30 டிசம்பர், 2009

லட்சுமி குடியிருக்கிற வீடா இது?

அலப்பறையான ஆள் அவர். டி.எஃப்.டி. படித்தவர். ஒளிப்பதிவாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். மன்னிக்கவும் ஒளி ஓவியராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். மனிதருக்கு கொஞ்சம் இலக்கிய முகமும் உண்டு. அவ்வப்போது அதிரடியான அறிக்கைகள் மூலமாக தமிழகமெங்கும் அறியப்பட்டவர்.

ஆசீர்வதிக்கப்பட்ட ஒருநாளில் திடீரென இவரும் இயக்குனராகி விட்டார். முதல் படத்தின் முதல் நாள் ரிசல்ட்டை பார்த்து முந்திரிக்காட்டுக்கே மூட்டைக் கட்டிக் கொண்டு ஓடிவிடலாமா என்று நொந்துப் போனார். அதிசயத்தக்கவண்ணம் அப்படம் லேட் பிக்கப் ஆகிவிட, கோலிவுட் சிகப்பு கம்பளம் விரித்து ஒளி ஓவியரை இயக்குனராக வரவேற்றது.

அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்கள் 'புக்' ஆக ஒளிஓவியர் கண்மண் தெரியாமல் ஆடினார். ஏதோ ஒரு படத்துக்கு லொக்கேஷன் பார்க்க சென்றார். லொக்கேஷன் என்றால், ஓவியர் மனதுக்குள் சித்தரித்து வைத்த ஒரு வீடு. ஏகப்பட்ட வீடுகளை பார்த்தும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லையாம்.

கடைசியாக ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சுற்றிப் பார்த்த ஓவியர் அசிஸ்டண்டிடம், “ஏண்டா என்னோட லட்சுமி (எடுக்கப்போகும் படத்தின் கதாபாத்திரம்) குடியிருக்க இந்த கந்தாயம்தான் ஒனக்கு கிடைச்சுதா?” என்று எகிறியிருக்கிறார். அருகில் எளிமையானத் தோற்றத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் நின்றுக் கொண்டிருந்திருக்கிறார். ஓவியருக்கு அவர்தான் உரிமையாளர் என்று தெரியாது.

கோபமடைந்த வீட்டு உரிமையாளர் பதிலுக்கு ஓவியரிடம் கத்தியதுதான் ஹைலைட். “ஏன்யா முப்பது வருஷமா எம்பொண்டாட்டியே குடியிருக்குற வீடு இது. உன் லஷ்மி நாளஞ்சி நாள் வெறும் ஷூட்டிங்குக்கு குடியிருக்க மாட்டாளா?”

ஒளி ஓவியர் பதில் பேசாமல் தலைதெறிக்க திரும்ப ஓடிவந்துவிட்டாராம்.

28 டிசம்பர், 2009

கமல் எஃபெக்ட்!


* 1978ல் கமல்ஹாசன் சிகப்பு ரோஜாக்களில் நடித்தார். சைக்கோ கொலைக்காரன் வேடம். ஓராண்டு கழித்து ‘சைக்கோ ராமன்' என்பவர் பிடிபட்டார். தமிழகத்தில் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் சைக்கோ கொலைகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமை சைக்கோ ராமனையே சேரும்.

* 1988ல் கமல் வேலையில்லாத இளைஞனாக ‘சத்யா' திரைப்படத்தில் நடித்தார். வேலையில்லாத இளைஞர்களை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலங்களுக்கு இரையாக்குவதை தோலுரித்துக் காட்டிய படம் அது. 89-90களில் இந்திய இளைஞர்கள் பலரும் அதே பிரச்சினையை சந்தித்தார்கள். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கூந்தல் விரித்து ஆடியது.

* 1992ல் தேவர்மகன். சாதிமோதல் குறித்த சூடான படம். 93ல் தென்மாவட்டங்களில் படத்தில் சித்தரிக்கப்பட்ட பல காட்சிகள் நிஜமானது.

* 1994ல் மகாநதி. பைனான்ஸ் நிறுவனங்கள் அப்பாவிகளை ஏமாற்றுவது குறித்த கதை. 1996ல் பைனான்ஸ் நிறுவனங்களின் பித்தலாட்டம் வெட்டவெளிச்சமானது.

* இந்து-முஸ்லிம் பிரிவினை மற்றும் வன்முறைகளை அப்பட்டமாக காட்சிகளாக்கிய ஹேராம் 2000ஆம் ஆண்டில் வெளிவந்தது. படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இரு ஆண்டுகள் கழித்து குஜராத்தில் ‘லைவ்' ஆனது.

* 2003 ஏப்ரல் 14ல் அன்பே சிவம் வெளியானது. ‘சுனாமி வரும்' என்று கமல் வசனம் பேசினார் (வசனம் : மதன்). அச்சொல்லே தமிழர்களுக்கு புதியது. 2004 டிசம்பரில் நிஜமாகவே வந்து தொலைத்தது.

* 2006ல் வேட்டையாடு விளையாடு. இரட்டை சைக்கோ கொலையாளிகள் குறித்த த்ரில்லர். படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து நொய்டா இரட்டை கொலையர்கள் மொகிந்தர் மற்றும் சதிஷ் பிடிபட்டார்கள்.

- சுற்றில் வந்த சுவாரஸ்யமான மின்னஞ்சலின் தமிழாக்கம். எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்கப்பா என்று மலைக்க வைக்கிறது இல்லையா?

தெஹல்காவில் சாரு!


இந்தவார ‘தெஹல்கா' பத்திரிகையில் சாருநிவேதிதாவின் சிறுகதை ப்ரீதம் சக்கரவர்த்தியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது.

தெஹல்கா வாங்காதவர்கள் இணையத்திலும் வாசிக்கலாம் :
http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne090110morgue_keeper.asp

26 டிசம்பர், 2009

2009


ஒவ்வொரு புதுவருடமும் மகிழ்ச்சி நிறைந்ததாக பிறக்கிறது அல்லது அவ்வாறு பிறப்பதாக நாம் கற்பிதமாகவாவது செய்துக் கொள்கிறோம். குறைந்தபட்சம் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒவ்வொருவரும் பாவனையாவது செய்கிறோம். மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் தவிர வேறெதற்கும் புத்தாண்டில் இடம்தர நாம் தயாரில்லை.

ஜனவரி முதல் நாளன்று கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு, கவலை தோய்ந்த முகத்தோடு எவரையும் கண்டதாக எனக்கு இதுவரை நினைவில்லை. ஆனால் கடந்த ஆண்டு பிறந்தபோது நான் இப்படித்தான் இருந்தேன். தலைமேல் இடிவிழுந்த சோகம் எனக்கு இருந்தது. முன்னதாக 2008 டிசம்பரில் பணியை ராஜினாமா செய்திருந்தேன், 31ந்தேதி வரை மட்டுமே வேலையில் இருந்தேன். 2009 ஜனவரி ஒன்று முதல் நான் வேலையில்லாத பட்டயதாரி.

நிச்சயமற்ற எதிர்காலம். உற்சாகத்தோடு வளைய வருவதை போல மற்றவர்களிடம் நடித்துக் கொண்டிருந்தேன். ‘விளம்பர உலகம்’ புத்தகம் வெளியான நேரமது. காட்ஃபாதர் பாரா வேறு நம்பிக்கை தருபவனாக என்னை குறிப்பிட்டிருந்தார். அவருக்கு என் மீது இருந்த நம்பிக்கை கூட என்மீது எனக்கே இல்லை.

முன்னதாக கடந்த இரண்டு வருடங்களில் வீட்டில் மருத்துவத்துக்கு பெரிய தொகை (‘எல்’களில்) செலவழித்திருந்தேன். சேமிப்பு முற்றிலும் கரைந்த நிலை. ஒன்பதாயிரம் ரூபாய் பர்சனல் லோன் மாதாமாதம் கட்ட வேண்டும். அரிசி, மளிகை வகையறாக்களுக்கு இறுக்கிப் பிடித்தாலும் குறைந்தபட்சம் நாலு ரூபாய் தேவை. பெட்ரோல், இத்யாதி உள்ளிட்ட என் செலவுகள் இரண்டு ஆவது வேண்டும். ஒன்றாம் தேதி ஆனால் பதினைந்து ரூபாய் கையில் இல்லாவிட்டால் செத்தேன். நல்லவேளையாக சொந்தவீடு என்பதால் வாடகைப்பிரச்சினை இல்லை.

2009, ஜனவரி ஒன்று. மீண்டும் பிறக்கிறேன். கண்விழித்து பார்க்கிறேன். உலகம் புதியதாக, கூடுதல் மொக்கைகள் நிறைந்ததாக தெரிகிறது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தேன். என்ன நடந்தாலும் அழுது வடியக்கூடாது. சுயகழிவிரக்கம் மட்டும் வந்துவிடவே கூடாது.

ஆறுதல் தர கவுதம் சார் இருந்தார். நான் ராஜினாமா செய்தேன் இல்லையா? அந்த நிறுவனத்தில் ஒரு பிரிவுக்கு தலைவராக பணியாற்றியவர். பத்திரிகையாளர். கிடைத்த வேலைகள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார். அவருக்கு கட்டுப்படி ஆகிறது என்றால் போஸ்டர் ஒட்டவும் தயங்கமாட்டார். கல்லாக இருந்தால் கூட சிற்பம் செதுக்கிவிடலாம். நான் வெறும் களிமண். என்னை அழகான பொம்மையாக உருவாக்கியவர்.

பிப்ரவரியில் இருந்து அவரோடு பணி. ஒரு எட்டுக்கு எட்டு அறையில் நான் மட்டுமே பணியாளன். கிடைத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். கவிதை எழுதினேன். கானா எழுதினேன். கிசுகிசு எழுதினேன். பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு கட்சிக்கு (எனக்கு எதிர்க்கட்சி) வேலைபார்த்தேன், அந்தக் கட்சியின் சாதனைகள் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினேன். அறுபது சதவிகிதம் எழுத்துப்பணி. நாற்பது சதவிகிதம் எல்லாப் பணிகளும். என்னுடைய குறைந்தபட்சத் தேவையான ‘பதினைந்து’க்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கவுதம் சார் பார்த்துக் கொண்டார்.

இடையில் கிழக்குக்காக இன்னொரு புத்தகத்தையும் செதுக்கி, செதுக்கி எழுதிக் கொண்டிருந்தேன். ‘விஜயகாந்த்!’

விஜயகாந்த் தேர்தலில் வென்று ஜனங்களை வாழவைப்பாரோ இல்லையோ தெரியாது. என்னை வாழவைத்துவிட்டார். என்னுடைய கட்சி சார்பு தெரிந்திருந்தும், நம்பிக்கையோடு கிழக்கு கொடுத்த அசைண்மெண்ட் அது. அப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் புன்முறுவலோடு வாசகன் படித்தாக வேண்டும் என்று எனக்கு நானே ஒரு எல்லையை தீர்மானித்துக் கொண்டேன். அதுவரை எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு பாணியை உடைத்தாக வேண்டும். கிடைத்த ரெஃபரென்ஸ் எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டு, பட்டுக்கோட்டை பிரபாகர் பாணியில் நாவலாக நூலை எழுதினேன்.

அந்நூல் ஒரு நாவல். சோகங்களும், சாதனைகளுமாக மிக சீரியஸாக எழுதவேண்டிய விஜயகாந்தின் வாழ்க்கையை துள்ளலும், கும்மாளமுமாக எழுதினேன். பதிப்பகம் வெளியிடுமா என்று தெரியவில்லை. புனைவுகளில் அவர்களுக்கு பெரிய ஆர்வமில்லை. புனைவு மாதிரி வரலாறு. என்ன செய்வார்களோ என்று நினைத்தேன்.

நானே எதிர்பாராவிதமாக அந்நூலை கிழக்கு கொண்டாடியது. அட்டகாசமான அட்டைப்படத்தோடு வெளிவந்த ‘விஜயகாந்த்’தான் என்னுடைய விசிட்டிங் கார்ட். பேரரசு பாணியில் கமர்ஷியலாக தொடர்ந்து எழுதலாம் என்று நம்பிக்கை கொடுத்த புத்தகம். முதல் புத்தகம் ஜஸ்ட் பாஸ் என்றால், விஜயகாந்த் எனக்கு சூப்பர்ஹிட். அதுவரை எழுத்து என்றால் வார்த்தை, வீரியம், லொட்டு, லொசுக்கு என்று தடுமாறிக் கொண்டிருந்தவனுக்கு ஃபார்முலா பிடிபட்டது. ‘நீ இலக்கியம் எதையும் படைக்க வேண்டியதில்லை. இப்போதைக்கு அத்துறை பிழைத்துப் போகட்டும். அறுபது வயசுக்கு மேலே பார்த்துக் கொள்ளலாம்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

மே மாதம் இறுதியில் தமிழ்மொழி பிறந்தாள். 2009ன் ஆரம்ப மாதங்கள் தந்த சோர்வும், சோம்பலும், நிச்சயமின்மையும் மறைந்து நிஜமான மகிழ்ச்சி மனதுக்குள் பூக்கத் தொடங்கியது.
குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதும் வாய்ப்பு கிடைத்தது, நன்றி விஜயகாந்த். ஓரளவுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்க முடிந்தது. ஜூலை மாதம் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது. முழுநேரப் பத்திரிகையாளனாகி விட்டேன். நிச்சயமான எதிர்காலம். நிறைவான வருமானம்.

அடுத்த ஐந்து மாதங்களாக மூச்சுவிட நேரமின்றி வேலை. உழைப்புக்கு ஏற்ற பலனை கைமேல் உணரமுடிகிறது. குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த சைபர்கிரைம் புத்தகமாக கிழக்கு வெளியீடாக வெளிவந்திருக்கிறது. வாழ்க்கையின் மோசமான ஆண்டாக துவங்கிய 2009, ஆண்டிறுதியில் ஆசுவாசம் வழங்கியிருக்கிறது.

இவ்வருடத்தின் ஒவ்வொரு நொடியும் எனக்கு தோள்கொடுத்த நட்பான அதிஷாவை அடுத்த ஆறு ஜென்மங்களிலும் கூட மறக்க முடியாது. சோர்வுறும்போதெல்லாம் ‘வருதப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, என்னிடம் வாருங்கள்!' என்று மத்தேயு.. மன்னிக்கவும் பாரா சொல்கிறார். அப்புறமென்ன கவலை?

2010 புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக வரவேற்க எனக்கு இப்போது ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

24 டிசம்பர், 2009

டென்ஷனியலிஸ்ட்டா நீங்கள்?


நீங்கள் பொதுவாக எதற்கெல்லாம் டென்ஷன் ஆவீர்கள்?

* குளிக்க தயாராகும்போது வீட்டுக் குழாயில் நீர் வரவில்லை.

* பால்காரர் ஏழரை மணி வரை பால் போடவில்லை.

* பேப்பர் பையன் தினகரனோடு இணைப்பாக வரும் வசந்தம் போட மறந்துவிட்டான்.

* சமைக்கும்போது கேஸ் தீர்ந்துவிட்டது.

* வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள் நுழைந்து, மின்விசிறிக்கு சுவிட்சைத் தட்டினால் ‘கரெண்ட் கட்’

* முக்கியமான அழைப்பினை பேசிக் கொண்டிருக்கும்போது செல்போனில் சிக்னல் கட்.

காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆயினும் நமக்கு ஏற்படும் டென்ஷன்கள் மூன்றே மூன்றுவகைதான் தெரியுமா?

1. ஆரோக்கிய டென்ஷன் – அதீத மகிழ்ச்சியான மனோபாவமும் மன அழுத்தத்தை உருவாக்குமாம். ஆனால் இந்த மன அழுத்தத்தால் பயன்களே அதிகம். இத்தகைய மன அழுத்தமே டெண்டுல்கர் போன்ற விளையாட்டு வீரர்களை குறைந்த பந்துகளிலேயே செஞ்சுரி அடிக்க வைக்கிறது. சாதனையாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் இது.

2. சமநிலை மன அழுத்தம் – இது நமது மனநிலையை சமநிலையாக இருக்க வைக்க உதவுகிறது. மகிழ்ச்சி, துயரம் இரண்டையும் ஒரு பார்வையில் பாவிக்கக் கூடியவர்களை கண்டு ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். இன்னும் அரைமணி நேரத்தில் இந்த கட்டுரையை நான் முடித்தாக வேண்டும். இப்போது கரெண்ட் கட். மாற்று ஏற்பாடுகளை யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் எனக்கு இருப்பது சமநிலை மன அழுத்தம். இது அவசியமானதும் கூட.

3. துயர் டென்ஷன் – நமக்கு வெகுவாக அறிமுகமான விஷயம் இது. இதை மட்டுமே நாம் டென்ஷனாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். முந்தைய இரண்டு டென்ஷன்களும் ஆபத்தில்லாதவை. இதுவோ ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். மயக்கம் ஏற்படுத்தும். அதிகமாக வியர்க்க வைக்கும். அடிவயிற்றிலிருந்து அபாய பந்தொன்று நெஞ்சுக்கு மேலே எழும்பும். இதை எதிர்கொள்வது எப்படி?

’மனசே டென்ஷன் ப்ளீஸ்’ நூல் இதைத்தான் எளிமையாக சொல்லித் தருகிறது. மூன்றாவது டென்ஷனிலிருந்து தப்பிக்க, நீங்களே வலிய முந்தைய இரண்டு டென்ஷன்களையும் வரவழைத்துக் கொள்வதுதான் டென்ஷனை எதிர்கொள்ள எளிய சூத்திரம். இதுவரை உங்களை ரிலாக்ஸ் ஆகதான் எல்லோரும் சொல்லித் தந்தார்கள். இந்நூலோ ‘டென்ஷன் ஆகுங்க ப்ளீஸ்’ என்று மாற்றி யோசிக்க வைக்கிறது.

டென்ஷன் ஏற்படுவதற்கான காரணிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், இவற்றை எதிர்கொள்வதற்கான உடல் மற்றும் மனரீதியான பயிற்சிகள், திட்டமிடுதல், முடிவெடுத்தல், குறைப்பதற்கான வழிகள் என்று விரிவாக பேசுகிறார் நூலாசிரியர் நளினி. விற்பனையில் எப்போதும் சக்கைப்போடு போடும் இந்நூல் இதுவரை ஐந்து பதிப்புகளை கண்டிருக்கிறது.
‘ஃபாஸ்ட் புட்’ யுகத்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய கையேடு இந்த சிறிய புத்தகம்.

நூல் : மனசே டென்ஷன் ப்ளீஸ்

ஆசிரியர் : நளினி

பக்கங்கள் : 32

விலை : ரூ.5/-

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை
சென்னை – 600 018.
தொலைபேசி : 044-24332924

22 டிசம்பர், 2009

நம்ம ஊரு ஆர்க்கிமிடீஸ்!


ஆந்திரமாநிலம் அடிலாபாத்தைச் சேர்ந்தவர்கள் அந்த என்ஜினியரிங் மாணவர்கள். தங்கள் படிப்பின் ஒரு பகுதியான புராஜக்ட் தொடர்பாக அவரை அணுகியிருந்தார்கள். என்ஜினியரிங் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது புராஜக்ட் செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவரோ தினம் தினம் அந்தப் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவ்வப்போது ஏதாவது சர்க்யூட்களை கொடுத்து, ஏதாவது செய்யச் சொல்வார். பழைய கார் பேட்டரிகளை கொண்டுவந்து கொடுத்து பழுதுபார்க்கச் சொல்வார். மற்றபடி புராஜக்ட் நடைபெறும் அறிகுறியே சுத்தமாக இல்லை.

பையன்கள் பயந்துவிட்டார்கள். “சார் நாங்க ஏதாவது உருப்படியா பண்ணியாகனும் சார்!” என்று அவரிடம் சீரியஸாகவே கேட்டார்கள்.

“ம்.. புராஜக்ட் பண்ணனும்லே? ஒண்ணு பண்ணுவோம், அடுத்த ஊருலே ஒரு அறிவியல் கண்காட்சி நடக்குது. நாம பண்ண புராஜக்ட்டை அங்கே காட்சிப்படுத்துவோம்” என்றார்.
அப்போதைக்கு சமாதானமானர்கள். ஆனால் பிறகுதான் புரிந்தது. “நாமதான் இன்னும் எந்த புராஜக்ட்டும் பண்ணலையே?”

அறிவியல் கண்காட்சிக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பேட்டரிகள், சர்க்யூட்டுகள் மற்ற எந்திரக் குப்பைகளையெல்லாம் கண்காட்சிக்கு எடுத்துச் செல்ல தயாராகுமாறு மாணவர்களிடம் அவர் சொன்னார்.

“ஒரு வேன் புடிச்சிடலாமா சார்!”

“வேண்டாம். மாட்டு வண்டி ஒன்னு ஏற்பாடு பண்ணியிருக்கேன்”

“மாட்டு வண்டியா?” மாணவர்களுக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.

அவர் சொன்னபடியே மாட்டு வண்டி வந்தது. பேட்டரிகளை மாட்டு வண்டியில் பொருத்தச் சொன்னார். சர்க்யூட்களை எடுத்து எங்கெங்கோ வயர்களில் இணைத்தார். சைக்கிள் டயனமோ போன்று இருந்த ஒன்றினை சக்கரங்களில் பொறுத்தினார். என்னதான் செய்கிறார் என்று மாணவர்கள் ஆச்சரியமாக வாய்பிளந்து நின்றார்கள். ‘ஓய் ஓய்யென்று’ வண்டியோட்டி சாட்டைகளைச் சொடுக்கி மாடுகளை அடிக்க, வண்டி கிளம்பியது.

அறிவியல் கண்காட்சியில் இவர்களுக்கு என்று ஒரு ஸ்டால் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு டிவி, ப்ரிட்ஜ், ஃபேன் என்று மின்சாதனப் பொருட்கள் நிரம்பியிருந்தது. நம் மாட்டுவண்டி நேராக ஸ்டாலுக்கு முன்பாக சென்று நிற்க, அவசர அவசரமாக வண்டியில் பொருத்தப்பட்டிருந்தவற்றை கழட்டி ஸ்டாலில் புது தினுசாக மாணவர்களை பொருத்தச் சொன்னார் அவர்.

அவர் சொன்னபடியே மின்சாதனப் பொருட்களின் பிளக்குகளை பேட்டரியில் இணைக்க, ‘ஆச்சரியம்!’. பேன் சுழலத் தொடங்கியது. டிவியில் என்.டி.ஆர். கர்ஜித்தார். எல்லாமே மின்சாரத்தில் இயங்குவதைப் போலவே இயங்க ஆரம்பித்தன. மாணவர்களின் புராஜக்ட் சக்சஸ்!

‘மாட்டு வண்டியின் மூலமாக மின்சாரம்!’ என்பதுதான் மாணவர்கள், அவர்களுக்கு தெரியாமலேயே செய்த புராஜக்ட். சைக்கிளில் சின்ன டயனமோ வைத்து ஒரு பல்புக்கு தேவையான மின்சாரத்தை உருவாக்குவதைப் போல மாட்டு வண்டியின், பெரிய சக்கரத்தைப் பயன்படுத்தி பேட்டரியை சார்ஜ் செய்து, ஜெனரேட்டருக்கு மாற்றாக மின்சாரம் உருவாக்கினால் என்ன என்ற ஐடியாவுக்கு சொந்தக்காரர் ‘அவர்’. டேவிட், வயது 63. ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற ஐ.ஐ.ஐ.டி.யின் (International Institute of Information Technology) பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தில் கண்டுபிடிப்பாளராக பணிபுரிகிறார்.

வீண் என்று நினைத்து தூக்கிப் போடப்படும் எந்திரக் கழிவுகளில் இருந்து புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதே பொதுவாக இவரது பாணி. சர்வதேச புகழ்வாய்ந்த நிறுவனத்தில் கண்டுபிடிப்பாளராக பணிபுரிகிறாரே, நிறைய படித்திருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். நம்புங்கள். பள்ளிப்படிப்பை கூட டேவிட் முடித்ததில்லை. இன்றுவரை இவரின் கல்வித்தகுதி ஏழாம் வகுப்பு மட்டுமே. தேசத்தின் பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் கல்வியின் அடிப்படையில் இல்லாமல், திறமையின் அடிப்படையில் இவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

டேவிட்டின் சொந்தக்கதையும் கூட அவரது கண்டுபிடிப்புக் கதைகளைப் போலவே சுவாரஸ்யமானது. ஆனால் சற்று சோகமானதும் கூட. ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் டேவிட் பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர், தமிழர். அவரது தாய் ஆந்திராவைச் சேர்ந்தவர், படிப்பறிவில்லாதவர். டேவிட்டுக்கு நான்கு வயதிருந்தபோதே அவரது தந்தை இறந்துவிட்டார். படிப்பிறவில்லாத தாயை, தந்தைவழி உறவினர்கள் ஏமாற்றி, சொத்துக்களை பிடுங்கிக் கொண்டு குழந்தைகளோடு நடுதெருவில் விட்டனர்.

ஒருவேளை உணவுக்கே வழியில்லாத நிலையில் டேவிட் ஒரு அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார். அங்கேதான் ஏழாம் வகுப்பு வரை படித்ததாக சொல்கிறார். ஒரு கட்டத்தில் விடுதி வாழ்க்கை கசந்துவிட மீண்டும் தாயிடமே சென்றிருக்கிறார். பிழைப்புக்காக டெல்லிக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. டேவிட்டின் தாய் பத்துப் பாத்திரம் தேய்த்து குடும்பத்தைக் காப்பாற்ற, இவரும் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்திருக்கிறார். ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு நாளில் டேவிட்டுக்குள் ஒளிந்திருந்த கண்டுபிடிப்பாளர் பிறந்திருக்கிறார்.

அவருக்கு திடீர் திடீரென ஏதாவது ஐடியாக்கள் தோன்றும். கையில் கிடைத்த ஓட்டை, உடைசல் பொருட்களை வைத்து அவற்றை செயல்படுத்தத் தொடங்கிவிடுவார். எந்த ஒரு நவீன சாதனத்தைப் பார்த்தாலும், “இது ஏன் இப்படியிருக்கு? இப்படி பண்ணியிருக்கலாமே?” என்று எல்லாவற்றையுமே மாற்றி சிந்திக்க ஆரம்பித்தார் (Lateral Thinking). இம்மாதிரியான மாற்று சிந்தனைகள் அவருக்கு இருபது வயது வாக்கில் தோன்றியதாக சொல்கிறார்.

‘ஒரு சின்ன ஐடியா உலகத்தையே மாற்றக்கூடும்!’ என்பது பிரபல விளம்பர வாசகம். இருபத்து நான்கு மணி நேரமும் ஐடியா மணியாக வாழ்ந்துகொண்டிருந்த டேவிட்டுக்கும் உலகம் மாறியது. ஆரம்பத்தில் சிறிய சிறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, ஏரியாவாசிகளை அசரடித்துக் கொண்டிருந்தவருக்கு, திடீரென பெரிய ஐடியாக்களும் உதிக்கத் தொடங்கியது.

தன்னுடைய கண்டுபிடிப்புகளை செயல்படுத்த பணம் தேவை. டெல்லியிலிருந்த தேசிய ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்துக்கு (NRDC) பணத்துக்காக படையெடுக்க ஆரம்பித்தார். “இதை கண்டுபிடித்திருக்கிறேன், அதை கண்டுபிடித்திருக்கிறேன். இவற்றை செயல்படுத்த பணம் தேவை” என்று கஜினி முகம்மது மாதிரி தினமும் நிறுவனத்துக்கு போய் நின்று கொண்டிருப்பார். இவரது கண்டுபிடிப்புகள் சரியானதுதானா என்று ஆராய அந்த அமைப்பு டெல்லி ஐஐடியில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் சாமிநாதனிடம் அனுப்பி வைப்பார்கள்.

’டேவிட் ஒரு கண்டுபிடிப்பாளர்’ என்பதை முதலில் ஒத்துக்கொண்டவர் பேராசிரியர் சாமிநாதனே. இவரது கண்டுபிடிப்புகளை பல்வேறு நிறுவனங்களுக்கும் பேராசிரியரே சிபாரிசு செய்திருக்கிறார்.

ஆயினும் போதுமான கல்வியறிவு இல்லாத நிலையில் டேவிட் பலமுறை மற்றவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அப்போது டேவிட் புதியதாக ஒரு பல்பினை கண்டறிந்திருந்தார். மிக சிறிய ஐடியாதான் அது. ஆனால் நல்ல பலன் தரக்கூடியதாக இருந்தது. நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் குண்டு பல்பின் உள்ளே ஒரு டங்ஸ்டன் இழை இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஸ்விட்ச் போட்டதுமே இந்த இழை ஒளிரும். வெளிச்சம் கிடைக்கும். இந்த இழை அறுந்துவிட்டால் ப்யூஸ் போய்விட்டது என்று கூறி பல்பினை தூக்கிப் போட்டுவிட்டு, வேறு பல்பு வாங்க வேண்டியதுதான்.

ஒரு இழை அறுந்துவிட்டால் ஒட்டுமொத்த பல்பையே தூக்கிப்போட்டுவிட வேண்டும் என்ற நிலையை டேவிட்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரே பல்பில் இரண்டு இழைகளை வைத்து தயாரித்தால் என்ன குறைந்துவிடப் போகிறது? ஒன்று அறுந்தாலும் இன்னொன்றின் மூலமாக பல்பு மேலும் சிலகாலம் இயங்குமல்லவா? என்று யோசித்தார். செயல்படுத்தினார். நீண்டகாலத்துக்கு உழைக்கக்கூடிய பல்பினை கண்டறிந்தார். இது மிகச்சிறிய ஐடியாதான். யாருக்கு வேண்டுமானாலும் தோன்றக்கூடும். ஆனால் யாருக்கும் தோன்றாமல் டேவிட்டுக்கு தோன்றியது. அதை அவர் செயல்வடிவத்திலும் கொண்டுவந்தார்.

ஒரு பல்பு கம்பெனிக்காரர்கள் டேவிட்டை அணுகினார்கள். இந்த இரண்டு இழைரக பல்புகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை டேவிட்டை பங்குதாரராக வைத்துத் தொடங்கினார்கள். நிறைய தயாரித்தார்கள். நிறைய லாபம் வந்தது. ஒருக்கட்டத்தில் லாபத்தோடு அவர்கள் கம்பியை நீட்டிவிட, தொழிலதிபராக மாறியிருந்த டேவிட் மீண்டும் தெருவுக்கு வரநேர்ந்தது. இதுபோல நான்கைந்து முறை டேவிட் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட அனுபவங்களுக்குப் பிறகே கண்டுபிடிப்புகளை முறைப்படி பேடண்ட் (Patent) செய்யவேண்டும் என்பதை அறிந்தார் டேவிட். நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகள் இன்று இவரது வசம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சூரியஒளியில் கதிரறுக்கும் இயந்திரம், மாட்டுச்சாணம் மூலமாக மின்சாரம் தயாரித்தல், மிகக்குறைவான மின்சாரத்தில் இயங்கக்கூடிய நெசவு இயந்திரம், இப்போது நாம் பயன்படுத்தும் மின்விசிறிகளின் மின் தேவையில் பாதியளவே பயன்படுத்தி இயங்கக்கூடிய மின்விசிறிகள் என்று மக்களின் பயன்பாடுகளின் அடிப்படையில் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்திருக்கிறார்.

சமீபத்தில் சென்னை வந்திருந்தவரை சந்தித்தோம். கிரேக்க தத்துவவாதி, விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நெம்புகோல் தத்துவத்தை (Lever Principle) கண்டுபிடித்தார். அதையும் விடச் சிறந்ததாக, முற்றிலும் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறாராம் டேவிட். அதற்கு பேடண்ட் வாங்கவே சென்னை வந்திருக்கிறார். இந்த கண்டுப்பிடிப்பு உலகின் மற்ற அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் அறிவியல் உலகின் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக டேவிட்டும் இடம்பெறுவார்.

“என் தோற்றத்தை கண்டு நிறைய பேர் ஆச்சரியப்படுகிறார்கள். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதால் இளமையான தோற்றம் வாய்த்திருக்கிறதா என்று கேட்கிறார்கள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா, சோகமாக இருக்கிறேனா என்பதைவிட இயற்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதே முக்கியம். அது மகிழ்ச்சியாக இருக்கும்பட்சத்தில் தன் குழந்தைகளான மனிதர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். நாம் முதலில் பழகவேண்டியது மனிதர்களிடமல்ல. இயற்கையிடம்!” என்று தத்துவம் பேசுகிறார்.
குடும்பம் பற்றி கேட்டால், “அது ஒரு பெரிய சோகக்கதை. நீங்க அவசியம் தெரிஞ்சுக்கணுமா?” என்று கேட்கிறார்.

உலகின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவர்களது சொந்தக்கதை எப்போதுமே சோகக்கதையாகவே அமைகிறது. டேவிட்டும் விதிவிலக்கல்ல.

(நன்றி : புதிய தலைமுறை)

19 டிசம்பர், 2009

வேட்டைக்காரன்!


ஒரு வழியாக இந்த ஆண்டின் நிஜமான சூப்பர்ஹிட் கடைசியாக வந்தேவிட்டது. நான் கவனித்த வகையில் பொதுவாக ஆண்டின் இறுதியில் வெளியாகும் படங்கள் வசூலில் சோடை போவதில்லை. முந்தைய உதாரணங்கள் : காதலுக்கு மரியாதை, பில்லா. 600 பிரிண்டுகள் போடப்பட்டு வெளியாகியிருக்கும் வேட்டைக்காரன் வசூல் வேட்டையாடப் போகிறான் என்பதில் சந்தேகமேயில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகு இளையதளபதி நிஜமான நூறாவது நாள் விழா காணப் போகிறார்.

என்ன மாஸ்? என்ன ஸ்டைல்? என்ன மேனரிசம்? என்ன உடல்மொழி? – தமிழ் திரையுலகில் விஜய்யின் இடத்தை இட்டு நிரப்ப விஜய்யால் மட்டுமே முடியும். திருமலைக்கு பிறகு யோசிக்காமல் டிக் அடிக்கவைக்கும் பக்கா ஸ்டைலான கமர்சியல் விஜய். காதலியின் எதிரில் காலால் கோலம் போடும்போதும் சரி, காட்டுத்தனமாக வில்லன்களை புரட்டியெடுக்கும் போதும் சரி. தி ஒன் அண்ட் ஒன்லி விஜய்! – ஆனால் லக்கிலுக்கைப் போலவே இவரும் +2வில் அரியர்ஸ் வைக்கும் வயதுடையவர் என்ற பாத்திரப்படைப்புதான் கொஞ்சம் ஓவர்.

அனுஷ்கா. எத்தனையோ இடங்களில் நீர்த்திவலைகளை பார்த்திருப்பீர்கள். ஈரமான அனுஷ்காவின் இடுப்பில் பார்க்கும்போது ஒரு சின்ன நீர்த்துளி கூட எத்தனை பேரழகு? எத்தனையோ இடுப்புகளை இந்த தமிழ்கூறும் நல்லுலகம் கண்டு களித்திருக்கலாம். ஆனால் எந்த இடையைக் காட்டிலும் அனுஷ்காவின் இடையே அதிசிறப்பு வாய்ந்தது என்பதை வேட்டைக்காரனை கண்டவர்கள் அறியலாம். தமன்னாவின் இடுப்பில் கூட கண்ணுக்கு தெரியாத லேசான மடிப்பை கண்ணை சுருக்கி உஷாராக உற்றுப் பார்த்தால் உணர்ந்து விடலாம். ஸ்டீம் அயர்னில் நீட்டாக இஸ்திரி செய்யப்பட்ட சிலுக்குத்துணி மாதிரியான இடுப்பு அனுஷ்காவுக்கு. ஏதேனும் அழகுப்பல்கலைக்கழகம் இடைத்தேர்வு நடத்தினால் டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆவார் என்பதில் சந்தேகமில்லை. முப்பதை நெருங்குகிறாராம். யோகா டீச்சராயிற்றே? சிக்கென்று இருக்க சொல்லியா தரவேண்டும்?

டைட்டிலில் ‘ஜூனியர் விஜய்’ என்று வரும்போது தியேட்டரில் எழும் விசில் சத்தம் விண்ணை கிழிக்கிறது. ஆனால் சீனியர் விஜய் ரேஞ்சுக்கு வருவதெல்லாம் ரொம்ப கஷ்டம். நடனத்துக்கான சீனியர் விஜய்யின் உழைப்பை, மைக்கேல் ஜாக்சனின் உழைப்போடு மட்டுமே ஒப்பிடலாம். அவர் அசால்ட்டாக போடும் ஸ்டெப்கள் பலவும் எலும்புமுறிவை உருவாக்கக் கூடியவை.

ஏற்கனவே கன்னாபின்னா ஹிட் அடித்துவிட்ட பாடல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. படமாக்கம் அபாரம். குறிப்பாக ‘கரிகாலன் காலைப் போல’ அட்டகாசம். பாடல்களை கலக்கலாக படம் பிடித்திருக்கும் அறிமுக இயக்குனர் பாபுசிவன் படமெடுக்கவும் கொஞ்சம் கற்றுத் தேர்ந்தால் பரவாயில்லை. முதல் பாதி பாட்ஷா ரேஞ்ச் என்றால், இரண்டாம் பாதி குருவி ரேஞ்ச். இயக்குனரின் ஸ்டாக் முழுக்க பர்ஸ்ட் ஹாஃபிலேயே தீர்ந்துவிடுகிறது. செகண்ட் ஹாஃபில் சீன் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

இடைவேளைக்குப் பிறகு விஜய் ஹீரோ என்பதை இயக்குனர் மறந்துவிட்டாரோ? வில்லனான சலீம்கவுஸ் சக்கைப்போடு போடுகிறார். அவரது இதழோர கேலிப்புன்னகை, ஆஸ்கர் வாங்கிய ஹாலிவுட் ஹீரோக்களுக்கே சவால் விடக்கூடியது. சலீம்கவுஸை விஜய் ஹேண்டில் செய்யும் காட்சிகள் சப்பையான ஐடியாக்கள். க்ளைமேக்ஸ் சுத்தமோ சுத்தம்!

வேட்டைக்காரன் – ரசிகர்களின் இதயங்களை நச்சென்று வேட்டையாடுகிறான்!

17 டிசம்பர், 2009

ஞாநியின் பூச்செண்டு!


சாரு எழுதிய 'ஞாநி பூச்செண்டு' மேட்டர் பற்றி எழுதியதற்கு ஞாநியின் விளக்கம் அல்லது மறுப்பு. நண்பர் ஒருவருக்கு ஞாநி அனுப்பிய மடல் இங்கே...

என் பேச்சு திரித்தும் வெட்டியும் போடப்பட்டு அவதூறு செய்யப்படுகிறேன், இலக்கிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பரிசுகளாக புத்தகங்களைத்தான் தரவேண்டுமென்பதே என் பேச்சின் அழுத்தம். எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான் வக்லியுறுத்துகிறேன் வலியுறுத்துகிறேன். எனக்கு மேடையில் தரப்படும் பூச்செண்டை நான் எடுத்துப் போய் ப்யன்படுத்த வழியில்லை. அவற்றில் உள்ள பூக்களை பூ வைக்கும் பழக்கத்தில் உள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். அதைத்தான் அன்றும் செய்தேன். எனக்குப் பயன்படாத பூச்செண்டை தருவதற்கு பதில், பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் கூட டவலாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன்.

எழுத்தில் தரும் பூச்செண்டு என்பது ஓர் அடையாளம் . பாராட்டின் அடையாளம். ஆஹா, பேஷ் பேஷ் , பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடு அவ்வளவுதான். எழுத்தில் தரும் குட்டு என்ன அசல் குட்டா ? அதுவும் கண்டனத்தின் குறியீடு மட்டுமே.

நான் பூச்செண்டுக்கு எதிரி அல்ல, அது பயன்படக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுத்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் அந்தக் காசில் புத்தகம் வாங்கித்தரவே விரும்புவேன்.

ஞாநி

(நன்றி : இட்லிவடை.பிளாக்ஸ்பாட்.காம்)

16 டிசம்பர், 2009

கிழக்கிலிருந்து வீசப்படும் அணுகுண்டு!


தினமலரில் முன்பெல்லாம் ராஜீவ் கொலைவழக்கு விசாரணையை நக்கலடித்து கார்ட்டூன் வரையப்படும். பீட்டர் வரைவார். பெரும்பாலும் ஒரே விஷயம்தான். வழக்கு விசாரணையின் போக்கைக் கண்டு வானில் இருந்து ராஜீவின் ஆவி தலையில் அடித்துக் கொள்ளும். நையாண்டி கார்ட்டூனாக இருந்தாலும், அவையெல்லாம் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது என்பதை இப்போது அறிய முடிகிறது. ராஜீவ் கொலைவழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் தலைமைப் புலனாய்வு அதிகாரி - சி.பி.ஐ. (ஓய்வு) கே.ரகோத்தமன் ‘ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இதுவரை வெளிவராத, திடுக்கிடச் செய்யும் தகவல்கள் - ஆதாரங்களுடன் என்று அட்டையில் குறிப்பிடப்பட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

’விடுதலைப்புலிகள் செய்தார்களா?’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி, ஆதாரங்களை அடுக்க முனையாமல் ‘அவர்கள்தான் செய்தார்கள், அப்புறம் என்னாச்சுன்னா...’ என்ற ரேஞ்சுக்கு ரகோத்தமன் அடித்து ஆடியிருக்கிறார். வெறுமனே தன் கூற்றாக சொல்லாமல், சி.பி.ஐ. வசமிருந்த ஆதாரங்களையும் சேர்த்து அச்சிட்டிருக்கிறார். கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை இதுபோல புத்தகத்தில் ஓய்வுபெற்ற அதிகாரி வெளியிடலாமா? அதில் ஏதேனும் சட்டச்சிக்கல்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

புலனாய்வில் நடந்த குளறுபடிகள் பலவும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. விசாரிக்க நினைத்தவர்களை விசாரிக்க முடியாமல் மேலதிகாரிகளால் புலனாய்வுப் பிரிவினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். சி.பி.ஐ. வசம் இருந்த ஹரிபாபுவின் கேமிராவில் பதிவான போட்டோக்கள், இவர்கள் கைக்கு கிடைப்பதற்கு முன்னரே இந்துவில் வெளியான கூத்தையும் எழுதியிருக்கிறார். ரகோத்தமன் புத்தகம் முழுக்க சுட்டிக்காட்ட விரும்பும் விபரம் என்னவென்றால் இந்திய உளவு அமைப்புகளின் அலட்சியம்.

ராஜீவ் படுகொலையானதுமே பிரதமர் சந்திரசேகர் கேபினட் அமைப்பை கூட்டுகிறார். “யார் செய்தது?” என்று கேட்கிறார். கேபினட்டில் இருந்த சுப்பிரமணியசாமி உடனே விடுதலைப்புலிகள் தான் செய்திருப்பார்கள் என்று ஆணித்தரமாக அடித்துப் பேசுகிறார். ரா தலைவரோ ”I have a mole in LTTE. I am sumre it was not done by LTTE" என்கிறார். விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவியிருப்பதாக அவர் குறிப்பிடும் இந்திய உளவாளி யார் தெரியுமா? கிட்டு.

ராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது அமைதிப்படையின் நடவடிக்கைகள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். விடுதலைப்புலிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து லட்சரூபாய் அந்த தேர்தலில் நிதியாக கொடுத்தது யாருக்காவது தெரியுமா? படுகொலைக்கு சில வினாடிகள் முன்பாக சின்னசாந்தன் காங்கிரஸ் துண்டினை தோளில் போட்டுக்கொண்டு ராஜீவுக்கு கைகொடுத்ததாவது யாருக்காவது தெரியுமா? - விடுதலைப்புலிகளின் திட்டம் மிகத்துல்லியமானதும், யாராலும் சந்தேகிக்கப்பட முடியாததாகவும் இருந்திருக்கிறது. பத்மநாபா கொலைவழக்கின் போது நடந்த சம்பவங்களும் இன்ச்-பை-இன்ச் ஆக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏனோ இவ்வழக்கையும் சேர்த்து விசாரிக்க சி.பி.ஐ. அனுமதிக்கப்படவில்லை.

நூலின் பத்தொன்பதாவது அத்தியாயம் தற்கால தமிழக அரசியலில் அணுகுண்டை வீசவல்லது. வைகோவை குறித்த அத்தியாயம். வைகோ கள்ளப்படகில் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசியபோது எடுத்த வீடியோ காட்சிகள் குறித்து விரிவாக சொல்லப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் அந்த காட்சிகளை முழுமையாக பார்த்திருக்கிறார்கள். வைகோ அவரது தலைவர் கலைஞரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் பிரபாகரன் பேச்சை சாமர்த்தியமாக மாற்றியதைப் பற்றியெல்லாம் விஸ்தாரமாக எழுதுகிறார் ரகோத்தமன். தமிழகத்தில் அத்தனை அரசியல்வாதிகளுக்கு இடையே வைகோவை மட்டுமே பிரபாகரன் முழுமையாக நம்பியதாகவும் சொல்கிறார். இப்படி இருக்கையில் இப்படுகொலை குறித்து வைகோவுக்கு முன்கூட்டியே தெரியாமல் இருக்குமா? என்று கேள்வியும் எழுப்புகிறார்.

மே 21க்கு முன்பாக சிவராசன் தன் குழுவுக்கு கொடுங்கையூரில் கொடுத்த மாட்டுக்கறி விருந்துக்கு வெள்ளுடையில் வந்து சென்றவர் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் என்று புத்தகம் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது. இதற்குப் பிறகே ஸ்ரீபெரும்புதூரில் அதே தேதியில் நடக்கவிருந்த கலைஞரின் கூட்டம் ரத்தானதாகவும் தெரிவிக்கிறது. வெள்ளுடையில் வந்து சென்றவரும், சிவராசனும் “அடுத்த சி.எம். வைகோதான்!” என்று பேசிக்கொண்டதாக சின்னசாந்தன் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.

முன்னதாக இந்திய-இலங்கை உடன்பாட்டை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட பிரபாகரனை குறித்து, பொதுக்கூட்டம் ஒன்றில் 'Prabhakaran thought of committing suicide' என்று வைகோ பேசியதை முன்வைத்து, ராஜீவ் கொலைவழக்கில் வைகோ ஒரு சாட்சியாகவே சேர்க்கப்பட்டிருக்கிறார். 250வது சாட்சியான அவர் நீதிமன்றத்தில் வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் குரல் மட்டும் என்னுடையதல்ல என்று பல்டி அடித்திருக்கிறார். பின்னர் தடய அறிவியல் துறையினர் வீடியோவைப் பரிசோதித்து, குரல் வைகோவுடையதுதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதுபற்றியெல்லாம் மேம்போக்கான விசாரணையே நடந்தது என்று ரகோத்தமன் வருந்துகிறார். மரகதம் சந்திரசேகரை தவிர்த்து மீதி எல்லோருமே இன்றும் உயிருடன் இருப்பதால், அந்த விசாரணையை இப்போதும் மேற்கொள்ள முடியும் என்று ‘பகீர்’ தகவலையும் கொடுக்கிறார்.

இப்படியாக அதிரடியான தகவல்களுடனேயே சுவாரஸ்யமான க்ரைம் நாவலைப்போல நூல் எழுதப்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலைவழக்கு என்ற இந்த க்ரைம் நூலிலும் கூட உருக்கமான இரண்டு காதல் கதைகள் உண்டு. ஒன்று ராஜீவோடு மரணமடைந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் காதல். மற்றொன்று நளினி முருகன் மீது வைத்திருந்த தெய்வீக காதல்.

ராஜீவ் கொலைவழக்கின் மர்மங்கள் விலகுகிறதோ இல்லையோ, பல மர்ம மனிதர்களின் முகமூடி கிழிகிறது!

கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்!


நூலின் பெயர் : ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்

நூல் ஆசிரியர் : கே.ரகோத்தமன்

விலை : ரூ.100

பக்கங்கள் : 232

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

திற - திரையிடல்!

அஞ்ஞாநியின் அராஜகம்!

பொதுவாக நான் வெளியிடங்களுக்கோ, விழாக்களுக்கோ செல்ல விரும்புவதில்லை. காரணம், அங்கே நடக்கும் சில சம்பவங்கள் பல தினங்களுக்கு என் உறக்கத்தைக் கெடுத்து விடுவதாக இருக்கின்றன. உதாரணமாக, பொன். வாசுதேவனின் அகநாழிகை பத்திரிகை மற்றும் பதிப்பகத்தின் சார்பாக நான்கு புத்தகங்கள் கே.கே. நகரில் (இந்தப் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்; இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது) உள்ள ஒரு புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டன. அந்த நான்கு புத்தகங்களில் நர்சிம்மின் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று என்பதால் அதற்குச் சென்றிருந்தேன். அதில் என்னைப் பேசவும் சொன்னார்கள் என்பதால் பேசினேன்.

அப்போது நான் ஒரு தவறு செய்து விட்டேன். பொதுவாகவே நான் ஒவ்வொரு நாள் காலை எழுந்து கொள்ளும் போதும் ’ ஜெயமோகன், கமல்ஹாசன், மனுஷ்ய புத்திரன் ஆகிய மூவரைப் பற்றியும் இன்றைய தினம் எழுதக் கூடாது’ என்று நினைத்துக் கொள்வேன். அதேபோல் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஞாநியின் கருத்து எதையும் மறுத்து எழுதி விடக் கூடாது என்ற தீர்மானமும் நிரந்தரமாக எனக்கு உண்டு. காரணம், அவர் எதைச் சொன்னாலும் அதற்கு எதிரான கருத்தையே கொண்டிருப்பவனாக இருக்கிறேன் நான்.

சமீபத்திய உதாரணம், கடற்கரையில் யாரும் கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார். கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவது இளைஞர்களின் பிறப்பு உரிமை என்பது ஞாநியின் கருத்து. நானோ கடற்கரையில் வாக்கிங் செல்லும் போது அந்தக் கிரிக்கெட் பந்தால் பலமுறை அடி வாங்கியிருக்கிறேன். அதனால் இப்போதெல்லாம் காலை நேரத்தில் அந்தப் பக்கமே செல்வதில்லை. ஒருநாள் நானும் அவந்திகாவும் கடற்கரையில் அமர்ந்திருந்தபோது வாலிபால் பந்து ஒன்று அவந்திகாவின் முதுகில் பலமாக விழுந்து எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது. பார்த்தால் கொஞ்ச தூரத்தில் ஒரு இளைஞர் கூட்டம் வாலிபால் ஆடிக் கொண்டிருந்தது.

ஆனால் இப்படியெல்லாம் அடி வாங்கி சாகிறவர்கள் சாகட்டும்; இளைஞர்கள் கடற்கரையில் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது ஞாநியின் கட்சி.

இப்படியே ஞாநியின் ஒவ்வொரு கருத்தையும் மறுத்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு வாரம் குமுதம் வந்ததும் நான் ஞாநியின் ஓ பக்கங்களுக்கு பதிலாக ஔவ் பக்கங்கள் என்று எழுத வேண்டியிருக்கும் என்பதாலேயே ஞாநியின் பக்கமே திரும்பக் கூடாது என்று இருந்தேன். மேலும், என் பார்வையில் ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி. எப்படி ஒத்து வரும்?

அகநாழிகை கூட்டத்தில் ஆரம்பத்திலேயே எனக்கு ஞாநியின் தாலிபான் நடவடிக்கைகளால் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு நண்பர் எங்கள் எல்லோருக்கும் பூச்செண்டு கொடுத்தார். உடனே எழுந்த ஞாநி பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம் என்றெல்லாம் லெக்சர் அடித்து விட்டு, தனக்குக் கொடுக்கப்பட்ட பூச்செண்டை ஒரு பெண்மணியிடம் கொடுத்து ‘ இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பயன்படும்’ என்றார்.

( இதிலுள்ள நிலப்பிரபுத்துவ மனோபாவத்தை கவனியுங்கள். பூ என்றால் பெண்ணுக்குரியதாம்! அட, பொக்கேயைக் கொண்டு போய் தலையிலா வைப்பார்கள்?)

இதுதான் ஞாநியின் பிரச்சினை. தனக்குப் பூச்செண்டு பிடிக்காததால் அது எல்லோருக்கும் பிடிக்கக் கூடாது என்று நினைக்கிறார். அப்படிப் பிடித்தால் அவர்கள் முட்டாள்கள், மூடர்கள், அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள். என்ன ஒரு தர்க்கம் பாருங்கள்! ஞாநி கேட்டார், ’ பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே?’ என்று. 24 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன?

எனக்குப் பூச்செண்டுகள் பிடிக்கும். ஆனால் ஞாநிக்குப் பிடிக்காது என்பதால் யாரும் யாருக்கும் பூச்செண்டு கொடுக்கக் கூடாது. இதே சர்வாதிகார மனப்போக்கைத்தான் அவர் எப்போதுமே எல்லா விஷயத்திலுமே கடைப்பிடித்து வருகிறார்.

ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும். காந்தி வாழ்ந்த போது நான் பிறக்கவில்லை; அட்லீஸ்ட் ஞாநியையாவது பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்று தோன்றும். முதலில் ஞாநிக்கும் காந்திக்கும் உள்ள பட்டப் பெயர், புனைப்பெயர் ஒற்றுமையை கவனியுங்களேன். காந்திக்கு மகாத்மா, சங்கரனுக்கு ஞாநி. காந்திக்கு மக்கள் கொடுத்த பட்டம் மகாத்மா. சங்கரனுக்கு ஞாநி என்ற புனைப்பெயர் அவரே வைத்துக் கொண்டது.

பெயர் மட்டுமல்ல; இன்னும் பல பொருத்தங்களும் உள்ளன. காந்தி வெறும் லங்கோடும், இடையில் ஒரு துணியும் மட்டுமே அணிந்திருந்தார். ஞாநியும் அவ்வாறே எளிமையின் சிகரமாக விளங்குபவர். லுங்கிதான் கட்டுவார். அது மட்டுமல்ல. தான் லுங்கி கட்டிக் கொண்டு கமலா தியேட்டருக்குப் போனதை குமுதத்தில் எழுதி 50 லட்சம் வாசகர்களுக்கும் அந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஞாநி மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் நமது தேசிய உடையே லுங்கிதான் என்று சட்டம் போட்டாலும் போட்டிருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த எளிமை மேட்டரால் ஆகர்ஷிக்கப்பட்ட நானும் என்னால் முடிந்த ஒரு எளிமையைப் பின்பற்றி ஒருநாள் ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் சென்றேன். எனக்கும் குமுதத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த உடைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் எனக்கு நேர்ந்த விளைவுகள் பற்றி எழுதியிருக்கலாம்; ஞாநியின் லுங்கிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என் ஜட்டிக்குக் கிடைக்கவில்லை. விடுங்கள்.

இன்னும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஞாநி அஞ்சு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க மாட்டார். தன் வீட்டையும் யாராவது தலித்துக்கோ முஸ்லீமுக்கோ அல்லது இதுபோன்ற விளிம்பு நிலை மக்களுக்கோதான் விற்பார். இப்படி பல் துலக்குவதிலிருந்து லுங்கி கட்டுவது வரை நேர்மையை மட்டுமே கடைப்பிடிப்பார்.

இப்படிப்பட்ட மகாத்மாக்களும் ஞாநிகளும் எனக்கு அலர்ஜி என்பதாலேயே ஞாநி என்றால் கொஞ்சம் ஒதுங்கி விடும் வழக்கம் உள்ளவனாக இருந்தேன். அப்படி இருந்தும் கே.கே. நகரில் மாட்டிக் கொண்டேன். ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும்.

அவருக்குப் பிறகு பேச எழுந்த நான் சொன்னேன்: இந்த அரசியல்வாதிகளெல்லாம் தமக்குத் தாமே ஆளாளுக்கு அறிஞர், கலைஞர், புரட்சித் தலைவி என்று பட்டம் கொடுத்துக் கொள்வார்கள். அதை மக்களாகிய நாம் ஏற்றுக் கொண்டு, கூட்டம் வழியும் பஸ்ஸில் தொங்கியபடியே “’ கலைஞர் கருணாநிதி நகருக்கு ஒரு டிக்கட் குடுங்க’ என்று கேட்க வேண்டுமா? அரசியல்வாதிகள் நம்மீது ஏறி சவாரி செய்யும் போது மக்கள் இப்படித்தான் ‘ கலைஞர் கருணாநிதி நகர்’ என்ற பெயரை ‘ கே.கே. நகர்’ என்று சுருக்கிப் பழிவாங்குவார்கள்.

உடனே இதற்கு பதில் சொல்ல எழுந்த ஞாநி “ பெயரையெல்லாம் சுருக்கக் கூடாது. உதாரணமாக, சாரு நிவேதிதாவை சாநி என்று சுருக்கலாமா?” என்று கேட்டார். அவருடைய பதிலில் மொத்தம் ஆறு தடவை சாநி சாநி என்று குறிப்பிட்டு மகிழ்ந்தார் ஞாநி. என்ன ஒரு வக்கிரம் பாருங்கள்! நான் செய்தது ஒரு பகடி. அதற்கு பதில் குண்டாந்தடியை எடுத்து மண்டையில் ஒரு போடு. கேட்டால் ‘ அப்படிச் சொல்லலாமா?’ என்றுதானே கேட்டேன் என்பார். அப்படியானால் ஒருத்தன் இன்னொருத்தனைப் பார்த்து ’ உன்னை நான் ங்கோத்தா என்று சொல்லவில்லை’ என்றால் ஆயிற்றா?

இப்படி ஒருமுறை பட்டும் புத்தி வராமல் எஸ். ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஞாநி பேசுகிறார் என்று தெரிந்தும் அந்த விழாவுக்குச் சென்றேன். அப்போதுதான் ஞாநி அந்த அராஜகமான காரியத்தைச் செய்தார். தனக்கும் ராமகிருஷ்ணனுக்கும், தனக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், தான் உயிர்மை நடத்தும் ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிக் குறிப்பிட்டவர் தனக்கு மனுஷ்ய புத்திரனின் மேல் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லி அதற்கு ஒரு உதாரணம் கூறினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டாராம். (ஞாநியின் வார்த்தைகளிலேயே தருகிறேன்). அவருக்கு முன்னே அமர்ந்திருந்த 300 பேருமே ஏதோ ஒரு விதத்தில் உடல் ஊனமுற்றோர். அவர்கள் எல்லோருமே மாதம் 2000 ரூ. கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருப்பவர்கள். ’ லாட்டரி சீட்டு விற்று கூட பிழைத்துக் கொள்வோம்; அதற்கான ஒரு அடிப்படைப் பண உதவி தேவை’ என்பதே அவர்களுடைய வேண்டுகோளும் கோரிக்கையுமாக இருந்தது. நான் (ஞாநி) அவர்களிடம் சொன்னேன். நீங்களெல்லாம் மனுஷ்ய புத்திரனை ரோல் மாடலாகக் கொள்ள வேண்டும். அவர் கல்வி என்ற ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தார். இன்று தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்த பதிப்பாளராக இருக்கிறார். அதே போல் நீங்களும் கல்வியைக் கற்று முன்னேறுங்கள்.

என்று அந்த ஊனமுற்றவர்களிடம் மனுஷ்ய புத்திரனை உதாரணம் காட்டிச் சொன்னேன். அந்த அளவுக்கு நான் (ஞாநி) மனுஷ்ய புத்திரனை மதிக்கிறேன். அவர் மட்டும் கல்வியைத் தன் கையில் எடுக்காமல் இருந்திருந்தால் அவரும் லாட்டரிச் சீட்டு தானே விற்றுக் கொண்டு இருந்திருப்பார்?

ஞாநியின் வார்த்தைகளை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

சாரு நிவேதிதாவாகிய நான் சுரணையற்றுப் போய் விட்டேன். மானம் கெட்டுப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அருவருப்பான, ஆபாசமான, அயோக்கியத்தனமான வசையை ஒரு ஆள் மனுஷ்ய புத்திரனின் மீது வீசும் போது கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டேன். தமிழ்ச் சமூகத்தைப் போலவே நானும் மானம் கெட்டுப் போய் விட்டேன்.

அமெரிக்காவில் இருப்பவர்கள் தயவு செய்து சொல்லுங்கள். உங்கள் ஊரில் ஒரு கறுப்பின மனிதனை நீக்ரோ என்று அழைத்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்? அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் அடைக்க வேண்டும். ஏனென்றால் அவர் மனுஷ்ய புத்திரனின் தேக அடையாளத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டார். அது மட்டுமல்ல; கல்வி இல்லாவிட்டால் அவர் தெருவில் லாட்டரிச் சீட்டு விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று சொல்லி விட்டார். ஒரு தலித்தை அந்த சாதியைச் சொல்லித் திட்டும் ஒரு வார்த்தையால் குறிப்பிட்டால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் தள்ள வேண்டும்.

நான் கேட்கிறேன்; சொல் புதிது பத்திரிகையில் ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனைப் பற்றி எழுதிய வசைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? தமிழின் மிக முக்கியமான கவிஞனாகிய மனுஷ்ய புத்திரனின் ஒட்டு மொத்த அடையாளமே அவருடைய உடல்தானா? அவர் தன்னுடைய எழுத்துகள் வழியே உருவாக்கியவை எல்லாம் அவருடைய உடலை மீறிச் செல்லும் ஒரு முயற்சி மட்டும்தானா? அல்லது உடல் ரீதியான ஒரு தடையை, பிரச்சினையை ஒருவர் கல்வி கற்பதன் வழியாக கடந்து சென்றுவிடத்தான் முடியுமா?

உடல்ரீதியான பிரச்சினைகள் கொண்டவர்களின் துன்பங்கள் என்பது நம்முடைய நாட்டில் முழுக்க முழுக்க சமூகரீதியானவை. மொத்த அமைப்பும் அவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அரசுப் பணிகளில் அவர்களுக்கு ஒதுக்கபட்டுள்ள இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதுதான் உணமை. இதற்காக அவர்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். நம்முடைய வீடுகள், பொது இடங்கள், போக்குவரத்து அமைப்புகள் யாவும் அவர்களுக்கு எதிராக இருக்கின்றன. எல்லவற்றையும்விட மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றிய சமூக மனோபாவம். ஒரு தலித் இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய ஸ்தானத்தை அடைந்தாலுல் அவருடைய சாதிய இழிவிலிருந்து எப்படி விடுபட முடியவில்லையோ அதேபோல மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் எத்தகைய சாதனைகளைச் செய்தாலும் அவர் ஒரு குறைவுபட்ட மனிதராகத்தான் பார்க்கப்படுகிறார். அவர் பிற குறைவுபட்ட மனிதர்களுக்கு மட்டுமே ஒரு முன்னுதாரணம். இத்த்கைய பார்வை கொண்டவர்களுக்கு ஞாநி ஒரு சிறந்த உதாரணம். ஞாநி மனுஷ்ய புத்திரனிடம் காட்டும் மனோபாவம் என்பது அவரது சாதிய மனோபவத்தின் ஒரு நீட்சியே. அவர்களால் மனிதர்களை வேறு எப்படியும் பார்க்கவோ வகைப்படுத்தவோ முடியாது. வேண்டுமானால் யாராவது ஒரு பிராமணர் சங்க கூட்டத்தில் போய் ‘ சங்கரன்தான் நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்உதாரணம். உங்களுடைய சாதித் திமிரை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் ஒரு போலி ஜனநாயக, போலி முற்போக்கு முகமூடியையும் அணிந்துகொண்டு வெற்றிகரமாக உலா வரவேண்டுமானால் நீங்கள் ஞாநியை பின் பற்றுங்கள் ’ என்று உரையாற்றலாம்.

மனுஷ்ய புத்திரன் ஒரு முன்னுதாரமே அல்ல என்பதுதான் இதில் வேடிக்கை. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பை அவர் எழுதியபோது அவர் 5-ஆம் வகுப்பு ஸ்கூல் drop out . அவர் எம்.ஏ. ஜர்னலிசம் படித்தபோது அவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருந்தன. காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என்னய்யா சம்பந்தம் அவர் கல்விக்கும் இலக்கியத்துக்கும்? தனிபட்ட அவரது வாழ்வில் அவர் எவ்வளவோ பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் தனிப்பட்ட வாழ்விலோ சமூகரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ அடையக்கூடிய பிரச்சினைகள் பெரும்பாலானவற்றை அவர் சந்தித்ததே இல்லை என்பதை அவருடனான நேர்ப் பேச்சுகளில் அறிந்திருக்கிறேன்.. ஆனால் ஞாநியைப் பொறுத்தவரை மாற்றுத்திறன் கொண்ட அனைவரும் 2 ஆயிரம் ரூபாய்க்கு லாட்டரிச்சீட்டு விற்கும் ஒரு கும்பல். இப்படி மனிதர்களை கும்பலாகப் பார்க்கும் மனோபாவம் சாதித் திமிருக்கு மட்டுமே உண்டு. எம்.எஸ். உதயமூர்த்தி, அப்துல் கலாம் வகை மிடில் கிளாஸ் வாழ்க்கை முன்னேற்றப் புனைகதைகளை ஒரு இலக்கியக் கூட்டத்தில் ஞாநியைப் போன்ற ஒரு பாமரன் வந்து உளறினால் நாமும் அதை கேட்டுக் கொண்டிருக்கிறோம்

ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனை வெறுக்கிறார். ஞாநி மனுஷ்ய புத்திரனை வெறுக்கிறார். இன்னும் எனக்குத் தெரியாத பலர் இருக்கக் கூடும். அவர்கள் ஒரே ஆயுதத்தைத்தான் கையில் எடுக்கிறார்கள். அவரை உடல்ரீதியாகத் தாக்குவது. அவரது உடலின் வழியாகவே ஒரு கலைஞனாக அவர் அடைந்த சாதனைகளை மதிப்பிடுவதன் மூலம் அவருடைய இடத்தைக் கீழிறக்குவது. நான் மனுஷ்ய புத்திரனுக்காகப் பேசவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் உடல்தீயான அதிகாரம், மேல் நிலை நோக்கு, வன்முறை ஆகியவை குறித்தே நான் இங்கே விவாதிக்க விரும்புகிறேன்.

அடுத்து, ராமகிருஷ்ணனையும் விடவில்லை. ’ இவர் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி விட்டுப் புனைகதைகள் எழுத வேண்டும்’ என்ற புத்திமதியையே அரை மணி நேரம் மாற்றி மாற்றி வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னார் ஞாநி. ராமகிருஷ்ணன் தொடர்ந்து சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிக் கொண்டே இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாமம் நாவல். சென்ற ஆண்டு பதினெட்டாம் நூற்றாண்டின் மழை என்ற சிறுகதைத் தொகுப்பு. இந்த ஆண்டு 50 குறுங்கதைகள். இதெல்லாம் பற்றி எழுதுவுமே தெரிந்து கொள்ளாமல் ‘ நீங்கள் கட்டுரை எழுதாமல் கதை எழுதுங்கள்’ என்று என்ன புத்திமதி? கதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் வந்து ‘ நீ கதை எழுது’ என்று சொல்ல எவ்வளவு திமிரும், ஆணவமும், தடித்தனமும் இருக்க வேண்டும்? அதுவும் ஞாநியைப் போன்ற தோல்வியடைந்த, இலக்கிய வாசகர்களால் துரத்தியடிக்கப்பட்ட ஒரு அரைவேக்காட்டு எழுத்தாளன் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரைப் பார்த்து இந்தப் புத்திமதிகளை அள்ளிவிடுகிறார்.

ஒரு எழுத்தாளனிடம் இப்படி வந்து புத்திமதியும் அறிவுரையும் சொல்ல ஞாநிக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரே தகுதிதான். அவர் தன்னை உண்மையிலேயே ஞாநியாகவும், மற்றவர்களை அஞ்ஞாநிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் எல்லோருக்கும் எப்போதும் புத்திமதிகளையும், அறிவுரைகளையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை தமிழக முதல்வர் கருணாநிதியை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுரை வழங்கினார் ஞாநி. அதற்கு அவர் சொன்ன காரணம், கருணாநிதியின் வேட்டியில் மூத்திரக் கறை படிகிறது; அவருக்கு வயதாகி விட்டது.

அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்?

இப்போது ஞாநிக்கு என் வயதுதான். 55. ஆனால் மைக்கின் முன்னால் பேச முடியாமல் திணறிக் கொண்டே இருக்கிறார். பார்த்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது. 95 வயது கிழவர் பேசுவது போல் அப்படிக் கமறிக் கமறிப் பேசுகிறார். ஏன், இவர் ஓய்வு எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழலாமே? குமுதம் பத்தியிலும் வாராவாரம் கருணாநிதியைத் திட்டுவதே இவருக்குப் பிழைப்பாக இருக்கிறது. ஆக, வேறு எந்த சப்ஜெக்டும் இவருக்குக் கிடைப்பதில்லை. அப்படியானால் எழுதுவதையும் நிறுத்தி விட்டு ஞாநி ஓய்வெடுக்கப் போகலாமே?

எஸ்.ரா. விஷயம் இருக்கட்டும். மனுஷ்ய புத்திரனை இப்படி ஒரு இலக்கிய மேடையில் அவமானப்படுத்திய ஞாநியை என்ன செய்தால் தகும்? சொல்லுங்கள்...

(நன்றி : சாரு ஆன்லைன்)

10 டிசம்பர், 2009

மாரியாத்தா!

கே.டி.வியில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது.

ஹீரோவுக்கு பிளட் கேன்சர் என்று அறிந்த அவரது காதலி மற்றும் பெற்றோர் துடிதுடித்து ரியாக்ஷன் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹீரோவின் அப்பா : ஏம்மா. நம்ம அல்லிமுத்து இந்த நிலைமையிலே இருக்கறப்போ மாரியாத்தா கோயிலுக்கு போகணும்னு சொல்றியே?

ஹீரோவின் அம்மா : மருந்தால குணமாகாத என் மவனோட நோயை அந்த மாரியாத்தா குணப்படுத்திடுவாய்யா...

- மாரியாத்தா.. உனக்கு மட்டும் சக்தி இருந்தால் தமிழ் சினிமாவுலே இந்தமாதிரி வசனம் எழுதறவனுங்களை ஊமையா மாத்திடு... இந்தமாதிரி படம் எடுக்கற டைரக்டருங்க கண்ணுலே கொள்ளி வெச்சிடு...

8 டிசம்பர், 2009

விஜயகாந்த்!


சில கதாநாயகர்களின் திரைப்படங்களை பார்க்கும் போது, பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன் படம் துவங்கும், பரவாயில்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் சண்டைக்காட்சி முடிந்தது அந்த கதாநாயகன் தூங்கிக்கொண்டிருப்பார் அவர் கணவில் நடந்த சண்டைக்காட்சியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். படத்திற்கும் அந்த சண்டைக்காட்சிக்கும் சம்பந்தம் இருக்காது. ஒரு பரபரப்பை உண்டுபன்னுவதற்காக அந்த காட்சியை சேர்த்திருப்பார்கள். சினிமா நடிகர் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதாலோ என்னவோ இந்த புத்தகம் எழுதியதிலும் அந்த முறை கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அத்தியாயத்தையே சினிமா மாதிரியான மிகைப்படுத்தலுக்காக ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார்.

விஜயகாந்தின் புத்தகம் வீட்டிற்கு வந்ததும், வீட்டில் உள்ளவர்கள் கேட்ட கேள்வி “விஜயகாந்திற்கு புத்தகமா, புத்தகம் போடும் அளவுக்கு விஜயகாந்த் வந்துவிட்டாரா???” புத்தக விசயத்தில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்தைப்பற்றி பல ஆச்சரியமான கேள்விகள் எழுவதுண்டு. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிதர்சனமான உண்மை விஜயகாந்தின் வளர்ச்சி.

விஜயகாந்தின் முந்தைய வாழ்க்கை முறைகளை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அவருடைய தற்போதைய விபரங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது அதிகமான விசயங்கள் அவர்கள் அறிந்ததாகவே இருக்கும். ஏனெனில் அவையாகும் சமீபகாலத்தில் நடந்தவைகள்.

சிறு வயதில் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்த விஜயகாந்த் பக்கம் பக்கமாக வசனம் பேச முடிகிறதென்றால், அதற்கான சூழ்நிலையும், பேச வேண்டிய அவசியமுள்ள தொழில் அவருக்கு அமைந்ததும் காரணமாக சொல்ல முடியும். இதை படிக்கும் போது வளர்ச்சியை விரும்பும் மக்கள் தங்களிடம் உள்ள குறைகளை நிறைகளாக மாற்றிக்கொள்ள அதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆங்கிலம் பேச விரும்புபவர்கள், ஆங்கலம் பேசும் மக்களிடம் பழக வேண்டும் என்பார்கள். ஆங்கிலம் பேச வாய்ப்பு இல்லாத நிலையில் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஆங்கிலம் பேசுவது சிரமமாகத்தான் இருக்கும் என்பார்கள். இந்த கூற்று உண்மைதான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

புத்தகத்தை படித்துக்கொண்டு வரும்போது சில இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விசயங்கள் உண்டு. அதில் முக்கியமானவை விஜயகாந்தின் ஆரம்ப கால காதல். ஜன்னலோரம் எட்டிப்பார்ப்பது, கண்களால் பேசிக்கொள்வது, காதலின் கட்டளைக்கு ஏற்ப மாற்றமடைவது என சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல படங்களை ஓட்டியிருக்கிறார் விஜயகாந்த். அந்த படமும் தோல்வியில் முடிந்திருக்கிறது. அதற்குப்பிறகும் இரண்டு காதல் படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஆனால் அவற்றின் விபரங்கள் இல்லையாம். நம்மை அறியாமலேயே நாம் சிரிக்கும் பக்கங்கள் இவை.

நம்ம ஊருக்கு தொடர்பில்லாத நபர்களின் வாழ்க்கை முறை பற்றி படிக்கும் போது, அவர்களின் சிறு வயது வாழ்க்கை முறை நமக்கு தொடர்பில்லாததாக இருக்கும். மற்றொருவரின் வாழ்க்கையை படிக்கிறோம் என்ற உணர்வுதான் இருக்கும். ஆனால் விஜயகாந்த் நம்மைப்போன்ற சராசரி மனிதர் என்பதால் அவருடைய சிறு வயது வாழ்க்கையை படிக்கும்போது அட! இவரும் நம்மைப்போன்ற ஆள்தானா! என்ற ஆச்சரிய்ம் ஏற்படுகிறது. கில்லி விளையாடுவது, பள்ளிக்கூடம் செல்லாமல் கோலி விளையாடுவது, காத்தாடி விடுவது, பல்பம் மிட்டாயை சிகரெட் பிடிப்பது போல வாயில் வைத்துக்கொண்டு விளையாடுவது என அத்தனையும் சராசரி வாசகர்களின் சிறுவயதில் நிகழ்திருப்பதால் இவற்றை படிக்கும் போது அவர்களின் முகத்தில் மெல்லிய புன்னைகை பூப்பது நிச்சயம்.

சினிமாவில் கூட நடக்காத ஒரு அதிசயம் விஜயகாந்த் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. அது அவருக்கு கிடைத்த இரண்டாவது அம்மாவும் அன்பானவராக அமைந்தது. இரண்டாவதாக வந்த அம்மாவின் குணம் சற்று எதிர்மறையானதாக அமைந்திருந்தால் விஜயகாந்தின் வாழ்க்கையில் திரைக்கதை வேறு விதமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அவரும் பெற்ற தாயைப்போல அன்பு செலுத்தியிருக்கிறார். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு இது கூட ஒரு முக்கியமாக காரணம் என்று சொல்லலாம்.

நம்மை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு விசயம் விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் நட்பு, கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பேட்டியில் இதோ இவன் என் நன்பன் எங்களுக்குள் எந்தவித மதரீதியான பாகுபாடும் கிடையாது என சொல்லியிருந்தார். சரி சினிமா ரீதியான நட்பு என நினைத்திருந்தேன் ஆனால் படிக்கிற காலத்தில் இருந்து, சினிமா துறைக்கு வந்து கஷ்டப்படும்போது ஒன்றாக கஷ்டப்பட்டு, இன்று வரை நன்பர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெரிய விசயம்தான்.

ஒரு சினிமா நடிகன் அரசியலுக்கு வந்துவிட்டார் என்ற விமர்சனத்தின் மூலம் விஜயகாந்தின் அரசியில் வாழ்க்கை நேற்று ஆரம்பித்தது போன்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அவரது சிறுவயதிலிருந்தே அவருக்கு அரசியில் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய அப்பா மூலமாக, அரசியல் சிந்தனைகளும், மக்கள் தொடர்பு சிந்தனைகளும் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது என்பது தெரிகிறது.

விஜயகாந்திடம் பிடித்தமான விசயம் அவருடைய துணிவு மற்றும் தீர்க்கமான முடிவுகள். நான் வருவேன், வரமாட்டேன், வெளியில் இருப்பே, ஓரமா இருப்பேன் இந்த மாதிரி பேச்சு எங்கிட்ட கிடையாது ”நான் கண்டிப்பாக வருவேன்” என்று ஒரு படத்தில் தான் அரசியலுக்கு வருவது பற்றி வசனம் பேசுவார், அப்படித்தான் அவருடைய செயல்பாடுகள் இதுவரை இருந்துள்ளன. ஒவ்வொரு முறை அவருக்கு கிடைக்கும் வாக்கு எண்ணிக்கைகள் அதிகரிக்கும்போது மற்ற கட்சிகளால் இதனால் தான் அவருக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது, அதனால்தான் வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது என ஒவ்வொரு காரணம் கூறப்படுகிறது. அவர் வளர்ச்சிப்பாதையில் இருக்கிறார் என்ற நிதர்சனமான உண்மையை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை..

விஜயகாந்தை பற்றிய இந்த புத்தகம் கூட விஜயகாந்த் படம் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. சண்டைக்காட்சிகள், சில காதல் காட்சிகள், ஆவேசமான போரட்டங்கள், அரசியல் கலம் என ஒரு விஜயகாந்த் படத்தை நம் கண்முன் நிருத்துகிறார். புத்தக்த்தில் அவ்வப்போது வரும் சண்டைக்காட்சிகளை ஆசிரியர். சினிமாவில் வரும் சண்டை போலவே விவரித்துள்ளார். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த (URL) முகவரிக்கு செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-118-1.html

(நன்றி : http://bookreview-sai.blogspot.com/2009/11/blog-post.html)

7 டிசம்பர், 2009

நானும் ரவுடிதான்!


சாட்டிங் தொடங்கி பேங்க்கிங் வரை சர்வமும் இப்போது இணையங்களில்தான் நடத்தப்படுகின்றன. அல்லது செல்பேசிகளில். திருட்டுகள் அதிகம் நடைபெறுவதும் இங்கேதான். மொபைல் ஃபோனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது தொடங்கி இணையத்தள வங்கிக் கணக்கை ஹைஜாக் செய்வது முதல் பல்வேறு மோசடிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. விதவிதமாக தூண்டில் போட்டு வகையாக மாட்டவைத்து, முடிந்தவரை அபகரித்துவிடுவார்கள்.

எத்தனை திறமையாக, எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், எங்காவது, எப்படியாவது சறுக்கல் ஏற்பட்டுவிடுகிறது. காஸ்ட்ரோவின் மகன் முதல் கடைக்கோடியில் உள்ள சாமானியன் வரை அனைவரும் சைபர் க்ரைமுக்கு இரையாகிவிடுகிறார்கள்.

எனில், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாதா? முடியும். தூண்டிலில் இருந்து தப்ப வேண்டுமானால், வெறும் எச்சரிக்கை உணர்வு மட்டும் போதாது. எது தூண்டில் என்பதையும் தூண்டிலை வீசுபவர்கள் எப்படியெல்லாம் இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மீள்வதற்கான வழிகளையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த விறுவிறுப்பான தொடர்,இப்போது நூல் வடிவில்.

நூலை இணையத்தில் வாங்க...

5 டிசம்பர், 2009

நீ காண விரும்பும் மாற்றமாய் நீயே மாறிவிடு!


எல்லா இந்திய மாணவர்களையும் போலவே பதினாறு வயது பாபர் அலிக்கும் ஒவ்வொரு நாளும் விடிகிறது. அதிகாலை முழிப்பு. பின்னர் கொஞ்சம் படிப்பு. வீட்டு வேலைகளில் கூடமாட ஒத்தாசை. வெள்ளை சட்டை, நீலநிற பேண்ட் அவருடைய பள்ளி சீருடை. இஸ்திரி செய்து அணிந்துவிட்டு, அவசர அவசரமாக காலை உணவைக் கொறித்துவிட்டு, ரிக்‌ஷாவுக்கு காத்திருக்கிறார்.

ராஜ்கோவிந்தா பள்ளி. மேற்கு வங்கத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்று. பாபர் அலி வசிக்கும் பகுதியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம். எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரிக்‌ஷா பயணம். கடைசி இரண்டு கிலோ மீட்டர்கள் நடந்தாக வேண்டும். நூற்றுக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் பாபர் அலியோடு படிக்கிறார்கள்.

பெரிய பள்ளி என்பதால் மாணவர்களுக்கு எல்லா வசதிகளும் உண்டு. மேஜை, நாற்காலி, பெரிய கரும்பலகை, அபாரமாக பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள். தரமான கல்வி பாபர் அலிக்கு கிடைக்கிறது. அவரது பரம்பரையிலேயே முறையான கல்வி பெறும் முதல் நபர் இவர்தான். பள்ளியிலேயே நன்றாக படிக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களில் ஒருவர் பாபர் அலி.

“தனக்கு கிடைக்கும் தரமான கல்வி தான் வாழும் பகுதி குழந்தைகளுக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” பாபர் அலியின் நீண்டநாள் ஏக்கம் இது.

ராஜ்கோவிந்தா பள்ளி, அரசுப்பள்ளி என்பதால் கல்விக்கட்டணம் இல்லை. சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ரிக்‌ஷாவுக்கு மட்டும் அவர் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதற்காக வருடத்துக்கு 1,800 ரூபாய் மட்டுமே செலவு. மிகக்குறைந்த இந்த தொகையைக் கூட செலுத்த முடியாமல் கல்வி வாசனையே அறியாத ஆயிரக்கணக்கானோர் வாழும் பகுதி பாபர் அலியின் முர்ஸிதாபாத் பகுதி.

பதினான்கு வயதான சும்கி ஹஜ்ரா பள்ளிக்கே சென்றதில்லை. தனது பாட்டியோடு ஒரு குடிசையில் வசித்து வருகிறாள். அக்கம் பக்கம் வீடுகளில் பாத்திரம் தேய்த்து தன் உணவுக்கான, உடைக்கான வருமானத்தை சம்பாதிக்கிறாள். இவளது மாத வருமானம் ரூபாய் இருநூறு. பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய ஐந்தாவது வயதில் வீட்டு வேலை பார்க்க செல்கிறாள். சும்கியின் அப்பா உடல் ஊனமுற்றவர் என்பதால் பணிக்கு செல்லமுடியாது. “நான் வேலைக்கு போவதால் ஒருவேளை உணவாவது கிடைக்கிறது. இல்லாவிட்டால் இதுவும் கிடையாது” என்கிறாள் சும்கி.

சும்கியைப் போன்றே நூற்றுக் கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் அப்பகுதியில் வசிக்கிறார்கள். ஆண் குழந்தைகள் கூலி வேலைக்கு செல்கிறார்கள். பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்கு செல்கிறார்கள். நல்ல வேளையாக இன்று இவர்கள் அனைவருமே கல்வி கற்கிறார்கள். பாபர் அலிக்கு நன்றி!

சரியாக நான்கு மணிக்கு பாபர் அலி வீட்டில் மணி அடிக்கிறது, பள்ளி அழைப்பு மணியைப் போன்றே. சும்கி போன்ற நூற்றுக்கணக்கானோர் அவசர அவசரமாக நோட்டுப் புத்தகங்களோடு ஓடி வருகிறார்கள். பள்ளியில் மைதானத்தில் அணிவகுப்பதைப் போல வரிசையாக நிற்கிறார்கள். தேசியகீதம் பாடுகிறார்கள். பின்னர் வகுப்புகள் தொடங்குகிறது.

காலையில் மாணவனாக இருந்த பாபர் அலி இப்போது ஆசிரியராக மாறிவிடுகிறார். பள்ளியில் தான் கற்றதை இங்கே சொல்லிக் கொடுக்கிறார். ஒன்பது வயதில் விளையாட்டாக தன் வயதையொத்த மாணவர்களுக்கு டீச்சர் விளையாட்டில் பாடம் சொல்லிக் கொடுத்த அனுபவம் பாபருக்கு இங்கேயும் கைகொடுக்கிறது.

நம்புங்கள் சார். இப்போது பாபர் அலியின் இந்த பிற்பகல் பள்ளியில் 800 மாணவர்கள் படிக்கிறார்கள். இவரது பள்ளி நண்பர்கள் பத்து பேர் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். முறையான கட்டமைப்பு இல்லாத இந்தப் பள்ளிக்கு பதினாறு வயதான பாபர் அலிதான் தலைமை ஆசிரியர். எழுத்தறிவு இப்பகுதியில் உயர்ந்து வருவதால், உள்ளாட்சி அமைப்புகள் இந்தப் பள்ளியை அங்கீகரித்திருக்கிறது.

ஏராளமான தன்னார்வ தொண்டு அமைப்புகள் இந்த பிற்பகல் பள்ளிக்கு இப்போது நன்கொடைகள் தர முன்வந்திருக்கிறார்கள். எனவே புத்தகங்கள், உணவு என்று மாணவர்களுக்கு நிறைய விஷயங்களை இலவசமாக தரமுடிகிறது.

சும்கி ஹஜ்ராவுக்கு இப்பொழுது எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கிறது. இந்த பிற்பகல் பள்ளி வகுப்பு ஏழு மணிக்கு முடியும். அதன் பிறகும் அவள் பாத்திரங்கள் தேய்க்க, தான் பணியாற்றும் வீடுகளுக்கு செல்லவேண்டும். “என் கனவு ஒரு நர்ஸாக வரவேண்டுமென்பது. அது நனவாகும் என்ற நம்பிக்கை இந்தப் பள்ளியால் ஏற்பட்டிருக்கிறது!” என்கிறாள்.

“பாடம் சொல்லிக் கொடுக்கும் விளையாட்டுதான் முதலில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஒருக் கட்டத்தில் இது விளையாட்டல்ல என்பது எனக்குப் புரிந்தது. ஏனெனில் என் வயதையொத்த எல்லோருக்குமே எழுதப் படிக்க கற்கவேண்டும் என்ற பசி இருப்பதை அறிந்துகொண்டேன். இந்தப் பள்ளி இல்லாவிட்டால் இப்பகுதியில் நிறைய பேர் எழுத்தறிவற்றவர்கள் ஆகிவிடுவார்கள். பள்ளி எனக்கு சொல்லிக் கொடுப்பதை, நான் இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்!” என்று தன்னடக்கத்தோடு பேசுகிறார் பாபர் அலி.

முர்ஸிதாபாத்துக்கு ஒரு பாபர் அலி இருக்கிறார். நம் ஊர்களில் யார் யார்?

(நன்றி : புதிய தலைமுறை)

4 டிசம்பர், 2009

‘அட் ஃபைவ் இன் தி ஆஃடர்நூன்’

இந்த வாரம் நிச்சயம்!
மழையை செய்வோம் அலட்சியம்!!



ஈரானிய இயக்குனர் சமீரா மக்மல்பாஃப் (ஸ்பெல்லிங் : Samira Makhmalbaf) -ஆல் 2003ஆம் ஆண்டு இயக்கப்பட்ட படம் ‘அட் ஃபைவ் இன் தி ஆஃடர்நூன்’. தாலிபான்கள் ஆப்கனில் வீழ்ந்தப்பிறகு கல்வி கற்க நினைக்கும் ஒரு இளம்பெண்ணைப் பற்றிய விறுவிறுப்பான கதை.

ஆப்கன் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு காபூலில் முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டது இப்படம்தான். பிரெஞ்சு - ஈரானிய கூட்டுத்தயாரிப்பு இது.

கிழக்கு டூரிங் டாக்கீஸில் பதிவர்களுக்கான உலகப்பட வரிசையில் வரும் ஞாயிறு, 06-12-2009 மாலை ஐந்தரை மணிக்கு திரையிடப்படும் படமும் இதுவே. முதன்முதலாக இங்கே ஒரு பெண் இயக்குனரின் திரைப்படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை.

உரையாடல் அமைப்பு சார்பாக மாதத்தின் முதல் ஞாயிறு நடக்கும் இந்த உலகப்படக்காட்சி இம்முறை முதல் வாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் நடத்தப்பட முடியவில்லை. இரண்டாவது வாரம் வருணபகவான் கருணை காட்டியதால் ஒத்திவைக்கப்பட்டு மூன்றாவது வாரம் திட்டமிடப்பட்டது. எதிர்பாராவிதமாக பதிவர் ஒருவரின் இல்லத்தில் நிகழ்ந்த துயரநிகழ்ச்சியால் நவம்பர் மாத உலகப்பட திரையிடல் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட முடியவில்லை.

எனவே டிசம்பர் முதல்வாரமான இந்த ஞாயிறு அடாது மழையடித்தாலும் விடாது காட்சிப்படுத்துவோம் என்று பத்ரியும், பைத்தியக்காரனும் உறுதியாக இருக்கிறார்கள். இனி வழக்கம்போல மாதத்தின் முதல் ஞாயிறே படம் திரையிடப்படும்.

பதிவர்கள் அனைவரும் சுற்றமும், நட்பும் புடைசூழ வந்திருந்து ரசிக்கலாம். பதிவர் அல்லாதவர்களும் வந்து படம் பார்க்க வரவேற்கப்படுகிறார்கள்.

3 டிசம்பர், 2009

பார்வை மட்டும் போதுமா?


சுமார் முன்னூறு மாணவ, மாணவிகள் இறுக்கமாக அந்த அறையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அனைவருமே இன்ஜினியரிங் முதலாமாண்டுக்கு சமீபத்தில் சேர்ந்தவர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்பதால் இதுபோன்ற கூட்டத்தில் எப்படி நடந்துகொள்வது, எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்ற குழப்பம் அவர்களது முகத்தில் பளிச்சிடுகிறது. முயல்களைப் போல மருண்டவிழிகளோடு, பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாக கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவர் வருகிறார். அனைவரும் அவசர அவசரமாக, சலசலத்துக் கொண்டே எழுகிறார்கள். “வணக்கம் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்....”, “குட்மார்னிங் சார்ர்ர்ர்...” – அப்பட்டமான பள்ளிவாசனை.

வந்தவரோ, “என்னை சார்னு கூப்பிடக்கூடாது. உங்களை விட ரெண்டு வயசு சின்னப்பய நானு. இளங்கோன்னே கூப்பிடுங்க” என்று சின்னதாக ஜோக்கடித்து, சூழலை ரிலாக்ஸ் ஆக்குகிறார். அடுத்தடுத்து இளங்கோவன் பேசப்பேச மகுடிக்கு கட்டுப்படும் நாகங்களாகிறார்கள் மாணவர்கள். சில நேரங்களில் கூரையதிர கைத்தட்டுகிறார்கள். சில நேரங்களில் ‘ஹோ’வென்று ஆனந்தக் கூச்சல். திடீரென உருகுகிறார்கள். ஆவேசத்தோடு பேசுகிறார்கள். பணிவாக தங்களது சந்தேகங்களுக்கு விடைகளை கேட்டுப் பெறுகிறார்கள். நவரசங்களையும் இப்போது காணமுடிகிறது அவர்களது முகங்களில்.

அந்த இடம், பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம். சாஸ்தா இன்ஜினியரிங் கல்லூரி. கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ததின் பேரில் முதலாமாண்டு மாணவர்களோடு பேச வந்திருப்பவர் ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பெருக இதுபோன்ற நெம்புகோல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது இப்போது கல்லூரிகளில் ஃபேஷன். சுமார் ஒன்றரை மணி நேர அமர்விற்குப் பிறகு ‘காம்ப்ளான் பாய்/கேர்ள்’ போல துள்ளிக்கொண்டு வகுப்பறைக்கு ஓடுகிறார்கள் மாணவ மணிகள்.

‘ப்ரின்ஸ் ஜீவல்லரி, பனகல் பார்க், சென்னை’ என்ற வசீகரமான குரலை டிவியிலோ, ரேடியோவிலோ விளம்பரங்களில் கட்டாயம் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த குரலுக்கு சொந்தக்காரர்தான் இந்த இளங்கோ. இதுபோல நூற்றுக்கணக்கான விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ‘அடையார் ஆனந்தபவன்’ என்ற கம்பீரக்குரலும் இவருடையதுதான். ‘ரேமண்ட்ஸ் – தி கம்ப்ளீட் மேன்!’ – அமெரிக்க குரல் அல்ல. நம் இந்திய இளங்கோவுடையது.

இவர் ஒரு சகலகலா வல்லவர். விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட். தொழில்முறை பாடகர். சாஸ்திரிய சங்கீதத்தில் பாண்டித்யம் உண்டு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆயிரம் பாடல்களுக்கு எந்த நோட்ஸும் இல்லாமல் பாடுகிறார். சங்கீதம் கற்றிருக்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார். மிமிக்ரி செய்கிறார். ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார். கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சுயமுன்னேற்ற உரைகள் நிகழ்த்துகிறார். வளர்ந்து வரும் ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இருநூறு பயிற்சியாளர்கள் இவரிடம் பணிபுரிகிறார்கள். ஒரு வருடத்துக்கு குறைந்தது பதினைந்தாயிரம் மாணவர்களை சந்தித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த இளங்கோவுக்கு கல்வி ஒன்றும் சுலபமானதாக இல்லை. கடும் சிரமங்களுக்கு இடையில் பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்றி எண்பத்தி இரண்டு மதிப்பெண்கள் வாங்கினார். சென்னை மாவட்டத்திலேயே அப்போது முதலிடம். +2வில் அக்கவுண்டன்ஸியில் செண்டம். பின்னர் லயோலாவில் ஆங்கிலம் இளங்கலை. பல்கலைக்கழகத்தில் தங்க மெடல் வாங்கினார். முதுகலையில் ஒலியியல் (Phoenetics) குறித்துப் படித்தார். தமிழ்நாடளவில் தங்க மெடல். 1994ல் கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம் விருதளித்துப் பாராட்டியது. ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்ற அரிதான தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு எம்.ஃபில். முடித்தார்.

பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவார். சில கால ஆசிரியப் பணிக்குப் பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பணி... இப்போது, ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கும் பணி...

இவ்வளவு அனுபவங்களும் முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே இளங்கோவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ‘நல்ல கல்வி கற்ற யார் வேண்டுமானாலும் இதையெல்லாம் செய்யமுடியுமே?’ என்ற கேள்வியை நீங்கள் கேட்க வருவது புரிகிறது. கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டோமே! இளங்கோவுக்கு பிறவியிலேயே பார்வை இல்லை.

“அதிர்ஷ்டவசமாக எனக்கு பிறவியிலேயே பார்வை இல்லை என்று சொல்லுங்கள்!” என்று திருத்துகிறார் இளங்கோ. பத்தாவது வகுப்பு வரை மட்டுமே பார்வையற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் படித்தவர், மற்ற அனைத்து வெற்றிகளையும், நார்மலானவர்களுடனேயே போட்டியிட்டு வென்றிருக்கிறார். இப்போது யோசித்துப் பாருங்கள். பார்வை சவால் கொண்ட ஒருவர் +2வில் பார்வை அத்தியாவசியப்படும் பாடமான அக்கவுண்டன்ஸியில் நூற்றுக்கு நூறு வாங்குவது சாதனைதானே? அதுவும் பார்வையுள்ள மாணவர்களோடு படித்து...

பார்வை சவால் கொண்ட ஒருவர் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிவது, அனேகமாக உலகிலேயே இளங்கோ ஒருவராக மட்டுமே இருக்கமுடியும். இந்த நிமிடம் வரை வேறு யாரும் இந்தப் போட்டியில் இல்லை. இவ்வகையில் இளங்கோவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

“English is the secret of my Energy” என்று கபில்தேவ் பாணியில் கமெண்ட் அடிக்கிறார் இளங்கோ. அம்மொழியின் மீது கொண்ட காதலே அத்துறையில் இவரை சாதனையாளராக உருவாக்கியிருக்கிறது. பிரிட்டிஷ் பாணி, அமெரிக்க பாணி என்று ஆங்கில சரஸ்வதி அநாயசமாக இவரது நாவில் விளையாடுகிறாள். ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவர் என்றாலும் தமிழ் மீது அசாத்தியப் பற்று கொண்டவராக இருக்கிறார். முதல்வர் கலைஞரின் மேடைப்பேச்சுக்கள் இவருக்கு மனப்பாடம். நடிகர் திலகம் சிவாஜியின் படங்களை, அவரது தமிழ் உச்சரிப்புக்காகவே திரும்ப திரும்ப பார்க்கிறார்/கேட்கிறார். இன்னொரு ஆச்சரியமான விஷயம். இளங்கோ தமிழ் மீடியத்தில் தனது பள்ளிக்கல்வியை கற்றவர். தந்தை பெரியாரின் சமூகக் கருத்துக்கள் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்.

உன்னிப்பான அவதானிப்புதான் இளங்கோவின் மிகப்பெரும் பலம். பொதுவாக பார்வையற்றவர்களின் பலவீனமாக உடல்மொழியை சொல்லலாம். தலையை மறுப்பாக ஆட்டுவது, ஆமோதிப்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்களை இயல்பாக செய்கிறார். இவரோடு முதன்முறையாக பேசுபவர்களுக்கு இவர் பார்வை சவால் கொண்டவர் என்பது தெரியவே தெரியாது.

“பார்வையற்றவர்களுக்கு செவித்திறன் அதிகமாக இருக்கும் என்றொரு கருத்து நிலவுகிறது. அப்படியெல்லாம் இல்லை. கட்டாயத்தின் பேரிலேயே இத்திறன் கூடுதலாக வாய்த்தவர்களாக அவர்கள் உருவெடுக்கிறார்கள். ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டிக்கு சின்ன சின்ன ஒலிகளின் வேறுபாடுகளை அறியும் திறன் உண்டு. ஒரு குண்டூசி தரையில் விழும் சத்தத்தையும், சேஃப்டி ஃபின் தரையில் விழும் சத்தத்தையும் நீங்கள் ஒன்றாகவே உணர்வீர்கள். ரசூல் பூக்குட்டிக்கு இரண்டு சத்தங்களுக்கும் வேறுபாடு தெரியும்! தொழில்நிமித்தமாக அவர் இத்திறனை வளர்த்துக் கொண்டார். எனக்கு பார்வை இல்லை என்ற நிலை இருப்பதால் என் செவியை என் தொழிலுக்கான மூலதனக் கருவியாக்கிக் கொண்டேன். எனக்கு ரோல்மாடல் நான்தான். நான் இன்னொருவரை விட சிறந்தவன். இன்னொருவரை அறிவால் வென்றேன், உடல்பலத்தால் வென்றேன் என்பது வெற்றியல்ல, என்னைப்போல இன்னொருவர் உலகிலேயே இல்லை (Unique) என்பதுதான் நிஜமான வெற்றி!” என்று தன் வெற்றி ரகசியத்தை தன்னடக்கமாக சொல்கிறார்.

இளைஞர்களுக்கு இவர் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அது ‘தன்னம்பிக்கை’.

“தன்னம்பிக்கை என்பது அவரவரிடமிருந்தே இயல்பாக எழவேண்டும். என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டும்தான் முடியும் என்பது அதீத தன்னம்பிக்கை. அதீத தன்னம்பிக்கை ஆபத்துக்கு உதவாது!” – நம்மிடம் பேசிக்கொண்டிருந்த இளங்கோ, சட்டென்று திரும்பி மாணவர்களுக்கு பஞ்ச் டயலாக்கோடு வகுப்பினை தொடர, நாமும் கொஞ்சம் தன்னம்பிக்கை குளூகோஸ் ஏற்றிக்கொண்டு தெம்புடன் விடைபெற்றோம்.



சவால் விடும் உடல்மொழி!

பார்வை சவால் கொண்டவராக இருந்தாலும், இளங்கோ கம்ப்யூட்டரையும், மொபைல் போனையும் கையாளும் வேகம் அதிரடியானது. அவரது அலுவலகப் பணிகளை யாருடைய உதவியையும் எதிர்பாராமல் அவரே முடித்துவிடுகிறார்.

“என் அளவுக்கு வேகமா யாராவது எஸ்.எம்.எஸ். டைப் பண்ண முடியுமா?” என்று சவால் விடுகிறார். கம்ப்யூட்டர் கீபோர்டுகளிலும் இவரது விரல் சுனாமியாய் சுழல்கிறது. பார்க்காமலேயே கம்ப்யூட்டரையும், மொபைல் போனையும் கையாள சிறப்பு மென்பொருள்களை (Special Softwares) பயன்படுத்துகிறார். இந்த மென்பொருள்கள் கொஞ்சம் விலை அதிகமானது என்றாலும், துல்லியமாக உதவுகிறது. எழுத்துக்களை ஒலிகளாக்கி இளங்கோவுக்கு உதவுகிறது.


சங்கடம் : “என்னால் சங்கீதத்தில் தேறவே முடியாது என்று என்னுடைய சங்கீத ஆசிரியர் ஒருவர் சவால் விட்ட தருணம்”

சவால் : சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறவர்களுக்கு அவரவர் குடும்ப வாழ்க்கை சவாலானதாக இருக்கக்கூடும். சமூகத்தில் நல்லபெயர் எடுக்க முடிபவர்களால், குடும்பத்திலும் நல்ல பெயர் எடுக்கமுடியும் என்று உறுதியாக சொல்லமுடியாது. (திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கும் இளங்கோ, தன் தாயின் வற்புறுத்தலை பூடகமாக சொல்கிறார்)

மகிழ்ச்சி : ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவியேற்ற நொடி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல வருமானத்துக்கும் ஒரு தொழில், சமூகத்துக்கும் கண்ணுக்கு தெரியாத சேவை.

(நன்றி : புதிய தலைமுறை)

உங்களில் யார் அடுத்த சீத்தலைச் சாத்தனார்?


போட்டோ கர்ட்டஸி : வரைந்த முகம் தெரியாத நண்பர்.

சீத்தலைச் சாத்தனாரைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் எனக்கே தெரிந்திருக்கிறது.

இவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவராம். அச்சாணியை கையில் எடுத்தால், ஓலைச்சுவடியில் மடக்கி மடக்கி கவிதைகளாக எழுதித் தள்ளுவாராம். ஏதாவது வார்த்தை சிக்காவிட்டால் கையில் இருக்கும் அச்சாணியாலேயே கடுப்பில் தலையில் குத்திக் கொள்வாராம். இதனால் அவரது தலைமுழுக்க காயம் ஏற்பட்டு, இன்பெக்‌ஷன் ஆகி சீழ் வழியுமாம். எனவேதான் அவரது பெயர் சீத்தலைச் சாத்தனார்.

இதுபோல உங்கள் தலையும் சீழ் பிடிக்க வேண்டுமா?

சமூக, கலை, இலக்கிய சிந்தனை அமைப்பான ’உரையாடல்’ பெரியமனதோடு இந்த வாய்ப்பினை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக இவ்வமைப்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தி முப்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கியது நினைவிருக்கலாம். இம்முறை கவிதைப்போட்டி!

மொத்த பரிசுத் தொகை ரூபாய் 30 ஆயிரம். 20 கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூபாய் 1,500 வீதம் அளிக்கப்படும்.

விதிமுறைகள்

1. வலைப்பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதுவரை வாசகர்களாக இருப்பவர்கள் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால், புதியதாக வலைதளம் ஒன்றை ஆரம்பித்துவிட்டு போட்டியில் பங்கேற்கலாம்.

2. இதுவரை பிரசுரமாகாத - அச்சிலோ, வலைத்தளத்திலோ - கவிதையாக இருக்க வேண்டும்.

3. குறைந்தது 10 வரிகள் இருக்கவேண்டும். ஒரு வரிக்கு எத்தனை சொற்கள் என்பது அவரவர் முடிவு. (எண்டர் தட்டித் தட்டியா... என நண்பர் குசும்பன் கேட்பது காதில் ஒலிக்கிறது!)

4. இந்தத் தலைப்பு அல்லது இந்தப் பொருள் என்று எதுவும் கிடையாது. எந்தத் தலைப்பிலும் கவிதைகள் எழுதலாம்.

5. கண்டிப்பாக அமைப்பாளர்கள் நடுவர்களாக இருக்கமாட்டார்கள்.

6. அவரவர் வலைத்தளத்தில் கவிதையை வெளியிட்டுவிட்டு, எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு லிங்க் தந்தால் போதுமானது. சிறுகதைப் போட்டிக்காக தனி வலைத்தளம் அமைத்துத் தந்த நண்பர் 'சங்கமம்' இளாவிடமே, இம்முறையும் கவிதைப் போட்டிக்காக தனி வலைத்தளம் அமைத்துத் தரும்படி கேட்டிருக்கிறோம். இரண்டொரு நாளில் அவரும் அமைத்து தந்துவிடுவார். போட்டிக்காக நீங்கள் எழுதிய கவிதையை அந்தத் தளத்தில் லிங்க் தந்துவிட்டால், அனைத்து பதிவர்களும் அதை வாசிக்க சுலபமாக இருக்கும். கவிதைப் போட்டிக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இணைக்கப்படாத கவிதைகளை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது.

7. அறியப்பட்ட, பிரபலமான கவிஞர்களே நடுவர்களாக இருக்கிறார்கள். அவர்களது பெயர்கள் முடிவு வெளியாகும் போதே அறிவிக்கப்படும்.

8. நடுவர்களின் முடிவே இறுதியானது.

9. முடிவு அறிவிக்கப்படும் வரையில், போட்டிக்காக எழுதப்பட்ட கவிதைகளை அச்சு ஊடகத்துக்கு தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

10. ஒருவரே பல வலைத்தளங்களை பல்வேறு பெயர்களில் வைத்திருக்கலாம். என்றாலும் ஒருவர் ஒரு கவிதையை மட்டுமே போட்டிக்கு அனுப்புவது, அனைவரது பங்கேற்புக்கும் வழிவகுக்கும்.

11. முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு, கவிதைப் பட்டறை குறித்த அறிவிப்பு வெளியாகும்.

12. எங்கள் மீது அன்பும், பிரியமும் கொண்ட நண்பர் 'கிழக்கு பதிப்பகம்' பத்ரி, கவிதை நூல்களை வெளியிடுவதில்லை. எனவே தேர்ந்தெடுக்கப்படும் 20 கவிதைகளும் நூலாக வெளிவருமா என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. பிற பதிப்பக நண்பர்கள் ஆர்வமுடன் நூலாக கொண்டு வர இசைவு தெரிவித்தால், நிச்சயமாக முறைப்படி உங்களிடம் அறிவித்துவிட்டு அனுமதி தருவோம்.

13. தேர்ந்தெடுக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்படாத கவிதைகள் அனைத்தும் எழுதியவர்களுக்கே சொந்தம். அந்த உரிமையில் ஒருபோதும் 'உரையாடல்' தலையிடாது.

14. டிசம்பர் மாதம் முதல் தேதி, இந்திய நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு போட்டி தொடங்குகிறது.

15. கவிதைப் போட்டிக்கான இறுதி தேதி, தைத் திங்கள் முதல் நாள், அதாவது 2010ம் ஆண்டு ஜனவரி மாதம், 14ம் தேதி, இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது.

16. போட்டியின் முடிவுகள் 2010, மார்ச் மாதம் முதல் தேதி, அறிவிக்கப்படும்.

17. எந்தவிதமான ஸ்பான்சர்களையோ, தொண்டு நிறுவனத்தின் உதவிகளையோ பெறாமல், அமைப்பாளர்கள் தங்கள் கைக் காசைச் செலவழித்து போட்டியை நடத்துகிறார்கள். எனவே விமர்சனம் வைக்கும் அன்பு நண்பர்கள், தயவுசெய்து, பண உதவி பெறுவதாகவோ, பலரிடமிருந்து பெற்று அமைப்பாளர்கள் சுருட்டிக் கொள்வதாகவோ விமர்சனம் வைக்க வேண்டாம்.

18. வலையுலக நண்பர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். உங்களது ஆர்வமும், உற்சாகமுமே எங்களுக்கான தூண்டுகோல் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.

19. போட்டியில் பங்கேற்கப் போகும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

20. இந்தப் போட்டி குறித்த அறிவிப்பை உலகெங்கும் கொண்டு செல்லப் போகும் அனைத்து வலைத்தளங்களுக்கும், 'தமிழ்மணம்', 'தமிழிஷ்', 'தமிழர்ஸ்', 'தமிழ்வெளி', 'திரட்டி', 'சங்கமம்' 'நெல்லை', 'உலவு', 'மாற்று', 'தமிழ்மானம்' உட்பட அனைத்து திரட்டி நிர்வாகிகளுக்கும், 'டிவிட்டரில்' கலாய்க்கப் போகும் அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி.

கீழும் விவரங்களுக்கு, பைத்தியக்காரனின் இப்பதிவைச் சுட்டலாம்!

2 டிசம்பர், 2009

அய்யனார் கம்மா!


சிறுகதைகளுக்கான இடம் வெகுஜனப் பத்திரிகைகளில் வெகுவாக குறைந்துவரும் காலக்கட்டத்தில், இணையத்தில் முன்னணி எழுத்தாளராக விளங்கும் நர்சிம்மின் முதல் புத்தகமே சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ் பதிப்பகங்களின் சமீபக்காலப் போக்கு புனைவுகளை குறைத்து புனைவல்லாத எழுத்துக்களுக்கு (Non-fiction) முக்கியத்துவம் தந்து வரும் நிலையில், தைரியமாக புதுமுக எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தின் பொன்.வாசுதேவன் நம்பிக்கையளிக்கிறார். மதிராஜின் அழகான முகப்போவியத்தோடு எழுபத்தி இரண்டு பக்கங்களில் தரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது தொகுப்பு.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புத்தகத்தின் முதல் கதையே முத்தானது. அய்யனார் கம்மா. நூலுக்கு சூட்டப்பட்ட பெயரும் இதுதான்.

“யார் உள்ள”

“நாந்தாய்யா”

”மெட்ராஸ் போகணும், வேமா வாப்பா”

“நான் மெட்ராஸுக்கு வரலைய்யா”

“யோவ் நான் போகணும்ய்யா”

“அப்ப பஸ்ஸுக்குப் போய்யா இங்க எதுக்கு வந்த?”

பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் நடக்கும் கூத்து இது. எனக்கு என்னவோ எழுத்தாளரின் சொந்த அனுபவமோ என்று தோன்றுகிறது. முதல்முறையாக அவர் மெட்ராஸுக்கு வந்தபோது நடந்த சம்பவமாக இருக்கலாம். அல்லது யாருக்கோ நடந்ததை நர்சிம் அருகில் இருந்தும் பார்த்திருக்கலாம். அனுபவங்களின் வெளிப்பாடே தரமான இலக்கியமாக பரிணமிக்கும். இங்கே பரிணமித்திருக்கிறது.

மாட்டுக்கு லாடம் என்று ஒன்று இருப்பதே இன்றைய நகரத்து இளைஞனுக்கு தெரியுமா என்பது சந்தேகம். லாடம் அடிப்பது என்பது ராக்கெட் விடுவதைப் போல நுணுக்கமானது என்று ஆரம்பிக்கும் நர்சிம், அடுத்த பத்திகளில் சுவாரஸ்யமாக லாடம் அடிப்பதை வார்த்தைகளாலேயே படம் வரைந்து பாகம் குறிக்கிறார். ‘ஒரு சுத்து சின்ன லாடம்’ போன்ற சொல்லாடல்கள் வாசகனை சுளுவாக கதைக்களத்துக்கு அழைத்துச் செல்கிறது.

பதிமூன்று ராசியில்லாத எண் என்று யார் சொன்னது? இத்தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள். பெரும்பாலும் சம்பவங்களும், கதாபாத்திரங்களின் உரையாடல்களுமாக லேசான மொழியில் கனமான விஷயங்களை தொடருகிறது நர்சிம்மின் கதைகள். கடைசிக்கதையான ‘அன்பின்’ கதையா/கட்டுரையா என்று யூகிக்க முடியவில்லை.

இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தது ‘தந்தையுமானவன்’. வேலை நிமித்தமாக மொழி தெரியாத ஊரில் அவன் இருக்கிறான். அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் அவனது மனைவிக்கு பிரசவம். பெண்குழந்தை. நீடித்த மகிழ்ச்சி சில நிமிடங்களில் அடங்குகிறது. குழந்தை ஏதோ பிரச்சினையால் உலகுக்கு வந்த முதல்நாளிலேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறாள். மனைவியிடம் சொல்ல முடியாத நிலை. பொட்டலமாய் கட்டி கையில் கொடுக்கப்பட்ட மழலைச்செல்வம். இப்படிப் போகிறது கதை. தாய் செண்டிமெண்ட் கேட்டு வளர்ந்தவர்கள் தமிழர்கள். தந்தை செண்டிமெண்டையும் வாசிக்கட்டுமே!

விமர்சனம் என்றால் திருஷ்டிப்பொட்டு வைக்க வேண்டுமாமே? வைத்துவிட்டால் போயிற்று.

இந்தத் தொகுப்பில் குமுதம் ஒருபக்க கதையாக வரவேண்டிய இரண்டு, மூன்று கதைகள் நைசாக உள்ளே நுழைக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. குறிப்பாக ‘தலைவர்கள்’ கதையை சொல்லலாம். கடைசி இரண்டு பத்தி மட்டுமே கதை. அதற்கான ஆயத்தம் மூன்று பக்கம். வாசகனுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பினை உண்டுசெய்து, சப்பென்று முடிப்பது குமுதம் பாணி. இக்கதையிலும் அப்பாணி கையாளப்பட்டிருக்கிறது. ஆனால், குமுதம் இதை ஒருபக்கக் கதைகளில் மட்டுமே செய்யும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

அடுத்ததாக நர்சிம்மின் எழுத்தும், சம்பவ விஸ்தாரிப்புகளும் சுவாரஸ்யமளித்தாலும், கதைகளுக்கான வடிவங்கள் என்பது அரதப் பழசானது. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் குமுதம்-விகடன்-தாய்-சாவி கிரைண்டர்களில் நூற்றுக்கணக்கான முறை அரைக்கப்பட்டது. வார்த்தைகளில் கவனம் காட்டும் நர்சிம், வடிவத்திலும் சிரத்தை எடுக்க வேண்டும். இல்லையேல் நர்சிம்முக்கான தனித்துவம் (Uniqueness) என்று எதுவுமிருக்காது. தனித்துவமிக்க தமிழ் எழுத்தாளர்களே இன்று காலம் கடந்தும் நினைவுகூறப்படுகிறார்கள்.

’வடிவம்’ என்ற விஷயம் இதை வாசிக்கும் சிலரை குழப்பலாம். ஓக்கே, ஒரு உதாரணக் கதையை சுட்டுகிறேன். இன்றைய வாசகன் ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழுகிறான். சமீபத்தில் மிகச்சரியாக இன்றைய வாசகனின் நாடிபிடித்து எழுதப்பட்ட சிறுகதை ஒன்றை ஆனந்த விகடனின் தீபாவளி இதழில் வாசித்தேன். ராஜூமுருகன் எழுதிய தீபாவலி. ஒரு சிறுகதையில் சினிமாவுக்குரிய அத்தனை இலக்கணங்களையும் கையாண்டிருக்கிறார். கட் ஷாட், ப்ளாஷ்பேக், ஏன் கேமிரா கோணங்கள் மாதிரியான இத்யாதிகள் கூட அச்சிறுகதைக்கு உண்டு. நடப்பில் இருக்கும் சிறுகதை எழுத்தாளர்களில் ராஜூமுருகனும் தலைசிறந்தவர் என்று சொல்லலாம். இதுபோன்ற வடிவரீதியிலான பரீட்சார்த்த முயற்சிகளே இன்றைய தேவை. நர்சிம் தன் எதிர்கால படைப்புகளில் இதுபோன்ற முயற்சிகளை கையாளுவார், பாலச்சந்தர் டச் என்பதைப்போல ‘நர்சிம் டச்’ என்று சொல்லக்கூடிய போக்கினை உருவாக்குவார் என்று நம்புகிறேன். நண்பனாக விரும்புகிறேன்.

வாழ்த்துகள் நர்சிம்!


நூல் : அய்யனார் கம்மா (சிறுகதைகள்)

ஆசிரியர் : நர்சிம்

பக்கங்கள் : 72

விலை : ரூ.40

வெளியீடு : அகநாழிகை,
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306.
போன் : 9994541010

பேரினவாதத்தின் ராஜா!

தமிழ் பத்திரியுலகையில் பணிபுரியும் முற்போக்காளர்களில் குறிப்பிடத்தக்கவர் அண்ணன் அருள்எழிலன். மூத்தப் பத்திரிகையாளரான இவர் தற்போது வெகுஜன வார இதழ் ஒன்றினில் தலைமை உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். பல்வேறு இணையத்தளங்களிலும், சஞ்சிகைகளிலும் மாற்று சிந்தனைகளோடு கூடிய அரசியல் கட்டுரைகளை வரைந்து வருகிறார். கட்டுரைக்கான இவரது மொழிநடையும், வடிவமும் மிகச்சிறப்பானது.

நம் அண்டைநாடான இலங்கையில் தொடர்ச்சியாக நடந்துவரும் இனப்படுகொலைகளையும், அரசியல் அராஜகங்களையும் குறித்து ‘பேரினவாதத்தின் ராஜா’ என்ற தலைப்பில் நூல் எழுதியிருக்கிறார். வரும் ஞாயிறு (6-12-09) அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை புக்பாய்ண்ட் அரங்கில் (ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணாசாலை காவல்நிலையம் அருகில்) இந்நூல் வெளியிடப்படுகிறது.

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி.வினோஜ்குமார், மீனாகந்தசாமி, பீர்முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதிதம்பி, ராஜூமுருகன் மற்றும் நூலாசிரியர் டி.அருள் எழிலன்.

புலம் வெளியீடு.

அனைவரும் வருக!

1 டிசம்பர், 2009

சேவக லீலா!

பெரும்பாலான நண்பர்கள் என்னிடம் குறைபட்டுக் கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு. “சாரு எதை சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்வாயா?” என்று அடிக்கடி கேட்டவர்களே கூட திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ”எனக்கு சாருவை பர்சனலாகவும் பிடிக்கும். அவரது எழுத்தையும் பிடிக்கும். அவர் கமல்ஹாசன் மாதிரி. பத்து/பதினைந்து ஆண்டுகள் கழித்து எழுத வேண்டியதை இன்றே எழுதிவிடுவார். அதற்காக அவர் எழுதுவதையும்/பேசுவதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை” என்று ஒவ்வொருமுறையும் கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப பதில் அளிப்பேன். முன்பு சாரு இணையத்தில் எழுதிய பதிவு ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருந்தேன். அதை மீண்டும் இங்கே பதிகிறேன். திரும்பப் படித்துப் பார்க்கும்போதும் எனக்கு அப்போது இருந்த அதே மனநிலைதான் இப்போதும் இருக்கிறது என்று புலனாகிறது!

ஓவர் டூ அந்த பழைய எதிர்ப்பு :


அபத்தமாக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் கண்டால் எல்லோருக்கும் எரிச்சல் மண்டுவது இயல்பு. ஆயினும் சில நேரங்களில் நம்முடைய ஆதர்சங்களே அபத்தமாக சிந்தித்து, அதையும் எழுதியோ, பேசியோ தொலைக்கும்போது எரிச்சலோடு, கோபமும் இணைந்துக் கொள்கிறது. அதுபோன்ற சீற்றமான, நிதானமற்ற மனநிலையில் இப்போது எழுதுகிறேன்.

சிறுவயதிலிருந்தே ஏதாவது பத்திரிகைகளில் சாரு நிவேதிதா என்ற பெயரை காணநேர்ந்தால் அக்கட்டுரையையோ, புனைவையோ தவறவிடாமல் வாசிப்பது என் வழக்கம். சாரு என்ற பெயர் எனக்குள் ஏற்படுத்திய மேஜிக்குகள் எண்ணிலடங்கா. ஒரு அறிவுஜீவியாக இருந்தும் மிக எளிமையாக, வாசகன் அஞ்சாமல் அணுகக்கூடிய மொழிநடை அவருடையது. பெரும்பாலும் சுயபுராணமாக இருந்தாலும் அவருடைய சுய எள்ளல், சுய பச்சாதாபம் போன்றவை வாசிக்க சுவாரஸ்யமானதாகவே இருக்கும். சரோஜாதேவிரக எழுத்தாளர்கள் தவிர்த்து கைமைதுனம் செய்வதை கூட வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் பன்முகப்பார்வை கொண்ட தமிழ் எழுத்தாளர் அவர் ஒருவர் மட்டுமே.

அவர் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவர் ஒரு நாத்திகர் என்ற தோற்றம் மிகுந்திருக்கும். எனக்குள்ளும் மிகுந்திருந்தது. சுஜாதா மறைவுக்குப் பின்னர் திடீரென்று சுஜாதாவின் இடத்தை பிடிக்க வேண்டும் (எந்த கொம்பனாலும் பிடிக்கமுடியாது என்பது என் எண்ணம்) என்ற பேராசையாலோ என்னவோ திடீரென தன்னை ஆத்திகர் என்று சமீபத்தில் அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாத்திகரோ, ஆத்திகரோ அது யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் திடீரென புதியதாக ஏற்றுக்கொண்ட ஆத்திக வேடத்துக்காக இறைமறுப்பாளர்களையும், இறைமறுப்பு முற்போக்கு சிந்தனைகளையும் மிக கேவலமாக விமர்சிப்பது சாரு போன்ற (இதுவரை) முற்போக்கு வேடமணிந்த ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல.

'விபச்சாரம் ஏன் நடக்கிறது?' என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்தது. சாரு கண்டுபிடித்து விட்டார். இறைமறுப்பு தான் விபச்சாரத்துக்கு காரணமாம். ரஷ்யா ஜார் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தபோதும் கூட மதநெறி தந்த ஆன்மபலத்தால் ரஷ்யர்கள் ஒழுக்கமாக இருந்தார்களாம். ஆனால் கம்யூனிஸம் ஆட்சிக் கட்டிலேறி கடவுள் மறுப்பு விவாதங்களும், சிந்தனைகளும் வந்த பின்னர் ரஷ்யாவில் விபச்சாரம் பெருகி விட்டதாம். எவ்வளவு அபத்தம் இது? கடவுள் மறுப்பு சிந்தனைகளை மட்டுமன்றி கம்யூனிஸத்தின் மீதும் போகிறபோக்கில் சாணி அடித்துவிட்டுப் போகிறார் சாரு. இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தோதாக அவரது இலங்கை நண்பர் ஒருவருக்கு ரஷ்யாவில் நிகழ்ந்த சில அனுபவங்களை வாதத்துக்கு வலுவாக சேர்த்துக் கொள்கிறார்.

அதே சாரு தாய்லாந்து நாட்டின் விபச்சாரம் பற்றியும், பத்து வயது குழந்தைகள் கூட மிகக்குறைவான (50 ரூபாய்) தொகைக்கு விபச்சாரத்துக்கு தயாராக இருப்பது பற்றியும் எழுதுகிறார். தாய்லாந்து நாட்டில் கம்யூனிஸ ஆட்சி நடக்கிறதா? கடவுள் மறுப்பு விவாதங்கள் விவாதிக்கப்படுகிறதா? என்பது பற்றி சாருவுக்கு தெரியாதா? கிட்டத்தட்ட தொண்ணூற்றி ஒன்பது சதவிகித தாய்லாந்து மக்கள் மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் கொண்டவர்கள் தானே?

தாய்லாந்துக்கு போவானேன்? இந்தியாவில் என்ன வாழுகிறது? இங்கே (இப்போது சாரு உட்பட) தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் இறைநம்பிக்கை கொண்டவர்களாக தானே இருக்கிறார்கள்? இங்கே ஏன் சோனாகஞ்சும், மும்பை சிகப்பு விளக்கு பகுதியும் இருக்கிறது? ஐம்பது ரூபாய்க்கு உடலை அரை மணி நேரத்துக்கு விற்க சென்னையில் கூட விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள் இருப்பது நமக்கு தெரியுமோ இல்லையோ.. சாருவுக்கு நிச்சயமாகத் தெரியும். இதற்கெல்லாம் கூட காரணம் இறைமறுப்பா?

இறைமறுப்பு சிந்தனைகளை உலகளவில் பரபரப்பாக விவாதித்த ஜெர்மன் சிந்தனையாளர்களையும்.. அந்நாட்டையும், ஐம்பது ஆண்டுகளாக இறைமறுப்பு கம்யூனிஸ ஆட்சி நடக்கும் கியூபா நாட்டையும் சாரு மறந்துவிட்டாரா? இல்லை அங்கும் விபச்சாரமும், சமூகக்குற்றங்களும் இன்னமும் தலைவிரித்து ஆடுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறாரா? மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் பெரிதும் கொண்டிருக்கும் அமெரிக்கா.. ஆத்திகர்களையே பெரும்பாலும் அதிபர்களாக ஏற்றுக்கொள்ளும் அமெரிக்கா, சர்வதேச அளவில் மனிதநேயத்துக்கு எதிராக செய்துவரும் மனிதகுல விரோத குற்றங்களுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகிறார் சாரு? இறைமறுப்பாளர்களால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? மத அடிப்படைவாதிகளால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? என்பதை சாரு மல்லாந்து படுத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்.

கடவுள் என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே விபச்சாரம் என்ற தொழிலும், சமூகக்குற்றங்களும் உலகில் பெருகிவிட்டதை உலக வரலாறு வாசித்த யாருமே உணரமுடியும். இன்னமும் சொல்லப்போனால் சமூகக்குற்றங்கள் செய்வதிலிருந்து மனிதனை காக்க மனிதகுலம் கண்டுபிடித்த ஒரு முறையே மதமும், மதத்துக்கு மூலமான கடவுளும் என்றும் கூறலாம். இறைவன் குறித்த தர்க்கங்களில் வெற்றி காணமுடியாமல் கடைசியாக ஆத்திகர்கள் நாத்திகர்கள் மீது வைக்கும் பலகீனமான விமர்சனம் தான் இறைமறுப்பால் சமூகக்குற்றங்கள் பெருகும் என்பது. சாருவும் கூட அப்படிப்பட்ட விமர்சனத்தை எழுதுவதை காணும்போது “சாருவும் இவ்வளவுதானா?” என்ற ஆயாசமும், ஏமாற்றமும் தான் மிஞ்சுகிறது.

மனமுண்டு, மாற்றமுண்டு!


“அதிகாரிகளை குறைசொல்ல ஒண்ணுமே இல்லைங்க. ரொம்ப நல்லா பண்ணுறாங்க!”

“நாங்களே அவங்களை தேடி கண்டுபிடிச்சி போகுறது ரொம்ப கஷ்டம் சார். அவங்களே எங்களை தேடி வந்து சேவை பன்ணுறது என்பது எங்களுக்கு வரப்பிரசாதம்!”

“என்ன கேட்டாலும் முதல்லே பதில் வந்துடுதுங்க. இதுவே பெரிய விஷயம். அப்புறம் அவங்க பணிகளும் ரொம்ப நல்லாருக்கு!”

“ஊர்லே ஒவ்வொரு வீட்டிலேயும் அந்த அதிகாரி பேரைத்தாங்க சொல்லுறாங்க! இதுவரைக்கும் எந்த ஆபிஸரும் இவரை மாதிரி இருந்ததில்லை!”

நம் தமிழக அரசு அதிகாரிகள் சிலருக்கு கிராமப்புற விவசாய மக்கள் வழங்கும் பாராட்டுப் பத்திரம்தான் இது. சந்தேகமே வேண்டாம்.

பொதுவாக அரசு ஊழியர்கள் என்றாலே பொதுமக்களுக்கு வேப்பங்காயாய் கசப்பதைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள், போனஸ் என்றதுமே மக்கள் வெறுப்படைகிறார்கள் என்பது அரசு ஊழியர்களுக்கே தெரிந்த ஒரு விஷயம்தான். அரசுத்துறைகள் என்றாலே மக்கள் மீது அக்கறையற்றவை. ஊழல் கறை படிந்தவை என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்ற வேண்டாமா?

மாற்றுவதற்கு சில அரசு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

2003ல் மக்களை நோக்கிய நீர்மேலாண்மை தொடர்பான அதிகாரிகளின் பயணம் கிராமங்களுக்கு துவங்கியது. அரசுத்துறையை செம்மையாக, மக்களுக்கு உண்மையாகவே பயன் தரக்கூடியதானதாக மாற்ற அவர்கள் முற்பட்டார்கள். நகரங்களில் அமர்ந்துக்கொண்டு, திட்டங்களை மட்டுமே தீட்டி, கிராம மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள். ஒவ்வொருவரும் களப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2004ல் சென்னைக்கு அருகில் மறைமலை நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் சில உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டார்கள் :

* ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் திட்டங்களுக்கு மறுமலர்ச்சி தருவோம். முன்பைவிட அதிமுனைப்பாக அவற்றை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுவோம்.

* மக்களுக்கு உண்மையிலேயே உபயோகப்படக்கூடிய விஷயங்களை உறுதிசெய்வோம். தரமான சேவையை அளிப்போம்.

* பாரம்பரியமாக பயன்பட்டு வரும் விஷயங்களை பயன்படுத்திக் கொள்வோம்.

* திட்டமிட்டதை விட பத்து சதவிகிதமாவது கூடுதலானவற்றை, அதே நிதி ஒதுக்கீட்டில் சாதிப்போம்.

இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் பணிகள் தொடங்கின. அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஊக்கம் தரும் வகையிலான ‘கூடம்’ பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன

கூடம் என்ற சொல் தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமானதுதான். குடும்பம் ஒன்றுகூடி அளவளாவும் இடமாக, ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு காலத்தில் கூடம் இருந்ததுண்டு. கல்யாணம் நிச்சயம் செய்வது, பையனை வெளியூர் வேலைக்கு அனுப்புவது என்று குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இடமாக கூடம் தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பத்தில் உண்மையான ஜனநாயகம் நிலவும் இடம் கூடம்.

பொதுவாக ஒரு கிராமத்தில் திருவிழா நடக்கிறதென்றால், அக்கிராமத்தின் ஒவ்வொரு வீடும் வெள்ளை அடிக்கப்படும். தெருக்கள் சுத்தமாக்கப்படும். ஆனால் இந்த மாதிரியான விழாக்காலங்களில் கூட அரசுக்கு சொந்தமான மேல்நிலை தண்ணீர்த் தொட்டி, பஞ்சாயத்து அலுவலகம் போன்றவை எப்போதுமே பாழடைந்த நிலையில் இருக்கும். அரசுச் சொத்து நமதல்ல என்ற மனோபாவம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டதே இதற்கு காரணம். தெருவில் ஒரு குடிநீர்க்குழாயில் நீர் வீணாகிக் கொண்டிருந்தால் கண்டுகொள்ளாமல் செல்லும் எண்ணம், கிராமவாசிக்கு மட்டுமல்ல.. நகரவாசிக்கும் உண்டு. வீட்டில் இருக்கும் குழாயில் நீர் வீணாகினால் நாம் சும்மா இருப்போமா?

‘அரசுக்கு சொந்தமான ஒவ்வொன்றும் மக்கள் சொத்து’ என்ற விழிப்புணர்வை மக்களிடம் முதலில் ஏற்படுத்துவதே அதிகாரிகளுக்கு சவாலானதாக இருந்தது. அரசு அதிகாரிகள் கிராமங்களுக்கு வருவதையே மக்கள் சட்டை செய்யாத நிலையும் ஆரம்பத்தில் இருந்தது. ‘ஜீப்பைப் போட்டுக்கிட்டு வருவாங்க. எதையாவது செய்யுவாங்க. நமக்கு என்ன பிரயோசனம்?’ என்று நினைத்தார்கள்.

“வலிந்துப்போய் பழகி, பேசி அவர்களுக்குள் ஒருவனாக மாற எனக்கு ஆறுமாதம் பிடித்தது!” என்கிறார் உதவிப் பொறியாளராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) பணிபுரியும் எஸ்.சேட்டு.

இவரைப் போலவே ஒவ்வொரு பொறியாளரும், அவர் பொறுப்பேற்றுக் கொண்ட கிராமத்து மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களில் ஒருவராக மாறினார்கள். பஞ்சாயத்து அலுவலகத்தில் மக்களுக்கு சினிமாப் படம் போட்டு காட்டினார்கள். ஊர்த் திருவிழாக்களில் பங்கு கொண்டார்கள். உங்களுக்காக வேலை செய்கிறேன், நானும் உங்களில் ஒருவன் என்பதை அழுத்தமாக அவர்களது மனங்களில் பதிய வைத்தார்கள்.

அவ்வப்போது மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதுபோன்ற கூட்டங்களில் இவர்கள் அதிகமாக பேசாமல், மக்களை பேசவைத்தார்கள். அந்த கிராமத்துப் பஞ்சாயத்து தலைவரை, வார்டு உறுப்பினர்களை, குடிநீர்த்தொட்டி பணியாளரை, நர்ஸை, ஊர்ப் பிரமுகர்களை பேசவைத்தார்கள். இவர்கள் செயல்படுத்தும் திட்டங்களில் அவர்களது ஈடுபாட்டையும் வலிய வாங்கிக் கொண்டார்கள்.

மக்களோடு மக்களாகி விட்டதால் நம் அரசு ஊழியர்களிடம் டீக்கடைகளிலும், டூரிங் கொட்டாய்களில் மனசுவிட்டு பேசத் தொடங்கினார்கள் கிராமவாசிகள். தங்களுடைய தேவை என்னவென்று காய்கறிக் கடைகளுக்கு வரும் பெண்கள் கூட அரசு அதிகாரியிடம் உரிமையாக கேட்டார்கள். மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப திட்டங்களை (Tailor made schemes) தீட்ட, இதனால் அதிகாரிகளுக்கு சுலபமாக இருந்தது.

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அரசு ஒரு திட்டத்தை தீட்டிவிட்டால், அது தேவையா தேவையில்லையா என்பதையெல்லாம் பார்க்காமல் கடமைக்கு முடித்துக் கொடுப்பதே பொதுவாக அரசு ஊழியர்களின் பாணியாக இருக்கிறது. மாறாக மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையானதை மட்டுமே செய்துக் கொடுக்கும் இந்தப் புதியப் பாணியால் பணமும், நேரமும் நிறைய மிச்சம்.

இந்த அணுகுமுறையின் வெற்றிக்கு, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி பஞ்சாயத்து ஒரு சான்று. மாரியப்பன் என்ற குடிநீர்வாரியப் பொறியாளர் இங்கு ஏற்படுத்தித் தந்த குடிநீர்க் கட்டமைப்புகளை, மக்களே இன்று செம்மையாகப் பராமரிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. தெருக்குழாயில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நமக்கென்ன என்று கிராமவாசிகள் போய்விடுவதில்லை. அரசு அதிகாரிகளை எதிர்ப்பார்க்காமல் தங்கள் செலவிலேயே இப்போது அப்பழுதை சரிபார்க்கிறார்கள். ஏனெனில் அரசுச் சொத்து, நம் சொத்து என்ற விழிப்புணர்வை அவர்களிடையே மாரியப்பன் ஆழமாக விதைத்திருக்கிறார்.

“மாரியப்பன் சாருக்கு கொழந்தை பொறந்தப்போ, வந்து கிராமத்துக்கே இனிப்பு கொடுத்தாருங்க” என்கிறார் தும்பைப்பட்டி வாசியான மஜீத். ஒரு அரசு அதிகாரி மக்களிடையே எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் இதுவல்லவா?

இத்தனைக்கும் ஒரு ஆறுமாதக் காலம்தான் அக்கிராமத்தில் மாரியப்பன் பணிபுரிய வேண்டியிருந்தது. அப்போது அவர் செய்தப் பணிகள் ஐந்தாண்டுகள் கழிந்தும் இன்னமும் கிராமமக்களுக்கு மறக்க முடியாததாக இருக்கிறது. கொசுக்களால் அக்கிராம மக்கள் அவதியுறுவதைக் கண்டவர், தன் சொந்த செலவிலேயே கழிப்பறைகளையும், சாக்கடைகளும் சுத்தப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் மட்டுமல்ல. மறைமலைநகர் உறுதிமொழியை எடுத்துக்கொண்ட ஏராளமான பொறியாளர்கள் அவரவர் பொறுப்பேற்றுக் கொண்ட கிராமங்களிலும் இதுபோலவே சாதனைகளை புரிந்தார்கள்.

குடிநீர் வாரிய பொறியாளர்கள் மட்டுமல்ல, வேளாண்மைத்துறை பொறியாளர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை அணுகி அபிவிருத்தித் திட்டங்களை தீட்டினார்கள். சேலம் மாவட்டம் எல்லம்பாளையம்புதூரில் நடந்த விஷயங்களை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்.

வேளாண்மை அதிகாரிகளின் சீரிய பணிகளுக்குப் பிறகு, இங்கே ஆறுவருடங்களாக விவசாயத்தை மறந்துவிட்டவர்கள் கூட மீண்டும் விவசாயம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். மண்சோதனையில் தொடங்கி, என்ன உரம் இடுவது, எந்தக் காலத்தில் இடுவது, விளைப்பொருட்களை யாரிடம் விற்பது என்பது வரை ஆலோசனைகளை வழங்கி மீண்டும் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சில கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் அந்தந்த துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலிலேயே நடந்திருக்கிறது. பெரியளவில் அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டவை அல்ல. அதிகாரிகளின் முனைப்பும், செயல்பாடும் தீவிரமானதாக இருக்கும்பட்சத்தில் மாநிலம் முழுக்க அல்ல, நாடு முழுக்கவே எல்லா அரசுத் துறைகளும் சிறப்பானதாக பணியாற்ற முடியும். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சில அதிகாரிகளுக்கு சூட்டப்பட்ட புகழாரத்தை, எல்லா அதிகாரிகளும் பெறமுடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)