29 ஜனவரி, 2014

நடுப்பக்கம்

‘ராணி’யைத் தவிர வேறெந்த பத்திரிகையும் தன்னை குடும்பப் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் குமுதம் நிஜமாகவே குடும்பப் பத்திரிகையாகதான் ஒரு காலத்தில் இருந்தது. எண்பதுகளின் குடும்பங்களை ‘குமுதம் குடும்பம்’ என்றே சொல்லலாம். குமுதம் வாங்காத குடும்பங்களே இல்லை என்ற நிலை. அட்டை டூ அட்டை பக்கா மிக்ஸர். லேசாக அரசியல். பல்சுவை அரசு பதில்கள். குழந்தைகளுக்கு ஆறு வித்தியாசங்கள். அவ்வப்போது சித்திரக் கதைகள். ஆன்மீக வாதிகளுக்கு பிரார்த்தனை க்ளப். இல்லத்தரசிகளுக்கு ஏராளமான சிறுகதைகள் மற்றும் தொடர்கதை. கன்னித்தீவு ரேஞ்சுக்கு எப்போதும் குமுதத்தில் ‘சாண்டில்யன்’. சினிமா நட்சத்திரங்களின் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி. கிசுகிசு. ‘லைட்ஸ் ஆன்’ வினோத் என்று எல்லாமே குமுதத்தில் இருக்கும்.

குறிப்பாக கதைகள். எல்லா genre (செக்ஸ் உட்பட) கதைகளும் வருமாறு இதழ் வடிவமைக்கப்படும். “நல்ல கதையை படிக்கும் வாசகன் அதை ‘நல்ல கதை’ என்று சொல்லக்கூடாது. ‘குமுதமான கதை’ என்று சொல்ல வேண்டும்” என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஆணையிட்ட அளவுக்கு நிலைமை இருந்தது.

குமுதத்தில் எல்லாமே இருந்தாலும், அவர்களுக்கு ஒரு ‘சீக்ரட் வெப்பன்’ இருந்தது. ‘நடுப்பக்கம்’. குமுதத்தின் ‘இளமை இமேஜ்’ இந்த ஒரு பகுதியால்தான் கொடிகட்டிப் பறந்தது. எந்த ஒரு பத்திரிகையை வாங்கினாலும், அதில் முதலில் பார்க்க வேண்டிய பகுதி என்று ஒவ்வொரு வாசகருக்கும் ஏதோ ஒரு பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சிலர் கார்ட்டூனை முதலில் பார்ப்பார்கள். தலையங்கம், தொடர்கதை, கடைசிப்பக்கம் என்று ஒவ்வொருவருக்குமே ஒரு தனித்துவமான ரசனை இருக்கும். சொல்லி வைத்தாற்போல குமுதம் வாசகர்கள் வாங்கியதுமே பிரித்துப் பார்ப்பது நடுப்பக்கத்தைதான். பெண்களும் கூட நடுப்பக்கத்தைதான் முதலில் பார்ப்பார்கள். நடுப்பக்க படத்துக்கு ஜாடிக்கேத்த மூடியாய் கச்சிதமாக எழுதப்பட்ட கமெண்டை படித்துவிட்டு, “நாசமாப் போறவன் இந்த குமுதம்காரன்” என்று வெளிப்படையாக திட்டுவார்கள். ஆனால் முகத்தில் கோபமோ, கடுகடுப்போ இருக்காது. நாணத்தால் முகம் சிவந்திருப்பார்கள். ஜெயப்ரதா ரேஞ்சுக்கு அழகாக இருந்த ரோகிணி அக்கா அம்மாதிரி முகம் சிவந்ததை நிறையமுறை பார்த்திருக்கிறேன்.

நான் குழந்தைப் பருவத்தில் குமுதத்தில் பொம்மை பார்க்க ஆரம்பித்து (பெரும்பாலும் சிலுக்கு, அனுராதா பொம்மைகள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்), ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்து வெகுவிரைவிலேயே –அதாவது எட்டு, ஒன்பது வயது வாக்கில்- நடுப்பக்கத்துக்கு வந்துவிட்டேன். அப்பா ஆன்மீகவாதியாக இருந்தாலும், முதலில் நடுப்பக்கத்தை தரிசித்துவிட்டுதான் ‘பிரார்த்தனை க்ளப்’புக்கே வருவார். தனக்கு போட்டியாக குடும்பத்தில் இன்னொருவனும் நடுப்பக்கத்தை ஆராதிப்பவனாக வளர்வது அவருக்கு எரிச்சலை தந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த குமுதம் இதழில் நடுப்பக்கம் மட்டும் இல்லாமல் இருந்தது. தன்னுடைய அடையாளத்தை இழந்துநின்ற அந்த இதழ்களை வாசிக்கும் ஆர்வமே எனக்கு போய்விட்டது. ஆரம்பத்தில் குமுதமே நடுப்பக்கத்தை வாசகர்களின் பாசாங்கு கண்டனங்களுக்கு பயந்து நிறுத்திவிட்டதோ என்று நினைத்திருந்தேன். பிற்பாடு கால்குலேட் செய்து பார்த்ததில் பக்க எண் இடித்ததில், இது அப்பாவுடைய சதியென்று அஞ்சாநெஞ்சன் அழகிரி மாதிரி உணர்ந்துகொண்டேன். அதனாலென்ன அக்கம் பக்கம் வீட்டு இதழ்களுக்குப் போய் குமுதத்தின் நடுப்பக்கத்தை வாசித்து, என் இலக்கிய அறிவு நாளொரு ‘மேனி’யும், பொழுதொரு நடிகையுமாக வளர ஆரம்பித்தது.

இவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த ‘நடுப்பக்கம்’ எப்போதிலிருந்து குமுதத்தில் காணாமல் போனது என்று சரியாக நினைவில்லை. அந்த ‘சேவை’யை குமுதம் நிறுத்தியிருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலை. இதனால் இளைஞர்களின் எழுச்சி தாமதப்பட்டு, புரட்சி தேவையில்லாமல் சில நூற்றாண்டுகள் தள்ளிபோடப்பட்டு விட்டது என்பதுதான் வேதனை. எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி?

இந்த வார குமுதம் நடுப்பக்கத்தை பார்த்தேன். என் மகள் தமிழ்மொழி போட்டோவை போட்டிருக்கிறார்கள். இப்படியே போனால் இன்னும் கொஞ்சநாளில் குமுதம், ‘பூந்தளிர்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘ரத்னபாலா’, ‘அம்புலிமாமா’, 'பாலர் மலர்’ ரேஞ்சுக்கு குழந்தைகள் இதழாக பரிணமித்துவிடுமோ என்கிற நியாயமான அச்சம் என்னை ஆட்டிப் படைக்கிறது.

27 ஜனவரி, 2014

எக்ஸ்பிரஸ் வேக புத்தகம்

1992. மார்ச் மாத தொடக்கத்தில் தினத்தந்தியில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ரஜினி ஸ்டில்லோடு கவிதாலயாவின் அண்ணாமலை படம் பற்றிய அறிவிப்பு. இயக்கம் வசந்த்.

சல்மான்கான் படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மார்ச் 9 அன்று சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. அங்கே காத்திருந்த கவிதாலயா மேனேஜர், நேராக அவரை பாலச்சந்தரிடம் அழைத்துச் செல்கிறார்.

“வசந்த் விலகிட்டான். அண்ணாமலையை நீ பண்ணு” பாலச்சந்தர் சொன்னபோது சுரேஷ்கிருஷ்ணாவால் நம்பவே முடியவில்லை. கையை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார். ரஜினி ரசிகராக இருந்தாலும் முன்பாக அவர் இரண்டு கமல் படங்களைதான் இயக்கியிருந்தார். தன்னை ஏன் எதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

“ஜூன் ரிலீஸ்னு ப்ளான் பண்ணிட்டோம். தனிப்பட்ட காரணங்களாலே வசந்த் விலகிட்டான். கவிதாலயாவோட மானம் காப்பாத்தப் படணும். நாளை மறுநாள் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. போயஸ் கார்டன் போய் ரஜினியை பார்த்து பேசிடு”

தானாக வந்து பொறியில் மாட்டிக்கொண்டது அப்போதுதான் அவருக்கு புலப்படுகிறது. சூப்பர் ஸ்டாரை முதன்முதலாக இயக்கப் போகிறோம். எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் இரண்டு நாளில் ஷூட்டிங் தொடங்கியாக வேண்டும். எதையும் பேசவிடாமல் நூற்றி ஒன்பது ரூபாய் அட்வான்ஸை கையில் திணித்துவிட்டார் குருநாதர் கே.பி. அவரிடம் பதினாலு படங்கள் வேலை செய்த சிஷ்யர் சுரேஷ் கிருஷ்ணா.

“என்னாலே முடியும் சார். நான் செய்யறேன்” என்று தன்னம்பிக்கையோடு சொல்லிவிட்டு, ரஜினியை காண கிளம்பினார்.

இது அண்ணாமலையின் கதை மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற சாதனை சிகரமான ‘பாட்ஷா’வுக்கும் ‘அ’ன்னா போடப்பட்டது இங்கேதான். தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக அசைக்க முடியாத உயரத்தில் இருக்கும் நடிகர் ஒருவரை, கிட்டத்தில் பார்த்து பேசி அவரை புரிந்துகொண்டு அவர் ஏன் சூப்பர் ஸ்டார் என்பதை பாட்ஷாவின் திரைக்கதை வேகத்தில் எழுதியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவரோடு மூத்தப் பத்திரிகையாளர் மாலதி ரங்கராஜனும் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல் மு.மாறனின் தமிழாக்கத்தில் ‘பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது.

மூன்று மாத கால குறுகிய கால தயாரிப்பாக இருந்தாலும் அண்ணாமலையின் தரம் என்னவென்பதை இருபது ஆண்டுகள் கழித்தும் நாம் இன்றும் உணரமுடிகிறது. நம்மை இன்றும் வசீகரிக்கும் பல காட்சிகளின் பின்னணியை விலாவரியாக விவரித்திருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

குறிப்பாக அண்ணாமலையின் ‘கடவுளே கடவுளே’ பாம்பு காட்சி. ரஜினியின் மீது ஏறிய பாம்புக்கு வாய் தைக்கப்படவில்லையாம். இது படப்பிடிப்பில் ரஜினி, சுரேஷ்கிருஷ்ணா யாருக்குமே தெரியாது. பாம்பை கொண்டுவந்தவரின் கவனக்குறைவால் இது நேர்ந்திருக்கிறது.

சரத்பாபுவிடமும், ராதாரவியிடமும் சவால் விட்டு தொடை தட்டும் காட்சிக்கு வித்தியாசமான டிராலிஷாட் அமைத்திருந்தார். பொதுவாக ட்ராலி நேர்க்கோட்டிலோ அல்லது ரவுண்டிலோ டிராவல் செய்யும். மாறாக இக்காட்சிக்கு முக்கோண வடிவில் ஏற்பாடு செய்திருந்தார் சுரேஷ்கிருஷ்ணா. ரஜினிக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி இது எப்படி திரையில் தெரியப்போகிறது என்பது தெரியாது. ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் இணைந்து சாதனை படைத்த காட்சி இது. கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பல படிகள் நாம் முன்னேறிவிட்டாலும் இன்றும் இந்த காட்சி தரும் அனுபவம் அலாதியானது.

அண்ணாமலை தயாரானபோதே சுரேஷ்கிருஷ்ணாவோடு அடுத்தும் படம் செய்யவேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார். அதுதான் ‘பாட்ஷா’. அவர் சொன்ன கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துவிட்டிருக்கிறது. ஆனால் அதிரடியான அண்ணாமலையை செய்துவிட்டு, அதற்கடுத்து அதைவிட அதிரடியான ‘பாட்ஷா’ என்று இருவரின் கூட்டணியில் வந்தால் சரியாக இருக்காது என்று ரஜினி நினைக்கிறார். dilute செய்வதற்காக ஒரு படம் நாம பண்ணலாம் என்று காமெடி சப்ஜெக்டாக வீராவை கொண்டுவருகிறார். தன்னுடைய படங்கள் என்னமாதிரி வரிசையில் அமையவேண்டும் என்று ரஜினி மெனக்கெட்டிருக்கிறார்.

அண்ணாமலை மாதிரியில்லாமல் வீரா செய்யும்போது ரஜினியோடு சில கருத்துவேறுபாடுகள் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு தோன்றுகிறது. அடிப்படையில் அவருக்கு கதையே பிடிக்கவில்லை. தெலுங்கு ‘அல்லரி மொகுடு’வை தமிழுக்கு கொண்டுவந்தால் சரியாக வராது என்று நினைக்கிறார். ரஜினிக்கு அந்த ஸ்க்ரிப்டில் முழு நம்பிக்கை இருந்தது. இளையராஜா முதலில் போட்ட ட்யூன்களில் ஏதோ குறைகிறது என்பதில் தொடங்கி, பாடல் காட்சிகளுக்கு யோசித்த ஐடியா வரை சுரேஷ்கிருஷ்ணாவுக்கு நிறைய சங்கடங்கள். அதையெல்லாம் எப்படி ரஜினியின் உதவியோடு தாண்டி வெற்றிப்படமாக எடுத்தார் என்பதை எந்த ‘சென்சாரும்’ இல்லாமல், திறந்த புத்தகமாய் எழுதியிருக்கிறார்.

‘பாட்ஷா’ எடுத்தபோது, சூப்பர் ஸ்டாரை கம்பத்தில் வைத்து அடிக்கும் காட்சிக்கு தயாரிப்பாளர் ஆர்.எம்.வீ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ரஜினியை வைத்துதான் இந்தப் பிரச்சினையையும் இயக்குனர் கன்வின்ஸ் செய்திருக்கிறார். படம் எடுக்கும்போதே ரஜினிக்கும், சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் தெரிந்துவிட்டது. இதுதான் தங்கள் வாழ்க்கையின் ‘மாஸ்டர் பீஸ்’ என்று. பாட்ஷா தயாரிப்பில் இருந்தபோது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இருவரும் ‘பாட்ஷா’வாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

பல சிரமங்களை தாண்டி படம் தயார். அன்று மாலை ஆர்.எம்.வீ பார்க்க இருக்கிறார். அதற்கு முன்பாக காலையில் ரஜினி பார்க்கிறார். இரண்டாம் பாதி சரியாக வரவில்லை என்று ரஜினிக்கு தோன்றுகிறது. கையைப் பிசைந்துக் கொண்டிருந்தவருக்கு கை கொடுத்தார் சுரேஷ்கிருஷ்ணா. அவசர அவசரமாக இரண்டாம் பாதியில் பல காட்சிகளை வெட்டி, சில எஃபெக்ட்டுகளை சேர்த்து ஆர்.எம்.வீ.க்கு போட்டு காட்டுகிறார். எடிட்டிங் டேபிளில் தயாரான படம் பாட்ஷா என்கிறார் அதன் இயக்குனர். புத்தகத்தின் க்ளைமேக்ஸான இந்த பகுதி பாட்ஷாவின் க்ளைமேக்ஸுக்கு நிகரான பரபரப்பு கொண்டது.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன்னுடைய காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இயக்குனரில் தொடங்கி மேக்கப் அசிஸ்டண்டுகள், லைட்டிங் பாய்கள் அனைவரோடும் பேசி தயாராகி நடிக்கும் ரஜினியின் பண்பினை பல பக்கங்களில் விவரித்திருக்கிறார். ரஜினி ஓய்வுக்கு கேரவன் பயன்படுத்துவதில்லையாம். காட்சி இடைவேளைகளில் ஏதாவது பெஞ்சில் படுத்தபடியே, கண்ணை மூடி, கண்களுக்கு மேல் துணியை போட்டு (வெளிச்சம் பாதிக்காமல் இருக்க) அடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு மனதுக்குள்ளாகவே ரிகர்சல் பார்ப்பாராம். ரஜினியின் ஒர்க்ஸ்டைல் என்னவென்பதை அக்குவேறு ஆணிவேராக அலசியிருக்கிறார்.

பொதுவாக ரஜினியை பற்றி மக்களிடம் இப்படியொரு எண்ணம் இருக்கிறது. அவர் நடிப்பைத் தவிர்த்து வேறெதிலும் ஆர்வம் காட்ட மாட்டார். மாறாக கமல் ஒரு படத்தின் அத்தனை நிலைகளிலும் உழைப்பார் என்று. சுரேஷ்கிருஷ்ணாவின் இந்த புத்தகம் அதற்கு நேரெதிரான பிம்பத்தை உருவாக்குகிறது. படத்தின் ஒன்லைனரில் தொடங்கி பாடல்கள், இசை, காட்சிகள், வசனங்கள் என்று அனைத்துக்குமே ரஜினி மெனக்கெடுகிறார். படப்பிடிப்பில் காட்சியின் தாக்கத்தை மனதில் கொண்டு இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஐடியாவும் கொடுப்பதுண்டு. கதைக்கு மாறாக காட்சிகள் எடுக்கப்பட்டால் அது ஏன், எதற்கென்று கேட்டு தனக்கு திருப்தி தராவிட்டால் அதுகுறித்த ஆட்சேபணைகளையும் தெரிவிப்பார். ஷூட்டிங் தாமதப்பட்டு தயாரிப்பாளருக்கு பணநஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இதனால் பகலில் பாடல் காட்சிகள், இரவில் சண்டைக் காட்சிகள் என்று இருபத்து நான்கு மணி நேரம் உழைக்கவும் அவர் எப்போதும் தயாராகதான் இருந்திருக்கிறார்.

நூலின் பலவீனம் அதன் தலைப்புதான். மூன்று படங்களில் ரஜினியுடனான சுரேஷ்கிருஷ்ணாவின் அனுபவங்கள்தான் இப்புத்தகம். ஆனால் பாட்ஷா குறித்து மட்டுமே என்கிற மனோபாவத்துடன் தான் நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். “எப்படா பாட்ஷா வரும்” என்று ஆவலாக பக்கங்களை புரட்ட புரட்ட அண்ணாமலையும், வீராவும் சலிக்கிறார்கள். நூற்றி எண்பது பக்கங்கள் தாண்டியபிறகுதான் பாட்ஷா வருகிறார்.

தன்னோடு பணியாற்றிய ஒரு நடிகரை குறித்து இம்மாதிரி ஓர் இயக்குனர் புத்தகம் எழுதுவது அற்புதமான விஷயம். முன்பு தமிழில் இருந்த இந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. உலகம் சுற்றும் வாலிபன் எப்படி உருவானது என்று எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் இயக்குனர்கள் சிலர் (ப.நீலகண்டன் மாதிரியானவர்கள்) அவரைப் பற்றி பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள். சிவாஜி பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது (ஆரூர்தாஸ் எழுதிய புத்தகங்கள் முக்கியமானவை). சுரேஷ்கிருஷ்ணா மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இதேபோல பேசும்படம், அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் படங்களையொட்டி கமலைப்பற்றி சிங்கீதம் எழுதினால் நன்றாக இருக்கும். கமலே எழுதினால் அது இலக்கியமாகிவிடும், வாசிக்க சகிக்காது.

பாட்ஷாவும் நானும் : புனைவுக்கு நிகரான சாகஸம்!


நூல் : பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்
எழுதியவர்கள் : சுரேஷ் கிருஷ்ணா & மாலதி ரங்கராஜன்
பக்கங்கள் : 264
விலை : ரூ.125
வெளியீடு : வெஸ்ட்லேண்ட் லிமிடெட்
இணையத்தில் வாங்க : டிஸ்கவரி புக் பேலஸ் இணையத்தளம்

22 ஜனவரி, 2014

அதிகாரத்துக்கு அலாரம்!

‘ஆம் ஆத்மி’ மீது இப்போது வரை எனக்கு பெரிய நம்பிக்கை எதுவும் வந்துவிடவில்லை. அன்னாஹசாரே அளவுக்கு இல்லையென்றாலும் கேஜ்ரிவாலும் எனக்கு சொல்லிக்கொள்ளக் கூடியவகையில் எண்டெர்டெயினராகதான் தெரிகிறார். அதிலும் தினகரனில் கேஜ்ரிவால் குறித்த செய்திகளை போடும்போதெல்லாம் குளிருக்கு அவர் தலைக்கு மப்ளர் சுற்றிய படத்தை மட்டுமே பயன்படுத்துவதை பார்க்கும்போதெல்லாம் குபீர் சிரிப்பு வருகிறது.

ஆனால், கேஜ்ரிவாலை இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் நம்புகிறார்கள். வேறு வழியில்லாமல் ‘நமோ’ கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்கள், இப்போது குல்லாவுக்கு சலாம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். கேஜ்ரிவாலின் படத்தை அட்டையில் போட்டால் பத்திரிகை விற்கிறது. இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை.

ஆனால், கேஜ்ரிவால் டில்லியில் போலிசாருக்கு எதிராக நடத்திய ‘தர்ணா’ அவர்மீது எனக்கு பெரிய மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இராணுவமும், காவல்துறையும் இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டின் அடிப்படைப் பண்புக்கு சவால் விடும் அதிகார கூலிகளாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது காவல்துறையின் அராஜக நடவடிக்கைகளை எதிர்கொண்ட கட்சிகள் கூட, அதிகாரத்துக்கு வந்ததுமே அத்துறையின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமலோ, அல்லது மேலும் கூடுதலாக ஆட்டம் போடவே அனுமதிக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. எடுத்துக்காட்டுக்கு திமுகவை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே காவல்துறையால் படுமோசமாக வேட்டையாடப்பட்டவர்கள் என்று எடுத்துக்கொண்டால் கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்து திமுகவினர்தான். இந்தியெதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்ஸி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம், ஜெயலலிதாவின் 91-96, 2001-06 காலக்கட்டங்களில் சராசரி திமுககாரனில் தொடங்கி திமுக தலைவர் வரை மிக மோசமாக மனிதநேயம் சற்றுமின்றி தமிழ்நாடு காவல்துறையால் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஐந்து முறை ஆட்சிக்கு வந்த கலைஞரே கூட இத்துறைக்கு கடிவாளம் போடநினைத்ததில்லை என்பதுதான் அரசியல்முரண்.

அன்னா ஹசாரேவின் போராட்டங்களின் போது காவல்துறையின் அடக்குமுறைகளை நேரடியாக சந்தித்தவர் கேஜ்ரிவால். அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தின் போதும் இத்துறை எப்படிப்பட்ட அதிகாரபோதையில் இயங்குகிறது என்பதை நேரடியாகவே அறிந்திருப்பார்.

தொடர்கதையாகி விட்ட டெல்லியின் பாலியல் குற்றங்களை தடுக்கத் தவறியதாக டெல்லி காவல்துறையை எண்ணுகிறார். சட்ட அமைச்சரே களமிறங்கி சிலரை சுட்டிக் காட்டியும் டெல்லி காவல்துறை கையை கட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில், கேஜ்ரிவால் தன்னுடைய இமேஜை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தர்ணாவில் குதித்தது இந்திய சரித்திரத்தின் குறிப்பிடத்தக்க சம்பவமாக எண்ணத் தோன்றுகிறது. முதன்முறையாக ஓர் ஆட்சியாளர் இந்த அதிகாரப் பூனைகளுக்கு மணி கட்ட நினைக்கிறார். அதிகாரத்துக்கு எதிராக அலாரம் அடித்திருக்கிறார். அதிகார ருசி கண்டுவிட்ட காங்கிரஸும், பாஜகவும் பதறுவது இதனால்தான். மீடியாவும் சட்டென்று கேஜ்ரிவாலை விமர்சித்து தலையங்கங்களும், கிண்டலான செய்திகளும் எழுதிக் குவிக்கிறது.

கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையை அறம், ஆட்சியியல், லொட்டு லொசுக்கு காரணங்களை காட்டி ஆயிரம் நொட்டு சொல்லலாம். விளம்பரத்துக்கு செய்கிறார் என்று சுலபமாக விமர்சித்துவிட்டு போகலாம். அதிகாரத்துக்கு வந்த ஒருவர் அதிகாரத்துக்கு எதிராக போராடுகிறார் என்கிறவகையில் இவ்விவகாரத்தில் கேஜ்ரிவாலை ஆதரிப்பதே சாமானிய மனிதர்களுக்கான நல்ல சாய்ஸ். இராணுவம், காவல்துறை போன்றவை ஆட்சிக்கு வருபவர்களுக்கு வாலாட்டும் வகையில் இல்லாமல் சுதந்திரமாக செயல்படவும், நேர்மையான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவும் படவேண்டும். ஜனநாயக நாட்டில் வசிக்கும் சராசரி குடிமகன் மிலிட்டரிக்காரரையும், போலிஸ்காரரையும் கண்டு அச்சப்படும் நிலை மாறவேண்டும். குறிப்பிட்ட இப்பிரச்சினை தொடர்பான கேஜ்ரிவாலின் போராட்டம் முழுவெற்றியை அடையாவிட்டாலும், பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதே நாட்டுக்கு நல்லது.

20 ஜனவரி, 2014

ஜில்லா : பொது மன்னிப்பு

‘ஜில்லா’ பற்றிய முந்தைய பதிவு. இதை வாசித்துவிட்டு, இப்பதிவை வாசிப்பது நலம். இல்லாவிட்டால் close செய்துவிட்டு செல்வது அதைவிட நலம்.

இரவு வேளைகளில் மல்லிகைப்பூ வாசத்தை முகர்ந்துவிட்டால், சராசரித் தமிழன் காமவெறி மூடுக்கு ‘செட்’ ஆகிவிடுவான். அதைப்போலவே சினிமா ரசிகர்களுக்கு ‘ஃபெஸ்டிவல் மூட்’ என்று ஒன்றிருக்கிறது. தமிழில் இதை சரியாக புரிந்துக்கொண்ட நடிகர்கள் எம்.ஜி.ஆரும், ரஜினியும். இவர்களது பெரும்பாலான படங்கள் நூறு நாள், வெள்ளிவிழா கண்டது பொங்கல், முன்பு தமிழ்ப்புத்தாண்டாக இருந்த ஏப்ரல் 14 மற்றும் தீபாவளி தினங்களில் வெளியான திரைப்படங்களில்தான். கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாட தகுதியான படங்களாக பார்த்து இறக்குவது ஒரு கலை. அரை நூற்றாண்டுக்கும் மேலான திரையுலக அனுபவம் பெற்ற கமல்ஹாசனுக்கு இன்றுவரை கைவராத கலை. எம்.ஜி.ஆராகவும், ரஜினியாகவும் ஆக விரும்பும் இளைய தளபதி அவர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம். முன்பாக இதே பொங்கல் திருநாளில் திருப்பாச்சி, போக்கிரி என்று அவர் கொடுத்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள் கூட அவருக்கு இந்த உள்ளொளி தரிசனத்தை ஏற்படுத்திவிடவில்லை என்பது அவலம்தான்.

ஒரு வழியாக ‘ஜில்லா’ பார்த்துவிட்டோம். முந்தைய ‘தலைவா’வை விட ஒரு மொக்கைப்படத்தை இளைய தளபதி கொடுத்துவிட முடியுமா என்று நாம் வியந்துக் கொண்டிருந்த வேளையில், அதைவிட சூப்பர் மொக்கையையே என்னால் தரமுடியுமென்று தன்னுடைய ‘கெத்’தை நிரூபித்து சாதனை புரிந்திருக்கிறார். முன்பு ‘ஆதி’யில் ஏற்பட்ட அதே விபத்துதான் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. ‘திருஷ்யம்’ கொடுத்த மோகன்லால் திருஷ்டி கழித்துக் கொண்டிருக்கிறார். ‘தளபதி’ ரேஞ்சு படமென்று கதை சொல்லி, இளைய தளபதியின் கேரியர் படகை கவிழ்த்துவிட்டார் இயக்குனர் நேசன். இந்த படம் ஏன் மொக்கை என்று விளக்குவதற்கு ஆயிரத்து இருநூறு பக்கங்கள் தேவைப்படும் என்பதால், இந்த மொக்கைப் பதிவையே வாசிக்கும் தைரியம் கொண்டவர்கள் ஒரு முறை ‘ஜில்லா’வை தரிசித்து தனிப்பட்ட தெளிவுக்கு வந்துவிடலாம்.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. காஜல், இளைய தளபதியை நோக்கி சொல்கிறார். “உன் மூஞ்சியையே இப்போ கண்ணாடியில் பார்த்தால் உனக்கு பிடிக்காது”. அப்படியெனில் படம் பார்ப்பவர்களின் நிலைமையை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுமாரான ஒரு கதையை ஜில்லாவின் கதையென்று நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்த கட்டுரையை வாசித்த லட்சக்கணக்கானவர்கள், “பரவாயில்லை மாதிரிதான் இருக்கும் போலயே” என்று முதல்நாளே போய் படம் பார்த்திருக்கிறார்கள். அவ்வாறு பார்த்து, அதன் காரணத்தால் மனம் பிறழ்ந்துப்போய் ஆயிரக்கணக்கானவர்கள் உளவியல் சிகிச்சை பெற்றுக்கொள்ள நாம் காரணமாகி விட்டோம். அதற்காக லக்கிலுக் ஆன்லைன் தளத்தை வாசிப்பவர்களிடம் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோருகிறோம். இனிமேல் மொக்கையா இருக்குமென்று நாம் யூகிக்கும் திரைப்படங்களுக்கு, படுமொக்கையான கதையையே முன்கூட்டி எழுதுகிறோம் என்று சத்தியப் பிரமாணம் செய்கிறோம்.

கடைசியாக, ஜில்லாவுக்கும் பிரஸ்தானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று மீண்டும் யாரேனும் கையைப் பிடித்து இழுக்க நினைத்தால் ரெண்டு படத்தையும் பேக் டூ பேக்காக டிவிடியில் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்காக மீண்டும் மீண்டும் நானே தற்கொலை முயற்சியில் ஈடுபடவேண்டுமென்று நீங்கள் எதிர்ப்பார்ப்பதில் நியாயமே இல்லை. நீங்களும் தற்கொலைக்கு முனையலாம். உங்களாலும் முடியுமென்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஒரு ரீமேக்கை ரீமேக் மாதிரி தெரியாமல் படம் எடுப்பதில் மட்டும் இயக்குனர் நேசன் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். ஜெயம் ராஜா இவரிடம் இந்த பாடத்தை மட்டும் டியூஷன் படிக்கலாம்.

18 ஜனவரி, 2014

கலாப்ரியா

அப்பா அப்போது ‘சுபமங்களா’ ரெகுலராக வாங்குவார். இதழுக்கு இதழ் அதில் ஏதோ ஒரு வி.ஐ.பி.யின் பேட்டி வரும். அதில்தான் முதலில் ‘கலாப்ரியா’ என்கிற பெயரை வாசித்தேன். அவரது பெயரில் இருந்த கவர்ச்சியால் கவரப்பட்ட நான், அவர் கவிஞர் என்றதுமே லீசில் விட்டு விட்டேன். சுபமங்களா பேட்டிகள் பிற்பாடு கலாப்ரியாவின் பெயரை தாங்கி ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என்று புத்தகமாகவே கூட வந்தது.

கலாப்ரியா என்பவர் தமிழில் முக்கியமான கவிஞர். குற்றாலத்தில் கவிதைப்பட்டறை நடத்துகிறவர் என்கிற சிறியளவிலான அவரது அறிமுகம் மட்டுமே எனக்கு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு ‘காட்சிப்பிழை’ இதழில் கலாப்ரியா எழுதிய ஒரு சினிமா கட்டுரையை வாசித்தேன். பொதுவாக இலக்கியவாதிகள் உள்ளுக்குள் எம்.ஜி.ஆர்/ரஜினி ரசிகர்களாக இருந்தாலும், வெளியே மார்லன் பிராண்டோ/அல்பசீனோ என்று ஃபிலிம் காட்டக்கூடிய பண்பு வாய்ந்தவர்கள். தன்னை எம்.ஜி.ஆர் ரசிகராக ‘தெகிரியமாக’ கலாப்ரியா வெளிக்காட்டிக் கொள்கிறாரே என்கிற ஆச்சரியத்தில், அவர் ‘கவிதை தவிர்த்து’ வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தேடி, வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அவரைப் பற்றி அவரோடு பழகியவர்களிடம் பேசி, அவரைப்பற்றி நிறைய தெரிந்துக் கொண்டேன். எங்கள் ஆசிரியர் மாலனும், அவரும் ஒருமையில் ஒருவரை ஒருவர் விளித்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு நெருக்கமானவர்கள்.

மிகக்குறுகிய காலத்திலேயே கலாப்ரியா என்னுடைய அப்பாவுக்கு இணையான அந்தஸ்தை என்னுடைய இதயத்திலே பெற்றுக் கொண்டார். என் அப்பாவும் இலக்கியவாதி ஆகியிருந்தால், கலாப்ரியா மாதிரியேதான் இருந்திருப்பார். எம்.ஜி.ஆர் – திமுக – இந்தித்திணிப்பு எதிர்ப்பு – எமர்ஜென்ஸி என்று அறுபதுகளின்/எழுபதுகளின் இளைஞர்களுடைய அசலான பிரதிநிதி கலாப்ரியா.

கலாப்ரியாவின் எந்த நூலை வாசிக்க வேண்டுமென்று என்னை கேட்டால், கீழ்க்கண்ட அவரது கட்டுரைத் தொகுப்புகள் அனைத்தையும் வாசிக்க வேண்டுமென்று பரிந்துரைப்பேன் : நினைவின் தாழ்வாரங்கள் (சந்தியா), ஓடும் நதி (அந்திமழை), உருள் பெருந்தேர் (சந்தியா), சுவரொட்டி (கயல் கவின்), காற்றின் பாடல் (புதிய தலைமுறை).

ஒரு கவிஞன், கவிதை தாண்டி உரைநடைக்கு வரும்போது வாசகனுக்கு வாசிப்பு அனுபவத்தின் எல்லைகளை எந்தளவுக்கு விஸ்தரிக்க முடியும் என்பதற்கு கலாப்ரியாவின் மேற்கண்ட நூல்கள் நல்ல சாட்சி.

மிக எளிமையான மொழி. தேவைப்படும் இடங்களில் உவமானங்கள். வாசகனை எந்த இடத்தில் நகைக்கவிட வேண்டும், உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும், சிந்திக்க செய்ய வேண்டும் என்கிற எழுத்து நுட்பத்தை நுணுக்கமாக கையாளுகிறார் கலாப்ரியா. தன்னுடைய சுயம் சொல்லும் சாக்கில் அறுபதாண்டு தமிழகத்தின் வரலாற்றை ஒரு சாமானியனின் பார்வையில் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வெள்ளைத்தாளின் கருப்பெழுத்துகளில் பதிந்துக்கொண்டே போகிறார். நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்ள அவருக்கு அவருக்கேயான தனித்துவமான ’ஈஸி ஃபார்முலா’ கைகொடுக்கிறது. ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை விவரிக்க நினைத்தால், அந்த வருடத்தில் ரிலீஸான எம்.ஜி.ஆர் படத்தை நினைவுக்கு கொண்டுவந்து, அதன் மூலமாக தன்னுடைய மூளையை கூர்மையாக்கிக் கொள்கிறார். தன்னுடைய அப்பா காலமானபோது நடந்த நிகழ்வுகளை கூட ‘நல்ல நேரம்’ வெளியான காலக்கட்டத்தின் பின்னணியில் பகிர்ந்துக் கொள்கிறார்.

தமிழ் சினிமா உதவி இயக்குனர்கள் ‘சீன் சுடுவதற்காக’ ஏராளமான காட்சிகள் கலாப்ரியாவின் வாழ்க்கையில் காணப்படுகிறது. எழுபதுகளின் தொடக்கத்தில் வேலை இல்லாதவராக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இரவு வீடு திரும்பியதும் சாப்பாடு சரியில்லை போல. அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார். “உங்கண்ணன் காலையிலே போய் குடும்பக் கட்டுப்பாடு செஞ்சிக்கிட்டு கொண்டுவந்த அரிசியிலே சமைச்சது” என்று அம்மா வறுமைநிலையை கோடிட்டுக் காட்டுகிறார். அண்ணனுடைய மனைவி தவறி பல காலமாகிறது. சாப்பாட்டுக்காக தேவையே இல்லாமல் கு.க. செய்துக் கொண்டிருக்கிறார் என்பதையறிந்து தலையில் அடித்துக்கொண்டு தெருவுக்கு வந்து அழுகிறார் கலாப்ரியா. தமிழ் சினிமாவில்கூட வறுமையான குடும்பத்தை காட்ட இவ்வளவு நுணுக்கமான காட்சி இதுவரை வந்ததில்லை. ஆனால் கலாப்ரியாவின் வாழ்வில் நிஜத்திலேயே நடந்திருக்கிறது.

இந்தித்திணிப்பு காலத்தில் கலாப்ரியா ஏரியாவில் ஒரு டீக்கரைக்காரரோ அல்லது சைக்கிள்கடைக்காரரோ தீவிரமான திமுககாரர் இருந்திருக்கிறார். அவர் வைத்த இந்தி ஒழிக பேனருக்காக காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். அவரைப் பற்றியும், அவர் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது பற்றியும் கொஞ்சம் காமெடியாகதான் கட்டுரை போகிறது. கடைசி காட்சி காவல் நிலையத்துக்குள் அவர் சித்திரவதை செய்யப்பட்டு வெளியே குரல் கேட்கிறது. “தமிழ் வாழ்க”. காவல் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த கலாப்ரியா உள்ளிட்ட மாணவர்களுக்கு ‘ஜிவ்வென்றிருந்தது’ என்று கட்டுரை முடிகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பாக கலாப்ரியா பெற்ற அதே ‘ஜிவ்’வை வாசிக்கும்போது நானும் பெற்றேன்.

நினைவின் தாழ்வாரங்கள், ஓடும் நதி, உருள் பெருந்தேர் நூல்கள் மூன்றையுமே டிரையாலஜி எனலாம். கலாப்ரியாவின் பயோக்ராஃபி. சுவரொட்டி சினிமா தொடர்பான அவரது கட்டுரைகளை கொண்டது. கருப்பு வெள்ளை, வண்ணம், சினிமாஸ்கோப் என்று தமிழ் சினிமாவின் காலமாற்றங்களை கடைக்கோடி ரசிகனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். ஆச்சரியமான விஷயம் சாதாரண ரசிகன் காணத்தவறிய பல கோணங்களை (குறிப்பாக நடிகரல்லாத மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரணைகள்) துல்லியமாக எழுதியிருக்கிறார். புதிய தலைமுறை இதழில் தொடராக வெளிவந்த ‘காற்றின் பாடல்’ கலாப்ரியாவின் அனுபவங்கள் வாயிலாக சமூகத்தை, மனிதர்களை பதிவுசெய்யும் ஆவணம்.

இதுவரை கலாப்ரியாவை நான் நேரில் கண்டதில்லை. நாளை சென்னை புத்தகக் காட்சியில் நவீனக் கவிதைகள் குறித்து வாசகர்களோடு உரையாடப் போகிறாராம். இதுகுறித்து அவரோடு உரையாட, கவிதை பாமரனான எனக்கு எதுவுமில்லை. வெறுமனே அவர் பேசுவதை வேடிக்கை பார்க்கப் போகிறேன்.

இன்னொருவனின் கனவு

’அந்திமழை’ என்பது வெறும் பெயரோ, பத்திரிகையோ, இணையத்தளமோ மட்டுமல்ல. அது ஓர் இயக்கம்.

கால் நூற்றாண்டுக்கு முன்பாக கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ‘அந்திமழை’ என்கிற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார்கள். கல்லூரிப் படிப்பு முடித்ததுமே அந்த பேட்ச், தன்னுடைய கல்லூரிக்கால செயல்பாடுகளை சராசரி வாழ்வின் அழுத்தம் காரணமாக கைவிடுவதுதான் இயல்பானது. ‘அந்திமழை’க்கு அந்த அவலம் நிகழாமல் பார்த்துக் கொண்டார்கள். அடுத்து வந்த கல்லூரித் தலைமுறைகளுக்கு அப்படியே அந்திமழை கடத்தப்பட்டு கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து அச்சுப் பத்திரிகையாக பரிணாமம் பெற்றது. வெகுஜனத் தளத்தில் இயங்கும் இதழ்களுக்கும், சிற்றிதழ்களுக்கும், இடைநிலை இதழ்களுக்கும் சவால் விடும் வண்ணமாக ஒரு கல்லூரிப் பத்திரிகையான அந்திமழை செயல்பட்டது. இளங்கோவன், அசோகன், கவுதமன், குமரகுருபரன் என்று ஏராளமான இதழாளர்களை அந்திமழை பிரசவித்தது.

’முடிவில்லாத கனவு’ என்று அந்திமழையை ஒரு வரியில் வர்ணிக்கலாம்.

அந்திமழையின் தொடக்கமான இளங்கோவனுக்கு அதை வெகுஜனத் தளத்தில் பரவலாக கொண்டுவரவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஓரளவுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றவுடன் அதை இணையத்தளம் ஆக்கினார். தம்பிகள் தோள் கொடுத்தனர். இணையத்தளத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு அதை அச்சிதழாக தரமேற்றியது. தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக, பின் தொடரும் நிழலாகவே இன்றுவரை அந்தகால மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அந்திமழையை ஆராதிக்கிறார்கள்.

இத்தகைய பிரசித்தி பெற்ற அந்திமழையின் ஒரு துளிதான் குமரகுருபரன். விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வாகி, வெர்டினரி டாக்டர் என்கிற சமூகத்தின் கவுரமான அந்தஸ்தை உதறி முழுநேரப் பத்திரிகையாளர் ஆனார். வார இதழ், தினசரி, தொலைக்காட்சி, இணையத்தளம் என்று ஊடகத்தின் அத்தனை பரிமாணங்களிலும் போதுமான அனுபவம் பெற்றார்.

இளங்கோவன் அழைத்து, “ஏதாவது அந்திமழைக்கு எழுதேன்” என்று கட்டளையிட்டவுடன் அவர் எழுதிய தொடர்தான் “இன்னொருவனின் கனவு”. சினிமாவின் காதலரான குமரகுருபரன் சினிமாவைப் பற்றி எழுதுவது ஆச்சரியமல்ல. ஆனால் நமக்கு ஆச்சரியம் தருவது அவர் எழுத எடுத்துக்கொண்ட களம்தான். சினிமா என்றாலே விமர்சனம் எழுதுவார்கள். கலைஞர்களை பற்றிய ஃப்ரொபைல் கட்டுரையோ, பேட்டியோ எழுதுவார்கள். குமரகுருபரன் தன்னுடைய கனவுத் திரைப்படங்கள் எப்படி உருவானது என்கிற ரிஷிமூலத்தை தேடிப் பயணித்து எழுதியிருக்கிறார்.

சினிமா ஏன் ஒரு பார்வையாளனை வசீகரிக்கிறது?

அதை தன்னுடைய கனவின் நீட்சியாக கருதுகிறான். கனவு கருப்பு வெள்ளைதான். அதற்கு டி.டி.எஸ்., க்யூப் மாதிரி நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு இல்லை. ஆனால் வெள்ளித்திரையில் வண்ணங்களை வாரியிறைத்து, துல்லியமான ஒலியோடு காட்டும் ஆச்சரியமான அறிவியல் சாதனத்தை தன்னுடைய வாழ்வுக்கு நெருக்கமான விஷயமாக மனிதன் கருதுவது இயல்பானதுதான். பார்வையாளனுக்கு இப்படியான கனவு என்றால், படைப்பாளிக்கு அது வேறு மாதிரியான கனவு. அவனுக்கு லட்சியம், கனவு, இத்யாதி இத்யாதியெல்லாம் சினிமாதான். பார்வையாளன், படைப்பாளி மற்றும் விமர்சகன் என்று சினிமாவின் நுகர்வோரை சுலபமான மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். புதியதாக நான்காம் பிரிவு ஒன்றை உருவாக்க முயல்கிறார் குமரகுருபரன். அதாவது இந்த தொடர்ச்சியை எட்ட நின்று பார்த்து, என்ன நடந்தது என்பதை அழகாக ‘ரிப்போர்ட்டிங்’ செய்யும் வேலையை ‘இன்னொருவனின் கனவு’ மூலமாக சாத்தியமாக்கி இருக்கிறார்.

அந்திமழை பதிப்பகத்தின் (போன் : 9443224834, 43514540) வெளியீடாக ‘இன்னொருவனின் கனவு’ கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் 320 பக்க நூலாகியிருக்கிறது. விலை ரூ.220/-

நூலுக்கு ஜெயமோகன் எழுதியிருக்கும் அணிந்துரை ‘மீறல்களின் கனவு’ அட்டகாசமான அறிமுகத்தை தருகிறது (எனக்குள் எப்போது ஒரு ஜெயமோகன் வாசகன் உருவானான் என்று கடுப்போடு தேடிக்கொண்டே இருக்கிறேன்). நிழலுலகம் குறித்த திரைப்படங்கள் பற்றிய பார்வையை நறுக்காக தருகிறார் ஜெமோ. நிஜமான நிழலுகத்தை சினிமாவில் சித்தரிக்கவே முடியாது என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார். ஜெயமோகன் கொடுக்கும் அணிந்துரையின் துள்ளலான சுவாரஸ்யம், அவர் குமரகுருபரனின் நூலை வாசித்து சிலாகித்திருப்பதின் தொடர்ச்சியாக கிடைத்திருக்கும் பொக்கிஷம்.

சினிமா குறித்த நூல் என்பதால் சினிமா ஆர்வலர்களுக்கானது என்று தனியாக ‘இடஒதுக்கீடு’ செய்திட வேண்டாம். புனைவு தரும் கேளிக்கையையும், தீவிர சிந்தனைகளையும், நுண்ணுனர்வுகளையும் கலந்து மிக்ஸராக ‘இன்னொருவனின் கனவு’ கொடுக்கிறது. இந்நூலுக்காக நீங்கள் செலவழிக்கும் பணத்தைவிட, கூடுதலான விஷயங்களை நிச்சயம் கண்டடைவீர்கள் என்று மட்டும் உறுதி கூறுகிறேன். மிக நேர்த்தியாக எழுதப்பட்ட இந்த புத்தகம்தான் குமரகுருபரனின் முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் அந்திமழை ஸ்டாலில் இந்நூல் கிடைக்கிறது.

வாழ்த்துகள் குமரகுருபன் சார். அடுத்த ஆண்டு சினிமா நூலுக்கான தேசிய விருதை மீண்டும் தமிழில் நாம் பெறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

16 ஜனவரி, 2014

மிஸ்டர் பர்ஃபெக்ட்!

1995. இந்திய வருமானவரித் துறையில் இருபத்தேழு வயது அர்விந்த் கெஜ்ரிவால் பணிக்குச் சேர்ந்த முதல் நாள்...மூத்த அதிகாரி இவருக்கு சொன்ன முதல் ஆலோசனையே,‘எப்படி சம்பாதிக்கலாம்?’ என்பதுதான். லட்சியக் கனவுகளோடு சிவில் சர்வீஸ் பணிக்கு வந்த அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையாக அதிர்ச்சி அடைந்தார். ஊழலை ஒழிப்பதுதான் தன் முதல் பணி என்று அன்றே சபதம் எடுத்தார்.
கொல்கத்தா நகரில் அன்னை தெரசாவை சந்திக்க நீண்ட வரிசையில் காத்திருந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். இவருடைய முறை வந்தது.

‘அம்மா! நான் உங்களோடு சேர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன்’

கெஜ்ரிவாலின் கைகளைப் பிடித்துக்கொண்டு, புன்னகை தவழும் முகத்தோடு சொன்னார் அன்னை தெரசா: ‘காளிகாட் இல்லத்துக்குப் போய். வேலையைப் பார்’அன்னை தெரசாவின் இல்லத்தில் இரண்டு மாதங்கள் இருந்தார். இந்தியாவைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு அப்போதுதான் கிடைத்தது. முன்பாக போடோலேண்ட் உள்ளிட்ட கிழக்கிந்தியப் பகுதிகளில் இலக்கில்லாத பயணங்களை மேற்கொண்டிருந்தார். அன்னை தெரசாவின் ஆசி அவருக்கு மானிட குலத்துக்குச் செய்ய வேண்டிய சேவைகளுக்கு கண் திறப்பாக அமைந்தது. ராமகிருஷ்ண மடத்தில் சில நாள் இருந்தார். நேரு யுவகேந்திரா மூலமாக ஹரியானா முழுக்க சுற்றினார். இந்திய அரசு அவரை நேர்முகத் தேர்வுக்காக அழைத்தது. வீடு திரும்பினார். ஐ.ஆர்.எஸ். அதிகாரியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

அந்தக் காலகட்டம்தான் என் பார்வையை மாற்றியது. வாழ்க்கையைப் போதித்தது. எல்லாத் தரப்பு மக்களையும் புரிந்துகொள்ள உதவியது" என்கிறார் கெஜ்ரிவால்.

ஹரியானா மாநிலத்தில் ஷிவானி என்கிற ஊரில் ஜூன் 16, 1968-இல் பிறந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். அப்பா கோபிந்த்ராம் கெஜ்ரிவால் ஓர் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். அம்மா கீதா தேவி. ஒரு தம்பியும், தங்கையும் உண்டு. பள்ளிப் படிப்பில் படுசுட்டி. ஹிசார் நகரில் இருக்கும் பிரபலமான கேம்பஸ் பள்ளியில் படித்தார் (பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நெஹ்வாலும் இதே பள்ளி மாணவிதான்).

முதல் முயற்சியிலேயே ஐ.ஐ.டி. கோரக்பூரில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1985-இல் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கல்லூரிக் காலத்தில் அவருக்கு பெரிய சமூக உணர்வோ, அரசியல் சிந்தனைகளோ இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை என்று சகமாணவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஐ.ஐ.டி.யில் அவரோடு படித்தவர்களில் பெரும்பாலானோர் இன்று அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அரசுப் பணியை துறந்து சமூகப் பணிக்குத் தன்னை கெஜ்ரிவால் அர்ப்பணித்துக் கொண்டபோது, அவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் இவரை பொருளாதார ரீதியாக ஆதரித்தார்கள்.

அயல்நாட்டில் வேலை பார்க்கும் ஆசை கெஜ்ரிவாலுக்கு இருந்ததே இல்லை. பி.டெக். (மெக்கானிக்கல்) முடித்தபிறகு 1989-இல் ஜாம்ஷெட்பூர் நகரில் இருக்கும் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஒரு பெரிய கல்லூரியில் சேர்ந்து நிர்வாகம் படிக்க ஆசைப்பட்டார். அது முடியவில்லை. ஆனால் அதே நேரம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அவரால் மிக எளிதாக வெற்றிபெற முடிந்தது. முசோரி நகரின் லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமியில் நிர்வாகப் பயிற்சி பெற்றார். மற்றவர்களைக் காட்டிலும் கெஜ்ரிவால் அப்போது கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகளோடு இருந்தார், எப்போதும் ஊழல் ஒழிப்பு குறித்தே அவரது அக்கறை இருந்தது என்று அவரது பயிற்சியாளர் ஹர்ஷ் மண்டேர் சொல்கிறார்.

1992-இல் தில்லியில் துணை வரி ஆணையராக பணி அமர்த்தப்பட்டார்.

தினமும் காலை அலுவலகம் வந்து, மாலை வீட்டுக்குத் திரும்புவது என்கிற வழக்கமான அலுவலக வாழ்க்கை கெஜ்ரிவாலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. 1999-இல், ‘பரிவர்த்தன்’ என்றொரு அரசுசாரா சமூக சேவை அமைப்பை நண்பர்களோடு தொடங்கினார். அயல்நாடுகளில் இருந்தோ, பெரிய நிறுவனங்களிடமிருந்தோ நிதி பெறாமல் கைக்காசைப் போட்டு சமூகப் பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்தக் கட்டத்தில்தான் சேகர்சிங் என்கிற நண்பர் கெஜ்ரிவாலுக்கு அறிமுகம் ஆகிறார். மக்களின் தகவல் உரிமைக்கான தேசிய பிரச்சாரக் குழுவில் (NCPR) செயற்குழு உறுப்பினராக இருந்தவர் இவர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான பிரசாந்த் பூஷனெல்லாம் கெஜ்ரிவாலுக்கு நெருக்கம் ஆனது இந்தக் காலக் கட்டத்தில்தான்.

நாடு முழுக்க ஏராளமான சமூகப் போராளிகள் இருந்தாலும் கெஜ்ரிவால் இவர்களிடமிருந்து வேறுபட்டவர். இரண்டு அல்லது மூன்று பிரச்சினைகளை முன்வைத்தே மற்றவர்களின் போராட்டம் இருக்கும். கெஜ்ரிவாலோ போராட்டம் என்று இறங்கிவிட்டால், ஒட்டுமொத்தப் பிரச்சினைகளையும் பேசியாகவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்.

தகவல் உரிமைச் சட்டத்துக்காகப் போராட்டத்தில் குதித்தவர், ‘மக்கள் பிரச்சினைகள் ஆய்வு அமைப்பு’ (PCRF) என்கிற புதிய அமைப்பை தோற்றுவித்தார். வெளிப்படையான, நாணயமான, மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்புக் கொண்ட அரசாட்சியை இந்த அமைப்பு வலியுறுத்தியது. தகவல் உரிமை அறியும் சட்டம் வந்தால் இந்நிலையை ஏற்படுத்த முடியுமென்று கெஜ்ரிவால் உறுதியாக நம்பினார்.

தகவல் உரிமை குறித்த இவர்களது பிரச்சாரத்துக்கு ஆரம்பத்தில் பெரிய வரவேற்பில்லை. ஆனால் கெஜ்ரிவால் சோர்ந்துவிடாமல் தொடர்ச்சியாக இதற்காகப் போராடிக் கொண்டிருந்தார். 2006-இல் இந்தக் காரணத்துக்காகவே கெஜ்ரிவால் மற்றும் அவருடன் போராடிய நண்பர்களான மணிஷ் சிசோடியா, அபிநந்தன் சேக்ரி ஆகியோருக்கும் சர்வதேச உயர் விருதான, ‘ரமோன் மகசேசே’ அறிவிக்கப்பட்டது. விருதுப் பணம் மொத்தத்தையும் போராடிய தன்னுடைய அமைப்புக்கே தந்து விட்டார் கெஜ்ரிவால். சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சி நிறுவனம் அவ்வருடத்துக்கான இந்தியர் என்கிற விருதை வழங்கி கவுரவித்தது. இவ்விருதே நாடு முழுக்க கெஜ்ரிவாலை பிரபலப்படுத்தியது.

இடையில் அரசுப் பணியையும், சமூகப் பணியையும் மாற்றி மாற்றி செய்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 1999-இல் இரண்டு வருட விடுப்பு எடுத்துக்கொண்டே, ‘பரிவர்த்தன்’ அமைப்பைத் தொடங்கி, நடத்தினார். 2003-இல் மீண்டும் பணிக்குச் சேர்ந்து, சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றினார்.

ஒரு கட்டத்தில் வழக்கமான வேலை வெறுத்துவிட... தன்னை முழுக்க சமூகத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டார். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருமானவரித் துறை, தில்லி மாநகராட்சி, பொது விநியோக அமைப்பு, தில்லி மின்சாரத் துறை போன்ற துறை ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த பிரச்சாரத்தை நாடு முழுக்க நண்பர்களோடு சேர்ந்து செய்யத் தொடங்கினார்.

2011-இல் அன்னா ஹசாரே, ‘ஜன் லோக்பால்’ வேண்டுமென்கிற போராட்டங்களைத் தொடங்கியபோது, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் சார்பில் அன்னாவின் கரங்களை வலுப்படுத்தினார். தில்லியில் அன்னா உண்ணாவிரதம் இருக்க, அந்தப் போராட்டத்தை இந்திய நகரங்களில் விரிவுபடுத்தும் பணியை கெஜ்ரிவால் எடுத்துக் கொண்டார். இதற்கான பயணப்பட்டபோது, ஒரு ரயில்நிலையத்தில் மக்களோடு மக்களாக அவர் தரையில் படுத்து உறங்கிய புகைப்படம் ஊடகங்களில் வந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுக்க மக்கள் தன்னார்வமாக முன்வந்து இப்போராட்டங்களில் பங்குபெற, வேறு வழியில்லாமல் நாடாளுமன்றமே இவர்களுக்கு காது கொடுக்க வேண்டியிருந்தது. லோக்பால் மசோதாவைத் திருத்தும் குழுவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதியாக கெஜ்ரிவாலையும் மத்திய அரசு நியமித்தது.

ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளை எதிர்கொள்ள அரசியலில் குதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்குத் தோன்றியது. அன்னா ஹசாரே இக்கருத்தில் வேறுபட்டார். போராட்டங்களின் வாயிலாகவே அரசைப் பணியவைக்க முடியும் என்பது ஹசாரேவின் நம்பிக்கை. கெஜ்ரிவாலோ அரசியல் அதிகாரத்தை மக்களுக்கு பெற்றுத் தருவதின் மூலம், தாங்கள் விரும்பும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த முடியுமென்று நினைத்தார்.கெஜ்ரிவால் சுயாட்சிக் கொள்கையை அடிநாதமாக முன்வைத்து (பெட்டிச் செய்தி காண்க), ‘ஆம் ஆத்மி’ கட்சியை 26 நவம்பர், 2012 அன்று துவக்கினார். முன்னதாக கட்சியை தொடங்கலாமா என்று, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பு மூலமாக மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தினார். மக்கள் ஆதரவின் அடிப்படையிலேயே, ‘ஆம் ஆத்மி’ உருவானது. ஆம் ஆத்மி என்கிற சொல்லுக்கு சாமானிய மனிதன் என்று பொருள்.

ஜன் லோக்பால், தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைப் பிடிக்காவிட்டால் மக்களே நிராகரிக்கும் உரிமை, அரசியல் அதிகாரங்களை மக்களுக்கும் பரவலாக்குதல் என்கிற கோஷங்களை, ‘ஆம் ஆத்மி’ முன்வைத்தது. கட்சி தொடங்கப்பட்டு ஒரே ஆண்டில் தில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மெக்கானிக்கல் என்ஜினீயரான கெஜ்ரிவால் முதல்வர் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பெல்லாம் இருந்ததைக் காட்டிலும் கூடுதல் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் பெற்றிருக்கிறேன்" என்கிறார் கெஜ்ரிவால்.

மற்ற அரசியல் தலைவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவது, ஜனநாயகம் மீது இவர் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைதான். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் அவர் மிகச்சிறந்த ஜனநாயகவாதியாகத் திகழ்கிறார். இந்திய இளைஞர்களின் குரலாக கெஜ்ரிவாலைக் காண்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எனவேதான் தில்லியில் படித்த இளைஞர்களும், உழைக்கும் வாலிபர்களும் பெருந்திரளாகத் திரண்டுவந்து ஆம் ஆத்மியின், ‘துடைப்பம்’ சின்னத்துக்கு வாக்களித்தார்கள்.

இதற்கு முன்பாக இந்திய அரசியலில் காணாத காட்சிகளை இன்று தலைநகரம்தில்லி கண்டுகொண்டிருக்கிறது. சாமானியனின் சக்தி என்னவென்பதை அரசியல்வாதிகளுக்கும், அதிகார மேல்மட்டத்தினருக்கும் உணர்த்திக் காட்டியிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.


ஆம் ஆத்மியின் சாதனை

கட்சி தொடங்கி ஓராண்டிலேயே முதன்முதலாக தில்லி சட்டமன்றத் தேர்தலில் குதித்த, ‘ஆம் ஆத்மி’ கட்சி, இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது. எழுபது இடங்களில் இருபத்தெட்டு இடங்களை இக்கட்சி வென்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவோடு அரியணை ஏறியிருக்கிறது. ஆம் ஆத்மி. கட்சியின் சாதனையில் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட சாதனையும் அடங்கும். மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை அவரது தொகுதியிலேயே இருபத்தைந்தாயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோற்கடித்தார் கெஜ்ரிவால்.

முதல்வர் என்று ஆனதுமே, தனக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் தேவையில்லை என்று மறுத்துவிட்டார். தானும், தன்னுடைய அமைச்சரவை சகாக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோம், மக்களுக்குத் தேவையில்லாமல் தொல்லை கொடுக்கக்கூடிய, ‘சைரன் அணிவகுப்பு’ இருக்காது" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.


குடும்பம்

முசோரியில் தன்னுடன் சிவில் சர்வீஸ் பயிற்சி பெற்ற சுனிதாவை திருமணம் செய்துக் கொண்டார் கெஜ்ரிவால். சுனிதா இப்போதும் அரசுப் பணியில்தான் இருக்கிறார். மகள் ஹர்ஷிதா. மகன் புல்கிட். கெஜ்ரிவாலின் பிரபலம் அவரது வீட்டை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. சராசரி மேல் நடுத்தரக் குடும்பமாகவே தொடர்கிறார்கள்.



மிஸ்டர் பர்ஃபெக்ட்

வருமான வரித்துறை பணியில் இருந்தபோதே ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ என்று பெயரெடுத்தவர் கெஜ்ரிவால். அவருக்கு பியூன் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவரது டேபிளை அவரேதான் சுத்தம் செய்வார். குப்பைகளை அவரே அகற்றுவார். அலுவலகத்தின் அருகில் இருக்கும் டீக்கடையில் டீ சாப்பிடும்போது அவரைப் பார்க்கலாம் அல்லது எப்போதும் மேஜையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பார். கோப்புகளை ஒன்றுக்கு நாலுமுறை சரிபார்த்துக்கொண்டே இருப்பாராம். அவரை கோபமாகப் பார்த்ததே இல்லை என்று அவரது அலுவலக சகாக்கள் சொல்கிறார்கள். கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்தால், அதிகபட்சமாக டீ சாப்பிடப் போய்விடுவாராம். சொந்தமாக கார் இருந்தும் அலுவலகம் செல்ல மெட்ரோ ரயிலைத்தான் பயன்படுத்துவார். அலுவலகத்தில் பணியாற்றியபோது அவர் கடைபிடித்த எளிமையையும், அர்ப்பணிப்பையும் இன்றுவரை கைவிடவில்லை. ஜன் லோக்பால் மசோதாவை திருப்தி வரும்வரை திருத்திக்கொண்டே இருந்தார்.


ஐஸ் மேன்

கெஜ்ரிவால் ஜாலியாக இருந்தால் எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பார். நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, ‘போன்’ வந்தால் சட்டையே செய்யமாட்டார். பேச்சுக்கு நடுவில் இடையூறு எதுவும் அவருக்கு இருக்கக்கூடாது. விழாக்கள் என்றால் அலர்ஜி. தன்னுடைய பிறந்த நாளையோ, குழந்தைகளின் பிறந்த நாளையோ விமரிசையாகக் கொண்டாடுவதில்லை. நேரம் கிடைத்தால் குடும்பத்தோடு சினிமாவுக்குப் போய்விடுவார். அமீர்கான் படங்கள் என்றால் கெஜ்ரிவாலுக்கு ரொம்பப் பிடிக்கும். முதல்வர் ஆகிவிட்டதால், நேரமின்மையின் காரணமாக இன்னமும் அமீர்கானின் லேட்டஸ்ட் ரிலீஸான, ‘தூம்-3’ படத்தைப் பார்க்கவில்லை.


பாக்கெட் மணி

கெஜ்ரிவால் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றதிலிருந்து, அவருடைய மாதச்செலவினை நண்பர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். ஐ.ஐ.டி. காலத்திலிருந்தே கெஜ்ரிவாலோடு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து அவருக்கு மாதம் 25,000 ரூபாய் தருகிறார்கள். கூடுதல் செலவு ஏற்படும் பட்சத்தில் அதை தன்னுடைய மனைவி சுனிதா பார்த்துக் கொள்கிறார்" என்கிறார் கெஜ்ரிவால்.


கெஜ்ரிவாலின் சுயாட்சி

* கிராமங்களுக்கு அதிகாரம் என்கிற காந்திய சிந்தனை கொண்டவர் கெஜ்ரிவால். ஊழலை ஒழிக்க கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சுயாட்சி அதிகாரம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். சுயாட்சி குறித்த தன்னுடைய சிந்தனைகளை, ‘ஸ்வராஜ்’ எனும் நூலாக இந்தி/ஆங்கில மொழிகளில் எழுதி, கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலில் இருந்து சில பகுதிகள் :

* இந்தியாவின் சுதந்திரம் என்பது வெறும் அதிகாரபூர்வ அறிவிப்பு. நிர்வாகம்தான் மாறியிருக்கிறது. முன்பு வெள்ளையர்கள், இப்போது இந்தியர்கள். அப்போது லண்டனில் இருந்து ஆண்டார்கள். இப்போது தில்லியிருந்தும், மாநிலத் தலைநகரங்களில் இருந்தும் ஆள்கிறார்கள். நம்முடைய சுதந்திரப் போராட்டம் என்பது நம்மை வெள்ளையர்கள் ஆண்டார்கள் என்பதற்காக மட்டுமல்ல,. மக்களின் சுயாட்சிக்காகவும்தான். சுதந்திர இந்தியாவில் மக்கள்தான் ஆட்சியாளர்கள், மக்கள்தான் நிர்வாகிகள் என்று கனவு கண்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவேயில்லை.

* நம்முடைய ஜனநாயகம் மாறவேண்டும். ஒரு முறை வாக்களித்துவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வென்றவர்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று இருக்கக்கூடாது.

* அரசாங்கத்தின் செயல்பாடு ஒவ்வொன்றும் மக்களைக் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டதாக அமைய வேண்டும். 120 கோடி மக்களின் கருத்துகளையும் கேட்கமுடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியும்.

* அறுபது ஆண்டுகளாக எல்லாக் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தாயிற்று. எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. கட்சிகளையோ, தலைவர்களையோ மாற்றிப் பார்ப்பதில் உபயோகம் எதுவுமில்லை என்பதுதான் இதிலிருந்து புரிகிறது. நாம் வேறு ஏதாவது புதியதாக செய்ய வேண்டும்.

* என்றைக்காவது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பக்கமாகப் போயிருக்கிறீர்களா? ஆட்சியரை சந்திக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? எப்போதுமே அவரை அங்கு பார்க்க முடியாது. மக்களின் ஊழியர்தானே அவர்? அப்படியிருக்க மக்களிடமே பந்தா காட்டுவது ஏன்? ஆட்சியரை விடுங்கள். ஆட்சியரின் பியூனே கூட எவ்வளவு பந்தா?

* தில்லியில் எந்த அடிப்படையுமற்ற ஒரு சேரிப்பகுதி. குடிக்க நீர் கூட இல்லை. அதற்காக நாங்கள் அரசாங்கத்தை அணுகும்போதெல்லாம் நிதி இல்லை என்பார்கள். ஆனால் அதே பகுதியில் அறுபது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அலங்கார நீருற்று ஒன்றை அழகுக்காக அமைத்தார்கள். மக்களுக்கு குடிக்க நீரே இல்லை எனும்போது இந்த ஆடம்பரங்கள் அவசியமா? அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது. ஆனால் அது அவசியமான தேவைகளுக்கு செலவிடப்படுவதில்லை.

* ஊழல் அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் நம்முடைய இயற்கை வளங்கள் சிறைப்பட்டிருக்கின்றன. நாம் உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால், அவர்கள் கூட்டணி போட்டு நம் நாட்டையே விற்றுவிடுவார்கள். நீர், நிலம், காடுகள், கனிமவளங்கள் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், அதிகாரமும் மக்களிடம் இருக்கவேண்டும். தங்கள் பகுதியில் இருக்கும் நீர்வளங்களை கிராம சபை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆறு போன்ற நீர்நிலைகள் குறித்த முடிவுகளை கிராம சபைகளைக் கலந்தாலோசிக்காமல் அரசு எடுக்கக்கூடாது.

* திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் குத்தம்பாக்கம் கிராமத்தில் சுமார் நூறு ஏக்கர் புல்வெளிகள் உண்டு. சென்னை நகரின் குப்பைகளை இங்கே கொட்டுவதற்கு அங்கிருந்த ஆட்சியர் முடிவு செய்தார். அங்கிருப்பவர்கள் எப்படி வசிக்க முடியும்? கிராம மக்களின் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் என்னவாகும்? மக்களின் கவனத்துக்கு வராமலேயே அவர்களது பகுதி, ஏதோ ஒரு நகரின் கழிவுகளைக் கொட்ட எப்படி திட்டமிடப்பட்டது? நீதிமன்றத்தில் கூட குத்தம்பாக்கம் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

* ஜனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் வாக்களிப்போன். வென்றவர்கள் நம்மை சுரண்டுவதை நாம் வேடிக்கை பார்ப்பது அல்ல. இது மாற வேண்டும். மக்கள் சொல்வதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செயல்படுத்தும் முறைதான் நமக்குத் தேவை. இல்லையெனில் அவர்களை நீக்கும் அதிகாரம் நமக்கு வேண்டும். கிராம சபைகள் மூலமாக மக்களின் எதிர்பார்ப்பை, கருத்தை நம்மால் சேகரிக்க முடியும்.

* தில்லியில் ஒரு ரிக்ஷாக்காரர் மாதம் 5,000 ரூபாய் சம்பாதித்தாலும் சேரியில் குடும்பம் நடத்த முடியாமல் துன்பப்படுகிறார். ஆனால் இதே பணத்தை கிராமத்தில் சம்பாதித்தால் ஒரு குடும்பமே திருப்தியாக வாழ முடியும். எனவேதான் சொல்கிறேன்... தில்லியில் அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தேசத்துக்கும் வறுமைக்கோட்டை வரையாதீர்கள்.

* மக்களுக்கு அதிகாரம் கிடைத்தால்தான் தீவிரவாதம் முழுமையாக ஒடுக்கப்படும்.

* சோப்பு கம்பெனி, அரிசி ஆலை, எண்ணெய் ஆலை மாதிரி தொழில்களை கிராம சபைகளே நடத்த வேண்டும். இதனால் வேலைவாய்ப்பும் பெருகும். கிராமங்களின் பொருளாதார நிலையும் உயரும்.

* இன்று மதுக்கடை தொடங்க உள்ளூர் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ ஒத்துழைத்தால் போதும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடங்குவதற்கு கிராம சபை மற்றும் சமூக அமைப்புகளின் அனுமதி கிடைத்தால்தான் மதுக்கடை தொடங்க முடியும் என்கிற சட்டத் திருத்தம் வந்தால் இஷ்டத்துக்கும் கடைகள் திறக்க மாட்டார்கள். குறிப்பாக பெண்களின் அனுமதி வேண்டும். மதுப்பழக்கத்தை வேரறுக்க இம்மாதிரி விதிகள் உதவி செய்யும்.

* நல்ல மனிதர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது மட்டுமே ஓர் அமைப்பை மொத்தமாக மாற்றி சீர் செய்துவிடாது. சீரழிவின் வேகம் கொஞ்சம் மட்டுப்படும். அவ்வளவுதான்.

* நம்மை ஆள்பவர்களிடம் நாம் உடனே ஒன்றை சொல்ல வேண்டும்: எங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நாங்கள் பேசி சரிசெய்து கொள்கிறோம். எங்களுடைய தேவை அதிகாரம். 26 ஜனவரி 1950 அன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை நீங்கள் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள். தயவுசெய்து அதை எங்களிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்."

(நன்றி : புதிய தலைமுறை)

காமிக்ஸ் எப்படி உருவாகிறது?

பாக்கெட் சைஸில் நம்மை பரவசப்படுத்திக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஏ-4 அளவுக்கு ஏற்றம் கண்டிருக்கிறார்கள். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் குழந்தைகளின் இணைபிரியா நண்பர்களான முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் குழுமத்தார் கடந்த ஆண்டு புது பரிமாணத்துக்கு மாறியிருக்கிறார்கள். நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் தினகரன் வசந்தம் அளவில், வழுவழுப்பான உயர்ரக தாளில், முழுக்க வண்ணத்தில் சித்திரக்கதைகளை அச்சிடுகிறார்கள். இரும்புக்கை மாயாவியை எல்லாம் ஏறக்கட்டி ஆயிற்று. சமகாலத்தில் சர்வதேச அளவுகளில் கலக்கிக் கொண்டிருக்கும் சூப்பர்ஹீரோக்களை சுடச்சுட தமிழுக்கு கொண்டு வருகிறார்கள்.

பட்டாசுக்கு பெயர் போன சிவகாசி நகரத்தில், பரபரப்பான மாலை வேளை ஒன்றில் இந்த படைப்பாளிகளை சந்தித்துப் பேசினோம்.
ஆசிரியர் எஸ்.விஜயன்

“ஒரு காமிக்ஸை வாசிப்பது குழந்தைகளுக்கும் எளிதானது. ஆனால் அதன் உருவாக்கம் ஒரு பிரும்மாண்டமான ஹாலிவுட் திரைப்பட உருவாக்கத்துக்கு இணையான உழைப்பை கோரக்கூடியது. ஒவ்வொரு சித்திரக்கதையின் பின்னணியிலும் எவ்வளவு திறமையாளர்கள் மறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால், இது சிறுபிள்ளை விளையாட்டு அல்ல என்பதை புரிந்துக் கொள்வீர்கள்” என்கிறார் முத்து, லயன் காமிக்ஸ்களின் ஆசிரியர் எஸ்.விஜயன். பழைய கிளாசிக் காமிக்ஸ்களை மீண்டும் வாசிக்க விரும்பும் ‘மலரும் நினைவுகள்’ வாசகர்களின் வசதிக்காக ‘சன்ஷைன் காமிக்ஸ்’ என்று புதியதாக ஒரு இதழையும் சமீபத்தில் தொடங்கியிருக்கிறார்.

ஒரு காமிக்ஸ் என்பது முதலில் ஓர் எழுத்தாளரின் மூளையில் மின்னலாக ஒரு வரி கதை வடிவில் பளிச்சிடுகிறது. இந்த கதை எப்படி காமிக்ஸ் ஆகப்போகிறது என்று சம்பந்தப்பட்ட பதிப்பகத்திடம் அந்த எழுத்தாளர் விளக்குகிறார். அடுத்தக்கட்டம் திரைக்கதை எழுதுவது. கடைசியாக வசனம். ஒரு தரமான காமிக்ஸுக்கான கதை, திரைக்கதை, வசனம் எழுத சில எழுத்தாளர்கள் இரண்டு ஆண்டு காலம் கூட எடுத்துக் கொள்வதுண்டு. இலக்கிய எழுத்தாளர்கள் மாதிரியே இதற்கென காமிக்ஸ் எழுத்தாளர்களும் உலகின் பல்வேறு மூலைகளுக்கு சென்று கள ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள்.

அடுத்து ஓவியர். ஒரு காமிக்ஸின் பிரதான அம்சமே ஓவியம்தான் எனும்போது, இந்த தொடர் தயாரிப்பில் இவர்தான் கதாநாயகன். எழுத்தாளரின் கதையை நன்கு உள்வாங்கிக் கொண்டு காமிக்ஸின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது இவர்தான். கதாசிரியர் ஒரு நாட்டிலும், ஓவியர் வேறு நாட்டிலும் இருப்பதெல்லாம் இத்தொழிலில் சகஜம். ஆனால் இருவருக்கும் ஒத்துப்போகும் புரிந்துணர்வு இருப்பது அவசியம்.

ஒவ்வொரு ஓவியரும் தனக்கே தனக்கான ஒவ்வொரு பாணியை கடைப்பிடிக்கிறார்கள். ஐம்பது பக்க அளவு கொண்ட காமிக்ஸ் புத்தகத்தை வரைய ஆறுமாதங்கள் கூட தேவைப்படும். சில சமயங்களில் வருடக்கணக்கிலும் இந்த வேலை நீளும். பதிப்பகங்கள் அவசரப்படுத்துவதில்லை. தயாரிப்பு தரமாக இருக்க வேண்டும் என்பதால் மீனுக்கு காத்திருக்கும் கொக்காக பொறுமை காக்கிறார்கள். ஆரம்பக்கட்ட ஓவியங்கள் கருப்பு வெள்ளையில்தான் உருவாகிறது.

ஓவியங்கள் தயார் ஆனதுமே, அதில் வரையக்கூடிய வசனங்களை வரையும் ‘லெட்டரிங்’ பணிகள் தொடங்கிவிடும். இருப்பதிலேயே கடினமான பணி இதுதான். வசனங்களை ஓவியங்களுக்குள் பொருத்துவது சிற்பம் செதுக்குவதைப் போன்ற உன்னத கலை. ஓவியத்தின் பிரும்மாண்டமும் குறையக்கூடாது. பொருத்தமான வசனத்தையும் பொறுத்தியாக வேண்டும்.

இந்த வேலைகள் முடிந்ததுமே வண்ணம் சேர்க்கும் பணி துவங்கும். கதையின் சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்ப வண்ணக்கலவைகளை சேர்க்க வேண்டும். சில அஷ்டாவதனிகள் ஒருவராகவே இந்த நான்கு வேலையையும் செய்வதும் உண்டு.
ஜூனியர் எடிட்டர் விக்ரம் விஜயன்

இம்மாதிரி உருவாகி, வெளியாகி அயல்நாடுகளில் சக்கைப்போடு போடும் காமிக்ஸ்களைதான் லட்சங்களில் ராயல்டி கொடுத்து தமிழுக்கு கொண்டுவருகிறார் எஸ்.விஜயன். இவரது தந்தை எம்.சவுந்தரபாண்டியன் முத்து காமிக்ஸை தொடங்கினார். தந்தையின் பணியை லயன் காமிக்ஸாக விஜயன் விரிவுபடுத்த, உதவிக்கு தோள் கொடுக்கிறார் தம்பி எஸ்.பிரகாஷ்குமார். மூன்றாவது தலைமுறையாக ‘ஜீனியர் எடிட்டர்’ ஆக கோதாவில் குதித்திருப்பவர் கல்லூரி மாணவரான விக்ரம் விஜயன். இவர் எஸ்.விஜயனின் மகன்.

இவர்கள் மட்டுமின்றி ஒரு பத்திரிகை நடத்துவதற்கான ஒட்டுமொத்த மனித உழைப்பையும் செலுத்தும் ஒரு பெரிய குழு சிவகாசியில் நாற்பதாண்டுகளாக செயல்படுகிறது. ஏராளமான ஓவியர்களும், மொழிபெயர்ப்பாளர்களும், விற்பனையாளர்களும், இதரத்துறை பணியாளர்களும் இக்குழுவில் அடக்கம்.
இணையாசிரியர் பிரகாஷ் & முத்து காமிக்ஸ் நிறுவனர் எம்.சவுந்தரபாண்டியன்

“அயல்மொழி கதைகளை தமிழுக்கு கொண்டுவரும்போது ஆதாரமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவர்களது ரசனையும், நமது ரசனையும் ஒத்துப்போகும் கதைகளை மட்டுமே தமிழில் வெளியிட முடியும். அமெரிக்காவில் பரபரப்பாக விற்பனை ஆன ஒரு கதை, இங்கேயும் வெற்றிபெறுமென்று நிச்சயமாக சொல்ல முடியாது. நம் வாசகர்களுக்கு எது ஏற்புடையதாக இருக்குமென்ற நம்முடைய தீர்மானம்தான் காமிக்ஸில் வெற்றி காண்பதற்கான சூத்திரம்” என்கிறார் சவுந்தரபாண்டியன். இரும்புக்கை மாயாவியை தமிழுக்கு ஏற்றவராக கண்டு கொண்டு அறிமுகப்படுத்தியதிலேயே, அவரது திறமையை நாம் கண்டுகொள்ளலாம்.

அயல்நாட்டு கதைகளில் அவர்களது கலாச்சாரம் கொஞ்சம் ‘தாராளமாக’ இருக்கும். அதுபோன்ற சூழல்களில், தயவுதாட்சணியமே பார்க்காமல் கத்திரி போட்டு வெட்டிவிடுகிறார்கள்.

1982ல் ‘முத்து காமிக்ஸ் வாரமலர்’ என்கிற பத்திரிகையை வெறும் அறுபது காசுக்கு விற்றதுதான் இவர்களது பெரிய சாதனை. சிறுகதைகள், காமிக்ஸ் தொடர்கதைகள் என்று பக்காவான கலவையாக அதை சவுந்தரபாண்டியன் தயாரித்தார். ஆனாலும் ஒரு வாரப்பத்திரிகைக்கான ஏற்பாடுகளை முழுமையாக செய்யாததால், இருபத்தி இரண்டு இதழ்களோடு மட்டுமே அது நின்றுவிட்டது.

தமிழ் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று 1986 முதல் 89 வரையிலான மூன்றாண்டுகளை சொல்லலாம். இவர்களது குழுமத்தில் இருந்து மட்டுமே ஐந்து இதழ்களை கொண்டுவந்தார்கள். டிவி, கம்ப்யூட்டர், செல்போன், இண்டர்நெட் இடையூறுகள் இல்லாத அக்காலக் கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விற்பனையில் காமிக்ஸ் புத்தகங்கள் சக்கைப்போடு போட்டன. எனவே அப்போது இரண்டு ரூபாய்க்கும், மூன்று ரூபாய்க்கும் புத்தகங்களை கொண்டுவர முடிந்தது.

ஆனால் இன்றைய சூழலில் அதெல்லாம் சாத்தியமில்லை. காமிக்ஸ் வாசிப்பு என்பது சிறுவட்டமாக குறுகிவிட்டது. காமிக்ஸ் வாசிப்பை, பெரும்பாலான வாசகர்கள் ‘சின்னப்பசங்க சமாச்சாரம்’ என்று மூடநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த அபிப்ராயங்களை தவிடுபொடியாக்கும் வண்ணமே முத்து காமிக்ஸ் குழுமம் செயல்படுகிறது.

“அன்றைய டூரிங் டாக்கிஸீல் படம் பார்த்த அனுபவத்துக்கும், இன்றைய மல்ட்டிபிளக்ஸ் அரங்குகளில் படம் பார்க்கும் அனுபவத்துக்குமான வேறுபாட்டை எங்களது இப்போதைய வெளியீடுகளில் நீங்கள் காணலாம். இன்றைய தலைமுறைக்கு காமிக்ஸ் ரசனையை கொண்டு வருவதற்காக அயல்நாட்டு ஆர்ட் பேப்பர், அட்டகாசமான வண்ணங்கள், ஆழமான கதைத்தேர்வு என்று மெனக்கெடுகிறோம். காமிக்ஸ் வாசிப்பு என்பது ஒரு அலாதியான அனுபவம். நாங்கள் அடையும் அந்த அனுபவத்தை நீங்களும் அடையவேண்டும் என்பதே எங்கள் குறிக்கொள்” என்கிறார் விஜயன்.

இவர்கள் வெளியிடும் இதழ்களின் விலை மிகக்குறைவாகவே இருக்கிறது. அயல்நாடுகளில் இதே தரத்தில் கடைகளுக்கு வரும் இதழ்களின் விலையோடு ஒப்பிடுகையில் மூன்று, நான்கு மடங்கு குறைவு. காமிக்ஸ் வெளியிடுவது மட்டுமே இந்த சிவகாசிக்காரர்களுக்கு தொழில் அல்ல. ஆர்வம் மட்டும்தான் காரணம். அச்சகம், அச்சு இயந்திரங்கள் இறக்குமதி, தீப்பெட்டி மெஷின்கள் இறக்குமதி என்று அவர்களது தொழிலே வேறு. இது வெறும் ஆர்வத்தின் பேரில் லாபநோக்கின்றி செய்வதுதான்.

முன்புபோல கடைகளில் தொங்கவிட்டு சுலபமாக வாசகர்களுக்கு கிடைப்பதைப் போன்ற முறை இல்லாமல் தங்களது விற்பனை யுக்தியை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது பழைய வாசகர்களிடம் ஆண்டு சந்தா வசூலித்துவிடுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய புத்தகக் கடைகளில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இணையத்தில் ebay போன்ற தளங்கள் மூலமாக விற்கிறார்கள். சமீபமாக தமிழகத்தில் நடைபெறும் புத்தகக்காட்சிகளில் ஸ்டால் போடுகிறார்கள்.  http://lion-muthucomics.com/ என்கிற இவர்களது இணையத்தளத்தில் சமீபத்திய வெளியீடுகள், காமிக்ஸ் குறித்த சுவையான கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

2011ல் 852 பக்கங்கள், இருநூறு ரூபாய் விலை என்று இவர்கள் கொண்டுவந்த ‘இரத்தப்படலம்’ என்கிற ஒரே கதையின் முழுமையான தொகுப்புதான் தமிழில் மீண்டும் காமிக்ஸ் கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது. பெல்ஜியத்தில் வெளியாகி உலகளவில் காமிக்ஸ் ஆர்வலர்களிடையே பரவலான பாராட்டுகளையும், ஏகத்துக்கும் விருதுகளையும் வென்ற இந்த கதைத்தொடரை ஒரே புத்தகமாக உலகிலேயே முதன்முதலாக வெளியிட்டவர்கள் இவர்கள்தான்.

“விஜயன், நீங்கள் வெளியிடும் இதழ்களில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?”

“லக்கிலூக் எனும் காமெடி கவுபாயின் ரசிகன் நான். சமீபமாக நாங்கள் வெளியிட்டு வரும் கதைகள் லார்கோ வின்ச் என்கிற கோடீஸ்வர ப்ளேபாயின் கதைகள். அவரையும் எனக்கு பிடிக்கும்”

ரொம்ப சீரியஸாகவே பேசுகிறார்கள். காமிக்ஸ் என்பது நாம் நினைப்பதைப் போல விளையாட்டு விஷயமல்ல போலிருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒருமுறை வாங்கி வாசித்துதான் பார்ப்போமே?

எழுதியவர் : அணில்
நன்றி : தினகரன் வசந்தம்

11 ஜனவரி, 2014

ப்ரியா கல்யாணராமன்

ஒரு பத்திரிகை வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போயிருந்தேன். 

வழக்கமான கேள்விகளோடு கேட்கப்பட்ட கூடுதல் கேள்வி அது. "உங்க லட்சியம் என்ன?"

+2 ஃபெயில் ஆனவன் அப்துல்கலாம் மாதிரி ராக்கெட் விஞ்ஞானி ஆகணும்னா சொல்ல முடியும்? உண்மையில் சொல்லப் போனால் இதற்கு என்ன விடை சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆக்சுவலி எனக்கு லட்சியம், கிட்சியம் என்பதெல்லாம் இன்றுவரை இல்லை.

தான்தோன்றித்தனமாக என் உள்மனது சட்டென்று ஒரு பதிலை வாய்வழியாகச் சொன்னது. "ப்ரியா கல்யாணராமன் ஆகணும்"

கேள்வி கேட்டவருக்கு வியப்பு. அதைவிட வியப்பு பதில் சொன்ன எனக்கு. உள்மனதில் இப்படியொரு ஆசை இருப்பது அன்றுதான் எனக்கே தெரியும்.

ப்ரியா கல்யாணராமன் ஆகணும் என்கிற லட்சியம் என்னைத்தவிர வேறு யாருக்காவது இருக்குமா என்பதே கொஞ்சம் சந்தேகம்தான். பத்திரிகை / எழுத்துத்துறையின் லட்சியமாக கல்கி, ராவ், எஸ்.ஏ.பி., என்று யார் யாரோ இருக்கலாம். ஏன் பர்ட்டிகுலராக ப்ரியா கல்யாணராமன்?

ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்.

+2 பெயில் ஆகிவிட்டு தண்டச்சோறாக கிடந்த கொடூரகாலக்கட்டம் அது. காலை 5 மணிக்கு இங்க்லீஷ் ஹைஸ்பீட் டைப்பிங், 6 மணிக்கு மேத்ஸ் டியூஷன், 7 மணிக்கு ஷார்ட் ஹேண்ட், 8 மணிக்கு தமிழ் டைப்பிங், 11 மணிக்கு விவேகானந்தாவில் இங்கிலீஷ் என்று அப்பா என்னை நொங்கெடுத்துக் கொண்டிருந்த நேரம். இப்படியே விட்டால், இந்தாளு சாகடித்துவிடுவாரு என்ற பீதியில், நானே அப்ளிகேஷன் போட்டு ஒரு நாளிதழில் பணிக்கு சேர்ந்திருந்தேன். அக்டோபர் எக்ஸாமை எதிர்நோக்கியிருந்த சூழலில் பத்திரிகைகளோ, கதைப்புத்தகங்களோ படிக்க அப்பா 'தடா' விதித்திருந்தார்.

குமுதம் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் என்னைப் போலவே அப்பாவும் குமுதத்தை காதலித்தார். புத்தகத்தை எடுத்ததுமே அவரும் என்னைப்போலவே 'நடுப்பக்கத்தை'தான் புரட்டுவார் என்பது தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையையே அர்த்தமற்று போகச்செய்த விஷயம். எஸ்.ஏ.பி., காலமாகியிருந்த சூழலில் கதைகளுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டிருந்தது. எளிதில் யூகித்துவிடக்கூடிய முடிச்சுகளோடு கதைகள் வழக்கமான டெம்ப்ளேட்களில் வந்துகொண்டிருந்தது வாசகர்களை கொஞ்சம் சலிப்புறச் செய்திருந்தது.

96ஆ, 97ஆ என்று சரியாக நினைவில்லை. அந்தத் தொடரின் மூலமாக திடீர் புதுப்பாய்ச்சல் குமுதத்தில். தலைப்பே இளமையாக மிரட்டியது. 'ஜாக்கிரதை வயது 16'. கதையின் தொடக்கம் இப்படி இருந்ததாக நினைவு. "ஊர்மிளாவுக்கு தொப்பையோடு கூடிய ஆண்களைப் பிடிக்காது, பிள்ளையாரைத் தவிர". ரங்கீலா வெளியாகி சக்கைப்போடு போட்ட காலக்கட்டம் என்பதால் 'ஊர்மிளா' என்ற பெயரை இந்திய இளைய சமூகம் கிறக்கமாக உச்சரித்துக் கொண்டிருந்தது. தமிழக இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா?

கதை இப்படியாக இருந்தது. ஊர்மிளா 16 வயது பெண். +2 படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிள்ளையார் பிடிக்கும். தாத்தாவைப் பிடிக்கும். அர்ஜூன் என்ற ஸ்மார்ட்டான பையனின் காதலை ஊதித்தள்ளினாள். அவனுக்கு ஒருமுறை ராக்கி கூட கட்டிவிட்டாள். அபு என்ற பையனிடம் வாலண்டியராக அவள் சோரம் போனாள். பின்னர் இளமை மயக்கங்களில் தெளிந்து டாக்டரானாள். இந்த நான்கைந்து வரிகளில் கதையைப் படித்தால் கொஞ்சம் மொக்கையாகவே தோன்றும்.

ஆனால் வாராவாரம் ப்ரியா கல்யாணராமனின் ட்ரீட்மெண்ட்களில் இளமை கொப்பளித்தது. ஒரே ஒரு சிறுகதையயாவது அந்த எனர்ஜி லெவலில் எழுதிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து தோற்றிருக்கிறேன். இன்றுவரை எனக்கு திருப்தியாக (ஐ மீன் 16 வயது லெவலுக்கு) எதையும் எழுதி கிழித்துவிட முடியவில்லை. அங்கேதான் நிற்கிறார் ப்ரியா கல்யாணராமன். அவருடைய பெயரே மாடர்ன் + விண்டேஜாக, வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? கமல்ஹாசன் படங்களில் எனக்குப் பிடித்தது கல்யாணராமன். ப்ரியா என்ற பெயரை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா?

வயது 16க்குப் பிறகு அவர் என்ன எழுதினாலும் (எந்தப் பெயரில் எழுதினாலும்) விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். இளமையும், காமமும் இணைந்து கொப்பளிக்க எழுதினாலும் சரி, ஆன்மீக வாசனையோடு கோயில் சொல்லும் கதைகள் எழுதினாலும் சரி. ஒவ்வொரு வெரைட்டிக்கும், ஒரு யூனிக் ஸ்டைல். ப்ரியா கல்யாணராமன் என்னை ஆக்கிரமித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏற்கனவே ப்ரியா கல்யாணராமன் பற்றி மேற்கண்டவாறு முன்பொரு முறை எழுதியிருக்கிறேன்.

பத்தொன்பது வயதில் பத்திரிகைத்துறைக்கு வந்த சிக்கல்காரர் (இவருக்கு முன்பு சிக்கலில் ஃபேமஸ் ஆனவர் 'தில்லானா மோகனாம்பாள்' சிக்கல் சண்முகசுந்தரம்). குமுதம் இதழின் ஆரம்பகால தூண்களான ரா.கி.ர., ஜ.ரா.சு., புனிதன் என்று வரிசையாக வயது காரணமாக ஒவ்வொருவராக ஓய்வு நாடிக் கொண்டிருந்தார்கள். குமுதத்துக்கு அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஆசிரியர் எஸ்.ஏ.பி., அப்போது அவர் கண்டெடுத்த முத்துகளில் ப்ரியா கல்யாணராமன், ரஞ்சன், கிருஷ்ணா டாவின்ஸி ஆகியோர் முக்கியமானவர்கள்.

1987ல் பத்திரிகைத்துறைக்குள் நிருபராக நுழைந்த ப்ரியா கல்யாணராமன், கடந்த 2012ல் இத்துறையில் வெள்ளிவிழாவே கண்டுவிட்டார். தற்போது குமுதத்தின் ஆசிரியர். தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் இளைஞர்கள் ஒரு மாதிரியான குழப்பான மனோபாவத்தோடு இருந்தார்கள். உண்மையில் கடந்த நூற்றாண்டுக்கும், இந்த நூற்றாண்டுக்கும் பாலமாக அமைந்த பத்தாண்டுகளாக 90 டூ 2000 வருடங்களை சொல்லலாம். ஒரு மாற்றம் வரும்போது முந்தைய லைஃப்ஸ்டைலின் பாதிப்பும், அடுத்து வரவிருக்கும் ட்ரெண்டின் தாக்கமும் கலந்து அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல் ஒரு மாதிரியாக எகனைமொகனையாகதான் அத்தலைமுறை இருக்கும். அம்மாதிரியான சூழலின் சமகால பிரச்சினைகளை தனது கதைகளிலும், கட்டுரைகளிலும் அசலாக பிரதிபலித்தவர் ப்ரியா கல்யாணராமன். தொண்ணூறுகளின் இளைஞனுடைய காதல், லட்சியம், கனவு, இத்யாதிகள் எப்படியிருந்தது, அதே நேரம் யதார்த்தம் எப்படியிருந்தது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் எழுதிய தொடர்களை, சிறுகதைகளை (குமுதம் பதிப்பகத்தில் தனித்தனி புத்தகமாக வந்திருக்கிறது) வாசித்தால் ஓரளவுக்கு புரிதல் கிடைக்கும்.

2000ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட சாமியார் மாதிரி ஆகிப்போனார். அவரது எழுத்துகளை பெருமளவு ஆன்மீகம் ஆக்கிரமித்தது. கோயில் சொல்லும் கதைகள், குறைதீர்க்கும் கோயில்கள், ஜெகத்குரு, 108 திருப்பதிகள், சாய்பாபா என்று குமுதம் மற்றும் குமுதம் பக்தி இதழ்களில் எழுதிக் குவித்தார். எழுதுவது ஆன்மீகம் என்றாலும், அதையும் மிகச்சுவையாக பரிமாறுவதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி. நமக்கு ஆகாத ஏரியாதான் என்றாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் படித்து விடுவது உண்டு.

என்னைப் பொறுத்தவரை தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர். ஆனால் நாம் யாரையுமே கொஞ்சம் தாமதமாகதான் கொண்டாடுவோம்.

இப்படியொரு ஏகலைவன் தனக்கு சிஷ்யனாக இருக்கிறான் என்று அந்த பீஷ்மருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. இவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை நான் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் யாராவது ஒரு சிலரையாவது கண்மூடித்தனமாக நம்புவதும், ரசிப்பதும், வழிபடுவதும் இல்லையென்றால் அதென்ன வாழ்க்கை?

இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை புத்தகக் காட்சியில் ப்ரியா கல்யாணராமனின் சில நூல்கள் வெளியிடப்படுகின்றன. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துக் கொள்ளலாம். இவர் எழுதி நூல்வடிவம் பெற்ற அத்தனை நூல்களுமே குமுதம் ஸ்டாலில் கிடைக்கும்.

10 ஜனவரி, 2014

இளைய தளபதி விஜய்

நேற்று இரவு மடிப்பாக்கத்தில் ’மாட்டினா மரண அடி கய்ஸ்’ குழுவினர் இளைய தளபதி விஜய்க்கு கட்டவுட் வைத்து பாலாபிஷேகமும், தேனாபிஷேகமும் செய்துக் கொண்டிருந்தார்கள். காலையில் கட்டவுட்டையும் காணவில்லை. கய்ஸையும் காணவில்லை.

அதை விடுங்கள்.

என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்த ரகசியம்தான். எல்லோருக்கும் சொல்லிவிடுகிறேன், பிரச்சினையில்லை.

எம்.ஜி.ஆர், கமலுக்கு பிறகு நான் ரசிக்கும் நடிகர் விஜய்தான். இளைய தலைமுறை நடிகர்களிலேயே விஜய் அளவுக்கு தோற்றப்பொலிவும் (அச்சான தமிழ் முகம்), நடனம், சண்டை, நடிப்புத் திறமையும் கொண்ட நடிகர் வேறு யாருமில்லை. ஆனால் தன்னுடைய potential என்னவென்று தெரியாமல், அநியாயத்துக்கு கேரியரை வீணடிப்பவரும் வேறு யாருமில்லை. நடனம் ஆடத்தெரியாத, முகத்தில் சரியாக ரியாக்‌ஷன் காட்டத்தெரியாத சூர்யாவெல்லாம் கூட விஜய்யை மிஞ்சிய நடிகராக பார்க்கப் படுவது ’நிஜமான’ விஜய் ரசிகனான என்னைப் போன்றவர்களுக்கு எத்தகைய மனத்துன்பத்தை தருமென்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஐம்பதாவது படம் என்பது ஒரு நடிகருக்கு மைல்கல்லான விஷயம். அதற்கு எப்படிப்பட்ட சப்ஜெக்ட்டை, எப்படிப்பட்ட இயக்குனரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பிரபு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த கடைசிக்காலத்தில் அவரை வைத்து ஓரிரு சுமார் படங்கள் கொடுத்த ராஜ்குமாரையா இயக்குனராக ஒப்பந்தம் செய்வார்கள்? கேட்டால் ஏதோ நியூமராலஜி பார்த்து இயக்குனரை தேர்ந்தெடுத்ததாக சொல்கிறார்கள். ஆரம்பத்தில் விஜய் படங்கள் ஃப்ளாப் ஆகும்போதெல்லாம், அதற்கு காரணம் அவரது அப்பா எஸ்.ஏ.சி. என்று அசால்ட்டாக சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க முடிந்தது. நாற்பது வயதைத் தொட்டு விட்ட நிலையிலும் இன்னமும் அப்பாவுக்கு அடங்கிய அமுல் பாப்பா என்று அவரை சொல்லிக் கொண்டிருந்தோமானால் அதைவிட பகுத்தறிவுக்கு புறம்பான விஷயம் வேறொன்றும் இருந்துவிட முடியாது.

விஜய்யின் நேரடிப் போட்டியாளரான அஜீத்துக்கு இம்மாதிரி பிரச்சினைகள் ஏதுமில்லை. நடிப்போ, நடனமோ எதுவுமே அவருக்கு அவசியமில்லை. அஜீத் படம் மொக்கை என்றாலும் கூட, அஜீத் ரசிகர்கள் படத்தில் ‘தல மட்டும் சூப்பர்’ என்று திருப்திப்பட்டுக் கொள்வார்கள். மாறாக விஜய்யின் மோசமான படங்களில்கூட, விஜயின் பெர்ஃபாமன்ஸ் சூப்பராக இருந்தாலும் (உதா : குருவி, வில்லு, சுறா) ஒட்டுமொத்தமாகவே மக்கள் தூக்கியெறிந்துவிடுகிறார்கள்.

ரீமேக்தான் தன்னை கரை சேர்க்கும் என்று விஜய் ஒரு குருட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார். போக்கிரியால் நிகழ்ந்த விளைவு இதுவென்று நினைக்கிறேன். திருப்பாச்சி, துப்பாக்கி என்று அவரை தூக்கிவிட்ட படங்களை ஏன் மறக்கிறார் என்று தெரியவில்லை.

இளையதளபதி இப்போது இருக்கும் ரேஞ்சுக்கு எப்படி இயக்குனராக நேசனை தெரிவு செய்தார் என்பதே புரியவில்லை. ஆர்.பி.சவுத்ரி தன்னுடைய மகன் ஜீவாவுக்கு கூட நேசனை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார். அதுவும் தெலுங்கில் சர்வானந்த் நடித்த கேரக்டருக்கு இங்கே எப்படி இளையதளபதி நடிக்க முடியும். இந்த கேரக்டரில் நடிக்க விமல், சிவகார்த்திகேயனெல்லாமே கூட யோசிக்க மாட்டார்களா? 'ஜில்லா சூப்பர்’ என்று ரெண்டு மூன்று அணில் குஞ்சுகள் கூவலாம். இது இயல்பானதுதான். குசேலன் வந்தபோது கூட தமிழின் மிகச்சிறந்த படம் என்று ரஜினி ரசிகர்கள் சிலர் இணையத்தில் விமர்சனம் எழுதினார்கள். ஆனால் யதார்த்தம் என்று இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதால் நஷ்டம் நமக்குதான்.

சரி, ரீமேக்தான் என்று முடிவு கட்டி விட்டாலும், அங்கே மகேஷ்பாபு ஹாட்ரிக் ஹிட் கொடுத்திருக்கிறார். பவன் கல்யாண் ஹாட்ரிக் ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த ஆறு படங்களில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து தொலைத்திருக்கலாமே? ‘தூக்குடு’வில் இளையதளபதி நடித்திருந்தால் இங்கே போக்கிரியின் ரெக்கார்ட் எல்லாம் தூள் தூள் ஆகியிருக்காதா? பாட்ஷா என்றொரு படம். ஜூனியர் என்.டி.ஆரின் மாஸ்டர்பீஸ். அதை தமிழில் எடுத்தால் விஜய்யை தவிர வேறு யாருமே செய்ய முடியாது. ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’ என்று பவன் கல்யாண் படம். ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என்று சென்ற ஆண்டு ஆந்திராவையே அசைத்துப் பார்த்த படம். இங்கே விஜய் நடித்தால், தமிழின் அதிகபட்ச வசூலை எட்டிப் பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இதையெல்லாம் இளையதளபதி பரிசீலனை கூட செய்ததாக தெரியவில்லை. அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஃப்ளாப் கொடுத்துக் கொண்டிருந்தாலும் தளபதியின் சம்பளம் மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் எந்தவொரு தயாரிப்பாளரும் விஜய்யை வைத்து படமே எடுக்க முடியாது. அவரே சொந்தமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தொண்ணூறுகளின் இறுதியில் லோ மற்றும் மீடியட் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் அமுதசுரபியாக விஜய் இருந்தார். பட்ஜெட்டுக்கும், சப்ஜெக்ட்டுக்கும் ஏற்றமாதிரி சம்பளத்தை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வாங்குவார் என்பார்கள். ரஜினி, கமல் படங்கள் எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும், விஜய் என்கிற மாஸ் நடிகரால் இண்டஸ்ட்ரி நன்றாக வாழ்ந்துக்கொண்டிருந்த காலம் அது. அந்த பொற்காலம் திரும்பாதா என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைஆர்வலர்களும் ஏங்குகிறார்கள்.

9 ஜனவரி, 2014

ஜில்லா

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.

அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற...

இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.

தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.

இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.

க்ளைமேக்ஸ்.

மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.

இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.

2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.

பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

7 ஜனவரி, 2014

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

நலம் நலமறிய ஆவல்.

உங்கள் நெக்குருக்கும் கடிதம் வாசித்தேன். இரத்தக் கண்ணீரை அடக்கிக்கொண்டு படித்தேன். நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களை காட்டிலும் மிகச்சிறந்த கடிதமாக மதிப்பிடுகிறேன். அழிந்து வரும் கடிதக்கலையை நீங்களும், கலைஞரும்தான் காக்க வேண்டும்.

//வேடியப்பன் என்ற நண்பருக்காக உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டுமென்ற உனது எண்ணத்தைப் பாராட்டுகிறேன்//

உங்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்கு சென்ஷி எதிரியல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பழக்கமான நண்பர்தான். ஒன்றாக லஞ்ச் சாப்பிட்டிருக்கிறோம். கட்டிப் பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். போலவே உங்களுக்கும் வேடியப்பன் எதிரியல்ல என்று கருதுகிறேன்.

இந்த consipiracy theory எல்லாம் இணையத்தின் பிலக்கா பயல்கள் செய்துக் கொள்ளட்டும். உங்களுக்கு ஏன் அண்ணாச்சி. நீங்கள் நினைப்பது மாதிரி வேடியப்பனுக்கு நான் நெருக்கமான நண்பர் எல்லாம் அல்ல. சென்னையில் இருக்கும் உங்கள் இதர நண்பர்களிடம் நீங்கள் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். வேடியப்பனுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர் சென்ஷிதான்.

வளைகுடா நாடுகளில் வேலை செய்தார் என்பதற்காக வளைகுடா பதிவர்களும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் தளபதிகளும், பண்புடன் குழுமத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் உறுப்பினர்களும் கச்சை கட்டிக்கொண்டு வருவதைப் போன்ற எந்தப் பின்னணியும் இந்த விவகாரத்தில் கருத்து சொல்வதற்கு எனக்கில்லை.

மொத்தமாக கூட்டம் சேர்ந்து, அநியாயமாக அராஜகமாக ஒருவர் அடிக்கப்படுவதை எதிர்த்து, நடைமுறை யதார்த்த நியாயம் என்ன என்பதை மட்டும்தான் பேசியிருக்கிறேன்.

//கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள்.. யார் யாரிடமோ யாசகம் பெற்று, ஒளி வருடி, செல் பேசியில் படமெடுத்து அனுப்பி அதனை வரியாக வரியாகத் தட்டச்சு செய்து என்று பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.. அதனால்தான் அந்த உழைப்பு சுரண்டப்படும்போது மயிர் பிளக்கும் விவாதத்திற்கு அது வழி வகுத்து விட்டது//

சென்ஷிக்கு இந்த வேலையை வேடியப்பனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ ‘அசைன்’ செய்து உழைப்பை சுரண்டியிருந்தால் நானும் உங்களோடு வந்து கொடிபிடிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கும்.

//பகிரல் நோக்கமில்லாமல் இருந்திருந்தால் சென்ஷி இணையத்தில் இதனைத் தொகுத்திருக்க அவசியமேயில்லை..//

இணையம் என்பது மின் ஊடகம். அச்சு ஊடகத்தோடு வேறுபட்டது. பகிரல்தான் நோக்கம் எனும்போது, அது அச்சுக்கு வரும்போது அதை எதிர்க்கவோ, கசமுசா செய்யவோ அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அச்சில் வாசிக்கும் வாசகர்களும் பயனடைந்துவிட்டு போகட்டுமே. அதே நேரம் நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சியெல்லாம் தயார் செய்துவிட்டால் மட்டுமே ‘தொகுப்பாசிரியர்’ ஆகிவிட முடியாது என்கிற யதார்த்தத்தை எல்லாரும் உணரவேண்டும். தொகுப்புகளில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கிறவர்தான் தொகுப்பாசிரியர் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க அதுதான் நடைமுறை.

// ஒரு பைத்தியக்காரன் மொத்த கதையையும் தொகுத்து இணையத்துல அதிகப் பிழையேதுமில்லாமல் சேர்த்து வச்சிருக்கான். அப்படியே ’லபக்’கிட்டா எவன் கேக்கப் போறான்னு தெரிஞ்சதும் அனுமதி கேட்டிருப்பாரா இருக்கும். ஏற்கெனவே 50 கதைகள் மின்நூலா கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாசிரியரும் சம்மதம் சொல்லியிருப்பாராக இருக்கும் //

நீங்களெல்லாம் இப்படி குற்றம் சாட்டுகிறீர்கள். சென்ஷி டைப்படித்த கதைகளை வேடியப்பன், Ctrl C + Ctrl V செய்துக்கொண்டார் என்று. தமிழ் இணையத்தில் மின்னல்வரிகள் பாலகணேஷ் என்றொருவர் பிரபலமானவர். டிசைனிங், டி.டி.பி. பணிகள் செய்கிறார். நிறைய பதிவர்களின் புத்தகங்களுக்கு ப்ரீப்ரொடக்‌ஷன் பணிகளை செய்துக் கொடுத்திருப்பவர். வேடியப்பன் கொண்டுவரும் தொகுப்புக்காக டைப்பிங் வேலை மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொல்கிறார். நானறிந்தவரை கணேஷ் பொய் சொல்லக்கூடிய நபர் அல்ல. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? கணேஷ் டைப் செய்துக்கொண்டிருப்பது வேறு ஏதோ எஸ்.ரா புத்தகம் எனப் போகிறீர்களா?

// அச்சிலேயே இல்லாத கதைகளைக் கூட பணம் கொடுத்து சென்ஷி வாங்கினான். நான் தான் அதை ஒன்றல்ல, இரண்டல்ல.. ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தேன் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா? //

உண்மையிலேயே இப்படியான சூழல் இருப்பின், சென்ஷிக்கு இதுவரை இதற்காக ஆன செலவுகளுக்கு வேடியப்பனிடம் நிவாரணம் கேட்கலாம். தவறேயில்லை. இந்த விஷயத்தில் ஐ ஆல்சோ சப்போர்ட் சென்ஷி.

// நிச்சயம் அவர் படித்து தேர்வு செய்ததால்தான் சென்ஷி அதனைத் தொகுக்கவே தொடங்கினான். எனவே அந்த மரியாதை என்றுமே எஸ்.ராவுக்கு இருக்கும். ஆனால்.. அந்தக் கதைகளைத் தேடித் தொகுக்க நான்கரை ஆண்டுகள் உழைத்தவனுக்குண்டான அங்கீகாரத்தை ஒற்றை வரியில் நன்றி சொல்லி முடித்துக் கொள்வது முறையில்லை//

எஸ்.ரா படித்து தேர்வு செய்ததால்தான் அவர் தொகுப்பாசிரியர். இதுதான் என்னுடைய பாயிண்ட். சென்ஷிக்கு என்ன அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? தொகுப்பாசிரியர் என்று அவரை டெக்னிக்கலாக சொல்லிக் கொள்ள முடியாது.

வேண்டுமென்றால் நம்முடைய ஈ-புக்கில் நாமே அப்படி போட்டுக்கொள்ள வேண்டியதுதான். யார் கேட்கப் போகிறார்கள். கதைகளை எழுதிய எழுத்தாளர்களிடம் கூட முறையான அனுமதி கேட்காமல்தானே நாலரை ஆண்டுகளாக உழைத்து சென்ஷி இணையத்தில் ஏற்றியிருக்கிறார்.

// ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்வது ஏற்புடையதன்று. நியாயமாகப் பட்டதால் சென்ஷியை ஆதரிக்கிறார்கள் நீ எப்படி உன் தரப்பு நியாயத்துக்காக வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டுகிறாயோ அதைப் போல..//

வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டினேன் என்கிற உங்கள் அனுமானம் நியாயமானதல்ல. கடந்த ஞாயிறு அன்று எஸ்.ரா.வின் ‘நிமித்தம்’ நாவல் வெளியீடு நடந்தது. அந்த விழா முடிந்ததுமே ரஷ்ய கலாச்சார மையத்தின் வெளியே வைத்து ஒரு போலிஸ்காரன், திருடனை விசாரிப்பது மாதிரிதான் வேடியப்பனை விசாரித்தேன். “போடா மயிரு. நீ யாரு இதையெல்லாம் கேட்க” என்று வேடியப்பன் திருப்பிக் கேட்டிருந்தால் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. மாறாக வேடியப்பன் இந்த நூலை கொண்டுவர என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பொறுமையாக விளக்கினார். இது நடந்தது என்பதற்கு அங்கிருந்த இணைய நண்பர்கள் செ.சரவணக்குமார், விநாயகமுருகன், சிவராமன், ரமேஷ் போன்ற நண்பர்களே சாட்சி.

வேடியப்பனிடம் பேசியபோது அவர் சொன்னது. “புத்தகத்தில் சென்ஷிக்கு மட்டுமல்ல. எங்களுக்கு இந்த கதைகள் யாரிடமிருந்து, எங்கிருந்தெல்லாம் கிடைத்ததோ அத்தனை பேரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறோம்” என்றார்.

ஓக்கே, உங்கள் கடிதத்துக்கு இவ்வளவுதான் பதில். மீதி, பொதுவான நண்பர்களுக்காக.

ஒரு புத்தகம் தொகுப்பாக வருவதற்கு முன்பு பதிப்பாளர் என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்பது பொதுவான ஆட்களுக்கு தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

தொகுப்பு என்றால் அதில் இடம்பெறும் எழுத்தாளர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பது முக்கியமான விதி. பி.டி.எஃப். என்பதால் அந்த விதியை சென்ஷி பின்பற்றவில்லையோ அல்லது சென்ஷிக்கு அது தெரியாதோ.. அதையெல்லாம் விட்டு விடுவோம். நாளைக்கு அவருக்கு இதனால் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்பவர்கள் வெடிச்சத்தம் கேட்டதுமே பறக்கும் காக்காய்களாக பறந்துவிடுவார்கள். அல்லது சென்ஷியை குறிவைத்து குதறியெடுத்து விடுவார்கள். இணையத்தில் இதெல்லாம் சகஜம். நர்சிம் விஷயத்தில் எல்லாம் நாம் பார்க்காததா என்ன.

எழுத்தாளர் மாலனின் சிறுகதை ஒன்றும் இந்த தொகுப்பில் இடம்பெறுகிறது. இதற்காக வேடியப்பன் அவரிடம் தொலைபேசியில் பேசி அனுமதி வாங்கினார். வாங்கியதோடு இல்லாமல் ஒருமுறை நேரிலும் சந்தித்து ஒரு ஒப்புதல் கடிதமும் வாங்கிக் கொண்டார். கதை எழுதியவர்களுக்கு ராயல்டி தரமுடியாது. பதிலுக்கு புத்தகத்தின் ஒரு பிரதியை (விலை ரூ.650) கொடுத்துவிடுகிறேன் என்பது வேடியப்பனின் டீலிங்.

இதைப் போலவே ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களிடம் வேடியப்பன் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. லேசாக ஒரு வரியில் இதை கடந்து போய்விடலாம். அது எவ்வளவு பெரிய வேலையென்றால், நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சுவதை விட மிகப்பெரிய வேலை. பதிப்பகங்களுக்கும், நூல்களை தொகுத்தவர்களுக்கும்தான் இந்த வேலையை பற்றி தெரியும்.

நான் மேலே சொன்னது ஒரு தொகுப்பு உருவாகும் பெரிய பிராசஸிங்கில் இருக்கும் மிகச்சிறிய ஆரம்பக்கட்ட பணி. இதையடுத்து இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன. அப்படியே டைப் செய்து இணையத்தில் ஏற்றுவது மாதிரி இது சுலபமான பணி அல்ல. ஏனெனில் இதில் நிறைய பணமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒருவரியில் சொன்னால் கொஞ்சமென்ன, நிறையவே ரிஸ்க்கான வேலைதான்.

பதிப்பாளரின் பணி மட்டுமல்ல. தொகுப்பாசிரியரின் பணியும் கடினம்தான். இணையத்தில் எழுதும்போது நூறு சிறந்த சிறுகதைகள் என்று ஜாலியாக லிஸ்ட் போட்டுவிடலாம். நாமெல்லாம் புது வருஷம் வந்ததுமே டாப் 10 தமிழ் மூவிஸ் என்று லிஸ்ட்டு போடுகிறோமே அதுபோல. ஆனால் ஒரு பட்டியல் முழுத்தொகுப்பாக புத்தகமாக வரும்போது, அந்த கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று விலாவரியாக, விளக்கமாக ஜஸ்டிஃபை செய்ய வேண்டும். இந்த தேர்வுகளில் ஏதேனும் தவறு என்று இருந்தால் தொகுத்தவரின் டப்பாவை மற்ற இலக்கியவாதிகள் ஒன்று சேர்ந்து டேன்ஸ் ஆட வைத்து விடுவார்கள்.

ஆகவே தோழர்களே! என்னுடைய இறுதி கருத்துகள் இவைதான்.

என்னைக் கேட்டால் ‘ஈகோ’வை விட்டு விட்டு வேடியப்பன் ஒருமுறை சென்ஷிக்கு போன் செய்து பேசிவிடலாம். அல்லது எஸ்.ரா.வே கூட சென்ஷியிடம் பேசிவிடலாம். இதில் யாருக்கும் கவுரவக் குறைச்சல் ஏற்பட்டு விடாது.

தொகுப்பு வெளியான பிறகு, ஒருமுறை எஸ்.ரா. தலைமையில் சென்ஷிக்கு வேடியப்பன் பாராட்டுவிழா நடத்தலாம். அவ்வாறு ஒரு விழா நடந்தால்கூட இணையத்தில் ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்று tag போட்டு எழுதுபவர்கள் நேரில் வந்தெல்லாம் பாராட்ட மாட்டார்கள். அவர்களால் லைக்கும், கமெண்டும்தான் போடமுடியும். இவர்களை நம்பி தேவையில்லாமல் தோழர் சென்ஷி எதிலும் ஏடாகூடமாக ஈடுபட்டுவிட வேண்டாமென்று அனுபவஸ்தன் என்கிற அடிப்படையில் கேட்டுக் கொள்கிறேன். இப்படியே ஏத்திவிட்டு, ஏத்திவிட்டுதான் உடம்பை ரணகளமாக்கி அனுப்புவார்கள். அம்மாதிரி ரணகளமாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது சென்ஷிக்கும் தெரியும்தானே?

6 ஜனவரி, 2014

குற்றம் : நடந்தது என்ன?

பைசாவுக்கும் பிரயோசனப்படாத குப்பை என்று தமிழ்நாட்டின் ஏழு கோடியே நாற்பத்தி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரம் பேர் கருதும் ஒரு விஷயத்தைதான் தமிழிணையத்திலும், தமிழிலக்கியத்திலும் உயிர்போகும் பிரச்சினையாக விவாதிப்பார்கள். லேட்டஸ்ட் விவாதம், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த நூறு கதைகள் பற்றி. தமிழ் வாசகர்களால் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதைகள் இவையென்று நூறு கதைகளின் பட்டியலை சில காலம் முன்பு எஸ்.ரா பட்டியலிட்டிருந்தார். இக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக கொண்டுவந்தாலும் நன்றாக இருக்குமென்று அபிப்ராயப்பட்டிருந்தார்.
கமா
எஸ்ரா ‘தொகுத்த’ அப்பட்டியலை வாசித்த ஓர் தீவிர வாசகரான தோழர் சென்ஷிக்கு தீராத இலக்கியத்தாகம் ஏற்பட்டது. அதில் இருக்கும் நூறு கதைகளை வாசித்துவிட வேண்டுமென்று சபதம் எடுத்தார். இணையத்தில் கிடைத்தவை தவிர்த்து, மற்ற கதைகளை நிறைய பேரிடம் தேடி அடைந்தார். இந்த இலக்கியப் பயணத்தில் அவருக்கு வேறொரு எண்ணமும் ஏற்பட்டது. தாம் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெறட்டுமே என்று, தேடி வாசித்த சிறுகதைகளை இரவு பகல் பாராமல் தட்டச்சி ‘அழியாச்சுடர்கள்’ போன்ற இணையத்தளங்களில் பதிவேற்றினார். தன்னலம் கருதாத ஒப்பற்ற சேவை. சென்ஷி நிச்சயமாக பாராட்டுக்குரியவர்தான். ஒரு வகையில் பார்க்கப்போனால் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தமிழுக்கு என்ன செய்தாரோ, அதைதான் சென்ஷியும் செய்திருக்கிறார்.
கமா
தோழர் வேடியப்பன் என்றொரு இளைஞர். பாரதிராஜா ஆகவேண்டும் என்று ஆர்வமாக சென்னைக்கு வந்தவர், சினிமா ஷோக்கில் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார். வாழ்க்கை அவருக்கு இன்னொரு இன்னிங்ஸ் கொடுத்தது. கே.கே.நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் என்று புத்தகக்கடை திறந்தார். கடுமையான உழைப்பினால் மிகக்குறுகிய காலத்திலேயே புத்தக விற்பனைத் துறையில் சொல்லிக் கொள்ளும்படியாக பெயர் பெற்றார். இலக்கிய ஆர்வலரான வேடியப்பனுக்கு தாம் வெறும் புத்தக விற்பனையோடு முடிந்துவிடக்கூடாது என்று எண்ணம். தன்னுடைய கடையில் அடிக்கடி இலக்கியக் கூட்டங்கள் நிகழ்த்துவார். எழுத்தாளர் – வாசகர் சந்திப்பு நடத்துவார். இவ்வகையிலான இலக்கிய நடவடிக்கைகளில் அவருக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு ரோல்மாடல் ஆகிப்போனார்.
எஸ்ராவின் புத்தகம் எதையாவது தானே பதிப்பிக்க வேண்டுமென்று அவருக்கு ஆவல். ஆனால் எஸ்ராவோ ஏற்கனவே உயிர்மை உள்ளிட்ட நண்பர்களின் பதிப்பகங்களோடு டை-அப்பில் இருக்கிறார். எனவே எஸ்.ரா தொகுத்த நூறு சிறுகதைகளை புத்தகமாகக் கொண்டுவருவது என்று முடிவுசெய்து, அவரிடம் அனுமதி கேட்டார்.
எஸ்.ரா அனுமதித்ததுமே வேலையை தொடங்கினார். நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களை தவிர்த்து, அப்பட்டியலில் மீதியிருக்கும் எழுத்தாளர்களின் நேர்ப்பேச்சிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் அனுமதிகளை பெற்றார். “அந்த கதையோட காப்பி வேணுமா, இல்லேன்னா என்னோட ஃபைலிங் காப்பி ஜெராக்ஸ் பண்ணி கொடுக்கட்டுமா?” என்று கேட்ட எழுத்தாளர்களிடம், “சில கதைகளை நெட்டுலே ஏத்தியிருக்காங்க சார், அதை எடுத்துக்கறேன்” என்று சொல்லியிருக்கிறார். புத்தகக்கடை வைத்திருப்பதால், நெட்டில் ஏற்றப்படாத கதைகளையும் சுலபமாக அவரால் தொகுக்க முடிந்திருக்கிறது.
கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு பக்கங்கள். எஸ்.ரா மொத்தமாக படித்து, தேவையான திருத்தங்களை செய்துக் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் சேரவேண்டும் என்கிற அக்கறையில் லாபத்தை குறைத்து அறுநூற்றி ஐம்பது ரூபாய் விலை வைத்திருக்கிறார். முன்பதிவு செய்பவர்களுக்கு நானூற்றி எண்பத்தி ஐந்து ரூபாய் என்று சலுகை விலை.
புத்தக வெளியீடு குறித்து விபரங்களை அவர் ஃபேஸ்புக்கில் போட ஆரம்பித்ததுமே, பிடித்தது சனியன். ஓர் எழுத்தாளரின் இணையத்தளத்தில் இந்த நூறு கதைகள் மொத்தமும் பி.டி.எஃப். தொகுப்பாக பதிவேற்றப்பட்டு, வேண்டுமென்பவர்கள் டவுன்லோடு செய்து படித்துக் கொள்ளுங்கள் என்கிற அறிவிப்போடு வந்தது.
டாட்
இந்த விவகாரம்தான் இப்போது கூகிள் ப்ளஸ் மற்றும் ஃபேஸ்புக் இணையத்தளங்களில் மயிர்பிளக்கும் விவாதமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இணையம் என்கிற மூடர்கூடத்தில் நானும் ஒரு கேரக்டர் என்பதால், இது தொடர்பான என்னுடைய கருத்துகள் :
  • அறிவுப் பகிரல் நல்ல விஷயம்தான். ஆனால் அதை வீம்புக்கு செய்யக்கூடாது. முழுத்தொகுப்பு புத்தகமாக வரும்போது, அதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக பி.டி.எஃப். தொகுப்பை பதிவேற்றுவது என்பது நாகரிகமானவர்கள் செய்யக்கூடிய செயல் அல்ல.
  • பகிரல்தான் சென்ஷியின் நோக்கமென்றால், தன்னுடைய ஆர்வத்தை அச்சுக்கு கொண்டுவரும் வேடியப்பனின் செயல் குறித்து மகிழ்ச்சிதான் அடைந்திருக்க வேண்டும். விஷயம் தெரிந்ததும் வேடியப்பனுக்கு வேண்டிய உதவிகளை தாமாகவே முன்வந்து செய்திருப்பாரேயானால், அவரைவிட மனிதருள் மாணிக்கம் வேறு யாரும் இருக்க முடியாது.
  • இதற்கு ஃபேஸ்புக்கில் வேடியப்பன் அப்படியொரு எதிர்வினையை ஆற்றியிருக்க வேண்டியதில்லை.
  • ஓயாமல் தேடித்தேடி உழைத்த சென்ஷிக்கு நன்றி சொல்லவில்லை என்பதால் இந்த திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் தொகுப்பில் சென்ஷிக்கு நன்றி சொல்லப்பட்டிருக்கிறது என்றதுமே அடுத்த பிரம்மாஸ்திரத்தை எடுத்தார்கள்.
  • தொகுப்பாசிரியர் என்கிற இடத்தில் சென்ஷியின் பெயர் இடம்பெற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். இதுபோன்ற புத்தகத் தொகுப்புகளில் மட்டும் அல்ல அய்யா. எல்லா வேலைகளிலுமே ‘சிண்டிகேட்’ செய்பவர்தான் லீடர். உங்கள் லாஜிக்படி பார்த்தால், இதுவரை தமிழில் வந்த தொகுப்புகள் அனைத்திலுமே தொகுப்பாசிரியர் என்கிற இடத்தில் டி.டி.பி. செய்தவர்களின் பெயர்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ன, பத்திரிகையின் எல்லா பக்கத்தையும் அவரேவா எழுதி, தட்டச்சிடுகிறார். தன் பத்திரிகையில் என்னென்ன வரவேண்டும் என்று தீர்மானிப்பதால்தான் அவர் ஆசிரியர்.
  • சென்ஷியின் உழைப்புதான் பிரதானமானது என்று ஏற்கனவே இலக்கியத்தில் பழம் தின்று கொட்டையை சப்பியவர்கள்கூட போகிறபோக்கில் கமெண்ட் போட்டுவிட்டு செல்வது அதிர்ச்சியளிக்கிறது. நூறு கதைகளை சுட்டிக்காட்ட எஸ்.ரா எத்தனை ஆயிரம் கதைகளை படித்திருக்க வேண்டும்? அந்த உழைப்புக்காகதான் அவர் தொகுப்பாசிரியர்.
  • என்னைப் பொறுத்தவரை தேடித்தேடி தட்டச்சி இணையத்தில் பகிர்ந்துக் கொண்டவர் என்பதால் சென்ஷிக்கு டிஸ்கவரி புக் பேலஸில், எஸ்.ரா தலைமையில் பாராட்டுவிழா கூட வேடியப்பன் நடத்தலாம்.
  • அடுத்து பர்மிஷன், ராயல்டி என்றெல்லாம் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் போதிய அனுமதி பெறாமல் தட்டச்சி இணையத்தில் ஏற்றியதுதான் குற்றமே தவிர, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அனுமதி பெற்று அச்சுத் தொகுப்பு ஆக்குவது குற்றமல்ல. வேடியப்பனிடம் பேசியபோது, இத்தொகுப்புக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ராயல்டி வழங்கப்போவதாக சொன்னார்.
  • “இனி டிஸ்கவரியில் புத்தகம் வாங்க மாட்டோம், எஸ்.ராமகிருஷ்ணனின் எந்த எழுத்தையும் படிக்க மாட்டோம்” என்று அடுத்தடுத்து சிலர் இணையத்தில் சபதம் எடுத்துக் கொள்வதாகவும் கேள்விப்பட்டோம். சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்களான மயிலாப்பூர் பார்ப்பனர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து இனி வேலு மிலிட்டரியிலோ, சாம்கோவிலோ பிரியாணி வாங்கமாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டால் அது எவ்வளவு பெரிய காமெடியோ, அதற்கு இணையான காமெடிதான் இதுவும்.
  • கல்யாண வீட்டுலே மாப்பிள்ளையா இருக்கணும் அல்லது சாவு வீட்டிலே பொணமா இருக்கணும் மற்றும் கும்பலோடு கோயிந்தா போன்ற இணையக் கலாச்சார பண்பாட்டு செயல்பாடுகளில் ஒன்றாகதான் இந்த சர்ச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • நாமெல்லாம் டைம் பாஸுக்கு கமெண்டும், லைக்கும் போட்டுக் கொண்டிருக்கிறோம். வேடியப்பனுக்கு இது பொழைப்பு. சில லட்சங்களை இந்த புத்தகத்துக்காக முதலீடு செய்திருக்கிறார். நம்முடைய எண்டெர்டெயின்மெண்டுக்காக அவரது வாழ்க்கையோடு விளையாட வேண்டுமா?