனாமி திரண்டு வந்தது போல பெருத்தச் சத்தம். என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் ஓடுகிறார்கள். தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிக்காக விரைந்தோடி வருகிறார்கள். இந்த கலவரமான காட்சிக்கு காரணம், ஒரு செல்போன் டவர்.

சுமார் 70 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் அது. 15 வருடங்களுக்கு முன்பாக நிறுவப்பட்டது. போதிய பரமாரிப்பு இல்லாததால், துருப்பிடித்து வலுவிழந்ததாக சொல்லப்படுகிறது. நல்ல வேளையாக இச்சம்பவத்தியில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை. இதுபோல செல்போன் டவர்கள் விழுவது நமக்கு புதிதுமல்ல. ஏற்கனவே சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை விழித்துக்கொண்டு சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறது. இப்பிரச்சினையின் அனைத்து அம்சங்கள் தொடர்பாக செல்போன் நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு காவல்துறை ஆணையாளர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். முன்னதாக மாநில அளவிலான சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றினிலும் இப்பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்றால் எவ்வளவு முக்கியமான பிரச்சினை இதுவென்று புரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 30,000 செல்போன் டவர்கள் இருக்கின்றன. சென்னை மாநகரில் மட்டுமே 8,000. இந்திய அளவில் 3,30,000 டவர்கள் இருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளில் மட்டுமே 1,30,000 கூடுதல் டவர்கள் உருவாக்கப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் இப்படிப்பட்ட பெரிய எண்ணிக்கையில் இந்த கோபுரங்கள் உயர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் நம் நாட்டில் செல்போனின் பயன்பாடு என்பது அசுரத்தன வளர்ச்சி கொண்டதும், அரசால் தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட 65 கோடி இணைப்புகள் இப்போது இருக்கிறது. மாதத்துக்கு ஒன்றரை கோடி எண்ணிக்கையிலான புதிய சிம்கார்டுகள் விற்கப்படுகின்றன. 100 சதவிகித மக்களிடமும் செல்போனை கொண்டுச் சேர்த்துவிட வேண்டும் என்ற இலக்கோடு செல்போன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

செல்போன் டவரை தொழில்நுட்ப மொழியில் Base Transceiver Station (BTS) என்கிறார்கள். இரும்புக் கம்பிகளால் பிணைக்கப்பட்ட உயர்ந்த கோபுரம், ஆண்டெனா, டீசல் ஜெனரேட்டர், சில எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் – இவை பழுதுபடாமல் இயங்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு அறை. இவைதான் ஒரு பி.டி.எஸ். ஸ்டேஷன். செல்போன்களில் பரிமாறிக் கொள்ளப்படும் மின்காந்த அலைகளை வாங்கியும், அனுப்பும் பணிகளை இந்த ஸ்டேஷன் செவ்வனே செய்து வரும். உயரமான இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம் 'சிக்னல்'களை பக்காவாக புரிந்துகொண்டு செயல்படும்.

மத்தியத் தொலைத்தொடர்புத் துறையின் ஒயர்லெஸ் திட்டக்குழுவிடம் (Wireless Planning Committee) அனுமதி பெற்றே இத்தகைய ஸ்டேஷன்களை அமைக்க முடியும். இவற்றை அமைக்க சில விதிமுறைகளும் உண்டு. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் செல்போன் டவர்கள் அமைக்க அனுமதியில்லை. மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதிகளிலும் அமைக்க கூடாது. அருகில் ஏதேனும் கட்டடம் இருந்தால் அவற்றில் இருந்து 3 மீட்டர் தள்ளியே கோபுரம் அமைக்கப்பட வேண்டும். கோபுரம் இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வராதவண்ணம் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அடிப்படையில் இதுமாதிரியாக இன்னும் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. செல்போன் டவர் கட்டுமானம் தொடர்பாகவும் கூட தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும், தொடர்ச்சியான பராமரிப்பு குறித்த ஆலோசனை விதிகளும் கூட உண்டு.

சர்வதேச ஆணையத்தின் விதிமுறைப்படி குடியிருப்பு மனைகளில் இருந்து 60 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மட்டுமே செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.

ஆனாலும், இவையெல்லாம் முறையாக கடைப்பிடிக்கப்படாத இடங்களில்தான் பிரச்சினை. முறையாக கடைப்பிடிக்கப்படுவது அபூர்வம் என்பதுதான் வேதனை. பொதுத்துறை செல்போன் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தான் விதிமுறைகளில் கொஞ்சம் கறாராக இருக்கிறது.

பொதுவாக ஒரு செல்போன் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஸ்டேஷன் அமைக்க முடிவெடுத்தால், அங்கிருக்கும் ஏதாவது கட்டிட உரிமையாளரை தொடர்பு கொள்கிறது. குத்தகை அடிப்படையில் கிடைக்கும் இடத்தை வளைத்துப் போடுகிறது. வாடகைக்கு இடத்தைக் கொடுத்தால் கிடைக்கும் வருமானத்தை விடவும், பன்மடங்கு தொகை கூடுதலாக கிடைப்பதால் நகரங்களில் செல்போன் டவர் நம் இடத்தில் அமைக்கமாட்டார்களா என்று ஏங்குவோர் பெருகி வருகிறார்கள். செல்போன் டவருக்கு இடம் வாடகைக்கு விடப்படும் என்று குறிப்பிட்டு, பத்திரிகைகளில் விளம்பரம் தருமளவுக்கு நிலைமை இருக்கிறது.

கட்டிடங்களில் செல்போன் டவருக்கு இடம் கொடுக்கும் உரிமையாளர்களுக்கு தனி வரி வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றம் தீர்மானம் கூட நிறைவேற்றியது. ஆயினும் இதுபோன்ற டவர்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விதிகள் எதையும் விதிக்கவில்லை. மாநில அளவிலேயே இவற்றைக் கட்டுப்படுத்த முறையான சட்ட திட்டங்கள் இல்லை.

ஏதோ ஒரு இடம் கிடைத்தவுடன் ஒப்பந்த அடிப்படையில் டவர் கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களிடம் டவர் அமைக்கும் பணியை செல்போன் நிறுவனங்கள் ஒப்படைக்கின்றன. பல செல்போன் நிறுவனங்கள் டவர் பராமரிப்பையும் கூட வெளியாட்களிடம் ஒப்படைப்பதுண்டு. இதுபோன்ற கட்டுமானத்தின் போது, போதிய பாதுகாப்பு சாதனங்களின்றி ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிவதை சகஜமாக காண முடிகிறது. கடந்த ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே டவர் அமைத்துக் கொண்டிருந்தபோதே, அது சரிந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கூட நடந்தது.

அலட்சியம்தான் அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது. விதிமுறை மீறல்கள் என்பது செல்போன் டவர் விஷயத்தில் மிகத்தாராளமாக நடக்கிறது. தமிழக நகரங்களில் இருக்கும் செல்போன் டவர்களை குத்துமதிப்பாக பார்த்தாலே எந்த விதிக்கும் பொருந்தாவகையில் அமைக்கப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளலாம். ஆயிரம் விளக்குப் பகுதி புகழ் பெற்ற அப்போலோ மருத்துவமனை அருகிலேயே கூட ஒரு செல்போன் டவர் உயர்ந்து நிற்கிறது. விதிமுறைகள் என்பது வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது. கட்டிடங்களின் உயரத்தில் போதுமான வலுவின்றி ஏனோதானோவென்று முளைத்துவிட்ட கோபுரங்களை கண்டாலே வயிற்றில் அமிலம் சுரக்கிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியமென்று யார் சொன்னது?

பராமரிப்பின்றி சாய்வது, அதனால் ஏற்படும் விபத்துகள் என்று கண்ணுக்குத் தெரிந்த பாதிப்புகள் ஒருபுறமிருக்க மருத்துவரீதியான கதிர்வீச்சு அபாயம்தான் இன்னும் மோசமானது. சமீபகாலமாக அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், பொதுநலனில் அக்கறை கொண்ட தனியார் நிறுவனங்கள் பலவும் உடல்ரீதியாக இந்த டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கவலையோடு பார்க்கிறார்கள்.

குடியிருப்புப் பகுதிகளில் செல்போன் டவர்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கூட ஒன்று தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதுமிருக்கும் செல்போன் டவர்களில் வெளிப்படும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது. அந்தப் பணியும் சத்தமின்றி நடைபெற்று வருகிறது.

"இடைவிடாமல் செல்போன் உபயோகிப்பதும், செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். இக்கதிர்வீச்சால் நரம்புக் கோளாறுகள் மனிதர்களுக்கு உருவாகும் என்பது வெளிநாடுகளில் ஆய்வுகளோடு நிரூபிக்கப் பட்டிருக்கிறது" என்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.கோட்டா.

டெல்லியில் விஜயாபட் என்ற பெண்மணிக்கு மூளைக்கட்டி நோய் ஏற்பட்டது. இந்நோய் அவருக்கு ஏற்பட காரணம், அவர் வசித்த பகுதி செல்போன் டவர் ஒன்றுக்கு நெருக்கமாக இருந்ததுதான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். புற்றுநோய், இதயக்கோளாறு, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு, மனநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இந்த கதிர்வீச்சால் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

செல்போன் டவர்கள் வெளிப்படுத்தும் மின்காந்த கதிர்வீச்சு 50 மீட்டர் தொலைவுக்கு மைனஸ் 30 டி.பி. அளவு இருக்கலாம் என்று ஒரு நிர்ணயம் இருக்கிறது. இந்த அளவையும் விட குறையும் பட்சத்தில் அது ஆபத்தானது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில் இந்தியாவின் பல நகரங்களில் செல்போன் டவர்களில் மைனஸ் 12, மைனஸ் 10 டி.பி. அளவுகளுக்கு கதிர்வீச்சு இருக்கும் அபாயம் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்தே செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள் இருக்கிறது என்பதற்கான சான்றிதழை, கதிர்வீச்சு அளவீடு நிலையத்தில் இருந்து பெறவேண்டும். இச்சான்றிதழை நவம்பர் 15ஆம் தேதிக்குள் தொலைத்தொடர்பு அமலாக்கம், மனிதவள மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத செல்போன் டவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னையிலேயே கூட தமிழக முதல்வர் கலைஞர் வசிக்கும் பகுதி, கதிர்வீச்சு காரணமாக பாதுகாப்பற்ற பகுதியாக இருப்பதாக டெஹல்கா பத்திரிகை கோஜெண்ட் என்ற நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயல்லிதா வசிக்கும் பகுதி கதிர்வீச்சு அபாயமற்ற பகுதியாக அந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது ஒரு சுவையான ஆச்சரியம்.

சரி. ராஜா அண்ணாமலைபுரம் டவர் சாய்ந்த விஷயத்துக்கு வருவோம். இதுபோல அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்காக செல்போன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுக்குழு ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பார்வை மங்கிக் கொண்டிருக்கும் போதாவது சூரிய நமஸ்காரம் செய்ய முன்வந்திருப்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

இது மட்டுமன்றி, செல்போன் டவர் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை அரசு உருவாக்கி, அவை முறையாக செயல்படுத்தப் படுகிறதா என்பதை உள்ளாட்சிகள் கண்காணிக்கும் வகையில் சட்டம் ஏதேனும் கொண்டுவரலாம். விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர்களை, தயவுதாட்சணியமின்றி நீக்கிவிடவும் அரசு முன்வரவேண்டும்.

ஆங்காங்கே ஒன்றிரண்டாக சரியும் கோபுரங்களின் ஆபத்தைதான் நாம் நேரடியாக பார்க்கிறோம். நமக்கு அருகிலேயே, கண்களுக்கு தட்டுப்படாமல் நம் உடலை சரித்துக் கொண்டிருக்கும் டவர்கள் கம்பீரமாக நிமிர்ந்துதான் நிற்கின்றன.

(நன்றி : புதிய தலைமுறை)

29 அக்டோபர், 2010

வலையுலக ப்ரைவஸி!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. பதிவுலகுக்கு புதியவனாக, ஆர்வக்கோளாறோடு அந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். சந்திப்பில் கலந்துகொண்ட பெரியவர் ஒருவர் என்னைப் பற்றி கொஞ்சம் 'பர்சனலாக' விசாரித்தார்.

"கல்யாணம் ஆயிடிச்சா?"

அப்போது நான் புதுமாப்பிள்ளை. அந்த ஜோரில் "ஆயிடிச்சி சார்!"

"லவ் மேராஜா? அரேஞ்ச்ட் மேரேஜா?"

"அரேஞ்ச்ட் மேரேஜ்தான் சார்!"

"பொண்ணு சொந்தமா? அசலா?"

"கொஞ்சம் தூரத்து சொந்தம் சார். என்னோட ஒண்ணு விட்டு அண்ணனோட ஒண்ணு விட்ட மச்சினிச்சி!"

அவ்வளவுதான் நடந்தது விவாதம். அடுத்த ஓரிரு நாட்களிலேயே "சாதி மதத்தை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் சொந்த சாதியில்தான் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்" என்று பெரியவரால் என்னைச் சுட்டி ஒரு பதிவில் எழுதப்பட்டது.

"அய்யிரு யாரும் பொண்ணு தரலை. என் சாதிக்காரன் தான் எனக்கு பொண்ணு தந்தான். எந்த அய்யிராவது பொண்ணுதர ரெடியா இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடி" என்று சூடாகப் பதில் அளித்தேன்.

இப்போது நண்பர் ராஜனின் முறை.

பதிவர் சந்திப்புகளிலும், சுக-துக்க விழாக்களிலும் பகிர்ந்துகொள்ளும் 'பர்சனல்' தகவல்கள் பொதுவாக பதிவர் வட்டத்தில் பரிமாறக் கொள்ளப் படுவதில்லை. செந்தழல் ரவி, பாலபாரதி, அதிஷா, சுகுணாதிவாகர், வரவரையான், முத்து (தமிழினி), குழலி, கோவி.கண்ணன் உள்ளிட்ட பல நண்பர்களுக்கு என்னைப் பற்றிய 'பர்சனல்' தகவல்கள் தெரியும். அவர்களைப் பற்றி எனக்கும் தெரியும். இவர்களில் சிலர் என் இல்ல விழாக்களுக்கும் வந்ததுண்டு. சுகுணாதிவாகரின் திருமணம், செந்தழல் ரவி இல்ல நிகழ்ச்சி, கோவி.கண்ணன் இல்ல புதுமனைபுகுவிழா போன்ற தனிப்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஆயினும் தனிப்பட்ட விஷயங்களை நட்புக்கு மரியாதை தந்து யாரும் பொதுவில் வைத்ததில்லை. இது ஒரு வலையுலகப் பண்பாடாகவே அனுசரிக்கப் படுகிறது.

இப்போது ராஜனின் திருமணம் எப்படி நடந்தது, மண்டபத்துக்கு பணம் கட்டியது யார், அய்யிரு மந்திரம் ஓதினாரா என்றெல்லாம் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விஸ்தாரமாக அலசப்படுகிறது. அடுத்தவர் வீட்டு விவகாரங்களை - அதுவும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களை பொதுவில் வைத்து பேசுவது கேவலமாக இல்லையா?

சமரசங்களுக்கு இடையே கொஞ்சமேணும் கொள்கையைப் பாவிக்கும் சூழலில்தான் பலரும் இருக்கிறோம். ஏனெனில் இதே கொள்கையோடு எங்கள் அப்பன், ஆத்தா இருக்கவில்லை. எங்கள் கொள்கை எங்கள் குடும்பங்களுக்கு புதியது. அவர்கள் ஏற்றுக்கொள்ள நாளாகும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியே வருமளவுக்கு யாரும் நிர்மூடர்களாகவும் இல்லை. வலிமையான இந்தியக் குடும்ப கட்டுமான முறையில் எது சாத்தியமோ, அதைதான் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

ராஜன் விஷயத்தில் பெரியவர் செய்திருக்கும் பெருந்தொண்டால், இனி பதிவர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு மற்ற பதிவர்களை அழைக்க கொஞ்சம் அச்சப்படுவார்கள். அதிலும் 'பெரியவர்' கலந்துகொள்கிறார் என்றால், அழைத்தவர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் அடுத்த சில நாட்களுக்கு இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 'ப்ரைவஸியான' மேட்டர்களை ரொம்ப நெருக்கமில்லாத பதிவர்களோடு யாரும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பான அம்சம். ராஜன் திருமணம் நமக்கெல்லாம் ஒரு பாடம்.

27 அக்டோபர், 2010

பொய் சொல்லலாமா நெடுமாறன் அய்யா?


அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் பேட்டி ஒன்றினை சமீபத்தில் படிக்க நேர்ந்தது :

கேள்வி: இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..?

பதில் : சரியாகச் சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் 'டெசோ' மாநாடு முடிந்த பிறகு, ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. 

அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார். 

அவரது அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார் கருணாநிதி. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே திட்டமிட்டபடி சந்தித்தனர்.

ஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார் அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும் இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக் காட்டட்டுமே! 

அய்யா சொல்வதின் அடிப்படையில் பார்த்தோமானால், 'டெசோ' மாநாட்டின் விளைவாகவே, போராளிக் குழுக்களுக்குள்ளாக ஈழத்தில் மோதல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் மாநாடு முடிந்தப்பிறகே 'டெலோ' இயக்கத்துக்கு ஆயுதங்களை கொடுத்து புலிகளுடன் மோதும்படி 'ரா' தூண்டிவிட்டதாக நெடுமாறன் சொல்கிறார். அதையடுத்தே விடுதலைப்புலிகளை சுட்டார்கள். லிங்கத்தினை கொடூரமாக சபாரத்தினம் கொலை செய்தார். புலிகளின் தாக்குதல் பதிலுக்கு நடந்தது என்று கதையையும் சொல்கிறார்.

எப்படி ஒரு மனிதரால் இப்படி அடுக்கடுக்காக பொய்களை அள்ளிக் கொட்ட முடியுமென்று தெரியவில்லை. ஒருவேளை ஈழத்தாயின் அருட்தொண்டராக மாறிப்போனதால் ஏற்பட்ட மாற்றம் இதுவாவென்று தெரியவில்லை.

இப்போது 'டெசோ'வை நெடுமாறன் இழுப்பதற்கு காரணம், கலைஞர் டெசோவின் தலைவராக இருந்தார் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

டெசோ மாநாடு மதுரையில் 4-5-1986 அன்று நடந்தது. இம்மாநாட்டின் நோக்கம். வெறுமனே தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க இருக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதை தெரிவித்து, தமிழர்களுக்கு ஆதரவு தேடுவதே ஆகும். ஆயினும் கடைசிவரை இந்நோக்கம் நிறைவேறவேயில்லை. அதற்கு யார் காரணமென்ற உள்விவகாரங்களில் இப்போது நாம் நுழைய வேண்டியதில்லை.

அம்மாநாட்டில் கலந்துகொண்ட அகில இந்திய தலைவர்கள் : பாஜக சார்பில் அடல்பிகாரி வாஜ்பாய், லோக்தளம் சார்பில் பகுகுணா, தெலுங்குதேசம் சார்பில் என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சிகள், அஸ்ஸாம் கனபரிஷத், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ்-எஸ், ஜனதா உள்ளிட்ட ஏனைய தேசியநீரோட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கான தங்கள் ஆத்ரவினை வெளிப்படுத்தினர். விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட், ஈரோஸ், உள்ளிட்ட ஈழத்தமிழ் போராளி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டுக்குப் பிறகே 'ரா' அமைப்பால் தூண்டிவிடப்பட்டு போராளிக் குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டதாக நெடுமாறனின் பேட்டி வாயிலாக அறியமுடிகிறது. உண்மையில் மாநாடு முடிந்து மூன்று நாட்களில், 7-5-1986 அன்று சபாரத்தினம் கொல்லப்படுகிறார். நெடுமாறன் சொல்லும் 'ரா' தூண்டுதல், டெலோ இயக்கங்களுக்கு ஆயுதம், விடுதலைப்புலிகள் மீது தாக்குதல், ஆள்கடத்தல், புலிகள் சார்பாக லிங்கம் தூதுவராக அனுப்பப்பட்டு சபாரத்தினத்தால் கொல்லப்படுதல், பதிலுக்கு விடுதலைப்புலிகள் தாக்குதல், சபாரத்தினம் கொல்லப்படுதல் ஆகிய சம்பவங்கள் வெறும் மூன்று நாட்களில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெரிதும் வளராத 1986ஆம் ஆண்டு நடைபெற்றதாக சொல்கிறார். இதைத்தான் ஊரில் சொல்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தால் எருமை கூட ஏரோஃப்ளேன் ஓட்டுமென்று.

மாநாட்டு உரையிலேயே கலைஞர், டெலோவுக்கும் புலிகளுக்குமான சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டுமென்று பேசியிருக்கிறார். மாநாட்டுக்குப் பிறகாக 'ரா'வால் தூண்டப்பட்டு அவர்கள் மோதிக்கொள்வார்கள் என்று கலைஞர் ஜோசியம் பார்த்து பேசினாரா என்பதையும் நெடுமாறன் பேட்டியில் சொல்லியிருக்கலாம்.

உண்மையில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே புலிகளுக்கும், டெலோவுக்குமான சண்டை நடந்துவந்தது. மாநாட்டு உரையில் வாஜ்பாய், என்.டி.ஆர் போன்றோர் கூட இந்த சண்டையை குறிப்பிட்டு போராளிக்குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று ஆலோசனை சொல்லியிருந்தனர். இதெல்லாம் நன்கு தெரிந்தும், எப்படி வாய்கூசாமல் இப்படி நெடுமாறன் பேட்டி கொடுக்கிறார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் டெசோவுக்கு செயலாளராக இருந்தவரே இந்த பழ.நெடுமாறன் தான்.

83ஆம் ஆண்டே ஈழப்போராளிகளை ஒருங்கிணைப்பதில் கலைஞர் முட்டுக்கட்டை போட்டதாக இந்த நெடுமாறன் சொல்கிறார். அது தெரிந்தும் 86ஆம் ஆண்டு டெசோவில் கலைஞர் தலைமையில் இவர் ஏன் செயல்பட்டார் என்பதை பேட்டியெடுத்த பத்திரிகையாளராவது கேட்டிருக்கலாம். அல்லது கேட்காமலேயே பழ.நெடுமாறன் அடுத்த வெடிகுண்டையும் வீசியிருக்கலாம்.

ஆரம்பத்திலிருந்தே 'ரா'வை கலைஞர் பாதுகாக்கிறார் என்று சொல்கிறார் நெடுமாறன். 86ல் ராஜீவின் காங்கிரஸ் இந்தியாவை ஆண்டது. 'ரா' ராஜீவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழக எம்.ஜி.ஆர். அரசு, ராஜீவுக்கு முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வாரி வாரி வழங்கியது (இன்றைய கலைஞர் அரசைப்போல). உச்சபட்சமாக இலங்கை - இந்திய ஒப்பந்த விவகாரத்திலும் கூட. நெடுமாறனோ எய்தவன் இருக்க, அம்பை நோகிறார். இந்த பச்சைப் பொய்களுக்குப் பின்னால் இவரது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணமாக இருக்கமுடியும். எம்.ஜி.ஆர் மாண்டுவிட்டார், கலைஞர் உயிரோடு இருக்கிறார் என்ற காரணத்துக்காக ஒருவரை புனிதராகவும், மற்றவரை அயோக்கியராகவும் சித்தரிப்பது என்னமாதிரியான சித்துவிளையாட்டு? எம்.ஜி.ஆர்.தான் போராளிக் குழுக்களுக்கு உண்மையான, பிரதிபலன் பாராமல் ஆதரவளித்தவர் என்று நெடுமாறன் நம்பியிருந்தால் அவர் பின்னால் போயிருக்க வேண்டியதுதானே? ஏன் கலைஞரின் பின்னால் அணிவகுத்து நின்றார். ஏனெனில் எம்.ஜி.ஆரின் புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த நோக்கம் அப்போது நெடுமாறனுக்கு தெரியும்.

கலைஞர் மே 2009ல் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கடந்தகால வரலாற்றினை தவறாக திரித்துப் பேசுவது எவ்வகையில் அரசியல் நேர்மையாகாது. 89ல் கூட அமைதிப்படைக்கு கலைஞர் கொடுத்த மரியாதை என்னவென்று ஊருக்கே தெரியும். ராஜீவ் கொலைப்பழி தம்மேல் விழுந்தபோது கூட விழுந்தபோது கூட திமுக எவ்வகையிலும் யாரையும் காட்டிக் கொடுத்ததில்லை.

83ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தபோது இங்கே இந்தியாவில் அதைத் தட்டிக் கேட்க என்ன நாதி இருந்தது? எந்தவித கண்டனங்களோ, நடவடிக்கைகளோ எடுக்கப்படாத நிலையில், மூன்றுமாதம் கழித்து செப்டம்பர் 83ல் தமிழக சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை கொண்டுவந்தவர் கலைஞர்தான். நெடுமாறனுக்கு சந்தேகமிருந்தால் சட்டமன்றப் பதிவேட்டினைப் பார்க்கட்டும். அதன்பிறகே எம்.ஜி.ஆர் சுறுசுறுப்பாகி, இந்திராவுக்கு தகவல் தெரிவித்து ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு ஏற்பட்டது என்பதும் வரலாறு. இன்றைய கலைஞர் 'ரெட்சிப்' சொருகப்பட்ட ரோபோவாக ஈழப்பிரச்சினையில் செயல்படுகிறார் என்பதற்காக, பழைய கலைஞரையும், அவரது உண்மையான அக்கறையையும் மறைத்து, மாறுபட்ட விதமாக சொல்வது நெடுமாறன் போன்ற மூத்த அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. ஏனெனில் அந்தகாலத்து கலைஞரை நெடுமாறனும் ஏற்றுக் கொண்டார். அவர் தலைமையில் 'டெசோ' அமைப்பிலும் செயல்பட்டார்.

பழ.நெடுமாறன் மாதிரியான இரட்டைநாக்கு கொண்டவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என்று அடையாளப்பட்டிருப்பது தமிழினத்துக்கு சாபக்கேடு. வரலாற்றில் நன்கு பதிவாகியிருக்கும் சம்பவங்களை சுயநலத்துக்காக வாய்க்கு வந்ததுபோல வளைத்துக் காட்டியவர்களால்தான் ஈழப்பிரச்சினை இழுபறியானது. இங்கே பாஜக ஜெயிக்கும், அதிமுக ஜெயிக்கும் என்று தவறான தோற்றத்தையும், எதிர்ப்பார்ப்பையும் அங்கிருப்பவர்களுக்கு தந்ததால்தான் அனைத்தும் நிகழ்ந்தது. கடைசியில் முள்ளிவாய்க்கால் நடந்தேறியது. இப்போதும் இவர்கள் திருந்தாமல் எஞ்சியிருக்கும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் மாண்டவர்கள் மீது அரசியல் பிழைப்பு நடத்தி வருவது கேவலமானது.

இவர்களையும் நம்பும் சொற்பமான ஆட்களை நினைத்தால் பரிதாபம்தான் படவேண்டும்.

26 அக்டோபர், 2010

வலைப்பதிவர்களிடம் ஒரு அவசர உதவி!

1. ஏன் வலைப்பதிவு எழுதுகிறீர்கள்?

2. வலைப்பதிவுலகில் உங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் யார்? யார்? (ஜெயமோகன், சாருநிவேதிதா, விஜய்மில்டன் மாதிரி) - முடிந்தால் அவர்களது வலைப்பூ முகவரியையும் தரவும்.

3. வலைப்பூவில் உங்களுக்கு பிடித்த அம்சம்? பிடிக்காத விஷயம்?

4. வலையுலகில் ஏதேனும் மறக்கமுடியாத சுவையான சம்பவம்

5. ஏனெல்லாம் உங்களுக்கு உங்கள் வலைப்பூ பயன்படுகிறது?


- ஒரு சிறப்புக் கட்டுரைக்காக இந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. தயவுசெய்து உடனடியாக இந்த விவரங்களை yuvakrishna@gmail.com முகவரிக்கு அனுப்பவும். 'வித்தியாசமான' விஷயங்களையும், அனுபவங்களையும் நிச்சயம் உலகறியச் செய்யலாம். போட்டோ வெளியாவது குறித்த தயக்கம் இல்லாதவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
லக்கிலுக்

25 அக்டோபர், 2010

ஏனிந்த விலை உயர்வு?



ரமேஷ் நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர். இருபதுகளின் மத்தியில் வயது. தற்போது சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சொல்லிக் கொள்ளும்படியான வருமானம். ரமேஷுக்கு ஒரு கனவு உண்டு. திருமணத்துக்கு முன்பாக, ஊரில் சொந்தமாக ஒரு வீடு கட்டிவிட வேண்டும்.

கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரிடமும் ஆலோசனை கேட்டு, தனது கனவு வீட்டுக்கான 'பட்ஜெட்'டை நிர்ணயித்தார். குருவி மாதிரி சிறுக சிறுக பணத்தை சேமித்தார். இப்போது பணம் ரெடி. தனது கனவு வீட்டை ஊரில் கட்டவும் ஆரம்பித்தார். ஆசையோடு திட்டமிட்டு கட்ட ஆரம்பித்த வீடு, இன்று பாதியில் நிற்கிறது. பட்ஜெட் பற்றாக்குறை!

ஏன், ரமேஷ் 'நறுக்'கென்று திட்டமிட்டு போட்ட பட்ஜெட்டில் துண்டு விழுகிறது?

ஏனெனில், மூன்று மாதங்களுக்கு முன்பு தோராயமாக, சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.160, கட்டுமானக் கம்பி விலை (ஒரு டன்னுக்கு) ரூ.32000, ஜல்லி (ஒரு யூனிட்) ரூ.2000, செங்கல் (கல் ஒன்று) ரூ.3.50-க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. இன்றைய தேதியில் இப்பொருட்களின் விலை முறையே ரூ.290, ரூ.39000, ரூ.2500, ரூ.5 என்று அதிரடியாக விலை ஏறியிருக்கிறது. (ஊருக்கு ஊர், பொருளுக்கு பொருள் விலை வேறுபடலாம்)

"வங்கிக் கடனுக்காக பேயா அலைஞ்சுக்கிட்டிருக்கேன் சார். பின்னே பத்து லட்சரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டு வேலையை ஆரம்பிச்சா, முடிக்கும்போது பண்ணிரெண்டு லட்சம் ஆகுமுன்னா, என்னை மாதிரி நடுத்தரவர்க்கம் என்னதான் சார் செய்யும்?" என்கிறார் ரமேஷ் வருத்தமாக.

நடுத்தர வர்க்கத்துக்கு வீடு என்பது கனவு. வீடு கட்டும் பலரும் சந்திக்கிற நெருக்கடி என்னவென்றால் கட்டுமானப் பணியாளர்களின் ஊதியம். தமிழகத்தில் சராசரியாக, ஒரு நாளைக்கு கொத்தனாருக்கு/மேஸ்திரிக்கு ரூ.350 முதல் 400, சித்தாள் கூலி பெண்களுக்கு ரூ.100 முதல் 120 – ஆண்களுக்கு ரூ.150 வரை வழங்க வேண்டியிருக்கிறது. இதனால் ஒரு வீடு உருவாவதில் கட்டுமானப் பொருட்களின் விலைக்கு நிகராக தொழிலாளர் ஊதியமும் செலவாகிறது. உள்கட்டமைப்பு வேகமாக வளர்ந்து வரும் காரணத்தால், கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் பணிபுரிய ஒப்புக் கொள்கிறார்கள். தேவைப்படும் நேரத்தில் வேலைக்கும் அவர்களால் வரமுடிவதில்லை. இப்படிப்பட்ட சிக்கலான சூழலில் கட்டுமானப் பொருட்களின் 'திடீர்' விலை உயர்வு நடுத்தர வர்க்கத்துக்கு சொந்த வீடு என்பது கனவில் மட்டுமே தோன்றக்கூடிய ஒரு காட்சிப் பொருளாகி விடும்.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டில், கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் 47 இலட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் ஐம்பது சதவிகிதப் பணிகள் சிமெண்டைச் சார்ந்தது. கட்டுமானப் பொருட்களின் விலை இதுபோல விண்ணுக்கு உயர்ந்து கொண்டிருந்தால், அரசு திட்டமிட்ட அளவில் பாதிகூட நாட்டின் உள்கட்டமைப்பில் வளர்ச்சி பெறாது.

அண்டைமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் இந்த விலையேற்றம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சராசரியாக 20 சதவிகிதம் கூடுதல் விலை கொடுத்து கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது.

செந்தில்குமார், சென்னைப் புறநகரில் 'பில்டிங் காண்ட்ராக்ட்' தொழில் செய்து வருகிறார். இவரது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நடுத்தரவர்க்கத்தினரே. சிறியளவிலான அப்பார்ட்மெண்டுகளையும், தனிவீடுகளையும் கட்டித்தரும் ஒப்பந்தக்காரர் இவர்.

"வீடு கட்ட ஆரம்பிக்கும்போது வாடிக்கையாளரோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். குறிப்பிட்ட காலக்கெடுவில், குறிப்பிட்ட பணத்துக்கு வீட்டை முடித்துக் கொடுத்தாக வேண்டும். கட்டுமானப் பொருள் வாங்குவது, தொழிலாளர் கூலியெல்லாம் கணக்கு போட்டு ஓரளவு நியாயமான லாபம் வரும் வகையில் அந்த ஒப்பந்தம் இருக்கும்.

திடீரென்று இதுபோல விலை ஏறினால், எங்களைப் போன்ற சிறிய ஒப்பந்ததாரர்கள் நஷ்டத்துக்குதான் வேலை பார்க்க வேண்டும். திடீரென்று விலை ஏறிவிட்டது என்று சொல்லி, ஒப்பந்தத்தில் இருக்கும் பணத்தைவிட அதிகமாகவா வீட்டுச் சொந்தக்காரரிடம் கேட்கமுடியும்? கேட்டாலும் கொடுத்துவிடுவார்களா?

பெரிய வேலை எடுத்துச் செய்யும் காண்ட்ராக்டர்களுக்கு வேண்டுமானால் விலையேற்றத்தால் லாபத்தில் கொஞ்சம் சதவிகிதம் குறையும். எங்களைப் போன்றவர்களுக்கு கைகாசை போட்டு வீட்டை முடித்துத் தருவதைத் தவிர வேறுவழியில்லை. ஏன் தான் இதுபோல தாறுமாறாக ஏறித் தொலைக்கிறதோ தெரியவில்லை" என்கிறார் செந்தில்குமார்.

ஏனிந்த 'திடீர்' விலை உயர்வு?

செந்தில் குமாரை போலவே யாருக்கும் சரியான விடை தெரியவில்லை. பொதுமக்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்து வரும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை' நோக்கி கைகாட்டுகிறார்கள். நடைபெறும் நிதியாண்டில் 1800 கோடி ரூபாய் செலவில் மூன்று லட்சம் குடிசை வீடுகள் கான்க்ரீட் இல்லங்களாக, அரசு மானியத்தில் உருவாகி வருகிறது. ஒரு இல்லத்துக்கு ரூ.60,000 கட்டுமானப் பொருட்கள் செலவுக்காக அரசால் வழங்கப்படும். அதைக்கொண்டு குடிசைவீட்டுக்காரர் தன் இல்லத்தை 'எப்படியோ' கட்டிமுடித்துக் கொள்ள வேண்டியதுதான். பெரும்பாலானோர் இத்திட்டத்தில் கூலிக்கு ஆள் வைக்காமல், தாங்களாகவே வீட்டை கட்டிமுடித்துக் கொள்கிறார்கள்.

பெரிய எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் சுமார் 1800 கோடி ரூபாய்க்கு கட்டுமானப் பொருட்கள் வாங்கப்படும்போது தட்டுப்பாடு ஏற்படுவது சகஜம்தான். தட்டுப்பாட்டின் எதிர்வினை என்பது விலையேற்றம் என்பது பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. ஆனால், 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்' விலையேற்றத்துக்கான ஒரு சிறு காரணிதானே தவிர, அதுமட்டுமே காரணமல்ல.

பெட்ரோல்-டீசல் விலை மழைக்கால பருவநிலை மாதிரி அடிக்கடி மாறிக்கொண்டே (99 சதவிகித நேரங்களில் விலையேறிக்கொண்டே) இருப்பதும் ஒரு காரணம். எந்த ஒரு தொழிலுமே போக்குவரத்தை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது. சிமெண்ட், கல், செங்கல், ஜல்லி என்று எல்லாப் பொருட்களுமே உற்பத்தியாகும் இடத்திலிருந்து, மொத்த விற்பனையாளருக்கு செல்லும். அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்களுக்கு, பின்னர் அவர்களிடமிருந்து கட்டுமானம் நடக்கும் இடத்துக்கு என்று மாறிக்கொண்டேயிருக்கும். எனவே இத்தொழிலில் போக்குவரத்துக்கு தவிர்க்கவியலா இடம் இருக்கிறது. போக்குவரத்துக்கு பெரும்பாலும் லாரி பயன்படுத்தப் படுகிறது. எனவே நிலையில்லா பெட்ரோல்-டீசல் விலை நிலவரமும் விலையேற்றத்துக்கு இன்னுமொரு காரணம். இதுபோல சிறு சிறு காரணங்கள் ஏராளம். அவற்றில் பலவும் நியாயமானவையும் கூட.

முக்கியமான இன்னொரு காரணம் உண்டு.

இந்த 'பகீர்' விலையேற்றத்துக்கு சிமெண்ட் நிறுவனங்களே முழுக்க முழுக்க காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் இந்திய கட்டிட வல்லுனர் சங்கத்தினர்.

இந்த சங்கத்தின் தென்னக மையத்தின் தலைவர் மு.மோகன் சொல்கிறார்.

"சிமெண்ட் விலை வரலாறு காணாத விதத்தில் 10 நாட்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதையடுத்தே மற்ற கட்டுமானப் பொருட்களும் கூடவே கொஞ்சமாக விலையை கூட்டிக் கொண்டன. இதற்கு காரணம் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டாக லாபக்கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

கட்டமைப்பு வசதிகள் பெருகிவரும் சூழலில், வேண்டுமென்றே தட்டுப்பாட்டை உருவாக்கி லாபத்தை அதிகப்படுத்துகிறார்கள். சிமெண்டுக்கான மூலப்பொருளை அரசுதான் அவர்களுக்கு குறைந்த விலைக்கு தருகிறது. அரசின் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை கொண்டு உற்பத்தி செய்பவர்கள், விலையேற்றத்துக்கு அரசிடம் அனுமதி பெறுவதேயில்லை.

எனவே சிமெண்டை அத்தியாவசியப் பொருளாக அரசு அறிவித்து, விலை என்னவென்று அரசே நிர்ணயிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறோம்" என்று முடித்துக் கொண்டார்

வடமாநிலங்களில் கடுமையான மழை. தென்மாநிலங்களிலும் ஓரளவிற்கு மழை. எனவே நாட்டில் சிமெண்டின் பயன்பாடு தற்போது குறைவாகவே இருக்கிறது. சிமெண்ட் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையும் உயரவில்லை. ஆயினும் சிமெண்டின் விலை இருமடங்காக உயர்கிறது என்பதை காணும்போது மோகனின் பேச்சில் இருக்கும் நியாயம் புரிகிறது. (சிமெண்ட் விலை நியாயமாக என்ன இருக்க வேண்டுமென்பதை பெட்டிச் செய்தியில் காண்க)

ஏற்கனவே மழைக்காலம். இந்த லட்சணத்தில் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தால் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழப்பது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் என்பது செயற்கையானது – சில நிறுவனங்களின் லாபக்கணக்குக்காக ஏற்படுத்தப்படுகிறது - என்றால் அது கடுமையாக மக்களை பாதிக்கும் ஒரு செயல். Lime Stone என்பது நாட்டின் கனிமவளம். இதை மிகக்குறைந்த மதிப்புக்கு அரசிடமிருந்து பெற்று சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருளை மட்டும் பன்மடங்கு விலைக்கு மக்களுக்கு விற்பது நியாயமல்ல.

தொழிற்சாலை அமைக்கக் கோரும்போது சிமெண்ட் நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட உற்பத்திறன் என்ன? அந்த உற்பத்தித் திறன் எல்லா நேரத்திலும் செயல்படுத்தப்படுகிறதா போன்ற விஷயங்களை அரசு கண்காணிக்க வேண்டும். போலியான தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால் கட்டிட வல்லுனர் சங்கம் கோருவதைப் போல சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து, அரசே விலை நிர்ணயம் செய்ய முன்வரவேண்டும்.

இல்லையேல், எத்தனை 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்' கொண்டுவந்தாலும் வீடு என்பது பலருக்கும் கனவில் மட்டுமே சாத்தியமாகும் திட்டமாக போய்விடும்.


எக்ஸ்ட்ரா மேட்டர் :

சிமெண்ட் (டன் ஒன்றுக்கு) உற்பத்திச் செலவு (இலாபம் உட்பட) - 1275.00

VAT 12.5%- 159.00

சிமெண்ட் மீதான சுங்கவரி (தீர்வை உட்பட) - 408.00

லைம் ஸ்டோன் மீதான ராயல்டி மற்றும் தீர்வை - 69.00

பவர் டாரிஃப் - 22.00

மற்ற பொருட்களுக்கான விற்பனை வரி (Stores Spare, rawmaterials etc.)- 27.00

சுங்கவரி – Stores & Spares - 23.00

சேவைவரி, Sundries etc. - 5.00

பேக்கிங் செலவு - 106.00

போக்குவரத்து - 700.00

மொத்தம் (ஒரு டன்னுக்கு) - 2794.00

ஒரு டன் = 20 மூட்டை

எனவே ஒரு மூட்டை சிமெண்ட் விற்கப்பட வேண்டிய விலை ரூ.140 மட்டுமே. ரூ.290க்கு விற்கப்படுகிறது என்றால் மீதி 150 ரூபாய்க்கு சிமெண்ட் நிறுவனங்கள் என்ன கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

(நன்றி : புதிய தலைமுறை)

23 அக்டோபர், 2010

சிங்கத்தின் தீபாவளி ஸ்டார்ட்ஸ்...

இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

3டி மேக்ஸ் புடவை..

மல்டி மசகலி சல்வார்..

குந்தன் ஒர்க் சுரிதார் மெட்டீரியல்..

காட்டன் மஸ்லின் சட்டை..

பொந்தூர் வேட்டி..

பிளாக்பெர்ரி பெர்ல்3ஜி9100..

ஸ்டேண்டர்ட் மார்க் பட்டாசுகள்..

பாசிப்பருப்பு அல்வா, முள்ளு முறுக்கு..

உங்கள் சாய்ஸ் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் பல்லாண்டுகால வனவாசம் இந்த தீபாவளியோடு முடிவுக்கு வருகிறது.

என்னது காமிக்ஸா? குழந்தைகள்லாம் படிக்குமே.. அதுவா? என்று முகம் சுளிக்கிறீர்களா?

வெயிட் பண்ணுங்க ஜெண்டில்மேன். உங்களுக்காக ஒரு தகவல்..

இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே 80 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்று ஏதோ ஒரு அமைப்பின் ஏதோ ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இது நிச்சயமாக குழந்தைகள் சமாச்சாரம் அல்ல.

ஏனெனில்..

1960களின் இறுதியில் 'மாலைமதி காமிக்ஸ்' வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு இதழின் விலை 75 காசு. உங்கள் தாத்தாவோ, அப்பாவோ அந்த காலத்தில் வாங்கி பரண் மேல் போட்டு வைத்திருந்தார்களேயானால் தூசு தட்டி எடுத்து வையுங்கள். ஒரு இதழ் இன்று பிரிமீயம் ரேட்டில் 4000 ரூபாய் வரை விலை போக வாய்ப்புண்டு.

1987ல் வெளிவந்த லயன் காமிக்ஸ் தீபாவளி மலரின் விலை ரூ.10. இன்று அதனுடைய மதிப்பு ஆயிரம் மடங்கு மார்க்கெட்டில் உயர்ந்திருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் அந்தப் புத்தகத்தை ஒரு நண்பர் ரூ.10,000 கொடுத்து வாங்கியிருக்கிறார்.

நான் கூட சில ஆயிரங்களை கொட்டி, மிஸ்ஸாகிவிட்ட பழைய சில காமிக்ஸ்களை வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். உடனே சேல்ஸுக்கு கிடைக்குமா? படிக்க கிடைக்குமா? என்று பின்னூட்டம் போட்டு டார்ச்சர் செய்து தொலைக்காதீர்கள். காமிக்ஸ் விஷயத்தில் நான் ஒரு தீவிர சைக்கோ.

காமிக்ஸ் என்பது Passion சார்.. Passion.. ஸ்டேம்ப் கலெக்சன், காயின் கலெக்சன் மாதிரி..

70களிலும், 80களிலும் குழந்தைகளாக இருந்து ஒண்ணரை ரூபாய் இல்லாமல் காமிக்ஸ் வாங்க முடியாதவர்கள் இன்று லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் இழந்துவிட்ட பால்யகால ஒண்ணரை ரூபாய் பரவசத்தை இன்று ஆயிரங்களில், லட்சங்களில் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேற்றைய குழந்தைகள்.

கஷ்டப்பட்டு ஏதோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ் எல்லாம் அள்ளிவிட்டிருக்கோம். இப்போதாவது இது சீரியஸ் மேட்டர் என்று நம்புங்க ப்ளீஸ். ஏதோ பார்த்து போட்டு கொடுங்க சாமி.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட்..

மேலே நாம் குறிப்பிட்ட காமிக்ஸ் வெறியர்கள் சாதாரணமாகவே இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் என்று வெறியாட்டம் ஆடக்கூடியவர்கள். நான்கைந்து தீபாவளிகளாக பெரியதாக 'ஸ்பெஷல்' எதுவும் இல்லாமல் முடங்கிக் கிடந்தவர்கள். இந்த தீபாவளிக்கு 854 பக்கங்களில், 200 ரூபாய் விலையில் இந்திய காமிக்ஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 'லயன் ஜம்போ ஸ்பெஷல்' வெளிவருகிறது. கிட்டத்தட்ட 'எந்திரன்' ரிலீஸுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்த புக்குக்கும் இருக்கிறது என்றால் நம்புங்கள். 'தலைவா வா. தலைமையேற்க வா'வென்று காமிக்ஸ் ரசிகர்கள், லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயனுக்கு போஸ்டர் ஒட்டாததும், ஜம்போ ஸ்பெஷலுக்கு கட்டவுட் வைக்காததும்தான் பாக்கி.

854 பக்கமும் ஒரே கதைதான் என்பது இந்த ஸ்பெஷலின் ஸ்பெஷல். விஷ்ணுபுரத்தை மிஞ்சும் இந்த ஸ்பெஷலை கண்டால் ஜெயமோகன் நொந்துப் போவார். தீவிர காமிக்ஸ் ரசிகரான எஸ்.ராமகிருஷ்ணன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார். எஸ்.ரா மட்டுமல்ல.. இயக்குனர் மிஸ்கின், நடிகர் பொன்வண்ணன் மாதிரி நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் 'எக்ஸ்19' சீரியஸ் காமிக்ஸ் மிகப்பிரபலம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தனித்தனி புத்தகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதையிலிருந்துதான் 'வெற்றி விழா' திரைப்படத்தை பிரதாப் போத்தன் சுட்டார் என்று கூட கிசுகிசு உண்டு. கதையைப் படித்துப் பார்த்தால் அந்த கிசுகிசு உண்மைதான் என்றுகூட தோன்றும்.

கடற்கரையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்கிறான் ஹீரோ. முழித்ததும் தன் பெயர்கூட அவனுக்கு நினைவில்லை. தன் அடையாளத்தை தேடிப் புறப்பட்டவனுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள். அவன் நல்லவனா கெட்டவனா கொலைகாரனா தேசத்துரோகியா கல்யாணமானவனா பொண்டாட்டி இருக்கிறாளா என்று குழம்பித் திரிய வேண்டிய சூழல். சில பேர் அவனை வரவேற்கிறார்கள். பலர் அவனை கொல்லத் துடிக்கிறார்கள். நினைவிழப்பதற்கு முன்பான வாழ்க்கையை தேடிச் செல்லும் நாயகனின் கதையில் சோகம், மகிழ்ச்சி, ஆக்‌ஷன் என்று எல்லா மசாலா செண்டிமெண்டுகளும் உண்டு. கட்டத்துக்கு கட்டம் ஒருவகையான இலக்கிய சோகம் இந்த கதை முழுக்க ஊடே வந்துகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் 'சேது' படம் பார்க்கும் மனநிலை கூட தோன்றக்கூடும்.

ஓவியங்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய முத்துகள். இவ்வளவு சிறப்பான ஓவியங்களோடு உலகளவில் எந்த காமிக்ஸும் வந்ததில்லை என்று தாராளமாக பெட் கட்ட முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஓவியரின் துல்லியம், டீடெய்லிங் அபாரமாக அமைந்திருக்கும்.

ஆங்கிலத்தில் மொத்தம் 19 புத்தகங்களாக வெளிவந்தது.

தமிழில் 'இரத்தப் படலம்' என்று பெயரிட்டு மொழிமாற்றி லயன் காமிக்ஸ் வெளியிட்டு வந்தது. இப்போது ஒட்டுமொத்த 19 புத்தகங்களையும் ஒரே புத்தகமாக லயன் கொண்டு வருகிறது. இதுதான் லயன் ஜம்போ ஸ்பெஷல். 854 பக்கங்களில் காமிக்ஸ் என்று உலகளவில் இப்படியான ஒரு முயற்சி அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஆங்கிலத்திலேயே கூட ஒரே புத்தகமாக வந்ததில்லை. 19 புத்தகங்களையும் வாங்க ரூ.4000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு சேல்ஸ்மேனின் லாவகத்தோடு இந்தப் பதிவினை எழுதி வருகிறேன். அனேகமாக இன்னேரம் இப்புத்தகத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம். சாரி ஜெண்டில்மேன். காமிக்ஸ் கலெக்டர்ஸ் ஸ்பெஷலான இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்கவே கிடைக்காது.

வேறெப்படி வாங்குவது?

உடனடியாக ரூபாய் 230க்கு (புத்தகத்தின் விலை ரூ.200 + கூரியர் செலவு ரூ.30) மணி ஆர்டர் அல்லது "Prakash Publishers" என்ற பெயரில் காசோலை எடுத்து, Prakash Publishers, No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  04562 272649, 04562 320993 ஆகிய எண்களுக்கு (காலை 10.30 டூ மாலை 5.30) தொலைபேசியும் மேலதிக விவரங்களைப் பெறலாம்.

ஏற்கனவே 800 பிரதிகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிட்டது. நிறைய பக்கங்கள் என்பதால் 'பைண்டிங்' செய்வது கொஞ்சம் சிரமம். எனவே 50, 50 புத்தகங்களாக தயார் செய்து முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். முந்துவோருக்கு பிரதிகள் நிச்சயம் கிடைக்கும்.

ஜம்போ ஸ்பெஷலோடு லயன் காமிக்ஸாரின் தீபாவளி கொண்டாட்டம் முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து அதிரடியாக சரக்குகளை இறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களில் வெளிவர இருக்கும் புத்தகங்கள் : வெள்ளையாய் ஒரு வேதாளம் (சிக் பில்), சாத்தானின் தூதன் டாக்டர் செவன் (காரிகன்), காவல் கழுகு (டெக்ஸ் வில்லர்) ஆகியவை லயன் காமிக்ஸிலும், களிமண் மனிதர்கள் (இரும்புக் கை மாயாவி), கொலைகார கோமாளி (ஜானி நீரோ) ஆகியவை காமிக்ஸ் கிளாசிக்ஸ் பிராண்டிலும், விண்ணில் ஒரு குள்ளநரி (விங் கமாண்டர் ஜார்ஜ்), மரணத்தின் நிசப்தம் (ரிபோர்டர் ஜானி)  ஆகியவை முத்து காமிக்ஸ் பிராண்டிலும் வெளிவர இருக்கிறது. 75 ரூபாய் செலுத்தி மொத்தமாக இந்த 7 புத்தகங்களையும் கூட வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஏழு புத்தகங்களுக்கு பிறகு தமிழ் காமிக்ஸுக்கு புத்துயிர் பாய்ச்சும் மிகப்பெரிய முயற்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அது என்னவென்று ஜம்போ ஸ்பெஷலின் ஹாட்லைனில் ஆசிரியர் எஸ்.விஜயன் சொல்லியிருக்கிறார்.

ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்!

 காமிக்ஸ் குறித்த விரிவான, தொடர்ச்சியான தகவல்களுக்கு நண்பர் கிங்விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவை வாசிக்கலாம்!

 

22 அக்டோபர், 2010

வீம்புக்காரத் தமிழர்!

1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர், அவரே அவர் வீட்டில் கிணறு தோண்டிக் கொண்டிருக்கிறார் என்று கேட்டால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா?

மூன்று அடிக்கு மூன்று அடி குழி ஆரம்பத்தில் ரெடி. கேட்டவர்களிடம் தென்னம்பிள்ளைக்கான குழி என்றார். குழியின் அளவு பெரியதாகி பள்ளமாய் தோன்றியது. இப்போது கேட்டவர்களிடம் கழிப்பறைக்கான குழி என்றார். இன்னும் பள்ளம் பெரியதாகி, ஓரளவுக்கு கிணறு போன்ற தோற்றம் கிடைக்க அவரால் உண்மையை மறைக்க இயலவில்லை. "நானே சொந்தமாய் கிணறு வெட்டுகிறேன்" என்று சொன்னபோது, அக்கம் பக்கம் சிரித்தது. வேலையற்ற வேலை என்று தலையில் அடித்துக் கொண்டது.

அவரோ விடாமல் தோண்டி, தோண்டி ஒருநாள் இலக்கை அடைந்தார். ஊரெல்லாம் வற்றிக் கிடக்க, அவர் தோண்டிய கிணற்றில் மட்டும் நீர் சுரந்துக் கொண்டே இருந்தது. கேலி பேசியவர்கள் குடத்தை எடுத்துக் கொண்டுவந்து நீர் பிடித்துச் சென்றார்கள்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் இவரை வீம்புக்கார மனுஷன் என்கிறார்கள். வீம்புக்கு வேறு சில பெயர்களும் தமிழில் உண்டு. தன்னம்பிக்கை. விடாமுயற்சி. சுறுசுறுப்பு.

அந்த மனிதர் பொள்ளாச்சி நசன். தமிழ்க்கனல் என்ற பெயரில் இலக்கிய வட்டாரங்களில் பிரபலம். "எந்த வேலையையும் என்னால் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே நான் கிணறு தோண்டினேன். அது நிச்சயமாக வெட்டி வீம்பு அல்ல. செய்யும் வேலையை நெஞ்சில் நிறுத்தி, தொடர்ச்சியாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், சோர்ந்துவிடாது இலக்கை அடையும் வரை இயங்கிக்கொண்டே இருந்தால் வெற்றி என்பதைத் தவிர வேறென்ன கிடைக்கும்?" என்கிறார் நசன். இப்போது 58 வயதாகிறது. 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆசிரியப்பணியை செம்மையாக செய்து, கடந்தாண்டு அந்தப் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றிருக்கிறார். தமிழார்வலரான இவருடைய தமிழ்ப்பணிகள் தொடர்கிறது.

இவருடைய உண்மையான பெயர் நடேசன். பெயரில் "டே" இருப்பது அவருக்கு மரியாதைக் குறைவாக பட்டதால், அதை நீக்கிவிட்டும் 'வெறும்' நசன் ஆகிவிட்டார். "பின்னே நாமளே நம்மை 'டேய்' போட்டு கூப்பிடறதை அனுமதிக்கமுடியுமா?" என்கிறார் வீம்புடன். மன்னிக்கவும், தன்னம்பிக்கையுடன். நசன் என்ற இந்தப் பெயர் சுயமரியாதை கொண்டது மட்டுமல்ல. தனித்துவமும் பிரபலமும் கூட கொண்டிருக்கிறது. 'நசன், பின்கோடு - 642 006' என்று அஞ்சலட்டையில் முகவரி எழுதி அனுப்பினாலே அவருக்கு சென்று சேர்ந்து விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?

கிணறு வெட்டுவது, பெயரில் 'டே'யை நீக்கியது என்றில்லாமல், இன்னும் ஏராளமான 'இண்டரெஸ்டிங்' விஷயங்கள் பொள்ளாச்சி நசனிடம் உண்டு.

1985ல் விடுதலைப்பறவை என்ற பெயரில் ஒரு சிறுபத்திரிகையை நடத்தினார். கவிதை, துணுக்கு, குறிப்பு என்று பல்சுவையான விஷயங்களை அவரே எழுதுவார். உருட்டச்சு இயந்திரம் ஒன்றினை (கிட்டத்தட்ட ஜெராக்ஸ் மாதிரி – ஆனால் ஜெராக்ஸ் அல்ல) அவரே உருவாக்கி, அதில் 100 பிரதிகள் அச்சடித்து கிடைத்த முகவரிக்கெல்லாம் தபாலில் அனுப்பி வைப்பார். இதுமாதிரி மொத்தம் 34 இதழ்கள் மாதந்தோறும் உருட்டி, உருட்டி ஊருக்கெல்லாம் அனுப்பி வைத்திருக்கிறார். விடுதலைப் பறவையில் தனக்கு வாசிக்க கிடைத்த சிற்றிதழ்களை எல்லாம் பட்டியலிட்டு அறிமுகப்படுத்துவார்.

இதைக்கண்ட நண்பர்கள் சிலர், அவரவருக்கு தெரிந்த சிற்றிதழ்களை இவருக்கு அறிமுகப்படுத்த, சிற்றிதழ்களை அறிமுகப்படுத்தவென்றே ஒரு பத்திரிகை தொடங்கினாலென்ன என்றொரு 'ஐடியா' இவருக்கு தோன்றியது. ஆரம்பித்து விட்டது அடுத்த திட்டம். இம்முறை உருட்டச்சுப் பத்திரிகையாக இல்லாமல், நேரடியாக அச்சுப் பத்திரிகையாக மலர்ந்தது 'சிற்றிதழ் செய்தி'. முதல் இரண்டு இதழ்கள் அச்சகம் ஒன்றில் அச்சடிக்கப்பட்டது.

மூன்றாவது இதழிலிருந்து இவரே ஒரு அச்சகம் தொடங்கி அச்சிட ஆரம்பித்தார். வழக்கம்போல முதலாளியும் இவரே. தொழிலாளியும் இவரே. அச்சகம் என்றால் பெரிய பிரிண்டிங் பிரஸ் என்று நினைத்து விடாதீர்கள். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்பது மாதிரி, கையால் சுற்றும் 'டிரெடில்' மிஷின் ஒன்று. 20 கிலோ அலுமினிய அச்சு எழுத்துகள். 5 கிலோ தலைப்பு எழுத்துகள். அச்சுக்கோர்க்க பழகி இவரே ஒவ்வொரு எழுத்தாக எடுத்து கோர்த்து, பிழை திருத்தி, இயந்திரத்தில் ஏற்றி ஃபார்ம் தயாரிப்பார்.

மிஷினை கையால் சுற்றிவிட யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு, தாளை வைத்து அச்சாக்கி எடுப்பார். சிற்றிதழ் செய்தி என்பது சிற்றிதழ்களின் தொடர்புக்காகவும், இணைப்பிற்காகவும் வெளிவந்த இதழ். ஆரம்பத்தில் இருமாத இதழாக வந்தது. பின்னர் இலக்கிய அபிமானிகளிடம் பெரியளவிலான வரவேற்பினைத் இதுபெற்ற போதிலும் நசனால் தொடர்ந்து நடத்த இயலவில்லை. ஏனெனில் ஒவ்வொரு இதழைத் தயாரிக்கவும் அச்சுக்கோர்த்து, பிழைத்திருத்தி, எழுத்துகளைப் பிரித்துப் போட்டு வேலை பார்த்ததால் அவரது கண்பார்வை மங்கத் தொடங்கியது. கண்ணாடி நிரந்தரம் ஆனது.

மொத்தம் 34 இதழ்கள் சிற்றிதழ்ச் செய்தி வந்திருக்கிறது. அவற்றில் கடைசி சில இதழ்கள் கணினியில் அச்சுக்கோர்க்கப்பட்டு, ஆஃப்செட் முறையில் அச்சானவை. அந்த வேலையையும் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கி நசனே வடிவமைத்துச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைப்பட்ட காலத்தில் நிறைய சிற்றிதழ்கள் இவருடைய சேகரிப்பில் சேர்ந்ததால் அவற்றை தமிழகம் முழுக்க ஆங்காங்கே கண்காட்சிகளாக வைத்து இலக்கிய ஆர்வலர்களை கவர்ந்தார். மொத்தம் 15 இடங்களில் கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. மதுரைப் பல்கலைக் கழகத்தில் கண்காட்சி வைத்தபோது, சில தமிழ்சார்ந்த அறிவுஜீவிகள் 'விலங்கியல் படித்தவருக்கு தமிழில் என்ன வேலை?' என்று விசனப்பட, நம்மாளுக்கு மீண்டும் 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்தது. உடனே தமிழ்முதுகலை படித்து, இரண்டே ஆண்டுகளில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

1999 வரை சிற்றிதழ்ச் செய்தி இதழ் வெளிவந்தது. இக்காலக் கட்டம் வரை சுமார் 2700 வகையான சிற்றிதழ்கள் நசனின் சேகரிப்புக்கு கிடைத்தது. 1985க்குப் பிறகுவந்த கிட்டத்தட்டஎல்லா தமிழ்ச் சிற்றிதழ்களும் இன்று பொள்ளாச்சி நசனிடம் இருக்கிறது.

தமிழ்த்தேசிய சிந்தனையாளரான தோழர் தியாகு சென்னையில் ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கினார். அந்தப் பள்ளியின் ஆசிரியர்களோடு பழகக்கூடிய வாய்ப்பு நசனுக்கு கிடைத்தது. தாய்மொழிக் கல்வியில் அடிப்படைக் கல்வியை கற்பது ஒரு மாணவனின் அறிவுக் கண்ணுக்கு திறவுகோலாக இருக்குமென்று உணர்ந்தார். திருப்பூர், பல்லடம், கோபியென எங்கெல்லாம் தாய்த்தமிழ்ப் பள்ளி இயங்குகிறதோ அங்கெல்லாம் சென்று எப்படி நடத்தப்படுகிறது என்று ஆராய்ந்தார். வழக்கம்போல இவரே ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளியை சூளேசுவரன் பட்டியில் தொடங்கி இன்றும் நடத்தி வருகிறார். சுமார் 140 குழந்தைகள் படிக்கிறார்கள்.

சோதனைமுறையில் இப்பள்ளியில் புதுமையான கற்பித்தல் முறை ஒன்றினை நடத்தி பெரும் வெற்றியும் கண்டார். வெறும் 32 அட்டைகளில் சில பாடங்களை உருவாக்கினார். இவற்றை மட்டுமே படிக்கும் மாணவர்கள், வெறும் மூன்றே மாதங்களில் தமிழ்ச் செய்தித்தாளை படிக்குமளவுக்கு தமிழில் தேறிவிடுகிறார்கள். இந்த கற்பித்தல் முறை கோவை மாவட்டம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு நல்ல வெற்றியும் கண்டது. தமிழே அறியாத ஒருவரும் மூன்று மாதங்களில் தமிழைப் படிக்கக்கூடிய அளவுக்கு இந்த பாடங்களை எளிமையாக, நுணுக்கமாக அமைத்திருக்கிறார் நசன்.

தன்னுடைய பல்லாண்டுகால சிற்றிதழ் சேகரிப்புகளையும், எளியவழித் தமிழ்க் கற்பித்தலையும் சொந்தமாக தமிழம்.நெட் (thamizham.net) என்ற இணையத் தளத்தை தொடங்கி அதில் மொத்தமாக பதிவேற்றி இருக்கிறார். இந்த இணையத்தளத்தில் ஆங்கிலவழி தமிழ் கற்பித்தலுக்கான இணைப்பு இருக்கிறது. 35 பாடங்களில் தமிழைக் கற்றுக் கொள்ளலாம். இவை தொடக்க நிலைப் பாடங்கள். மேற்கொண்டு தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கும் சி.டி. வடிவிலான பாடங்கள், படவடிவக் கோப்புகள், அட்டைகள் என்று நிறைய உருவாக்கி வைத்திருக்கிறார். இணையம், சி.டி. போன்றவற்றை அவை தொடர்பான எச்.டி.எம்.எல் போன்ற கணினி தொழில்நுட்பங்களை கற்று, வழக்கம்போல நசனே உருவாக்கியிருக்கிறார் என்பதை நாம் குறிப்பிடாமலேயே நீங்கள் இன்னேரம் யூகித்து விட்டிருப்பீர்கள்.

"என்னுடைய இளமைக்காலம் உணவுக்காக ஏங்கிய காலம். பெருங்காய மூட்டை சுமந்து என்னுடைய அப்பா எங்களை காப்பாற்றினார். 74ல் பட்டம் முடித்த எனக்கு 80ல்தான் வேலை கிடைத்தது. 25 ஆண்டுகள் முழுமையான ஆசிரிய வாழ்வை வாழ்ந்திருக்கிறேன். நல்ல மாணவர்களை கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுக்கும் நிறைவு வேறு எந்தப் பணியிலுமே கிடைக்காது. நம் மாணவர்கள் நம்மை விடவும் சிறப்பாகவும், திறமையாகவும் இயங்குவது கொடுக்கும் நெகிழ்வுத்தன்மை வேறெங்கு கிடைக்கும். பணியிலிருந்து கிடைத்திருப்பது வயதுரீதியிலான ஓய்வு. என்னுடைய தமிழுக்கு ஏது ஓய்வு? அது தொடந்துகொண்டேயிருக்கும்" என்று நெகிழ்ச்சியாக முடிக்கிறார் நசன்.

என்றாவது, எங்காவது வீராப்பான ஒரு தமிழரை நீங்கள் காணக்கூடும். உற்றுப் பாருங்கள். ஒருவேளை அவர் பொள்ளாச்சி நசனாகவும் இருக்கக்கூடும்.

(நன்றி : புதிய தலைமுறை)

20 அக்டோபர், 2010

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!

1996ல் வை.கோபால்சாமியை விளாத்திக்குளம் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் கே.ரவிசங்கர். எம்.எல்.ஏ., ஆனபோது இவரது வயது 27 மட்டுமே. வைகோவை வென்றதால் திமுகவின் எதிர்கால நம்பிக்கை அரசியல்வாதியாக தென்மாவட்டங்களில் பார்க்கப்பட்டார். இவரைமாதிரி 'சிறுசு'களை களமிறக்கி 'பெருசு'களை வீழ்த்துவது என்பது திமுகவுக்கு புதியதல்ல.

1991ல் தென்சென்னை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் டாக்டர் ஸ்ரீதரன். இவர் யாரென்று தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல. அதிமுகவினருக்கே அப்போது தெரியாது. 90ஆம் ஆண்டு லாரி விபத்தொன்றில் ஜெயலலிதா படுகாயம் அடைந்தபோது, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் என்று தொகுதி அதிமுக புள்ளிகள் கிசுகிசுத்துக் கொள்வார்கள். எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் பலம் பொருந்திய டி.ஆர்.பாலு. ராஜீவ் படுகொலை அலையால் எதிர்பாராவிதமாக ஸ்ரீதரன் எம்.பி. ஆனார். பாலு, தென்சென்னையில் ஒருமுறை தோற்றவர் என்று சொன்னால் இன்று யாருமே நம்பக்கூட மாட்டார்கள்.

ஓவர்நைட் ஸ்டார்களான இருவரும் பிற்பாடு என்ன ஆனார்கள்?

ரவிசங்கருக்கு 2001ல் மீண்டும் போட்டியிட கழகம் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. அதே தேர்தலில் திமுகவும் ஆட்சியை இழந்தது. 2002ஆம் ஆண்டு ரவிசங்கர் அ.தி.மு.கவில் சேர்ந்தார். ஓரிரு வருடங்கள் கழித்து இலங்கைக்கு போதை மருந்து கடத்தியதாக கூறி காபிபோசா சட்டத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் பல லட்ச ரூபாய் மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே போலிஸ் காவலில் இருந்து தப்பி, கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நேற்று ரவிசங்கர் ஒரு கொள்ளைக் குற்றத்துக்காக சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீதரன் எம்.பி.யாக பெரியளவில் சோபிக்கவில்லை. கட்சிக்காரர்களோடும் 'டச்சிங்கில்' இல்லை. இன்றைய பதர்சயீத் மாதிரி அன்றைய ஸ்ரீதரனை சொல்லலாம். பிற்பாடு ஒருநாள் அவர் சிங்கப்பூரிலிருந்து திருட்டுத்தனமாக ஹார்ட் டிஸ்க் கடத்தியதாக சொல்லி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். கொஞ்சநாள் சுப்பிரமணியசாமியோடு சேர்ந்து ஜனதாக் கட்சிக் கூட்டங்களில் தலைகாட்டினார். இன்று எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

பதவியிலிருக்கும்போது வாழ்ந்த படோடபமான வாழ்வை பதவியிழந்த பிறகும் தொடர வேண்டியதாகிறது. இருக்கும்போதே இருப்பை பெருக்கிக் கொண்டவர்கள், இல்லாதபோதும் சமாளித்துக் கொள்கிறார்கள். ஏமாளிகளாய் வாழ்ந்தவர்கள், பதவியிறங்கியபிறகு திருடர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் மாறித் தொலைக்க வேண்டியிருக்கிறது. அரசியலை ஊழியமாகக் கொண்டவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ, வல்லவனாகவோ வாழ்வது சூழலைப் பொறுத்தது.

சினிமா நட்சத்திரங்களின் வாழ்வு மாதிரிதான் அரசியல்வாதிகளின் வாழ்க்கையும். வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

அ முதல் ஃ வரை இலவசமாய் இணையத்தில்..

தமிழ் இலக்கண நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், கவிதை-உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் சுமார் 400 புத்தகங்களை வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகும்? புத்தக அலமாரி தாங்குமா? சொந்தமாக வாங்க முடியவில்லை என்றாலும் நூலகத்துக்கு சென்று படித்தால், இவ்வளவற்றையும் படிக்க எவ்வளவு காலம் ஆகும்?

கவலையே வேண்டாம். இத்தனையும் உங்களுக்கு இலவசம். உங்கள் புத்தக அலமாரியில் இவற்றுக்கு இடஒதுக்கீடும் வேண்டாம். நூலகத்துக்கு பாதம் தேய நடக்கவும் வேண்டாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் கணினியில் இணைய இணைப்பை சொடுக்கினால் போதும். அத்தனையும் உங்கள் மவுஸின் கட்டுப்பாட்டில்.

அதிசயமாக இருக்கிறதா? தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகத்தை இணையத்தில் திறந்தோமானால் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்நூலகம் மொத்தம் பல்வேறு செயல்பாடுகளை கொண்டு தனித்துவத்தோடு இயங்கி வருகிறது.

தமிழ் இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தில் தொடங்கி புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம் என்று அறுவகை இலக்கணம் வரை தமிழின் ஆதார இலக்கணநூல்கள் 20 தொகுக்கப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறள், நாலடியார் தொடங்கி அத்தனை பதிணென்கீழ்க்கணக்கு நூல்களும் நூலகத்தில் உண்டு.

சிலப்பதிகாரத்தில் தொடங்கி தமிழின் முக்கிய காப்பியங்கள் அனைத்தும் இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இவை மட்டுமன்றி சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், சித்தர்பாடல்கள் என்று திகட்ட திகட்ட தமிழமுதம் வாரி வாரி வழங்கப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் ரோமன் வரிவடிவத்திலும் தனியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு அகராதிகள் தளத்தில் உண்டு. தமிழ் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) பத்து தொகுதிகள் கிடைக்கிறது. பல்வேறு துறைகளிலும் புழக்கத்தில் இருக்கும் புதிய கலைச்சொற்களை தொகுத்து கொடுக்கிறார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தொகுத்த சுவடிகளை, சுவடிக் காட்சியகமாக கண்முண்ணே விரிகிறது. சுவடிகளை இணையத்தில் விளக்கங்களோடு வாசிக்கலாம்.

இவை மட்டுமல்லாது, பண்பாட்டுக் காட்சியகம் ஒன்றும் சிறப்பாக இங்கே இயங்குகிறது. இதில் திருத்தலங்கள், திருவிழாக்கள், கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள் என்று தமிழருக்கான பாரம்பரியப் பெருமைகள் அனைத்துமே ஒலி-ஒளி காட்சிகளாக சேகரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் குறித்தோ அல்லது தமிழர் குறித்தோ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகம், போதும் போதுமென்று சொல்லக்கூடிய அளவுக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது.

ஒருமுறை இந்நூலகத்துக்குள் நுழைந்துவிட்டால் தமிழ் நம்மை ஈர்த்து இங்கேயே உட்கார வைத்துவிடும். இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை ஒருங்குறியில் (Unicode) மாற்றிவரும் பணிகள் நடந்துவருவதால், சில நூல்களை வாசிக்க எழுத்துரு தேவைப்படும். எனவே முதன்முதலாக நூலகத்துக்குள் நுழையும்போது, தேவைப்படும் எழுத்துருவை உங்கள் கணினியில் நிறுவிவிடுவது நல்லது.

இதுவரை ஏறக்குறைய இரண்டு லட்சம் வருகைகளை பெற்றுள்ள இந்த நூலகத்துக்கு நீங்களும்தான் போய்ப் பாருங்களேன்.

இணைய முகவரி : http://www.tamilvu.org/library/libindex.htm

(நன்றி : புதிய தலைமுறை)

19 அக்டோபர், 2010

குட்டிக்கதை!

ஜனவரி 30. தீண்டாமை எதிர்ப்பு தினம்.

அந்தக் கல்லூரியில் 'பெல்' அடிக்கப்படுகிறது. அடித்தவுடனேயே மாணவர்கள் அவரவர் வகுப்பறையில் எழுந்து நின்று தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வகுப்பறையே எழுந்து நின்று உரக்க உறுதிமொழி எடுக்க, அந்த மாணவன் மட்டும் நக்கலாக உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கண்ட பேராசிரியருக்கு கோபம். நேரடியாக மாணவனை முறைத்துக் கொள்ளவும் பயம் அல்லது தயக்கம். ஏனெனில் அம்மாணவன் வேறொரு பேராசிரியரால் அரசியல்மயப் படுத்தப்பட்டு வருபவன். இவருடைய கோபம் முழுக்க இப்போது அந்தப் பேராசிரியரின் மீது திரும்பியது.

நேராகப் பேராசிரியரிடம் சென்றாவர், "சார் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் உங்களாலேதான் கெட்டுப் போறாங்க. பாருங்க அந்தப் பையன் தீண்டாமை எதிர்ப்பு தினமும் அதுமுமா என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கான்?" பொரிந்துத் தள்ளினார்.

பேராசிரியர் அமைதியோடு, "பையனை கூப்பிட்டு விசாரிக்கிறேன்!" என்று அவரை சமாதானப்படுத்துகிறார்.

மாணவனை அழைத்துக் கேட்டார். "ஏன் அப்படி செஞ்சே?"

"என்னா சார் அநியாயமா இருக்கு? நான் எதுக்கு தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கணும். நான் யார் மேலே தீண்டாமையை கடைப்பிடிச்சேன். ஒரு தலித் என்பதால் என் மேல்தான் மத்தவனுங்க தீண்டாமையை பிரயோகிப்பானுங்க. அப்படியிருக்கையில் உறுதிமொழி எடுக்கச் சொல்லுறது என்னை கிண்டல் பண்ணுற மாதிரி இல்லை இருக்கு?"

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிஜமாகவே நடந்த சம்பவம் இது. மாணவன் : தை.கந்தசாமி. பேராசிரியர் : அ.மார்க்ஸ்

நேற்று 'அ.மார்க்ஸ் - சில மதிப்பீடுகள்' நூல் வெளியீட்டின் போது, அ.மார்க்ஸ் மேடையில் சொன்னது. மிக நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நிறைந்ததாக அம்மேடை இருந்தது.

அ. மார்க்ஸ் கலைஞர் மாதிரி. அவருடைய எதிரிகள் மட்டுமல்ல. நண்பர்களும் அவரோடு பல விஷயங்களில் முரண்படுகிறார்கள். ஆயினும் தமிழ் அறிவுச்சூழலில் கடந்த முப்பதாண்டுகளாக தொடர்ச்சியாக ஓய்வின்றி உழைத்து வரும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். தை.கந்தசாமி மாதிரி அவரால் அரசியல்மயப்படுத்தப்பட்டு வெளிப்பட்டவர்கள் குறைந்தது ஆயிரம் பேராவது இருப்பார்கள். இஸ்லாமியர் குறித்த இந்தியப் பொதுப்புத்தியில் இருந்து நான் வெளிவர பேராசிரியர் அ.மார்க்ஸின் எழுத்துகளே முக்கியக் காரணம்.

மணிவிழா காணும் பேராசிரியருக்கு வாழ்த்துகள்.

18 அக்டோபர், 2010

இரண்டு கற்பழிப்பு செய்திகள்!

சமீபத்தில் வாசிக்கக் கிடைத்த இரண்டு கற்பழிப்பு செய்திகள் :-


ஒன்று :

ஜிம்பாப்வே நாட்டில் நடந்த சம்பவம் இது. புலவாயோ பஸ் ஸ்டேண்டில் 26 வயதான போலிஸ்காரர் ஒருவர் பஸ்ஸுக்காக நின்றிருந்தார். அப்போது ஒரு கார் அந்த வழியாக வந்தது. காருக்குள் மூன்று பெண்கள் இருந்திருக்கிறார்கள். லிப்ட் தருவதாக சொல்லி போலிஸ்காரரை ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்.

காருக்குள் போலிஸ்காரர் திடீரென மயக்கமாகியிருக்கிறார். அனேகமாக அப்பெண்கள் மயக்க மருந்து பயன்படுத்தியிருக்க வேண்டும். மயக்கம் தெளியும்போது மூன்று பெண்களும் அவரை பாலியல் வன்புணர்வு செய்வதை அரைமயக்க நிலையில் உணர்ந்திருக்கிறார். 'வேலை' முடிந்தபிறகு அவரை காரை விட்டு தூக்கி எறிந்திருக்கிறார்கள். அவரது மொபைல் போனும், பர்ஸூம் அப்பெண்களால் களவாடப் பட்டிருக்கிறது.

இச்சம்பவத்துக்கு முன்பாகவும் ஹராரே, மாஸ்லிங்கோ ஆகிய இடங்களில் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக ஜிம்பாப்வே நாட்டு காவல்துறை அறிவித்திருக்கிறது. கடந்த 11 மாதங்களில் ஜிம்பாப்வேயில் மட்டும் 6 ஆண்கள் இதுபோன்ற சம்பவங்களில் கற்பிழந்ததாக தெரிகிறது. சில இடங்களில் துப்பாக்கி முனையில் வற்புறுத்தி கற்பழிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.


இரண்டு :

நவிமும்பையில் நடந்த சம்பவம் இது. சனிக்கிழமை இரவு ஒரு பள்ளி வளாகத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. அப்போது 30 வயதான பெங்காலி பக்தை ஒருவர் உடல்நலம் குன்றி மயக்கமுற்றிருக்கிறார்.

அருகிலிருந்த மருத்துவமனையான லோட்டஸ் ஆஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணிக்குள்ளாக அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் விஷால் (வயது 26) என்பவரால் அரைமயக்க நிலையில் இருந்தபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர், கத்தக்கூட திராணியின்றி இருந்த நிலையில் வலுக்கட்டாய உறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இத்தனைக்கும் அதே மருத்துவமனையில் அப்பெண்ணின் கணவரும் வேறு அறையில் இருந்திருக்கிறார்.


இந்த இரு சம்பவங்களின் அடிப்படையில், கருத்து கந்தசாமி ஆகி நாம் கருத்து எதையும் சொல்லப்போவதில்லை. இச்செய்திகளை வாசித்தபின்பு நீங்களே தேவையான கருத்துகளை சிந்தித்து விடுவீர்கள். ஆனால் முந்தைய சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அகலிகை காலத்திலிருந்து நம் பாரதம் கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை என்ற வேதனையை மட்டும் பகிர்ந்து கொள்கிறோம்.

15 அக்டோபர், 2010

பிருந்தாவனம்!

ரசிகர்கள் விசிலடித்து திரையரங்கின் திரை கிழிகிறது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவர்கள் மோட்சம் தியேட்டரின் திரையைக் காணலாம். Una my love போன்ற சீனே இல்லாத பிட்டுப் படங்களை போட்டுக் கொண்டிருந்த தியேட்டர் இது. எந்திரன் ஃபீவரின் போது ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதைப் போல எந்திரனை தெலுங்கில் ரிலீஸ் செய்தார்கள். கும்மிய கூட்டத்தைக் கண்ட திரையரங்கு நிர்வாகம், தெலுங்குப் படங்களுக்கு சென்னையில் இருக்கும் மவுஸை கண்டுகொண்டது. அடுத்தடுத்து அதிரடியாக தெலுங்கு ரிலீஸ். போனவாரம் கலேஜா. இந்தவாரம் பிருந்தாவனம். கீழ்ப்பாக்கத்தில் வியாழன் என்றாலே இப்போது திருவிழாதான்.

தேவுடுகாரின் தேவுடுகார பேரன் ஹீரோ. டைட்டிலிலேயே தேவுடுகாரின் பழைய 'மிஸ்ஸியம்மா' பாட்டு வண்ணம் சேர்க்கப்பட்டு ஓடுகிறது. அப்போது விசில் அடிக்கத் தொடங்கும் ரசிகர்கள், க்ளைமேக்ஸில் பேரனோடு கிராபிக்ஸில் தேவுடுகாரு கொஞ்சுவது வரை ஓயாமல் அடிக்கிறார்கள். தொண்டை என்னத்துக்கு ஆவது?

ஓபனிங் காட்சியில் நீச்சல்குளத்தில் இருந்து 'சுறா' மாதிரி ஹீரோ பாய்ந்துவருவதை காணும்போதே 'பகீர்' என்கிறது. நல்லவேளையாக அடுத்தடுத்த காட்சிகளில் வயிற்றுக்குள்ளிருந்து எழும்பிய திகில் பந்து அதுவாகவே காணாமல் போகிறது. ஏனோ தெரியவில்லை. ஜூனியர் என்.டி.ஆர். செய்யும் சேஷ்டைகள் எல்லாம் சூப்பராக தெரிகிறது. அதையே அட்சரம் பிசகாமல் தமிழில் இளையதளபதி செய்தால் மொக்கையாகப் போகிறது.

படம் முழுக்க பஞ்ச் டயலாக்குகள். வசனகர்த்தா தீயை உருக்கி மையாக நிரப்பி எழுதியிருப்பார் போல. ஜூனியர் என்.டி.ஆர் நடப்பது, திரும்புவது, பார்ப்பது என்று அவருடைய நடவடிக்கைகளை எப்படி வித்தியாசப்படுத்தலாம் என்று சிந்தித்ததிலேயே இயக்குனரின் ஹேர்ஸ்டைல், சோ ராமசாமியின் தலை மாதிரி ஆகிவிட்டிருக்கும். இனிமேல் ஜூ.என்.டி.ஆர் படங்களுக்கு ரசூல் பூக்குட்டியை வைத்துதான் ஒலிப்பதிவு செய்யவேண்டும். பின்னணி இசையில் அவ்வளவு ஆடம்பரம். தாங்கமுடியலை தேவுடா.

கதை கலக்கல் மசாலா. சமந்தாவும், ஜூ.என்.டி.ஆரும் காதலர்கள். சமந்தாவின் தோழி காஜல் அகர்வாலுக்கு ஊரில் அவசரக் கல்யாணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. காஜலுக்கோ யூ.எஸ். சென்று படிக்க ஆசை. கல்யாணத்தை நிறுத்த அவரது பாய்பிரெண்டாக ஜூ.என்.டி.ஆரை அவரது காதலியே 'ஏற்பாடு' செய்கிறார். ஒரு கட்டத்தில் காஜல் நிஜமாகவே லவ் செய்ய ஆரம்பித்து விடுகிறார். இதனால் விளையும் இடியாப்பச் சிக்கல்களை கிளைமேக்ஸில் அவிழ்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஹீரோவின் பெயர் கிருஷ்ணா. எனவே க்ளைமேக்ஸ் என்னவென்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

இந்தி தேசியப் படங்களில் இந்தியர்கள்-பாகிஸ்தானியர்கள் ஒற்றுமை வலியுறுத்தப்படுவது வழக்கம். இது ஆந்திரத் தேசியப் படமென்பதால் தெலுங்கானா - ஆந்திரப் பிரதேச ஒற்றுமை மறைமுகமாக வலியுறுத்தப் படுகிறது. தனிப்பட்ட மனிதர்கள் சிலரின் ஈகோவால் ஊர் பிரிந்து சண்டையிட வேண்டுமா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பி, இரண்டு ஊரை சேர்த்து வைக்கிறார் ஹீரோ. இந்த ஒற்றுமையின் விளைவாக 'பிருந்தாவனம்' எவ்வளவு மகிழ்ச்சியடைகிறது என்பதை சிலாகிப்போடு சொல்லுகிறது படம். பிருந்தாவனம் எனும் வீடு ஆந்திரப் பிரதேசத்தின் குறியீடு என்று எடுத்துக் கொள்ளலாம்.

வழக்கமான ஜூனியர் என்.டி.ஆர். ஃபைட்டிங்கில் இரத்தவெறியுடனான ஆக்ரோஷம். சுறுசுறுப்பான அதிவேக டேன்ஸூலு. அப்பாவிமுக ரொமான்ஸூலு. "நீதாண்டா ஒரிஜினல் வாரிசு" என்பது மாதிரி ஜூ.என்.டி.ஆருக்கு மட்டுமே பொருந்தக் கூடிய தீவிர குடும்ப அரசியல் டயலாக்குகளுக்கு பஞ்சமேயில்லை. சமந்தாவின் அழகு அபாரமானது. தேவகன்னியர்களை ஒத்தது. குளோசப்புகளில் காணும்போது அவரது அழகான ஆரஞ்சு சுளை உதட்டைப் பிடித்து கொஞ்சத் தோன்றுகிறது. எந்த உடை அணிந்தாலும், இவரால் அந்த உடைகளுக்கு அழகு கூடுகிறது. இவ்வளவு 'யூத்'தான படத்துக்கு சோகமூஞ்சியான காஜல் ஏன் இன்னொரு ஹீரோயின் என்றுதான் புரியவில்லை. அவரது தொப்புளைத் தவிர்த்து அவரிடம் வேறென்ன ஸ்பெஷாலிட்டி என்பதும் தெரியவில்லை.

படத்தின் முதல் பாதி பரபரப்பு. இரண்டாம் பாதி முழுக்க நகைச்சுவை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள் என, பிருந்தாவனம் - சரியான விகிதத்தில் மசாலா, காரம் தூக்கலாக சமைக்கப்பட்ட ஆந்திரா மெஸ் ஸ்பெஷல் மீல்ஸ்.

14 அக்டோபர், 2010

பரத்தை கூற்று - அனைவரும் வருக!

நண்பரும், படைப்பாளியுமான எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் இப்போது கவிஞராகவும் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறார். அவரது இரண்டாவது நூல்/முதலாவது கவிதைத் தொகுப்பு 'பரத்தை கூற்று' எதிர்வரும் சனிக்கிழமை (16.10.2010) அன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படுகிறது.

இடம் :
டிஸ்கவரி புக்பேலஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர், சென்னை-78.

வரவேற்புரை :
அகநாழிகை பொன்.வாசுதேவன்

புத்தகம் வெளியிட்டு சிறப்புரை :
எழுத்து எந்திரன் சாருநிவேதிதா

நன்றியுரை :
எழுத்தாளர்/கவிஞர் சி.சரவணகார்த்திகேயன்

காமம் தொடர்பான புத்தகம் என்பதால் சாருவின் பேச்சு காமச்சுனாமியாய் தாக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. எனவே உத்தம தமிழ் எழுத்தாளரின் ரசிகர்களும் முக்காடு போட்டுக்கொண்டாவது வந்து கூட்டத்தை ரசிக்கலாம். மாலை 4.50 மணியளவில் 'இலக்கிய ரோபோ சாருநிவேதிதா அகில உலக ரசிகர்மன்றம்' சார்பாக அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகமும் நடைபெறும்.

அனைவரும் வருக!

13 அக்டோபர், 2010

கொட்டையெடுத்த கீபோர்ட் புளி!

பலமுறை பலரால் கொட்டையெடுக்கப்பட்ட கீபோர்ட் புளி ஒன்று பெயரைக் குறிப்பிடாமல் என்னை 'சில்லுண்டி' என்று விளித்து, பதிவிட்டிருப்பதாக சில நண்பர்களுடைய ட்விட்டர் டி.எம்.களால் என்னுடைய இன்பாக்ஸ் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறது. சில்லுண்டியாக இருந்துவிட்டுப் போகலாம். ஆபத்தில்லை. இரட்டை நாக்கும், வஞ்சக நெஞ்சத்தோடே மற்றவர்களை அணுகும் அழுக்கு மனமும் எனக்கு படைக்கப்படவில்லை என்பதற்காக இயற்கைக்கு முதற்கண் நன்றி.

உருப்படாதது நாராயணன், அவருடைய பதிவில் குறிப்பிட்டிருக்கும் என்னுடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இதுதான் : "தமிழ் இணையம் குறைந்தபட்சம் ஒருவனையாவது கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" - இந்த சிந்தனைக்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருந்தாலும் (அவை பெரும்பாலும் ஃபேஸ்புக் தொடர்புடையவை), அது தன்னைத்தான் குறிக்கிறது என்று கீபோர்ட் புளி கருதுமேயானால், 'அது' (அஃறிணையாகதான் எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது நாராயணன், மன்னிக்க) சுயமோகத்தின் உச்சத்தை அடைந்து, கீழ்ப்பாக்கத்தை சென்றடையும் தகுதியைப் பெற்றிருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

அந்த இரட்டை நாக்கு கீபோர்ட் புலியோடு 'கருத்து மோதல்' எனக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் பொதுவாக ஏற்பட்டிருக்கிறது.

1) சாருநிவேதிதா குறித்த அந்த ஜென்மத்தின் இழிமொழிகள்

2) மசாலாப் படம் பார்ப்பவர்களை மடையர்கள் என்று அந்த ஜென்மம் விமர்சிக்கும்போது

இவை இரண்டுமே என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் நிகழ்ந்த விபத்து என்பதால், இவற்றைப் பற்றி விலாவரியாக எதுவும் விளக்கம் அளிக்கப் போவதில்லை. அவரவர் தேர்வு அவரவர்க்கு.

இந்த கொட்டையெடுத்த புளியை ஓரிரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்து உரையாடித் தொலைக்க வேண்டிய அபாக்கிய நிலைமை எனக்கு நேர்ந்து தொலைத்திருக்கிறது. அவ்வேளையில் இவரைப் பற்றிய ஒரு அனுமானத்துக்கும் வரமுடிந்தது. இவருக்கு நண்பர்களே இருக்க வாய்ப்பில்லை. இவர் மற்றவர்கள் பேசுவதை கேட்கவே விரும்புவதில்லை. இவர் சொல்லுவதை மற்றவர்கள் எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும். செலக்டிவ்வாக கள்ளத்தனப் பேச்சு சுபாவம் கொண்டவர். ஓக்கே. இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு. ஜோசியம் மாதிரி. கொஞ்சம் முன்னே பின்னே உண்மை நிலவரம் இருக்கலாம். ஆனால் இவரோடு பழகிய வேறு சில இணைய துரதிருஷ்டசாலிகளும் கிட்டத்தட்ட இதே மாதிரியான மதிப்பீட்டினை தனிப்பேச்சில் முன்வைக்கிறார்கள்.

கீபோர்ட் புளியின் கடந்தகால செயல்பாடுகளை லீசில் விட்டுவிடுவோம். அவற்றையெல்லாம் புரட்டிப் பார்த்து ரெஃபரென்ஸ் எடுக்க வேண்டுமானால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி நாம்தான் கீழ்ப்பாக்கத்துக்கு செல்ல நேரிடும். எதிர்வினை என்று உளறிவைத்திருக்கும் லேட்டஸ்ட் பதிவிலிருந்தே புளியின் இரட்டை நாக்கை புரிந்துகொள்ள முடியும்.

//என் பதிவுகள் மொக்கை எனத் தெரிந்தும் ஏன் வாசித்து துன்புறுகிறீர்கள், நான் உங்கள் பதிவுகளை புறக்கணித்து விட்டு செல்வதைப் போல் புறக்கணித்து செல்வதுதானே என்கிற என் கேள்விக்கு அவர் இதுவரை முறையான பதிலளித்தது போல் தெரியவில்லை. // என்று ரோஸாவசந்தைப் பார்த்து கேட்கிறார்.

ஆனால், அதற்கு சில பாராக்களுக்கு முன்பாக //இணையத்தில் இதுவரை இத்தனை கடுமையான மொழியை நான் உபயோகித்திருப்பது சாருவைக்குறித்துதான். வாசகர்களை ஆபாசமான மொழியிலும் சக எழுத்தாளர்களை வன்மத்துடன் தொடர்ந்து எழுதும் சாருவின் முன்னால் வைக்கும் என்னுடைய எதிர்ப்பு அரசியல் அது.// என்றும் எழுதித் தொலைக்கிறார்.

என்ன கருமம் அய்யா இது?

நம் புளி தினமும் சாருவைப் படித்துவிட்டு ஜீரணம் ஆகாமல் எதையாவது கழிந்து வைப்பாராம். ஆனால் ரோஸா மட்டும் இவரது கழிவுகளை புறக்கணித்து செல்ல வேண்டுமாம். ரோட்டில் செல்லும்போது, தெருவோரம் யாராவது கழிந்து வைத்திருந்தால் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டுதான் போவோம். ஏன் மூக்கைப் பொத்துகிறாய்? இங்கேதான் கழிந்து வைத்திருக்கிறோமே? வேறு வழியாகச் செல்ல வேண்டியதுதானே? என்று கேட்பது என்ன மாதிரியான லாஜிக் என்று தெரியவில்லை.

//ரோசாவின் பதிவுகளை நான் பொருட்படுத்தி வாசிப்பதோ பின்னூட்டம் இடுவதோ கிடையவே கிடையாது.//

//ரோசாவிற்காவாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பொருட்படுத்தி பதிலளிக்கலாம்.//

எப்படி இப்படி முன்னுக்குப் பின்னாக ஒரே பதிவில் ஒரு மனிதரால் எப்படி முரண்பட முடியுமென்று தெரியவேயில்லை.

உண்மையில் ரோஸாவசந்த் குறித்தெல்லாம் இவ்வளவு வன்மமாக இந்த கீபோர்ட்புளி எழுதும் அளவுக்கு தகுதியோ, தராதரமோ கொண்டவர் அல்ல. ரோஸாவசந்த் இணையத்தில் இதுவரை அவர் சந்தித்தவர்களில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு விஷயத்தில் முரண்பட்டே வந்திருக்கிறார். அதுகுறித்த சூடான விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார். ஆயினும் எங்கேனும் நேரில் சந்திக்க நேர்ந்தால் ஒரு அபாரமான புன்னகையோடு, அதே நபர்களை எதிர்கொள்ளும் பேராண்மை வாய்த்தவர். இந்த உம்மணாம் மூஞ்சி மாதிரி முகத்தை திருப்பி வைத்துக் கொள்ளும் மூணாங்கிளாஸ் மனோபாவம் அவரிடம் இல்லவே இல்லை. யார் யாரை என்ன சொல்லித் திட்டுவது என்று விவஸ்தை கிடையாதா?

"புறக்கணித்து விட்டு செல்வதுதானே?" என்று சுலபமாக கேட்கும் ஜென்மம், எந்திரன் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டார் என்பதை தமிழிணையம் அறியும். படம் பார்த்தவர்கள் கூட ஒரு விமர்சனப் பதிவோடு நிறுத்திக் கொண்டபோது, நம்முடைய கீபோர்ட் புலி ஐந்து பதிவுகளை வரிசையாக அடித்துவிட்டு ஹிட்ஸ் தேத்திக் கொண்டார். ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த நல்லவர், எந்திரனை கமுக்கமாக புறக்கணித்துவிட்டு போயிருக்க வேண்டியதுதானே? நியாயம், நேர்மை பேசிவிட்டு திருட்டு டி.வி.டி.யில் படம் பார்ப்பவர்களிடம் வேறு என்னத்தை எதிர்ப்பார்க்க முடியும்?

என்னுடைய அவதானிப்பில் அவருடைய உளவியல் பிரச்சினையாக இதைத்தான் பார்க்கிறேன். "இவ்வளவு அருமையாக எழுதுகிறோமே? நம்மை ஏன் யாரும் படிப்பதில்லை, பின்னூட்டம் போடுவதில்லை" என்று பல்லாண்டுகளாக அவராகவே மனதுக்குள் புழுங்கித் தவிக்கிறார். அவனவன் மொக்கையாக எழுதுவதற்கு கூட 100, 200 பின்னூட்டம் வருகிறதே என்று பொறாமைப் படுகிறார். உண்மையில் அவரைப்போல எழுதுவது மகா எளிது. எந்தவித நடைமுறை வாழ்வியல் அனுபவமும் இல்லாமல் பத்து மாத காலச்சுவடையும், ஆறுமாத உயிர்மையையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, 'இலக்கிய' மொழியில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் 'நல்ல' தமிழில் எழுதிவிட முடியும்.Content is the king. மாஸ் ஆடியன்ஸை address செய்பவர்களுக்கு நல்ல மொழி கூடத் தேவையில்லை. Interesting Content சுமாரான தமிழில் இருந்தாலே போதுமானது.

புளியிடம் அது சுத்தமாக கிடையாது. அது தேவையென்றால் ரோட்டில் இறங்கி நடக்க வேண்டும். ஒரு அடி ரோட்டுக்கு மேலே பறந்தவாறு சென்று கொண்டிருப்பவர் இப்படியான இடியாப்பங்களைதான் சுடமுடியும். புதியதாக படிப்பவர்கள் "நல்ல பதிவு, நல்ல மொழியாளுமை" என்று ஆரம்பத்தில் பின்னூட்டம் போடுவார்கள். தொடர்ச்சியாக இதே மாதிரி நான்கைந்து இடியாப்பங்களை வாசித்தவர்கள் அஜீரணம் ஆகி சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிடுவார்கள்.

எனவேதான் நம் கீபோர்ட் புளி, அடிக்கடி யாரையாவது வம்புக்கு இழுத்து, தான் லைம்லைட்டிலேயே இருப்பதாக கருதிக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறது. இது எக்ஸிபிஸனிஸ மனநிலை. //சாருவிற்குப் பிறகு நான் இத்தனை கடுமையாக எழுதியது ரோசாவைக் குறித்தான்// என்று அப்பட்டமாக புளுகுகிறது. உதாரணமாக அகில உலக அப்பாவி மன்றத் தலைவரான ஆசிஃப் அண்ணாச்சியிடம் கூட ஒருமையில் இவர் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டார் என்பது பலருக்கும் தெரியும். "நான் ஊரில் இருப்பவனையெல்லாம் திட்டுவேன், என்னை யாராவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தாங்கமாட்டேன்" என்று நினைப்பது மனநோயின் ஆரம்பக்கட்ட மனநிலையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்களில் இரண்டே இரண்டு வகைதான் உண்டு. ஆபத்தானவர்கள், ஆபத்தற்றவர்கள். கீபோர்ட் புளி முந்தைய வகையைச் சேர்ந்தது. ஏற்கனவே கீரப்பட்டவர்கள் ஏராளம். மற்றவர்களாவது உணர்ந்து தெளியவேண்டும்.

எதிர்வினையெல்லாம் எழுதித் தொலைத்து மாமாங்கமாகிறது. எனவேதான் கொஞ்சம் இப்பதிவில் சூடும், காரமும் குறைவாக இருக்கிறது. நாமென்ன தினமும் புளியை மாதிரி எவரிடமாவது சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமா என்ன? இந்தப் புளி சீரியஸில் இதுதான் முதலும் கடைசியுமான பதிவு. கீபோர்ட் புளி ரிட்டர்ன்ஸெல்லாம் கண்டிப்பாக வரவே வராது. ஏனெனில் நிஜமாகவே கடந்த சில காலமாக வேலை கொஞ்சம் டைட்.

12 அக்டோபர், 2010

விதை புதுசு! விளைச்சல் அமோகம்!!

பிரகாஷ்சிங் ரகுவன்ஷி. ஒரு சிறு விவசாயி. வாரணாசிக்கு அருகில் தாண்டியா என்ற பகுதியைச் சார்ந்தவர். உத்தரப்பிரதேச மாநிலம். விதையை விதைத்தோமா, அறுவடை செய்தோமா என்றில்லாமல் பிரகாஷ்சிங்குக்கு ஒரு தேசிய இலட்சியம் இருந்தது. தான் பிறந்த நாடு உணவுப் பாதுகாப்போடு விளங்க வேண்டும். உணவு பற்றாக்குறையால் ஒரு உயிர் கூட இங்கே பறிபோகக் கூடாது.

சிறுவயதில் பிரகாஷ் ஒரு சூட்டிகையான மாணவன். கல்வியில், விளையாட்டில் அவர்தான் நெம்பர் ஒன். ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சலுக்கு மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட மருந்து அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அலர்ஜி ஏற்பட்டு உடல்முழுக்க ஏகப்பட்ட உபாதைகள். கிட்டத்தட்ட கண்பார்வை பறிபோயிற்று.

பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு ஓரளவுக்கு பார்வை திரும்பியது. ஆனாலும் இன்றும் கூட அவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்கிறார். "வலிகளோடு வாழ பழகிக் கொண்டேன்" என்கிறார் பிரகாஷ். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கண்கூசுகிறது என்பதால், எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார். வெயில் தலையில் படும்போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது. எனவே தலையை தொப்பி அல்லது துண்டு போட்டு மூடிக்கொண்டுதான் வீட்டை விட்டு வெளியே வரமுடியும்.

அப்போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரால் மீளவே முடியாது என்று எல்லோரும் நினைத்தார்கள். திரும்பவும் பள்ளிக்கு திரும்பமுடியாத அளவுக்கு உடல்நிலை மோசம்தான்.

பிரகாஷின் அப்பா ஆரம்பப்பள்ளி ஆசிரியர். சிறுவிவசாயியும் கூட. பள்ளிக்கு செல்ல முடியாத காலங்களில் அப்பாவின் விவசாய நிலத்துக்கு சென்று பொழுதை போக்குவார். இயற்கையை நேசிக்கும் மனம் அவருக்கு இயற்கையாகவே வாய்த்திருந்தது. பச்சை வயல்களை பார்ப்பதிலும், குளுமையான வாசனையான வயற்காற்றை ரசிப்பதிலும் பிரகாஷின் காலம் கழிந்தது.

அடிக்கடி வயலுக்கு சென்று வந்ததில் சில விஷயங்களை அவரால் அவதானிக்க முடிந்தது. ஆரம்பத்தில் செழிப்பாக வளரும் பயிரைக் கண்டு, விளைச்சலை அனுமானிக்க முடியும். ஆனால் எங்கோ தப்பு நடந்து கொண்டிருந்தது. தொடர்ச்சியாக விளைச்சல் என்னவோ சுமார்தான். தொடர்ச்சியாக இதை கவனித்து வந்ததில் பிரகாஷுக்கு விவசாயம் குறித்த ஆர்வம் அதிகரித்தது. பிரச்சினை விவசாயியின் உழைப்பிலோ, நிலத்திலோ இல்லை. விதைக்கப்படும் விதைகளில்தான் என்று கண்டறிந்தார்.

சோதனை முறையில் ஒரு சிறிய நிலத்தில் ஒரே பயிரின் பல்வேறு வகை விதைகளை விதைத்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். ஓராண்டு ஆய்வுக்குப் பிறகு நல்ல விளைச்சலைக் கொடுக்கக்கூடிய விதைரகத்தை தானே உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. விவசாயம் தொடர்பான கண்காட்சிகளில் பங்கு கொண்டார். நிறைய விஞ்ஞானிகளையும், வேளாண்மை தொடர்பான அரசு அதிகாரிகளையும் சந்தித்து விவசாயம் தொடர்பான தனது அறிவினை வளர்த்துக் கொண்டார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த பேராசிரியர் மகாதிம்சிங், புதுரக விதைகளை இவர் கண்டறிய பின்னணியில் இருந்து ஊக்குவித்து வந்தார். தான் கண்டறிந்த புதுவகை விதைகளுக்கு பெரும்பாலும் 'குத்ரத்' என்றே பெயர்வைத்தார் பிரகாஷ். இச்சொல்லுக்கு இயற்கை என்று பொருள். கரிஷ்மா என்ற பெயரையும் சில விதைரகங்களுக்கு சூட்டியிருக்கிறார்.

'குத்ரத்' வகை விதைகளின் சிறப்பு என்ன?

நெல், கோதுமை, காய்கறிகள் என்று எல்லாவகைகளுக்கும் புதுவகை விதைகளை பிரகாஷ் கண்டறிந்திருக்கிறார். இவற்றின் சிறப்பு அமோக விளைச்சல். உதாரணத்துக்கு ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் குத்ரத் நெல், 25 முதல் 30 குவிண்டால் வரை விளைச்சலை கொடுக்கும். கோதுமை விதை, 18 முதல் 20 குவிண்டால் வரையிலான விளைச்சலை தரும். சாதாரணமாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விதைகளைவிட கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகமான விளைச்சலை குத்ரத் தருகிறது. இத்தனைக்கும் ரசாயனக் கலப்பில்லாத முழுக்க இயற்கை விவசாய முறையிலான விதைகள் இவை. கோதுமையில் மட்டும் 80 ரகங்கள், நெல்லில் 25 ரகங்கள், இன்னமும் மற்ற விவசாயப் பொருட்கள் பலவற்றுக்கும் ஏராளமான விதைரகங்களை உருவாக்கியிருக்கிறார்.

கண்டுபிடிப்போடு முடிந்துவிடுவதில்லை பிரகாஷின் பணி. தான் கண்டறிந்த விதைகளை, 14 மாநிலங்களுக்கு பயணித்து சுமார் 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாகவே வழங்கியிருக்கிறார். பனாரஸுக்கு அருகிலிருக்கும் தனது 15 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை குறித்த பயிற்சிகளையும் விவசாயிகளுக்கு வழங்குகிறார். நம் பாரம்பரிய விதை வகைகளை பாதுகாப்பதும், பரவலாக்குவதும் அவரது முக்கிய நோக்கம்.

ஆகமதாபாத்தைச் சேர்ந்த தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் இவரது முயற்சிகளுக்கு பெரியளவில் ஒத்துழைப்பு தந்துவருகிறது. ஆராய்ச்சிகளுக்கு பணரீதியிலான உதவி மற்றும் நாடு முழுக்க இருக்கும் விவசாயிகளை சந்திக்க பயணவசதி என்று இந்நிறுவனம் இவருக்கு உதவிவருகிறது.

பிரகாஷ்சிங்குக்கு 3 மகன்கள், 3 மகள்கள். மகள்கள் அனைவரும் நன்கு படித்திருக்கிறார்கள். அப்பாவோடு சேர்ந்து விவசாய விழிப்புணர்வுப் பணிகளில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய அளவிலான கண்டுபிடிப்புகளுக்கான விருதினை இருமுறை வென்றிருக்கிறார். ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் கலாமிடமும், ஒருமுறை தற்போதைய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டிலிடமும் இவ்விருதுகளை பெற்றார்.

ஒருமுறை புனேவுக்கு இவரது விதைரகங்களோடு விவசாயிகளை சந்திக்க சென்றார். அங்கிருந்த ஒரு விவசாயி, "ஷிர்டி சாயிபாபாவே உங்களை இங்கே எங்களை வாழவைக்க வரவழைத்தாக நினைக்கிறேன்" என்றாராம்.

"இதைவிட பெரிய பேறு எனக்கென்ன வேண்டும்" என்கிறார் பிரகாஷ்.

 
பிரகாஷ்சிங் கண்டறிந்த விதைரகங்களின் மாதிரியை (100 கிராம், 500 கிராம் பாக்கெட்டுகளில்), அவருக்கு கடிதம் எழுதி பெறலாம். அவரது முகவரி :
Praksh Singh Raghuvanshi 
Village Tadia, Post Jakhini, Dist. Varanasi, U.P. 
Mobile: 09956 941993
E-mail : kudaratraghuvanshi@hotmail.com.

(நன்றி : புதிய தலைமுறை)

11 அக்டோபர், 2010

என் கூட விளையாடேன்!

"ஆண்ட்டி. அனிதா இல்லையா?" - டீன் ஏன் பையனின் துள்ளல் குரல்.

"அவ மாடியிலே இருக்கா? ஏன் கூட விளையாட மாட்டியா?" நடுத்தர வயது ஆண்ட்டியின் கிறங்கடிக்கும் குரல்.

"ஆண்ட்டீ.. அது வந்து..."

"ஏன் எனக்கு வயசு ஆயிடிச்சின்னு நெனைக்கிறீயா? உனக்கு இன்வைட் அனுப்பினாதான் வந்து விளையாடுவியா? கம்மான்...."

"இனிமே யார் வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் விளையாடலாம். லாகின் பண்ணுங்க ஐபிஐபிஓ.காம்" - அறிவிப்பாளரின் வாய்ஸ் ஓவரோடு அந்த 'ரேடியோ கமர்சியல்' முடிகிறது. ஒரு குறும்பான 'கிரியேட்டிவ்' என்றாலும், கேட்டவுடனேயே பெருசுகளுக்கு 'பக்'கென்றாகிறது. சிறுசுகளுக்கு 'பகீரென்று' பற்றிக் கொள்கிறது. நமக்கே கூட அந்த ஆண்ட்டியோடு விளையாடிப் பார்க்கலாமா என்று ஆசை தோன்றுகிறது.

நிற்க. இம்மாதிரியான 'ஆண்ட்டி ஃபோபியா ஆசை' உங்களுக்கு அடிக்கடி தோன்றுகிறதா?

இதை உளவியல் நிபுணர்கள் 'இடிபஸ் காம்ப்ளக்ஸ்' (Oedipus complex) என்கிறார்கள். இதனை ஓடிபஸ் காம்ப்ளக்ஸ் என்றும் சிலர் உச்சரிக்கிறார்கள். ஆங்கில எழுத்துகளை பார்க்கும்போது ஓடிபஸ்தான் சரியானதாக தோன்றுகிறது. ஆயினும் பேச்சுவழக்கில் இடிபஸ் என்பது இயல்பானதாக இருப்பதால், நாம் இடிபஸ்ஸையே இந்த கட்டுரைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பஸ்ஸில் ஆண்டிகளை இடிக்கும் இளைஞர்களுக்கும் இடி-பஸ் காம்ப்ளக்ஸ்தான் இருக்கிறது என்பதை சொல்லவே தேவையில்லை. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நாற்பதை தொட்ட நடிகை, தன் வயதில் பாதியே இருக்கும் ஒரு இளைய நடிகரை அவ்வப்போது ஈ.சி.ஆருக்கு வீக்கெண்டுகளில் அள்ளிக்கொண்டு போவதாக ஒரு கிசுகிசு வாசித்திருப்பீர்கள். அந்நடிகருக்கு இந்த காம்ப்ளக்ஸ்தான் இருந்திருக்கும்.

டீனேஜில் இருக்கும்போது ஏதோ ஒரு மாலைமதியில் வந்த கதையில் முதன்முறையாக இப்படி ஒரு உளவியல் நோயை கேள்விப்பட்டேன். ஏராளமான பெண் சகவாசத்தால், கிளி மாதிரி மனைவியை சரியாக கண்டுகொள்ளாத கணவன். கிளி தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 17 வயது பையனோடு அவ்வப்போது டென்னிஸ் விளையாடுகிறது. டென்னிஸ் போரடிக்கும்போது கேரம், செஸ்ஸென்று முன்னேறி செக்ஸ் விளையாடுமளவுக்கு கொண்டுபோய் விடுகிறது. கடைசியில் பிரச்சினை 'கொலை' ரேஞ்சுக்கு சென்று முடிவதாக க்ளைமேக்ஸ். எழுதியவர் எஸ்.பாலசுப்பிரமணியமென்று மங்கலாக நினைவு. அந்தக் கதையில்தான் இடிபஸ் காம்ப்ளக்ஸ் குறித்து ஒரு அத்தியாயத்தில் விலாவரியாக படித்த நினைவு.

சிக்மண்ட் ப்ராய்ட் இந்த உளவியல் பிரச்சினை குறித்த நெடிய ஆய்வினை, தகுந்த கேஸ் ஸ்டடிகளோடு மேற்கொண்டிருக்கிறார். மிகச்சுருக்கமாக 'தன்னைவிட வயது மூத்த பெண்கள் மீது ஏற்படும் பாலியல் ஆசை' என்று நாம் இடிபஸ் காம்ப்ளக்ஸை பொதுவானதாக வரையறை செய்துக் கொள்ளலாம். மேலைநாடுகளில் கொஞ்சம் பச்சையாக இதை விளக்குகிறார்கள். அதாவது அம்மா மீதான பாலியல் ஆசை. பெண்களைப் பொறுத்தவரை உல்டா. அப்பா மீதான.. இதை எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் என்கிறார்கள். விலங்குகளைப் பொறுத்தவரை இது சகஜமான, இயற்கையான மேட்டர்தான். 'ஆறாவது அறிவு' பெற்றுவிட்ட மனிதக்குலம் இதை இயற்கைக்கு மாறானதாகவே கருதுகிறது. இம்மாதிரியான ஆசை சர்வநிச்சயமாக ஒரு சமூகக் குற்றம். சட்டப்படி குற்றமா என்று தெரியவில்லை.

மேற்கண்ட பாராவை வாசிக்கும்போதே கொஞ்சம் அருவருப்பாக குமட்டுகிறது இல்லையா? முற்றிப்போன இடிபஸ் காம்ப்ளக்ஸ் நிலையில் நீங்கள் இல்லை என்று மகிழ்ச்சியடையலாம். ஆனால் 'இடிபஸால்' பீடிக்கப்பட்டவர்களுக்கு இது இயல்பான, இயற்கையான ஆசைதான். உதாரணத்துக்கு ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் போன்ற ஆசை கொண்டவர்களுக்கு ஓரினச்சேர்க்கைதான் இயல்பானது. எதிர்பால் காமம் என்பது அவர்களுக்கு அருவருப்பு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இப்படித்தான் நாம் உளவியல் பிரச்சினைகளை புரிந்துகொண்டாக வேண்டும்.

இடிபஸ் என்ற பெயர் கிரேக்கப் புராணம் உலகுக்கு தத்தெடுத்து தந்தது. தந்தையைக் கொன்று தாயை மணந்தவனின் கதையில் வரும் கதாபாத்திரம். நம்மூர் விக்கிரமாதித்யன் கதைகளில் கூட இதுபோல ஒரு கதை உண்டு. அரசன் ஒருவன் நகர் உலா வரும்போது, அழகியப் பெண்ணைக் கண்டு காமுறுகிறான். இவனைக் கண்டதுமே அப்பெண்ணின் மார்பில் இருந்து பால் பீய்ச்சி அடிக்கிறது. அதைக்கண்டே அவள் தன்னுடைய தாய் என்பதாக உணர்வதாகப் போகும் கதை. பிள்ளையார் ஏன் பிரம்மச்சாரி என்பதற்கு ஊரில் ஒரு கதை சொல்லுவார்கள். தன் தாயைப் போலவே தாரம் வேண்டும் என்று தேடித்தேடி, கிடைக்காததால் அரசமரத்தடியில் போய் உட்கார்ந்துவிட்டார் என்பார்கள். இதெல்லாம் கூட ஒருவகையிலான இடிபஸ்தான்.

ரிப்போர்ட்டரிலோ, ஜூ.வி.யிலோ ஒரு தொடராக எழுதப்பட வேண்டிய மேட்டர் இதுவென்றாலும் அவசர அவசரமாக இக்கட்டுரையை முடிக்கிறேன். ஆக்சுவலி இன்று காலையில் நந்தனம் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருந்தேன். இடப்பக்கம் ஒரு சூப்பர் ஃபிகர் ஸ்கூட்டியில். இருபது வயதிருக்கலாம். ஸ்லீவ்லெஸ் கருப்பு சுரிதார் அணிந்திருந்தாள். எந்திரன் ஐஸ்வர்யாராயை மாதிரி இருந்த அவளை சைட் அடிப்பதை தவிர்த்துவிட்டு, வலதுப்பக்கமாக நின்றிருந்த சுமாரான ஆக்டிவா ஆண்டியை சைட் அடித்துக் கொண்டிருந்தேன். மூளையின் 'எண்டாக்ரீன்' சிஸ்டத்தில் ஏதாவது எர்ரர் ஆகிவிட்டதா அல்லது எனக்கு இடிபஸ் காம்ப்ளக்ஸ் வந்து தொலைத்துவிட்டதா என்ற அடிப்படை ஐயத்தின் விளைவே இந்தக் கட்டுரை.

ஆபிஸுக்கு வந்து சில இளைஞர்களிடம் விசாரித்துப் பார்த்தால், அவர்களும் என்னைப் போலவே 'ஆண்டி மேனியா'வால் பாதிக்கப்பட்டிருப்பது புரிகிறது. இது இயல்பானதுதான். தமிழ்ச் சமூக இளைய தலைமுறை 'இடிபஸ்' காம்ப்ளக்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதால்தான் ஆயாக்கள் தெறமை காட்டியதாக இருந்தாலும் 'தமிழ் பிட் இருக்கா?'வென்ற ஆவலான கேள்வியோடு பர்மாபஜாரில் அலைந்துக் கொண்டிருக்கிறது.

எச்சரிக்கை : தேவையான தரவுகள் எதையும் போதிய முறையில் ரெஃபர் செய்யாமல், அடாவடியாக எழுதப்பட்டது என்பதால் இந்தப் பத்தியில் நிறைய ஃபேக்சுவல் எர்ரர்ஸ் இருக்கலாம்.

7 அக்டோபர், 2010

மீண்டும் தாய் மடியில்...

தயவுசெய்து நம்புங்கள். மேக்கப் போட்டு தினமும் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும்போது கீதாவுக்கு வயது 9. தினமும் அதிகாலை 2 மணி வரை பணிபுரிய வேண்டியிருக்கும். "அந்த வயதிலேயே வாழ்க்கை மீது எந்தப் பிடிப்பும் இல்லாமல், மரணம் சீக்கிரம் வராதா என்று எதிர்ப்பார்த்து வாழ்ந்த கொடுமையான நாட்கள் அவை" என்று இப்போது சொல்கிறார் கீதா.

அவர் செய்துக்கொண்டிருந்த தொழில் : பாலியல்.

நேபாளத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கீதாவுக்கு இப்போது வயது 26. தூரத்து உறவினர் ஒருவர் மூலமாக இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தரகர் ஒருவருக்கு 9 வயதில் விற்கப்பட்டார். கண்பார்வையற்ற அவரது தாயாரிடம், அவரது மகள் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக பொய் சொல்லப்பட்டிருந்தது.

"தினமும் நிறைய வாடிக்கையாளர்கள். ஒத்துழைக்க மறுத்தால், எங்களை காசு கொடுத்து வாங்கியவர் ஆபாசமாக திட்டுவார். இரும்புத்தடி கொண்டு அடிப்பார். போதிய உணவில்லை. தூக்கமில்லை. ஐந்து ஆண்டுகள் அந்த நரகத்தில் வாழ்ந்தேன்" என்கிறார் கீதா. பதினான்கு வயதிருக்கும் போது ஒரு போலிஸ் அதிகாரியால் மீட்கப்பட்டு, காத்மாண்டுவில் இருக்கும் ஒரு மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார் இவர்.

இது கீதாவின் கதை மட்டுமல்ல. அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. நேபாளத்தில் இருந்து ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 பெண்கள் வரை நைச்சியமாக ஏமாற்றப்பட்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பாலியல் தொழில் செய்ய முறைகேடாக அனுப்பப்படுகிறார்கள்.

நேபாளக் கிராமங்களில் கல்வியறிவற்ற பெற்றோர்கள், தரகர்களால் ஏமாற்றப் படுகிறார்கள். தங்கள் மகள் வெளியூரில் நல்ல வேலை பார்த்து கைநிறைய சம்பாதிப்பதாக நம்பி ஏமாறுகிறார்கள். இந்த மனிதக் கடத்தல் தரகர்களுக்கு பல வருடங்களாக இது ஒரு நல்ல லாபம் தரத்தக்க தொழில்.

61 வயதான அனுராதா கொய்ராலா இந்த இழிதொழிலை ஒழித்துக் கட்டும் பணியில் தீவிரமாக இருக்கிறார். 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது 'மைத்தி – நேபாள்' அமைப்பு இதுவரை 12,000த்துக்கும் மேற்பட்ட நேபாளப் பெண்களை பாலியல் தொழில் படுகுழியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. காப்பாற்றப்பட்ட பெண்கள் பலரையும் அவரவர் பெற்றோர்வசம் ஒப்படைக்கிறது. ஆதரவில்லாத பெண்களுக்கு இவ்வமைப்பின் மறுவாழ்வு நிலையமே தஞ்சம்.

'மைத்தி' என்ற நேபாளச் சொல்லுக்கு 'தாய்' என்பது பொருள். எவ்வளவு பொருத்தமான பெயர் இல்லையா?

கொய்ராலாவின் சொந்தக் கதையும் சோகக்கதைதான். டீனேஜ் வயதில் ஒரு முறைகேடான உறவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இவர். அப்போது ஒரு ஆரம்பப்பள்ளியில் ஆங்கிலம் போதித்துக் கொண்டிருந்தார். தினம் தினம் அடி உதைதான். அந்த உறவிடம் இருந்து தப்பிக்க முயற்சித்து மூன்று முறை தோற்றார். யாரிடம் போய் இதையெல்லாம் புகார் தெரிவிப்பது, யார் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று திக்குத் தெரியாமல் தவித்தார்.

எப்படியோ அந்த உறவிடமிருந்து விடுதலை பெற்றபிறகு, அதுவரை தான் ஆசிரியத் தொழிலில் சம்பாதித்திருந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய கடை தொடங்கினார். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தன்னைப் போன்ற பெண்களையே பணிக்கும் அமர்த்தினார்.

1990களின் தொடக்கத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கொய்ராலாவைத் தொடர்புகொள்ள 'மைத்தி' உருவானது. பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, தேவைப்பட்டால் சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவது, பாலியல் தொழிலில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பெண்களுக்கு மறுவாழ்வு என்று மைத்தி தனது செயற்பாடுகளை உருவாக்கிக் கொண்டது.

காவல் துறையினர் துணைகொண்டு பாலியல் விடுதிகளை சோதனை செய்து பெண்களை மீட்பது, இந்திய-நேபாள எல்லையில் ரோந்து மூலமாக நடக்கும் மனித வணிகத்தை தடுப்பது போன்ற பணிகளில் மைத்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பதினேழு ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று மைத்திக்கு கிளைகள் இந்தியாவிலும், நேபாளத்திலும் ஏராளமாக உண்டு. மறுவாழ்வு முகாம், காத்மாண்டுவில் மட்டுமே இருக்கிறது. நம்பிக்கை மொத்தத்தையும் இழந்து, நோய்கண்டு, சிறுகுழந்தைகளோடு அல்லது கர்ப்பமடைந்த நிலையில் என்று பாலியல் முகாமிலிருந்து வெளியே வரும் பெண்கள் பலரும் நிச்சயமற்ற எதிர்காலத்தோடு வாழ வழியின்றி நிர்க்கதியாக தவிக்கிறார்கள். குறிப்பாக மனரீதியாக உடைந்துப்போயிருக்கிறார்கள்.

இதுபோல மறுவாழ்வு மையத்துக்கு வரும் பெண்களிடம் மைத்தி ஒரு கேள்வியையும் கேட்பதில்லை. அவர்கள் சரியான மனநிலைக்கு வரும் வரை காத்திருக்கிறது. அவர்கள் பாடலாம், ஆடலாம், நடக்கலாம், யாரிடமாவது பேசலாம். மொத்தத்தில் கூண்டில் வளர்க்கப்பட்ட கிளி, சிறகு விரித்து வானத்தில் பறப்பதற்கு ஒப்பான சுதந்திரத்தை மைத்தியில் பெறலாம். ஒரு தாய் தனது குழந்தை எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாளோ, அதுபோன்றுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும், சிந்திக்க வேண்டும் என்று மைத்தி விரும்புகிறது.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களையும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவில்லாத குழந்தைகளையும்கூட மைத்தி ஏற்றுக் கொள்கிறது. "யார் வேண்டுமானாலும் எங்களிடம் வரலாம். யாரையுமே வேண்டாமென்று என்னால் சொல்லவே முடியாது" என்கிறார் அனுராதா கொய்ராலா.

பழைய துயர வாழ்க்கையில் இருந்து மீட்கப்படுவதோடு யாருடைய துயரமும் முடிந்துவிடுவதில்லை. அவர்களுக்கு மறுவாழ்வு தருவது என்பது மீட்பினை விடவும் சிரமமான காரியம். மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை, பழைய தொழிலில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் சட்டரீதியிலான அறிவுரை மற்றும் கோர்ட் நடைமுறைகள் என்று அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மீட்கப்படும் பெண்களில் சிலரை மட்டுமே அவர்களது குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் இதர பாலியல் நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் நிலை பரிதாபமானது. இவர்களுக்காகவே ஒரு சிறப்பு முகாம் மைத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்று இங்கே கிட்டத்தட்ட 400 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மறுவாழ்வு வழங்கப்படுகிறது. நிறைய ஆசிரியர்களும், மருத்துவர்களும், பணியாளர்களும் இவர்களுக்கு சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். இங்கே பணிபுரியும் பணியாளர்களில் பலரும் 'மறுவாழ்வு' பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க இருந்து, இன்று மைத்திக்கு குவிந்துவரும் நிதியால் இவ்வமைப்பு இயங்க முடிகிறது.

'மறுவாழ்வு பெற்ற பெண்கள் ஒவ்வொருவரும், பொருளாதாரரீதியாக தத்தமது சொந்தக் காலில் நிற்கவேண்டும்' என்பதையே இவ்வமைப்பு தனது குறிக்கோளாக கொண்டிருக்கிறது. இங்கு வரும் பெண்கள் எந்தத் துறையில் பணியாற்ற விரும்புகிறார்களோ, அந்தத் துறையில் போதுமான பயிற்சியளித்து, வேலைவாய்ப்பினை பெற உதவுகிறார்கள். ஒரு பெண் பொருளாதாரரீதியாக நிமிர்ந்து நின்றாலே, அவளது கடந்த காலம் என்னவென்பதை எல்லாம் சமூகம் நோண்டிப் பார்ப்பதில்லை.

அனுராதா கொய்ராலாவும், மறுவாழ்வு வாழும் சுமார் ஐம்பது பெண்களும் அடிக்கடி சமூகப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். பாலியல் கடத்தல் குறித்து நகர்ப்புற விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி இந்திய – நேபாள் எல்லையில் ரோந்து நடத்தி, கடத்தப்படும் குழந்தைகளில்.. ஒரு நாளைக்கு நான்கு பேரையாவது மீட்கிறார்கள்.

"இந்த கடத்தல் தொழிலை தடுக்கும் பெண்கள் அனைவருமே முன்பு கடத்தப்பட்டவர்கள். அவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் என்ன பாடு படுவார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். நான் சொல்லாமலேயே இந்தப் பணியை மனமுவந்து அவர்கள் செய்கிறார்கள்" என்று பெருமிதப்படுகிறார் கொய்ராலா.

கொய்ராலாவின் சமூகப் பணிகளுக்காக உயரிய சர்வதேச விருதான Peace Abbey Courage of Conscience Award விருது பெற்றிருக்கிறார். சி.என்.என். இணையத்தளம், ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக இவரது பெயரை முன்மொழிந்திருக்கிறது. பட்டங்கள், பதவிகள் இவற்றைப் பற்றிய உவப்பு எதுவுமின்றி தொடர்கிறது கொய்ராலாவின் சேவை.

கட்டுரையின் தொடக்கத்தில் வந்த கீதாவை மீட்டு, மறுவாழ்வு வழங்கியிருப்பது மைத்தியே. இப்போது மைத்தியின் சமூக விழிப்புணர்வு முகாம்களில் கீதா ஒரு முக்கியமான பொறுப்பினை வகிக்கிறார். "தொலைந்துப் போன என் வாழ்வினை எனக்கு திரும்பப் பெற்றுத் தந்திருப்பவர் அனுராதா. மிச்சமிருக்கும் வாழ்வினை என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்காக வாழ்வேன்" என்று உருக்கமாக சொல்கிறார்.

மற்றவர்களுக்காக வாழ்வதுதானே வாழ்வு?