31 ஆகஸ்ட், 2011

மங்காத்தா

நோட்புக்கை தூக்கிக் கொண்டு காலேஜூக்கு போகவில்லை. சுற்றி நூறு ஃபைட்டர்களை நிற்கவைத்து ஒத்தக்கையால் தட்டாமாலை சுற்றவில்லை. ஓபனிங் சாங் இல்லை. அச்சு பிச்சு பஞ்ச் டயலாக் இல்லை. கெட்டப் என்கிற பெயரில் கோமாளித்தனம் செய்யவில்லை. எவ்வளவு நாள் ஆகிறது ஸ்மார்ட்டான அஜித்தைப் பார்த்து.  “அடுத்த மே வந்தா 40 வயசுங்க” என்று ஒரிஜினலாக வெளிப்பட்டிருக்கிறார் அஜீத். மங்காத்தா – அல்டிமேட் ஸ்டாரின் அடுத்த கேம் ஸ்டார்ட்ஸ்...

ஒரு படத்தில் அதிகபட்சம் நான்கைந்து ட்விஸ்ட் இருக்கும். மாஸ்ராஜா ரவிதேஜாவின் படமென்றால் இருபது இருபத்தைந்து ட்விட்ஸ்ட். மங்காத்தா முழுக்க முழுக்க ட்விஸ்ட்டுதான். படம் முடிந்ததும் தலையெல்லாம் கிறுகிறுத்து விடுகிறது. இரண்டரை மணி நேர படத்துக்கு எழுபத்தைந்து சீன்கள். இந்தப் படத்தில் ஒரு இருநூறு சீன் இருக்குமோ?

முழுக்க முழுக்க அஜித் ராஜ்யம். பத்து வருடம் கழித்து கலக்கல் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ். குறிப்பாக இண்டர்வெல் பிளாக்கின் ஐந்து நிமிட தொடர் பெர்ஃபாமன்ஸில் துவம்சம். ‘தல’க்கு ஒரு ஆஸ்கர் பார்சல் ப்ளீஸ். அட்லீஸ்ட் பிலிம்ஃபேர்.

“நீங்கதான் சார் ஹீரோ” என்று சொல்லி, அர்ஜூனை நடிக்க வைத்திருப்பார்கள் போல. கால் மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து டொப், டொப்பென்று சுட்டுக்கொண்டே இருக்கிறார். அர்ஜூனுக்கும் வயசாயிடிச்சிங்க. கண்ணுக்கு கீழே கருவளையம் விழுந்து, தோல் சுருங்கி...

த்ரிஷா சும்மா தொட்டுக்க ஊறுகாய். ஹீரோயின் என்றாலும், இவரை விட வெயிட்டான கேரக்டரை லட்சுமிராய் தட்டிச் செல்கிறார். சென்ஸார் போர்டின் அட்டூழியத்தால், இவரது அழகான தொப்புள் பல காட்சிகளில் மறைக்கப்பட்டது தமிழ் ரசிகர்களுக்கு நேர்ந்த சோதனை. முன்பு க்ளிவேஜை கட் அடித்தார்கள். இப்போது தொப்புளையும் மறைக்கிறார்கள். அடுத்து இடுப்பே தெரியக்கூடாது என்று கண்டிஷன் போட்டுத் தொலைப்பார்களோ? மத்திய அரசின் இந்த அநியாயத்தை எதிர்த்து சாஸ்திரி பவன் முன்பாக மறியல் செய்தாக வேண்டும்.

கிரிக்கெட் சூதாட்டத்தை களமாக எடுத்துக் கொண்ட புத்திசாலித்தனத்துக்கு வெங்கட்பிரபுவுக்கு சபாஷ். ஆனாலும் ஐநூறு கோடி ரூபாயை தட்ஸ் லைக் தட் சூட்கேஸில் கொண்டுபோவது மாதிரி அங்கிட்டும், இங்கிட்டுமாக அலைய விடுவது கொஞ்சம் ஓவர். அணிலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரி, வெங்கட்பிரபுவுக்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரனால் சனி உச்சத்துக்குப் போகலாம். தேவையில்லாமல் இவருக்கு பில்டப் சீன்களை யோசித்து, யோசித்தே மற்ற விஷயங்களை கோட்டை விட்டுவிடுவார் போல.

படமாக்கம், இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, நடிகர்களின் நடிப்பு என்று ஆல் ரவுண்டும் சிக்ஸர். படத்தின் முதல் பாதி நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் ‘நறுக்’கென்று வந்திருக்கும். தேவையில்லாத சில பாடல்களும் எரிச்சல் மூட்டுகிறது. ஆனாலும் தீனாவுக்குப் பிறகு நடனமாட முயற்சித்திருக்கும் அஜீத்துக்கு சபாஷ்.

மாமாங்கத்துக்கு ஒருமுறைதான் அஜீத் படம் ஹிட் ஆகும். நல்லவேளையாக இந்த மாமாங்கம், அவரது ஐம்பதாவது படத்தின் போது யதேச்சையாக அமைந்துவிட்டது. அஜீத் ரசிகர்களுக்கு இந்த ரம்ஜான்தான் தீபாவளி.

மங்காத்தா – பர்ஸ்ட் ஹாஃப் வெளியே. செகண்ட் ஆஃப் உள்ளே.

அணில்!


எங்கள் வீட்டு தோட்டத்துக்கு எப்போது இவ்வளவு அணில்கள் வந்தது என்று சரியாக கணிக்க இயலவில்லை. முன்பெல்லாம் ஓரிரு அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதை கண்டிருந்தேன். இப்போது பார்த்தால் இருபது முப்பது அணில்கள் தென்னைமரங்கள் மீது ஏறியும், இறங்கியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. தென்னைமரத்தின் மீது மட்டுமல்ல, அவ்வப்போது தரையிறங்கி தரைமார்க்கமாகவே போர்டிகோவுக்கு முன்னால் இருக்கும் கொய்யாமரத்துக்கும் வந்துவிடுவதுண்டு. ஏதேனும் ஒன்றிரண்டு கொய்யாப் பிஞ்சுகள் இருந்தாலும் கூட விட்டுவைப்பதில்லை. துவர்ப்பாக இருக்கும் கொய்யாப்பிஞ்சுகள் அணில்களுக்கு எப்படித்தான் பிடிக்கிறதோ?

கொய்யாமரத்தின் எல்லாப் பிஞ்சுகளையும் கபளீகரம் செய்த அணில்கூட்டத்தின் பார்வை அடுத்தக்கட்டமாக செம்பருத்திச் செடியின் மீது விழுந்தது. எங்கள் வீட்டில் இருப்பது அடுக்கு செம்பருத்தி. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மட்டும் செம்பருத்தி மலர்களை பறிப்பது அம்மா. மீதி நாட்களில் நான்காவது வீட்டு மாமி பறித்துச் செல்வார். சிவப்பான அடுக்குச் செம்பருத்தி மலர் அணில்களின் கண்களுக்கு ஏதோ கனியாக தெரிந்திருக்கக் கூடும். ஏதோ ஒரு அணில் ஒரு செம்பருத்தி மலரை கடித்து சுவைத்துப் பார்த்திருக்கும் என்று நினைக்கிறேன். கசப்போ, இனிப்போ, சுவையோ இல்லாமல் ஒரு மாதிரி வழவழாவென்று சோப்பினை சாப்பிட்டது போல இருக்கும். நான் சோப்பையும் சரி, செம்பருத்தி மலரையும் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்.

அணில்களுக்கு செம்பருத்தி மலர்களின் சுவை பிடிக்காவிட்டாலும் அவற்றின் இதழ்களை கடித்து துப்புவது நல்ல பொழுதுபோக்காக அமைந்துவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் தினமும் இருபது, முப்பது மலர்கள் அந்த செடியில் பூக்கும். அப்படியே அள்ளிக்கொண்டு போவார் நாலாவது வீட்டு மாமி. பாவம் இப்போது அவருக்கு ஒருநாளைக்கு ஐந்து மலர் கிடைப்பதே அரிது.

காலையில் ஏழு, ஏழரை மணியளவில் கீச்.. கீச் என்ற சத்தம் காதைப் பிளக்கும். ஒரு அணில் கத்த ஆரம்பித்தால் அக்கம்பக்கம் இருக்கும் ஒட்டுமொத்த அணில்களும் கத்துவது வாடிக்கை. கூர்ந்துப் பார்த்தால் தான் அணில் கத்துவது தெரியும். அணிலின் சின்ன வாய் நொடிக்கு நான்கைந்து முறையாவது திறந்து மூடும். அந்த சின்ன வாயில் இருந்து இவ்வளவு சத்தம் வருவது படைப்பின் ஒரு ஆச்சரியம். ராமர் போட்ட நாமம் ஒவ்வொரு அணிலின் முதுகிலும் ஒரே மாதிரியாக இருப்பது இன்னொரு ஆச்சரியம்.

எல்லா அணிலும் ஒரே மாதிரியாக தான் நம் கண்களுக்கு தெரிகிறது. குறைந்தபட்சம் நாய்களையாவது இது வேற நாய், அது வேற நாய் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். ஒரு அணில் இன்னொரு அணிலை எப்படித்தான் அடையாளம் கண்டுகொள்ளுமோ தெரியவில்லை. அணிலுக்கு முதுகில் இருப்பதைப் போன்ற இதே நாமம் அருணை என்று சொல்லப்படும் ஊர்வன ஒன்றுக்கும், தண்ணீர் பாம்புக்கும் கூட இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவையும் கூட ராமருக்கு பாலம் கட்ட உதவியதா என்று தெரியவில்லை.

குருவிக்காரர்கள் எப்போதாவது எங்கள் தெருபக்கம் வரும்போது அணில்கள் ஆங்காங்கே கீச்.. கீச்.. என்று கத்தி தங்கள் இனத்தவரை எச்சரிக்கின்றன. அந்த நேரத்தில் ஒரு அணில் கூட நம் கண்ணில் படாது. எங்கேதான் சென்று ஒளிந்துகொள்ளுமோ தெரியாது. அணிலுக்கு கூட தங்கள் எதிரி யாரென்று தெரிந்திருப்பது வியப்புதான். குருவிக்காரர்களிடம் ஒரு முறை விசாரித்தேன், ‘அணிலை வேட்டையாடி என்ன செய்வீர்கள்' என்று.. ‘பிரியாணி பண்ணி சாப்பிடுவோம் சாமி. முயல் கறி மாதிரியே டேஸ்ட்டா இருக்கும்' என்றார்கள்.

முன்பெல்லாம் இரவில் டூவீலரில் வீட்டுக்கு வரும்போது பயமாக இருக்கும். ஏதாவது அணில் பாதையில் ஓடி சிக்கிக்கொள்ளுமோ என்று. கொஞ்சநாட்கள் அவதானித்ததில் தான் தெரிந்தது, அணில்கள் இரவில் எங்கோ போய்விடுகிறது. பகலில் தான் உலாத்துகிறது.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. எனக்கு ஞாயிறு விடிவது பத்து, பத்தரை மணிக்கு தான். அப்போது ஒரு எட்டரை மணி இருக்கலாம். என் படுக்கையறையில் பாதி தூக்கமுமாக, பாதிமயக்கமுமாக புரண்டுகொண்டிருந்தேன். சன்னலை யாரோ தட்டுவது ‘தட், தட்'டென சத்தம் கேட்டது. சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தபோது சன்னல் கண்ணாடியில் ஒரு வினோத விலங்கு போல எதுவோ தெரிந்தது. தூக்கம் களைந்து கூர்ந்துப் பார்த்தேன். அது ஒரு பெரிய அணில். குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்ததால் வேறு எதுவோ ஒரு விலங்கு போல தெரிந்திருக்கிறது, கிட்டத்தட்ட வவ்வால் மாதிரி.

அதன்பின்னர் அடிக்கடி அந்த அணிலை சன்னல் பக்கமாக பார்க்க முடிந்தது. சன்னலை திறந்து வைத்திருந்தால் சில நேரம் உள்ளே கூட வந்துவிடும். ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது எதையாவது வைத்திருந்தால் கொட்டிவிடும். அணில் மிக சுலபமாக மனிதர்களிடம் பழகுமாம். உணவு கொடுத்து பழக்கப்படுத்தி விட்டால் அடிக்கடி உணவுக்காக நம்மை நாடி வருமாம். செல்லப் பிராணிகள் என்றாலே எனக்கு அலர்ஜி என்பதால் அந்த அணிலிடம் நட்பு வைத்துக்கொள்ள நான் விரும்பாததால், அணிலை என் படுக்கையறையில் காணும் போதெல்லாம் துரத்தி அடிப்பேன். எந்த நாயை கண்டாலும் இன்னமும் கல்லெடுத்து அடிக்கும் வழக்கம் எனக்குண்டு.

இப்படியே சில காலம் போனது. ஒரு நாள் நள்ளிரவு இருக்கும், கீச்.. கீச்.. சத்தம் கேட்டது. மின்விசிறியில் இருந்து அதுபோல சத்தம் எப்போதாவதும் வருவது வழக்கம் என்பதால் கண்டுகொள்ளாமல் தூங்கினேன். மறுநாள் காலை மின்விசிறியை அணைத்தபின்னரும் கூட அந்த சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. நான் வாசித்த புத்தகங்களை கட்டாக கட்டி மேலே பரண் போன்ற ஒரு அமைப்பில் போட்டு வைத்திருப்பேன். அங்கிருந்து தான் சத்தம் வந்தது.

மேலே ஏறிப் பார்த்தபோது சணல், தேங்காய் நார் போன்றவையால் அமைக்கப்பட்ட கூடை போன்ற ஒரு கூடு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதை கையில் எடுத்ததுமே அதில் இருந்து பெரிய அணில் ஒன்று என் மீது ஏறி, குதித்து ஜன்னல் வழியாக ஓடியது. அவ்வளவு பெரிய கூட்டினை எனக்கு தெரியாமலேயே என் அறையில் அந்த அணில் எப்போதுதான் கட்டியதோ தெரியவில்லை. அந்த கூட்டில் ஒரு அணில் குட்டியும் இருந்தது. முடிகள் குறைவாக பார்ப்பதற்கு சிறிய மூஞ்சூறு போன்ற தோற்றம் அந்த அணிலுக்கு இருந்தது. குட்டி அணில் என்பதால் அதற்கு தகுந்தமாதிரி கொஞ்சம் சத்தம் குறைவாக கீச்.. கீச்.. என்றது.

என் படுக்கையறையில் ஒரு அணில் குட்டி போட்டு வசிப்பது ஏனோ எனக்கு அருவருப்பை தந்தது. எந்த தயவுதாட்சணியமும் காட்டாமல் அந்த கூட்டை எடுத்துச் சென்று தெருமுனையில் வீசினேன். அப்போது தான் அந்த அதிசயம். எங்கோ ஓடிச்சென்றிருந்த தாய் அணில் பெரும் சத்தம் கொடுத்துகொண்டே ஓடிவந்து, நான் தெருமுனையில் வீசிய கூட்டினை ஆராய்ந்து, கூட்டுக்குள் இருந்த குட்டி அணிலை வாயால் கவ்விக்கொண்டு நொடியில் ஓடி மறைந்தது. அதன் பின்னர் மறுபடியும் தாய் அணில் புதியதாக எங்காவது ஒரு கூடு கட்டியதா? அந்த குட்டி அணில் வளர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் நான் சன்னலை திறந்துவைப்பதில்லை. நள்ளிரவில் எப்போதாவது நல்ல தூக்கத்தில் இருக்கும்போது ‘கீச்.. கீச்' சத்தம் கேட்கும். கண்விழித்ததுமே நிசப்தமான அமைதி நிலவும். ஒருவேளை என் கனவில் அந்த குட்டி அணில் கத்துகிறதா இல்லை புதியதாக ஏதாவது கூடு கட்டப்பட்டு இருக்கிறதா தெரியவில்லை. பரண் மீது ஏறிப் பார்க்க வேண்டும்.

24 ஆகஸ்ட், 2011

பிறந்தநாள் பரிசு!

அது எத்தனையாவது பிறந்தநாள் என்று மிகச்சரியாக நினைவில்லை. நான்காவதோ, ஐந்தாவதோ அல்லது ஆறாவதோ படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. வெள்ளிக்கிழமை என்று மட்டும் சரியாக நினைவிருக்கிறது. ஏனெனில் காலையில் ‘சிறுவர் மலர்’ வாசித்திருந்தேன். அப்பா பொதுவாக எட்டு, எட்டரை மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார். யானை வருமுன்னே மணியோசை கேட்குமோ, கேட்காதோ தெரியாது. அப்பா வரும்போது சைக்கிள் பெல் தொடர்ச்சியாக அடிக்கும்.

அன்று இரவு பதினோரு மணி வரை சைக்கிள் பெல் அடிக்கவேயில்லை. அம்மாவுக்கு திக், திக். எனக்கோ காரணமில்லாமல் தூக்கம் வரவில்லை. ஒருவழியாக பதினொன்றரை மணியளவில் தொடர்ச்சியான சைக்கிள் பெல் கேட்டது.

அப்பா அவருக்கேயான பிரத்யேகமான ஜவ்வாது வாசனையோடு வந்தார். காலை ஏழு மணிக்கு அவர் நெற்றில் வைக்கும் விபூதி, குங்குமம் இரவு வரை அழியாமலேயே இருந்தது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.

ப்ரீப் கேஸ் திறந்தார். ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தார். அல்வா. தன் குழந்தைக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துவைத்துக் கொண்டு, வாங்கித் தருவதில்தான் ‘தந்தைமை’ அடங்கியிருக்கிறது. காலையிலேயே அவர் வழக்கமாக தரும் பரிசான பேனாவை தந்துவிட்டதால், வேறெதுவும் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இருந்தேன். அந்த சர்ப்ரைஸ் கிப்ட்டை எடுத்தார். லயன் காமிக்ஸ். டைட்டில் கூட இன்றும் நினைவிருக்கிறது ‘புரட்சித்தலைவன் ஆர்ச்சி’.

அந்த இரவு முழுக்க என்னுடையது. சுடச்சுட ஆர்ச்சியை வாசித்துவிட்டுதான் தூங்கினேன். இன்று பில்கேட்ஸ் தன்னுடைய பொண்ணை கட்டிக் கொடுத்து, சொத்து முழுவதையும் எனக்கு எழுதிவைத்துவிட்டாலும் கூட, ஆர்ச்சியை கையில் வாங்கிய அந்த சந்தோஷம் திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகம்.

அதே மாதிரியான மகிழ்ச்சியை இத்தனை ஆண்டுகள் கழித்து தோழர் அதிஷா மூலமாக நேற்று கிடைக்கப் பெற்றேன். காமிக்ஸ் ஆர்வலரான தோழர் ரிஷி எனக்காக அளித்திருந்த காமிக்ஸ்களை நேற்று மாலை கையளித்தார் அதிஷா. நேற்றைய இரவு லக்கிலுக்கின் ‘கவுபாய் எக்ஸ்பிரஸ்’சுடன் கழிந்தது.

* - * - * - * - * - *

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவும் ஒரு பிறந்தநாள்.

வழக்கமாக இருக்கும் லேசான கொண்டாட்ட மனநிலை கூட அன்றில்லை. நான்கு நாட்களுக்கு முன்பாகதான் அப்பா இயற்கையோடு இணைந்திருந்தார். அடுத்த இரண்டு நாட்களும் சிதைக்கு பால் ஊற்றுவது, அஸ்தியை கடலில் கரைப்பது என்று வழக்கமான மதச்சம்பிரதாயங்களோடு முடங்கிப் போனது.

அந்தச் சூழலில் நண்பர் அவரது தேனாம்பேட்டை அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். மீசையில்லாத முகத்தோடு வெளியே வர எனக்கே சகிக்கவில்லை. லேசான துக்க விசாரிப்புகளுக்குப் பிறகு, காரணம் ஏதும் சொல்லாமல் எல்டாம்ஸ் சாலையை ஒட்டிய சாலைக்கு வண்டியை ஓட்டச் சொன்னார். பாரதி புத்தகாலயம் வாசலில் நிறுத்தச் சொல்லி, உள்ளே சென்றார்.

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவர் இரு பை நிறைய ஏராளமான புத்தகங்களை கொண்டு வந்தார். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் பழுத்து இருக்கலாம் (துரதிருஷ்டவசமாக அப்புத்தகங்களில் பெரும்பாலானவை சிந்தனை, சித்தாந்தம், கோட்பாடுகள் தொடர்பானவை). ‘பிறந்தநாள் வாழ்த்துகள்டா தம்பி’ என்று சொல்லி கைகுலுக்கி புத்தகப்பைகளை என்னிடம் தந்தார். எனக்கே மறந்துப்போன பிறந்தநாள், திடுமென சஸ்பென்ஸாக நினைவூட்டப்பட்டது. ஆனந்த அதிர்ச்சி என்கிற சொல்லுக்கான அர்த்தம் புரிந்ததும் அப்போதுதான். அன்றைய நிலையில் நண்பரின் பொருளாதாரச் சூழலுக்கு, நிச்சயம் இப்பணத்துக்கு எங்காவது கடன்தான் வாங்கியிருக்க வேண்டும். கடன், வட்டியை மட்டுமல்ல. அன்பையும் வளர்க்கும்.

நண்பரின் பெயரை சொல்ல மறந்துவிட்டேனே?

அண்ணன் யெஸ்.பாலபாரதி

* - * - * - * - * - *

குமுதம் கார்ட்டூன் கலைஞர் பாலா கடந்த ஆண்டு பிறந்தநாளுக்கு அளித்த விலைமதிப்பில்லா அரிய பரிசு இது.

* - * - * - * - * - *

இத்தனை வருட பிறந்தநாள் அனுபவத்தில் கீசெயின், டிரெஸ், பெர்ப்யூம், சைக்கிள், செல்போன், செயின், மோதிரம், முத்தம், சரக்கு, லொட்டு, லொசுக்கு என்று என்னென்னவோ, ஏதேதோ பிறந்தநாள் பரிசுகள் கிடைத்திருந்தாலும், புத்தகங்களும் நண்பர்களும் மட்டுமே மறக்க முடியாத பரிசுகளாக என்றும் நினைவில் நீடிக்கிறார்கள்.

22 ஆகஸ்ட், 2011

கோமா

படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தேன். கண்களை திறந்ததும் தாங்க முடியாத கூச்சம், வலி. கிட்டத்தட்ட பத்தாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது நாட்களாக மூடியே கிடந்த இமைகளை திறப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. இமைகளுக்கு கூடவா துரு பிடிக்கும்? நன்கு கசக்கிவிட்டு மெதுவாக இமை திறந்தேன். வெண்மையான பரப்பு மட்டுமே என் கண்ணுக்கு தெரிந்தது. சிறு சத்தமும் இல்லாத சுடுகாட்டு அமைதி. ஒருவேளை பார்வை போய்விட்டதோ, காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதோ? எழுந்து அமர முயற்சித்தேன். முதுகிலும், இடுப்பிலும் மரணவலி.

வெள்ளை சுடிதார் அணிந்த பெண் ஒருத்தி ஓடிவந்தாள். நான் எழ முயற்சிப்பதை கண்டு அவள் விழிகளில் ஆச்சரியம். யாரையோ அழைக்க ஓடினாள். அவளது செருப்புச் சத்தம் டக், டக்கென காதுகளில் கேட்டது. காது கேட்கிறது. பார்வையும் தெரிகிறது என்பது உறுதியானது.

நான் எங்கிருக்கிறேன்?

பக்கவாட்டுச் சுவரைப் பார்த்தேன். தினக்காலண்டர் ஒன்று மாட்டியிருந்தது. ஒருவழியாக நிலவரத்தை புரிந்துகொண்டேன். இது ஒரு மருத்துவமனை. லேசாக அடித்த டெட்டால் நெடி இதைப் புரியவைத்தது. காலண்டரில் இருந்த தேதி ஆகஸ்ட் 20, 2041.

அப்படியெனில், மிகச்சரியாக முப்பது ஆண்டுகளாய் நினைவில்லாமல் வீழ்ந்து கிடக்கிறேன். அப்போது எனது வயது இருபத்தி இரண்டு என்றால், இப்போது எனக்கு வயது ஐம்பத்தி இரண்டு.

வெள்ளை கோட்டு மாட்டிய, கருப்பு பிரேம் கண்ணாடியோடு, கழுத்தில் ஸ்டெதஸ்கோப்போடு ஒரு நடுத்தர வயது மனிதர், அந்த வெள்ளைச் சுரிதார் பெண்ணோடு படபடப்போடு ஓடிவந்தார்.

என் தோளைப் பிடித்து ஏதோ இந்தியில் கேட்டார். புரியவில்லை. என்னை ஏதோ வடமாநிலத்தில் பிடித்து வைத்திருக்கிறார்களா?

“யூ நோ தமிழ்?” நல்லவேளையாக எனக்கு ஆங்கிலம் மறந்துவிடவில்லை.

“நோ பிராப்ளம். ஐ நோ இங்க்லீஷ் லிட்டில். திஸ் ஈஸ் இண்டியா. இஃப் யூ ஃபீல் யூ ஆர் எ இண்டியன், பர்ஸ்ட் யூ மஸ்ட் லேர்ன் ஹிண்டி”

நூறு வருஷமாகவே இந்திக்காரர்களோடு இதே ரோதனை. மொழிவெறியர்கள். ‘சுர்’ரென்று எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன். எனக்கு என்ன ஆனது என்பதை நினைவுபடுத்த தொடங்கினேன்.

அன்று காலை பைக்கில் அண்ணாசாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தேன். ஹிண்டு ஆபிஸுக்கு எதிர்புறமாக, புதிய தலைமைச் செயலக வாசலில் இருந்து பேருந்து நிறுத்தத்தில் அவள் எனக்காக காத்திருந்தாள். பி.ஆர்.ஆர். & சன்ஸை கடக்கும்போதே அவளைப் பார்த்து கையாட்டினேன். அவளும் பதிலுக்கு கையாட்டினாள். ஒரு ‘யூ’ டர்ன் அடித்து அவளை பிக்கப் செய்யவேண்டும். பெரியார் சிலைக்கு அருகில் இருந்த சிக்னல் சிகப்பு விளக்கில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பச்சை விளக்குக்காக காத்திருக்க பொறுமையில்லை. முன்னால் இருந்த கார் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற, கிடைத்த சந்தில் பைக்கை செலுத்தி வேகமாக திருப்பினேன். சிவானந்தா சாலையில் இருந்து ஹார்ன் அடித்துக்கொண்டே வேகமாக வந்த அந்த காரில் அனேகமாக ‘பிரேக்’ வேலை செய்யாமல் போயிருக்க வேண்டும். இடதுபுறமாக அதே வேகத்தில் மொத்தமாக அவன் திருப்ப, கார் இரண்டு முறை புரண்டு வந்து என் பைக்கின் மீது மோத, நொடிகளில் நிகழ்ந்துவிட்ட இந்த விபத்தில் தூக்கியெறியப்பட்ட நான், சாலை நடுவிலிருந்த விளக்குக் கம்பத்தில் தலைமோதி கீழே விழுந்தேன். எழ முயற்சித்தபோது, பொலபொலவென்று தலையிலிருந்து கொட்டிய ரத்தம் பார்வையை மறைத்தது. தூரத்தில் அவள் பதறியவாறே ஓடிவருவதுதான் நான் கண்ட கடைசி காட்சி.

இதோ கண் விழிக்கும்போது முப்பது வருடங்கள் ஓடிவிட்டிருக்கிறது.

டாக்டர் பாதி ஆங்கிலத்திலும், மீதி இந்தியிலும் என்னைப் பற்றியும், பொதுவாகவும் சில விவரங்களை சொன்னார்.

மண்டையில் நான்கு முறை அறுவைச்சிகிச்சை நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் என்னை கருணைக்கொலை செய்யச்சொல்லி என் பெற்றோர் இந்திய அரசுக்கு மனு போட்டிருக்கிறார்கள். அந்த மனுவை ஏற்கக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் உச்சநீதி மன்றம் வரை சென்று, இன்றளவும் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் அப்பாவும், அம்மாவும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்து விட்டார்கள்.

இந்தியா மிகவும் மாறிவிட்டது. உலகின் நெ.1 நாடாகிவிட்டது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனியாக ஒரு அடையாள அட்டை உண்டு. அந்த அட்டை இல்லாதவர்கள் – அதாவது இங்கே வாழத் தகுதியற்றவர்கள் என்று அரசால் நம்பப்படுபவர்கள் - ஏழ்மையான நாடான அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார்கள். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அந்நாடு மனிதர்கள் வாழத்தகுதியற்ற பிரதேசம். இவ்வகையில் இங்கே வெகுவாக மக்கள் தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்தியாவின் மக்கள் தொகை இருபது கோடி மட்டுமே. கொலைகாரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் கூட நம் நாட்டில் மரணத்தண்டனை கிடையாது. ஊழல்வாதிகளுக்கு மட்டுமே மரணத்தண்டனை என்பதால் இங்கு ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

“எனக்கு அடையாள அட்டை இருக்கிறதா?”

“இல்லை. சுயநினைவோடு இருப்பவர்களுக்கு மட்டுமே அட்டை வழங்கப்படும். பிரச்சினையில்லை. நீங்கள் ஒரு வாரத்துக்குள் எப்படியாவது அட்டை வாங்கிவிடலாம். எங்களது தலைமை மருத்துவ அதிகாரி உங்களைப் பற்றிய விவரங்களை குறிப்பிட்டு, ஒரு சான்றிதழை கையளிப்பார். அதை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருக்கும் குடியுரிமை அலுவலகத்தில் தந்து, அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். உங்களைப் பற்றிய விவரங்களை அவர்களுக்கு எங்கள் நிர்வாகம் அங்கே உடனடியாக அனுப்பிவிடும்”

“நுங்கம்பாக்கம்.. சாஸ்திரிபவன்? நான் எங்கே இருக்கிறேன்?”

“சென்னையில்தான் இருக்கிறீர்கள். இது தமிழக அரசின் தலைமை மருத்துவமனை”

அரசு மருத்துவமனையில் இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகள் அடங்கிய அறையாக நான் இருந்த அறை இருந்தது. மருத்துவம் முற்றிலும் இலவசமாம். வெள்ளை சுரிதார் நர்ஸ் இந்தியில் சொன்னாள்.

கண்ணாடி ஒன்றினை கொண்டுவந்து காட்டினாள். நரை விழுந்து, முகம் கறுத்து, கன்னங்கள் உள்வாங்கி.. இது நான் தானா?

உண்ண உணவு கொடுத்தார்கள். உடுத்திக் கொள்ள உடையும் கொடுத்தார்கள். செலவுக்கு கொஞ்சம் பணமும். சான்றிதழ் கொடுத்து கை குலுக்கி, மருத்துவமனையே திரண்டு வந்து எனக்கு பிரியாவிடை கொடுத்தது. பலகாலமாக என்னை கவனித்த வார்டு பாய்கள் மார்போடு அணைத்து விடை தந்தார்கள். இவர்கள் எல்லாம் யாரென்றே எனக்குத் தெரியாது. ஆனால், என் மீதுதான் எத்தனை அன்பு? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

வெளியே வந்தேன். எதிரில் பி.ஆர்.ஆர். & சன்ஸ் அதே பழமையான கம்பீரத்தோடு காட்சியளித்தது. குழம்பிப்போய் நானிருந்த மருத்துவமனையை பார்த்தேன். அடடே! அப்போது புதிய தலைமைச் செயலகமாக இருந்த கட்டிடம் அல்லவா இது?

சாலையில் பெரிய நடமாட்டம் இல்லை. இங்கிருந்த மக்கள் எல்லாம் எங்குதான் போனார்கள். அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். அட, கார்கள் எல்லாம் இறக்கை வைத்து பறக்கின்றன. பறக்கும் வாகனங்கள் வந்துவிட்டதா.. அறிவியலின் அதிசயம்தான் என்னே?

பேருந்து நிறுத்தம் மாதிரி இருந்த இடத்துக்கு வந்தேன். இங்கேதான் அவள் எனக்காக காத்திருந்தாள். அவள் இப்போது எங்கே இருப்பாள், எப்படி இருப்பாள், எனக்காக இன்னும் காத்திருப்பாளா? – முப்பது வருடங்கள் ஓடிவிட்டது. எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக யோசிக்கிறேன். அவளுக்கு திருமணம் ஆகியிருக்கும். குழந்தை பெற்றிருப்பாள். குழந்தைக்கே குழந்தை பிறந்து பாட்டியாகியிருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது.

மஞ்சள் வண்ணத்தில் லுங்கியைத் தூக்கி கட்டியிருந்த பச்சைத்தமிழர் ஒருவரை கண்டேன். நம் பண்பாட்டு அடையாளமான லுங்கி மட்டும் மாறவேயில்லை.

“ஏம்பா. நுங்கம்பாக்கத்துக்கு எப்படி போறது, ஏதாவது பஸ்ஸு கிஸ்ஸூ இருக்கா?”

“க்யா?” என்றான்.

அடங்கொக்கமக்கா. ஒட்டுமொத்தமாக எல்லாப் பயலும் இந்திக்காரன் ஆகிவிட்டானா? அப்போதுதான் புரிந்தது. மருத்துவமனையில் கூட யாருமே என்னிடம் தமிழில் பேசியதாக நினைவில்லை. தமிழ் மெல்ல சாகும் என்றார்கள். இவ்வளவு சீக்கிரமாகவா?

“அய்யா! தங்களுக்கு நிஜமாகவே தமிழ் தெரியாதா?”

“கொஞ்சா கொஞ்சா பேசுறான்” அடகுக்கடை சேடு மாதிரியே பேசினான். ஆனால் இவனைப் பார்த்ததுமே தெரிகிறது. இவன் நிச்சயம் கொண்டித்தோப்பு தமிழன்.

அவனோடு பேசி, சாஸ்திரி பவனுக்கு எப்படி செல்வது என்பதை புரிந்துகொண்டேன். இருபது வருடங்களுக்கு முன்பாகவே பேருந்து என்கிற வாகனம் காலாவதியாகி விட்டிருக்கிறது. எங்கு செல்ல வேண்டுமானாலும் பறக்கும் வாகனம் சல்லிசான வாடகைக்கு கிடைக்கும். ஏ.டி.எம். சென்டர் மாதிரி அருகிலிருந்த ஒரு கண்ணாடிக்கூண்டை காட்டினான். அங்கு சென்று கணினியின் தொடுதிரையில், நமக்கு வாகனம் வேண்டுமென்பதை பச்சைநிற (இந்த நிறத்தை விடமாட்டான்களே?) பட்டனை தொட்டால்.. ஐந்து பத்து நிமிடத்தில் அங்கேயே வாகனம் வந்துவிடும்.

அதே மாதிரி செய்து, வாகனத்தை வரவைத்து, விண்ணில் பறந்தேன். நான் அதுவரை ஃப்ளைட்டில் கூட போனதில்லை. சன்னல் கண்ணாடியில் சென்னையைப் பார்த்து மிரண்டேன். அந்தக் காலத்தில் சன் டிவியில் தமிழில் போடும் ஹாலிவுட் டப்பிங் படங்களில் கூட இம்மாதிரியான காட்சிகளைப் பார்த்ததில்லை. இப்போதும் சன் டிவி இருக்கிறதா.. அமெரிக்கா ஏழை நாடாகி விட்டது என்றார்களே.. ஹாலிவுட் என்ன ஆகியிருக்கும்? – ஒரு நிமிடம் கூட இதையெல்லாம் யோசித்திருக்க மாட்டேன்.

“சாஸ்திரி பவன்” என்று குரல் கொடுத்தான் வாகன ஓட்டி. அதற்குள் வந்துவிட்டதா?

சட்டைப் பையில் இருந்து ஒரு கரன்ஸி நோட்டை எடுத்து நீட்டினேன். அதுபோல என்னிடம் நிறைய நோட்டுகள் இருந்தன. உண்மையில் இந்த நோட்டுக்கு என்ன மதிப்பு என்று எனக்குத் தெரியாது. இளம் மஞ்சள் வண்ணத்தில் அந்த கரன்ஸி நோட்டை வாங்கியவன், சிகப்பு கலர் நோட்டுகள் மூன்றினை திருப்பித் தந்தான்.

“டேக் இட்” பெருந்தன்மையாக சொன்னேன்.

“டோண்ட் என்கரேஜ் டிப்ஸ். திஸ் ஈஸ் தி பர்ஸ்ட் ஸ்டெப் ஆஃப் கரெப்ஷன்” தெளிவாக நெற்றியில் அடித்தமாதிரி சொன்னான். அட, இந்தியா நிஜமாகவே திருந்திவிட்டதா?

சாஸ்திரி பவனுக்குள் நுழைந்தேன். ஆங்கிலத்தில் விசாரித்தேன். நான் பார்க்கவேண்டிய குடியுரிமை அதிகாரியிடம் ஒரு கருநீலச்சீருடை அணிந்த பணியாளர் அழைத்துச் சென்றார்.

அந்த அதிகாரிக்கு நாற்பத்தி ஐந்து வயது இருக்கலாம். என்னைவிட ஏழெட்டு வயது சிறியவர்தான். முன்வழுக்கையை மறைக்கும் வகையில் தலை சீவியிருந்தார். மெல்லிய பிளாட்டின பிரேம் கண்ணாடி அணிந்திருந்தார்.

மருத்துவமனையில் எனக்குக் கொடுத்த சான்றிதழ்களை காண்பித்தேன். அவற்றைப் பார்த்துவிட்டு கம்ப்யூட்டர் போல இருந்த ஏதோ ஒரு மெஷினில், எதையோ சரிபார்த்தார். அவரது முகபாவம் மாறியது.

“மன்னிக்கவும். உங்களுக்கு தேசிய அடையாள அட்டையை தரமுடியாது”

“ஏன்? நான் முப்பது வருடங்களுக்கு முன்பாக நினைவிழக்கும் போது இந்திய குடிமகனாகதானே இருந்தேன்?””

“ஆமாம். ஆனால் அதற்குப் பிறகு இந்தியா எவ்வளவோ மாறிவிட்டது. இந்தியாவின் இன்றைய சட்டதிட்டங்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இங்கே வசிக்க நீங்கள் தகுதியற்றவர் ஆகிறீர்கள்”

“இது அநியாயம்”

“இல்லை. இதுதான் சட்டம். உங்கள் பெற்றோர் எழுதிவைத்திருக்கும் உயிலின் படி நீங்கள் பலநூறு கோடிகளுக்கு அதிபதி. அவையெல்லாம் விரைவில் அரசுடைமையாகும்”

“ஆபிஸர். நான் இங்கே வாழ வேறு வழியே இல்லையா? வேண்டுமானால் என்னுடைய சொத்துக்களில் பாதியை உங்கள் பெயருக்கு....”

“இங்கே லஞ்சம் வாங்குவது மரணத்தண்டனைக்கு உரிய குற்றம் என்று 2020ல் சட்டம் இயற்றப் பட்டிருக்கிறது. லஞ்சம் கொடுப்பவர்களுக்கு சாட்டையடி மாதிரியான தண்டனைகள் உண்டு. நீங்கள் இவ்வாறு பேசியதை நான் புகாராக எழுதிக் கொடுக்க விரும்பவில்லை. ஏனெனில் உங்களுக்கு சட்ட திட்டம் குறித்த அறிவில்லை. எனவேதான் உங்களுடைய விண்ணப்பித்தை மறுதலிக்கிறேன்” – நீலச்சீருடை பணியாளருக்கு கண்சாடை காட்டினார்.

அவசரமாக என்னை எழுப்பி அழைத்துப்போன நீலச்சீருடையிடம் பார்வையாலே கெஞ்சினேன். ஏதும் பேசாமல் கிட்டத்தட்ட என்னை அந்த ஆள் இழுத்துப்போனார்.

நுழைவாயிலுக்கு அருகே இழுத்து வந்தவர், “ஒரே ஒரு வழியிருக்கு” என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு கிசுகிசுப்பாக சொன்னார்.

“என்ன வழி?” எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை எனக்கு.

“லஞ்சம்”

“அதைத்தான் வாங்க மாட்டேன் என்கிறாரே?”

“லஞ்சத்தை வாங்க லஞ்சம் தந்தால் ஆயிற்று!”

“லஞ்சத்தை வாங்க லஞ்சமா?”

“ஆமாம். இப்போதெல்லாம் இதுதான் இங்கே நடைமுறை. லஞ்சம் வாங்குவது மரணத்தண்டனைக்கு உரிய குற்றம் என்பதால் யாரும் சுலபமாக வாங்கிவிடுவதில்லை. எனவே அவர்களை லஞ்சம் வாங்க வைக்க, படியக்கூடிய ஒரு தொகையை லஞ்சமாக தந்தாகவேண்டும். எப்படி கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது என்பதையெல்லாம் நான் விலாவரியாக சொல்கிறேன். ஆனால் இதை சொல்லுவதற்காக எனக்கு லஞ்சமும், அந்த லஞ்சத்தை வாங்கிக் கொள்ள கூடுதல் லஞ்சமும் தந்தாக வேண்டும்” கண்ணடித்தபடியே, லேசான புன்னகையோடு சொன்னார்.

இரண்டு மூன்று தினங்களில் எல்லாம் ஆயிற்று. குடியுரிமை அதிகாரி, நீலச்சீருடை மற்றும் வேறு சில அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் லஞ்சமும், அந்த லஞ்சத்தை வாங்க லஞ்சமுமாக பல கோடிகளை அழுதேன். குடியுரிமை அதிகாரிக்கு கொடுத்த லஞ்சம் சில கோடிதான். ஆனால் அவர் அந்த லஞ்சத்தை வாங்க கொடுத்த லஞ்சம் என்னுடைய பரம்பரை ஆழ்வார்ப்பேட்டை வீடு. இன்றைய மதிப்பில் அதன் விலை 108 கோடியாம்.

“நீங்கள் இன்று முதல் மீண்டும் இந்தியன் ஆகிறீர்கள்” – தேசிய அடையாள அட்டையை கொடுத்தபடியே கைகுலுக்கினார் குடியுரிமை.

அவரது தலைக்கு மேலே ஒரு தாத்தாவின் போட்டோ மாட்டியிருந்தது.

“இது உங்கள் தாத்தாவா? 2011க்கு முன்பாக அரசு அலுவலகங்களில் காந்தி தாத்தா போட்டோவை தான் மாட்டியிருப்பார்கள்”

“இல்லை. இவர் நம் எல்லோருக்குமே தாத்தா. அவரது பெயர் இரண்டாம் மகாத்மா அன்னா ஹசாரே. இரண்டாம் இந்திய சுதந்திரப்போரை நடத்திய அகிம்சாமூர்த்தி. தேசத்தின் ஊழலை ஒழித்த உத்தமர்”

20 ஆகஸ்ட், 2011

குமரன் குடில்


ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன் நடந்தது அது. நிறைந்த அமாவசை அன்று அக்குழந்தை பிறந்தது.

"பையன் பொறந்துருக்கானே எப்படியிருக்கான்? அம்மா மாதிரி கருப்பா? அப்பா மாதிரி சிவப்பா?"

"எம் பையனாச்சே! உதயசூரியன் மாதிரி இருக்கான்" சொன்னவர் என் அப்பா. அக்குழந்தை நான்.

ஆகஸ்ட்டு 24, என் பிறந்தநாள்.

* * * * * * * * * * * * * * *
எனக்கு பெயர் வைக்கும் விவகாரத்தில் வெட்டு, குத்து நடக்காதது ஒன்று தான் பாக்கி. வைதீகமான சிவமத குடும்பத்தைச் சேர்ந்தவர் அப்பா. தீவிர முருக பக்தரான அப்பா எனக்கு 'குமரன்' என்று பெயர் வைக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார்.

நான் பிறந்த காலக்கட்டத்தில் என் பெரியப்பா ஒருவர் சம்பந்தமில்லாமல் கிருஷ்ணர் கோயில் கட்டிக் கொண்டிருந்தார். அவரோ 'கிருஷ்ணன்' பெயரை எனக்கு சூட்டியாக வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றிருக்கிறார்.

இடையில் என் அம்மாவழி பாட்டனார் ஜாதகம் பார்த்து "மோ"வில் ஆரம்பிக்கும் பெயர் தான் வைக்க வேண்டுமென்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் (அவரது பெயரே வேங்கைப்புலி). தாத்தா திட்டமிட்டிருந்த பெயர் மோகன சுந்தரம்.

கடைசியாக மூன்று பேரும் collaborate செய்து 'மோகன கிருஷ்ண குமார்' என்று வழக்கில் இல்லாத பெயராக வைத்துத் தொலைத்தார்கள். அவ்வளவு நீளமான பெயராக இருந்தாலும் அப்பா என்னை 'குமரா' என்றே அழைப்பார். அப்பாவைத் தவிர 'குமரா' என்று வேறு யாரும் என்னை அழைத்ததில்லை.

* * * * * * * * * * * * * * *

சென்னைவாசிகள் தங்கள் அப்பாவை நைனா என்று அழைப்பது வழக்கம். என் மழலை வயதில் நைனா என்ற சொல் என் நாக்குக்கு User-friendly ஆக இல்லாததால் 'இன்னா' ஆகியது. வளர்ந்தபின்னும் 'இன்னா' நைனாவாக மாறவேயில்லை. என்னைத் தொடர்ந்து என் தங்கையும் 'இன்னா' என்றே அழைக்க அது எங்கள் குடும்பத்துக்கு மட்டுமே புரியும் புதிய வார்த்தை ஆனது.

* * * * * * * * * * * * * * *

சிறுவயதிலிருந்தே அப்பாவை "வாங்க, போங்க" என்று விளித்ததாக எனக்கு நினைவில்லை. "வா" "போ" தான். வெளியில் செல்லும்போது அவரது தோள் மீது கைபோட்டு நடந்துச் செல்லும் சுதந்திரத்தை எங்களுக்கு கொடுத்திருந்தார். அவரது பாக்கெட்டில் இருக்கும் பணத்தை அவரது அனுமதி இல்லாமலேயே எடுத்து செலவு செய்யும் அதிகாரமும் எங்களுக்கு வழங்கியிருந்தார்.

* * * * * * * * * * * * * * *

அப்பாவுக்கு கால் பிடித்து விட்டால் ஒரு ரூபாய் தருவார். அவர் தரையில் படுக்க அவரது கால் மீது ஏறி நின்று நானும் தங்கையும் மிதிப்போம். சில நேரத்தில் அவரது தொப்பை மீது ஏறிக் குதித்து விளையாடுவதும் உண்டு. அப்போது அப்பாவுக்கு வலித்திருக்கும் என்று இப்போது தெரிகிறது.

* * * * * * * * * * * * * * *

எனக்கு நினைவு தெரிந்தபோது அப்பா கழகத்தில் ஸ்டார் பேச்சாளராக இருந்தார். வட்டம், கிளை, ஒன்றியம் என்று வெகுவேகமாக அரசியல் பதவிகளால் வளர்ந்து வந்துகொண்டிருந்தார். எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த உயரமான புளியமரத்தில் கழகக்கொடி பறக்கும். மறியல், ஊர்வலங்களில் கருப்பு - சிவப்பு டீசர்ட் அணிந்து முன்னணியில் நிற்பார். அந்நேரங்களில் எல்லாம் அவர் என் அப்பா என்று சொல்லிக்கொள்ள பெருமையாக இருக்கும். ஒரு வழக்கு விவகாரத்தால் அவர் கட்சி மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவரது அரசியல் வாழ்வு அஸ்தமித்தது. அப்பா ஏன் தான் கட்சி மாறினாரோ என்று நொந்துகொண்டேன். இன்று நினைத்துப் பார்த்தால் அவர் அந்த முடிவை எடுத்திருக்கா விட்டால் எங்கள் குடும்பம் இருந்திருக்காது என்று தோன்றுகிறது.

* * * * * * * * * * * * * * *

கைநிறைய சம்பாதித்தாலும் அவர் ஆடம்பரமாக இருந்ததில்லை. கடைசி வரை சைக்கிள் தான் வைத்திருந்தார். நகை எதுவும் அணிந்தது கிடையாது. ஒரு வெள்ளி மோதிரம் மட்டும் அணிந்திருப்பார். அந்த வெள்ளி மோதிரம் எப்படி அவர் கைக்கு வந்தது? யார் கொடுத்தது? என்பது அப்பாவோடே புதைந்துப் போன ரகசியம்.

* * * * * * * * * * * * * * *

அடிக்கடி அப்பாவுடன் சண்டை போடுவேன். முக்கியமாக கடவுள் குறித்த விவாதம். அந்த விவாதங்களுக்கு எப்போதும் முடிவே வந்தது கிடையாது. விவாதம் நீண்டுகொண்டே போனால் "முருகனருள் இல்லாமே நீ பிறந்திருப்பியா? உன் கூட பைத்தியக்காரன் தாண்டா பேசுவான்!" என்று சொல்லி முற்றுப்புள்ளி வைப்பார்.

* * * * * * * * * * * * * * *

அப்பாவின் வாழ்க்கை ரொம்பவும் போர் அடித்திருக்கும் என்று நினைக்கிறேன். முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரே மாதிரியே வாழ்ந்திருக்கிறார். மடிப்பாக்கத்திலிருந்து மவுண்ட் ரயில்வே ஸ்டேஷனுக்கு சைக்கிள் மிதிப்பார். 8.30 மவுண்ட் ரிட்டர்ன் ட்ரெய்னில் கடற்கரை செல்வார். அலுவலகப்பணி முடிந்ததும் 7 மணிக்கு அவரது நண்பரான பர்மா பஜார் பாயிடம் அரசியல் பேசுவார். மீண்டும் ட்ரெயின், சைக்கிள், வீடு. இப்படியே 30 வருடம் எப்படித்தான் செக்குமாடு மாதிரி வாழ்ந்தாரோ என்று ஆச்சரியமாக இருக்கிறது.

* * * * * * * * * * * * * * *

2001, ஜூன் 30 உலகெங்கும் வாழ்ந்த லட்சக்கணக்கான தமிழ் குடும்பங்கள் ஒப்பாரி வைத்த நாள். முந்தைய தினம் தான் தங்கைக்கு நிச்சயம் செய்திருந்தோம். அலுவல் முடிந்து களைப்புடன் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை அப்பா எழுப்பினார். "கலைஞரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்டா". பதறி அடித்து எழுந்தேன். சன் டிவி பார்த்து என் குடும்பமே கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. ஆளுங்கட்சி அராஜகத்தால் கலைஞர் கைது தொடர்பான செய்திகளை காட்ட சன் டிவிக்கு தடை விதிக்கப்பட்டது. மதியம் 2 மணியளவில் "பராசக்தி". படம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா "நெஞ்சு வலிக்குது" என்றார். அவருக்கு இதயநோய் ஆரம்பித்தது அப்போது தான். "தலைவருக்கு முன்னாலேயே நான் போயிடணும்" என்றார்.

* * * * * * * * * * * * * * *

அப்பாவுக்கு சர்க்கரை நோய் இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் டயட் விஷயத்தில் அவர் அவ்வளவு அக்கறையாக இருந்தது கிடையாது. பிடிவாதம் அவருக்கு அதிகம். ஸ்வீட் சாப்பிட்டு விட்டு இரண்டு மாத்திரை எக்ஸ்ட்ரா போடுவார். என்ன ஆவதுன்னு பாத்துக்கலாம் என்பார்.

* * * * * * * * * * * * * * *

அப்பாவுக்கு சமூகத்தில் எவ்வளவு மதிப்பிருந்தது என்பதை அவரது இறுதிநாளில் தான் என்னால் கணிக்க முடிந்தது. மலைபோல குவிந்த அனைத்துக் கட்சியினர் மாலை.. அரசு விழா இருந்தாலும் நேரம் ஒதுக்கி அப்பாவுக்கு அஞ்சலி செலுத்திய தொகுதி எம்.எல்.ஏ, கடைசி வரை ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சியினர்.. அப்பாவின் நண்பர்கள்.. நான் இதுவரை முகம் பார்த்தறியாதவர்கள் கூறிய ஆறுதல் போன்ற விஷயங்கள் இதயத்தை நெகிழச் செய்தது.

* * * * * * * * * * * * * * *

நவம்பர் 7, கமலஹாசன் பிறந்தநாள். அதே நாளில் தான் அவரது தந்தையும் கண்ணை மூடினார். கமல்ஹாசன் நகைச்சுவையாக சொல்வார் "என் அப்பாவுக்கு என் மேலே ரொம்ப பாசம். அதனால தான் நான் வாழ்க்கையில் பிறந்தநாளே கொண்டாடக் கூடாதுன்னு அன்னைக்கே சரியா கண்ணை மூடிட்டார்". என் அப்பா அவ்வளவு கல்நெஞ்சக்காரர் இல்லை. மகனின் பிறந்தநாளுக்கு மூன்று நாள் முன்பாகவே கண்ணை மூடியிருக்கிறார்.

* * * * * * * * * * * * * * *

ம்ம்ம்ம்.... இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.

நான் அம்மா பிள்ளை என்பார்கள். அப்பாவை விட அம்மாவை தான் அதிகம் எனக்கு பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவருக்கு கொள்ளி வைக்கும் போது அவர் மீதும் அம்மா அளவுக்கு பிரியம் எனக்குள் இருந்தது என்பது தெரிந்தது.

அவர் எனக்கு கண்டிப்பான அப்பாவாக இருந்ததில்லை. ஆனால் நான் கண்டிப்பான மகனாகவே இருந்திருக்கிறேன். இன்னமும் அவர் மீது அதிகமாக பிரியம் காட்டியிருக்கலாம் என்று இப்போது உணர்கிறேன்.

அவர் ஆசைப்பட்ட படியே வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். அது முடிவதற்குள்ளேயே அவசரப்பட்டு விட்டார். அவர் விருப்பப்பட்டபடி வீட்டுக்கு "குமரன் குடில்" என்று பெயர் வைக்க வேண்டும்.

(சென்ற 2007 ஆகஸ்ட்டில் எழுதிய பதிவு - இன்று என் அப்பாவின் நான்காவது நினைவுநாள்)

17 ஆகஸ்ட், 2011

ரோஜா நினைவுகள்!

விளையாட்டுத்தனமாக இருபது ஆண்டுகள் ஓடிவிட்டதை நினைக்கும்போது கவலையாகவும், அச்சமாகவும் இருக்கிறது. மயிருதிர்ந்துப்போன முன் தலையை கண்ணாடி முன்பாக தடவிப் பார்க்கிறேன். ரோஜாவே டீனேஜை தாண்டிவிட்டாள் என்றால், என் தலைமுறை ‘இளைஞர்’ என்கிற கவுரவத்தை இழந்துவருகிறது என்றே பொருள்.

1992 – இந்த வருடத்தை யார் மறந்தாலும் தமிழ் சினிமா மறக்காது. அப்போதெல்லாம் கார்த்திக்தான் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நாயகன். 91 தீபாவளிக்கு தளபதியோடு, அமரன் போட்டி போடும் என்றெல்லாம் பெருத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் ‘ராக்கம்மா கையத் தட்டு’வை விட, அமரனின் ‘வெத்தலைப் போட்ட ஷோக்குலே’ ஆடியோ சூப்பர் டூப்பர் ஹிட். ஏனோ அமரன் தாமதமாகி 92 பொங்கலுக்கு வெளியாகி மொக்கை ஆனது. தொடர்ந்து வெளியான கார்த்திக்-பாரதிராஜா காம்பினேஷனில் நாடோடித் தென்றலுக்கும் டவுசர் அவிழ்ந்தது. இன்று உலகத் தமிழர்களிடையே பல்வேறு காரணங்களால் பிரபலமான ரஞ்சிதாவின் அறிமுகம் நிகழ்ந்த படமிது. பிற்பாடு என்.கே.விஸ்வநாதனின் நாடோடிப் பாட்டுக்காரன் வெளியாகி, கார்த்திக்கின் மானத்தை வசூல்ரீதியாக காப்பாற்றியது.

மன்னன், சின்னக் கவுண்டர் படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தது. கடலோரக் கவிதைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் சோலோவாக கோலோச்சிக் கொண்டிருந்த சத்யராஜூக்கு பெரிய லெட்-டவுன் இந்த ஆண்டில். ஆனால் அடுத்த ஆண்டே வால்டேர் வேற்றிவேல் மூலமாக தனக்கான மாஸ்டர் பீஸை அடையாளப் படுத்திக் கொண்டார்.

சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை வசூல்ரீதியாக மட்டுமின்றி, அரசியல்ரீதியாகவும் சூட்டைக் கிளப்பியது. இன்று புரட்சித்தளபதி, சின்னத் தளபதி, செவன் ஸ்டார், ராக்கிங் ஸ்டார், லொட்டு, லொசுக்கு ஸ்டார்களுக்கெல்லாம் டைட்டிலில் விஷ்க் விஷ்க் சவுண்ட் போட்டு அலப்பறை செய்வதற்கு அண்ணாமலையே முன்னோடி.

மலையாள இயக்குனர் பரதனின் ‘ஆவாரம்பூ’ சூப்பர்ஹிட் பாடல்களோடு வெளிவந்து மண்ணைக் கவ்வியது. ஆனாலும் தீபாவளிக்கு அவரது இயக்கத்தில் வெளியான ‘தேவர் மகன்’ இன்றளவும் எவர்க்ரீன் ஹிட். முந்தைய தீபாவளிக்கு குணாவில் மாஸ் இழந்த கமல் ‘சிங்காரவேலன்’ மூலமாக மீண்டெழுந்தார். தேவர் மகனில் சிவாஜிக்கு தேசிய விருது ஜஸ்ட் மிஸ். அதையும் கமலே தட்டிக் கொண்டார்.

டாக்டர் கேப்டன் விஜயகாந்தின் அட்டகாச மேற்கத்திய பாணி நடனத்தில் வெளிவந்த ‘பரதன்’ குறிப்பிடத்தக்க ஒரு படம். பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மீரா (விக்ரம் அறிமுகம் என்று சொல்வார்கள். ஆனால் அவர் 89லேயே ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’யில் அறிமுகமாகி விட்டார்) மரண அடி வாங்கியது. முரளி நடிப்பில் ராஜ்கபூர் இயக்கிய ‘சின்னப்பசங்க நாங்க’ சர்ப்ரைஸ் ஹிட். முந்தைய ஆண்டில் சாதனைப்படமான சின்னத்தம்பியை கொடுத்த பிரபு-வாசு காம்பினேஷன் ‘செந்தமிழ்ப்பாட்டு’ படம் மயிரிழையில் தப்பித்தது. 91ல் என் ராசாவின் மனசிலே மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண், அடுத்த வெள்ளிவிழாப் படமான அரண்மனைக் கிளியை தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியிட்டார். இன்னும் நிறைய படங்கள். நினைவில் இருந்தவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். 92ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் வசூல் ஆண்டு.

பரபரப்பான சம்பவங்களை வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த ஆர்.கே.செல்வமணி, முதன்முறையாக ஒரு காதல் படமெடுத்து வெள்ளிவிழா கண்டார். இன்று ஆந்திர அரசியலின் சூறாவளியான ரோஜா மலர்ந்தது அப்போதுதான்தான்.

1992, ஆகஸ்ட் 15. அப்போதெல்லாம் இந்தியா, மூவர்ணக்கொடி என்று கேட்டாலே ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி நரம்புகள் புடைக்கும். தேசிய நீரோட்டத்தில் கலந்து, பகுத்தறிவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போயிருந்த பருவமது. பள்ளியில் ஒருக்கா, தெருமுனையில் மறுக்கா கொடியேற்றிவிட்டு, தேசக்கொடிக்கு மரியாதை செலுத்தினோம். மடிப்பாக்கத்தில் அப்போது மொத்தமாக மூன்றே மூன்று காங்கிரஸ்காரர்கள் இருந்ததாக நினைவு. ஒருவர் தலைவர். மற்றவர் செயலாளர். மீதியிருந்தவர் பொருளாளர். அதில் ஒருவர் (என்னுடைய நாலுவிட்ட மாமா. ஐந்து விட்ட அக்காவை அவருக்கு கட்டிக் கொடுத்திருந்தோம்) சேவாதள சீருடையில் – யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றுவது மாதிரி – ஒரு கம்பத்தை அவரே நட்டு, ‘பாரத்மாதாகீ ஜே’ சொல்லி, அவரே கொடியேற்றி, அவரே கைத்தட்டி, ஒவ்வொரு கதவாக தட்டி சாக்லேட் கொடுத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.

டி.டி. தொலைக்காட்சியில் காலை பதினோரு மணியளவில் சிறப்பு ஒலியும், ஒளியும். முதல் பாட்டு ‘அண்ணாமலை அண்ணாமலை ஆசை வெச்சேன் எண்ணாமலே’ என்பதாக நினைவு. இன்றைய காஞ்சனாவான சரத்குமார் ஃபுல் ஹீரோவாக நடித்திருந்த ‘சூரியன்’ அன்றுதான் வெளியானது. செம்பருத்தியில் அறிமுகமான ரோஜாவின் இரண்டாவது படம். பவித்ரன் இயக்கம். இணை இயக்கம் ஷங்கர். ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாட்டு பட்டையைக் கிளப்பியது. இந்தப் பாடல் ஒரு விபத்தாக மாறி, அடுத்தடுத்து வால்டர் வெற்றிவேல், ஜெண்டில்மேன் என்று பல படங்களில் பிரபுதேவா அயிட்டம் டேன்ஸராக பலமாக உருமாறி, இந்துவில் கதாநாயகனாகி, காதலனில் மாஸ் ஹீரோவாகி.. அது ஒரு தனி வரலாறு.

‘ஒளியும், ஒலியும்’ முடியும் நேரத்தில் வந்தது அந்தப் பாட்டு. மணிரத்னத்துக்கு முதன்முறையாக இளையராஜா தவிர்த்த புது இசையமைப்பாளர். கமல், ரஜினி, கார்த்திக், பிரபு என்று மாஸ் ஹீரோக்களை விட்டு விட்டு, தளபதியில் துண்டு கேரக்டரில் நடித்த அரவிந்தசாமியை ஹீரோவாக்கியிருந்தார். அதற்கு முன்பாக மதுபாலாவும் அவ்வளவு பிரபலமில்லை. அழகனில் மூன்றாவது, நாலாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

எங்கள் வீட்டருகில் பானு அக்கா என்றொருவர் இருந்தார். பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும். பரதநாட்டியம் கற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளில் ஆடிக்கொண்டிருந்தார். ஒருமுறை அவரது நாட்டிய நிகழ்ச்சிக்கு போகும்போது, கூட வேனில் இன்னொரு சூப்பர் ஃபிகரும் இருந்தார். அவர்தான் மதுபாலா. பானுவும், மதுபாலாவும் ஒரே கட்டத்திலேயே சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்கள். குடும்ப சினிமா பின்னணி இருந்ததால் மதுபாலா சுலபமாக நடிகையாகிவிட்டார். பானு என்ன ஆனாரோ தெரியவில்லை.

அதே ஆண்டில் ‘சித்திரைப் பூக்கள்’ படம் மூலமாக மடிப்பாக்கத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினும் அறிமுகமானார். அவர் வினோதினி. இந்து படத்தின் ‘எப்படி, எப்படி சமைஞ்சது எப்படி?’ பாட்டில் கெட்ட ஆட்டம் போட்டவரும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர்தான். சாரதா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் என்னுடைய சீனியர். அடக்க ஒடுக்கமாக இன்ஸ்டிட்யூக்கு வந்து சென்றுக் கொண்டிருந்தவரை, ஸ்க்ரீனில் வேறுமாதிரி பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமில்லை. இதே ஆண்டு என் பள்ளித்தோழன் ஆனந்தராஜின் அண்ணன் கணேசராஜூ ’சின்னத்தாயி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். மடிப்பாக்கமே சினிமாப்பாக்கமாக மாறிவிட்ட ஆண்டு அது. இப்போதும் கூட பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் நிறைய பேர் இந்த ஊரில் வசிக்கிறார்கள்.

ஓக்கே, மீண்டும் ரோஜாவுக்கு வருவோம்.

வேனில் பார்த்த அதே மதுபாலா ‘சின்ன சின்ன ஆசை’ என்று டிவியில் பாடுவதைப் பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதல் தடவை கேட்டபோதே வசீகரிக்கும் பாடல்கள் அரிதானவை. சின்ன சின்ன ஆசை அந்தவகை. குறிப்பாக உதய சூரியன் வேகமாக மேலெழும் பாடலின் ஆரம்பக் காட்சியில் வரும் இசை. ‘ரோஜா’வைப் பார்த்தேவிட வேண்டும் என்கிற ஆசை, பேராசையாய் கிளம்பியது.

மறுநாள் வகுப்பில் கூடி பேசினோம். எல்லோரையுமே சூரியனை விட ரோஜா கவர்ந்திருந்தாள். ஆலந்தூர் பாலாஜி என்பவனுக்கு தேவி தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஆள் யாரையோ தெரிந்திருந்தது. அவர் மூலமாக மொத்தமாக இருபது டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்தான் பாலாஜி. சொந்தக் காசை போட்டு டிக்கெட் வாங்கிவிட்டு, பிற்பாடு எங்களிடம் வசூல் செய்ய நாய்படாத பாடு பட்ட பாலாஜியை இப்போது நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

அதற்கு முன்பாக ஸ்கூல் கட் அடித்துவிட்டு பார்த்திருந்த ஒரே படம் செம்பருத்தி (காசி தியேட்டரில்). தேவிக்கு பஸ்ஸில் கூட்டமாக போகும்போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. யாராவது தெரிந்தவர் பார்த்துத் தொலைத்தால்? தேவி தியேட்டருக்கு பக்கத்திலேயே ப்ளோ ப்ளாஸ்ட் லிமிடெட்டின் மண்டல அலுவலகம் வேறு இருந்துத் தொலைத்தது. இதே கம்பெனியின் பாரிமுனை கிளையில் அப்பா வேலை பார்த்தார் என்றாலும், அடிக்கடி இங்கே வருவார்.

ஒருவழியாக தியேட்டருக்குள் போய் அமர்ந்தபிறகு படப்படப்பு குறைந்தது. ரோஜா ஏகத்துக்கும் ஆச்சரியப்படுத்தினாள். ரோஜாவில் சித்தரிக்கப்பட்ட நெல்லை சுந்தரபாண்டியபுரம் மாதிரியான டீசண்டான கிராமத்தை இன்றுவரை நான் எங்குமே நிஜத்தில் காணமுடிந்ததில்லை. அர்விந்த்சாமி கம்ப்யூட்டர் இன்ஜினியர். அதுவரை கம்ப்யூட்டரை கண்ணில் மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, அதுக்கு ஒரு இன்ஜினியரும் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. தேசக்கொடியை தீவிரவாதிகள் எரிக்க, அதை விழுந்து புரண்டு அர்விந்த்சாமி அணைக்க.. எங்கள் நெஞ்சங்களிலும் பற்றியெறிந்தது தேசவெறி. க்ளைமேக்ஸில் ரோஜா தன் கணவனோடு இணைந்ததைக் காண நேர்ந்தபோது கிடைத்த நிம்மதி சிலாக்கியமானது. ஒரு ஃபிகரை பிரபோஸ் செய்து, அவள் ஏற்றுக் கொண்டபோது கூட இந்த நிம்மதி கிடைத்ததில்லை.

அதுவரை சினிமாவில் பார்த்த கேமிரா வேறு. ரோஜா காட்டிய கேமிரா வேறு. பாத்திரங்களின் பின்னாலே கேமிரா நடந்தது, ஓடியது, குலுங்கியது. பாடல் காட்சிகளில் மொக்கையான டிராலி மூவ் மாதிரி மட்டமான டெக்னிக்குகள் இல்லை. காட்சிகள், படமாக்கம் எல்லாவற்றையும் தாண்டி ஈர்த்தது இசை. ஏ.ஆர்.ரகுமானைப் பற்றி இந்தியா டுடேவில் ஒரு சிறிய துணுக்கு மட்டுமே வாசித்திருந்த நினைவு. அப்போது அவருக்கு வயது 23 என்பதை அறிந்து பெரிய ஆச்சரியம்.

ஏதோ ஒரு நாள் கட் அடித்துவிட்டு படம் பார்த்தோம் என்றில்லாமல், அடுத்த சில மாதங்களுக்கு ரோஜா எந்நேரமும் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தாள். பி.பி.எல் சேனியோவில் ரோஜா கேசட்டை தேய்த்து, தேய்த்து ரெண்டு, மூன்று கேசட் வாங்க வேண்டியதாயிற்று. ‘காதல் ரோஜாவே’ மனப்பாடமானது. ‘புது வெள்ளை மழை’ பாடலில், அதுவரை தமிழ் சினிமாவில் கேட்காத பல ஓசைகளை கேட்க முடிந்தது.

அர்விந்த்சாமி தீவிரவாதிகளிடம் அடைபட்டிருந்தபோது போட்டிருந்தது மாதிரியே ஒரு ரெட் கலர் ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன். கொளுத்தும் கோடையில் கூட ‘தெய்வத்திருமகள் கிருஷ்ணா’ மாதிரி கழட்டாமலேயே அந்த ஸ்வெட்டரோடு அலைந்திருக்கிறேன். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகிவிடலாமென்ற கனவோடு, மடிப்பாக்கத்தில் ஆரம்பித்திருந்த கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் வேர்ட் ஸ்டார் எல்லாம் கற்றுக் கொண்டேன். மேலும் சில வருடங்களுக்கு தேசபக்தி நூறு கிரேடு செண்டிக்ரேடுக்கு குறையாமல் உஷ்ணமாகவே இருந்தது. அதற்கு ரோஜா ஒரு காரணம். பிற்பாடு +2 ஃபெயில் ஆகிவிட்டு வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது சிந்திக்க நிறைய நேரம் கிடைத்தது. பாழாய்ப்போன அந்த சிந்தனையால் அந்த 100 டிகிரி செண்டிக்ரேடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போது 0 டிகிரி செண்டிக்ரேடாக உறைந்துப் போயிருக்கிறது.

இப்போது ரோஜாவை திரும்பிப் பார்க்கும்போது அது ஒரு மைல்கல் என்பதை அப்பட்டமாக உணரமுடிகிறது. தமிழ் சினிமாவை இந்திய அளவுக்கு நேரடியாக கொண்டுச்சென்ற முதல் படமாக தோன்றுகிறது. சுபாஷ்கய்தான் தேசிய இயக்குனர் என்கிற பாலிவுட்டின் அடாவடியை, இப்படத்தின் மூலமாக அடித்து நொறுக்கினார் மணிரத்னம். தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை ஏற்றுக்கொண்டு, இந்திக்காரர்கள் மதிக்கும் கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தது ரோஜா. முன்னரே பாலச்சந்தர், எஸ்.எஸ்.வாசன் போன்றவர்கள் இந்தியில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும், அந்த வெற்றிகள் தற்காலிகமானவை. மணிரத்னம் ரோஜாவில் கண்ட வெற்றி, இன்றளவுக்கும் தொடர்கிறது. சுதந்திர தினம் என்றாலே ‘பாரதவிலாஸ்’ என்கிற டி.டி.யின் அரதப்பழசான சம்பிரதாயமும் நொறுங்கிப் போனது. இந்தியிலும், தமிழிலும் குடியரசுதினம், காந்திஜெயந்தி, சுதந்திரதினம் என்று எண்ணற்ற முறை ரோஜா ஒளிபரப்பானது.

ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமா என்கிற எல்லையைத் தாண்டி ஆஸ்கரையே வென்றுவிட்டார். ‘சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்’ போன்ற டிவி ஜிங்கிள்களுக்கு இசையமைத்தவரின் இன்றைய உயரத்தின் அச்சாணி ரோஜா.

ரோஜாவுக்கு இன்று வயது இருபது. முதல்முறை பார்த்தபோது கிடைத்த அதே அனுபவம், இப்போது பார்க்கும்போதும் கிடைக்கிறது என்பதுதான் இப்படத்தின் தனித்துவம். இன்னும் முப்பதாண்டுகள் கழிந்தாலும் இதே காட்சியனுபவத்தை ரோஜா வழங்குவாள் என்பதில் எனக்கு சந்தேகம் ஏதுமில்லை.

13 ஆகஸ்ட், 2011

பிச்சி பிச்சி விளையாட்டு

<எழுத்து கூட்டிப் படிக்காமல் எப்போதுதான் கதை படிக்கக் கற்றுக் கொள்ளப்போகிறார்களோ! கதையின் தொனியைப் பிடிக்கக் கற்றுக் கொள்ளப்போகிறார்களோ!>

உப்பரிகையைப் பாராட்டினால் அது இலக்கிய அபிப்பிராயம் ஆகிவிடுகிறது. நிறத்தின் நிஜமான நிறத்தினை எடுத்துரைத்தால் ஈஸ்வரோ சர்வ ரக்‌ஷதா? தர்க்கமே இல்லையே? உப்பு தின்னால் தண்ணி குடிக்கணும். தப்பு செய்தால் டவுசர் அவுக்கணும்.

<நிறம் எழுதியவன் பார்ப்பணீயன் என்றால் யார்? போர்வை (1981) இதை எழுதியவன் அணிந்திருப்பது எந்த பனியன்?>

நான் 1987லே நாலாங்கிளாஸ் படிக்கிறப்போ படுக்கையிலே மூச்சா போயிக்கிட்டிருந்தேன். அப்போலாம் நைட்டுலே ஜட்டி மட்டும்தான் போட்டுக்கிட்டு தூங்குவேன். 2011லும் ஜட்டி போட்டிருக்கிற மூச்சாப்பையந்தான்னு நீங்க நம்பித்தான் ஆவணும். நான் மாறலை. நான் மாறிட்டதா நீங்க நினைச்சுப்புட்டா கொன்டேபுடுவேன்.

<பான்பராக் குதப்பியபடி, கம்பியைப் பிடித்துக்கொண்டு, தொந்திகள் தொட்டுக்கொள்ள, பிளாட்ஃபாரத்தில் நின்றிருந்த வழியனுப்பவந்த குடும்பத்துடன், பேசிக்கொண்டு இருந்தனர் இரண்டு வடக்கத்திக்காரர்கள். யாரையும் கொஞ்சம் சுற்றிக் கொண்டு போகவைக்கும் அவர்களது கனபரிமானங்கள் காரணமாகத் தயங்கி நின்றான் எஸ்ஆர்எஸ். பேச்சிற்கு இடைக்காலத்தடை போடுவதை, அவர்கள் பரிசீலிப்பதற்கான முகாந்திரம் எதுவும் தட்டுப்படாததால், எக்ஸ்க்யூஸ் மீ என்று சொல்லிப்பார்த்தான். அதுவும் எடுபடாததால், தெருவோர சாறு பிழியும் உருளைகளுக்கு இடையில் நுழையும் தோல் சுரண்டிய வெண்சோகைக் கரும்பென, சன்ன கைப்பெட்டியை முன்னுக்கு நீட்டியபடி ரயில் பெட்டிக்குள் நுழையத் தலைப்பட்டான் எஸ்.ஆர்.ஸ்ரீநிவாசன் என்கிற எஸ்ஆர்எஸ். >

இப்போல்லாம் நம்மவாக்கு எங்கே சார் ஸ்பேஸ் இருக்கு? நம்மவா இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சாறு பிழியும் உருளைக்கு நடுவிலேல்லே வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கு? நம்மவா நம்மளை ஆண்டா ‘பிராமின்ஸ் ஒன்லி’ போட்டு டிரைன் விட்டுருக்க மாட்டோமா?

அன்ரிசர்வ்டுலே அம்பது பேரு உட்கார்ந்து போற இடத்துலே ஐநூறு பேரு நெருக்கிக்கிட்டு போறான். அதை விடுங்கோ. அதெல்லாம் நமக்கு பெரிய விஷயமா? அதப்பத்தியெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு கிடந்தா நம்ம பொழைப்பு என்னாறது? செத்த ப்ரீயா டிரெயினுக்குள்ளே போயி சீட்டுலே உட்கார முடியறதா? இந்த குண்டு வடக்கத்தி மனுஷா வழியிலே நின்னுக்கிட்டு நம்ம வாழ்க்கையிலேயே மண்ணள்ளிப் போடுறா.

நம்மாளு பேரைப் பார்த்தேளா? ஆர்.எஸ்.எஸ். ச்சீ.. இல்லே.. இல்லே.. எஸ்.ஆர்.எஸ்.

<அறிவிப்பின் நிசப்த இடைவெளிகளில் கக்கூஸ் நாற்றம் மூக்கைத் துளைத்தது>

துளைக்காதா பின்னே? கக்கூஸு கழுவுறவங்களுக்கெல்லாம் ரிசர்வேஷன்லே கவருமெண்ட் க்ளார்க் உத்தியோகம் தந்துடறா. வேற யாரு வந்து இதையெல்லாம் கழுவுவா. அவா அவா அவா அவா வேலையைத்தான் செய்யணும்னு பெரியவா சும்மாவா எழுதி வெச்சிருக்கா? நாடு நாசமாத்தான் போகப்போவுது.

<கருகருத்து அகன்றிருந்த மூக்கில் இரண்டு மூக்குத்திகள் மாரியம்மன் படம்போல் அப்பப்பட்டிருந்தன. அண்ணாச்சி மாமியோ என்னவோ. அருவாள் மாமியாகக் கூட இருக்கலாம். அல்லது அவாளாகவும் இருக்கலாம். யார் கண்டது. ஐயரையங்கார் மாத்வ ஸ்மார்த்தாள்களுக்கு இடையிலான வெளுப்புச் சாயைகளின் வித்தியாசம் போலவே கருப்பிலும் நுண்பிரிவுகள் பார்த்தவுடன் பிடிபட்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும். பிடிபடாத பொது இடங்களில் பேச்சைத் தவிர்த்தல் உத்தமம் என்கிற பெருநெறியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிப் பலகாலம் ஆயிற்று. அப்பாவின் காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திலிருந்தே ஊட்டப்டாமல் தானாய் வளர்ந்து நெரியாய்க் கட்டிக் கொண்டிருந்தது மெளனம்>

நம்மவாவா இருந்தா குலம், கோத்ரம் என்னன்னு பார்த்ததுமே சுலபமா கண்டுபுடிச்சிடலாம். சூத்திரவா எல்லாம் கருப்பா இருக்கா. நம்மவா நம்ம சாதின்னு சொல்லிக்க பூணூல் போட்டுக்கற மாதிரி, இவாள்லாம் அவா அவா சாதிக்கு ஏத்தாமாதிரி ஏதாவது கூணூல், சூணூல்னு போட்டுக்கப்படாதா? ஆளைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுபுடிக்கிற மாதிரி இருந்துக்க வாணாமா?

நம்மவா எல்லாம் பப்ளிக்குலே பேசப்படாது சார். நம்ம நாலெட்ஜ் லெவலுக்கு இல்லாதவா எல்லாம் வந்தும் நமக்கு சரிசமமா பேசத்தொடங்கிடறா. நாம ‘எலைட்’ இல்லையா? இவங்களாண்டே எல்லாம் பேச்சுக் கொடுத்து மாளுமா?

< ஈரோ வந்ட்டாரு. கெளப்பிக் குடுங்கடா! ஏய் யாருட்டப் பேசறேன்னு தெர்தா? ஓத்தா உங்க ராச்சியமெல்லாம் ராஜாஜி காலத்தோட ஓவரு. ங்கொம்மாள ’பத்தை’யாவாம டேசன்ல முய்ஸா எறங்கணும்னா மூடிகிணு போ. >

என்னா அநியாயமா பேசுரா. ராஜாஜி என்ன அப்படி பெரிய பாவம் செஞ்சிட்டாரு இவாளுக்கு. குலக்கல்வி திட்டம் கொண்டுவந்தார். அது தொடர்ந்திருந்தா இந்நேரம் இவாள்லாம் மாடு மேய்ச்சிக்கிட்டு, செருப்பு தச்சிக்கிட்டு, விவசாயக்கூலியா வேலை பார்த்துண்டு நிம்மதியா இருந்திருப்பாளோண்ணோ?

< ஏய் இன்னா மொறைக்கிறே! பாப்பான்னு ஸொன்னது குத்துதா. முண்ட்ஞ்சா திருப்பித் திட்டிப்பாரு. கொத்த ஸொம்மா, நீ ஸொன்னேனு ஸொன்னாலே அள்ளிடுவான். அஃபென்ஸு கேஸு.>

தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை கொண்டாந்து நம்மவா வாயை அடைச்சுப்புட்டா இந்த நாசக்கார கவர்மெண்டு. ராஜாஜி ஆட்சியா இருந்திருந்தா ராமராஜ்யமா இருந்திருக்கும். இம்மாதிரி கோமாளி சட்டமெல்லாம் இருந்திருக்குமா?

< ஏய் இன்னாடா ஓவரா சவுண்ட் உட்ற. ஒரே ஒரு காலு. அவ்ளதான் அட்த்த டேசன்ல ஆளு வந்து நிக்கிது பாக்றியா? இதின்னா ட்ரெயினா இல்லே டாஸ்மாக்கா? ஏம்பா டிகிட்செக்கிங்கு! இன்னா பண்ணிகினுகுறே? தோள்ல துப்பாக்கிய மாட்டிகிணு குறுக்கியும் நெடுக்கியும் நட்ந்துட்டா வாங்கற சம்பளம் ஜெர்ச்சிடுமா? பாடு, பேசிகினேப் போறான் பொட்டையாட்டம் எல்லாம் பாத்துகிணு இருக்கீங்க.>

பார்த்தேளா? ஒரு பொம்மனாட்டி சவுண்டு உட்டா அடங்கிப் போறானுங்க இந்த போக்கத்த பயலுவ. ராஜாஜி காலத்துலே நாம ஆட்சியை விட்டாலும், அவா கட்சியை உடைச்சி, அந்த கட்சிக்கு ஒரு பொம்மனாட்டியை தலைவர் ஆக்கிதானே இன்னிக்கு இவாளை அடக்கி வெச்சிருக்கோம்?


மச்சி சார் எனப்படும் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் “நிறம்” கதையை பிச்சி பிச்சி விளையாடினால் இப்படித்தான் எழுதவருகிறது. நம்ம சார்தானே? நாம விளையாடாமல் வேறு யார் விளையாடப் போகிறார்கள்?

இந்த கதையில் மாமல்லன் என்ன சொல்ல வருகிறார்?

ராஜாஜி ஆட்சிக்காலத்தோடு பார்ப்பனர்களின் இடம் இங்கே பறிக்கப்பட்டு விட்டது. கூட்டத்தோடு கூட்டமாக பார்ப்பனர்களும் வாழ வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கத்தார் அதாவது பார்ப்பனரல்லாதோர் கூட்டம் பார்ப்பனர்களை சகட்டுமேனிக்கு சவுண்டு விட்டு அநியாயமாக அடக்குகிறது. அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி வாழ பார்ப்பனர்கள் பழகிவிட்டனர். இப்போது ஆர்.எஸ்.எஸ்.ஐ... ச்சீ... எஸ்.ஆர்.எஸ்.ஐ காப்பாற்றுபவர் இன்னொரு திராவிட இயக்கத்தின் பெண்மணி. இதுதானே?

பார்ப்பனர்கள் பாவம் என்று ‘அயோத்யா மண்டபம்’ கதை எழுதிய சுஜாதாவின் செல்லுலார் வடிவம் ‘ஜெண்டில்மேன் ஷங்கர்’. இவர்களின் தொடர்ச்சியாக இப்போது இலக்கிய வடிவமாக உருவெடுக்கிறார் மாட்சிமை பொருந்திய இலக்கிய ஜாம்பவான் விமலாதித்த மாமல்லன்.

இந்த கதையில் எஸ்.ஆர்.எஸ். குடிகார அரசியல்வாதி அடிக்க எழுந்தவுடன் அப்படியே விழுந்துவிடுவான். ஷங்கரின் அந்நியனில் அம்பி ஹீரோயிஸம் செய்வான். அப்படியே கலாட்டா செய்பவனை இழுத்துக் கொண்டு போய் கருடபுராணம் விதித்த தண்டனையின் படி, டிரெயினுக்கு வெளியே தள்ளி கம்பத்தில் மோதவிட்டு சாவடிப்பான். அம்பிக்கு இருந்த தெம்பு, பாவம் நம் மாமல்லனின் எஸ்.ஆர்.எஸ்.ஸுக்கு இல்லை.

நேர்மையான விமர்சனமாக இல்லாமல் தம்/சுயசமூக/சொந்த அரிப்பினை சொறிந்துக் கொள்ள இலக்கியம் கருவியாகப் பயன்படுவதை பார்க்கும்போது, தமிழ் இலக்கியத்துக்கு இனி ஈரேழு ஜென்மத்துக்கும் இவர்களால் விமோசனமில்லை என்று மட்டும் புரிகிறது. ஈஸ்வரோ சர்வ ரக்ஷது!

for futher details, please visit :

நிறம் [சிறுகதை]

உப்பரிகை [சிறுகதை] - மேலும் சில அபிப்ராயங்கள்

ஈஸ்வரோ சர்வ ரக்ஷது!


11 ஆகஸ்ட், 2011

மரணதண்டனையை ஒழிப்போம்!

1991ல் பேரறிவாளனை கைது செய்தபோது அவருக்கு வயது பத்தொன்பது. மின்னணுவியல் பொறியியல் பட்டயதாரரான பேரறிவாளன் அப்போது பெரியார் திடலில், கணிணிப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தியை கொன்ற தணுவின் இடுப்பிலிருந்த பெல்ட் பாமை உருவாக்கியவர் பேரறிவாளனாக இருக்கக்கூடும் என்று விசாரணை அமைப்பு கருதியது. தனது படிப்புக்கும், பணிக்கும் எவ்விதத் தொடர்புமில்லாத வெடிகுண்டு தயாரிப்பு பழியினை எப்படி ஏற்பது என்று புரியாமல் விழித்தார் பேரறிவாளன்.

ராஜீவ் கொலை விசாரணை அலுவலகமான ‘மல்லிகை’யில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளுமாறு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். 2007ஆம் ஆண்டு பேரறிவாளன் எழுதிய முறையீட்டு மடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.”

பின்னர் பூந்தமல்லி சிறையில் சித்திரவதை தாங்காமலேயே, அதிகாரிகள் நீட்டிய ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றினில் எதையும் வாசிக்க அனுமதிக்கப்படாமலேயே கையெழுத்து போட்டு தந்திருக்கிறார் பேரறிவாளன். இவ்வாறு கையெழுத்து போட்டு தந்துவிட்டால் ‘விடுதலை’ செய்துவிடுவதாக ‘தாஜா’ செய்திருக்கிறார்கள் அதிகாரிகள். பத்தொன்பது வயது சிறுபையனுக்கு அதைதாண்டி சிந்திக்க ஏதுமில்லை. அந்த கையெழுத்துதான் இருபது ஆண்டுகள் கழித்து இன்று பேரறிவாளனின் கழுத்துக்கு தூக்கு கயிறாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் இருந்த தகவல்களுக்கும், விசாரணை அதிகாரிகள் நீதிமன்றங்களில் சமர்ப்பித்த ஆவணங்களுக்கும் இடையில் எத்தனையோ இடங்களில் முரண்கள் இருந்தபோதும், உச்சநீதிமன்றம் 1999ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு மரணத் தண்டனை விதித்தது. இவரோடு நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கும் இதே தண்டனை. பிற்பாடு நளினிக்கு மட்டும் மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.

தங்கள் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய மூவரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்காக ஜனாதிபதி உள்துறை அமைச்சகத்தினை ஆலோசனை கேட்க, இதற்காகவே காத்திருந்தவர்கள் ‘கருணை ரிஜெக்டட்’ என்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தற்போது ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது?

மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று அங்கங்கே ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். உண்ணாவிரதங்கள் நடக்கும். சில இடங்களில் மறியலும் நடக்கலாம். போஸ்டர்கள் ஒட்டப்படும். இவை நமது வழக்கமான உணர்ச்சிப்பூர்வ நடவடிக்கைகள்.

இந்த மூவருக்கு மட்டுமின்றி, மரண தண்டனையே கூடாது என்று ஒட்டுமொத்தமாக இந்நேரத்தில் குரல் எழுப்புவதுதான் அறிவுபூர்வமான செயல்பாடாக இருக்க முடியும். குறிப்பிட்ட நபர்களின் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்காமல், உலகளாவிய அடிப்படையில் மனிதநேயப் பிரச்சினையாக மரணதண்டனை எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும். அத்தண்டனையை சட்டப்பிரிவிலிருந்து நீக்குவதற்கு தேவையான நெருக்கடிகளை தரவேண்டும்.

திரும்ப திரும்ப மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து ‘தேசத்துரோகி’ பட்டம் வாங்க அயர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனை கூடாது என்பதை தாண்டி, எதை புதியதாக பேசமுடியும் என்றும் தெரியவில்லை.

எனவே ஏற்கனவே எழுதிய சில பதிவுகளின் சுட்டியை இங்கே அளிக்கிறேன்:

தூக்குத் தண்டனை

தூக்குத் தண்டனை – எதிர்வினைகள்

மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்

முகம்மது அப்சல்

10 ஆகஸ்ட், 2011

irony

அவளுக்கு ‘எய்ட்ஸ்’ இருப்பது அவனுக்கு தெரியும். ஆனாலும் அப்போதைக்கு ‘அது’ அவனுக்கு அத்தியாவசியமானதாக இருந்தது.

ஆளில்லாத சிறிய தீவு. இங்கே உயிரோடு இருப்பவர்கள் அவனும், அவளும் மட்டும்தான். ஒரு வாரம் முழுமையாக ஓடிவிட்டது. தாகத்துக்கு குடிக்க தண்ணீர் கூட இல்லை. காடு என்றுதான் பெயர். கனி காய்க்கும் ஒரு மரம் கூட இங்கில்லை. தென்னைமரம் கூட இல்லாத தீவிலா விதி இவர்களை கொண்டுவந்து சேர்க்க வேண்டும்?

இப்போது இருவருக்குமே தெரியும். இவர்கள் உயிரோடு இருக்கப்போவது இன்னும் சில தினங்கள்தான். உண்ண உணவில்லாமல், குடிக்க நீரில்லாமல் எத்தனை நாள்தான் வாழமுடியும்?

வெளியில் இருந்து உதவிவரும் என்கிற நம்பிக்கை முதல் நாளிருந்தது. கப்பலை விடுங்கள். ஒருவாரமாக சிறு படகினை கூட கடல்வெளியில் காண முடியவில்லை. விமானச் சத்தம் அறவேயில்லை. இருவர் இங்கிருப்பது இந்த இருவருக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த நாட்களில் இருவரும் பேசிக்கொண்டது மொத்தமாக இருநூறு வார்த்தைகள் இருக்கலாம். அவள் ஒரு தொழில்முறை சமூகப் பணியாளர் என்பதை முதல் பேச்சிலேயே சொல்லிவிட்டாள். எய்ட்ஸ் தாக்கி எட்டாண்டுகள் ஆகிறதாம். முதல் நாளிரவிலேயே அந்த ‘வேட்கை’ இருவருக்கும் இருந்தும், இந்த காரணத்தாலேயே இடைவெளி விட்டு இருந்து வருகிறார்கள்.

அவனுக்கு அவனது உயிர் முக்கியம். அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. அப்பா, அம்மா, தம்பி, தங்கை. போராடி பெற்ற வாழ்வு. நல்ல சம்பாதித்யத்தில் அமர்ந்து, போராட்டத்துக்கான அறுவடையை செய்யும் காலத்தில் நேர்ந்து விட்டது இந்த விபத்து.

எப்போது வேண்டுமானாலும் இறப்பு என்பது தெரிந்திருந்தாலும், அவளுக்கும் இன்னும் சில நாட்கள் உயிரோடு வாழும் திட்டமிருந்தது. இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும். இருக்கும் சில நாட்களாவது இன்பமான வாழ்வில் திளைக்க வேண்டும்.

ம்ஹூம். எல்லாம் கனவு. எவருக்கும் தெரியப் போவதில்லை இவர்கள் இங்கிருப்பது. இன்னும் மிஞ்சிப்போனால் இரண்டு, மூன்று நாட்கள். பாசக்கயிறு கழுத்தில் விழும் நொடிகளை, மூன்றாம் நாளிலிருந்தே இருவரும் எண்ணத் தொடங்கி விட்டார்கள். முதலிரண்டு நாள் இருந்த நம்பிக்கை, மூன்றாம் நாள் முற்றிலுமாக தகர்ந்துவிட்டது.

இன்று ஏழாம் நாள். நாக்கு வறண்டுக்கொண்டு இருந்தது. தாகத்துக்கு கடல்நீரை கூட பருகி பார்த்தார்கள். குமட்டிக்கொண்டு வந்தது. குடலே வெளியில் வந்து விழுந்துவிடுமோ என்று அஞ்சினார்கள். பசிக்கு புல்லையாவது தின்று செரிக்க நினைத்தார்கள். முடியவில்லை. ஆடும், மாடும் எப்படித்தான் சாப்பிடுகிறதோ? ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அத்தீவினை சல்லடை சல்லடையாக அலசியாயிற்று. இது மனிதர்கள் வாழ அருகதையற்ற பிரதேசம்.

நேற்றிலிருந்தே பேச்சு சுத்தமாக குறைந்துவிட்டது. பேச திராணியில்லை. சாடை மொழி மட்டும்தான்.

அவள் சிகப்புச்சேலை அணிந்திருந்தாள். காட்டுத்தனமான வனப்பும், செழிப்பும் அவள் உடலை நிறைத்திருந்தது. ஆரம்பத்தில் மாராப்பில் காட்டிய அக்கறை, இப்போது சுத்தமாக இல்லை. தன்னுடன் இருப்பவன் ஓர் ஆண் என்கிற உணர்வினை இழந்திருந்தாள். கலைந்த ஓவியமாக களைப்படைந்துப் போயிருந்தாலும், ஏதோ ஒரு களை அவளை உலக அழகியாக அவனுக்கு காட்டியது.

இன்று காலை யதேச்சையாகதான் அவனுக்கு ‘அந்த’ ஆசை வந்தது. சரியாக சொல்ல வேண்டுமானால், குன்றின் சரிவில் இறங்கும்போது வாகாக புடவையையும், பாவாடையையும் கொஞ்சமாக முழங்காலுக்கு மேலாக அவள் தூக்கும்போதுதான் ‘அந்த’ எண்ணம் ஏற்பட்டது. பெண்களுக்குதான் எவ்வளவு அழகான கால்கள்?

அவளிடம் சாடையிலேயே பேசிப் பார்த்தான்.

எத்தனையோ பேரை சாடையாலே அழைத்தவள். எவ்வளவோ பேரின் சாடையை புரிந்துகொண்டவள். ஏனோ இப்போது அசமஞ்சமாக இருந்தாள். ஒருவேளை அவளுக்கு புரியவில்லையோ? அவனுக்கு ‘அந்த’ விஷயத்தில் அனுபவமே இல்லை. முதன்முதலாக ‘அதற்கு’ ஆசைப்பட்டு கேட்கிறான்.

கண்களை மூடிக்கொண்டு உறக்கத்துக்கு முயற்சித்தாள். அவளுக்கு விருப்பமில்லையோ? நடந்த களைப்பு. அவனுக்கும் இருட்டிக் கொண்டு வந்தது. வகை தெரியாத அந்த காட்டு மரத்தின் நிழலில் உறங்கினர்.

எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. இருவருக்கும் ஒரே நேரத்தில் விழிப்பு வந்தது. உறங்கி எழுந்த அவளைப் பார்த்ததுமே அவனுக்கு அணை கட்டியிருந்த ஆசைகள் மடை திரண்டு வெள்ளமானது. புடவையை தரைக்கு விரித்து படுத்திருந்தாள். ஜாக்கெட் அவளது திரட்சியை மறைக்க முயன்று தோற்றிருந்தது.

வெட்கத்தை விட்டுக் கேட்டான்.

“ஒரே ஒரு முறை”

“வேண்டாம். எனக்கு இருப்பது உயிர்க்கொல்லி நோய். நம்மிடம் ஆணுறையும் இல்லை”

“அந்த நோய் வந்துதான் இறக்க வேண்டும் என்பதில்லை. மரணம் ஏற்கனவே நமக்கு நிச்சயிக்கப்பட்டு விட்டது. உனக்கு இன்னும் புரியவில்லையா?”

அவளுக்கு பாவமாயிருந்தது. உண்மையில் அவளுக்கும் ‘அது’ கடைசியாக தேவைப்பட்டது. உடைகளை களைந்தாள். அவனும். வெட்டவெளியில் நடந்தது காந்தர்வ விவாகம்.

“எத்தனையோ முறை ‘இது’ எனக்கு நடந்திருக்கிறது. முதன்முறையாக உன்னிடம்தான் முழுமையான மகிழ்ச்சியை அடைகிறேன்” கிசுகிசுப்பாக, நாணத்தோடு சொன்னாள்.

ஓர் ஆணுக்கு இதைவிட வேறென்ன பெருமை? இனி நிம்மதியாக உயிர்விடலாம். ஜேம்ஸ்பாண்ட் படத்தின் இறுதிக்காட்சியில் வருவதைப் போன்ற ஒரு நீண்ட முத்தத்தை அவளுக்கு பரிசளித்தான். இந்த முத்தத்தில் காமம் சற்றுமில்லை. நூறு சதமும் காதல்தான் என்பதை அவள் உணர்ந்தாள்.

அப்போதுதான் சன்னமாக அந்தச் சத்தம் கேட்டது. ஏதோ வானூர்தியின் சத்தமாக இருக்க வேண்டும். சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது. சுற்றும் முற்றும் உன்னிப்பாக பார்த்தார்கள். தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் வருவது தெரிந்தது. அது அந்த தீவினை நோக்கிதான் வருகிறது.

அவள் அவசர அவசரமாக உடையணிந்தாள். இருவரும் “உதவி, உதவி” என்று கூச்சலிட்டவாறே, ஹெலிகாப்டரை நோக்கி கையை உயர்த்திக் காட்டினார்கள். பைலட் இவர்களை கண்டுக் கொண்டான். தலைக்கு நேராக வந்து வட்டமடித்தான். ஊர்தியை தரையிறக்க வசதியில்லாததை கண்டுகொண்டான். மெகாபோன் எடுத்து, தெளிவான ஆங்கிலத்தில் பேசினான்.

“விபத்தில் தப்பிய பயணிகளே! உங்களை காப்பாற்றுவதில் எங்கள் தேசம் பெருமை கொள்கிறது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் எங்களது மீட்புப் படகுகள் உங்களை அழைத்துச் செல்லும். அதுவரை பொறுத்திருங்கள். பசியாற்றிக் கொள்ள இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” பாலித்தீன் கவரில் சுற்றப்பட்ட பெரிய பொட்டலமொன்றினை இவர்களை நோக்கி வீசினான். வந்த வழியே ஹெலிகாப்டரை திருப்பிக் கொண்டு வேகமாகப் போனான்.

கீழே விழுந்த பொட்டலத்தை அவசர அவசரமாக பிரித்தார்கள். சில ரொட்டிப் பொட்டலங்கள். தொட்டுக்கொள்ள ஜாம். தண்ணீர் மற்றும் பழச்சாறு பாட்டில்கள். முகம் ஒற்றிக்கொள்ள நாப்கின். இன்னும் ஏதேதோ இதுமாதிரியான சமாச்சாரங்களுக்கு இடையில் இருந்தது ஓர் ஆணுறை பாக்கெட்டும்.

8 ஆகஸ்ட், 2011

தெய்வத் திருமகள் – போலியாகவே இருக்கட்டும்

தெய்வமகன் என்று முதலில் பெயரிடப்பட்டு, சிவாஜி குடும்பத்தினரின் ஆட்சேபணைக்கு பிறகு தெய்வத்திருமகன் என்று மாற்றப்பட்டு, தேவர் இனத்தவரின் மிரட்டலுக்குப் பயந்து, தெய்வத்திருமகள் ஆகியிருக்கும் I am Sam படத்தை தேவி தியேட்டரில் பார்த்தபோது, அது ஒரு உன்னதமான படமென்றெல்லாம் நினைக்கவில்லை. சில காட்சிகள் கலங்க வைத்தது உண்மை. இரண்டு பெண் குழந்தைகளின் இளம் தந்தை என்பதால் இருக்கலாம். படம் பார்த்தவுடனேயே வீட்டுக்கு ஓடிச்சென்று என் மகள்களை இரவு நீண்டநேரம் கொஞ்சிக்கொண்டே இருந்தேன். இது என் வழக்கமான இயல்பல்ல என்பதால் வீட்டில் இருந்தவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியம்.

அவ்வளவுதான், மறுநாளில் இருந்து தெய்வத்திருமகள் எந்த எஃபெக்டையும் எனக்கு ஏற்படுத்தியதாக தெரியவில்லை. இன்னொரு முறை அப்படத்தை பார்க்கும் எண்ணமும் இல்லை. ஒரு சுமாரான திரைப்படமென்று என் ரசனையளவில் மதிப்பிட்டிருந்தேன்.

ஆனால் படம் பார்த்த நம்மைப்போன்ற மற்ற சாதாரணர் சிலர் அப்படம் குறித்த மிக உயர்வான அபிப்பிராயங்களை கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. விக்ரமின் நடிப்பில் இதுதான் உச்சம் என்று என்னுடைய நண்பன் ஒருவன் கருத்து தெரிவித்தான் (சேதுவுக்குப் பிறகு உச்சத்தைத் தொடுவது என்பது இனி விக்ரமுக்கு சாத்தியமில்லாத விஷயம்). படம் பார்த்த பெண்கள் சிலர் மூக்கைச் சிந்திக்கொண்டே வீட்டுக்குப் போய், தங்கள் அப்பாவோடு மட்டும் வந்து இரண்டாம் முறை படம் பார்த்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.

திருட்டு டிவியில் படம் பார்த்த எங்கள் தெரு குடும்பம் ஒன்று, இரவு முழுக்க தூங்காமல் அழுது புலம்பியதாக ஒரு செவிவழிச் செய்தியும் கிடைத்திருக்கிறது. இம்மாதிரி தமிழகம் முழுக்க கர்ச்சீப்பை ஈரமாக்கும் ஏராளமான கண்ணீர்க் கதைகளை தொலைபேசி பேச்சுகளிலும், இணையத் தளங்களிலும் கேட்க, வாசிக்க கிடைக்கிறது. ஒருவேளை நிஜமாகவே இது மிக உன்னதமான படம்தானோ, நாம்தான் சரியாக கவனிக்கவில்லையோ என்கிற குற்றவுணர்ச்சியும் எனக்கு இயல்பாகவே எழத் தொடங்கி விட்டது.

இதேவேளையில் இப்படம் குறித்த உக்கிரமான எதிர்ப்புகளும் தமிழ் அறிவுஜீவிகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் / நம்பிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து எழத் தொடங்கியிருக்கிறது. இயக்குனர் விஜய் அப்பட்டமான திருடர் என்பது அவர்களது முதல் வாதம். I am Sam திரைப்படத்தை ஈயடிச்சான் காப்பியாக அடித்தது மட்டுமின்றி, அதை தன்னுடைய சொந்த சரக்கு போல அவர் பாவனை செய்வதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இது யாராலும் சகித்துக்கொள்ள இயலாத விஷயம்தான். இல்லையென்று சொல்லவில்லை.

ஆனாலும் அறிவுஜீவிகளின் அட்டூழியம் கொஞ்சம் அளவுக்கதிமாகவே இந்த விஷயத்தில் வெளிப்படுவதாக தோன்றுகிறது. இதற்கு முன்பாக அப்பட்டமாக தழுவிய படங்களை இவர்கள் தமிழில் பார்த்ததே இல்லை என்பது போலவும், முதன்முதலாக இப்படிப்பட்ட மோசமான போக்கினை இயக்குனர் விஜய் முன்னெடுத்திருப்பதைப் போலவும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு அப்படத்தின் கதை விவாதத்தில் பங்கெடுத்த அஜயன் பாலாவுக்கு நேர்ந்த அனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம். படத்தின் இயக்குனரோடு தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதியிருந்தார் அஜயன். அவ்வளவுதான். இணைய அறிவுஜீவிகள் பொங்கியெழுந்து விட்டார்கள் (இவர்களை ஒப்பிடுகையில் சிறுபத்திரிகை மற்றும் அரசியல் சமூக அறிவுஜீவிகளை கோயில் கட்டி கும்பிடலாம்). ஒருவன் நல்ல படைப்பாளியாக இருக்க வேண்டுமா, அல்லது நல்ல மனிதனாக இருக்க வேண்டுமா என்றெல்லாம் தர்க்கரீதியான கேள்விகளை எழுப்பி, அவரவர் தர்க்கத்தில் அவரவரே பதில் சொல்லி... ஏண்டா இப்படி எழுதினோம் - “ஒரு மனுஷன் நல்லவன்னு சொல்றது ஒரு குத்தமாய்யா?” - என்று அஜயன்பாலா நொந்துப் போகிற அளவுக்கு புகுந்து விளையாடி விட்டார்கள்.

இன்னொரு பக்கம் கீற்று இணையத்தளத்தில் வெளிவந்த விமர்சனம், உயிர்மையில் ஷாஜி எழுதிய விமர்சனம் என்று கொஞ்சம் அதீதமான, நாடகத்தனமான விமர்சனங்களை அறிவுஜீவி மொழிநடையில் வாசிக்க கிடைத்தது. இப்போது எனக்கு தெய்வத்திருமகள் படத்தின் மீதும், அதன் இயக்குனர் மீதும் பெரிய அனுதாபமே (ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் மாதிரி) ஏற்பட்டுவிட்டது.

பிக்பாக்கெட் திருடன் ஒருவன் மாட்டிக்கொண்டால் ஊரே சேர்ந்து அடித்து, நொறுக்கி திருவிழாவாக கொண்டாடுவது மாதிரியான மனோபாவத்தினை, வெகுஜனங்களிடமிருந்து விலகி நின்று அறிவுபூர்வமாக, தர்க்கப்பூர்வமாக சிந்திக்கிறவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இருப்பதினை உணரமுடிகிறது.

இதே நேரத்தில் இன்னொரு படத்தையும் இந்த சம்பவங்களோடு ஒப்பிட வேண்டியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு மாதவன் நாயகனாக நடித்து (சீமான் போலிஸ் அதிகாரியாக ரசிகர்களை வெறியேற்றி) வெளிவந்த ‘எவனோ ஒருவனை’ நினைத்துப் பார்க்கிறேன். கம்யூனிஸப் படமான காஞ்சிபுரத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, ‘எவனோ ஒருவனுக்கு’ கொடுத்திருக்கலாம் என்று தமிழ்நாட்டின் ஒரே அக்மார்க் ஐ.எஸ்.ஓ. 9001 அறிவுஜீவியான ஞாநி கூட குமுதத்தில் எழுதியிருந்தார்.

இந்தப் படத்தின் ஒரிஜினல் நிஷிகாந்த் காமத் இயக்கிய மராத்திய மொழிப்படமான பிம்பிலிக்கி பிலாகியோ என்ன எழவோ.. (டோம்பிவிலி ஃபாஸ்ட் என்று தோழர் திருத்துகிறார்). இத்திரைப்படம் மராத்திய மொழி திரைப்படங்களுக்கு ஒரு சர்வதேச அந்தஸ்தினை உயர்த்தியதாக அப்போது அறிவுஜீவிகள் மார்தட்டிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, ஏகப்பட்ட விருதுகளையும் பிம்பிலிக்கி பிலாகி குவித்தது. அவ்வருடத்தின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது பிராந்திய மொழிப் படங்களுக்கான விருதையும் பெற்றது.

இரண்டு, மூன்று மாதத்துக்கு முன்பு கலைஞர் டிவியில் ஒரு ஆங்கில டப்பிங் படத்தினை கண்டேன். மைக்கேல் டக்ளஸ் நடித்த அத்திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் ஏற்கனவே கண்டது போலவே இருந்தது. மேலும் காட்சிகளை கண்டதுமே புரிந்துவிட்டது. அட, இது நம்மூரு பிம்பிலிக்கி பிலாகி. ஹாலிவுட்காரன் கூட அப்பட்டமாக சுடுகிறானே என்று நொந்துப்போய் விட்டேன். பிற்பாடு இணையத்தில் தேடியபோது Falling Down என்கிற பெயரில் 1993லேயே அப்படம் வெளிவந்துவிட்டதை தெரிந்துகொள்ள முடிந்தது.

இதை இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது. நம் அறிவுஜீவிகள் சிலாகிக்கும் படங்களுக்கான மூலம் அவர்களுக்கு தெரியாததால், பாராட்டித் தள்ளிவிடுகிறார்கள். ஒருவேளை தப்பித்தவறி தெரிந்துவிட்டால் ’நகல் அல்ல, போலி’, ‘பொய்மையின் உச்சம்’ என்று இலக்கியத்தரமாக எட்டி உதைத்து, குப்புறப் போட்டு ஏறி மிதிக்கிறார்கள்.

குறிப்பாக வெகுதிரள் ஜனரஞ்சக படங்களின் இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் குறித்தே இவர்களது உன்னதமான ஒரிஜினல்-போலி விளையாட்டு அதிகமாக நடைபெற்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. அறிவுஜீவி இயக்குனர்கள் யாராவது சுட்டு படமெடுத்தால், நம்மாளுதானே என்று அட்ஜஸ் செய்துக் கொள்கிறார்கள்.

‘தெய்வத் திருமகள்’ அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பியாக இருக்கலாம். படத்தின் இயக்குனருக்கு படைப்புத்திறனே இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் தமிழர்களிடையே மங்கிப்போய் வரும் நெகிழ்ச்சி என்கிற உணர்வினை இப்படம் மூலமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர்விஜய் என்பது மட்டும் நிச்சயம்.

ஜனநாயக அமைப்பில் வாழும் நாம், பெரும் அபத்தங்கள் கொண்ட படங்களாக இருந்தபோதிலும் வெற்றி கண்ட படங்களின் வெற்றியை மறுக்கவே இயலாது. அவற்றை உருவாக்கிய ஜெராக்ஸ் மெஷின்களின் பெயர்கள் திரைப்பட வரலாற்றில் இடம்பெறுவதையும் தடுக்கவே இயலாது. இதற்கு நல்ல உதாரணம் கமல்ஹாசன்.

6 ஆகஸ்ட், 2011

மனிதக் குரங்குகளின் புரட்சி!

முதலாளித்துவ அமெரிக்கா ஆகட்டும். பொதுவுடைமை சீனா ஆகட்டும். ஒடுக்குறை ஓங்கி நிற்கும் ஈழம், ஆப்கானிஸ்தான் என்று உலகின் எந்த மூலையிலுமே அடக்குமுறைக்கு ‘புரட்சி’ மட்டுமே தீர்வாக முன்வைக்கப் படுகிறது.

1963ல் வெளியான பிரெஞ்சு நாவல் ஒன்று மனிதக் குரங்களுக்கு, மனிதனை விட அறிவு பெருகிவிட்டால் என்னவாகும் என்று கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், நிறைய விபரீதமாகவும் யோசித்தது. ‘ஆஹா. வடை மாட்டிச்சே’ என்று தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்களும், காமிக்ஸ் பதிப்பகங்களும் அந்நாவலை சக்கையாகப் பிழிந்து சக்கைப்போடு போட்டன. ஹாலிவுட்காரர்கள் மட்டும் சும்மாவா விரல் சூப்பிக் கொண்டிருப்பார்கள்? 1968ல் தொடங்கி 73 வரை ஐந்து பாக படங்களாக எடுத்து வசூலை வாரி குவித்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஹாலிவுட்டிலும் நம்ம ஊர் போலவே கதை பஞ்சம். பழைய வெற்றிகண்ட படம் ஒன்றை தூசுதட்டி அசத்திவிடலாமென ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ படத்தை பரிசீலித்தார்கள். பழைய சீரியஸில் வந்த முதல் படத்தை, அப்படியே கிராபிக்ஸ் மாதிரியான தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரீமேக்கினார்கள். 2001ல் வெளியான இப்படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இருந்தாலும், விமர்சகர்கள் சுளுக்கெடுத்து விட்டார்கள். 1968ல் வெளியான கிளாசிக்கை 2001ல் இயக்குனர் டிம்பர்டன் கற்பழித்துவிட்டதாக கதறினார்கள்.

பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ சீரியஸின் ஒரு படம் ரீமேக் ஆகி வெளியாகியிருக்கிறது. இதை ரீமேக் என்று சொல்லாமல் ‘ரீபூட்’ என்கிறார்கள். அதாவது ஜெயம் ராஜா மாதிரி கோவணத்துண்டு முதற்கொண்டு மொத்தமாக உருவாமல், ஒரிஜினல் படத்தின் சில கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு, புதுசாக கதை, திரைக்கதை, லொட்டு, லொசுக்குகளை உருவாக்கி படமெடுப்பது (இப்படி பார்க்கப் போனால் கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரை அறிவுஜீவிகளின் கிட்டத்தட்ட எல்லா படங்களும் ரீபூட் தான்).

பழைய சீரியஸில் நான்காவதாக வெளிவந்த ’கான்குவஸ்ட் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ஐ ரீபூட் செய்ய முடிவெடுத்தார்கள். ஆங்கிலத்தில் ‘ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்றும், தமிழில் ‘மனிதக் குரங்குகளின் புரட்சி’ என்று வெளியாகியிருக்கும் படம் பிறந்த கதை இதுதான்.

முந்தைய படம் மொக்கை ஆகிவிட்டதால், இந்த படத்துக்கு பெருத்த எதிர்ப்பார்ப்பு எதுவுமில்லை. எதிர்ப்பார்ப்பு எதுவுமின்றி போய் அமர்ந்தால், ஆச்சரியகரமான முறையில் அசத்தலாக வந்திருக்கிறது படம். நேற்று வெளியாகியிருக்கும் இப்படத்துக்கு உலகம் முழுக்க இருந்து விமர்சகர்கள் முக்கோடி முன்னூறு தேவர்கள் மாதிரி பாராட்டு மழையை பொழிந்துக் கொண்டே இருக்கிறார்கள். நனைந்து நனைந்து ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் குழுவினருக்கு ஜல்ப்பே பிடித்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கதை ரொம்ப சிம்பிள். ஒரு விஞ்ஞானி மனிதமூளையின் திறனை மேம்படுத்த ஏதோ ரீடோவைரஸ் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் (அவரது தந்தைக்கு இது தொடர்பான நோய் இருக்கிறது). முதற்கட்டமாக மனிதக்குரங்குகளின் மீது பிரயோகிக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இச்சோதனை வெற்றியடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட மனிதக்குரங்கு வெறிபிடித்தது போல நடந்துகொள்ள திட்டம் தோல்வியடைந்ததாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த குரங்கு சுட்டு கொல்லப்படுகிறது. போஸ்ட்மார்ட்டத்தின் போதுதான் தெரிகிறது. அது கர்ப்பமாக இருந்த குரங்கு. குட்டி உயிரோடு இருக்க, அதையெடுத்து ரகசியமாக வளர்க்கிறார் விஞ்ஞானி. சீஸர் என்று பெயரிடப்பட்ட அக்குரங்கு புத்திசாலித்தனத்தில் மனிதனை மிஞ்சுகிறது. ஏதோ ஒரு பிரச்சினையில் சிம்பன்ஸிகளை அடைத்து வைத்திருக்கும் ஒரு மிருகக்காட்சி சாலைக்கு அரசாங்க உத்தரவின் காரணமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு நடக்கும் அடக்குமுறைகள். அதை கண்டு பொங்கும் சீஸர். தனக்கு வழங்கப்பட்ட மருந்தை மற்ற குரங்குகளுக்கும் கொடுத்து அவற்றையும் மனிதருக்கு இணையாக புத்திசாலிகளாக்குகிறது சீஸர். புத்தி வந்துவிட்டால் அடுத்து என்ன? புரட்சிதான் க்ளைமேக்ஸ்.

பல காட்சிகள் நம்மூர் எந்திரனை பார்ப்பது போலவே இருக்கிறது. குரங்குக்கு பதில் இங்கே ரோபோவை போட்டிருந்தால் கிட்டத்தட்ட எந்திரன்தான். நல்லவேளையாக எந்திரனை மாதிரி மனிதக் குரங்குக்கு ஃபிகர் மேல் காதல் வந்துவிடுவதாக மலினப்படுத்தவில்லை. அவதார் காணும்போது கிடைத்த பல காட்சியனுபவங்களை இப்படத்தை பார்க்கும்போதும் அடையமுடிகிறது.

சீஸராக நடித்திருக்கும் கம்ப்யூட்டர் பிம்பத்தை பார்த்து நம்மூர் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும், லிட்டில் சூப்பர் ஸ்டார்களும் நடிப்பு கற்றுக் கொள்ளலாம். ஒரு விர்ச்சுவல் இமேஜ் லெவலுக்கு கூட நடிக்கத் துப்பில்லாத நடிகர்களை பெற்றிருக்கும் அபாக்கியவான்கள் நாம். சீஸர் முறைக்கிறான், கெஞ்சுகிறான், சீறுகிறான், அஞ்சுகிறான், அழுகிறான். எல்லாமே மிக இயல்பாக உருவாக்கப்பட்டிருப்பதை காணும்போது, எதிர்காலத்தில் கம்ப்யூட்டர்களே புரட்சி செய்து உலகத்தை ஆளும் என்கிற கூற்றினை நம்பத்தான் வேண்டியிருக்கிறது. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நிஜத்தை நெருங்கவெல்லாம் இல்லை. நிஜத்தை அச்சு அசலாக உருவாக்கத் தொடங்கிவிட்டது.

மசாலா படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கலந்து கட்டி ஸ்ட்ராங்காக அடித்திருக்கிறார் இயக்குனர். நம்மூர் சின்னத் தளபதி, பேரரசு படத்தில் என்னவெல்லாம் செய்வாரோ, அத்தனையையும் ஹீரோவான மனிதக்குரங்கு பேசாமலேயே செய்கிறது. நீளமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஷாட்களின் விறுவிறுப்பும், துல்லியமும் அபாரம். எந்த இடத்திலுமே தொழில்நுட்பம், உள்ளடக்கத்தை மீறி துருத்திக் கொண்டு தெரியவில்லை என்பது இப்படத்தின் பலம். ‘தொழில்நுட்பம் வேஸ்ட்’ என்று இங்கே கதறிக்கொண்டிருக்கும் ஆறின கஞ்சி இயக்குனர்களுக்கு இப்படம் நிச்சயமாக பாடம்.

ஆசிய ஆடியன்ஸ்களை குறிவைத்து கச்சிதமாக இலக்கை எட்டியிருக்கிறார் இயக்குனர். இந்திய ஹீரோயின் ஃப்ரீடாபிண்டோ (மனிதக் குரங்குக்கு ஜோடியல்ல, விஞ்ஞானியின் மனைவி). சீன, இந்திய, தாய்லாந்திய சினிமா வெறியர்கள் ரசிக்கக்கூடிய செண்டிமெண்ட் கம் ஆக்‌ஷன் என்று கமர்சியல் ஃபார்முலா. என்ன ‘பிட்டு’ தான் சுத்தமாக இல்லை என்பது பெரிய குறை. ஓரிரண்டு பிரெஞ்சு கிஸ் காட்சிகள் இருந்தாலும், யானைப்பசிக்கு சோளப்பொறிதான்.

அவதாருக்குப் பிறகு இங்கே பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கப் போகிறான் இந்த சீஸர்!

3 ஆகஸ்ட், 2011

சொர்க்கம்!

இணையத்தில் இயங்குபவர்களுக்கு ரொம்ப நாளாகவே நன்கு அறிமுகமான படம். கேபிள் சங்கர் என்கிற பெயரில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் நாராயண் வலைப்பதிவு எழுதுபவர் என்பதால் வலைப்பதிவர்களிடையே பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ஆர்.பி. செந்திலும், ஓ.ஆர்.பி.ராஜாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் ஹிட். எல்லா பாடல்களையுமே அப்துல்லா பாடியிருக்கிறார். “கிழிப்பேண்டா. உன் தொண்டையை கிழிப்பேண்டாஎன்று ஓபனிங் பாடலிலேயே எக்குத்தப்பான வாய்ஸில் எகிறியிருக்கிறார். பாடல்களை எழுதியவர் மணிஜி. பாடல்களில் சாராய நெடி அதிகமா காமநெடி அதிகமா என்று லியோனி பட்டிமன்றம் வைக்கலாம்.

இயக்குனர்கள் வழக்கமாக தொடமறுக்கும் கதைக்களன் இது. பிட்டு பட இயக்குனர்கள் மட்டுமே இம்மாதிரி ஃப்ளாட்டை யோசிக்க முடியும். சொர்க்கம் என்பது ஹீரோயினின் பெயர். ஹீரோ எதிர்த்த ஃப்ளாட் இளைஞன். ஹீரோயினை விட பத்து வயது குறைந்தவன். கட்டழகன். எப்படியாவது ஆண்டியை கவிழ்த்து விட வேண்டும் என்று ஏகப்பட்ட தகிடுதத்தம் செய்கிறான். ஒரு கட்டத்தில் ஹீரோயினும் ஹீரோவுக்கு மசிகிறமாதிரி சூழல் அமைகிறது. இதற்கு ஹீரோயினின் கணவன் முட்டுக்கட்டை போடுகிறான். கடைசியிலாவது ஹீரோவுக்கு சொர்க்கம் கிட்டியதா என்பதே கதை.

இந்தப் பாத்திரத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் மறுத்துவிட்டதால், கேபிள் சங்கரே ஹீரோவாக நடித்திருக்கிறார். 55 வயதாகும் கேபிள் சங்கர், 20 வயது இளைஞனின் பாத்திரத்தை அனாயசமாக அடித்து நொறுக்கியிருக்கிறார். 55 வயதில் உலகம் சுற்றும் வாலிபனாக நடித்த எம்.ஜி.ஆரே செய்யமுடியாத சாதனை இது. பாடிலேங்குவேஜில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் கேபிள் சங்கர். குறிப்பாக “நான் யூத்துடா.. மத்தவெனெல்லாம் ங்கொய்ய்ய்..என்று பஞ்ச் வசனம் பேசும் காட்சியில் அவரது கைகள் கரகாட்டம் ஆடியிருக்கிறது. கால்கள் கம்பு சுத்துகிறது.

14 வயதான ஹீரோயின் நிரிஷா, 30 வயது கதாபாத்திரத்தில் தைரியமாக ஆண்டியாக நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்குமான ஜோடி பொருத்தம்தான் இடிக்கிறது. சிங்கம் எலியோடு ஜோடி போட்டுப் போவதைபோல. பாடல் காட்சிகளில் ஹீரோவின் ரொமாண்டிக் குளோஷப் ஷாட்டுகள் ரசிகர்களை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

பட பூஜையின் போது வசனகர்த்தாவாக ஊன்னாதான்னா என்கிற உண்மைத்தமிழன் பெயர் போட்டு விளம்பரம் வந்தது. அவர் எழுதிக் கொடுத்த வசனங்களின் படி படமெடுத்தால், அது ஏழு வருடத்துக்கு தொடர்ச்சியாக சன் டிவியில் மெகா தொடராக வருமென்ற கட்டாயத்தால் வசனகர்த்தா மாற்றப்பட்டார். ஜாக்கிசேகர் வசனம் எழுதியிருக்கிறார். வசனங்கள் எதுவுமே முழுமையாக புரியாத வண்ணம் அடிக்கடி ங்கொய்ய்ய்.. சவுண்டு வந்து எரிச்சலூட்டுகிறது. ராட்டினத்தில் சுற்றப்போகும் ஹீரோயினிடம், காதலோடு சொல்கிறார் கேபிள் சங்கர் ‘சுத்து பத்திரம்’. இந்த வசனத்தில் வசனகர்த்தா ஏதேனும் எழுத்துப் பிழை செய்துவிட்டாரா அல்லது பத்திரமாக சுற்றச் சொல்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஹீரோயின் ஹீரோவைப் பார்த்து ‘ஒத்துப்போஎன்று சொல்லும்போது விடலைகள் விசில் அடிக்கிறார்கள். இங்கேயும் ஜாக்கிசேகர் ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பார் போலிருக்கிறது. க்ளைமேக்ஸில் வில்லனைப் பார்த்து ஹீரோ மனோகரா பாணியில் ஐந்து நிமிட வசனத்தை ஒரே ஷாட்டில் பேசியிருக்கிறார். துரதிருஷ்டவசமாக சர்ச்சைக்குரிய வசனங்களை ங்கொய்ய்ய்..செய்யச் சொல்லி சென்ஸார் வற்புறுத்தியதால், அந்த ஐந்து நிமிட வசனங்கள் மொத்தமும் ங்கொய்ய்ய்..ஆகிவிட்டது.

ஆதிதாமிராவின் கேமிராவுக்கு நல்ல சதையுணர்ச்சி. ஹீரோவின் தொப்பையையும், ஹீரோயின் தொப்புளையும் அழகுற படமெடுத்திருக்கிறார்.

படத்தின் பெரிய மைனஸ் என்னவென்றால் ஹீரோ ஹீரோயின் நெருக்கம்தான். நாயக்கர் மகால் தூண் மாதிரியிருக்கும் ஹீரோவை ஹீரோயினால் முழுமையாக கட்டியணைக்க முடியவில்லை. அதுபோலவே திரைக்கதை அங்கங்கே முட்டிக்கொண்டு நிற்கிறது. ஜாக்கிசேகரின் வசனங்களை முழுமையாக சென்ஸார் இடம்பெறச் செய்யாததாலும் படத்தின் கதை என்னவென்றே புரியாமலும் முன்சீட்டில் தலையை முட்டிக்க வேண்டியிருக்கிறது.

சொர்க்கம் – சுகிக்கவில்லை, சகிக்கவுமில்லை