
இளையராஜாவுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அவரது தந்தை மறைந்துவிட்டார். அம்மா திருநின்றவூர் இரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்பவர். வேர்க்கடலை விற்று கிடைக்கும் காசில் மகனின் ஒருவேளை சாப்பாட்டுத் தேவையைக் கூட அந்த தாயால் பூர்த்தி செய்ய இயலவில்லை. அருகிலிருந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றினை நாடினார். மனமகிழ்ச்சியோடு இளையராஜாவை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இளையராஜா அந்த இல்லத்தில் தங்கி தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.
இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கதை. இன்று இளையராஜா, நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இப்போது தனியாக ஒரு வீடு எடுத்து வயதான தன் தாயை தாங்கிக் கொண்டிருக்கிறார். “என் மகனை வளர்க்க அந்த இல்லம் மட்டும் இல்லையென்றால் அவன் என்னவாகியிருப்பான் என்றே நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒருவேளை என்னைப் போல அவனும் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்திருக்கலாம்” என்கிறார் அவரது தாய்.
வாராவாரம் தான் வசித்த / படித்த இல்லத்துக்கு வந்து இப்போதிருக்கும் குழந்தைகளிடம் பேசிச்செல்வது இளையராஜாவுக்கு வழக்கம். இன்று தான் வளர்ந்த அந்த இல்லத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும் இளையராஜா இருக்கிறார்.
அந்த இல்லம் சேவாலயா. சென்னையிலிருந்து நாற்பத்தி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூருக்கு அருகில் கசுவா என்றொரு கிராமத்தில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கிறது. இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பாக ஐந்தே ஐந்து குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட சேவாலயா இன்று நூற்றி அறுபது ஆதரவற்ற குழந்தைகளுக்கும், அறுபது முதியவர்களும் வாழும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.
இவர்களால் இந்த வளாகத்தில் நடத்தப்படும் பாரதியார் மேனிலைப்பள்ளியில் ஆயிரத்து ஐம்பது மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். கல்விக்கட்டணம், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடை முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் குழந்தைகளுக்காக இலவசமாகவே பேருந்து வசதியும் செய்துத் தரப்பட்டிருக்கிறது.
பள்ளியை நமக்கு சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார் உடற்கல்வி ஆசிரியர் சண்முகம்.
“மழலையர் வகுப்பில் தொடங்கி, பிளஸ் டூ வரை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்று எங்கள் தரத்தை உலகறியச் செய்திருக்கிறார்கள் எங்கள் மாணவர்கள். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரும் இம்மாணவர்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக கல்வி கற்பவர்கள் என்பது முக்கியமான விஷயம்.
இங்கே கல்வி கற்று செல்லும் மாணவர்கள் வறுமையில் உழல்பவர்கள் என்பதால் அவர்களது மேற்படிப்புக்கும் சேவாலயா உதவுகிறது. எங்கள் மாணவர்களுக்கு சர்வமதப் பிரார்த்தனையை கற்றுத் தருகிறோம். எல்லா மதங்களின் விழாக்களையும் இங்கு கொண்டாடுகிறோம். மதச்சார்பற்ற ஒரு ஸ்தாபனமாகவே சேவாலயா வளர்ந்து நிற்கிறது.
கல்விமுறையிலும் எங்கள் நிறுவனர் புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார். காந்தி, விவேகானந்தர், பாரதியார் மூவரின் சிந்தனைகளையும் எங்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோமேத்ஸ், வேளாண்மைன்னு மூன்று பிரிவுகளில் கல்வி கற்றுத் தருகிறோம்”
“என்னது வேளாண்மையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டால்,
“ஆமாங்க. வேளாண்மை இங்கே மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் ஒரு பாடமாகவே இருக்கு. அதுவும் இயற்கை வேளாண்மை. எங்களோட அறிவியல் ஆய்வுக் கூடங்கள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை.
இங்கே பயிலும் மாணவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் தண்டனைகள் எதுவும் கிடையாது. கல்வியை விட ஒழுக்கத்தை போதிப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுகிறோம். சேவாலயாவில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறோம். இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள் பலரும் இங்கேயே விருப்பப்பட்டு பணிபுரிகிறார்கள். காந்திய சிந்தனைகளை மாணவர்களுக்கு விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊழியர்கள் வாரத்துக்கு ஒருமுறை கதராடை மட்டுமே அணிகிறோம்” என்றார் தும்பைப்பூ நிறத்தில் கதர் வேட்டி, கதர் சட்டையோடு இருந்த சண்முகம்.
சேவாலயா மாணவர்கள் ‘கொட்டு முரசே!’ என்ற பெயரில் ஒரு கலைக்குழு நடத்துகிறார்கள். விழிப்புணர்வு நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை அவ்வப்போது மாவட்டம் முழுவதும் நடத்துகிறார்கள். இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்த பிரச்சாரத்தையும் செய்கிறார்கள்.
பள்ளிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தால் பளிச்சென்றிருக்கிறது சுவாமி விவேகானந்தா இலவச நூலகம். பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இங்கே பாதுகாக்கப்படுகிறது. பள்ளி, விடுதி மாணவர்கள் மட்டுமின்றி கிராமத்தவர்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இங்கிருக்கும் நூல்களை அவ்வப்போது வண்டிகளில் ஏற்றி சுற்று வட்டார கிராமங்களுக்கு நடமாடும் நூலகமாக எடுத்துச் செல்கிறார்கள். சுமார் இருபது கிராமங்களுக்கு விவேகானந்தா நூலகம் சேவை செய்கிறது.
கஸ்தூரிபாய் தையலகம் கிராமப்புற மகளிருக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இலவசமாகவே இங்கே தையல் கற்கலாம். இதற்காக சுமார் இருபத்தைந்து தையல் இயந்திரங்கள் வாங்கப்பட்டிருக்கிறது. வளாகத்தில் கண்ணைக் கவரும் கைவினைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள். இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் நேரப்போக்குக்காக இவற்றை உருவாக்குகிறார்கள்.
மகாத்மா காந்தியின் பெயரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவ மையம் விடுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, கசுவா கிராம மக்களுக்கும் முதலுதவி அடிப்படையில் பயன்படுகிறது. அத்தியாவசிய மருந்துகளும், மாத்திரைகளும் இங்கே இலவசம்.
முதியோர் இல்லத்தில் தாத்தா – பாட்டிகளுக்கு பொழுது போக்க தொலைக்காட்சி, ஓய்வெடுக்க படுக்கை, மருத்துவ வசதிகள் உண்டு. அவ்வப்போது மருத்துவர்கள் வந்து உடல்நிலையை பரிசோதித்து செல்கிறார்கள். குழந்தைகள் இல்லாத சரோஜா மாமி ஒன்பது வருடங்களுக்கு முன்பாக தன் கணவரோடு வந்து இந்த இல்லத்தில் சேர்ந்தார். நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக அவரது கணவர் காலமாகிவிட்டார். இங்கே காலமாகும் முதியவர்களின் இறுதிச்சடங்குகளையும் இவர்களே செய்துவிடுகிறார்கள். “எங்களுக்கு குழந்தைகள் இருந்திருந்தா கூட இவ்வளவு நல்லா கவனிச்சிட்டிருப்பாளான்னு தெரியலை” என்று சொல்லி கண்கலங்குகிறார் சரோஜா மாமி.
தாங்கள் யாருமற்றவர்கள் என்ற உணர்வு இங்கிருப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை இங்கே அழைத்துவந்து ஓவ்வொரு தாத்தா பாட்டிக்கும், ஓரிரு குழந்தைகளை தேர்ந்தெடுத்து, “இனிமே இவங்க தான் உங்களோட பேரன், பேத்தி” என்று சொல்லிவிடுகிறார்கள். இதன் மூலமாக புதிய உறவுமுறைகளையும், வாழ்க்கைக்கான பிடிப்பையும் இருதரப்புக்கும் ஏற்படுத்த முடிகிறது.
இந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்ள வாரிசுகள் இல்லாத முதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அடுத்ததாக வாரிசுகளால் கைவிடப்பட்டவர்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களை சேர்த்துக் கொள்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்.
முதியோர் இல்லம் தொடங்கப்பட்டதிலிருந்தே நாகராஜன் என்பவர் தன் மனைவியோடு தன்னார்வத்தோடு முன்வந்து இங்கே பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். இவர் ஐ.சி.எஃப். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தன்னுடைய ஓய்வுக்காலத்தை சமூகத்துக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தோடு இங்கே பணியாற்றுகிறார்.
சேவாலயாவின் நேயம் மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் உண்டு. கறவை வற்றிய மாடுகளின் கதி நம்மூரில் என்னவாகும் என்று தெரியுமில்லையா? அடிமாடாக்கி கசாப்பு கடைக்கு அனுப்பி விடுவார்கள். இதுபோன்ற அடிமாடுகளை கொண்டுவந்து ‘வினோபாஜி கோஷாலா’ என்றொரு பண்ணை வைத்திருக்கிறார்கள்.
இந்த மாடுகளின் சாணத்தை கொண்டு ‘பயோ-கேஸ்’ என்ற இயற்கை எரிவாயு உருவாக்கி, தங்களின் எரிவாயுத் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள். சாணம் வைத்து மண்புழு உரம் என்ற இயற்கை உரத்தை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். ஒரு மாட்டினை பராமரிக்கும் செலவையும் தாண்டி, கூடுதல் லாபத்தை இந்த கறவை வற்றிய மாடுகளே தந்துவிடுகிறதாம். தொழுவத்தில் மாடுகளுக்கு மின்விசிறி கூட உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மனிதாபிமானம், சேவை என்பதைத் தாண்டியும் கிராமப் பொருளாதார மேம்பாடு என்ற நிலைக்கு சேவாலயா பயணித்துக் கொண்டிருக்கிறது. நிறுவனர் முரளிதரனும், அவரது மனைவி புவனாவும், சேவாலயா ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுமே இந்த வளர்ச்சிகளுக்கு அச்சாணி.
முரளிதரனிடம் பேசும்போது, “பாரதியார், விவேகானந்தர், காந்தி – இந்த மூன்று பேரும்தான் என் ஆதர்சம். எழுத்தறிவித்தலின் முக்கியத்துவத்தை பாரதியிடமும், அன்னதானத்தின் அவசியத்தை விவேகானந்தரிடமும், கிராமங்களின் தேவையை காந்தியிடமும் கற்றேன். இருபத்தேழு வயதில் இந்த அமைப்பை உருவாக்கினேன்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன தடங்கல்கள். இவ்வளவு பெரிய பொறுப்பை நான் திறம்பட செய்யவேண்டுமே என்று என் பெற்றோர் அஞ்சினார்கள். எங்களது பள்ளிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. நன்கு வளர்ந்து இப்போது திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது இல்லை என்று தெரிகிறது. எனினும் எதிர்காலம் குறித்த அக்கறையோடும், பொறுப்போடுமே செயல்படுகிறோம்.
திருமணத்துக்குப் பிறகு இப்பணி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் சேவை மனப்பான்மை கொண்ட ஒருவரையே வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தேன். புவனாவும், நானும் எக்காலத்திலும் சேவைகளிலிருந்து பின்வாங்கக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டே திருமணமும் செய்துகொண்டோம். திருமணத்துக்கு முன்பாக ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்த புவனா, வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுமையாக இப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
டாட்டா கன்சல்டண்ஸி நிறுவனத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக பணியாற்றினேன். எனக்கும், என் குடும்பத்துக்கும் சம்பாதித்தது போதும், பொருளாதார ரீதியாக சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தவுடனேயே, வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு நானும் இப்போது முழுநேர ஊழியனாக இங்கே பணிபுரிய ஆரம்பித்து விட்டேன்” என்றார்.
அரசுகளின் நலத்திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்று அடையாத நிலை இருக்கும்போது, சேவாலயா போன்ற அமைப்புகளின் சேவை நம் மனதில் நம்பிக்கை ஒளியை பரவச்செய்கிறது.
(நன்றி : புதிய தலைமுறை)