தமிழ்நாட்டில் ஒரு மோஸ்தர் உண்டு. பேசுவதற்கோ, போராடுவதற்கோ எதுவுமில்லை என்றால் மதுவிலக்கை கையில் எடுத்துக் கொள்வார்கள். மது சமூகத்தின் பிரச்சினையா என்று கேட்டால் ஆமென்று ஒப்புக் கொள்வதில் நமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அது மட்டுமே பிரதானப் பிரச்சினையுமல்ல.
காந்தியவாதிகளின் மதுவிலக்கு கோரிக்கையை நாம் சந்தேகிக்க முடியாது. அது அவர்களது கொள்கையின்பால் உருவாகும் எண்ணம். கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று முன்பு ஒருமுறை சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அப்போது பனைத்தொழிலாலர் நலவாரியத்தின் தலைவராக இருந்த குமரி ஆனந்தன் அந்த சிந்தனையை ஆரம்பத்திலேயே எதிர்த்தார். இத்தனைக்கும் பனைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் குமரியாரின் சொந்த சமூகத்தை சேர்ந்தவர்கள். தன்னுடைய சமூகத்தையே எதிர்த்துக்கொண்டு மதுவிலக்கு கோரிக்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த குமரியார் போன்றவர்களை நாம் மதிக்கலாம்.
பாமக தலைவர் ராமதாஸ் அடிப்படையில் மருத்துவர் என்பதால் மதுவுக்கு எதிரான எண்ணம் கொண்டிருக்கிறார். இந்த எண்ணத்தை தனது இயக்கத்தின் கொள்கையாகவும் முன்னிறுத்துகிறார். ஆனால் அவரது எண்ணத்துக்கு அவரது கட்சியிலேயே எவ்வளவு ஆதரவிருக்கிறது என்பது கேள்விக்குறிதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளிலேயே மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் கட்சிக்காரர்களாக இருக்க முடியாது என்கிற அம்சம் இருக்கிறது. இது நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
சமீபமாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ திடீரென்று மதுவிலக்கு போராட்டங்களில் ஈடுபடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அவர் சார்ந்திருந்த இயக்கத்திடம் இதற்கு முன்பாக இவ்விஷயத்தில் எப்போதாவது முரண்பட்டிருக்கிறாரா? வைகோ மட்டுமல்ல. எந்த திராவிட இயக்கத் தலைவராவது திடீரென்று ‘காந்தி வேஷம்’ போட்டால் நாம் சந்தேகித்தே ஆகவேண்டும்.
“கொஞ்சமாவது உலக அறிவு கொண்டவர்கள் யாரும் மதுவிலக்கை ஆதரிக்க முடியாது. மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு காந்தியாலும், ராஜாஜியாலும் பாராட்டப்பட்ட, எனது தோப்பில் இருந்த 500 தென்னைமரங்களை அதற்காக வெட்டிச்சாய்த்த நான் சொல்கிறேன்” என்று தந்தை பெரியார் எழுதுகிறார். 1937ல் முதன்முதலாக ராஜாஜி மதுவிலக்கை சோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் கொண்டுவரும்போது அதை கிண்டலடிக்கவும் பெரியார் தவறவில்லை. “ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே இந்த திடீர் யோசனைக்கு காரணம்”
பெரியார், ராஜாஜியின் மதுவிலக்கை வெறுமனே எதிர் அரசியல் என்கிற நிலையில் இருந்து மட்டுமே எதிர்க்கவில்லை. அக்காலத்தில் மதுவால் வந்த வருமானத்தில் பெரும்பகுதி கல்விக்காக அரசால் செலவழிக்கப்பட்டு வந்தது. பார்ப்பனரல்லாத மக்கள் கற்பதை ராஜாஜி விரும்பவில்லை என்பதாலேயே கல்விக்கு வருமானம் தரும் வழியான மதுவை தடை செய்கிறார் என்றும் பெரியார் குற்றச்சாட்டினை வெளிப்படையாக முன்வைத்தார். பெரியாரின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப ராஜாஜியின் காலத்தில் நிர்வாகச் செலவுகளை காரணம் காட்டி இரண்டாயிரத்து ஐநூறு பள்ளிகள் மூடப்பட்டதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மது அருந்துவதை பெரியார் ஒருவனுடைய தனிப்பட்ட உரிமையாக பார்க்கிறார். மதுவை எடுத்துக் கொள்வதும், நிராகரிப்பதும் அவனுடைய உரிமை, அதில் அரசாங்கம் தலையிட முடியாது என்பது அவரது வாதம். தன் மனைவியோடு ஒருவன் கலவி வைத்துக் கொள்வதை எப்படி அரசு தடை செய்யமுடியாதோ, அதுபோல மதுவையும் தடை செய்ய முடியாது என்றும் பேசுகிறார்.
எனவே பெரியாரின் வழித்தோன்றல்களான திராவிட இயக்கத்தார் திடீரென்று காந்தி குல்லா போட்டு மதுவிலக்குக்கான புரட்சியை முன்னெடுப்பது என்பது வெறும் அரசியல் சந்தர்ப்பவாதமே அன்றி வேறல்ல. அவ்வாறு மது ஒழிக்கப்பட வேண்டியது என்று நினைப்பவர்கள், முன்னெப்போதாவது இது குறித்து பேசியிருக்கிறார்களா, போராடியிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். 1993 வரை திமுகவில் இருந்த வைகோ மதுவிலக்குக்காக கட்சியிலோ, பொதுமேடைகளிலோ அல்லது ராஜ்யசபாவிலோ ஏதேனும் கருத்தை முன்வைத்திருக்கிறாரா?
ராஜாஜி காலத்தில் அமலுக்கு வந்த மதுவிலக்கை கலைஞர்தான் திரும்பப் பெற்று ஒரு தலைமுறையையே மதுவுக்கு அடிமையாக்கி விட்டார் என்கிற பிரச்சாரத்தை இப்போது வைகோ முன்வைக்கிறார். அவரது மதுவிலக்கு வேடத்துக்கு இதுவே போதுமான காரணமுமாக இருக்கிறது. மிகக்கவனமாக ஆட்சியிலிருக்கும் அம்மாவை சங்கடப்படுத்தாமல் தன்னுடைய வழக்கமான பாதயாத்திரை போராட்டமுறையை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
மதுவைப் பொறுத்தவரை அந்தந்த மாநில அரசுகளே, அதன் தலையெழுத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது இந்திய அரசியல் சட்டம். இதன்படி அப்போது குஜராத்தும், தமிழகமும் மட்டுமே மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தி வந்தன. மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி தருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அக்கொள்கை அமலில் இருப்பதால் தங்களுக்கும் அந்நிதியை வழங்குமாறு முதல்வராக இருந்த கலைஞர் அப்போது மத்திய அரசை கோருகிறார். ‘புதியதாக மதுவிலக்கு அமலுக்கு வரும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி’ என்று மத்திய அரசு மறுக்க, அதற்காகவே மதுவிலக்கை கலைஞர் 1971ல் வாபஸ் வாங்குகிறார். யார் மறுத்தாலும், ஊடக மாய்மாலங்களால் மறைக்க நினைத்தாலும் இதுதான் வரலாறு.
சட்டமன்றத்தில் அப்போது கலைஞர் பேசும்போது, “மதுவிலக்கை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால் அவருடைய தானைத் தளபதிகளாக விளங்கும் முதல் அமைச்சர்களாலும், மத்திய அரசை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் மதுவிலக்குக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளுக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்? ” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த திமுகவோடு நட்புறவில் இருந்த ராஜாஜியும், காயிதேமில்லத்தும் மதுவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரவேண்டாம் என்று கலைஞரிடம் கேட்டுக் கொள்கிறார்கள். தமிழக அரசின் நிதிநிலைமை மோசமாக இருப்பதாலேயே இப்போது இந்த முடிவுக்கு வரவேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும், சரியானதும் மீண்டும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் கலைஞர் சமாதானம் சொன்னார்.
அதன்படியே படிப்படியாக 1973ல் கள்ளுக்கடைகள் மீண்டும் மூடப்படுகின்றன. 1974ல் சாராயக்கடைகளும் மூடப்பட்டன. ராஜாஜிக்கும், காயிதேமில்லத்துக்கும் கொடுத்த வாக்கை கலைஞர் காப்பாற்றினார். இன்றுவரை மிகக்கவனமாக இது மறைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக கலைஞரை வில்லனாக குறிவைத்து இவ்விவகாரத்தில் பேசுகிறார்கள். எனவே, மதுவிலக்கினை திடீரென கையில் எடுப்பவர்களின் நோக்கம் எதுவென்பது தெளிவாகிறது.
எம்.ஜி.ஆர் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தபிறகு 1981ல் கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் மீண்டும் வருகிறது. தமிழ்நாடு வாணிபக் கழகம் எனப்படும் ‘டாஸ்மாக்’ 1983ஆம் ஆண்டுதான் உருவாக்கப்படுகிறது. இந்நிறுவனமே ஒட்டுமொத்த மதுவிற்பனைக்கும் பொறுப்பேற்கிறது. மிகக்கவனமாக மதுவிலக்கு பிரச்சினையில் எம்.ஜி.ஆரின் பாத்திரமும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. 2003ஆம் ஆண்டு ‘தமிழகத்தில் மது சில்லறை விற்பனை செய்ய அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக டாஸ்மாக் இருக்கும்’ என அத்திருத்தத்தில் இடம்பெறுகிறது. வைகோவுக்கு தைரியமிருந்தால், நேர்மையிருந்தால் இன்றைய டாஸ்மாக் சூழலில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்குமான தொடர்புகளையும் பேசட்டும்.
மதுவிலக்கு போராளி வைகோ நடுரோட்டில் நடந்து வருகிறாராம். டாஸ்மாக்கில் புரட்சி கண்ட புரட்சித்தலைவி வெயில் என்றும் பாராமல் அவரை சாலையில் சந்தித்து, எதற்காக இந்த போராட்டம் என்று கேட்கிறாராம். வைகோ விளக்குகிறாராம். தமிழ்நாட்டில் மேடைநாடகங்கள் அருகி வருகிறது என்று யார் சொன்னார்கள்?
இன்று திடீரென மதுவிலக்கு கொண்டுவரவேண்டுமானால் நமக்குத் தெரிந்து பிரதானமாக இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன.
ஒன்று. அரசின் நிதிநிலைமை ‘தள்ளாடும்’. குறிப்பாக தமிழக அரசு எளிய மக்களுக்காக தொடர்ச்சியாக அறிவித்து வரும் சமூகநலத் திட்டங்களுக்கான நிதி பெரும்பாலும் மது வருவாயிலிருந்தே வருகிறது. மதுவிலக்கு கொண்டுவரும் பட்சத்தில் இத்திட்டங்களை நிறுத்த முடியாது. இதற்கு தேவையான நிதி வருவாய்க்கு வேறேதேனும் ஆதாரத்தை தேடவேண்டும்.
இரண்டு. மதுவுக்கு அடிமையாகி விட்ட மக்களை திருத்துவது. மது கிடைக்கவில்லையெனில் கள்ளச் சாராயத்துக்கும் தயாராகவே இருக்கிறார்கள். மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்திலேயே கூட மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒரே சம்பவத்திலேயே மரணமடைந்தனர்.
அரசு, ‘டாஸ்மாக்’ நடத்துவதாலேயே மட்டும் மது குடிப்பதை ஊக்குவிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆணுறை அணிந்தால் எய்ட்ஸ் வராது என்று பிரச்சாரம் செய்து, இலவசமாக ஆணுறைகளை அரசு வழங்குவதை கள்ள உறவுகளை ஊக்குவிப்பதாக புரிந்துகொள்ள முடியுமா என்ன?
மது ஓர் அரக்கன் என்பதிலேயோ, அது சமூகப் பிரச்சினை, மக்கள் அதிலிருந்து வெளிவரவேண்டும் என்பதிலேயோ மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்பிரச்சினையின் பின்னணிகளை அலசி ஆராயமல் வெறுமனே பிளாக் & ஒயிட்டாக மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என்று போராடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு என்றில்லாமல் நாடு முழுக்க ஒரே மாதிரியான நிலையை ஏற்படுத்துவதற்கான விவாதத்தை முதலில் தொடங்கவேண்டும். மதுவிலக்கு கொள்கையை மனதளவில் ஏற்றவர்கள் இதற்காக இயக்கங்கள் தொடங்கி மக்களிடம் பேசவேண்டும். மக்களின் மனமாற்றமின்றி, பங்களிப்பின்றி எதுவுமே சாத்தியமில்லை.
சங்கக் காலத்தில் இருந்து குடித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரே நாளில் மாறிவிடுவார்களா என்ன? முள்ளில் பட்ட சேலை. பொறுமையாகதான் எடுத்தாக வேண்டும்.